Friday, October 11, 2013

என்ன, மாட்டுக்குத் தண்ணி காமிக்கிறீங்களா?


நல்லா ஊறவச்ச புண்ணாக்கை இப்படித்தான் கழனித்தண்ணீயிலே கலக்கி விடணும். சுவருக்கு ரெண்டாடி தள்ளிநின்னு   அப்படியே சுவத்துப் பக்கம் சாய்ஞ்சு இடக்கையின் அஞ்சு விரல்களையும்  ( புதுக்கல்யாணம் முடிஞ்சதும்   மஞ்சளில் கையை முக்கி சுவரில்  அச்சுப்போடுவது போல) பதிச்சாப்லெ  வச்சுக்கிட்டு  கொஞ்சம் லேசாக் குனிஞ்சு சோத்துக் கையால்  தொட்டித்தண்ணியைக் கலக்கணும். மாடு வந்து சர்ன்னு உறிஞ்சிக் குடிக்கும்போது நமக்கே படு திருப்தியா இருக்கும்,பாருங்க.

கலக்கிக்கிட்டு இருந்தார் நம்ம கோபால். வலது தோள்பட்டைக்கீழே மார்லே சதைப்பிடிப்பு.கையைத் தூக்கமுடியலை.  டாக்குட்டர்  அம்மா,  கைக்குத் தொட்டில் கட்டிவிட்டு, ரெண்டு நாளைக்கு பெயின் கில்லர் கொடுத்தாங்க. அப்புறம் பிஸியோகிட்டே போகணுமாம்.  சிரமேற்கொண்டு  ரெண்டு நாளானதும்  போயிட்டு வந்தார்.  மாட்டுக்குத் தண்ணி காமிக்கச் சொன்னது அப்போதான். தினம் மூணு வேளை மாட்டுக்குத் தண்ணி காமிச்சுக்கிட்டு இருந்தார். நான் நம்பமாட்டேன் என்பதால் கண் முன்னே தண்ணீ காமிச்சாகணும்.

இடது கைக்கு என்ன பயிற்சின்னா  ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டுவது.  வலது கைக்கு  திருகைக்கல்லில் மாவு திரிப்பது. ஆச்சா,  இன்னும் கிணத்துலே இருந்து தண்ணீர் இறைச்சு ஊத்துவது,  தோள்பட்டை கிண்ன்னுன்னு இருக்க  உரலில் நெல்லைப்போட்டுக் குத்தி எடுப்பது, ஸிட்டப் செஞ்சுக்க இருக்கவே இருக்கு அடுப்படி.  எழுந்து, உக்கார்ந்துன்னு நாளுக்குப் பலமுறை சமையல் கட்டுலேயே  பயிற்சி ஆறது. இன்னும் தேங்காய் துருவுதல், அரிவாள் மணையில் கறிகாய் நறுக்குதல் எல்லாம் தரையில் உக்காந்தபடியேதான்.  ஆத்தங்கரைக்குப்போய் துவைச்சு, குளிச்சுன்னு  சகஜீவன்களுடன் பேசியபடியே...   மாலையில் கோவிலுக்கு ஒரு விஸிட். இதுதான் அந்தக் கால லேடீஸ் க்ளப்.

இப்படியெல்லாம்  உடற்பயிற்சி செய்யும்போதே வீட்டு வேலைகளும் ஆகிக்கிட்டு இருந்துச்சே! நாகரிகம் என்ற பெயரில் அருமையான வாழ்க்கையைத் தொலைச்சுட்டு, இப்ப டாக்டருக்கும்  பிஸியோதெரப்பிஸ்ட்டுக்கும் காசை அழுதுக்கிட்டு இருக்கோமேன்னு............ மனசுக்குள்ளே தன்னிரக்கம்.

தரையில் உக்கார்ந்து  இலை போட்டுச் சாப்பிட முடியலை பாருங்க.  இவ்ளோ ஏன்?  ஃப்ரீஸர் கடைசி ஷெல்ஃப்லே என்ன இருக்குன்னு பார்க்கக் குனிஞ்சு க்டைசியில் தொப்புன்னு கீழே உருண்டதுதான் மிச்சம்.

உடம்பு வணங்குவதில்லை. அதிலும்  'அவசியமான' உட்காரலுக்கும் கூட  குத்துக்கால் போட்டு உக்காரமுடியலை.  எல்லாத்துக்கும் மேடையா ஆகிப்போச்சே:(

பேசாம பழைய வாழ்க்கைக்குத் திரும்பினால் என்ன?

