Monday, July 08, 2013

சிட்டி சிட்டி (நோ) பேங் பேங் ( City City No bang bang )

வருசக் கெடு, மாசக் கெடு, வாரக்கெடுன்னு எல்லாம் போய்  நாள் கெடு அறிவிப்பு வந்துருச்சு.  'ஜூன் மாசம் 28 தேதிக்கு ஊர்மக்களுக்கு நகரத்தை முற்றிலும் திறந்து விடப்போறோம்'  எங்க எல்லோருக்கும் மனசுலே ஒரு மகிழ்ச்சி. கடந்த ஆறு மாசமா ஒவ்வொரு தெருவா  திறந்து விட்டுக்கிட்டுத் தானிருந்தாங்க.   இடிஞ்சவைகளைச்  சீர்ப்படுத்தி  இன்ன தெரு இன்று முதல் திறந்துவிடப்படுமுன்னு  நாளிதழிலும்  எங்கூரு தொலைக்காட்சியிலும் சேதி வர்றதும் (பொதுவா இது  ஒரு வெள்ளிக் கிழமையாத்தான் இருக்கும்.) வார இறுதியை வீணாக்காம ஊர் மக்கள் சோம்பல் கொஞ்சமும் இல்லாம 'என்ன ஆச்சு ? இப்போ எப்படி இருக்கு'ன்னு பதறிப் போய்ப் பார்ப்பதுமாத்தான் நாட்கள் கடந்து போகுது.

குளிரோ,மழையோ எப்பப் போனாலும்  நகர இடிபாடுகளை பார்க்கும்  மக்கள்  நடமாட்டம் உண்டு. இப்பெல்லாம் சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்க்கன்னே வர்றாங்க.


காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளணும்!

இதுக்கு நடுவிலே புது ஊரை நிர்மாணிக்கும் ஏற்பாடுகளில் சிட்டிக்கவுன்ஸில் தீவிரமா இயங்குது. ஊர் மக்களிடம்  இனி வரப்போகும் ஊர் எப்படி இருக்கணுமுன்னு எதிர்பார்க்கறீங்க? ன்னு ஆயிரத்தெட்டுக் கருத்துக் கணிப்பெல்லாம் நடத்துச்சு. நம்ம யோசனைகளைச் சொல்ல  வெப்ஸைட் ஒன்னு  வச்சு ஆன்லைனில் வசதி ஏற்படுத்திக் கொடுத்துச்சு. Rebuild Christchurch. கணினி இல்லாதவர்கள் என்ன செய்வாங்களோன்னு  ஊரில்   இடியாமல்  இருக்கும்  மொத்த வீடுகளுக்கும்  தபால் மூலமா  சேதி அனுப்பி பதில் சொல்லுங்கோன்னு வேண்டிக்கிட்டு,  அதுக்கான  படிவங்களையும்  நாம் பூர்த்தி செஞ்சு  திருப்பி அவுங்களுக்கு அனுப்புவதற்கான கடித உறைகளும் சேர்த்தே கொடுத்துச்சு.  நாம் தபால் செலவு கூட செய்ய வேணாம்.  ஃப்ரீ போஸ்ட்தான்.


மக்கள் சொன்ன விஷயங்கள் நடைமுறைக்கு ஒத்துவருமான்னு நிபுணர் குழுக்களைக்கொண்டு விவாதிச்சு ஒரு முடிவுக்கு வந்துருக்காங்க. ப்ளான்  என்னன்னு பேட்டைகள்  தோறும் ரோட்ஷோ நடத்தி எல்லாருக்கும் எல்லாத்தையும் அறிவிச்சாச்சு.

