Wednesday, October 02, 2013

சிங்கைச் சிங்கங்களுடன் ஒரு இனிய சந்திப்பு (சிங்கைப்பயணம் 5)

'சிங்கையில் ஒரு வசதி, விதவிதமான இடங்களில் பதிவர் சந்திப்பு நடத்தலாமு'ன்னு நம்ம கோவியார் சொல்வார்.  மழையா இருந்த  ஒரு சமயம் மாலில் இருக்கும் ஃபுட் கோர்ட்லே கூட சந்திப்பு வச்சுருவாங்க.  இப்பக் கொஞ்சநாளா மெரீனா Bபே யில்  நடக்குது. மழை வந்தா அந்த அகலமான பாலத்துக்கடியில்  கூட்டம் போட்டுருவோம்:-) அதான் திடீர் திடீர்ன்னு பொழுதன்னிக்கும்  மழை வந்துருதே!

ரயிலில்  ஏறி மெரினா பே வந்திறங்கினோம். நடுவில் நாலு ஸ்டேஷந்தான்.  வெளியே போனால்  கொஞ்சதூரத்தில் ஸாண்ட்ஸ் 'படகு' தெரியுது. நாம் போக வேண்டிய இடம் அதுக்கும் அந்தாண்டை! இஞ்சி தின்ன 'என்னவோ ஒன்னு' மாதிரி முழிச்சேன். ரயில் ரயில்ன்னு பிடுங்கி எடுத்தது நாந்தான்:(   பெரிய  ப்ரிட்ஜ் எல்லாம் போட்டுருக்காங்க. அதை வேடிக்கை பார்த்துக்கிட்டேபோகலாமே! நட ராஜா நட ராணி!வெயிலில் போகாம ஸாண்ட்ஸ் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் உள்ளேயே போனோம்.  அட்டகாசமா இருக்கு!  லைவ் ம்யூஸிக்  ப்யானோ, செல்லோ & ட்ரம்ஸ்  வாசிச்சுக்கிட்டு இருக்காங்க.

வெளியே  பெரிய பெரிய்ய்ய்ய்ய்ய தொட்டிகள்,குளம்போல் நிறைஞ்சு வழிய, தாமரை, அல்லி மலர்கள் கண்ணை இழுக்குது. மஹாலக்ஷ்மி ஒவ்வொன்னிலும் வாசம் செய்யட்டும்.ஊர் கொழிக்கட்டும்.

Gardens by the Bay ன்னு பெரிய  தோட்டங்கள். அதுலே  சிப்பியைக் கவுத்து வச்ச மாதிரி  ரெண்டு கன்ஸர்வேட்டரி. (Flower Dome)  இது கட்டிக்கிட்டு இருந்த சமயம் ஸாண்ட்ஸ் மொட்டைமாடியில் இருந்து பார்த்தோம். உள்ளே போய்ப் பார்க்க  ஒரு ரெண்டு மணி நேரமாவது ஒதுக்கணும்.  இந்த முறை கிடைக்கலை. அடுத்த முறை போகலாம், என்ன? தூண்களே இல்லாமல் கட்டி இருக்காங்களாம்.

இப்ப நமக்குப் பதிவர் சந்திப்புக்குப் போகணும். டூரியன் பில்டிங் முன்புறமா போகலாம்.வழி இருக்குன்னு  போனால்...... பராமரிப்புப் பணின்னு பாதை அடைபட்டு இருக்கு:(  ஐயோ  ரொம்பச் சுத்திக்கிட்டுல்லே போகணும்! சந்திப்புக்கு தாமதமாப்போறோமே என்ற கவலையோடு  நடந்தேன்.  ஒருவழியா டூரியன் ஷாப்பிங் சென்டருக்குள்ளே போனதும் கோவியாருக்கு  ஒரு ஃபோன் போட்டார் கோபால்.  அவரும் வெற்றிக் கதிரவனும்  பாலத்துக்கருகில் இருக்காங்களாம்.

