Monday, December 08, 2014

கங்கம்மாவும் கா(ட்)டு மல்லேஸ்வரரும்.... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 4)

நம்ம ராமலக்ஷ்மி சொன்னதுபோல் இது  டெம்பிள் ரோடுதான். ஒரே இடத்தில் எதிரும் புதிருமா இருக்கும் கோவில்களுக்கு  இங்கிருந்து அங்கே அங்கிருந்து இங்கேன்னு  பக்தர்கள்(!) போய் வந்துக்கிட்டு இருக்காங்க. ஜோதியில் நாமும் கலந்தோம்.

கண்ணெதிரே இருக்கும் கங்கம்மா தேவி கோவிலுக்குள் நுழைஞ்சோம். இது  கொஞ்சநேரம் முன்னால் பார்த்த  லக்ஷ்மிநரசிம்மன் கோவிலுக்கு  இடப்பக்கத்தில்  இருக்கு. அதே குன்றில்தான் அமைச்சுருக்காங்க. அதேபோலதான் பத்துப்பதினைஞ்சு படிகள் ஏறிப் போகணும்.

அம்மன் கோவில்தான். கங்காதேவிக்கான  கோவில் இல்லை.  ஆனால்..அன்னம் மீது அமர்ந்துள்ள  தேவியின்  குடத்தில் இருந்து  கங்கை பெருகி வருவதுபோல்  ரெண்டு சிலைகளைக்  கோவில் முன்புறம்  இடமும் வலமுமாக வச்சுருக்காங்க. அலங்காரத்து வச்ச மாதிரிதான் தெரியுது. கங்கைக்கு முதலை வாகனம் இல்லையோ?  கோவில் முகப்பில் கூட திரிசூலம், கத்தி, ஏந்திய  சக்தி அமர்ந்து இருக்காள்.



கடந்த 86 வருசமாத் தேர்த் திருவிழா நடந்துக்கிட்டு இருக்கு.  கோவிலுக்கு அஞ்சுநிலை ராஜகோபுரம் கட்டிப் புதுப்பிச்சது  ஒரு பத்து வருசத்துக்கு முந்திதான்.  பராமரிப்பு நல்லா இருக்குன்னு கோபுரவர்ணங்கள் எல்லாம்  பளிச்ன்னு இருப்பதைப் பார்த்தாலே தெரியும்!

மே மாசத்தில் தேர்த்திருவிழா, கரகம் எடுப்பது என்று மூணுநாட்கள் திமிலோகப்படுமாம் இங்கே!

படியேறி உள்ளே போனதும் முன்வாசலுக்கு வலது பக்கத்தில்  அழகான தேர்போல்  ஒரு சந்நிதி.  உள்ளே அலங்காரத்துடன் ஒரு அம்மன். த்ரிசூல கங்கம்மா தேவியாம். தேருக்கு நேரெதிரே நவகிரகங்களுக்கான சந்நிதி. மூலவரை சேவிக்க உள்ளே போறோம். பூக்குவியல்களினூடேசிரித்த முகமா  கரும்பளிங்குச் சிலையாக நிகுநிகுன்னு இருக்காள் தேவி. வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை மடிச்சு உக்கார்ந்து இருக்கும் தோற்றம். கொஞ்சம் பெரிய சிலைதான்.

உள்ளே பிள்ளையார்,  முருகன்  சந்நிதிகள் தனித்தனியா இருக்கு.
பக்தர்களின் தேவை அனுசரிச்சு  ஹோமங்கள் செஞ்சுக்க முடியுமாம் இங்கே. நாம் போனபோதும்  நல்ல கூட்டம்தான்.  செவ்வாய், வெள்ளிகளில் அம்மனுக்கு  ப்ரத்தியேக அலங்காரம் செய்வதால்  அதைப் பார்க்கவே கூட்டம் அதிகம் வருமுன்னு சொல்றாங்க. உள்ளே  படம் எடுக்க அனுமதி இல்லைன்னு போர்டு வச்சுருந்தது. அதனால்  கூகுளாண்டவர் கேட்டப்ப,ரெண்டு படங்களை அருளிச்செய்தார்.

