Monday, October 07, 2013

ராமனைக் கண்ணாரக் கண்டோமே..... (சிங்கைப்பயணம் 6)

இனிமே எப்போக் கிடைக்குமோன்னு  ஒரு எண்ணம் வந்தவுடன் மனசு  ஆலாய்ப் பறக்குது பார்த்தீங்களா? பொழுது விடிஞ்சதும் இன்றே (இப்படம் ) கடைசி என்ற  நிலை.  மதியம் ஒரு மணிக்கு செக்கவுட்.  அதுக்கு முன்னால் வெளியே போய்வருவதையெல்லாம் முடிச்சுக்கிட்டோமுன்னால், மதியம் பொட்டிகளை  கீழே  வச்சுட்டு  பாக்கி இருக்கும் சமாச்சாரங்களை நிதானமா முடிச்சாலாச்சு.

முதல் கடமை முதலில். ஒரு இட்லி, ஒரு மசால்வடை!  கோபாலுக்கு  மசாலா தோசை, அப்புறம் ஆளுக்கொரு சவுத் இண்டியன் ஃபில்ட்டர் காஃபி.  ஆளில்லாத செராங்கூன் ரோடில் காலை வீசிப்போட்டு நடந்து  எட்டேமுக்காலுக்குக் கோவிலுக்குள் நுழைஞ்சோம். வழக்கமான சுற்று. இதிலும் ரொம்ப நிதானம் இன்றைக்கு.  காரணம்........  இனிமே எப்போ?

 ஆண்டாள் சந்நிதியில் ரெண்டு பிஞ்சுகள் கை கூப்பி நின்னதுகள். அக்கா, தம்பிக்குக் குங்குமம் இட்டுச் சரி செஞ்சாள். ஹௌ ஸ்வீட்!!!! நல்லா இருங்கடா செல்லங்களா!

பெருமாள் ஓசைப்படாமல் தேமேன்னு நிக்கறார். மேளமும் நாயனமும் வாசிக்க தயாராகிக்கிட்டு இருக்காங்க.  அதுவரை நம்ம வேலையைப் பார்க்கலாமுன்னு  நேயடு சந்நிதிக்குப் பக்கமா உக்கார்ந்து   ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் வாசிக்க ஆரம்பிச்சோம். இனி  இங்கே எப்போ என்பதால்  நடை வேகத்தில்  மெள்ள ஒவ்வொரு வரியாக......

 மேளச்சத்தம் ஒலிக்க ஆரம்பிச்சது.  நான் கவனமாக ஆழ்ந்து வாசிக்கும்போது பாதியில்  கோபால் அங்கே பாருன்னார்.  குடையுடன் அலங்கார பூஷிதனாக,   வேதமந்திரம்  ஒலிக்க வாசலை நோக்கிப்போறார் நம்ம  சீனு. தீவட்டியுடனும், சீர்வரிசைகளுடனும்  ஃபாலோயர்ஸ் வேற!  எங்கே போறாருன்னு பார்த்தால் வாசலைக் கடந்து உள்ளே வரும்  ராமனுக்கு பூரணகும்பத்துடன் எதிர் சேவை!


அடடடா..... என்ன விசேஷம்?  வடபத்ரகாளி கோவிலில்  இருக்கும்  ஸ்ரீராமர், நம்மசீனுவைச் சந்திக்க வர்றாராம். ஆஹா.... பதிவர் சந்திப்பு நாம் நடத்துனோமுன்னா.....  கடவுளர், கடவுள் சந்திப்பு நடத்துறாங்களா!!!! பேஷ் பேஷ்.



ரெண்டு கோவில்களின் மூணு மேளசெட், ரெட்டை நாயனமா அவுங்க தூள் கிளப்புறாங்க. சீனுவின் ஒத்தை செட் கூடச்சேர்ந்து வாசிப்புன்னு  மூணு தவில், மூணு நாதஸ்வரம். கோவில் சூழலில்  வாசிப்பு கேட்கும்போது மனசெல்லாம் கரைஞ்சு போகுது. நமக்கு இதைப் பார்க்கக் கிடைச்சதேன்னு நினைக்கும்போது  நெஞ்சில் மகிழ்ச்சியும்  பரவசமுமாய்  திக்கித் திணறித்தான் போனேன். இவ்ளோ அமர்க்களத்திலும் இருந்த இடத்தை விட்டு துளி அகலாமல்  கூப்பிய கைகளுடன் கோபால்.  (இருக்குமிடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே!!)