கொஞ்சதூரம் நடந்து ஒரு புல்வெளியில் இடம்பிடிச்சோம். ஒவ்வொருத்தரா வந்து சேரக்கொஞ்ச நேரம் ஆச்சு. நம்ம செந்தில்(சிங்கை)நாதன் வழக்கம்போல் பதிவர் சந்திப்பு ஸ்பெஷல்  இனிப்பு கொண்டு வந்துருந்தார். அவருடைய தங்க்ஸ்க்கு நன்றி சொல்லிக்கறேன். செந்திலின் தங்க்ஸ் நமக்கு இன்னொரு விதத்தில் நெருங்கியவர்.  மதியம் சந்திச்சேன்னு சொன்ன கணேஷின் தங்க்ஸும், செந்திலின் தங்க்ஸும் ஒரே ஊர், ஒரே பள்ளின்னு  சின்னவயதுமுதல் நண்பிகள். சச் அ ஸ்மால் வொர்ல்ட் யூ ஸீ:-)

சொஜ்ஜியப்பம் சூப்பர். இல்லே பதாம் பூரியா?  அச்சச்சோ...பேச்சு சுவாரசியத்துலே  பெயரை நினைவு வச்சுக்க மறந்துட்டேனே:(   பல் இருக்கறவங்களுக்குப் பாவக்காய் பகோடாவும் குட்டித் தேன் குழலும் கோபாலின் வகை. எதைப் பற்றி விவாதித்தோம்(!!!)  என்று கேக்காதீங்க. இது ஜஸ்ட் ஒரு பதிவர் குடும்ப சந்திப்பு.  எனக்கு எப்படியும் ரெண்டு வருசத்துக்கு ஒரு முறையாவது நம்ம சக பதிவர்களைக் கண்டு குசலம் விசாரிக்கணும். அந்த வகையில்  பட்டது இது . சந்திப்பு ஏற்பாடு செய்த நம்ம கோவி.கண்ணனுக்கு  என் மனமார்ந்த நன்றியை இங்கே பதிவு செஞ்சுக்கறேன்.அகில உலக முதல் பதிவர் சந்திப்பு (2005) 2007 


2009

2011

முந்திய சந்திப்புகளில் சில  இந்தச் சுட்டிகளில்:-)


சிங்கையில் ஒரு கங்கைஇதென்ன இப்படி ஒரு அன்புஞாயிறு முழுதும் நண்பர்களுடன்சிங்கைப்பெருமக்கள்ஸ்


கோவியாரின் குடும்பத்துடன் ஒரு நெருக்கமேற்பட்டுப் போச்சு. பூர்வஜன்ம பந்தமுன்னு நான் நினைச்சா,  'நாமெல்லாம் சொந்தம் ஆகிட்டோம்' னு கோவியார் சொல்றார்:-))) சிரமம் பார்க்காமக் குடும்பத்தோடு வந்து நம்மைக் கண்டுக்கறது,  எனக்கும் மனசுக்குத் திருப்தியா இருக்கு.

இன்றைய சந்திப்புக்கு  வந்திருந்தவர்கள், செந்தில்நாதன்,  சத்திரியன், கோவி.கண்ணன்,  (நான்) ஆதவன், பாஸ்கரன்,  வெற்றிக்கதிரவன், பிரியமுடன் பிரபு, கிஷோர் ஆகியோர்.  இவர்களில் சமீபத்துலே   ரெண்டு பேரா ஆனவங்க  இப்போ  மூணு பேரா ஆகி இருக்காங்க.  இளம் தந்தையர்! முகம்பூராவும் ஜொலிப்பு. குடும்பத்தின் புதுவரவுக்கு எங்கள் ஆசிகள்.

நம்ம அறுபதை மனசில் வச்சுக்கிட்டு  செந்தில்நாதன் ஆசி வழங்கக் கோரினார். அன்புக்கும் ஆசிகளுக்கும் நம்மிடத்தில் பஞ்சமுண்டா என்ன? அள்ளி வழங்கிட்டோமுல்லெ:-))))சிங்கையில் நம் மக்களின் பிஸி வாழ்க்கையில்  சந்திப்புக்குன்னு  வர்றதும் ஒரு  கஷ்டமே. முகாந்திரம் ஒன்னு(ம்) வேணும் பாருங்க. இன்று அது துளசி கோபால் வருகை:-)))

ரெண்டு மணி நேரம் அரட்டைக்குப்பிறகு சந்திப்பின்  நினைவுக்காக குரூப் ஃபொட்டோ ஒன்னை இருட்டில் எடுத்துக்கிட்டு  அவரவர் பாதையில் போனோம். மெர்லயனைப் பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு  அந்தப்பக்கம் நடையைக் கட்டுனோம்.  மெரினா பே அலங்காரத்தில் இப்போ சிங்கம் ரொம்பக்கத்தில் வந்திருச்சு:-)

