Wednesday, July 03, 2013

கீச்சக கீச்சக கீச்சக சக் சக் சக் சக்.......... (பாலி பயணத்தொடர் 9 )


எதிர்ப்புறம்  இன்னொரு கட்டைச்சுவர் அருகில்  போகும் ஒத்தையடிப் பாதை வழியாகப்போய் அரங்கில் நுழைஞ்சோம்.  சிமெண்டு தரை நடுவிலொரு கல் நிலவிளக்கு .  சுத்திவர  மேலேறிப்போகும் இருக்கை வரிசைகள்.  ஆம்பி தியேட்டர்!

 நாம் சீக்கிரம் போயிட்டோமுன்னு நினைச்சால் ஏற்கெனவே அங்கே  நல்லகூட்டம். கீழிருந்து ரெண்டாவது வரிசையில்  இடம் கிடைச்சது. கல்விளக்குக்கு ஒரு தலைப்பா கட்டுனவர்,  எண்ணெய் கொண்டு வந்து ஊற்றினார்.  திரியும்  போட்டார். நாம் இங்கொரு கண்ணும்  அந்திவானத்தில் ஒரு கண்ணுமாக  இருந்தோம்.  கொஞ்சம் பிரசாதத் தட்டுகளுடன் பூஜாரிஒருவர் வந்து கல் விளக்கு முன்னே  உட்காந்து பூஜை செய்தார்.   தீபமும் ஏற்றினார்.  தீவட்டி போல எரிய ஆரம்பிச்சது.


இங்கே நாம் பார்க்கப்போவது  கீச்சக் அண்ட் ஃபயர் டான்ஸ் ( KECAK & FIRE DANCE)


இன்னும் திமுதிமுன்னு  கூட்டம்  வந்துக்கிட்டேஇருக்கு.  நமக்கு முன் வரிசையும் நிறைஞ்சு  அதுக்குக் கீழே தரையிலொரு வரிசையும் ஆச்சு.  அப்படியும்  மக்கள்ஸ் வந்துக்கிட்டேதான் இருக்காங்க. ப்ளாஸ்டிக் நாற்காலிகளைக் கொண்டு வந்து  வாசலுக்கு எதிரிலும் கட்டைச்சுவர் அருகிலுமா போட்டுக்கிட்டேஇருக்காங்க.


அறிவிப்பாளர் ஒருவர்  அனைவரையும் வரவேற்ற பின்  நிகழ்ச்சி ஆரம்பிச்சது.  கீச்சக் கீச்சக் கீச்சக் என்ற குரல்கள்  மட்டும் மெள்ள ஆரம்பிச்சு ,  பலமா ஒலிக்க ஆரம்பிச்சது.  சாமித்துணியை  இடுப்போடு கட்டுன சுமார்  அறுபது பேர் அரங்குக்குள் வந்து விளக்கை சுத்தி  உக்கார்ந்தாங்க.இந்த நடனம் பாலிமக்கள் ,  கெட்ட தேவதைகளைத் துரத்தும் நடனமா  நெடுங்காலமாக ஆடிக்கிட்டு இருந்ததுதான்.  கொள்ளை நோய்களில் இருந்து விடுபடவும், அசம்பாவிதம் நடந்த கிராமத்தைச் சுத்திகரிச்சுப் பரிகாரம் பண்ணுவதுமா ஏற்பட்ட சடங்குகளில் ஒன்னு. Sanghyang  என்ற பெயராம் அந்த சடங்கு முறைகளுக்கு.

1930 ஆண்டு Walter Spies என்ற ஓவியரும் இசைக் கலைஞருமான  ஜெர்மானிய  பயணி ஒருவர்  இதை கொஞ்சம் ஒழுங்கு செஞ்சு இப்போதைய வடிவில் ஆக்கிக் கொடுத்துருக்கார்.  பாலித் தீவு முழுசும் வெவ்வேற ஊர்களில்  வெவ்வேறு குழுக்கள் இதை ஆடிக்கிட்டு இருக்காங்க. சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுது போக்கு.  உள்ளூர் மக்களுக்கு நல்ல வருமானம்.


