Friday, July 05, 2013

Barong Barong சிங்கம்புலி பாரோங்(கு) ... (பாலி பயணத்தொடர் 10 )

ஒரு காட்டிலே ஒரு புலி  ஒன்னு இருந்துச்சு. இதுக்கு சிங்கத்தைப்போலவே நீளநீளமான சடாமுடி. இது ரொம்ப நல்ல புலி.  இந்தப் புலிக்கு  நண்பனா இருந்துச்சு ஒரு குரங்கு. ரெண்டு பேரும் தினம் சந்திச்சு நல்லாப்பேசி பொழுது போக்குவாங்க.



ஒருநாள் பனங்கள்ளு இறக்கும் மூணு மனுசனுங்க காட்டுக்குள்ளே வர்றாங்க. குடி மயக்கத்தில் ரொம்ப ஜாலியா ஆடிக்கிட்டு வந்தவங்க புலியைப் பார்த்ததும் பயந்து ஓடாமக் கோவமா புலிமேல் பாயறாங்க. கடுமையான சண்டை நடக்குது. இந்த மூணு பேரிலொருவனது  குழந்தையை புலி முன்பொரு சமயம் கொன்னுருச்சு என்பதே கோபத்துக்குக் காரணம். சண்டை நடக்கும்போது குரங்கு பயந்து எதிர்ப்புறம் ஓடி  ஒளிஞ்சு உக்கார்ந்துச்சு. அப்புறம் சண்டையில் புலியின் கை கொஞ்சம் ஓய்ஞ்சு போனது தெரிஞ்சதும் உதவிக்கு வந்து மனுசரை  எதிர்த்து நிக்குது.    நடந்த சண்டையில்  ஒரு மனுசனின் மூக்கைக் கூடக் கடிச்சுருச்சு புலி. குய்யோ முறையோன்னு அவுங்க பாய்ஞ்சு ஒருபக்கம் ஓட புலியும் குரங்கும் இன்னொரு பக்கம் பாய்ஞ்சு போய் ஒளிஞ்சுக்கிச்சு. (குரங்கு எகிறிக்குதிச்சு பார்வையாளர்க்கிடையில் ஒளிஞ்சது! நல்ல சிரிச்ச முகம்)


ரெண்டு அழகான மங்கையர்  நளினமா விரல்களையும் இடுப்பையும் அசைச்சு  முழங்காலை அரையா மடக்கி  ஆடறாங்க.   (நிமிர்ந்து நிக்கவும் முடியாது , கீழே உக்காரவும் முடியாதுன்னா  எப்படி இருக்குமோ அப்படி!) ரங்டா   என்ற மன்னரின் அரசவை நாட்டியம்! ரங்டா  தீமைகளின் அரசன். கொடுங்கோலன்!


தேவி குந்டி  (குந்தி?) பிரதமரைப் பார்க்க அந்த வழியா வர்றாங்க. கூடவே அவருடைய மகன் செடேவா.(சகாதேவா?)


ஆடும் மங்கையர் உடலில்  இப்போ ஒரு கெட்ட ஆவி புகுந்துருச்சு. பார்வையே ஒன்னும் சரியில்லை! மன்னன் ரங்டா , குந்டியின் மகனை தனக்கு பலி கொடுக்கணுமுன்னு   தாயிடம் கேட்க , அம்மா சம்மதிச்சுட்டாள்!  குந்டிக்குள்ளேயும் கெட்ட ஆவி புகுந்துருச்சு! பிரதமர் வர்றாரு. கெட்ட ஆவி அவரையும் விட்டு வைக்கலை.  செடேவாவைக் கொண்டு போய் காட்டில்  ஒரு மரத்தில் கட்டிப்போட்டுட்டாங்க.






சிவன் (சாமி)  அப்ப தனியாக் கிடக்கும்  செடாவா முன் தோன்றி  சாகா வரம் கொடுத்துட்டுப் போறார். செடேவாவைக் கொல்ல ரங்டா வர்றான். அவனால் செடாவாவை சாகடிக்கவே முடியலை!  உடனே அவன் காலில் விழுந்து  எனக்கு மோட்சம் கொடுன்னதும் இட் வாஸ் க்ரான்ட்டட்:-) ரங்டாவைக்  கொன்னு சொர்கத்துக்கு அனுப்பியாச்சு.