ஊர்மக்கள் என்றால் பெரியவங்க மட்டும்தானா?  சின்ன மனிதர்களையும் கலந்து ஆலோசிக்க வேணாமா?  எல்லா ஆரம்பப்பள்ளிகளும் இதில் ஜோராய் கலந்துக்கிட்டாங்க. அஞ்சு வயசு மனுசரின் கண்ணோட்டத்தில் நகரம் என்றால் எப்படி இருக்கணும் என்பதைத் தெரிஞ்சுக்கிட்டதும் எனக்கு வியப்புதான்! முக்கியமா  வெற்றிடங்களாக  விடப்போவதில்  பிள்ளைகளுக்கான  விளையாட்டுப்பூங்கா வச்சுக்கலாம் என்பதாக  ஒரு எண்ணம்.  அது எப்படி இருக்கணுமுன்னு  புள்ளைங்களைத்தானே கேக்கணும். அதுதான்:-)

யானை வச்சுக்கலாமுன்னு கூட  யோசனை சொல்லி இருக்கு ஒரு பிஞ்சு:-)

ரெண்டு மாசத்துக்கு   முன்  எங்கூர்  CBS Arena ( இப்போதைக்கு  எல்லா  சம்மேளனங்களுக்கும்  இதைவிட்டால் வேறிடம் இல்லையாக்கும்)வில்  ஒரு    Rebuild and Recovery Expo  ரெண்டு நாள் நடத்துனதும் போய் வந்தோம்.  அங்கேதான் புள்ளைங்க ஐடியாக்களை ரசித்தேன். (வெளயாட்டுப் புள்ளீங்கப்பா!)

அரசுத்துறை, தனியார் துறை, காப்பீடு நிறுவனங்கள், வீடு கட்டிக்கொடுக்கும் நிறுவனங்கள்,  வீடுகளுக்கான நிலத்தை  ஒழுங்குபடுத்தி  புதுப்பேட்டைகளை நிறுவ முயற்சிக்கும் ரியல் எஸ்ட்டேட் கம்பெனிகள்,  இவை எல்லாம்  சம்பந்தப்பட்ட நிபுணர்கள், கம்யூனிட்டி  குழுக்கள்,  புது வீட்டுக்கு இனி அரசு போடும்  கட்டிட அனுமதிகளின்  விளக்கங்கள்,  இப்படி ஏகப்பட்ட  சமாச்சாரங்களை  சம்பந்தப்பட்டவர்களிடம் நேருக்கு நேர் பார்த்து  விவாதிச்சு விவரம் தெரிஞ்சுக்கும் வகையில் இந்த ஏற்பாடு.  நாளைக்கு எதாச்சும் ஒன்னுன்னா 'எங்கிட்டே கேக்கவே இல்லை. எனக்கொன்னுமே தெரியாது'ன்னு  நாம் சொல்லித் தப்பிக்கவே முடியாது!
ஊர் அலங்காரத்தில் ஒன்னு.  

விளக்கப்படங்கள்  வீடியோ ஷோக்கள் நிபுணர்களிடம் கேள்வி நேரம் என்றெல்லாம் அமர்க்களப்பட்டுச்சு.  அனுமதி இலவசம்தான். ஊர் சனங்களைக் கட்டாயம் வாங்கன்னு  கூவுனதும் இல்லாம பேட்டைக்குப்பேட்டை  இலவச பஸ் ஏற்பாடு செஞ்சு ஒரே அட்டகாசாம்தான் போங்க. சின்னப்புள்ளைகளுக்குப் போரடிக்காம இருக்க  விளையாட்டு,பலூன், முட்டாய் , ஜூஸ் இப்படின்னா பெரியவங்களுக்கு காஃபி, டீ. கேக் பிஸ்கெட்டுன்னு ஒரு பக்கம்.

வீடுகளை எப்படி சரியான  உஷ்ணநிலையில் வச்சுக்கறது,  சுற்றுச்சூழல் பாதிக்காம செயல்படுவது, சமூகத்தில் குற்றங்கள் பெருகாம இருக்க என்ன செய்யணும், காவல்துறை உங்களுக்கு என்னென்ன உதவிகள் செய்யுது,  நம்மை நாம் ஆரோக்கியமா வச்சுக்கறது எப்படி?  குளிர்கால  ஃப்ளூ அட்டாக்கிலிருந்து  தப்பிக்க  என்ன முன்னேற்பாடு, இனி  வரும் நிலநடுக்கத்தை சமாளிப்பது எப்படி? என்னென்ன சப்போர்ட் க்ரூப் இருக்கு  இப்படி பலவிதமான ஸ்டால்கள்.

