Friday, October 18, 2013

மாறாதது கடவுள் மட்டுமா??

என்றும் மாறாதது  சாமி மட்டுமா?  நம்ம வீட்டு மெனுவும்தான்:-)  விஜயதசமியன்னிக்கு ஒரு சின்ன அளவில்  பூஜை செய்ஞ்சுக்கறது   இப்போ ஒரு  பதினைஞ்சு வருசப்பழக்கம்.  சாமி வந்தாரில்லையா? பாவம் அவர் தேமேன்னு  இருந்தாலும் , நமக்கு இவ்ளோ செய்யும்  அவருக்காக  நாம் எதாவது செய்யணும் என்று ஆரம்பிச்சதுதான்.  குறைஞ்சபட்சம் வருசத்துக்கு ஒரு நாள் கூடி இருந்து குளிர வேணாமா?

சாமி வந்தது  இங்கே:-))))

 

சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல்,  எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், ததியன்னம், சுண்டல், பாயசம்  இதுதான் நைவேத்யத்துக்குள்ள மெனு. இந்தப் பதினைஞ்சு வருசமா மாறாதது இது ஒன்றே:-)

 பிர'சாதம்'  பெயர் பொருத்தம் சூப்பர்.  எல்லாம் சாத வகைகளே:-))))


சாயங்காலம் சாமி கும்பிட்ட பிறகு ராத்திரி டின்னரும் சேர்த்து வச்சுக்கிட்டா,  கெஸ்ட்டுகளுக்கு வீட்டுலே போய் சமைச்சுச் சாப்பிடும் வேலை மிச்சம். ஒருவேளையாவது  வீட்டம்மைகளுக்கு ரெஸ்ட் கிடைக்கட்டுமே!

 ஆதி காலத்துலே (1999)  எனக்கு நம்ம வீட்டுலேயே டின்னருக்கு சமைக்கும் தெம்பு இருந்தது.  முப்பது பேர்வரை வருவாங்க. அஞ்சாறு வருசத்துக்குப்பின்  ( அது நாம் புது வீடு மாறி வந்த வருசம் . சுநாமி நடந்து  மூணே மாசம்  ஆனநிலை.  கிரகப்பிரவேசம் என்று தனியா யாரையும் அழைச்சுக் கொண்டாடவும் இல்லை )  நட்பு வட்டம் கொஞ்சம் பெருசாகிப் போனதாலும் ,பிரசாதம் மட்டும் வீட்டுலே, டின்னர் சமாச்சாரம் வெளியிலேன்னு ஒரு ஏற்பாடு. உள்ளூரில் அப்போ ஆரம்பிச்சுருந்த புது இண்டியன் ரெஸ்ட்டாரண்ட்லே இருந்து வரவழைச்சோம். ஓனரும் அருமையா தன்கைப்பட நல்லா சமைச்சுக் கொடுத்தார். பூஜை புனஸ்காரங்களுக்கு நல்ல தட்டில் சாப்பாடு போடணுமுன்னு எவர்சில்வரில் அம்பது தட்டுகளும் அம்பது டம்ப்ளர்களும்  வாங்கி வந்துருந்தாராம்.  அதையும் பயன்படுத்திக்குங்கன்னு  தாராள மனசும் காமிச்சார்.  தட்டின் திறப்பு விழா நம்ம வீட்டில்தான்:-))))

இடையில் ஒரு ரெண்டு வருசம் இந்தியவாசம் என்றானதில் சென்னையில் இருந்தப்ப சங்கீதாவும், சண்டிகரில் இருந்தபோது கோபால்ஸ்ம் (கடை பெயரே அதுதான்) பூஜையில் உதவி செய்ஞ்சாங்க:-)


மீண்டும் இங்கே வந்து சேர்ந்தப்ப,  நிலநடுக்கம் காரணம் நம்ம நண்பர்கள் கூட்டம் நகரைவிட்டுப் புலம் பெயர்ந்து போனதால்  எண்ணிக்கையில் குறைஞ்சு போச்சு. இருபத்தியஞ்சு,  இருபதுன்னு  தேய்ஞ்சு போய் இந்த வருசம்  பதினான்கே பேர் நம்ம ராஜலக்ஷ்மியையும் சேர்த்து. அதிசயத்திலும் அதிசயமாக மகளும் வந்திருந்தாள். நவராத்திரி ஒன்பதுநாளும் தவறாமல் கொலுவுக்கு வந்து போனதுக்கே ராஜலக்ஷ்மிக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லணும்.