இசைக்கருவிகள்  ஒன்னுமே இல்லை இந்த நடனத்துக்கு.  அந்த அறுபது  நபர்கள் சொல்லும் கீச்சக்  கீச்சக் தான்  இசை. வெவ்வேற தாளக்கட்டில்  வெவ்வேற ஸ்தாயிகளில்  ஆரம்பம் முதல்கடைசிவரை சுமார் ஒரு மணி நேரம்  கீச்சக் தவிர வேறொன்னுமில்லை. வெறும் கீச்சக்கா இல்லாமல்  குழுவின் நடுவில் ராமாயணமும் நடனமாகவே   நடக்குது.

 சீதையும் ராமனும் வந்து  ஆடுறாங்க .  பொன்மான் வந்து இவர்கள் முன்னால் நின்னு துள்ளி ஆடிட்டு ஓடுது. மான் வேணுமுன்னு சீதை கேட்க ,  லக்ஷ்மணனை காவல் வச்சுட்டு ராமர்  மானைப் பிடிக்கப் போயிட்டார்.


ராமர்  அலறல்  கேட்ட சீதை , லக்ஷ்மணனைப் போய் பார்த்து வரச் சொல்லும்போது  'வேணாம் தேவை இல்லை'ன்னு  அவன் ஆட.... இவள் கட்டாயம் போய் பார்க்கத்தான் வேணுமுன்னு ஆடி அடம்பிடிக்க  அவன்  கீச்சக் வட்டத்துக்குள்  அவளை விட்டுட்டுப்போறான்.

ராவணன் வந்தான். கீச்சக்கைத் தாண்டி உள்ளே வர முடியலை. திரும்பிப்போய்  சந்நியாசி வேஷம் கட்டிக்கிட்டு வர்றான். குடிக்கத்தண்ணி வேணுமுன்னு  சீதையிடம் கேக்க, அவள் வட்டம் தாண்டிப்போய்  தண்ணீர் கொடுக்க, அவளைப்பிடிச்சு இழுத்து தோளில் தூக்கிவச்சுக்கிட்டு வட்டத்துக்குள் வந்து ஆடோ ஆடுன்னு ஆடறான்.

  தோளில் சீதையோடு புறப்பட்டுப்போகும்போது ஜடாயு வந்து எதிர்க்க  அதனோடு சண்டைபோட்டு வெட்டி வீழ்த்திட்டுப் போயிட்டான்.


ராமனும் லக்ஷ்மணனும் திரும்பி வந்து பார்த்தால் சீதையைக் காணோம்!  புலம்பிக்கிட்டே ஆடித் தீர்த்தாங்க. அப்ப Twalen  என்ற  தேவதை வந்து ஆறுதல் சொல்லி சீதையைக் கண்டுபிடிக்க உதவறேன்னு சொல்லுது.

கூட்டத்தில் ஒரு சலசலப்பும் கீச்சக் குழுவின்  ஒலியில்  ஒரு மாறுதலும்.....  வெள்ளைக் குரங்கொன்னு கட்டை சுவர் ஏறிக் குதிச்சிருக்கு. அங்கங்கே கைக்கு வாகா இருக்கும்  பார்வையாளர் தலையில் பேன் பார்த்துகிட்டே அங்கிட்டு இங்கிட்டுமா  தாவி ஓடுச்சு.  அனோமேன் (ANOMAN)வந்துட்டாரு!!!


. கீச்சக் குழுவினரோடு கலந்து ஒரே ஆட்டம்.  ராமர்  தன் முன் மண்டியிட்ட அனோமேனுக்கு  மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்து ஆசீர்வதிச்சார்.

