Tuesday, October 22, 2013

ஓடி வா வா கஜாமுகானே !!!

காத்ரீன்,  மேடையிலேறி மைக் பிடிச்சு,  புள்ளையார் வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி விருந்தினர்களுக்குச் சொல்லிக்கிட்டு  இருந்தாங்க.  'வீ ஆல்வேஸ் டு கணேஷ் வந்தனா பிஃபொர் வீ  ஸ்டார்ட்   எனி  ப்ரேயர்ஸ் , ரிச்சுவல்ஸ் அண்ட் அன் ஈவண்ட்'.

மேடையில் இருந்த இசைக்குழு பாட ஆரம்பிச்சாங்க.  'ஜெய்  கண பதி தேவா'  ஹிந்தி பஜன். சரியாச் சொன்னால் போஜ்புரி ஹிந்தி.  அடுத்து இன்னொரு பாடல். என்னமோ தமிழ்ச் சொல் காதுலே விழுதேன்னு கவனிச்சேன். ஓடி வா வா கஜாமுகானே... அய்யப்பசாமி கஜாமுகானே....

ஆதிகாலத்துலே (1879களில்) ஃபிஜிக்குக் கரும்புத்தோட்ட வேலைக்குப்போன தமிழ்மக்கள்  கூடவே கொண்டுபோன பொக்கிஷங்களில் ஒன்னு. நூத்தி நாப்பது வருசங்களுக்கு முன் சாமிப் பாட்டுகள் எப்படி இருந்துருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்.  உண்மையில் சொன்னால் நாகரிக உலகில் இதுமட்டும் மாறவே இல்லை! அந்த ட்ரெடிஷன் பழமை மாறாமல் அப்படிக்கப்படியே இருக்கு! இசைக்குழுவுக்கும் சரி,  கூடி இருந்த ஃபிஜி இந்தியர்கள், வெள்ளைக்காரர்கள், சீனர்கள் கொரியர்கள் இப்படி  யாருக்கும்  மருந்துக்கும் தமிழில் ஒரு சொல் தெரியாது எங்கள் இருவரைத்தவிர!


எது எப்படியாயினும் தமிழ்ப்பாட்டு கேட்டதும் அட! என்று ஒரு வியப்பும் மகிழ்ச்சியும் வந்ததே உண்மை.

விழா நிகழ்ச்சி மாலை ஆறுக்குன்னு தெரிஞ்சதால் ஆறரைக்குப்போய்ச் சேர்ந்தோம். முதலில் சாப்பாடு.  இந்த முறை சாப்பாட்டை பாலிஸ்டைரீன்  பாக்ஸில் பரிமாறி, ஆட்கள் வரவர எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.  தட்டில் விளம்பி, மக்கள்ஸ் அதைக்கீழே போட்டு, சுத்தம் செஞ்சுன்னு நடக்கும் அட்டகாசங்களைக் குறைச்சுக்க இந்த ஏற்பாடு.  ஆனாலும் நம்மாட்கள் இதையுமே கீழே போட்டு வாரி எடுத்ததும் உண்மையே:(


நிலநடுக்கத்துக்குப்பின் ஹால் கிடைப்பது கஷ்டமாகி வருது. தப்பித் தவறிக் கிடைக்குமிடத்திலும்   சுத்தமாத் திருப்பித்தரணும் இல்லையா?

திரையைத் திறந்தவுடன் ஆரம்ப வரவேற்பு கொடுத்தவர்கள் அஞ்சு  ப்ளஸ் ரெண்டுன்னு  ஏழுபேர் உள்ள ஜப்பான் இளைஞர் குழு.   ட்ரம்ஸ் அட்டகாசம்!  அடடா..... என்ன ஒரு கோஆர்டிநேஷன்!!! கலக்கிட்டாங்க போங்க.