இந்தமுறை நாமே வீட்டுலே சமைச்சுக்கலாமுன்னு  கோபாலுக்கு ஒரு எண்ணம். சமையல் கத்துக்கறார் இல்லையோ?  நண்பர்களுக்கு அழைப்பு சொல்லும்போதே எதாவது சமைச்சுக் கொண்டுவரட்டான்னு கேட்டாங்க. செஃப் யாருன்னு தெரிஞ்சதால் பயம் வந்திருக்கலாம்:-) அதெல்லாம் ஒன்னும் வேணாம். சமாளிச்சுடலாம்.  சின்ன அளவுதானேன்னு சொல்லி இருந்தோம்.

டின்னருக்கு சிம்பிளா  ஒரு சாம்பார், ரசம், ரெண்டு கறிகள் போதும் என்றதால்  ஞாயிறு  காலையில்  மேற்கண்டவைகளை சமைச்சு முடிச்சோம்.  அதுலேயே லஞ்சுக்கும் கொஞ்சம் எடுத்துக்கலாம். முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி பொரியல்,  உருளைக்கிழங்கு காரம் போட்ட கறி. முருங்கைக்காய் சாம்பாரில் போட்ட ஃப்ரோஸன் முருங்கைக்காய்,  மரத்தில் செஞ்சது போல. தனியா அரைமணிக்கூறு வேகவைத்தும் கூட கட்டை,கட்டைதான்!  கூடவே சில கத்தரிக்காய்களையும் போட்டதால்  ஒருவழியா ஒப்பேத்தமுடிஞ்சது.

தோழிகளும்   வெல்லச் சாதம், புதினா வடை, மைசூர் பாகு,  ஃப்ரைடு ரைஸ், வத்தக்குழம்புன்னு  கொண்டு வந்து விருந்தை ஜாம்ஜாமென்று நடத்திக்கொடுத்துட்டாங்க.



இந்த முறை அதிசயமா வெத்தலையும் மாவிலையும் ( ரெண்டும் பப்பத்து) கிடைச்சது இண்டியன் கடையில்.  பாக்கு?  பச்சைப்பாக்கு   வச்சுருக்காங்க. தூள் பண்ணிக்கிட்டாலும்  வாயில் போட்டதும் நெஞ்சடைப்பு நிச்சயம். வீக்கெண்டில் ஆம்புலன்ஸ் வர அஞ்சு நிமிசத்தாமதம் என்பதால் ரிஸ்க் எடுக்கலை நான். வாசனைத் தூள் பாக்கு கிடைக்குதான்னு  ஒரு கண் வச்சுக்கணும் இனிமேல்.

மாவிலைகளால் கும்பவாஹினியை  அலங்கரிச்சேன்.  கூந்தலும் அமைஞ்சது.  ஏது?சவுரியான்னு கேட்ட தோழிக்கு.... வுல் என்றேன்:-))))
மாலை ஏழுமணிக்கு பூஜையை ஆரம்பிக்கலாம் என்ற ஏற்பாடு. நமக்கு இங்கே டே லைட் ஸேவிங்ஸ் தொடங்கிட்டதால்  ஏழுமணிக்குப் பளிச்ன்னு சூரியன்:-)  சாகற காலத்துலே சங்கரா சங்கரான்றது போல இங்கத்து சூரியனுக்கு  மறையும் நேரம்தான் தன்னுடைய கடமை நினைவுக்கு வரும்.  ஒரு அரைமணி பளிச்சிட்டதும் மீண்டும் தூக்கமே:-)
பல ஆண்டுகளுக்குப்பின் சூரியன் இப்படி வந்துட்டுப்போனார்:-)




பூஜைன்னு வச்சால் விஸ்தரிச்சு ஒன்னுமில்லை கேட்டோ. அதெல்லாம்  நம்ம பண்டிட் கஸ்தூரி இங்கிருந்த காலத்தோடு போச்சு. பதினாறு நாமங்களைச் சொல்லி புள்ளையாரைக் கும்பிட்டுவிட்டு,  எம் எஸ் எஸ் அம்மாவின் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஸிடி ப்ளேயரில் ஓடவிட்டு, கூடவே நாமும் சொல்லிக்கிட்டே போகணும். ஜஸ்ட் அரைமணிக்கூர்.  மக்கள்ஸ்க்கு  தமிழிலும் ஆங்கிலத்திலுமா ப்ரிண்டவுட் எடுத்து வச்சுருப்பதைக் கொடுத்தால் ஃபாலோ பண்ணிக்கிட்டே வருவாங்க.
அப்புறம் நெய்விளக்கு ஆரத்தி எடுத்து, நைவேத்யங்களைக் கை காமிச்சால் ஆச்சு. நண்பர்கள் அனைவரும் தீபாராதனை செய்து மலர் தூவி வழிபடுவார்கள்.



இந்த முறை மகளிர் குழுவினர்  எல்லோரும் அவரவர் மொழியில் (மூணு தெலுங்கு, ஒரு மலையாளம், ரெண்டு தமிழ்) இருக்கும் ஸ்லோகப் புத்தகத்தைக் கொண்டு வந்ததால்  மகனர்களுக்கு மட்டும் ஆங்கில 'எஸ் வி எஸ் என்' கொடுத்தோம்.