கோவிலில் இருக்கும் மற்ற எல்லா சந்நிதிகளுக்கும்  ராமுவும் சீனுவுமா ஜோடியாப் போய் தீபாரதனைகளை  ஏத்துக்கிட்டு  வலம் வர்றாங்க. அப்பக்கூடப்பாருங்க ... ஆண்டாளம்மாவைக் கண்டுக்கலை:(






ஹாய் ஹாய் சொல்லி முடிச்சு  ராமனுக்கு வேண்டிய  மாலை மரியாதை ஆரத்திஎல்லாம் செஞ்சு  ரெண்டு பேரும் பக்கத்துப் பக்கத்துலே இருந்து (உலககாரியங்கள்) பேச ஆரம்பிச்சுருப்பாங்க போல!  கலியுகத்துக்காரரைக் காண வந்த த்ரேதா யுகத்துக்காரருக்கு   விஷயங்கள் எவ்ளோ இருக்கும்  பேசுவதற்கு!!!!

ஒரு பதினொரு நிமிச வீடியோ க்ளிப் ஒன்னு போட்டுருக்கேன். நேரம் இருப்பவர்களும், சிங்கைக்கோவில் சமாச்சாரம் என்னன்னு  பார்க்க விருப்பம் உள்ளவர்களும் ராம்  மீட்ஸ்  சிங்கைச் சீனுவை(யும்)  தரிசிக்கலாம்.

ஸ்ரீராமனை  ஆட்கள் தோளில் தூக்கி வர, நம்ம சீனு  ரொம்ப மாடர்னா யாரையும் சுமக்க வைக்காமல்  வீல் சேரில்... சாரி.....   சக்கரம் வச்ச மேடையில் ஜாலியா சுத்தி வர்றார்.  எனக்கு ரொம்பப்பிடிச்சது.  கோவில்களில்கூடப் பாருங்க  பெருமாள் வீதிவலம் வரும்போது  சின்னதா மோட்டர் வச்சு தேரை இழுக்கலாமில்லையா?

திருப்பதி ப்ரம்மோத்ஸவம்  பார்க்கையில்  இப்படி நினைப்பேன். நல்ல செழுமையா இருக்கும் பட்டர்கள் பலரும் ஏறி நிற்கும் பல்லக்கைச் சுமந்து வரும் திருப்பாதம் தாங்கிகளை நினைச்சால் மனசு வலிக்கும். சின்னதா ஒரு  எஞ்சின் வச்சு இழுக்கலாமா இல்லையா?  நம்ம அடையார் அனந்தபத்மநாபன் கோவிலில்  மாதம் ஒருமுறை திருவோணம் நட்சத்திரம் தினம் , தேரில் பவனி உண்டு. சின்ன மோட்டர் வச்சுதான் இழுப்பாங்க.  கட்டளைக்காரர்கள் பேருக்குக் கொஞ்சம் இழுப்பது போல் போஸ் கொடுத்தால்போதும். சாமி கோச்சுண்டாரா என்ன?

நெருங்கிய தோழி ஒருவரிடம்,  மேற்படி சமாச்சாரம் சொல்லிப் புலம்பியபோது..........  அரை விநாடி யோசிச்சவர், ஆகம விதிகளில் இப்படியெல்லாம்  இருக்காதுல்லையா.அதான் விதிப்படி நடத்தறாங்கபோல என்றார்.

ஓ.... அப்ப கஷ்டப்பட்டு நாலைஞ்சு மணி நேரம் வரிசையில் காத்திருந்து ஸ்வாமி தரிசனம் செய்யக்கிட்டக்கப்போய் நிக்கும் அதே நொடியில்  கிங்கரர்போல பக்தரின் கையைப்பிடித்து இழுத்துக் கடாசும்படி ஆகமத்தில் எழுதி இருக்கா என்ன?  பெருமாளும் இந்தக் கூத்தை எல்லாம் பார்த்துண்டுதானே இருக்கான்?

அட! ஆமால்லென்னு தோழி முகத்தில் ஒரு குழப்பம்.

 கருட வாகனத்தை உருட்டிக்கிட்டு வர்றாங்க!  ஆஹா.... இதுவும் அட்டகாசமான ஐடியா! எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!


 திருமஞ்சனத்துக்குக் காத்திருக்காங்க!