அஸ்தமன  சமயம் நடனம் ஆரம்பிச்சது. முக்கிய ஸீன்கள் வரவர கும்மிருட்டு. கல்விளக்கின் ஒளி மட்டுமே!  இப்படி இருக்கக் கல்விளக்கு காணாமப்போனது இப்போதான்! Alengka  Scene.

ஸீன் மாற்றம்.  அசோகவனத்தில்  சீதையும் திரிஜடையும். நளினமான விரல் அசைவுகளுடன் வழக்கம்போல் ஆடறாங்க. நாட்டிய நாடகம் என்பதால் எல்லோரும் ஆடத்தான் வேணும். ஆனால்  எந்த முக்கிய நடிகருக்கும்  (ராமர் சீதை லக்ஷ்மணன்) Bபாவம் துளி இல்லை முகத்தில் . ப்ளாஸ்டிக் முகமோன்னு சந்தேகம் வந்துரும் நமக்கு. ஆனால்.... ரியல் முகம்தான்.


இதுக்குள்ளே  சீதையைத் தேடிக்கிட்டு வந்த அனோமேன்   சீதையிடம்  கணையாழியைக் கொடுத்தார்.  கொடுத்துட்டு ஆடுனவரை அரக்கர்கள்  சண்டை போட்டுப் பிடிச்சுக்கிட்டுப்போய் கையைப் பின்னால் கட்டிட்டாங்க. அனோமேனை உக்கார்த்தி வச்சு பூஜை செஞ்சார் பூசாரி.

தேங்காய் நார் பிரி போல் ஒன்னு கொண்டுவந்து  அனுமோனைச் சுத்தி வட்டம் போட்டாங்க. தீ வச்சதும்  துள்ளிக் குதிச்சு எழுந்தார்.   தீக்குள்ளேயும் வெளியேயுமுன்னு லங்கா தகனம் ஆரம்பிச்சது.  எட்டி எட்டி உதைக்கும்போது  எரியும் நார் பறந்து இங்கேயும் அங்கேயும் விழுந்து சட்னு அணைஞ்சும் போச்சு.

ராமலக்ஷ்மணர்கள் வந்தாங்க  ராவணனுடன் போர்.  ராவணன் மாண்டான். எல்லாம் சுபம்.

நமக்கு ராமாயணம் ஓரளவு தெரிஞ்சதால் ' நடனம்' சுலபமாப் புரிஞ்சது.

மொத்த கீச்சக் குழுவும் அரங்கத்தை விட்டு ஒரு கணம் கூட அகலாமல் ஆரம்பம் முதல் கடைசிவரை சக் சக் சக் சக்  சொல்லிக்கிட்டே , ஸீனுக்கு ஏத்தாப்போல  ரெண்டா, மூணா, நாலாப் பிரிஞ்சும் சேர்ந்தும்  நின்னும் இருந்தும் கிடந்தும்  ஒரு லயத்தோடு இருந்தாங்க!

முழு நடனத்தையும்  ஒரு புண்ணியவான்  வீடியோ எடுத்து யூ ட்யூபில் போட்டு வச்சுருக்கார். அவர் நல்லா இருக்கணும்!   நேரம் இருப்பவர்கள் பார்த்து மகிழலாம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்.  நாம் எடுத்த  வீடியோ துணுக்குகளை விட இது நல்லாவே வந்துருக்கு.  க்ளிக்கலாம். அன்னாருக்கு எம் நன்றிகள்.  Thank you funkyluke2009.


முழு நடனமும்  இயற்கை ஒளியில் என்பதால்  மணிரத்தினம் படம் பார்த்த  எஃபெக்ட் நமக்கு.  கொஞ்சம் விளக்குகள் போட்டுருக்கலாம்.  நிகழ்ச்சி முடிஞ்சதும்   சின்னதா கொஞ்சம் வெளிச்சம். அட!  லைட் போட்டுட்டாங்கப்பா!!!