ரங்டாவின்  வேலைக்காரி  கலிகா அப்போ அங்கே வந்து எனக்கும் சொர்க்கம் போகணுமுன்னு  கேட்க, செடேவா அதெல்லாம் முடியாதுன்னு சொன்னதும் கலிகாவுக்கு கோபம் வந்துருது. உடனே கரடி ரூபம் எடுத்து  'நான் உனக்கு மோட்சம் கொடுக்கறேன் பார்ன்னு ' அவனைக் கொல்லப் பாய்கிறாள்.

செடேவா கரடியுடன் சண்டை போட்டுத் துரத்தறான். கரடி உடனே பறவையா மாறிமீண்டும் அவனோடு சண்டை போடுது. அப்பவும் தோல்விதான்.  உடனே பறவை ரங்டாவா மாறி  செடேவா முன் நிக்குது. ஒன்னும் புரியாம ஆல்ரெடி  மோட்சத்துக்கு அனுப்புனவன் எப்படி  திரும்பி வந்தான்னு செடேவா திகைச்சு நிக்கறான். கொன்னவனை எப்படி திரும்பக் கொல்வது?

கண்ணை மூடி தியானிச்சதும்  செடெவா  பாரோங் என்னும் மிருகமா மாறிடறான்.  அட! இதுதான் நாம் முன்னே பார்த்த சிங்கம்புலி!   ஒரு  பூசாரி வந்து  பூஜை செஞ்சார் .

இதுக்குள்ளே  ரங்டாவின் படை வீரர்கள்   ராஜாவின் உதவிக்கு வந்து சேர்ந்தாங்க.  பெரிய போர் நடக்குது.  ஆனால் சிரஞ்சீவியான பாரோங்  எல்லாரையும் கொன்னு குவிச்சது.






கெட்டவங்க எல்லோரும் காலி.  நல்லவனுக்கு வெற்றி.

இதுவரை ஸ்கிப் பண்ணாம வாசிச்சவங்களுக்கு தலை சுத்தல் வரவே இல்லைன்னு துண்டையோ துப்பட்டாவையோப் போட்டுத் தாண்டுங்க பார்க்கலாம்!!

ராமாயணத்தை மட்டுமே தெரிஞ்சு வச்சுக்கிட்டவங்களுக்கு மகாபாரதம் நடந்த சமாச்சாரம் எப்படி தெரியவந்துச்சுன்னு என் விசாரம். இந்த பாரோங் நடனம் பத்தாம் நூற்றாண்டு பழசாம்.  BARONG &KRIS  DANCE..  Pemogan  Village.

பாலியில் பார்க்க வேண்டியமுக்கியமான  நடனம்  இந்த பாரோங்தான்னு  பலமுறை 'அழுத்திச் சொன்ன ந்யோமேனை நம்பினதால் வந்த வினைன்னும் வச்சுக்கலாம். காலையில்  நாம வண்டிக்குச் சொல்லி வச்சோம் பாருங்க அப்பவே  இந்த நடனம் ஒருமணி நேரம்தான். அதுவும் தினம்  மார்னிங் ஒரு ஷோ மட்டும்தான் நடக்கும். பார்த்துட்டுப்போறீங்களான்னு ஆவலைக் கிளப்பி விட்டுருந்தார்.  இதுலே நீங்க இப்போ பார்த்த  கீச்சக்கைவிட ரொம்பநல்லா இருக்குமுன்னு சர்ட்டிஃபிகேட் வேற.

நாங்களும் இன்னிக்குப் பொழுது விடிஞ்சதும் பீச் பார்க்கப்போகலை. எல்லாம் நேத்துக் காலையில் பார்த்த மாதிரி அதே கடல் தானேன்னு சுணக்கம். இன்னிக்கு இந்த ஊரில் இருந்து கிளம்பறோம் வேற. அதனால் காலையில் கடமைகளை முடிச்சுப் பொட்டிகளைக் கட்டி வச்சுட்டு கீழே ரெஸ்ட்டாரண்டில் காலை உணவுக்குப் போனோம். நல்ல கூட்டம்.  பொதுவா 'டே ட்ரிப்' போகும் மக்கள்ஸ்க்கான பஸ்கள் எட்டரைக்கு பிக்கப்.  அதுக்குள்ளே  சாப்பிட்டுக் கிளம்பணுமுன்னு அவசரம் எல்லோருக்கும். சாப்பாட்டை முடிச்சு ரெடியானவங்க கூட்டம் வரவேற்பில் காத்திருக்கு.

