Wednesday, October 30, 2013

மனைவியைக் கடத்தியவனுடன், கணவன் சண்டை!

இவனுக்கு நேர்ந்த கதியைப் பார்த்துட்டுத்தான் 'தாடி' பிறன்மனை விழையாமை எழுதி இருப்பாரோ!!!
இதையே  திருமூலர் கூடச் சொல்லித்தான் வச்சார் இப்படி.... .

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறும் காளையர்
காய்ச்ச பலாவின் கனிஉண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடர் உற்றவாறே.
கத்திக் கதறி அழுதுகிட்டே போன மனைவி, மரத்தடியில் உக்கார்ந்து, எப்படியும் புருசன் வந்துருவாருன்னு  காத்திருக்காள்.

பத்துத்தலைக்காரனுடன் போர் நடக்குது.மயக்கம் போட்ட தம்பியைப்பார்த்து  அண்ணங்காரன்  துடிக்க,  சம்யசஞ்சீவியா சஞ்சீவி மலையைத் தூக்கிட்டு வர்றார் அண்ணனின் பக்தர்.காட்டுக்குப்போனவங்கதிரும்பி வந்ததைப்பார்த்து  வழி காமிக்க விளக்கேத்தி வச்சு  ஊர்மக்கள் எல்லோரும் கூடி நின்னு மகிழ்ச்சியா ஆடிப்பாடறாங்க.

இதெல்லாம் வார்லி சித்திரவகையைச் சேர்ந்தது.

மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களில் உள்ள ஆதிவாசிகளின் கைவண்ணம் இவை.  தமிழ்நாட்டுலே அரிசி மாவுக் கோலம்தரையில் போடுவோமே அதேபோல அரிசிமாவைப் பயன்படுத்திச் சுவரில்  வரையும் சித்திரங்கள். செம்மண்ணால் சுவரை மெழுகிட்டு அதில் அரிசிமாவைக் கொண்டு வரைகிறார்கள். அசாத்யப்பொறுமை இருக்கணும் முதலில். பெரும்பாலும் அன்றாட வாழ்க்கைச் சித்திரங்களே! சிலசமயம் இதிகாசங்கள்!

 இப்போ சில வருசங்களாக  வியாபார ரீதியிலும் சித்திர விற்பனை வெற்றியடைஞ்சு வருது. இந்தச் சித்திரக்கலைக்கு வயசு அஞ்சாயிரத்துக்கும்  மேலே!

நாலு நாளைக்கு முன் இந்த வகைச் சித்திரத்தைப் பார்க்க நேர்ந்தது.  எளிமை ஆனால் வரைவது கஷ்டம்!

ஃபில்ம் டிவிஷன் எடுத்த ஒரு பதினேழு நிமிச வீடியோ இணையத்தில் கிடைச்சது. நேரம் இருந்தால் பாருங்கள். அனுபவம் புதுமை! அவர்களுக்கு என் நன்றி. Thanks to  Film Division.தீபாவளி, நார்த்தீஸ்களுக்கு  ராமாவதாரம் சம்பந்தப்பட்டது. ஆனால்  தெற்கீஸான நமக்கோ கிருஷ்ணாவதாரம் தான் காரணம். அட! வெவ்வேற யுகம்! ஆனால்  ஒரே  மாசம் அடுத்தடுத்த நாளில் கொண்டாடுறோம். நம்ம தீபாவளியன்னிக்கு  நார்த்தீஸ் எல்லாம் தந்தேரஸ் கொண்டாடுவாங்க. இது மஹாலக்ஷ்மி பூஜை. தன் தேரஸ்( Dhan- தனம்- செல்வம்)ன்னு வேண்டறோம்.

 உண்மையிலே இது தனம் வேண்டிச் செய்யும் பூஜை இல்லை. நம்ம கிட்டே இருக்கும் காசு பணத்தில் கொஞ்சத்தை எடுத்து, நம்மைவிட ஏழ்மையில் இருக்கும் மக்களுக்கு 'தானம்' செய்யவேண்டியது நம்ம ஒவ்வொருவருடைய கடமை. இந்த 'தான்' எப்படியோ இப்ப 'தன்'னாகிப் போச்சு. மக்களும் விடாம சாமிகிட்டே எனக்கு இதைக்கொடு, அதைக்கொடுன்னு பேரம் பேசிக்கிட்டே இருக்கோம்:((((

வெளிநாட்டு மக்கள்ஸ்க்கு   கிறிஸ்மஸ்,ஈஸ்டரைத் தவிர்த்து  எதா இருந்தாலும் பலமுறை கொண்டாடித் தீர்த்தால்தான் திருப்தி:-) இந்தக் கணக்கில் நமக்கு இது ரெண்டாம் தீபாவளி. எதையும் ஊருலகத்துக்கு முன்னாடி செஞ்சிறணும் என்பது இங்கே முக்கியம்:-) நியூஸி பார்லிமெண்டில் கூட இப்ப சில வருசங்களா தீவுளி கொண்டாடுவது ஒரு வழக்கமாப் போச்சு. 2006  வருச மக்கள் கணக்கெடுப்பின் படி  அறுபத்தி நாலாயிரம்  ஹிந்துக்கள் நியூஸியில் இருக்காங்க(ளாம்)  the second largest faith-based community.ஆக்லாந்து, கிறைஸ்ட்சர்ச், வெலிங்டன்  ஆகிய பெரிய நகரங்களிலும்  சிட்டிக்கவுன்ஸில் ஃபண்டிங் கொடுத்து பண்டிகையைக் கொண்டாட வைக்குது.  Good over evil என்பது கேட்ச்சிங் பாய்ண்ட் கேட்டோ:-)