ஒளிமயமான அலங்காரம். ஜொலிக்கிறார் சிங்கர்.  மீன் உடம்பும் சிங்கத்தலையுமா  ஸ்மார்ட்டா இருக்கார்  இந்த கடல்கன்னர். இவர்  ஆண்பிள்ளைதானாம்!  போன வருசம் (2012) இவருக்கு வயசு நாற்பது முடிஞ்சது. சிங்கபுரத்துக்கு அடையாளமா  சிங்கரைத் தெரிவுசெஞ்சது 1964. அப்போதிருந்து  சுற்றுலாத்துறை இவர் படத்தைப்போட்டே விளம்பரம் செய்ய ஆரம்பிச்சது. சிங்கையில் மட்டும் புகழ்பெற்ற அஞ்சு சிங்கர்கள்  இருக்காங்க. அதுலே உருவத்தில் பெரியவர் ஸென்டோசாத் தீவில் இருக்கார்.  ஆனாலும் நாம் இப்போ பார்க்கும் இவர்தான்  அதிகாரபூர்வமான  சிலையா  ஆனவர்.  செப்டம்பர் 15, 1972 இல் -Prime Minister Lee Kuan Yew  திறந்து வச்சுருக்கார். நான் 28 வருசம் முந்தி அவரை ஆத்தங்கரையில்தான் பார்த்தேன்.

 புதுசு புதுசா கட்டிடங்கள் எல்லாம் வானுயர வந்தபிறகு , இவரைச் சரியாப் பார்க்க முடியலைன்னு சிங்கை நதியின் முகத்துவாரத்தில் இருந்தவரை, 2002  இங்கே இடம் மாத்திட்டாங்க.  சிங்கப்பூர்ன்னு சொல்றதுக்குண்டான நினைவுப்பரிசு இந்த சிங்கம்தான்.  உள்ளூர் மக்கள்ஸ், வெளிநாட்டு நண்பர்களுக்கு  இதைத்தான்  நினைவுப்பரிசா  பெரும்பாலும் கொண்டு போறாங்க.

ஆத்தங்கரையில் இருந்து  இவரை இங்கே கொண்டுவர  மூணுநாள் ஆயிருக்கு.  அதுவும் ஒரு 120 மீட்டர் பயணம்தான். இருவது  எஞ்சிநீயர்கள்,  ஐநூறு டன்வரை தூக்கும்  வசதியுள்ள க்ரேன்கள் வச்ச ரெண்டு படகுகள் தேவைப்பட்டிருக்கு.  பாலத்துக்குப் பக்கம் படகு வந்தப்ப அப்படியே க்ரேனில் அலாக்காத் தூக்கி இந்தப்பக்கம்  வச்சுருக்காங்க.  முப்பது வருசம் ஒரே இடத்துலே இருந்தவரை  மூணே நாளில்  இங்கே கொண்டு வந்துட்டாங்க பாருங்க. சிங்கருக்குள்ளே ரெண்டு பம்புகள்.ஒன்னு பழுதானால் அடுத்த விநாடியே வேறொன்னு  வேலை செய்ய ஆரம்பிச்சுரும்.

அவர் வாயிலிருந்து வரும்  நீரூற்று ஒரு அழகுன்னா, அதில் இருக்கும் நீர்த் திவலைகளைச் சுமந்து வந்து நம் மீது  பன்னீர் தெளிக்கும்  இளங்காற்று , பகலெல்லாம் சுட்டெரிச்ச சூட்டுக்கு  இதமா இருக்கு!  நீளப்படிக்கட்டுகளில்  மக்கள் எதையோ எதிர்பார்த்து  நேராக் கண்ணு நட்டு உக்கார்ந்துருந்தாங்க.  நாமும் ஜோதியில் கலந்தோம். எதிரில் இருக்கும் ஸாண்ட்ஸ் ஹொட்டேல் மாடியில் இருந்து  லேஸர் ஷோ ஒன்னு ஆரம்பிச்சது. ஹைய்யோ!!!!  வண்ணவண்ண கதிர்கள் அங்கும் இங்கும் பாய்ஞ்சு அந்த ஏரியாவையே ஒளி வெள்ளத்தில் மூழ்கடிக்குது. எல்லாம் ஒரு 15, 20  நிமிஷங்கள்தான்.  தேவலோகத்தில் இருக்கமோன்னு  மனம் மயங்குனது உண்மை .எட்டரை ஆகுது, நாமும் 'பொழுதோடு'  அறைக்குப் போகலாம். டாக்ஸி கிடைக்குமான்னு பார்த்தால் கிடைச்சது.  வெறும் அஞ்சு நிமிசத்துலே ஹொட்டேலுக்குக் கொண்டு வந்து விட்டுட்டார்  ஒரு  சீன இளைஞர்.  வேலைக்குப் புதுசாம். ஆனால் ஜிபிஎஸ் இருக்க பயமேன்?