ந்யோமேனும் ரெடியா இருந்தார். நடனம் போய் பார்த்துட்டுத் திரும்பி இங்கே வந்து  அறையைக் காலிச் செஞ்சுக்கிட்டுப் போறோமுன்னு நிகழ்ச்சி நிரல் சொன்னேன். (இப்ப இன்னொருதடவை படியேறி இறங்க முடியாது.  கொஞ்ச நேரம் போகட்டும்)


பாரோங் நடனம் நடக்கும் இடத்துக்கு  ஒரு இருவது நிமிச  ட்ரைவ்தான். கோபால் வேற  லட்சம் லட்சமா செலவு பண்ணி  காசெல்லாம் தீர்ந்து போச்சு. இன்னும் கொஞ்சம் காசு மாத்திக்கணுமுன்னு  சொன்னார். முந்தாநாள் ஏர்ப்போர்ட்லே மாத்துனது கிட்டத்தட்ட எல்லாம் காலி. இதுலே ஒன்னு பாருங்க..... ஏர்ப்போர்ட்லே நல்லா ஏமாத்தறாங்க இந்த மணி சேஞ் மகாத்மாக்கள். அங்கே நூறு டாலர் நோட்டுக்கு ஒரு தொகை, மற்ற சில்லறை நோட்டுகளுக்கு  இன்னும் குறைஞ்ச தொகைன்னு  நம்ம தலையிலே மிளகாய் அரைக்கறாங்கன்னு  ஒரு ரெண்டு மணி நேரத்துலேயே தெரிஞ்சு போச்சு:(

விமானநிலையத்துலே இருந்து ஹொட்டேலுக்கு வந்துட்டு அப்புறம் சாப்பிட இடம் தேடி நடந்தோம் பாருங்க, அப்ப கண்ணில் பட்டுச்சு  இன்னொரு  மணி சேஞ்ச்  இடம்.  ஒரு யூ எஸ் டாலருக்கு  9750 ரூபாயாம்.  நூறுன்னு இல்லாம எல்லா நோட்டுக்கும்  ஒரே மாதிரி.  அடப்பாவிகளா...  நம்மகிட்டே  ஒரு லட்சத்துக்கு ஆட்டையைப் போட்டுட்டாங்களேன்னு .....

இந்தத் தெரு  ஒன்வே என்பதால் திரும்பி ஹொட்டேலுக்கு வரும்போது மறக்காம  இங்கேயே காசு மாத்தணுமுன்னு  மூளையில் முடிச்சுப்போட்டு வச்சேன்.

நடனம் நடக்கும் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.  டிக்கெட்டு ஆளுக்கு  ஒரு லட்சம்  ரூபாய். கார்பார்க்  ஃப்ரீதான். கோவில் வாசலில்  காலை பூஜைக்கான பிரசாதம்(கோலம்) வச்சுருந்தாங்க. கோவில் என்பதால் சில தட்டுகள்  கூடுதலா  இருக்கு போல!  கோலமுன்னதும் நினைவுக்கு  வருது இன்னொன்னு. பல இடங்களில் தரை அலங்காரமா  கோலத்துக்குப் பதிலா டிஸைன்போட்டு வச்சுருக்காங்க.  காங்க்ரீட்லேயே சின்னச்சின்ன வண்ணக் கற்கள் (ஆரஞ்சு, கருப்பு, வெள்ளை) பதிச்சுருக்காங்க. நம்ம ஸ்டிக்கர்  கோலத்துக்கு இது பெட்டர் இல்லையோ!




வாசலில்  பாலி நடன உடை அணிஞ்ச பெண் கைகூப்பி நமஸ்கரிச்சு நம்ம டிக்கெட்டை  சரி பார்த்துட்டு நடனம் பற்றிய குறிப்பு ஒன்னும் (ஆங்கிலம்) கொடுத்தாங்க. நிகழ்ச்சியை படம் எடுக்க அனுமதி உண்டான்னா  'உண்டு. நீங்க உள்ளே போய்க் கோவிலைக் கூடப்போய்ப் பார்க்கலாம்' என்றும் சொன்னாங்க.