சொல்ல ஆராம்பிச்சதும், 'அட தொடங்கியாச்சா?'ன்னு  வந்த ராஜலக்ஷ்மி,  கொலுவைக்கிட்டப்போய் பார்த்துட்டு நட்ட நடுவில் உக்கார்ந்து  தெய்வீக ஒலியில் லயித்துப்போனது அருமை!

எல்லாம் நல்லபடியாக நடந்து முடிஞ்ச மகிழ்ச்சியில் டின்னர் ஆரம்பமாச்சு. நம் வீட்டு வழக்கப்படி, லேடீஸ் ஃபர்ஸ்ட், அப்புறம் மற்றவர்கள்.  பரிமாறும்  வேலை மிச்சம் என்று அவரவர்க்குத் தேவையானதைத் தட்டில் போட்டு எடுத்துப்போய் கூடத்தில் உக்கார்ந்து  பேசிக்கிட்டே  சாப்பிட்டோம்.




கடைசி கெஸ்ட் போகும்போது மணி  ஒன்பதேமுக்கால்.  பாவம், ராஜலக்ஷ்மிதான்  ஒன்னும் சாப்பிடாமல் குறுக்கும் நெடுக்குமாப்போய் (பந்தி விசாரித்து) கொண்டு இருந்தாள்.

கிளறும் வேலைமுழுசும் கோபால் ஏற்றெடுத்தார். கிளறிக் கிளறியே தசைப் பிடிப்பு  முக்கால்வாசி சரியாச்சு அவருக்கும். கைகளுக்குப் பயிற்சி.    வேலை வாங்கியே எனக்கு ரொம்பக் களைப்பாப் போச்சுன்னா பாருங்க:-)))))


இந்த வருசப்பூஜை  இவ்வளவு நல்லா நடந்தது  சந்தோஷம். பொழைச்சுக் கிடந்தால் அடுத்த வருசம் எப்படி வருதோ அப்படி.

ஆச்சு  தசரா. நாளை முதல் தீபாவளி கொண்டாட ரெடியாகணும்.  இந்த வருசம் அநேகமாக ஆறுமுறைதான் கொண்டாடப் போறோம். முதல் தீவாலி நாளை மாலை. ஃபிஜி இண்டியர் குழு.

அனைவருக்கும் இனிய தீபஒளித் திருநாள் வாழ்த்து(க்)கள்.





19 comments:

said...

அருமையான படங்கள்... கொலு மிகவும் அழகு... சிறப்பான கொணடாட்டம்... வாழ்த்துக்கள் அம்மா...

said...

சூப்பர் கொலு, சூப்பர் பிரசாதம்.

சூப்பர் கோலம். சூப்பர் ஸ்லோகம்.
சூப்பர் துளசி. சூப்பர் கோபாலு.

சூப்பர் மனசு.

எல்லாமே பெருமாள் தந்தது.



சுப்பு தாத்தா.

Anonymous said...

அழகான பாந்தமான கொலு.
ரசிக்க வைத்த பதிவு.

said...

அற்புதமாகக் கொண்டாடி இருக்கிறீர்கள்
படங்களுடன் பகிர்வு மிக மிக அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

said...

சோபிதமாக ஒரு நவராத்திரி பூஜை. அருமையான மெனு.
அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி. இதைவிட தெய்வீகமாக எங்கயும் பார்க்க முடியாது. ஹாட்ஸ் ஆஆஃப் துளசிமா.!!!!

said...

வந்திருந்த விருந்தாளிகளுக்கு வயிற்றுக்கு விருந்து. எங்களுக்கு கண்ணுக்கு விருந்து.
ஹால் முழுக்க பரவியிருந்த கொலு மனத்தைக் கொள்ளை கொண்டது.
மனது நிறைந்தது துளசி!
எல்லாவற்றிற்கும் மேலாக கோபால் சாருக்கு தசைப்பிடிப்பு சரியானது சந்தோஷமான விஷயம்.
எல்லா நலன்களும் நிறைந்திருக்க வாழ்த்துகள்!

said...

உங்க பூஜை அறையும் வீடும் கண்ணுல ஒத்திக்கிற மாதிரி இருக்குங்க துளசி.

said...

படங்களும் தகவல்களும் பூஜையில் பங்கு கொண்ட நிறைவைத் தந்தன. ராஜலக்ஷ்மி வியக்கவைக்கிறாள். எவ்வளவு சமர்த்து!

\\இந்த வருசம் அநேகமாக ஆறுமுறைதான் கொண்டாடப் போறோம்\\
அசத்தல்.வாழ்த்துக்கள் டீச்சர்.

said...