ராச்சாப்பாடு இன்னிக்கு எங்கே?  லைட்டா சாப்பிடலாமுன்னா  கோமளவிலாஸ் பக்கம் கூட்டம் குறையலை.  ஸ்மால் வாக்.  வாழையிலைக்குப்போய் சாப்பிடலாம்.  அங்கொன்னும் இங்கொன்னுமா சிலர்.  தோசைக்கல்லு சூடாவேஇருக்கு போல!  வெங்காயம் மட்டும் வதங்கிக்கிட்டு இருக்கு.  மாவைக் கிண்ணத்தில் எடுத்து அதில் சடார்னு விசிறியடிச்சார் செஃப். ரெண்டே நிமிசத்தில் மூணு ஆனியன் ரவா தோசை முறுமுறுன்னு!   அவரவர்க்கு வேண்டியதை ஆர்டர் செஞ்சோம்.

 நான் வாங்குன ப்ளெய்ன் வாட்டருக்கு  இருபது செண்ட்!
திரும்பி அறைக்கு வரும்போது  ஒரு மூலைக் கடையில் காய்கறிகடை. புடலங்காய், கோவைக்காய் எல்லாம் பார்க்க ஆசையா இருந்துச்சு. இன்னொரு மூலைக் கடையில் தட்டுதட்டா சீர்வரிசை. மாம்பழம்! சீஸன் தொடக்கமாம். கிலோ பத்து டாலர்கள். செராங்கூன் சாலையில்   வலது பக்கம் முழுசும் பிரிந்து  போகும்    சின்னத்தெருக்கள் ஏராளமான  இருப்பதால் மூலக்கடைகள் அதிகம்:-)

காளியம்மன் கோவில் பக்கம் இன்னும் கூட்டம் வடியலை. ரெண்டு வார்த்தை பேசிட்டுப் போகலாமுன்னு  ஒரு அஞ்சாறுபேர் நிக்கும்  குழுவைப் பார்த்து  எப்படி இருக்கீங்க? இன்னிக்கு லீவான்னதும் 'ஆமாம்மா' ன்னு  சொன்னவங்க வாழ்க்கை எப்படிப்போகுதுன்னு சொன்னது கேக்கவே விசனமா இருந்துச்சு.  வேலை செய்யுமிடத்துலேயே தங்கிக்குவாங்களாம்.  ஞாயிறுகளில்  வேன், ட்ரக் இப்படி எதாவதொன்னில்  கொண்டு வந்து  இங்கே காளியம்மன் கோவிலாண்டை விட்டுருவாங்களாம். ராத்திரி 11 மணிக்கு மேல்  திரும்பிக் கூட்டிப்போக அஞ்சாறு ட்ரிப் அடிப்பாங்களாம். பன்னெண்டரை , ஒன்னு ஆகிருமாம். மறுநாள் காலை எட்டுக்கு வேலைக்குத் தயாரா இருக்கணுமாம்.  ஊரில் இருக்கும் கடனைக் கட்டவேற வழி தெரியலை. இப்படியேதான் இன்னும் சில வருசங்கள் இருக்கணும் என்று கம்மிய குரலில் சொன்னார்.

ஞாயிறு கூட்டத்தில் மொத்த இந்தியாவும் இருக்குன்றதே உண்மை. இதுலே பங்ளாதேசிகள், பாகிஸ்தானிகள் , தாய்லாந்து, பிலிப்போனோ  மக்கள்ஸ் கூட்டமும் சேர்ந்து உலக மக்கள் ஒன்று கூடலா ஆகுது. இன்னிக்குப் பாருங்கரெண்டு நியூஸிகளும் அங்கே நிக்கறாங்க.

தொடரும்...........:-)


21 comments:

said...

நாங்களும் அனைவரையும் சந்திக்க (பார்க்க) ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள் அம்மா... நன்றி....

said...

அனைவரையும் பார்க்க முடிந்தது. மிகவும் மகிழ்ச்சி துளசி. உங்கள் அன்பு நூலில் கட்டுப் பட்டவர்கள் இவர்கள்.
சிங்கப்பூர் படங்கள் அத்தனையும் சூப்பர்.

said...