கோவில் வாசலுக்கு முன்  ஒரு பெரிய மேடை. கல்வச்சுக் கட்டுனது.  ரெண்டு பக்கமும் இடைவெளிவிட்டு   கூரை போட்ட பெரிய திண்ணைகள்.  மேடைக்கு முன்னே ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு  இன்னொரு பெரிய  மேடை அதே உயரத்தில்.  அங்கே வரிசையா நாற்காலிகள் போட்டு வச்சுருந்தாங்க.

முன் வரிசையில்  உக்கார்ந்தோம்.  நமக்கு நேர் எதிரா  கோவில் . வழக்கம்போல் மூடிய கதவு.வாசலில் த்வாரபாலகர்கள். வலப்பக்கத் திண்ணையில் ம்யூஸிக் பார்ட்டி. மிருதங்கம் ஜால்ரா, ஜலதரங்கம் மாதிரி  ஒலிக்கும்  மரக்கட்டை  இசைக்கருவின்னு ஒரு பத்துப்பேர். இடப்பக்கத் திண்ணை காலியாத்தான் இருந்துச்சு. சரியா ஒன்பதே காலுக்கு நிகழ்ச்சிஆரம்பம் ஆச்சு.  சிங்கம்புலி ( அவுங்க கொடுத்த குறிப்பில் புலின்னு போட்டுருந்தாலும்  சடைசடையான முடிகளோடு சிங்கம் போலத்தான் இருக்கு அந்த மிருகம்!)  வந்து கொஞ்ச நேரம் ஆடிட்டுப் போச்சு.

எனக்கு  சீனர்களின்  சிங்க நடனம் ரொம்பப் பிடிக்குமென்பதால் இதை(யும்) வெகுவாகவே ரசிச்சேன். மிருகத்தின் முன்கால்களுக்கும் பின் கால்களுக்கும் (!!) நல்ல கோ ஆர்டிநேஷன் இல்லைன்னா டான்ஸ் பணால்!  அடுத்த சீனில் குரங்கு வந்து ஆடுனார். அப்புறம் சிங்கம்புலி வந்ததும் ரெண்டு பேருமா ஆடிட்டுக் கொஞ்ச நேரம் உக்கார்ந்து பேசுனாங்க.


மற்ற  கதையெல்லாம் நீங்க இந்த இடுகையின் முதல் பகுதியில் வாசிச்ச(??) மாதிரியேதான்.தலையும் புரியலை வாலும் புரியலை என்பதே நிஜம். பார்வையாளர் கூட்டத்திலே  நாங்க எல்லோருமே பயங்கர சைலன்ஸ். யாருக்காவது எதாவது புரிஞ்சால்தானே? இசைகுழுவின் ஜல்ஜல் சப்தம்தான் ஓங்கி ஒலிச்சுக்கிட்டு இருந்துச்சு.


நடனம் முடிஞ்சதுன்னு  வாசலில் நின்ன பாலிப் பொண்ணு வந்து மைக் பிடிச்சுச் சொன்னதும்தான் (அப்பாடா)  எல்லோரும் கை தட்டினோம்:-) நல்லவேளை ஆங்கிலத்தில்  சொன்னாங்க. இல்லைன்னா......


கோவிலைப் பார்க்கப் போனால்  மூடிய கதவுக்கு முன் படிகளில் சிங்கம்புலி உக்கார்ந்து ஃபோட்டோவுக்குப் போஸ் கொடுக்குது.  வாயில் கொஞ்சம் ரூபா நோட்டை திணிச்சுட்டு பக்கத்தில் நின்னு படம் எடுத்துக்கலாம்.


 சாமி எங்கேன்னு கேட்டதுக்கு ஒரு மரஸ்டேண்டில்  இருக்குன்னு காமிச்சாங்க. கும்பிடும் க்ளிக்கும் முடிச்சுக்கிட்டுக் கிளம்பினோம்.

இந்த பாரோங் நடனம் பாலி முழுசும் வெவ்வேற ஊர்களில்  நடக்குது. ஆனால் வெவ்வேற கதை(!) இருக்காம்.  ஹீரோ மட்டும் எப்பவும் பாரோங். வில்லன்ஸ்  சொல்லும் கதைகளும் கேரக்டரும் மட்டும் வேற!