எங்கூர் கொண்டாட்டம் மூணுநாளைக்கு முன்னால் நடந்து முடிஞ்சது.  இண்டியன் சோஸியல் அண்ட் கல்ச்சுரல் க்ளப் (ஸ்தாபகர் நம்ம கோபால்)  இதை முன்னின்று  கடந்த பலவருசங்களாக்கொண்டாடுது.  1997 இல் ஆரம்பிச்ச இந்த க்ளப்பில்  எல்லா வருசமும் அங்கத்தினர்கள் சேர்ந்து கொண்டாடிக்கிட்டு இருந்தோம்.  ஓரளவு கம்யூனிட்டி ஃபண்டிங் கிடைச்சுக்கிட்டு இருந்தது.  திடீர்னு இப்ப  ஆறு வருசமா wider communityக்கான பப்ளிக் ஃபங்ஷனாக் கொண்டாடிக்கிட்டு இருக்கோம்.  சிட்டிக் கவுன்ஸில்  கொஞ்சம் தாராளமாக் கொடுக்குது.  ஸ்பான்ஸார்களும் கிடைச்சுடறாங்க.  நடுவிலே 2011 வதுவருசம்  கொண்டாடலை. ஊரே நிலநடுக்கத்தில்  அழிஞ்சு போய்க் கிடக்கும்போது  பண்டிகையும் பட்டாஸும் கேக்குதா?

இந்த வருசம் நம்ம சிங்கப்பூர்  ஏர்லைன்ஸ், மெயின் ஸ்பான்ஸார். இங்கே எங்கூரில் இருந்து  இந்தியா போகணுமுன்னா சிங்கப்பூர் ஏர்லைன்ஸை விட்டால் வேறொன்னுமில்லை. போட்டி இல்லாம ஜாலியா இருக்காங்க. பீக் சீஸன் டிக்கெட் விலை கேட்டால்  ஆடிப்போயிருவோம்.  ஆனால் வேறு வழி? அப்பதானே நமக்கு லீவும் கிடைக்குது:(   நம்மகிட்டே  அடிச்சதுலே  கொஞ்சூண்டு கிள்ளிக் கொடுத்துருக்காங்க.

விழா நடக்குமிடம்  CBS Canterbury Arena.  எங்க நாட்டு மதத்துக்காக கட்டுனது.  எங்கள் மதம் ஸ்போர்ட்ஸ் தான். 1999 வது வருசம் உலக நெட்பால் போட்டிகள்  நம்மூரில் நடக்கப்போகுதுன்னு முடிவானதும் அவசர அவசரமா 1998இல் கட்டி முடிச்சுட்டாங்க.  ஆச்சு 15 வருசம்.  இதையே மற்ற நிகழ்ச்சிகளுக்கும்  வாடகைக்கும் விடறாங்க.  நெட் பால், பாஸ்கெட் பால் ஆட்டங்கள் என்றால் 7200 பேர்   அமரலாம். மற்ற இசை, நாடக நிகழ்ச்சின்னால்  8888 நபர்கள்!   இது தவிர  இருக்கைகளை  ஒரு பக்கம் ஒதுக்கிட்டு நடுவில் ஹோம் ஷோ, ட்ராவல் எக்ஸ்போ, கேம்பர் வேன், மோட்டர் ஹோம்  ஷோன்னு  இன்னும் சில நடக்கும்.  எப்படிப் பார்த்தாலும்  வருசத்துக்கு   52 வீக் எண்டுகள்தானே! அநேகமா எதாவது ஒன்னு நடத்திக்கிட்டுத்தான் இருப்பாங்க.

டிக்கெட் கவுண்ட்டருக்குப் பக்கத்தில்  ஒரு கண்பதி.  விக்ன விநாயகர். இன்றைய நிகழ்ச்சி எந்த அசம்பாவிதமும் இல்லாம ஒழுங்க நடக்கணுமே..புள்ளையாரப்பா!