அரங்கைவிட்டு வெளியேறுவது கஷ்டமாப்போச்சு. பாதை சுத்தமாக் கண்ணுக்குத் தெரியலை. போதாக்குறைக்கு 'பேர் சொல்லாதது '  நடமாடும் இடமாம்.  டார்ச் வச்சுக்கிட்டு நடந்த ஒரு ஜோடியை விடாமல் தொடர்ந்தோம். பாவம்  அவரே   சமதரை இல்லாமல் இருந்த  ஒரு இடத்தில் விழத்தெரிஞ்சார்.

குறைஞ்சபட்சம்  நம்ம வீட்டுத் தோட்டத்தில்  இருப்பது போல் ஸோலார் விளக்குகளை  பாதையின் ஓரத்தில் நட்டு வைக்கப்டாதோ?  குரங்கன்ஸ் எல்லோரும்  தூங்கிட்டாங்க போல! நடமாட்டம் இல்லை:-)

ஆமாம்... நம்ம டார்ச் எங்கேன்னு கோபாலைக் கேட்டதுக்கு   ஹொட்டேல் ரூமிலே வச்சுருக்கேன்னார்:-))))

கல்பாவிய  தரை வரும்வரை தட்டுத் தடுமாறல்தான்:(

 கேட்டுக்கு அருகில் நமக்குக் கொடுத்த  'ஒட்டியாணத்தையும் ' ஸராங்கையும்  திருப்பி வாங்கிக்க சிலர் நின்னுருந்தாங்க.  ந்யோமேன்  கேட்டருகில் நமக்காகக் காத்திருந்தார்.  நேரம் ஒன்னும் அதிகமில்லை. ஏழரைதான். ஆனால் எங்கும் கும்மிருட்டு!


நடனம் பார்க்க எப்படி இவ்ளோ கூட்டமுன்னு  யோசிச்சவளுக்குக் கார்பார்க்கில் விடை  கிடைச்சது. எக்கச்சக்கமான  டூரிஸ்ட் பஸ்கள்.   மக்களைச்  சரியா  நடன நேரத்துக்குக் கொண்டு வந்து இறக்கி இருக்காங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் எல்லோரும் ஜிம்பாரன் ஸீ  ஃபுட் ரெஸ்ட்டாரண்ட் போவாங்க.  சாப்பாடு நல்லா இருக்கும். உங்களை அங்கே கொண்டுபோறேன்னு சொன்ன ந்யோமேனுக்கு  கும்பிடு  போட்டுட்டு  ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தோம். நாளைக்கும்  வண்டி காலை எட்டரைக்கு  வேணுமுன்னு சொல்லியாச்சு.


மூணுமாடிகளேறி அறைக்கு  வரும்போதே பயங்கர ஆயாசம். இனி ஒருமுறை சாப்பாட்டுக்குக் கீழே போகணுமான்னு  கால் கெஞ்சுது.  மணி வேற இரவு ஒன்பது. கெமெரா பாட்டரியைச் சார்ஜரில் போட்டுட்டு, ஒரு  பீட்ஸா, ரூம் சர்வீஸ்க்குச் சொல்லிட்டு  உடல்வலி போக சூடா ஒரு ஷவர்.


ஒன்பதே முக்காலுக்கு  சாப்பாடு வருது. கொண்டு வந்த இளம்பெண் மஹி, ஹிந்துவான்னு  கேட்டாங்க.  ஆமான்னதும்...... ரொம்ப சந்தோஷமா  முணுமுணுன்னு  என்னவோ நீளமாச் சொன்னாங்களா.... அவ்வை ஷண்முகியில் பிறவி ஊமை நாஸர்  சொன்ன ருத்திரம் மாதிரின்னா இருக்கு!

தெரிஞ்ச  ட்யூனா இருக்கே......