கோவிலின் காம்பவுண்டு கட்டைச்சுவர்தான் நடன மேடைக்கு க்ரீன் ரூம். அங்கிருந்துதான் நடிகர்கள் என்ட்ரி.திறந்த வெளி என்பதால் நல்ல வெளிச்சம். பேக்ட்ராப்பில் சுள்ளுன்னு சூர்யரஸ்மிகள். படங்கள் எல்லாம் அவ்ளோ நல்லா வரலை. போகட்டும்....

சிட்டி வழியா வரும்போது இன்னொரு இடத்தில்  காசு மாத்திக்கலாமுன்னு ந்யோமேன்  வண்டி நிறுத்தினார்.  சொன்னா நம்ப மாட்டீங்க.....  ஒன்னு,நூறுன்னு பாகுபாடில்லாமல் எல்லா நோட்டுகளுக்கும்  டாலருக்கு 10200  ரூபா!!!

'ஆல் சீஸன்ஸ்'க்கு வந்து கணக்கை முடிச்சுட்டுப் பொட்டிகளை எடுத்துக்கிட்டுப் புள்ளையாருக்கு ஒரு கும்பிடும் போட்டுக்   கிளம்பினப்ப மணி சரியா 11.11.


தொடரும்.........:-)






35 comments:

said...

இப்போது இணையத்தில் எந்த பக்கம் பார்த்தாலும் சாதி, சாதி மறுப்பாளர்கள், சாதி வெறுப்பாளர்கள் என்று ரவுண்டு கட்டி மங்காத்தா ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் பேசாமல் உங்க பதிவு பக்கம் வந்து படங்களை பார்த்து விட்டு அன்றாட வேலைகளை தொடங்கினால் போதும் போல.

said...

நீங்கள் புரியாமல் கஷ்டப்பட்டிருக்கலாம்
எங்களுக்கு நீங்கள் சொன்னது மிகத்
தெளிவாகப் புரிந்தது
படங்களுடன் பதிவு மிக மிக அருமை
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

said...

அருமையான படங்களுடன் விளக்கமும் அருமை...

நன்றி... வாழ்த்துக்கள்...

said...

படம் போட்டு வெளக்கினதில் நல்லாவே புரிஞ்சுச்சு துள்சிக்கா..

said...

படங்களும், விளாக்கமும் அருமை

said...

அருமையான பயணம்..

சிறப்பான படங்கள்..

பாராட்டுக்கள்..

said...

கெட்டவங்க எல்லோரும் காலி. நல்லவனுக்கு வெற்றி.//

கதை அருமை. படங்கள் வெகு அழகு.
உங்கள் கதை சொல்லும் திறமைக்கு பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
நாங்களும் உங்களுடன் இலவசமாக பாலி நடனத்தைப் பார்த்து விட்டோம்.

said...

டீச்சர்

ஒங்க அத்தனை படங்களில் இருந்து ஒன்னு மட்டும் நல்லாத் தெரிஞ்சிக்கிட்டேன்;

பாலியில், எல்லாச் சிலைக்கும் (அது சாமியோ, துவார பாலகரோ).. ஒரு துணி சுத்தி இருக்கு! No god is naked:)

பாருங்க, ரெண்டு சிங்கச் சிலைகளுக்குக் கூடத் துணி சுத்தியிருக்கு:)

//நடனம் முடிஞ்சதுன்னு வாசலில் நின்ன பாலிப் பொண்ணு//

This girl is so beautiful:)
Bali...you are beauty!

said...

//நம்ம ஸ்டிக்கர் கோலத்துக்கு இது பெட்டர் இல்லையோ//

Yep, I hate sticker kolams!

ஒன்னு இயற்கையா போட்டு இருக்கணும்;
இல்லை, பெயிண்ட் வரைஞ்சாச்சும் இருக்கலாம்!
ஆனா, ஸ்டிக்கர் -ன்னு, ஒட்டியும் ஒட்டாம, ஓரமெல்லாம் சுருங்கி, பாதி கிழிந்து, கோலம்->அல்+அங்+கோலம் ஆகி இருப்பதைப் பார்த்தாலே வேதனை:(
-----

கிராமத்தில், அம்மா போடும் கோலத்தை, முட்டிக்கால் போட்டுக்கிட்டு, அருகில் இருந்து பார்க்கும் சுகமே சுகம்!
அந்தக் கை வளைவுகள் சுத்திச் சுத்தி வரும்; ஆனா ரெண்டே நிமிடத்தில், ஒரு மாயமான அழகு உருவாயீரும்!