திரும்பப்போய் உக்கார்ந்து  பாக்கி வச்ச சகஸ்ரநாமத்தை வாசிச்சு முடிச்சோம். அப்ப  ஒரு  பெரியவர் வந்து நம்ம பக்கத்தில் உக்கார்ந்தார்.  பெரியவர்னு சொன்னது  மிஷ்டேக். அநேகமாக எங்க வயசுக்காரராத்தான் இருப்பார்.  திடீர்னு சட்டைப் பையில் இருந்து ஒரு சின்னப் பொட்டலத்தை எடுத்தவர், அதைப்பிரிச்சு உள்ளே இருந்த சங்கிலியை என்னிடம் காமிச்சு நல்ல தங்கம்தானான்னு கேட்டார்.  நம்மகிட்டே ஏன் கேக்கறார்ன்னு கோபால்  முழிக்க,  ஆஹா....  அவருக்கு நம்மைப்பத்தித் தெரிஞ்சுருக்கேன்ற பெருமையோடு கையில் வாங்கிப் பார்த்தேன்.  பார்க்க தடிமனா இருக்கே தவிர கனம் கொஞ்சம் கம்மியா இருக்கு.  இருவது கிராம்தானாம்.  தாம்புக்கயிறு  டிசைன்.  அணிமணியில் வாங்கி இருக்கார். நல்லகடைதான். நானும் முந்தி ஒருக்கில் வாங்கி  இருக்கேன்.

நல்ல டிஸைன்ஸ் வருதே, ஏன்  தாம்புக்கயிறு?  மகனுக்குக் கல்யாணம் ஆகப்போகுதாம். வரப்போகும் மருமகளுக்கு வாங்குனதாச் சொன்னார். நல்ல மாமனார். அந்தப்பொண்ணு கொடுத்து வச்சுருக்கணும்!

நல்ல தங்கம்தான். பயப்பட வேணாம் என்றதும் அவருக்கு மகிழ்ச்சி. இப்படிப் பொட்டலத்தைப் பாக்கெட்டில் போட்டுக்காம  பில்லை மட்டும் தனியா பையில் வச்சுக்கிட்டுச் செயினைக் கழுத்தில் போட்டுக்குங்கன்னு  என் (2 செண்ட்) ஆலோசனையை எடுத்துவிட்டதும், கொஞ்சம் கூச்சத்தோடு கழுத்தில் போட்டுக்கிட்டார்.  செயின் தெரிவது போல் போஸ் கொடுங்கன்னதும் அதே அப்பாவிச் சிரிப்புடன்  சட்டையின் மேல் பட்டனை திறந்தார்.  அவரை க்ளிக்கிட்டு, படத்தை காமிச்சதும் முகம் முழுசும் மகிழ்ச்சி. நம்மால் ஒருவருக்கு  மனமகிழ்ச்சின்றதைப் பார்த்து நமக்குமொரு மகிழ்ச்சி.


அப்போ கண் எதிரில் தோன்றினார் சித்ரா அப்பா.  சும்மாக் கோவிலுக்கு வந்தாராம்.  பத்து நிமிசம் போல பேசிக்கிட்டு இருந்தோம். எங்கேயும் போயிறாதீங்க. இதோ அஞ்சு நிமிசத்தில் வடபத்ர காளி கோவில்வரை போயிட்டு வரேன்னார்.  நாம் ஒரு காமணி இருந்து பார்த்துட்டுக் கிளம்பினோம். எனக்கு நம்ம சீனுவிடம் கொஞ்சம்பேசி உத்தரவு வாங்கிக்கணும். மூலவராண்டை ஈ காக்கா இல்லை. இருக்கும் கூட்டம் மொத்தமும் ராமு அண்ட் சீனுவைச் சுற்றி:-)

இனி எப்போடா உன்னைப் பார்க்கப்போறேன்னு கொஞ்சம் புலம்பினேன்.  நல்ல நல்ல தரிசனம் கொடுத்து சேவை சாதிச்சே. அதுக்கு ரொம்ப தேங்க்ஸ்டா. இந்தப் பயணத்தில் உடம்புக்கு ஒன்னும் வராமலும் காப்பாத்திட்டாய். எல்லாத்துக்கும் தேங்க்ஸ்ன்னு சொல்றதைத் தவிர வேற என்ன செய்யமுடியும் என்னாலே?  கண்ணை மூடிப்புலம்பிய பின்  கண்ணைத் திறந்தால்  ஒரு பட்டர் ,இது ஏதடா பைத்தியம்?' என்ற பார்வை.