இங்கிருக்கும்   நாலு கோவில்களில் மூணு ஆச்சுன்னு நாலாவதா  காடு மல்லீஸ்வரர் (மல்லிகார்ஜுன ஸ்வாமி) கோவிலுக்குப் போறோம். லக்ஷ்மிநரசிம்மர் கோவிலில் இருந்து நாலெட்டு வச்சால் போதும். கோவிலுக்கான நுழைவு வாசலில் நம்ம புள்ளையார் !



கொஞ்ச தூரம் உள்ளே போனதும்  ஒரு  இருபது மீட்டர்தூரத்தில் இடது பக்கம் அஞ்சு நிலை ராஜகோபுரத்தோடு  நுழைவு வாயிலும் கண்ணெதிரே மாயாஜாலம் போல் சட்டென்று தோன்றிய  'மலை'க்கோவிலும் அதன் படிகளும்! படிகளை நோக்கிப் பாய இருந்தவளை, 'இந்தப்பக்கம் பாருங்க அண்ணி' என்றார் மைத்துனர்.


எதோ கொலுப்படிகளில் பொம்மைகளை அடுக்கி வைத்தாப்போல  அழகோ அழகு. அத்தனையும் நாகர்கள்! பக்தர்கள் அவரவர்கொண்டு வைத்து வைத்துப் பிரார்த்தனை செய்கிறார்கள் போல!

அவசரமா க்ளிக் செஞ்சுட்டு படியை நோக்கிப்போயிட்டேன். ஏற்கெனவே கோபால் விடுவிடுன்னு படிகள் ஏறிப்போய்க்கிட்டு இருந்தார். ( இந்த அவசரத்தில்  ஒரு பெரிய ஏழுதலை  நாகம் உடலைச் சுருட்டி  சோஃபா போட்டு வைக்க, அதன் படத்தை பேக்ட்ராப்பா வச்சு  நாகதேவர்(ஆதிசேஷனா இருக்குமோ!) நிற்க, அவருக்கு ரெண்டு பக்கமும்  காவல்நாகங்கள்  இருவர் நிற்பதை  க்ளிக்க மறந்தேன்:(  ஒருவேளை, கணவரைக் கண்காணிக்கும் மனைவி  நாகங்களோ?)

மேலே:  ஆண்டவர் அருளிய சுட்ட படம். 

படிகள் முடியும் கோவில் நுழைவு வாசலுக்கு ரெண்டு பக்கமும்  மல்லிகார்ஜுனர் இடுப்பில் வச்ச கையுடன்  கனகம்பீரமா நிக்கறார்.  ரொம்ப அழகான, லக்ஷணமான முகம்.  சிவன், மனுஷ்ய ரூபத்தில் இருப்பது எனக்கு எப்பவுமே ரொம்பப்பிடிக்கும். எங்கூர் ஸ்வாமிநாராயணன் கோவிலில்   இடுப்பில் புலித்தோலும், பாம்பு பெல்ட் ஒட்டியாணமுமாத்தான்  இருக்கார்.



வாசல்படியைத்தாண்டி உள்ளே போறோம்.  பலிபீடமும் கொடிமரமும் தாண்டி சின்னதா ஒரு கல்மண்டபத்துக்குள்ளே நந்தி கருவறை நோக்கி உக்கார்ந்துருக்கார். கருவறையில்  சுயம்புவாகத் தோன்றிய சிவன்,  குட்டி லிங்க ரூபத்தில். அவருக்கு முன்னே இன்னொரு  சின்ன  நந்தி தேமேன்னு வெறுந்தரையில் உக்கார்ந்துருக்கு!

காடு போல் இருந்த இந்த இடத்தில்    காட்சி கொடுத்த இவரை மல்லிகார்ஜுன ஸ்வாமி,மல்லேஸ்வரர் என்று பெயர் வச்சு கும்பிட்டுக்கிட்டு இருந்துருக்காங்க, மக்கள்ஸ்.

அப்புறம்  இந்தப் பக்கம் வந்த  நம்ம மராத்தா ஷிவாஜியின் (ஒன்றுவிட்ட) தம்பி வெங்கோஜி  கோபுரம் எல்லாம் எழுப்பிக் கோவிலைக் கட்டி இருக்கார்.  கோவில் பதினேழாம் நூற்றாண்டு சமாச்சாரம். மலை என்றாலே  மனிதனுக்கு மலைப்புதான்.  அதான் மலைகளையும் குன்றுகளையும் எங்கே கண்டாலும்  அங்கே தன்னைவிட உயர்ந்ததாகக் கருதும் இறைவனுக்கு  கோவில் கட்டி விடுகிறான்.