நிகழ்ச்சியை ஆரம்பிச்சு வச்ச இப்போதைய தலைவர்,  நிகழ்ச்சிகளுக்கு நடுவில் சாப்பாட்டுக்குன்னு இடைவெளி விட்டால்  அடுத்த பாதி மேடை நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் இரைச்சலும் குழறுபடியும் ஆகிறதுன்னுதான்  போன வருசம் முதல்,  வந்ததும்  ஆறு மணிமுதல் ஏழு மணிவரை சாப்பாடு முடிஞ்சு போனால்,  நிம்மதியா மேடை நிகழ்ச்சிகளைப் பார்க்கமுடியும் என்று  ஏற்பாடு செஞ்சதாவும்,  ஆனால் மக்கள்ஸ் பலர்  ஏழரை எட்டுன்னு லேட்டா வந்துட்டு  சாப்பாடு வேணும் என்று நெருக்கடி கொடுப்பதாகவும் சொல்லி வருத்தப்பட்டார். வேறென்னதான் செய்யலாமுன்னு நீங்களே சொல்லுங்கன்னு வேண்டுகோளும் வைத்தார். ஐடியா ஒன்னும் இதுவரை மனசில் வரலை:(

கணேஷா வந்தனாவுக்குப்பின் நியூஸிலாந்து தேசிய கீதம். நியூஸிக்கு ரெண்டு மொழி வெர்ஷன் உண்டு. மவொரி, ஆங்கிலம்.  இன்றைக்கு அங்கே பாடியது  இதுவரை நான் கேட்காத  முழு வெர்ஷன்.   முழுப்பாட்டு  ஏழு நிமிசம் வரும்.  மக்கள்ஸ்க்குப் பொறுமை இல்லாததால் பொதுவா  ரெண்டு நிமிசம் வரும் பாட்டையே பாடுவாங்க. இன்றைக்குத்தாம்  மொத்தமும் கேட்டேன்.  பாட்டுடன் திரையில் கண்ட காட்சிகளைப் பார்த்தால் ஆஹா... எவ்ளோ அழகான நாட்டில் இருக்கோம் என்ற திருப்தி வர்றதைத் தடுக்க முடியாது.  முந்தியெல்லாம் காலை 10க்கு டிவி ஆரம்பிச்சதும் முதலில்  தேசியகீதம் வரும். அப்புறம் இந்த 24 மணி நேரச்சேனல்களா ஆனவுடன் காணாமப்போனது தேசிய கீதமே:(

இந்தியாவில் இருந்த போதும் ஜயா டிவியில் 'செந்தமிழ்  நாடென்னும் போதினிலே' ன்னு ஆரம்பிக்கும்போது எனக்கு மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கும். நாட்டில் உள்ள மைனஸ் பாயிண்டையெல்லாம் புறம் தள்ளிட்டு  பாட்டும்  அதனோடு வரும் காட்சிகளும் அட்டகாசம் என்று அனுபவிப்பேன்.  இப்போ அங்கேயும் 24 மணி நேரச்சேனல் ஆனதால் இதுக்கு  ஆப்பு வச்சுட்டாங்கன்னு நினைக்கிறேன்.  தெரிந்தவர்கள் விபரம் சொல்லுங்கள்.

நியூஸி தேசிய கீதம்முடிஞ்சதும் உக்காரப் போனவங்களைத் தடுத்தாட்க்கொண்டது ஃபிஜியின் தேசிய கீதம்.  சொன்னா நம்பமாட்டீங்க..... ஆறு வருசம் அங்கே குப்பை கொட்டிய நாங்க, இப்போதான் முதல்முறையா இதைக் கேக்கிறோம்!! எத்தனை விழாக்களில் கலந்துகொண்டிருக்கிறோம்..... ஒரு இடத்தில்கூட கேட்டதில்லைன்னா.......... என்னன்னு சொல்றது:(

ஃபிஜியின் தேசிய கீதத்துக்கு மூணு வெர்ஷன் இருக்கு.  ஃபிஜியன் மொழி (இதுக்கு எழுத்துரு இல்லை. ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்தறாங்க.) ஆங்கிலம் அப்புறம் மூணாவதா ஹிந்தி மொழி. பொதுவா நிகழ்ச்சிகளில் ஆங்கிலம் மட்டுமே பாடுறாங்க. கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால் நாங்க ஃபிஜியில் இருந்த காலத்துலே அங்கே டெலிவிஷன் ஒலிபரப்பு கிடையாது.  வீடுகளில் இருக்கும் டிவி, நாங்க விஸிஆர் வச்சுப் படம் பார்க்கமட்டுமே! அதான் தேசிய கீதம் காதில் விழலை.