தயவு செஞ்சு பேருந்தில் பயணம் செய்யுங்களேன்னு  மெட்ரோ  பஸ் சர்வீஸ் கெஞ்சுது. உங்க வீட்டாண்டை எங்கே பஸ் ஸ்டாப், என்னென்ன நேரத்துக்கு எந்தந்த பஸ் வரும்னு சொல்லக்கூட ஒரு ஸ்டால் போட்டுருந்தாங்க. பஸ் கம்பெனிகள் நட்டத்துலே ஓடுதே.  பலசமயங்களில்  ட்ரைவர் மட்டுமே பஸ்ஸில் இருப்பார். பாவம் !  பயமா இருக்காதா அவருக்கு?

கிராம வாழ்க்கை இனிதா இருக்குமேன்னா  வில்லேஜ்  ஸ்டைலில்  உருவாகப்போகும் குடியிருப்புகள் அவற்றிற்கான நிலம் இப்படி கவர்ச்சிகரமான அம்சங்கள் நிறையவே இருந்துச்சு. ஆனா...தாறுமாறான விலை.

இப்போ நகரத்தில்  இடிபாடுகளை அகற்றினதும் 'இங்கே முந்தி என்ன மாதிரி கட்டிடம் இருந்துச்சுன்னு நினைவுக்கு வரலையே'ன்னு இருக்கும் என்னைப் போன்றவர்களுக்காக ஒரு ஸ்டால் சூப்பர்! வரப்போகும் கட்டிடங்கள் எப்படி எப்படி இருக்குமுன்னுதான் காமிச்சுக்கிட்டு இருந்தாங்க. பத்தே வருசம்தானாம்! புது ஊர்!

அதுலே  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு இடிஞ்சு விழுந்து  மறைஞ்சு போன கட்டிடங்கள் சிகப்பு வண்ணம் என்று சொன்னதும் பார்த்தால்..... மனசில் சுளீர்ன்னு ஒரு வலி. ஐயோ.... இத்தனையா? அப்பத்தான் அங்கே இருந்த பொறுப்பாளரிடம் முந்தி இங்கே என்ன இருந்துச்சுன்னு நினைவு இல்லைன்னதும்  மகராஜன் ஒரு   க்ளிக்குலே பழைய ஊரைக்கொண்டு வந்துட்டார்.  இது .....  இது......  இதைத்தான் நான் தேடிக்கிட்டே இருந்தேன்.  ஆனால் கூகுள் எர்த்தில் தேடணுமுன்னு தோணலையே:(



சரி...என்னமோ சொல்ல ஆரம்பிச்சு எங்கியோ போயிட்டேன். இப்பத்து நிலவரத்துக்கு வரலாம்.  போனவார வீக் எண்ட் நகரம் எப்படி இருக்குன்னு  போய்ப் பார்க்கப் போனா.....  சரியான மழையும் குளிருமா...... இதுலே என்னன்னு இறங்கி நடந்துபோய்ப் பார்ப்பது? அப்படியும்  குடையோடு மக்கள் நடமாட்டம்  இருந்துச்சுதான்.


இந்த வீக் எண்ட் நல்ல வெயில். 18டிகிரி!   குளிர்காலத்துக் கிடையில்  இப்படி ஒரு வெயில் நாள் கிடைப்பது ரொம்பவே அபூர்வம். விடறதில்லைன்னு  கிளம்பிப்போனோம்.  டெமாலிஷன் ட்ரக்குகளின் எண்ணிக்கையும்,  கிரேன்களின் எண்ணிக்கையும்   குறைஞ்சே போச்சு. Bang Bang ன்னு தலையிடி உண்டாக்கும்  மெஷீன்களின் சப்தம்  காணோம்.  அங்கங்கே ஒன்னு ரெண்டு க்ரேன்கள்தான் ஓசைப்படாமல் நின்னுக்கிட்டு இருக்கு. கட்டிடங்களுக்குள்ளே மட்டும்  சின்ன கேட் மெஷீன்கள் ரொம்பவே க்யூட்டா 360 டிகிரி சுத்திச் சுத்தி  வேலை செய்யுது




நகரச் சதுக்கத்துக்குப்போகும் வழி திறந்தாச்சு.  வழியெங்கும் இருக்கும் கம்பி ஃபென்ஸில் புதுசா கலைகள்  பரிணமிச்சு இருக்கு.  யாரோ வேலைமெனெக்கட உக்கார்ந்து யோசிச்சதின் பலன்.  நகரத்தை அப்படியே போட்டு வைக்காமக் கொஞ்சம் அழகுபடுத்தணுமுன்னு தோணி இருக்கு பாருங்க. சாலைகளில் கார் போகலாம்  என்றாலும் பல இடங்கள் நடந்து போய்ப் பார்க்கும் அளவில்தான் இருக்கு.