புள்ளையாருக்குத் தனி சந்நிதியும் இருக்கு. மண்டபத்தின்  கோடியிலேயே வரிசையா தனித்தனி சந்நிதிகள். தக்ஷிணா மூர்த்தி, சண்டிகேஸ்வரின்னு.....
கோவிலைவிட்டு வெளியே வந்து இடப்பக்கம் இருக்கும் இன்னொரு பகுதிக்குப்போனோம். நம்ம அவ்வையாரிடம், சுட்டபழம் வேணுமா சுடாத பழம் வேணுமான்னு கேட்டுக்கிட்டு மரத்துலே ஏறி உக்காந்துருக்கான் முருகன். அவ்வையாரின்  ஜோல்னாப் பை, சூப்பர்.

வள்ளி,தேவசேனா சமேத சுப்ரமண்யன் தரிசனம்.  பேகன் வந்துட்டுப் போனாரோ?  முன்னிருக்கும் மயிலுக்குப் போர்வை போர்த்தி இருக்கே!


பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில், கோவிலையொட்டி  மக்கள்குடியிருப்பு ஆரம்பிச்சதும், இந்தப்பகுதிக்கு மல்லேஸ்வரம் என்றே  பெயர் வச்சுட்டாங்க.   இப்போ பெண்களூருவின் பிரசித்தி பெற்ற பேட்டை இது. அப்போ  மைசூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்த திரு. நஞ்சுண்டைய்யாதான்  இதுக்கு  முன்கை எடுத்தவர். இங்கே  முதல்முதலில்  குடிவந்தவர்களில் இவரும் இருந்தார்.   அரசுக்கு  தானம் கொடுத்த இவருடைய பெரிய மாளிகைதான்   இப்போ பெண்கள் உயர்நிலைப்பள்ளியாக இருக்கு என்பது கூடுதல்  தகவல்.

கோவிலில் மக்கள் கூட்டம் வர்றதும் போறதுமா கலகலன்னு இருந்துச்சு. மஹாசிவராத்ரிக்குக் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு  வருமாம்.
படி இறங்கிக்கீழே வந்தோம்.  முந்தி  பார்த்த நாகர்களுக்குப் பக்கத்தில்  தலவிருட்சமா  பெரிய அரசமரம். அதுக்கு அந்தாண்டை ஒரு ஆஞ்சநேயர் கோவில் (சமீபத்திய வரவு) இருக்கு.


  நம்ம   பூபாலும் கோபாலும்


இப்ப நாம் பார்த்த இந்த நாலு கோவில்களும் பகல் 12 மணிக்கு மூடிருவாங்களாம்.  அதனால் நம்ம நேயுடுவுக்கு இங்கே இருந்தே  ஒரு  ஹை & பை சொல்லிக்கிட்டேன்.





26 comments:

said...

நாகர்கள், ஜோல்னாப் பை சூப்பர்....!

said...

நாங்களும் இந்த கோவில்கள் எல்லாம் நீங்கள் போனது போல் வரிசையாக பார்த்தோம். மரத்தடியில் இருக்கும் நாகத்திற்கு பால் கொண்டு வந்து காலையில் அவர்களே அபிஷேகம் செய்து போகிறார்கள்.

மயிலுக்கு பேகன் வந்து போர்வை கொடுத்து போனதை ரசித்தேன்.

said...


நந்தி கோவிலை கூட சத்ரபதி சிவாஜியின் தம்பி கட்டியதாக சிலர் சொல்லி வருகிறார்கள்.

ஏழுதலை நாகம் பார்த்ததில்லை. மல்லேஸ்வரத்தில் இருந்தபோது சம்பங்கி சாலை வழியாகவே சென்றிடுவோம். படியேறி சென்ற சமயங்கள் முன்னிரவாக இருந்தபடியால் கண்ணில் பட்டதில்லை. நாக வரிசையும் அருமை. அடுத்தமுறை செல்லும் போது பார்த்து படமும் எடுக்கிறேன்:). இது கீழப்பெரும்பள்ளத்தில் எடுத்தது. Roots of India, Culture பிரிவில் தேர்வு செய்து வெளியிட்டிருந்தது.