ஊஹூம்.... இனி அது நடக்காத காரியம்.  Gym  போனால்  rowing machine,  treadmill, Power bench, Exercycle  இன்னபிற சாதனங்களை வச்சுக்கிட்டு  இதே  பயிற்சிகளைச் செஞ்சுறலாமே!

செய்யலாம்தான். ஆனால் டூ இன் ஒன்  ஆகாதே! அப்ப ஒன்னு செய்யலாம்.......  நம் பழங்கால வாழ்க்கை முறையை  மீண்டும் கொஞ்சநாள் ஒரு ரெண்டு வாரமோ,  இல்லை ஒரு மாசமோ நடத்திப்பார்க்க ஒரு ஹெரிடேஜ் ஹொட்டேல் நடத்தலாம்.

வர்ற கெஸ்ட்டுங்க  தாமே எல்லாப் பொருட்களையும் பயன்படுத்திச் சமைச்சுச் சாப்பிடணும்.  கூடமாட ஒத்தாசைக்கு வேணுமுன்னா ரெவ்வெண்டு பேர் உதவி செய்வாங்க.  தனித்தனி வீடுகள்,  காலை 6 முதல் இரவு எட்டுவரை  உதவியாளர்கள். இப்படி ஒன்னு ஆரம்பிக்கலாமா?

அதான் 'ஆனந்தம்' இருக்கேன்னால்..... சமையல் செஞ்சுக்க முடியாதில்லையா?

நாமே ஒன்னு ஆரம்பிச்சால் என்ன? யாருகண்டா.....  ஒருவேளை க்ளிக் ஆகலாம்.

சரி சரி....ரொம்ப யோசிக்காம புண்ணாக்கை நல்லாக் கரைச்சு விட்டு மாட்டுக்குத் தண்ணி காமிங்க.

படங்கள் சப்ளை செய்த  கூகுளாண்டவருக்கு நன்றி. அவர்தான் செல்வியின் பதிவுக்கு நம்மைக் கொண்டுபோய் விட்டவர். செல்விக்கு நம் நன்றிகள்.

19 comments:

said...

one of the excellent posts from you! இப்படி வேறு தினுசா நினைத்து நீங்கள் எழுதற பதிவுகள் எப்பவும் பிரமாதம்!

நானும் 'நன்றாகவே' சமையல் செய்வேன் (அப்படி தான் என் ஆத்துக்காரி சொல்கிறார்கள்!)

நான் கத்தி வைத்து காய்களை நறுக்கும் போது..அசால்டாக, என் மனைவி, அருவாமனையில் நறுக்கி கொடுத்து விட்டு போவர்கள்.

சித்திரமும் கைபழக்கம்...உண்மை தான் போல!

said...

பழைய வாழ்க்கைக்குத் திரும்புவது சிரமம் தான்...

said...

விரைவில் நலம்பெறப் பிரார்த்தனைகள்.

உண்மைதான். அந்நாளில் எல்லா பயிற்சியும் அன்றாட வேலைகளிலேயே கிடைத்து விட்டிருந்தன.

said...

கடைசி படத்தைப் பார்க்கையில் ...
குத்தடி குத்தடி சைனக்கா ,குனிஞ்சு குத்தடி சைனக்கான்னு பாட்டு ஒண்ணு கேக்குதே !
நம்ம சொன்னதை உடம்பு கேட்ட காலம் போய்,உடம்பு சொல்றதை நாம கேட்கிற அளவிற்கு வயசாயிடுத்தே ,என்ன பண்றது ?

said...

கோபாலை பத்திரமா பாத்துக்கோங்க.நீங்க பிடிச்சு வுடுங்க. பிடிப்பு தன்னால ஓடிடுமாக்கும் :) சொந்த மருத்துவந்தேன் :)

ஹிஹிஹி நம்ம அம்மி, ஆட்டுரலு...

ரோகலி ச்ச்சூஸி எக்குவ காலம் அயிந்தண்டி :)

said...

நான் வீட்டிலிருக்கும் பெரும்பாலான நேரங்களில் தரையில் அமர்ந்துதான் படிப்பேன் டீவி பார்ப்பேன். அதனால் தரையில் உட்காருவது எனக்கு சிரமமாக இருப்பதில்லை. அந்தக் கால பழக்க வழக்கங்களில் ஒரு காரணம் இருந்தது. ஆனால் எல்லாவற்றிலும் பழைய காலத்திற்கு மாறமுடியாதே.
நல்லதொரு அர்த்தமுள்ள பதிவு.

said...

கோபால் சார் விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்...

மீண்டும் மாறுவது சற்று கடினம் தான்...

said...