வெளியூரான்னார். ஆமாம். வருசாவருசம் வருவேளா?  அப்படிச் சொல்ல முடியாது.....   அவன் கூப்பிடணுமே!  கொஞ்சம் இருங்கன்னுட்டு வெத்திலை பாக்கு, பழம் பூ எடுத்து எனக்குக் கொடுத்தார்.  பெருமாளே தாம்பூலம் கொடுத்துட்டான்னு மகிழ்ச்சியா அதை வாங்கிக்கிட்டு, உங்க பெயர் என்னன்னு பட்டரிடம் கேட்டேன்.  பதில் வந்துச்சு, ஸ்ரீநிவாஸன்.  பெருமாளே... பெருமாளே!

மனசில்லா மனசோடு கிளம்பி முஸ்தஃபாவுக்கு வந்தோம். நேத்து பார்த்து வச்சுட்டுப்போன ஷர்ட்ஸ் அதே இடத்தில் இருக்கு.  இன்னும் கொஞ்சநேரம் ஆராய்ந்து மூணு ஷர்ட்ஸ் வாங்கிக்கிட்டார். கூடவே நெக் பில்லோ ஒன்னும். பத்தரை மணி நேரம்  பறக்கும்போது கழுத்து வலியாம். சொந்தப்பயணத்தில் எகானமி வகுப்புன்றதால்,  இன்னும் கொஞ்சம்  அலட்டல் எல்லாம் உண்டு:-)  நானும் ரொம்ப நாளா வாங்கிக்கணுமுன்னு நினைச்சுக்கிட்டு இருந்த ஒரு சமாச்சாரம் வாங்கிக்கிட்டேன். இனி நியூ லுக்தான்:-)))))  தலைக்கு மேலே அடையாளம் தெரியலைன்னா  பயந்துறமாட்டீங்கதானே?

அறைக்குத் திரும்பும் வழியில் சில நகைக்கடை ஜன்னலில் வேடிக்கை(மட்டும்) தான். வரவர ஜிமிக்கியின் அளவு பெருசாகிக்கிட்டே போகுது. குடை ஜிமிக்கி ஏறக்கொறைய குடை சைஸுக்கு!  திடீர் திடீர்னு வரும் மழைக்கு  நீ குடையாவாய்...........

இன்னொரு கடையில்  இந்த வருச கொலுவுக்கு  ஒரு பஞ்சமுகப் புள்ளையார், லக்ஷ்மி, சரஸ்வதின்னு  மூணு பொம்மையுள்ள செட் வாங்கினேன்.  என் ஷாப்பிங்  ஃபினிஷ்டு:-)



நம்ம சாமிகளையெல்லாம் சீனர்கள் பட்டுப்போல் அழகாச் செஞ்சுட்டாங்க! ஒவ்வொன்னும் ஒரு அழகு!

செக்கின் செய்யப்போகும் ஃபைனல் மூட்டைகளைக் கட்டியாச்சு.  என் கேபின் பேகில் பத்துமலைக்காரன்!

தொடரும்..............:-)







9 comments:

said...

எங்களுக்கும் தரிசனம் கிடைத்தது அம்மா... நன்றி... அழகான படங்கள்...

said...

திருப்பதி ப்ரம்மோத்ஸவம் பார்க்கையில் இப்படி நினைப்பேன். நல்ல செழுமையா இருக்கும் பட்டர்கள் பலரும் ஏறி நிற்கும் பல்லக்கை //

பட்டர்கள் சாமியையே பார்க்கவிடாமல் முகத்தை நீட்டி நீட்டி எரிச்சலூட்டுவார்கள்.. ஒரு போட்டோ கூட சாமியை தனியாக எடுத்துவிட முடியாது..

said...

அதென்ன நொடிக்கொரு தடவை எப்பவோ எப்பவோன்னு புலம்பல் .இந்தியா வரும்போது சிங்கை உண்டேப்பா.
இனி இப்படி புலம்பக் கூடாது.
உங்க சக்கர ஐடியா சூப்பர்.
ராஜேஸ்வரி சொல்வது சரிதான். பார்க்கவும் தடை படம் பிடிக்கவும் தடை. பெரியாழ்வாருக்கு மேல இவங்க பெருமளைப் பாதுகக்கறாங்களோ.
அச்சோ அந்த பொம்மையெல்லம் என்ன அழகு. அரிக்கேன் லைட்டா அது!!சூப்பர்மா.

said...

