Wednesday, December 10, 2014

கடுபு வரக் காத்திருந்தேன். ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 5)

பெங்களூர் முழுசும்  நாம் தடுக்கி விழுந்தா, எதாவதொரு கோவில் வாசலில்தான் விழுவோம் போல.   அதில் இந்த மல்லேஸ்வரம் பகுதியில் ஏகப்பட்ட கோவில்கள். திருப்பதி தேவஸ்தானம் கூட ஒரு கோவிலைக் கட்டியிருக்காங்க.  சரியான வசூல் ராஜா இல்லையோ நம் ஸ்ரீநிவாசன்?  ஒரு ஊரை விடமாட்டாரே!  கோவில் மூடி இருக்குமேன்னதுக்கு, எதுக்கும் போய்ப் பார்க்கலாமுன்னார் மச்சினர். அதுவும் சரி. மாலில் ஆரம்பிச்சு   மாலில் முடிக்கலாமே.  அடுத்த தெருதானாம்.

இங்கே கோவில்கள் எல்லாம் காலை  ஏழரைமுதல் பனிரெண்டு வரையிலும், மாலை அஞ்சு முதல் எட்டரைவரையிலும் மட்டுமே திறந்து வைக்கிறாங்க.
மக்களுக்கு அசல் திருப்பதி ஃபீலிங்ஸ் வரணுமுன்னோ என்னவோ கம்பித்தடுப்புகளில் வளைஞ்சு வளைஞ்சு போய் படி ஏற வைக்கும் அமைப்பு.

பனிரெண்டரை  ஆகப்போகுதே...கோவில் மூடியாச்சான்னு விசாரிச்சால்...  இல்லையாம்!!!  'ஆஹா.... ஓடு உள்ளே'ன்னு கம்பித்தடுப்புகள்  வழிகாட்டுனதையொட்டிப்போய் படிகளில் காலடி வச்சோம். பார்க்க அம்சமான கோவிலாத்தான் கட்டி விட்டுருக்காங்க.
o

கறாரா   இன்னின்னதுக்கு இவ்ளோன்னு பட்டியல் போட்டு வச்சுட்டார் சீனு:-) வசூல்ராஜாவுக்குச் சொல்லித் தரணுமா?

இடது பக்கம் ஏறிப்போகும்போதே புள்ளையார், அவரைக் கும்பிட்டு, அடுத்த  நாலைஞ்சு படிகளில்  ஏறினால் நம்ம ராமர் அண்ட் கோ .   அவருக்கும் ஒரு கும்பிடு அப்புறம்  நேரா மேலேறினால்...  பெரிய  முன்மண்டபத்தில் கண்களுக்கு பளிச் ன்னு  தெரியும்படி ஸ்ரீநிவாசன்/ வெங்கடாசலபதி.
இடமும் வலமுமா ரெண்டு கதவுகள். படிகள் முடிஞ்சு உள்ளே காலடி வைக்கும்போது  இடத்துக்கும் வலத்துக்கும் நடுவில் பெரிய திருவடி!  நல்ல பெரிய திருவுருவம்.

பெருமாளை ஸேவிச்சுக்கிட்டு வலப்புறப் படிகள் வழியா இறங்கினோம்.   ராதா கிருஷ்ணர் சந்நிதி. அவருக்குக் கும்பிடு போட்டு ஏழுபடி  இறங்கினால்  நம்ம நேயுடு.  புள்ளையாரும் அனுமனும்  எதிரும் புதிருமா ஒருவரையொருவர் பார்த்தபடி.