பக்தர்களுக்கு படம் எடுக்கத் தடை. ஆனால் எல்லாப் படங்களும் கூகுளில் கிடைக்கும்!

said...

கங்கம்மா - மாரியம்மனோ?

அலங்காரக் கோலத்தில் அம்மனின் அழகான தரிசனம் .

நாகர்களும், கோவிலும் அருமை.

said...

நேரடி வர்ணனை போல் எவ்வளவு தகவல்கள்... அடுக்கிவைக்கப்பட்ட நாகர்கள் அழகு.
அவ்வையாரின் ஜோல்னாப்பை? யாருப்பா அந்த ஐடியா கொடுத்தது? இலக்கியவாதிகள் என்றாலே ஜோல்னாப்பை ஞாபகம் வந்துவிடுமோ?

said...

துளசி கண்ணிலதான் ஜோல்னாப்பை பட்டிருக்கு பாரு. பெங்களூரே ஒரு நாகர் சிடி தான். எங்கபார்த்தாலும் நாகர்களுக்கான கோவில்கள் நிறையப் பார்க்கலாம் செம்மண் பூமி. சிரமம் எடுத்துக்கட்டி இருக்கிறார்கள். நல்ல சுற்றுலா சிரமம் இல்லாமல் கோவில்களைப் பார்த்தாச்சு.

said...

ஒவ்வொரு இடத்துக்குப் போகும்போது கூடவே குறிப்புகளும் எழுதி வைத்துக் கொள்வீர்களோ. அத்தனை டீடெயில்ஸ் ....!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஆஹா.... ரசனைக்கு நன்றீஸ்.

பி.கு: இந்த வேர்டு வெரிஃபிகேஷன் என்ன புதுசா தானாய் வருது? எல்லோருக்கும் வருதா என்ன?

said...

வாங்க கோமதி அரசு.

நாங்க போனபோதுகூட, ஒரு பக்தர் பூஜை சாமான்களோடு வந்து தானே பூஜை செஞ்சுக்க ஆயுத்தமானார்.

ரசிப்புக்கு நன்றி:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

ஷிவாஜி தம்பியின் காலம் ஏழாயிரம் இல்லையேன்னு எனக்குக் குழப்பம் இருக்கேப்பா! ஒருவேளை புதுப்பிச்சு இருக்கலாமோ?

உங்கள் படம் அருமை. தேர்வு பெற்றமைக்கு இனிய பாராட்டுகள்.

மக்களுக்குத்தான் எவ்ளோ வேண்டுதல்கள் பாருங்க!!!

நம்ம தளத்தில் இதே படம் போட்டுருக்கேன்.
http://thulasidhalam.blogspot.in/2009/03/4.html

நவதிருப்பதி யாத்திரையில் எடுத்தேன். கோவிலுக்கு உள்ளேதான் படம் எடுக்கத் தடை.இந்த நாகர்கள் வெளியேதான் இருக்காங்க. கேது ஸ்தலம்.

said...

வாங்க ரோஷ்னியம்மா.

மாரியம்மன் தான். பொன்னியம்மன், கெங்கையம்மன் முண்டக்கண்ணியம்மன் என்றெல்லாம் தமிழகத்தில் சொல்றோம் இல்லையா?

said...

வாங்க கீத மஞ்சரி.

இந்த இலக்கிய 'வியாதிகள்' தொல்லை தாங்க முடியலையேப்பா:-)))))

said...

வாங்க வல்லி.

நம்ம தளம் ஆர்ம் சேர் ட்ராவலர்க்குன்னு விளம்பரப்படுத்திடலாமா? :-)))))

என்னப்பா... இப்படிச் சொல்லிட்டீங்க.... அங்கே சேஷன்ஸ் அதிகமோ!!!!

said...

வாங்க ஜி எம் பி ஐயா.

குறிப்புகள் எழுதுவதெல்லாம் மனசுக்குள்ளேதான். ஆனால் எவ்ளோநாள் வண்டி ஓடுமுன்னு தெரியலை. அப்பப்ப 'யானைக்கு' ஞாபகமறதி வந்துருது. முந்தாநாள் என்ன குழம்பு வச்சேன்றது இப்போ நினைவில் இல்லை:(

said...