அட நாராயணா!!!!!   இது காயத்ரி இல்லையோ!!!  புரிஞ்சுண்டதும் சும்மா விடலாமோ?

ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

ஆரம்பிச்சு வச்சேன். மஹியின்  மதிவதனம் பூராவும் விகசிப்பு! ரெண்டாம் முறை கூடவே சேர்ந்து சொன்னாங்க.  நம்ம கோபால் மட்டும் மனசுக்குள்ளேயே சொல்லி இருப்பார்!

பீட்ஸா சாப்பிடுமுன் காயத்ரி சொல்றது  நம்ம வழக்கம் கேட்டோ:-)))))

தொடரும்.........:-)


29 comments:

said...

funkyluke என்கிற அந்த அன்பருக்கு, டீச்சர் மூலமா என் நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன்...

அழகான காணாளியாக் குடுத்து இருக்காரு;
பார்க்கப் பார்க்கப், பாலி போகணும் -ன்னு ஆசை உந்துது டீச்சர்...

இராமாயணத்துக்காக இல்ல!
எளியோரின் கலை உணர்ச்சி (எ) கூத்துக்காக!

said...

டீச்சர்,
பதிவில் நீங்க சொன்ன அத்தனை sequence-உம் இளங்கோவடிகளும் சொல்லுவாரு!
- நடுவாப்புல விளக்கு ஏத்துவதில் இருந்து,
- கடைசியில், குரல் மூலமாகவே பாத்திரங்கள் மறையும் வரை...

* இப்படி எல்லாரும் குரல் குடுத்து ஆடுவது = தமிழ்க் கூத்து!

* பின்னாளில், வடமொழி கலந்த பின், ஒருவர் மட்டுமே "நட்டுவாங்கம்" செய்வது = ஆரியக் கூத்து

"ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே" -ங்கிற பழமொழி இதிலிருந்து வந்தது தான்!
ஆரியக் கூத்தில், நமக்குத் தான் பாடுற வேலை இல்லீயே-ன்னு "அசால்ட்டா" இருந்துட்டா, "பாடுற பகுதியும்-ஆடுற பகுதியும்" பொருந்தாமப் போயீரும்...

அதான், ஆரியக் கூத்தாடினாலும், (பாத்திரத்தின்) காரியத்தில் கண்ணா இருக்கணும் -ன்னு சொல்லுறது வழக்கம்!
------

இளங்கோவடிகள், இது போல ஒவ்வொரு கூத்தையும், youtube வீடியோ போல, படம் புடிச்சிக் காட்டுவாரு!
*கொடுகட்டிக் கூத்து
*சாக்கைக் கூத்து
*பாண்டரங்கம்
*வள்ளிக் கூத்து

அத்தனையும் பாண்டில் விளக்கைச் சுத்தியே நடக்கும்!

said...

இதையே, "அரையர் சேவை" -ன்னு திருமால் ஆலயங்களில் நடக்கும் (நடந்துச்சி); இப்போ ரொம்ப இல்லை!

நாமளே பாடிக்கிட்டுத் தான் ஆடணும்;
மொத்தக் கதையும் கையசைவு-கால் அசைவு-லயே சொல்லீறணும்; ரொம்ப குதிக்க எல்லாம் கூடாது:)

வில்லிபுத்தூர், மேலக்கோட்டை-ன்னு ரெண்டே இடத்தில் மட்டும் தான், ஏதோ ஒப்புக்கு இருக்கு!
மத்த தலங்களில் எல்லாம் செத்துப் போயிருச்சி!:(

In Srirangam, it became more brahminical, than mullai nila aayar koothu:( Lost it's pristine art form!
------

"கூத்துப் பட்டறை" -ன்னு ஒரு இயக்கம்; பெரியார் வழி வந்தவர்கள்!