கடைசிப்படி முடியும் இடத்தில்  பிரஸாத விநியோகம் நடக்குது. கம்பி ஜன்னல் வச்ச கூண்டு!  இவ்ளோ அழகான கட்டிடத்துக்கு  இது திருஷ்டி பரிகாரம் போல:(

பகல் 12க்கு  மூடிருவீங்களான்னு கேட்டதுக்கு,  வீக் எண்டில்  இல்லையாம். மற்ற நாட்களில்  உச்சிகால பூஜை முடிஞ்சு ஒரு பனிரெண்டரை வாக்கில் மூடினாலும் ரெண்டு மணிக்குத் திறந்துருவாங்களாம்.  ஃபேர் இனஃப்ன்னு எனக்குத் தோணுச்சு. பட்டர்கள் வீடுபோய் சாப்பிட்டு வரணும் இல்லையோ!



இந்தியாவில்   மதியம் கோவிலைப் பூட்டினால் மறுபடி  சாயங்காலம் நாலரை, அஞ்சுக்குத்தான் திறக்கறாங்க.  உள்ளூர் மக்களுக்கு  இது சரி. வெளியூர்ப் பயணிகளுக்கு இது எத்தனை கஷ்டமுன்னு  புரிஞ்சுக்கறதே இல்லை.  நாலுமணி நேரம் எங்கே போறது, என்ன செய்யறதுன்னு தெரியாமத் திண்டாடித் தெருவில் நிக்க வேண்டி வருது:(  இவ்ளோ தூரம் வந்துட்டு, தரிசனம் பண்ணாமலும் போகவும்  மனம் வர்றதில்லை.  எல்லா   ஊரும் காஞ்சீபுரமா என்ன?  சும்மா இருக்கும் நேரம் ரெண்டு புடவையாவது  செலக்ட் (!) செஞ்சு வாங்கிக்கலாம் என்றதுக்கு:-)

இதைபற்றி பலமுறை நான் புலம்பியாச்சு உங்களிடம்!  வேறெங்கெ போய்ச் சொல்றது?   அர்ச்சகர்கள் லஞ்சு டைம் ஸ்பெஷலுன்னு  ஒரு தனி ஷிஃப்ட் போட்டுக்கப்டாதோ?

இன்றைக்கு  இதுவரை நல்ல நாளா போய்க்கிட்டு இருக்கு. எல்லாக் கோவில்களிலும் தள்ளுமுள்ளு இல்லாம தரிசனம் கிடைச்சதுன்னு  மகிழ்ச்சியாக் கிளம்பறோம்.  ஒரு நாலைஞ்சு  மீட்டரில் சாலை பிரியும் இடத்தில் ஹைய்யோ!!   வண்டி நிறைச்சு  வகைவகையான  தீனிகள்!   ஐடியா சூப்பர்!!!  பேசாம நியூஸிக்குக்  கடத்திக்கணும்.

பேசாமத் தலைப்பை' வண்டி நிறையத் திண்டி'ன்னு வச்சுருக்கலாம்:-)

 வீட்டுக்குப்போய்ச் சேர்ந்தோம். இதுக்குள்ளே சாந்தியிடமிருந்து  நாலைஞ்சு முறை செல்லழைப்பு வந்துருச்சு. தயாரா இருந்த அவுங்களையும் கூட்டிக்கிட்டு,  எங்கே போய் சாப்பிடலாமுன்னு  மந்த்ராலோசனை:-)   'கோபிகா' போயிடலாமுன்னு சொன்னாங்க  சாந்தி.

நியூ கிருஷ்ணாபவனில் இருக்கும் ஒரு ஏஸி  ரெஸ்ட்டாரண்ட் இது. நம்ம கோபாலுக்கும் பூபாலுக்கும்  தாலி  வேணுமாம்!   தென்னிந்திய சாப்பாடுன்னு  சொல்லிட்டாங்க.  சாந்தியும் ,சப்பாத்தின்னாங்க.  எனக்குத்தான் எதாவது கர்நாடகா ஸ்பெஷல் இருந்தாத் தேவலையேன்னு..... மெனுவை ஆராய்ந்தேன். Kotte Kadubu  (sat/sun)  என்று  கண்ணில் பட்டது. வீக் எண்ட் ஸ்பெஷல்! இன்னிக்கு ஞாயிறுதானே?  வாங்கினால் ஆச்சு. கூடவே  ஒரு செட் தோசையும்.