ஆகா.. அதே கோயில்தான். எவ்வளவு மாறியிருக்கு. கோபுரங்கள் வளைவுகள் எதுவுமே அப்போ கிடையாது. பிளெக்ஸ் பேனர்கள் கிடையாது. வெள்ளையடிச்ச சுவரும் காவிக் கோடுகளும்தான். இப்ப எவ்வளவு கலர் கலரா இருக்கு.

இந்த முருகனைப் பாக்கதான் நான் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடந்து போனேன். அந்தத் தெம்பை மறுபடியும் முருகன் குடுக்கனும்.

அங்க ஒருவாட்டி சிலர் உக்காந்து திருப்புகழ் பாடிக்கிட்டிருந்தாங்க. நடுல எனக்குத் தெரிஞ்ச ரெண்டு வரி வந்தது. நானும் என் பாட்டுல பாடுனேன். அவங்க ஏதோ திருப்புகழ் வகுப்பைச் சேந்தவங்களாம். எங்கயோ திருப்புகழ் கூட்டு வழிபாடு நடக்குதுன்னு வரச் சொன்னாங்க. அங்க ஒரு திருப்புகழ் புத்தகம் கெடைச்சது. இன்னைக்கு வரைக்கும் அது கைல இருக்கு. முருகா!

said...

அருமையான படங்கள்.....

உங்கள் மூலம் நானும் மல்லேஸ்வரம் சென்று வந்தேன்! :)

said...

வழக்கம் போல சிறப்பான பதிவு. சில இடங்களில் அவர்கள் படம் எடுக்க அனுமதி தராவிட்டாலும், கூகிளில் மட்டும் எப்படியோ வந்து விடுகிறது.

// வள்ளி,தேவசேனா சமேத சுப்ரமண்யன் தரிசனம். பேகன் வந்துட்டுப் போனாரோ? முன்னிருக்கும் மயிலுக்குப் போர்வை போர்த்தி இருக்கே! //

தங்கள் வரிகளை நன்றாக்வே ரசித்தேன். தேவசேனாதான் தெய்வானையோ?

said...

வாங்க ஜிரா.

காலம் மாறமாறக் கோவில் புற அலங்காரங்களும் மாறத்தானே வேணும்!

நம்ம அகிலா மாமி கூட கோவை முதியோர் இல்லத்துக்குப் போனபின்பும் கூட கந்தசஷ்டி சமயம் சென்னையில் இருக்கும் அவுங்க பழைய திருப்புகழ் பஜனை குழுவில் பாட வந்துட்டுட்டுதான் போறாங்க.

அதெல்லாம் முருகன் பார்த்துப்பான். பக்தர்களைக் கைவிடுவானா என்ன?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசனைக்கும் வருகைக்கும் நன்றி.

said...

வாங்க தமிழ் இளங்கோ.

கூகுளாண்டவருக்கு எந்தத் தடையும் இல்லை போல இருக்கே!!!!

//தேவசேனாதான் தெய்வானையோ?//

ஆமாங்க. இந்திரனின் மகள் அவர்.

said...

நேரில் கண்டது போல் உணர்ந்தேன் . படங்களும் விவரங்களும் அருமை !!!
சிவன் கம்பீரமும் அழகும் சேர்ந்து அசத்துறார் .
சகோதரர்கள் சிரிப்பும் சந்தோஷமும் பார்க்க நிறைவு .

said...

வரிசை வரிசையாக நாகர்களைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. இன்னும் இங்கு போனதில்லை.
ராமலக்ஷ்மியின் புகைப்படத்தையும் பார்த்தேன். பாராட்டுக்கள் ராமலக்ஷ்மி!

said...

வாங்க சசி கலா.

ஆஹா.... அது குடும்பச்சிரிப்பு:-)))

ரசிப்புக்கு நன்றீஸ்.

said...

வாங்க ரஞ்ஜனி.

உள்ளூர்காரருக்கு ஒரு வீக் எண்ட் வராமலாப் போயிரும்?

ரிலாக்ஸா ஒருநாள் போயிட்டு வாங்க.

said...

நிறைந்த கோயில்கள்! அழகு.

said...

வாங்க மாதேவி.

வருகைக்கு நன்றி.