நகர சதுக்கத்தின் நடுவிலே இடிஞ்சு போய் நிற்கும் தேவாலயம் வழக்கம் போலவே கண்ணில் நீரை வரவழைச்சது உண்மை. ஆங்கிலிக்கன் சர்ச்சோட சொந்தமான (தனியார்) இடம் என்பதால்  நாம் ஒன்னும் கேட்டுக்கமுடியாது. அப்படியும் சர்ச்சைக் காப்பாத்தப் போராடிப் பார்த்துட்டோம். ஓட்டுக்கு விட்டதில் கூடுதலா  ஒரு சதவீத மக்கள்  இதை எடுத்துட்டு புதுசு ஒன்னு  பயன்பாட்டுக்குத் தகுந்தமாதிரி கட்டலாமுன்னுட்டாங்க.  பழமை மாறாமல் அப்படியே திரும்பக் கட்டணும் என்ற எங்க கோரிக்கை தோல்வி. 51ம்  49மா :(


தேவாலயத்துக்கு முன்னால் இருக்கும் சதுக்கம் சிட்டிக்கவுன்ஸிலுக்குச் சொந்தம். அப்டீன்னா நம்மது!  அங்கே  எதாவது நடந்தால்தானே சிட்டிக்குள்ளே மனுச நடமாட்டம் இருக்கும்.  சிட்டிக்கவுன்ஸில் ஏற்பாட்டில் பாட்டுக்கச்சேரி.  கோவிலின் அவலம் சட்ன்னு  கண்ணில் படாமல் இருக்க ஒரு  பலகை மறைப்பு. அதில்  அலங்கார டிஸைன்கள், பளிச்சுன்னு  கண்களை ஈர்க்கும் வண்ணங்களில். சதுக்கத்தின் சரித்திரத்தை அங்கங்கே தெரிவிக்கும் அம்சம். ஆற  அமர இருந்து ரசிக்க இருக்கைகள்.


அவலம் அவலமுன்னு சொன்னாலும்  அதையும் எட்டிப்பார்க்க ஏங்கும் கண்களுக்காக  அங்கங்கே  சின்ன இடைவெளியாக கம்பி போட்ட கதவுகள். . அதில் கெமெரா புகுந்து பார்க்க  கம்பி இல்லாத ஜன்னல்கள்.


எங்கூர் வார்மெமோரியல்தான்  தேவாலய வரம்புக்குள் மாட்டிக்கிச்சு:( 1937 இல் கட்டுனது. முதலாம் உலகப்போர் நினைவுச்சின்னம்.   பழுது ஒன்னும் இல்லாம இன்னும் நல்லா ஸ்ட்ராங்காத்தான் இருக்குன்னாலும் இருக்கும் இடம்  சரியில்லையே!

மனசுக்குப் புத்துணர்ச்சி அளிக்க   உசுருள்ள  கூரை அமைப்பு.  நடுவில் நுழைஞ்சு போய் கோவில் பக்கம் பார்த்துக்கலாம்.  கூரைகளில் பூக்கள் அரும்ப ஆரம்பிச்சு இருக்கு.  சின்னச்சின்னப் பூச்செடிகள். அவைகளுக்கு  மெல்லிசான குழாயில் தண்ணீர் சப்ளைன்னு  அருமையோ அருமை!



குழந்தையும் (நாய்க்) குட்டியுமா  மக்கள்ஸ் கூட்டம் அதிகமாவே இருந்துச்சு.

