Thursday, October 31, 2013

எங்கூர் திவாலிக் கொண்டாட்டம்

கொஞ்ச நேரம் ஆகும்  நம் கண்கள் இருட்டுக்குப் பழக!  வண்ண விளக்குகள் மட்டும் ரொம்ப உசரத்துலே இருந்து சன்னமா ஒளி வீசுது. வரிசையா வெள்ளையில் பந்தல்கூடாரங்கள்.

பகல் மூணு மணியில்  இருந்தே மேளாவில் சாப்பாட்டுக் கடைகளும் மற்ற கடைகளும் திறந்து வச்சு பயங்கரக்கூட்டமா இருந்துச்சு நாங்க போகும்போது. பாதி அரங்கம்  கடைகளுக்கும் மீதிப்பாதி ஸ்டேஜ் ஷோவுக்குமா பிரிச்சு வச்சது நல்லாத்தான் இருக்கு.


பதினைஞ்சு   உணவுக்கடைகளும் ஒருபக்கம் வரிசை கட்டி நிக்க, இன்னொரு புறம்  வர்த்தக வகைப் பந்தல்கள்.  பேங்க், ட்ராவல்ஸ், விஷன் ஏஷியான்னு  சாட்டிலைட் டிவி சமாச்சாரங்கள், டெலிகாம்,  இன்ஷூரன்ஸ்,  இண்டீரியர் டெகரேஷன், ரேடியோ ஸ்டேஷன் இப்படி இதுகளுக்கிடையில்  அழகு அலங்காரம் என்று ஒரு ஜல்ஸா துணிக்கடை (ஃபேஷன் ஷோ ஒன்னு பதிவில் பார்த்தோம் பாருங்க அவுங்க கடைப்பொருட்கள்)  மெஹந்தி வச்சுவிடும்  கடை(பாடி ஆர்ட்!) ஆர்ட் ஆஃப் லிவிங் யோகா 'ஏஜண்ட்' ஒருத்தரும் பந்தல் போட்டுருக்கார். உள்ளெ எட்டிப் பார்த்தால் யாருக்கோ தோள்பட்டை மஸாஜ் நடந்துக்கிட்டு இருந்துச்சு. நம்ம கலை கலாச்சாரம் எல்லாம் கொஞ்சமாவது எடுத்துச் சொல்லும் ஸ்டால்கள் ஒன்னுமே இல்லை.  போனாப்போகுதுன்னு  அகல்விளக்குக்கு கலர் ஏத்திக்கோன்னு ஒரு சில்ட்ரன் ஆக்டிவிட்டி.






குழந்தைகளுக்கு விளையாடும் பகுதின்னு  ஒரு இடம் ஒதுக்கி இருந்தாங்க. மத்தபடி பாதிக்கூட்டம் ஏற்கெனவே அரங்குப்பகுதியில் இடம் பிடிச்சு உக்கார்ந்துட்டாங்க.  எல்லோர் கையிலும்  ஸ்டால்களில் வாங்கிப்போன சாப்பாடுகள்.



பாவ்பாஜி, பேல்பூரி, சமோஸான்னு அங்கங்கே இருந்தாலும் உள்ளூர் ரெஸ்ட்டாரண்டுகள்  வழக்கமான பட்டர் சிக்கன்,நான், நவ்ரத்தன் குருமா, பாலக் பாஜின்னு இந்தியன் உணவையே  வச்சுருந்தாங்க. ஒன்னு ரெண்டு ஸ்டால்களில் மசால் தோசை (பத்து டாலர்!) தந்தூரி பேலஸ் உரிமையாளர் மனைவி, 'உங்க மசால் தோசா நம்ம கடையில் இருக்கு வாங்க வாங்க'ன்னு  கூப்பிட்டாங்க. (கொல்லன் தெருவில் ஊசி விற்கும் முயற்சி)



கூட்டம் லைன் கட்டி நின்னது தோஸா ஹட் என்ற கடையில். இங்கத்து தோசையின் ருசி அப்படி மக்களை ஈர்ப்பதில் என்ன ஆச்சர்யம்? மாவு ஆட்டுனது  நம்ம துளசிவிலாஸ் கிரைண்டர் ஆச்சே:-))))

பஞ்சாபி தாபாவில்  பளபளன்னு செப்புப் பாத்திரங்களின் அணிவகுப்பு சூப்பர்!
பெரிய ஐஸ் கட்டி வச்சு  சின்ன நீர்த்தாரை மூலம் அதுலே தாஜ்மஹலைச் செதுக்கிக்கிட்டு இருந்தார் ஒரு கலைஞர். (இங்கேயும் தாஜ் தானா!)




ரெண்டு மூணு கடைகளில் மேங்கோ லஸ்ஸி மூணு, நாலு டாலர்களில் விற்பனை. நம்ம ஸ்வாமி நாராயன் மந்திரும் ஸ்டால் போட்டுருந்தாங்க. போட்டிக்கு யோகி டிவைன் சொஸைட்டியினரும்:-)


எலெக்ட்ரிக் தந்தூர் வச்சு சுடச்சுட 'நான் ' ஒரு பக்கம்!