சமூக நாடகம் எல்லாம் "கூத்தாகத்" தான் போடுவார்கள்;
தெருக்கூத்து என்பது வேறு; சாக்கைக் கூத்து என்பது வேறு; பின்னது சற்று நுட்பமானது; கூத்துப் பட்டறை மக்கள் நல்லாவே நடிப்பாங்க!

என்ன தான் பெரியார் இயக்கமா இருந்தாலும்,
தொன்மையான கலை வடிவம் அழீஞ்சிறக் கூடாதே-ன்னு,
"அரையர் சேவையை", அவுங்களே document செய்து, சில பயிற்சிகளும் குடுத்தாங்க..
(திருநெல்வேலி பக்கம் திருக் குறுங்குடி என்கிற ஊர்க் கோயிலில்!)

Na.Muthusami, Director of Koothu pattaRai - Araiyar Sevai Project
http://www.arangham.com/ritrev/kaisiki/report.html

முன்பு எப்பவோ பந்தலில் இட்டது
= http://madhavipanthal.blogspot.com/2006/11/blog-post_30.html
பதிவுலகத்துக்கு வந்த புதுசு, 2006; யாரும் அறியாப் புதுப் பையன்:)

muruga, time flies da..

said...

//அரங்கை விட்டு வெளியேறுவது கஷ்டமாப் போச்சு. பாதை சுத்தமாக் கண்ணுக்குத் தெரியலை. போதாக்குறைக்கு 'பேர் சொல்லாதது' நடமாடும் இடமாம்//

ஆடு பாம்பே!
டீச்சர் முன் ஆடு பாம்பே:)

//ஆமாம்... நம்ம டார்ச் எங்கேன்னு கோபாலைக் கேட்டதுக்கு ஹொட்டேல் ரூமிலே வச்சுருக்கேன்னார்:-))))//

பதிவுல அவரைப் போட்டுக் கொடுத்தே ஆகணுமா?:)
All womenfolk, typical da muruga!:)
-------

டீச்சர்
இந்தப் பாலிப் பதிவுகளும், உங்கள் படங்களின் கிடங்கும்... என்னை மிகவும் தூண்டுது;
"வெசாக்" கோயில், போர்க்கோலத்தில் சிரிக்கும் முருகனை, எப்படியும் பாத்துருவேன்! பாலி போயிருவேன்;

said...

நல்ல நடனம்... நன்றி அம்மா...

said...

ஒன்பதே முக்காலுக்கு சாப்பாடு வருது. கொண்டு வந்த இளம்பெண் மஹி, ஹிந்துவான்னு கேட்டாங்க. //

ஒவ்வொருவர் மதம் சார்ந்த பாடல்களை பாடுவார்கள் போல!
நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது இத் தொடரில் அருமை.
அவர்கள் நடன காணொளியைப் பார்க்க வேண்டும்.
நன்றி.
கன்னபிரான் பின்னூட்டங்கள் எல்லாம் அருமை.

said...

//அனோமேன்//

ஹை.. நம்மூர் ஹீரோ அனுமான் :-))

சூப்பர்மேன், ஸ்பைடர்மேன்,ஹிமேன் எல்லாத்துக்கும் முன்னோடியாக்கும் இந்த அனுமேன் :-))

தெருக்கூத்து, பாவைக்கூத்துன்னு பிரபலமான, நம்மூர்லதான் காணக்கிடைக்க மாட்டேங்குது இது மாதிரியான கூத்துகள். நம்மூர்க்கோயில்களும்,ஹோட்டெல்களும் இவங்களைப்பார்த்து காப்பியாவது அடிக்கக்கூடாதா. குறைஞ்சபட்சம் டூரிசம் ஆட்களாவது செய்யலாம்.

said...

நல்ல நடனத்தை அற்புதமா விளக்கி சொல்லிட்டீங்க அம்மா!

said...