கோலம் எனக்கு ரொம்பப் புடிக்கும்!
நானே போடுவேன்:)

ஆனா 11 புள்ளி வரைக்கும் தான் வரும்; அதுக்கே அம்மா திட்டுவாங்க - "என்னடா பொம்பள புள்ளையாட்டம்":)

ஈர மாவு, பவுடர் மாவு ரெண்டிலும் போடுவேன்!
ஈர மாவு தான் ரொம்பப் பிடிக்கும்; அதச் சுத்திச் செம்மண் அழகே அழகு!

ரங்கோலி -ன்னு பல வண்ணங்களை ஊத்தி ஊத்தி இறைப்பதற்குப் பதிலாக..
ஓரிரு வண்ணங்கள் மட்டுமே கலந்த, வெண்மையான புள்ளிக் கோலங்கள் அழகே அழகு!

அதைச் சுற்றிலும் பூ வச்சிப் பார்ப்பது இன்னும் அழகு!

said...

நாங்க, கிராமத்தில் இருந்து சின்னப் புள்ளையா, சென்னை வந்தாலும்,
அப்போ சென்னையின் ஒண்டித் தெருக்களில் புடிச்ச ஒரே அம்சம் = கோலம் மட்டுமே!

"முறவாசல்" -ன்னு...
தெருவுக்கு முன்னாடி, பெருக்கி, தண்ணி தெளிச்சி, கோலம் போட - ஒரு வேலையாளை வச்சிருப்பாங்க;

ஓ இதுக்கெல்லாம் கூட வேலையாளா? -ன்னு அப்போ நினைச்சி இருக்கேன்;
ஆனா, இப்பல்லாம், சென்னையில் இந்தப் பழக்கம் போயே போயிருச்சி:(

May be only in some bungalows & big houses, it still exists?
-----

கிராமத்தில் இருக்கும் போது,பண்டிகை நாளில் மட்டும்...
நானும் கோலம் போடுவேன்; will add my own style!:)

மத்த பசங்க கேலி பண்ணுவாங்க-ன்னு, கருக்கல்-லயே எழுந்து, யாருக்கும் தெரியாம போட்டுறது வழக்கம்!
தூங்கிட்டேன்னாலும், no problem! சாமி அறையில் மட்டும் போடுவேன்;

பூசையறை நடு வீட்டில் மட்டும் அம்மா விட மாட்டாங்க; அவங்களே போடுவாங்க;
மத்தபடி, விளக்குக்கு எதிர்த்தாப்புல, மொத்த இடமும் என்னோடது தான்:)

மயில் கோலம் தான் ரொம்பப் புடிக்கும்; (ஜோடி மயில்)
அந்த ஜோடிக்கு நடுவுல நானா வேல் வரைஞ்சி வைப்பேன்!

அம்மா திட்டுவாங்க; நடக்கும் போது வேல் காலில் படுமாம்!

அப்போ மயில் மட்டும் படலாமா? "வேலும் மயிலும் துணை" -ன்னு தானே காலண்டரில் போட்டிருக்கு?-ன்னு அப்பவே லாஜிக் பேசுவேனாம்:))

will add my own style!
மயில் கோலத்தில், பெருமாளின் சங்கு சக்கரம் வரைவேன்:)
கோலத்தின் நடுவில் முருகனையே கூட வரைஞ்சி வச்சிருக்கேன்;

கால் படுமே, கால் படுமே-ன்னு அம்மா முனகலுக்காக கொஞ்சமா adjust பண்ணிக்குவேன்;
பாவம் Murugan Guy; I gave u lotsa trouble da! Sorry naa?:) love u darling:)

said...

//ஏர்ப்போர்ட்லே நல்லா ஏமாத்தறாங்க இந்த மணி சேஞ் மகாத்மாக்கள்.
அங்கே நூறு டாலர் நோட்டுக்கு ஒரு தொகை,
மற்ற சில்லறை நோட்டுகளுக்கு இன்னும் குறைஞ்ச தொகைன்னு//

டீச்சர்,
இது சிங்கப்பூரிலேயே இருக்கு! Both in airport as well as Mustafa!
இன்னும், மலேசியா KL புது ராயாவில் மிகப் பிரசித்தம்:)

100$ நோட்டுக்களுக்கு ஒரு மதிப்பு!
20$ நோட்டுக்களுக்கு ஒரு மதிப்பு!