 டிக்கெட்டுன்னதும்  மனதை நிரடும் ஒன்றை இங்கே சொல்லிட்டுப் போறேன்.  நம்ம சிட்டிக் கவுன்ஸிலின் ஸ்டேடியம் இதுன்னாலும்  இதுக்கு ஒரு நாள் வாடகை இருபத்தியிரண்டு  ஆயிரம் டாலர்கள்.  கம்யூனிட்டிக்குக் குறைஞ்ச ரேட்டில் கொடுக்கப்டாதோ?  கொடுத்தாங்க. ஒரு பக்கம் கொடுக்கறமாதிரி கொடுத்துட்டு இன்னொரு பக்கம்  வாங்கறமாதிரி வாங்கவும் செஞ்சாங்க. இந்த வருசம் கார்பார்க் கட்டணம் இல்லை. ஆனால் அரங்குப் பகுதிக்குப் போக ஆளுக்கு அஞ்சு டாலர் கட்டணம்.  இது பிரச்சனை இல்லை. ஆனால்  காசை வாங்கிக்கிட்டு டிக்கெட் ஒன்னும் கொடுக்காம  கையை நீட்டுன்னு சொல்லி புறங்கையில் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்( திவாலி  ஃபெஸ்டிவல்)  போட்டு விட்டது எனக்குச் சரியாப் படலை.  என்ன கணக்கு? எத்தனை பேர் வந்தாங்கன்னு ஒரு விவரமும் கிடைக்காதில்லையா?  என்னமோ போங்க.  இதுலே சிட்டிக் கவுன்ஸில் இந்தக் காசை  எடுத்துக்குமாம். வாடகையில் துண்டு விழுவதை க்ளப் கொடுக்கணும் போல! இன்னும் விசாரிக்கலை.  அடுத்தமுறை  க்ளப் மீட்டிங்கில் கேக்கணும்.

இதுலே  புறங்கையில் ஸ்டாம்பு வாங்கினவுங்க எல்லாம் இன்னொரு கவுண்டரில் போய்  ஒரு படிவத்தில் நம்ம ஜாதகத்தையே  எழுதி அதை அங்கிருக்கும் பொட்டியில் போட்டுடணுமாம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்  குலுக்கிப் பார்த்து ரெண்டு ரிட்டர்ன்  ஃப்ளைட் பரிசா கொடுக்கப் போறாங்களாம். ஆயிரம் கண்டிஷன்களோடு ஆஃப் சீஸனில் கொடுப்பாங்க. நீங்களே வச்சுக்குங்கன்னுட்டு அரங்குக்குப்போகும் வழியில் நுழைஞ்சோம்.

அரங்கத்தின் நுழைவு வாயிலில் தாஜ்மஹால் டிஸைன். தீவாலிக்கும் தாஜுக்கும் என்ன சம்பந்தம்?  இந்தியான்னதும் வெள்ளையர்களுக்கு  உலக அதிசயத்தில்  ஒன்னான தாஜ்தான் நினைவுக்கு வரும் என்பது பொதுப்படையான ஊகம் போல!

ஒரு பெரிய ரங்கோலி போட்டு வச்சுருந்தாங்க.  பரவாயில்லாம  நல்லாவே இருக்கு. அதுக்கு அடுத்த டிஸ்ப்ளேதான் நாம் மேலே பார்த்த வார்லி சித்திரங்கள். எனக்கு ரொம்பப் பிடிச்சது !

PIN குறிப்பு:  பதிவின் நீளம் கருதி மீதி அடுத்த பதிவில்.

9 comments:

said...

ஆதிவாசிகளின் கைவண்ணங்கள் வித்தியாசமாக இருந்தது... தொடர்கிறேன்...

said...

அற்புதமான ஓவியங்கள்
விளக்கத்துடன் பதிவாக்கித் தந்தமைக்கு...
மனமார்ந்த நன்றி
அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்த்து...

said...

அருமையாக வரைந்திருக்கிறார்கள்...

said...

வார்லி சித்திரம் மிக அருமை.
செம்மண் சுவரும், வெள்ளை கோலமாவும் பளிச் என்று தெரிகிறது.
மிக பொறுமை வேண்டும் இந்த சித்திரம் வரைய எனத் தெரிகிறது.
காணொளி மிக அருமை. பகிர்வுக்கு நன்றி.

விரல் வலி சரியாகி விட்டதா?
தீபாவளி வாழ்த்துக்கள்.

said...

தலைப்பை படித்ததும் தெலுங்கு டப்பிங் பட சமாச்சாரம் நினைவில் வந்தது.

said...

கைவலியோடு!
சரி.எங்களுக்கும் உங்கபதிவு படிக்கவில்லை என்றால் என்னவோ போல இருக்கிறது.
சூப்பர் ஏற்பாடுப்பா. ஆனால் இந்தத் தடவைதான் உங்க ஊர் பற்றி ஒரே ஒரு குறை சொல்லி இருக்கீங்க.:)
செம்மண்ல இட்ட மாக்கோலம் பிரமாதம் ரங்கோலியும் சூப்பர்மா.

said...

மனைவியைக் கடத்தியவனுடன், கணவன் சண்டை!---அது அந்தக்காலம்!

said...

ஓவியம்(கோலம்) வித்யாசம் மற்றும் அருமையாக இருந்தது -- கடத்திட்டு போகலைனா, மனைவியுடன் சண்டை! போனா கடத்திட்டு போனா கடத்திட்டு போனா கடத்தியவனுடன் சண்டை!! ..என்ன பொழப்புடா!! நல்ல கணவன்மார்களின் பொழப்பு .. கடவுள் காலம் முதல் இப்ப வரை பாவம் கணவன்மார்கள்..

said...

வார்லி சித்திரங்கள் அருமை.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.