கடுபு வரக்கொஞ்சம் நேரமாச்சு.  சுத்தி இருந்த  இலையைப் பிரிச்சால் அனுமார் வால்போலநீளமா வந்துக்கிட்டே இருக்கு:-)   கோபாலுக்குக் கொஞ்சம் கொடுத்துட்டு,  நானும் ஆவலோடு சாப்பிட்டுப் பார்த்தேன்.  ஐய..........  இது நம்ம இட்லி!  குடலை இட்லி செய்வோம் பாருங்க,  அதை வாழை  இலையைக் குழாய் போல சுருட்டி  அதுலே மாவை ஊற்றி  நீராவியில் வேகவச்சுருக்காங்க. வாழை இலை கூட இல்லையோ?. கொஞ்சம் முரட்டுத்தனமா தோணுச்சு. ஒருவேளை தென்னங்கீத்தோ என்னவோ!

மாவுகூட...  வெறும் இட்லி மாவுதான்.  குடலை இட்லி மாவுலே சேர்க்கும் சமாச்சாரமெல்லாம் இதுலே இல்லையாக்கும்.


தொட்டுக்க சாம்பார், சட்னி,  இட்லிமிளகாய்ப்பொடி எண்ணெய், கூடவே  ஒரு சின்னக்கிண்ணத்தில் தேங்காய்ப்பால்!

செட் தோசையில்  மூணு இருக்கு. அதிகம் இல்லையோ? எல்லோரோடும்   பகிர்ந்தால்  போச்சு:-)

சாப்பாடானதும்  'பக்கத்துலே இருக்கும் மாலுக்குப் போலாமா'ன்னு சாந்தி கேட்டாங்க.  'வேணாம்  மாலைப் பார்த்த கண்களுக்கு மால் வேணாம் 'என்றேன்.

அறைக்கு  எல்லோருமா வந்து சேர்ந்தப்ப  மணி ரெண்டரை.  கட்டிலில் பூ இருந்தது.


தொடரும்......:-)




42 comments:

said...

என்ன திடீர்ன்னு வெரிபிகேசன் காட்டுதே?

said...

வாங்க ஜோதிஜி.

அதுதான் எனக்கும் தெரியலை:(

செட்டிங்ஸ்லே போய்ப்பார்த்தாலும் முன்பு போட்டு வச்ச நோ அப்படியேதான் இருக்கு. ஆனால் வெரிஃபிகேஷன் காட்டுவது என்ன மாயமோ?

ப்ளாக்ஸ்பாட் எல்லோருக்கும் போட்டு வச்சுருக்கா என்ன?

said...

அங்கும் ஒரு ஜவுளி கடை திறக்க நண்பர்களின் சொல்கிறேன்... ஹிஹி...

அழகான பூ உட்பட அனைத்தும் படங்களும் அட்டகாசம் அம்மா...

said...

இன்றைய எனது பதிவில் நீங்கள் சொன்னது தான் சரி அம்மா...

Posts and Comments »» Comment Location »» Popup window என்றும், Comment Moderation என்பதில் Always என்றும் வைத்துள்ளீர்கள்...

Show word verification என்பதில் No என்று இருந்தாலும் Popup window என்று வைத்துள்ளவர்களின் தளங்கள் எல்லாம் தற்சமயம் கூகுள் Word Verification கேட்கிறது... ஒரு வாரமாகவே இப்படித்தான்... நம்ம கீதா சாம்பசிவம் அம்மா, GMB ஐயா என பல தளங்களில் இப்படித்தான் உள்ளது... கூகிள் செய்த மாற்றம்...?

சற்று முன் எனது தளத்திலேயே சோதனை செய்து பார்த்து விட்டேன்... மீண்டும் மாறும் போது தெரிவிக்கிறேன்... அதுவரை Posts and Comments »» Comment Location »» Embedded என்றும், Comment Moderation என்பதில் Always என்று தேர்வு செய்வதே சிறந்தது... நன்றி...

said...