ஞாபகம் இருக்கா?எப்படி இருக்கீங்க?கொலுsuper but ஸ்டெப்ஸ் எப்படி செஞ்சீங்க?அப்புறம் இன்னொரு டௌட் நீங்க newzealand தானே இருக்கீங்க?அடிக்கடி ஊரு மாரிடறீங்க,நானும் ரொம்ப நாலா வரல?ஜங்கிரி எப்படி செஞ்சீங்க கொஞ்சம் சொல்லுங்களேன்? I am VIJI nga Teacher.

said...

அழகான கொலு. வலது ஓரத்தில் சேலை கட்டி, நெற்றிச்சுட்டியுடன் நிற்கும் பொம்மியை க்ளோஸ் அப்பில் முன் பார்த்திருக்கிறேனே!

ராஜலஷ்மியையும் க்ளோஸ் அப்பில் எடுத்துப் பகிருங்கள்:)!

தீபாவளி வாழ்த்துகள்.

said...

அழகான வண்ண ரசனை ஒங்களுக்கு. அடுக்கி வெச்சது... அலங்காரம் பண்ணது... எல்லாத்தையும் சொல்றேன். வாழ்க. வளர்க.

ராஜலட்சுமியின் பிரவேசமும் பந்தி விசாரித்தலும் அருமை. பொதுவாகவே பூனைகள் ரகசியமானவை. ஆனால் இத்தனை கூட்டத்துக்குள் ராஜலட்சுமி இயல்பாக இருப்பது நன்று.

மெனுவெல்லாம் அட்டகாசம்.

மொத்தத்தில் கலக்கல்னு சொல்லுங்க. நாள் நிகழ்ச்சின்னு ஏதாவது செய்யும் போதே ஒரு பரபரப்பு தொத்திக்கிட்டு பொழுது ஆனந்தமாப் போறது இருக்கே... அடடா!

said...

பூஜையை சிறப்பாகவும் வந்திருந்த கெஸ்ட்டுகளுக்கு 'பிர'சாதம் வைத்து இவ்வருட விழாவினை அமர்களபடுத்தி விட்டீர் அம்மா. அருமை. பாராட்டுக்கள்.
//நாளை முதல் தீபாவளி கொண்டாட ரெடியாகணும். இந்த வருசம் அநேகமாக ஆறுமுறைதான் கொண்டாடப் போறோம்//
தீப ஒளியை கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்த்துகள்.

said...

சிறப்பாக கொண்டாடி இருக்கிறீர்கள்
அசத்தலான பிரசாதங்களும் புகைப்படங்களும்.

said...

மிக அழகு !!நேர்த்தி!!!! கண்ணுல ஒத்திக்கலாம் .மனசுக்கு நிறைவு தரும் பூஜை . வீடு அழகு துளசி .

// நம் வீட்டு வழக்கப்படி, லேடீஸ் ஃபர்ஸ்ட், அப்புறம் மற்றவர்கள். //
அட !!!nice !

one request தரையில் உள்ள இரண்டு கண்ணன் படங்கள் closeup போட்டோ போட முடியுமா .

said...

சூப்பர் கொண்டாட்டம். கண்டுமகிழ்ந்தோம்.

தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பமாகிவிட்டதே வருகின்றோம் காண.

said...

அந்த ஜாங்கிரி.....வாவ்!

said...

தீபாவளி வாழ்த்துகள், கொலு அலங்காரம் இதையெல்லாம் விடுங்க. அந்த சாப்பாடு அடுக்கி வச்சு இருக்ற அழகு இருக்கே? அடேங்கப்பா?

இருக்குற ஆளுங்களைப் பார்த்தால் கொறிக்கிற ஆளாவுல தெரியுது. எங்களை மாதிரி ஆளுகள விடோனும்.

நீங்க பாத்திரம் கழுவி வைக்கிற வேலையையும் மிச்சப்படுத்தியிருப்போம்ல.

இந்த முறை படங்கள் அனைத்தும் நேரில் இருக்கும் உணர்வைத் தந்தது.

said...

அட விமர்சனம் வந்ததான்னு தெரியல? கொஞ்ச நாளாக இந்த பிரச்சனை வேறு? டெஸ்ட்ன்னு போட்டுத்தான் ஒவ்வொரு இடத்திலும் போட வேண்டியதாக உள்ளது.

said...

வாங்க டீச்சர்.
பதிவைப் பார்க்க சந்தோஷமாயிருக்கு.
ஆனாலும் அந்த ஃபார்மை நிரப்பிக் கொடுத்திருந்தால் என்னவாம்?
இரண்டு ஃப்ளைட் டிக்கட்டை மிஸ் பண்ணிட்டீங்க. எமக்கு ஒரு பயணக் கட்டுரைத் தொடர் மிஸ்ஸிங் :-(

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் டீச்சர் :-)