சங்கத்தலைவர் மனைவி வந்து மேடையின் ஒருபுறம் அலங்கரிச்சு வச்சுருந்த  மஹாலக்ஸ்மி படத்துக்கு விளக்கேத்தி ஆரத்தி செஞ்சாங்க. மஹாலக்ஸ்மியை ஏன் வழிபடணும் என்று காத்ரீன் சபைக்கு விளக்கினாங்க.

நம்மூரில் கடந்த ஏழாண்டுகளாக பரதநாட்டிய வகுப்பு நடத்தும் அனுராதா, (இலங்கைத் தமிழர்) ஒரு நடனம் ஆடினார். எப்போதும்போல் நடனம் அருமை. போனவாரம்தான்  அவர்களுடைய நடன நிகழ்ச்சிக்குப் போய் வந்திருந்தோம். பல வயதுகளில்  ஒரு முப்பது மாணவிகள் நடனம் கற்றுக் கொள்கிறார்கள்.

அடுத்த நிகழ்ச்சியா பசங்க  கொரியன் டான்ஸ், பாலிவுட் ஐட்டம் ஸாங், நேபாளிகளின் நடனம் என்று சில பல இருந்தாலும் எல்லோரும் ஜல்ஸாவுக்குக் காத்திருந்தோம்.

கிறைஸ்ட்சர்ச் நகரில் முதல்முறையா நடக்கும் இண்டியன் துணிமணி வகைகளுக்கான ஃபேஷன் ஷோ இது.   வட இந்திய உடை வகைகளில் இப்போ என்ன ட்ரெண்ட் ன்னு தெரிஞ்சு போச்சு.  ஜிலுஜிலுன்னு கற்கள் பதிச்சது போல மின்னும்  ஸல்வார் செட், காக்ரா செட், புடவைகள்  எல்லாம் ஒரேஅமர்க்களம்.  அதிலும் வெள்ளைக்கார இளம்பெண்கள் இந்திய அலங்காரத்தில் ஜொலித்தார்கள்.  நம்ம நாட்டு ஆடை ஆபரணங்களுடன்,  நெற்றியில் பொட்டும் வச்சு  பூனை நடை நடந்தப்ப  அரங்கமே அதிர்ந்ததுன்னு சொல்லணும்.  பொதுவா இந்தத் தலைமுறையின் உயரம் கூடுதலாக இருப்பதால் புடவை பொருந்தி வருது.  குஜராத்தி ஸ்டைலில் புடவையுடன்  வந்த 'மாடல்' சூப்பர் கேட்டோ!  ஜப்பான், சீனா, கொரியா நாட்டுப்பெண்களும் புடவையில் வந்து கலக்குனாங்க. என்ன ஒன்னு........ நடையில் நளினம்தான் மிஸ்ஸிங்:-)


நம்ம ஃபிஜி இந்தியன் பெண்களும், சில இந்திய ஆண்களும் கூட மாடல்களாக வந்து பூனை நடை போட்டனர். உள்ளூரில் புதிதாக துணிக்கடை வைத்துள்ள ஒரு ஃபிஜி இந்தியரின் ஏற்பாடு இது. புது ஐட்டம் & புதுக் கடைக்குப் ப்ரமோ!  ஒரே கல்லில் மாம்பழம் ரெண்டு:-) ஃபிஜியன் மேகே  நடனம்,  ஜெய் ஹோ, கண்பதி பப்பா மோரியான்னு ஒரு ரீமிக்ஸ் பாட்டுக்கு நடனம்,  இன்னொரு பாலிவுட் டான்ஸ், இதுலே  சமோவன் இண்டியன் குழந்தைப் பொண் ஏழு வயசு,  அட்டகாசமாக ஆடினாள்.  இன்னும்  நாலுநாளில் கொண்டாடப்போகும் தீவாலி (இண்டியன் க்ளப்)  விழாவுக்கு இன்னுமொரு ப்ரமோ என்ற வகையில் பிரபு தேவா (ABCD) நடனம் ஒன்றை ஆடினார் ஒரு புது இளைஞர்.  பஞ்சாப் இறக்குமதின்னு நினைக்கிறேன்.