இந்த வருச ஸ்பெஷல்ஸ் ரெண்டு சமாச்சாரம்.  ஒன்னு  ஒடிஸாவிலிருந்து  வந்த நாட்டியக் கலைஞர்கள். ரெண்டாவது அரங்கத்தினுள்ளேயே பட்டாஸ் (ஃபயர்வொர்க்ஸ் டிஸ்ப்ளே) கொளுத்துதல். நம்ம ஊரில்  பட்டாஸ், மத்தாப்பு எல்லாம் மனம்போன நாளில் வாங்கவும் முடியாது கொளுத்தவும் முடியாது.  ப்ரிட்டிஷ் நரகாசுரனை வதைச்ச  நாளான கைஃபாக்ஸ் டே நவம்பர் 5க்குத்தான் பட்டாஸ் வெடிக்கணும். அதுக்கு  நாலுநாள் முந்திதான் பட்டாஸே கடைக்கு வரும். நவம்பர் அஞ்சு மாலையோடு  விற்பனை முடிவு. இதெல்லாம் முந்தி பலமுறை எழுதி இருக்கேன். சாம்பிளுக்கு ஒன்னு  ' சரித்திரத்தில் நரகாசுரன்'  இங்கே:-))))


அந்த சமயம் கிடைக்கும்  கம்பி மத்தாப்புகளை வாங்கி ஸ்டாக் வச்ச்சுக்கிட்டால்  அக்டோபர் மாதத்துலே வரும் தீபாவளிக்கு ஆச்சு. ஓசைப்படாமல் தோட்டத்தில் நாலு  மத்தாப்பைக் கொளுத்துவோம். சம்ப்ரதாயத்தை மீறலாமோ:-)))

நகரக் கவுன்ஸிலே  அனுமதி கொடுத்து வருசத்தில் நாலுமுறை ஃபயர் ஒர்க்ஸ் டிஸ்ப்ளே இருக்கும். அதுக்குப்போய் 'கண்ணால்'கண்டு மகிழ்வதோடு சரி. ஆனா பிரமாதமா இருக்கும் என்பதும் உண்மையே! குறைஞ்சபட்சம் ஹண்ட்ரட் தௌஸண்ட் டாலர்  கோவிந்தா. எல்லாம் நம்ம வீட்டுவரிப் பணம்.

இன்றைக்கு முக்கிய விருந்தாளி  நம்ம ஊர் மேயர்தான்.  இங்கெல்லாம் நகரக்கவுன்ஸிலும்  மேயர் பதவியும்  நம்ம இந்தியாவில் இருக்கும் மாநில அரசு போலச் செயல்படும். முதலமைச்சருக்குள்ள அத்தனை அதிகாரமும் மேயருக்கு உண்டு, கருப்புப் பூனைப் பாதுகாப்பு தவிர:-)))) ரெண்டு வாரம் முன்பு கவுன்ஸில் தேர்தல் நடந்தது. எல்லாம் போஸ்ட்டல் ஓட்டுகள்தான்.  எலெக்‌ஷன் டேன்னு தனியா வைப்பதில்லை.

புது மேயர் பதவிக்கு வந்துருக்காங்க.   லேடி மேயர் கேட்டோ! நமக்கு நல்லாத் தெரிஞ்சவுங்கதான். உள்ளூர் எம் பியும் கூட. இவுங்க உள்ளூர் தேர்தலில் நிக்கறாங்கன்னு உறுதியானதும்  அப்போதைய மேயர், தன் தோல்வி உறுதியாச்சுன்னு  தீர்மானிச்சு  வரும் தேர்தலுக்கு நிக்கப் போறதில்லைன்னு அறிவிச்சுட்டார்.  புத்திசாலி. சும்மா நின்னு மூக்கு உடையணுமா?   எழுபதாயிரத்துச் சொச்சம் ஓட்டு வாங்கி ஜெயிச்சாங்க நம்ம லியான்.  தேர்ந்த அரசியல்வியாதி.  அந்தந்த விழாக்களில் பங்கேற்கும்போது  அந்த மொழியில் ரெண்டு சொற்கள் பேசிருவாங்க.(நம்மூர் கூட்டங்களில் வரும்  வடக்கர்கள் 'வனக்கம்' சொல்வது போல:-)