Teacher..neenga gopikavil neer dosa or raagi dosa sapitirukanum...udupi spl hotel athu.8th crossil shoping panna gopalji permission kuduthara?...

said...

கர்நாடகாவுலே கடுபுன்னு புதுப்பேர் சொல்லி, இட்லியக் கொடுத்து ஏமாத்துறாங்களா? அய்யகோ!

said...

யக்கா ! என் ஊரில் போய் எனக்கே தெரியாத இம்புட்டு விஷயத்த சொன்னதுக்கு ஒரு பெரிய கும்பிடு. அந்த திண்டி வண்டி ரொம்பவே சூப்பர்!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஐய.... வெறும் ஜவுளிக்கடை யாருக்கு வேணும்?

பட்டுப்பொடவைகள் மட்டுமே விற்கும் ஸ்பெஷாலிட்டி கடைகள் மட்டுமே தேவையாக்கும்:-)

இன்னும் ப்ளொக்கர் கருணை காமிக்கலை:(

said...

வாங்க சிந்து.

ஓ... அப்ப இந்த கோபிகா நல்ல இடம்தான் போல!

அடுத்த முறை நீரு தோசா வாங்கினால் ஆச்சு:-)

ஷாப்பிங் பெர்மிஷன் எல்லாம் எதுக்கு? அதுவும் கோபாலிடமிருந்து?

நமக்குத் தேவைன்னாலோ, விருப்பம் என்றாலோ வாங்கிக்கலாம் தானே?

இப்பெல்லாம் வாங்கிக்கணுமுன்னு தோணறதே இல்லைப்பா. எல்லாம் போதும் போன்னு இருக்கேன்.

பூஜை,அலங்கார ஐட்டங்கள்தான் எப்பவும் என் சாய்ஸ்.

கொலுவுக்கு வேண்டிதானே இருக்கு!

said...

வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.

இட்லிக்கு அங்கே அந்தப் பெயருன்னு நமக்குத் தெரியாமப் போச்சு பாருங்களேன்:-)

said...

வாங்க விசு.

சூப்பர் ஐடியா அது. ஒழுங்கா பேக் பண்ணி அடுக்கி வச்சுருக்காங்க. தூசி தும்பு படாமல் பார்க்க சுத்தமாவும் இருக்கு.

இதுக்குன்னு கடைக்குக் கிளம்பாமல், கோவிலுக்கு வந்த கையோடு வாங்கிக்கிட்டு போகலாம்.

அதான் சனம், பிக்னிக் போற மாதிரியில்லே கோவில்களில் புகுந்து புறப்பட்டுக்கிட்டு இருந்தாங்க!

said...

ஆமா, வெரிபிகேஷன் வேணும்கிறது. ஜிஎம்பி அவர்கள் தளத்திலும் இப்படித்தான புதுசா வந்தது. கூகிள்காரன் என்ன பண்ணியிருக்கான்.

said...

இந்த வெரிஃபிகேஷன் என் தளத்தில் வரும்போது ignore செய்து விடுவேன். இங்கும் அதையே செய்யப் போகிறேன். ஆனால் பின்னூட்டம் வருகிறதா என்று தெரிய மாடெரேஷன் வரைக்காத்திருக்க வேண்டுமே/ பார்ப்போம்.

said...

ஆகா. இந்த வெங்கடேசன் கோயில் நான் பாத்ததேயில்லையே. மல்லேசுவரத்துல அவ்வளவு சுத்தியிருக்கேன் பத்து வருடத்துக்கு முன்னாடி. படங்களும் கோயிலும் அழகு + தூய்மை. நம்மூர் கோயில்லயும் இந்தத் தூய்மை வந்தா நல்லது.