இன்னும் ஏகப்பட்டவை பாக்கி இருக்குன்னாலும்  நமக்குப் பார்க்க சக்தி வேணாமோ?  இப்பவே பத்தரை ஆச்சுன்னு கிளம்பி வந்துட்டோம்.

எனிவே ஒன் திவாலி டௌன். ஃப்யூ மோர் டு கோ:-))))

PIN குறிப்பு: இந்தப் பதிவில் அவசியம் கருதி யூ ட்யூப் வீடியோ க்ளிப்பிங்ஸ் சில போடும்படியாச்சு. எல்லாம் மூணுநாலு நிமிசங்கள்தான். எதைவிட எதைப்போடன்ற குழப்பம்தான் கேட்டோ!!!

11 comments:

said...

துணிக்கடைகாரர் விவரமானவர்...! காணொளிகளுக்கு நன்றி அம்மா....

said...

வடக்கத்திய ஆடைகளுக்கு அங்கே வரவேற்பா!!

படங்களும், காணொளிகளும் என பகிர்வு அருமை...

said...

வீடியோ விருந்து நன்றாக இருந்தது. வெஸ்டர்ன் உடைகளுக்கு அளிக்கும் போஸ் பிரகாரம் நடை போட்டு இருக்காங்க.:)
வெறுமனே நடந்தாக் கூட நல்லாதான் இருந்திருக்கும். உடைகள் சூப்பரா இருந்ததுமா. சாப்பாடும்தான்.

said...

ஓடி வா வா கஜாமுகானே... அய்யப்பசாமி கஜாமுகானே....//
பாடல் அருமை.
இரண்டு காணொளிகளும் நன்றாக இருக்கிறது.
படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.
கோபால் சாருக்கு கைவலி சரியாகி விட்டதா?

said...

டிரம்ஸ், காணொளிகள் அருமை.

பரதநாட்டியம் நடாத்துபவர் இலங்கைபெண் என்பதில் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆடை அலங்கார அணிவகுப்பு அருமையாக இருக்கின்றது.

said...

தீபாவளி கொண்டாட்டம் அருமை.
ஸோ, தீபாவளி வந்தாச்சு!
தீபாவளி வாழ்த்துக்கள்!
காணொளி மூன்றும் ரசித்தேன்.

said...

எது எப்படியாயினும் தமிழ்ப்பாட்டு கேட்டதும் அட! என்று ஒரு வியப்பும் மகிழ்ச்சியும் வந்ததே உண்மை.

மகிழ்ச்சியான தீபாவளி கொண்டாட்டங்கள்..

said...

ஓடிவா கஜமுகனே பாடலைக் கேட்டேன். தமிழே தெரியாமலும் புரியாமலும் பாடும் போது கூட அழகாத்தான் இருக்கு.

நம்மாட்களுக்கு பெரிய தட்டா கொடுத்தாலும் நாலு பக்கமும் சிந்திச் சிதறி சாப்பிட்டாதான் ஒரு திருப்தி. அதெல்லாம் ரத்தத்துலயே ஊறிப்போயிருக்கும் போல :)

said...

dear thulasi teacher,

I am fine nice diwali function.
Please inform me in advance your india travel plan and please induct me to bloggers meeting also

said...

அழகானக் கொண்டாட்டம். புகைப்படங்கள் மற்றும் காணொளிப் பகிர்வுக்கு மிக்க நன்றி டீச்சர்.

said...

வாங்க டீச்சர்.
பதிவைப் பார்க்க சந்தோஷமாயிருக்கு.
ஆனாலும் அந்த ஃபார்மை நிரப்பிக் கொடுத்திருந்தால் என்னவாம்?
இரண்டு ஃப்ளைட் டிக்கட்டை மிஸ் பண்ணிட்டீங்க. எமக்கு ஒரு பயணக் கட்டுரைத் தொடர் மிஸ்ஸிங் :-(

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் டீச்சர் :-)