கோபால் சார் விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகளும்......

பயன்படுத்திய பழைய பொருட்கள்...... ம்ம்ம்... இன்னும் சில நாட்களில் கண்காட்சியாக மட்டுமே இருக்கப் போகிறது.

said...

படங்கள் பிரமாதம்.

said...

நிறைய அரைச்சாச்சு துளசி.
இருந்தாலும் அம்மியைப் பார்த்தால் ஆசையாகத் தான் இருக்கு.
ஏம்பா கை சரியில்லைன்னால் வேலை வாங்குவீங்களா.:)
கழுநித்தொட்டிலயாமே!!!!!
எங்க வீட்டு அரிவாள் மணை படம் அனுப்பறேன். எனக்கு மிஞ்சினது அது ஒண்ணுதான். மிச்ச நாலும் பறந்து போய்விட்டது)கோபால் உங்கள் நலத்துக்கும் நவராத்திரிக்கும் வாழ்த்துகள்.

said...

அன்பின் டீச்சர்,

அந்தக் காலத்து அம்மாக்களெல்லாம் வீட்டில் இருந்துகொண்டு எவ்வளவு வேலை பார்த்திருக்காங்க பாருங்க..ஆனா அவங்கக்கிட்ட கேட்டா வேலைக்குப் போனீங்களான்னு கேட்டா வீட்டில சும்மா இருந்தேன்னு சொல்வாங்க.. நீங்க தந்திருக்கிற பட்டியல்ல இன்னுமொண்ணை சேர்க்கணும் டீச்சர்..குழந்தை பார்த்துக்குறது..எவ்வளவு கஷ்டமான விஷயம் பாருங்க.

அப்றம் கோபால் அண்ணாவுக்கு சுத்திப் போடுங்க டீச்சர்.

said...

Thanks for taking the pictures from my site and posting in your site. The pictures were taken from this site:

http://www.thefeastforall.com

said...

திரு.கோபால் அவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்தனைகள்.

நலமுடன் வாழ்க!

படங்கள் அந்தக்காலத்துக்கே கொண்டுசென்றுவிட்டன.

said...

அந்த காலத்துல வீட்டு வேலை மட்டுமே இருந்தது பெண்களுக்கு . இப்போ அப்டி இல்லையே . வேலைக்கும் போகணும் வீட்டை யும் நிர்வகிக்கணும், குழந்தைகளுக்கும் project அது இதுன்னு ஹெல்ப் பண்ணனும் . so machines தான் ஒரே support . இன்னும் வரும் காலங்கள் எப்படி இருக்குமோ தெரில .

கோபால் அவர்களுக்கு இப்போ தேவலாமா .

said...

கோபால் சார் கை குணமாக வாழ்த்துக்கள்.
பழைய வாழ்க்கைக்கு மறுபடியும் போவது என்பது மிகவும் கடினம் தான்.
படங்கள் எல்லாம் அருமை.

said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_745.html) சென்று பார்க்கவும்... நன்றி...

said...

குண்டான பெண்களை பார்க்கும் போது, அவர்களுக்கு பொருந்தாத ஆடைகளை உடுத்திக் கொண்டு செல்லும் போது இது போன்ற பழைய காலம் என் நினைவுக்கு வரும்.

said...

நிறைய மாறிவிட்டாலும், இன்னமும் தேங்காய் கீழே உட்கார்ந்து தான் துருவுகிறேன். கணனியையும் கீழே உட்கார்ந்து தான் இயக்குகிறேன். ஏதோ நம்மால் முடிந்தது!

ஐந்தில் வளைந்தது ஐம்பதில் வளைய மறுப்பது, பழக்கம் மாறியதால்!

said...

அழகான பதிவு.

எங்கள் விட்டிலே ஒரு சிறிய கும்மட்டி. ஒரு நாள் அதில் தடுக்கி என் காலில் அடி பட, "காயலான் கடையில் கொண்டு போடுகிறேன் இந்த சனியனை" என்றேன்.

"திட்டாதீங்க அதெ. நீங்க பாத்து நடக்காமெ அதெ ஏன் திட்டணும்? நம்ம கொழெந்தெங்க சின்னவங்களா இருந்த போது எண்ணெ தேச்சு குளிப்பாட்டின அப்புறம் அவுங்க தலைக்கு சாம்பிராணி போட்டது இதுலெ தான். அந்த நாளெ நெனெப்பா விட்டிலெ இருக்குற ஒரே சாமான் இதுதான். இ
தெக் கடேலெ போட உட மாட்டேன் உங்களெ நான்" என்றாள் சக தர்மிணி.