நாங்களும் உங்க பதிவில் பெருமாளை தரிசனம் செய்து கொண்டோம்.

ஜிமிக்கி சூப்பர்...

பொம்மையெல்லாம் ஜோரா இருக்கே...

said...

பதிவைப் படிக்கும் போது வல்லி சிம்ஹன் அவர்கள் சொல்லியதை தான் நானும் நினைத்தேன் . அவர்கள் கூறியதை நானும் சொல்கிறேன் .
இனிமே புலம்பக்கூடாது.

நானும் இராமனைக் கண்ணாரக் கண்டேன் .நன்றி !!

said...

//தெலிஸி ராம சிந்தனதோ நாமமு
ஸேயவே ஓ மனஸா
அக்கா!
யூடுயூப் பார்க்கும் போது, "Ram meets Singai Seenu" என்னடா? எனத் திறந்தால்(சுண்டி இழுக்கும் தலைப்பு) அருமையான நாதஸ்வரத்தில் இந்தக் கீர்த்தனை ஒலிக்க ராமரும் சிறீநிவாசரும் உலாவரும் காட்சி, மனதுக்கு இதமாக இருந்தது.
1992 ல், ஒன்றரை மாதம் இச் சிறிநிவாசரருகே தான் தங்கியிருந்து, தினம் தரிசனமும் செய்தோம்.
அதன் பின் இப்போ உங்கள் பதிவில் இக் கோவில் விழாக் காண்கிறேன். நிறைய மாற்றம்..ஆனால் மெருகேறியுள்ளது.
//திருப்பதி ப்ரம்மோத்ஸவம் பார்க்கையில் இப்படி நினைப்பேன். நல்ல செழுமையா இருக்கும் பட்டர்கள் பலரும் ஏறி நிற்கும் பல்லக்கைச் சுமந்து வரும் திருப்பாதம் தாங்கிகளை நினைச்சால் மனசு வலிக்கும். சின்னதா ஒரு எஞ்சின் வச்சு இழுக்கலாமா இல்லையா? நம்ம அடையார் அனந்தபத்மநாபன் கோவிலில் மாதம் ஒருமுறை திருவோணம் நட்சத்திரம் தினம் , தேரில் பவனி உண்டு. சின்ன மோட்டர் வச்சுதான் இழுப்பாங்க. கட்டளைக்காரர்கள் பேருக்குக் கொஞ்சம் இழுப்பது போல் போஸ் கொடுத்தால்போதும். சாமி கோச்சுண்டாரா என்ன?//

உண்மையில் எந்தக் கோவிலுக்குப் போனாலும் இந்த எண்ண ஓட்டமே ! அத்துடன் பூசகர்கள் 5 ஆறு பேர் ஏறித் தேர் மீதிருப்பது கூடத் தேவையற்றவை!
எல்லாம் மாறுகிறது. இவை எப்போ மாறுமோ?.
படங்களுடன் அட்டகாசமான பதிவு.

said...

நாங்களும் சீனுவையும், ராமனையும் விடியோவில் கண்ணார தரிசித்தோம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வண்டியில் வைத்துத்தான் இழுக்கிறார்கள். அங்கு ஆகம விதி இல்லையோ?
எல்லாக் கோவில்களிலும் இந்த முறையை கொண்டுவந்துவிட வேண்டும்.
சென்றமுறை திருக்கண்ணபுரத்தில் பெருமாளை எழுந்தருளப் பண்ணுபவர்கள் எல்லோரும் 'ஃபுல்' ஆன புருஷர்களாக இருந்தார்கள். அவர்கள் தடுமாறி நடக்கும்போது பெருமாளை போட்டுவிடுவார்களோ என்று பயமாக இருந்தது. உங்கள் யோசனையை அங்கு நான் சொன்னதற்கு இப்படித்தான் பல பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. அதை மாற்றக்கூடாது என்றார்கள்.
பெருமாள் எதை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளுவார். மனிதர்கள் மாற வேண்டும்.

said...

அருமையான படங்களும் விடியோவும். நன்றி பல. பட்டர் பெயர் ஸ்ரீனிவாசன் ஹ! பெருமாள் சேவை சாதித்ததை என்னையும் பார்க்க வைத்த புண்ணியம் உங்களுக்குச் சேரட்டும்.

said...

அழகிய தர்சனம் குடையும் தான்:))