அழகியல் சார்ந்த படைப்பு. இராமாயண காட்சிப்படுத்துதலை புகைப்படம் எடுத்தது அழகென்றால் பார்வையாளர்களை எடுத்தது இன்னும் வசீகரத்தனமையை அளிக்கிறது துளசிம்மா :) புண்ணியவதியா போட்டோ எடுத்தவங்களுக்கும் யூ ட்யூபில் போட்ட புண்ணியவானுக்கும் நன்றிங்கோ :0

said...

இந்த மாதிரி கிராமத்து ( பாலி கிராமம்னு சொல்லலை ) நடனங்கள் பார்க்கனும்னு ரொம்ப ஆசை . உங்கள் மூலம் நிறைவேறிற்று அதுக்கு ரொம்ப spl தேங்க்ஸ் .

அவங்க லோக்கல் சாப்பாடு என்ன .

said...

பதிவு நல்லது.
கண்ணபிரான் படிவும் நல்லது.
அடிக்கடி முருகனை அழைப்பதும் அழகு.

டாஅர்ச் எங்க வீட்ல கூடக் காணொம். அங்க எங்கயாவது இருக்கா பாருங்க.:)
அஜந்தா ஓவியங்கள் தான் நினைவுக்கு வருது இந்த நாட்டியக் காரர்களைப் பார்த்தால். பக்தி பூர்வமாத்தான் செய்யறாங்க.
அரையர் கூத்து பார்த்தது இல்லை. குறுங்குடியில் ஒரிஜினல் கூத்து உண்டு என்பது மட்டும் தெரியும்.

said...

இராமயணத்தை எவ்வளவு அழகாக வழங்கியிருக்கிறார்கள்! பகிர்வுக்கு நன்றி.

said...

புகைப்படங்கள் ராமாயணத்தை இத்தனை அழகாகச் சொல்லும்போது you tube வேறு எதற்கு? கூடவே ரொம்பவும் அழகாய் விஸ்தரிக்கிறீர்கள்!
அடிக்கடி பூகம்பம் குமுறும் இந்தோனேஷியவிற்கு எப்படி தைரியமாகப் போய் வந்தீர்கள்?

said...

வாங்க கே ஆர் எஸ்.

ஹைய்யோ!!! அடுக்கடுக்கா எத்தனை தகவல்கள் இப்படிப் பின்னூட்டங்களின் வழியாக!!!

பிரமிப்புதான் எனக்கு. அதைவிட 'இந்தச் சின்னப்பையனுக்கு' இவ்ளோ தெரிஞ்சுருக்கேன்னு சொல்லிச் சொல்லி மாய்ஞ்சு போறார் கோபால்!

நல்லா இருங்க.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க கோமதி அரசு.

//ஒவ்வொருவர் மதம் சார்ந்த பாடல்களை பாடுவார்கள் போல!//

அந்தப் பொண்ணும் ஹிந்து என்பதால் அவுங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி. பாலித்தீவில் 85 சதவீதம் ஹிந்துக்களே.

மஹி அங்கே வேதபாடசாலையில் படிக்கிறாங்களாம்.

காணொளி உங்களுக்குப்பிடிக்கும் என்று தோணுகிறது.

பின்னூட்டங்களின் ஜொலிப்பு கூடுதலே!

கருத்துக்கு நன்றிகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

சரியாச் சொன்னீங்க!

அந்த மேன் சூப்பர்மேனுக்கும் மேலே!

// தெருக்கூத்து, பாவைக்கூத்துன்னு பிரபலமான, நம்மூர்லதான் காணக்கிடைக்க மாட்டேங்குது இது மாதிரியான கூத்துகள். நம்மூர்க்கோயில்களும்,ஹோட்டெல்களும் இவங்களைப்பார்த்து காப்பியாவது அடிக்கக்கூடாதா. குறைஞ்சபட்சம் டூரிசம் ஆட்களாவது செய்யலாம்.//

ஆம். லாம் லாம். பூனைக்கு மணி கட்டுவது யார்? நம்மூர்தான் சினிமாவில் மூழ்கிக்கிடக்கே:(

said...