இடைவெளிகளை நிரப்பன்னு  ( http://www.gapfiller.org.nz/)  இன்னொரு ஐடியா  ஜரூரா நடக்குது. அங்கங்கே இருக்கும் இடைவெளிகள் மொட்டையா விரிச்சோன்னு கிடக்கே!  அந்த இடங்களுக்குச் சொந்தமானவர்கள் அங்கே என்ன கட்டலாமுன்னு முடிவுக்கு வரும்வரை சும்மாக் கிடக்கும் இடத்தை கம்யூனிட்டிக்குத் தேவையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் நிரப்பி வைக்கலாமேன்னுதான்.


ஒரு இடத்தில்  அரை ஃபுட்பால்  கோர்ட்கூடப்போட்டு வச்சுருக்காங்க.  சீர்செய்யும் பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு  இடைக்கிடை கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஒரு காமணி வந்து  ஆடிட்டுப் புத்துணர்ச்சியுடன்  வேலையைப் பார்க்கலாமேன்னு!  இப்படியே சின்னதா கோல்ஃப் செயற்கை புல் வெளியில்.

PALLET PAVILION என்ற பெயரில் பெல்லட்ஸ் அடுக்குமாடி  சுற்றிலும்  கட்டி நடுவில்  இருக்கும் இடத்தில்   பகலில் பிக்னிக், மார்க்கெட்  டே,  மாலையில் லைவ் ம்யூஸிக்,  டான்ஸ்ன்னு   எங்க கோடை முடியும்வரை  கொஞ்சநாள் நடந்துச்சு. நமக்கு விருப்பம் என்றல் நம் பெயர் எழுதி பல்லட்  தானம் செய்யலாம். (நம்மூர் கோவிலுக்கு ட்யூப் லைட்  உபயம் செய்வது போல்!!!)


The Arcades Project ன்னு அலங்கார வளைவுகள், இடிஞ்ச கட்டிடத்தில் இருந்து  கிடைச்ச மரக்கட்டைகளை வச்சு.




விக்டோரியா சதுக்கத்துக்கு  வழி கிடைச்சுருச்சு.  இப்போ நடந்து போய்ப் பார்க்கலாம். ரெண்டரை வருசமா அதை வெளியே இருந்துகூட பார்க்க முடியாமல் இருந்துச்சு. செடிகள் வளர்ந்து சின்னக்காடாக இருந்ததை சீர் படுத்தி இருக்காங்க. நடந்து முடிஞ்ச அவலத்துக்கு மௌன சாட்சி மஹாராணி விக்டோரியாவும் நியூஸியைக் கண்டறிஞ்ச கேப்டன்  'ஜேம்ஸ் குக்' கும்தான்.


கல்பாவிய சதுக்கத்தைச் சுத்தம் செஞ்சு  புதுசா பூச்செடிகளை நட்டு வச்சுருக்காங்க. பரந்த காலி இடம் கிடைச்சா அதை எப்படிப் பயன்படுத்திக்கணுமுன்னு  பசங்களுக்குத் தெரிஞ்சுருது.  ஸ்கேட் போர்டுகளுடன்  ஆஜராகிடறாங்க.

கனத்த மனசோடுதான் திரும்பினேன். வெறும் நாற்பதே விநாடிகளில் ஊரே அழிஞ்சு போச்சே!!!

'கவலைப்படாதே..... நமக்கு  ப்ராண்ட் ந்யூ சிட்டி கிடைக்கப் போகுது 'என்றார் கோபால்.

" மாடர்ன் சிட்டி கிடைக்கும். ஆனால் ............  க்ளாஸிக் சிட்டி காணாமப் போயிருச்சே:( "



30 comments:

said...

நெகிழவைக்கிற நினைவுகள். பார்த்துப் பார்த்து ரசித்த இடங்களை இயற்கையின் சீற்றத்துக்கு பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் மனத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு தகவலையும் நுணுக்கமாகத் தந்து அசத்துகிறீர்கள். நன்றி டீச்சர்.

said...

அருமையான படங்களும் விவரங்களும். ரசித்தேன்.

said...

படங்களும் தகவல்களும் அருமை... முக்கியமாக பயன் தரும் ஸ்டால்கள்...

said...