கடுபுங்குறது பொதுவாவே நீராவியில் வேகவெச்ச சமாச்சாரம். கொழுக்கட்டையுமே கடுபுன்னு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்.

பிஜாப்பூர் பக்கமெல்லாம் கோதுமைமாவை சப்பாத்திக்கு உருட்டுற மாதிரி.. ஆனா தண்டியா உருட்டி நாலா மடிச்சு வேக வெச்சிருவாங்க. அதுவும் கடுபுதான்.

நீங்க சாப்பிட்ட கடுபு இட்டிலியேதான் :)

அடுத்து கர்நாடகா ஸ்டைஸ் ஓட்டல்னா நீர்தோசே இருக்கான்னு கேளுங்க. கூட ரசாயனா குடுப்பாங்களான்னும் கேட்டுக்கோங்க. தித்திப்போட ரசாயனா அட்டகாசமா இருக்கும்.

செட் தோசை பாத்து எவ்வளவு நாளாச்சு. நம்மூர்ல தோசை மாவையே செட்டா ஊத்திக் கொடுக்குறாங்க. ஆனா செட்டுக்கான மாவுல ஒரு பக்குவம் இருக்கு. மாவுல அவல் கலந்து ஊறவெச்சுக் கலந்துருவாங்க. அதான் மெத்து மெத்துன்னு பெரிய பெரிய ஓட்டைகளோட அம்சமா வர்ரதுக்குக் காரணம். பிச்சா பஞ்சு மாதிரி இருக்கும். நம்மூர்ல கொடுக்குறதெல்லாம் செட் தோசையே இல்ல.

said...

இன்னிக்கு இன்னோரு விஷயம் .என் ப்ளாக் என்னை வெரிஃபை செய்கிறது. மால் கோவில் படங்கள் வெகு அழகு. கடுபு கடுப்பு கொடுத்துவிட்டதோ.மற்ற ஐட்டம்களும், அந்தப் பூத்துவாலையும் சூப்பர்.

said...

நானும் இவ்ளோ நாள் கடுபு என்றா ல் ஏதோ புது வகை என்று நினைத்தேன்.
திண்டி வண்டி பாக்க நல்ல இருக்கு......

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.
//கூகிள்காரன் என்ன பண்ணியிருக்கான்.//



இந்த வேண்டாதவேலை எல்லாம் ஏன் செய்யறான்னு தெரியலையே:(

said...

வாங்க ஜி எம் பி ஐயா.

உங்க பின்னூட்டம் தடங்கல் ஒன்னும் இல்லாம வந்து சேர்ந்துருச்சு.

இக்நோர் செஞ்சாலும் ப்ராப்லம் இல்லையாக்கும்:-)

இதுவும் ஒரு வாழ்க்கைப் பாடம்தான் போல.

சின்னப் பிரச்சனைகளைப் பொருட்படுத்தாமல் கடந்து போயிடணும்,இல்லே?

said...

வாங்க ஜிரா.

ஓ.... அப்ப கோவில் வயசு, பத்துக்கும் குறைவு:-)

கடுபு இப்படி ஏமாத்திருச்சேன்னுதான்...:-)
அது ஏன் தொட்டுக்க தேங்காய்ப்பால் ?

அடுத்த முறை ரசாயனாவை நினைவு வச்சுக்கணுமா? ஓக்கே!

said...

வாங்க வல்லி.

கடுபு, கடுப்பைக் கிளப்புனது உண்மை:-)

said...

வாங்க சசி கலா.

திண்டி வண்டி எனக்கு ரொம்பப் பிடிச்சுருச்சுப்பா:-)

said...

‘கடுபு’ எப்படி இருக்கும் எனப் பார்த்துக் கொண்டேன்:)!

said...

வண்டி நிறைய திண்டி! :) நல்ல ஐடியா....