இங்கேயும் சரியான நேரத்துக்கு  செல்ஃப்  ட்ரைவிங்  செஞ்சு  வந்தாங்க. போனாப்போகட்டுமுன்னு  கட்டிடத்துக்குப் பக்கத்துலே காரை நிறுத்த இடம் வச்சுருந்தோம்:-) ரெண்டு நாட்டு தேசிய கீதமும் பாடினதும் 'நமஸ்தே' சொல்லி குத்துவிளக்கேத்தி  விழாவை தொடங்கி வச்சாங்க. மேயர் ஆனதும் கலந்து கொள்ளும்  முதல் கம்யூனிட்டி நிகழ்ச்சி இதுதான். (மேயரை எப்படி அட்ரஸ் செய்யணும். ப்ரொட்டகால் என்னன்னு தெரியாததால்  நான் போய்ப் பேசலை. நமக்கு ரெண்டுவரிசை முன்னாலேதான் உக்கார்ந்துருந்தாங்க)

உள்ளூர் எம் பி ஒருத்தர்  ஜம்முன்னு புடவை கட்டிக்கிட்டு வந்துருந்தார். பார்க்க ரொம்பவே நல்லாவும் இருந்துச்சு.

நேற்று பத்திரிகையில் வந்த ஒரு செய்தி. இங்கே கிறைஸ்ட்சர்ச் மேயருக்கு ஒரு தனி கார் ( Audi 2 L) லீஸுக்கு எடுத்துக்கும் சம்ப்ரதாயத்தைத் தேவை இல்லைன்னு ஒதுக்கிட்டாங்க.  'எனக்கு ஆடம்பரமான வண்டியே வேணாம்.  லீஸுக்கு எடுக்கும் காரும் தேவை இல்லை. பொது விழாக்களுக்குப் போகும் சமயம் மட்டும் ஒரு ட்ரைவர் வச்சுக்க எதாவது வழி உண்டா?'ன்னு  கவுன்ஸிலர், மேயர்களுக்குச் சம்பளம் நிர்ணயிக்கும் கமிஷனிடம் கேட்டுருக்காங்களாம்.  ஸோ பார்க்கிங் ப்ராப்ளம் அவுங்களுக்கும் வந்துருச்சு போல:-))))


PINகுறிப்பு:  நிறைவுப்பகுதி நாளை.


11 comments:

said...

எலெக்‌ஷன் என்று தனியாக இல்லாமல் போஸ்ட்டல் ஓட்டுகள் மட்டும் வியப்பு தான் அம்மா...

தீபாவளி கொண்டாட்டம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

said...

உங்க ஊர் மேயர பத்தி படிக்கும் போது செம போறாமையா இருக்கு ஹா ஹா 😃😃

said...

பதிவு நன்றாக இருக்கிறது .
தொடருங்கள் .தீபாவளி வாழ்த்துக்கள்

said...

தீவளிக்குத் தீவளி வரும் உங்க ஊர் தீபாவளி கொண்டாட்டம் பற்றி தெரிந்து கொண்டேன். ( அதுசரி! ஒங்கூர் என்று இங்கு எந்த ஊரைச் சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை.) அப்படியே உங்கள் பதிவில் நீங்கள் வைத்து இருந்த, ” சரித்திரத்தில் நரகாசுரன் “ என்ற பின்னோக்கிய காலம் செல்லும் டைம் மெஷின் மூலம் 2008 ஆம் வருடம் சென்று வந்தேன். அங்கு நான் எழுதிய கருத்துரை:

// நீங்கள் எழுதிய “ எங்கூர் திவாலிக் கொண்டாட்டம் (31.10.2013) http://thulasidhalam.blogspot.in/2013/10/blog-post_31.html என்ற பதிவின் மூலம் இங்கு வந்தேன். திருச்சியில் நடந்த ஒருநாள் வலைப்பதிவர் சந்திப்பில் உங்களை அன்பின் சீனா அவர்கள் “ஹிஸ்டரி டீச்சர் “ என்று சொன்னதாக நினைவு. அவர் சொன்னது சரிதான். சரித்திர விவரங்களோடு அலெக்சாண்டர் டூமாஸ் ஸ்டைலில் ” கை ஃபாக்ஸ் டே.” பற்றி அழகாகச் சொன்னீர்கள். நன்றி! //

எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

said...

உங்க ஊர் திவளி பார்க்க, படிக்க பொறாமையா இருக்கு.

said...

பதிவு பிரமாதம் துளசி.அருமையான பகிர்வு.
இனிய தீபாவளித் திருநாட்கள் வாழ்த்துகள்.

said...

எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

subbu thatha
meenakshi paatti.

said...

பஞ்சாபி தாபாவும் தோசை ஸ்டாலும் கவர்ந்து இழுக்கின்றன. 'நான்' மேல் ஒரு கண்தான்! ஆனால் கடிப்பது கஷ்டம்!

said...

அழகான கொண்டாட்டம். அருமையான பகிர்வு. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

said...

படங்களும் செய்திகளும் மிக அருமை...
தங்கள் பதிவுகளை "மரத்தடி" யில் படித்திருக்கிறேன்... தமிழ்மணத்தில் மீண்டும் தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... (தமிழ்மணத்திற்கு நான் புதியவன்)
வாழ்த்துக்கள்...

said...

தீபாவளி கொண்டாட்டம் அருமை. .