வாங்க ராஜி.

ரசிப்புக்கு நன்றிகள்ப்பா.

said...

வாங்க கவிதாயினி.

வணக்கம்.நலமா? ரொம்ப நாளைக்கு ரொம்ப நாளு!!!

கனவு இல்லைதானே:-))))

நன்றிக்கு நன்றிகள்.

said...

வாங்க சசி கலா.

அடுத்த பதிவு இன்னொரு நடனம். அதையும் பார்த்துட்டுச் சொல்லுங்க:-)

லோக்கல் சாப்பாடு..... அப்பாலிக்கா வச்சுக்கலாம்.

said...

வாங்க வல்லி.

கே ஆர் எஸ் வந்தவுடன் பதிவுக்கு ஒரு ஆன்மீகக் களை வந்துருது பார்த்தீங்களா!!!!

எனக்கும் அரையர் கூத்து பார்க்க ஆசையாத்தான் இருக்கு.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நன்றீஸ்ப்பா.

said...

வாங்க மனோ சாமிநாதன்.

சொன்னது சரியான்னு டபுள் செக் பண்ணிக்கத்தான் அந்த யூ ட்யூப்:-))))

பூகம்பநாடு..... இந்தோனேஷியா?

நியூஸியில் எங்களுக்கு(நில) நடுக்க பயம் விட்டுப் போச்சுங்க.
ரெண்டரை வருசமா எங்க ஊரில் நிலநடுக்கம். பூமி ஆட ஆரம்பிச்சு இன்னும் நிக்கலை. 176 உயிர்களை காவு வாங்கிருச்சு.
அன்று முதலின்று இதோ இந்த பதிலை எழுதும்போது நிலவரம் 13495 ஆட்டம். தினம் ரெண்டோ மூணோ நாலோன்னு...

இதுக்குன்னே ஒரு லைவ் வெப் சைட் இங்கே அரசு போட்டுக் கொடுத்துருக்கு. நாங்களும் தினம் மெயில்பாக்ஸ் செக் பண்ணும் தினுசில் இங்கே எட்டிப் பார்ப்போம்.

ஆட்டத்தை வச்சு அது எத்தனை Magnitude இருக்குமுன்னு சொல்லும் கெஸ்ஸிங் கேம் இப்ப எங்களுக்கு படு சுவாரசியம்.

ஊரில் பாதி அழிஞ்சே போச்சு.


நீங்க கூடபார்க்கலாம் இங்கே:-)

http://quake3.crowe.co.nz/QuakeList/

said...

சிறப்பான விவரங்கள். காணொளியை மாலை வந்து தான் பார்க்கவேண்டும்..... இப்போதைக்கு உங்கள் விவரணையில் படிச்சாச்சு!

said...

படங்களும், தகவல்களும் அருமை. நாட்டிய நாடகமெல்லாம் இங்க மறந்தே போயிருக்கும்...

said...

அருமையான நடனநிகழ்ச்சி.

வெள்ளை ஹனுமான் சூப்பர்.

வாழைக்குத்தி வெளிச்சத்தில் நடாத்தும் கூத்து பார்த்திருக்கின்றேன். அதன் நினைவு வந்துபோனது.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

எப்ப முடியுமோ அப்போ பாருங்க.

நல்லாவே எடுத்துருக்கார்!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

என்ன ஒரு டைமிங் பாருங்க. ரங்க்ஸ்ம் தங்ஸும் அடுத்தடுத்து!!!!!

இப்ப தமிழ்நாடே சினிமாவில் அடிப்பட்டுக் கிடக்கேப்பா:(

said...

வாங்க மாதேவி.

அதென்ன வாழைக்குத்தி?

தீவட்டி வெளிச்சமா? அதுதான் மேல்நோக்கி எரியும்போது வாழைப்பூ போல இருக்கும்!