பாவிங்களா, நியுயார்க்கில் எல்லா ATM மெஷினும் 20$ நோட்டாத் தான் கக்குது!
சிங்கை போகணும்-ன்னா, ஆள் உள்ள வங்கிக்கே சென்று 100-100ஆ மாத்திக்கிட்டாத் தான் உண்டு!

said...

துளசி மஹாபாரதமும் ராமாயணமும் சேர்ந்து ஒரு கதையா. எனக்குக் குழப்பமே. குரங்கார் அழகாகவே இருக்கிறார். கடைசிப் பிள்ளையார் வெகு பளிச்.சிங்கம்புலி நாடுன்னு பாலிக்குப் பெயர் வைக்கலாம். படங்கள் வெகு அழகு.

said...

படங்கள் எல்லாம் தெளிவாக இருந்தாலும் அந்த வாசலில் நின்று வரவேற்கும் பெண் அழகு!

கோவில்களின் அமைப்பு தாய்லாந்தை நினைவூட்டுகிறது. அங்கும் தெருவெல்லாம் ‘ராமா’ என்று தான் பெயரைக்கொண்டிருக்கும். இந்த மாதிரி நிகழ்ச்சிகள் அங்கும் உண்டு. உங்களை மாதிரி பொறுமை தான் எனக்கில்லை. பாதியிலேயே எழுந்து வந்து விட்டேன்!

சென்ற பதிவில் விபரமாக பூகம்பத்தைப்பற்றி பதில் சொன்னதற்கு அன்பு நன்றி துளசி! இங்கும் அவ்வப்போது ஆட்டம் காணுவதுண்டு பக்கத்திலிருக்கும் இரானில் அவ்வப்போது வரும் நில நடுக்கங்களால்! இருந்தாலும் இந்தோனேஷியா, ஈரான் தான் இவ்வகை அதிர்வுகள் அதிகமாக இருக்கும் இடங்கள்! அதனால் தான் கேட்டேன்!

said...

வாரே வாவ்வ்வ்வ்வ். தலை சுத்தல் வரலை துள்சிம்மா. புதிய வகை ஆட்டம் பாத்த மயக்கமுல்ல அது.

said...

ஆஹா...... ரெண்டு லட்சமா குடுத்து பாத்தீஹ. அப்போ ரொம்ப காஸ்ட்லியான பதிவு இது :)

said...

இங்கே தில்லியிலும் மணி எக்ஸ்சேஞ் செய்யுமிடத்தில் பல தில்லுமுல்லு.... ரொம்ப விசாரிச்சு பார்த்து தான் மாற்றணும்....

படங்களும் விளக்கங்களும் நன்று. ரசித்தேன்.

said...

வாங்க ஜோதிஜி.


அநியாயம் நடக்கும்போது தட்டிக்கேக்க நாலு ஆள் இருப்பது நல்லதுதானே?

சாதீயை ஒழிக்க முதல் எதிரியே அரசியல் வியாதி இல்லையோ?

ஓட்டு ஓட்டு...வேறென்ன:(

said...

வாங்க ரமணி.

அங்கே கொடுத்த குறிப்புகளை மட்டும் பார்த்திருந்தால் அம்புட்டுதான்:-)

நோ தலை நோ வால்.

காகிதத்திலும் நேரிலும் கண்டதால் ஓரளவு கதை உண்டாக்க முடிஞ்சது:-))))

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

விம் போட்டு வெளக்க வேண்டியதாப் போச்சுப்பா:-))))

said...

வாங்க ராஜி.

ரசனைக்கு நன்றிகள்ப்பா!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ரசனைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றீஸ்.

said...

வாங்க கோமதி அரசு.

நமக்கும் புரிதல் இருக்குன்னு பின்னே எப்படி காண்பிக்கிறது:-))))

கூடவே வருவதற்கு நன்றீஸ்.

said...