கடுபு - புதுப் பெயரில் இட்லி பார்த்து கடுப்பு ஆயிட்டீங்க போல! :)

படங்கள் அனைத்துமே அழகு. தில்லியிலும் வேங்கடவன் கோவில் திறந்து விட்டார்கள் - TTD நிர்வாகத்தினர். அடுத்து குருக்ஷேத்திராவில் தயாராகிக் கொண்டிருக்கிறது.

said...

நம்ம கோபாலுக்கும் பூபாலுக்கும் தாலி வேணுமாம்! // கோபாலுக்கு நீங்களும் பூபாலுக்கு அவர் மனைவியும் கட்டி விட வேண்டியது தானே :-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அட! பெங்களூருவாசிக்கே இப்படி கடுபு தெரியாமப் போச்சேப்பா:-))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆஹா..... வசூல்ராஜா ஏற்கெனவே கோவில் வச்சுருந்தாரே....ஆர் கே புரத்தில்.

அப்பவே (2007)சொல்லிக்கிட்டு இருந்தாங்க புதுக்கோவில் வரப்போகுதுன்னு....

எங்கே கட்டி இருக்காங்க இப்ப?

said...

வாங்க குறும்பன்.

அதெல்லாம் இவ்ளோ நாள் கட்டாம விட்டுருப்போமா என்ன?

அவுங்களுக்கு இல்லைன்னுதானே கேக்கறாங்க:-)))))

said...

கடுபு சாப்பிட்டது பத்திச் சித்தப்பா ஒரு கல்கி தீபாவளி மலரில் சிறுகதை எழுதி இருந்தார். படிச்சுப் படிச்சுச் சிரிக்கவேண்டிய கதை! கடுபுனா இட்லினு தெரியும்னாலும் அதிலே கொஞ்சம் சாமான்கள் சேர்ப்பாங்களே. இது என்னப் புதுவிதக் கடுபுனு தெரியலை. பார்ப்போம். :)

said...

பொதுவாக ஆகமம் சார்ந்த கோயில்களில் மாலை திறக்கும் நேரம் நான்கு மணிக்கு என்றிருக்கும். மற்றக் கோயில்களுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை. ஆனால் இங்கே ஶ்ரீரங்கம் கோயிலில் காலை திறந்தால் மீண்டும் எட்டு, எட்டரைக்கு நடை சாத்தி ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் திறப்பாங்க. பின்னர் பனிரண்டரைக்கு நடை சாத்தினால் ஒன்றரை மணிக்குத் திறந்துடுவாங்க. ஒன்றரை மணியில் இருந்து மாலை ஐந்தரை வரை பார்க்கலாம். தாயார் சந்நிதி தான் மதியம் இரண்டரைக்குத் திறப்பாங்க. சில நாட்கள் மூன்று மணியும் ஆகும். இப்போ தனுர் மாசம் என்பதால் இரவு சீக்கிரம் நடை சாத்துவாங்க. காலையில் ஒரு மணி நேரம் முன்னால் திறப்பாங்க. மதியம் பதினொன்றரை, பனிரண்டுக்கெல்லாம் மூடுவாங்க.

said...

ஆகம முறைப்படி கட்டாத கோயில்கள் சில எப்போது வேண்டுமானாலும் திறந்திருக்கும். நம்ம ஊர்ப்பக்கம் குலதெய்வக் கோயில்கள் சென்றால் பூசாரியிடமோ, அர்ச்சகரிடமோ முன் கூட்டியே சொல்லி நாம் செல்லும் சமயம் திறக்க வைப்பதும் உண்டு. இவை ஆகமம் சாராத கோயில்கள். ஆகமக் கோயில்களுக்குத் தனி நடைமுறைகள்.

said...

மெனு கார்டைக் கூட படம் பிடித்து விட்டீர்கள் போலிருக்கிறது. ஐந்து வருடம் கழித்து அன்றைய விலைப் பட்டியலை ஒப்பிட்டு ஒரு பதிவை போடலாம்.

தொடர்ந்து படித்து வருகிறேன்.

said...