உங்கள் தயவால் நாங்களும் சில பதிவர்களைச் சந்தித்தோம்.....

சிங்கர் - ரொம்பவே அழகு.....

said...

ஒவ்வொரு நாளும் எப்படி முகத்துக்கு பவுடர் போட்டு Fresh ஆக காமிக்கிறமோ அதே மாதிரி சிங்கப்பூரும்,மாறிக்கிட்டே இருக்கு. அட! 2007.

said...

டீச்சர்... நீங்க பதிவர் சந்திப்புகளை எழுதத் தொடங்குனாலே ஒரு பெரிய தொடரா போகும். வாழ்க. வளர்க. :)

said...

நாங்களும் உங்க கூடவே ஒரு வலம் வந்து விட்டோம் அருமையான பகிர்வு
படஙக்ள் எல்லாம் சூப்பரோ சூப்பர்,

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

கூடவே வருவதற்கு மனமார்ந்த நன்றீஸ்.

said...

வாங்க வல்லி.

சிங்கையில் இன்னும் ஏராளமான பதிவர்கள் இருக்காங்கப்பா.

எல்லோரையும் சேர்த்துப் பார்த்தால் இன்னும் எவ்ளோ நல்லா இருக்கும்!!!

ரசிப்புக்கு நன்றீஸ்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அழகை ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க குமார்.

உண்மை! ஒவ்வொருமுறை போகும்போதும் புதுசு புதுசா எதாவது ஒன்னு நம்மை இழுக்குதே!

said...

வாங்க ஜி ரா.

அட! ஆமால்லெ!!!

ஒண்டிக்கு ஒண்டின்னு ஆரம்பிச்சு பெரிய கூட்டம் வரை ( கூட்டம்= நியூஸி அளவு) இருக்கே:-))))

said...

வாங்க ஜலீலா.

ரசித்தமைக்கு நன்றீஸ்ப்பா.

said...

சொந்தங்கள் கூட விலகிவரும் இந்நாட்களில், எழுத்தால் இணைந்த உள்ளங்களின் சந்திப்பு சொந்தம்போல் தொடர்வது மிக மகிழ்வாக உள்ளது. சிங்கையின் சிங்கம் பற்றிய தகவல்கள் வியப்பு. நன்றி டீச்சர்.

said...

அருமையான படங்களுடன் சிங்கப்பூர் சென்று வந்தது போல இருந்தது....... என்ன கேமரா உபயோகிக்கிறீங்க !!

பதிவர் சந்திப்பு அருமை !

said...

nice get together!! . nice photos!!!

said...

வாங்க கீதமஞ்சரி.

பதிவுலகமே ஒரு குடும்பம் போலத்தான் செயல்படுது இல்லையோ?

சண்டை, சச்சரவு, பிரியமான அங்கத்தினர், உதவின்னா ஓடி வந்து உதவும் மனப்பான்மை இப்படி எல்லாமே இருக்கேப்பா.

சிங்கைச் சிங்கருக்கு ரெண்டு பம்ப். இடைவிடாது வேலை செய்யணுமாம். எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு இந்த ஏற்பாடு.

said...

வாங்க சுரேஷ்.

நண்பர்களைச் சந்திக்கும் மகிழ்ச்சி அலாதிதான்!

பயணத்துக்கான கேமெரா, பைக்கு அடக்கமானதே.
Fujifilm Finepix F650EXR

said...

வாங்க சசி கலா.

ரசிப்புக்கு நன்றீஸ்.

said...

சிங்கையில் இருக்கும் பதிவர்(சிங்கங்களையும்) உண்மையான சிங்கை சிங்கத்தையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி டீச்சர்!
லேசர் ஷோ கண்ணைப் பறிக்கும் அழகு - நேரில் எப்படி இருந்திருக்கும் என்று உணர முடிகிறது. எல்லா பதிவர்களுக்கும் வாழ்த்துகள்!

said...

பதிவர்கள் சந்திப்பு, சிங்கை சிங்கம் என கலக்கலான பகிர்வு.

said...

லைட் ஷோ சூப்பர் துள்சி.

ஆமா நானும் லிட்டில் இந்தியாவில் அங்கே உழைக்கச் சென்ற நம் மக்கள் கூட்டம் கூட்டமா செய்றதுகோ பேசுறதுக்கோ ஒண்ணுமில்லாம நின்னுட்டு இருந்தத பார்த்தேன். வருத்தமா இருந்தது. :(