//கூட்டத்திலே நாங்க எல்லோருமே பயங்கர சைலன்ஸ். யாருக்காவது எதாவது புரிஞ்சால்தானே //,
:D , நானும் கூட படிக்கும்போது என்னடா புரியலியே ன்னு யோசிச்சுட்டே படிச்சா ... பரவால்ல துளசிக்குமே அப்டிதான்னு ஒரு சமாதானம் . நல்ல விவரமா இயல்பா எழுதினதால ஸ்ரமமில்லாம படிச்சேன் .

அருமையான style of explaining details . simple and elegant. and added to that Narrative pictures thank you !!!

said...

வாங்க கே ஆர் எஸ்.

நந்தி கூட வேட்டியோடத்தான் இருக்கார்.

எனக்கும் கோலம் ரொம்பப்பிடிக்கும்.

ஊர் ஊராப்போய் படிச்சுக்கிட்டு இருந்தப்ப ஒரு ஊரில் எங்க வகுப்பு மாணவிகளுக்கு ஒரே பொழுதுபோக்கு கோலம் போடுவதுதான். அதுவும் பாட நோட் புக்கில்.

எந்தப்படத்துக்கான நோட்புக்கை கடைசிப்பக்கத்தில் திருப்பினாலும் கோலமே!

எல்லா டீச்சர்ஸிடமும் திட்டு வாங்கியும் உடம்புலே உறைக்கவே இல்லை:-)

எங்கவீட்டுலே நாந்தான் கோல எக்ஸ்பெர்ட். சின்ன வயசுலே வாசலை அடைச்சுக்கோலம் போடணுமுன்னா அக்காக்கள் என்னத்தான் கெஞ்சி கொஞ்சி எழுப்புவாங்க. வாசலுக்குப்போனால் ஜம்முன்னு சாணி தெளிச்சு இடம் நீட்டா எனக்காகக் காத்திருக்கும்! ஹூம்....

போனவருசம்கூட இங்கே நியூஸியில் நம்மூர் தீவாளிக் கொண்டாட்டத்துக்கு நான் ஒரு கோலம் ஒர்க்‌ஷாப் நடத்துனேனே...பார்க்கலையா?

http://thulasidhalam.blogspot.co.nz/2012/10/blog-post_24.html

http://thulasidhalam.blogspot.co.nz/2012/10/blog-post_30.html

said...

கே ஆர் எஸ்,

இங்கேயும் 20$தான் ஏ டி எம்மில். ஆனால் சில மாசங்களுக்கு முன் 50 கொடுக்க ஆரம்பிச்சது. இப்ப மறுபடி $20.

said...

வாங்க வல்லி.

நமக்கு அவுங்க மொழி தெரியாததால் அவுங்க எந்தக் கதையைக் கலந்து அடிச்சாலும் பே பே தான்:-))))

said...

வாங்க மனோ.

அந்தப்பொண்ணு உண்மையிலேயே க்ரீடம் எல்லாம் வச்சு அழகா இருந்ததை நானும் ரசித்தேன்.

பாங்காக்கில் எரவான் கோவிலில் நடனம் பார்த்தீங்களா? நேர்த்திக்கடன்!!!

எங்கூரைத் திரும்பக் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க. புது சிட்டி கிடைக்கப்போகுது!

said...

வாங்க கவிதாயினி.

எண்ணி நாலே நாளில் கோடிக்கும் அதிகமால்லெ செலவாகிருச்சு!!!!

இதே தாராளத்தை சென்னையில் காமிப்பாரா கோபால்?

தலை சுத்தினாலும் விடமாட்டொம்லெ:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வரவர தில்லு முல்லு எதில்தான் இல்லை?

said...

வாங்க சசி கலா.

புரிதலுக்கு டாங்கீஸ்ப்பா:-)))

said...

படங்களுடன் அருமையாக நீண்டதொரு பகிர்வு....


வாழ்த்துக்கள்.

said...

பாரோங் நீண்டசடையுடன் அழகாகவே இருக்கின்றது.

said...

வாங்க குமார்.

வருகைக்கு நன்றி.

சம்பவம் இழுத்துக் கொண்டே போவதால் பதிவும் நீண்டு கொண்டே போயிருது!

துளசிதளத்தின் பலமும் பலவீனமும் இதுதான்:-)

said...

வாங்க மாதேவி.

பேசாம பின்னி விடலாமான்னுகூடத் தோணுச்சுப்பா:-)))