கடுபு - இட்லி தானா!!! அட ராமா!!!

மாலை பார்த்த கண்களுக்கு மால் எதற்கு? அதானே...

நொறுக்குத் தீனி வண்டிய கடத்திட்டு வந்துடலாம் போலிருக்கே....:)

தில்லியில் எங்கள் பகுதியான கோல் மார்கெட்டில் தான் திருப்பதி தேவஸ்தான கோவில் உள்ளது. வீட்டிற்கு பின்னாடி தெருவிலேயே....:)

துண்டுப்பூ அழகா இருக்கு...:)

said...

கொட்டை கடுபு என்பது பலா இலையில் இட்லி மாவை ஊற்றிச் செய்வது. மாவில் ஊறவைத்த கடலைப் பருப்பு, சில சமயம் வேகவைத்த பட்டாணி எல்லாம் சேர்த்திருப்பார்கள். நீங்கள் சாப்பிட்ட இடத்தில் இதெல்லாம் செய்யவில்லை போலிருக்கிறது. அதற்குத் தொட்டுக் கொள்ள சிவப்பு கலரில் ஒரு சட்னி கொடுப்பார்கள். அதுவும் மிஸ்ஸிங். அடுத்த முறை நீர் தோசை சாப்பிட்டுப் பாருங்கள். தேங்காய் துருவல், வெல்லம் சேர்ந்த கலவை தான் தொட்டுக்கொள்ள.

said...

வாங்க கீதா.

கடுபு, கடைசியில் கடுப்பைக் கிளப்பிருச்சு:-)

கோவில் நடைமுறைகள் தெரிஞ்சு வச்சுக்கிட்டால் நமக்கும் நல்லதுதான். புது ஊரில் என்னன்னு தேட?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.

said...

வாங்க தமிழ் இளங்கோ.

மெனுகார்டைப் படம் பிடிப்பது வழக்கமாப்போச்சு. அதில் இருக்கும் ஸ்பெல்லிங்கைப் பார்ப்பதே ஒரு பொழுது போக்கு. சிரிப்புக்கு கேரண்டீ:-))))

காளிபிளவர் மசாலான்னு ஓங்காரமாய் ஆங்காரமாய் காளி இருப்பாள்:-))))

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

நானும் அட ராமா அட ராமான்னு சொல்லிச் சொல்லியே புண்ணியக்கணக்கு
கஸானா ஃபுல்:-)

தில்லி கோவில் எப்படி இருக்கு?

வீட்டுக்குப் பக்கம் என்றால் அடிக்கடி போய் வரலாம்.

said...

வாங்க ரஞ்ஜனி.

அடுத்த முறை நீர் தோசையா? ஓக்கே!

said...

துண்டுப்பூ அழகு. கோயில்தர்சனத்துடன் தீனி தர்சனமும்:)

said...

வாங்க மாதேவி.

வருகைக்கு நன்றி.

said...

Hi Mam, Your blog is really superb.
We are planning to go to Srirangam and kumbakonam. I am searching your blog for minute details. Photographs and the style and language is awesome.

said...

வாங்க சரஸ்வதி.

முதல் வருகைக்கு நன்றி.

துளசிதளத்தில் ஸ்ரீரங்கம், கும்பகோணம் பதிவுகளுமுண்டு. வாசித்துப் பாருங்கள்.

இந்தப்பயணத்திலும் இந்த இரண்டு இடங்களுக்கும் போய் வந்தோம். விவரம் பின்னால் வரும்:-)

கும்பகோணம் ராமசாமி கோவிலில் வீணை வாசிக்கும் அனுமன் இருக்கார், மறந்துடாதீங்க:-)

said...


@சரஸ்வதி

கும்பகோணம்.

http://thulasidhalam.blogspot.com/2009/03/2.html

ஸ்ரீரங்கம்:

http://thulasidhalam.blogspot.com/2013/03/blog-post_25.html

நூல்பிடித்துப் போகலாம்:-)