நாற்பது வயதில் தன் விருப்பங்களை விட தான் சார்ந்திருக்கும் குடும்ப உறவுகளுக்கு சரியானவனாக இல்லாத போது அந்த வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறிவிடுகின்றது. இதுவே சம்பாரிப்பதே முதல் கடமை என்கிற ரீதியில் நம்மை கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது.

அதைத்தவிர வேறொன்றை பேசுவதும் நினைப்பதும் வேலையத்த வெட்டி வேலை என்று அடையாளம் காட்டப்படுகின்றது.

இது இந்திய சூழல் மட்டுமல்ல. வளரும் நாடுகளில் போராடித்தான் தங்கள் இடத்தை வைத்துக் கொள்ள முடியும் என்கிற நிலையில் வாழ்பவர்கள் அத்தனை பேர்களுக்கும் வாழ்க்கை என்பது சுற்றியுள்ள ரசனைகளை ரசிப்பதற்கல்ல. பிழைத்திருப்பதற்கு மட்டுமே..

இங்கே கோடுகளை நாம் கிழிப்பதில்லை. மற்றவர்களால் கிழிக்கப்பட்டு நாம் அதற்குள் சிக்கிக் கொள்ள வேண்டியவர்களாக மாறிப் போகின்றோம். இந்த சமயத்தில் தான் நம்முடைய அத்தனை விருப்பங்களும் அடிபட்டு அடைய முடியாத கனவுகளை அடை காக்கும் கோழி போல வாழ்கின்றோம். இந்தியாவில் வேலைகேத்தத படிப்பில்லை. படிப்பிற்கேற்ற வேலையும் கிடைப்பதில்லை. இந்த நிலையில் தான் பிழைப்புக்காக ஒரு துறையில் நுழைந்து நுகத்தடி பூட்டப்பட்ட மாடு போல மாறி விடுகின்றோம்.

பல சமயம் உங்கள் எழுத்து கொடுத்து வரும் தாக்கம் அதிகமானது. உங்களை அறியாமல் சில வரிகளில் எழுதி விட்டு நகர்ந்து விடுறீங்க. இந்த பதிவில் கூட குழந்தைகளிடம் எதிர்கால நகரம் எப்படி இருக்க வேண்டும்? என்று கேட்கும் ஒரு குழுவினர் இருக்கின்றார்கள் என்பதை படிக்கும் போது பொறாமைப்படுவதா? ஆச்சரியப்படுவதா? என்றே தெரியவில்லை.

ரசிப்பதற்கென்ற இந்த உலகத்தை இயற்கையை படைத்த காட்சியோவியங்களை நாம் கண்டு கொள்ள முடியாமல் ஒவ்வொரு நாளையும் வாழ்ந்தே ஆக வேண்டிய என் சூழலையும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்கின்றேன்.

இங்கே பணம் இருப்பவர்களுக்குக்கூட இந்த எண்ணம் வருவது இல்லை என்பது தான் நான் பார்க்கும் ஆச்சரியமான விசயம்.

இதற்குப் பின்னால் ஏதும் உளவியல் காரணங்கள் உண்டா? அதைப்பற்றி எழுதுங்களேன்.

said...

நெகிழ வைத்த தகவல்கள்.

படங்கள் அனைத்தும் அருமை. அதுவும் ஊர் அலங்காரங்களில் ஒண்ணு படம் அசத்தல்!

said...

படங்களும் வர்ணனையும் அழகு...!

said...

கேட் மிஷின்-னா என்னங்க? கலர் கலராக கட்டங்களாக கம்பி சட்டத்தின்மேல் இருப்பவை என்ன?

said...

//மாடர்ன் சிட்டி கிடைக்கும். ஆனால் ............ க்ளாஸிக் சிட்டி காணாமப் போயிருச்சே:( "//

படிக்கும் போது என் மனசுல இதே எண்ணம் தான் ....
எவ்ளோ வேதனை , பாரம் தரும் இந்த இடிபாடுகளை பார்க்கும்போது .... இதை என்னனு tourists பாக்க வர்றது ....
எனக்கு ஒன்னுமே புரியலை . ஆனா , புத்தம் புதுசா எல்லா தரப்பினருக்கும் பிடிச்ச ஊரா மாறிடும் முக்கியமா குழந்தைகளுக்கு !!!! . அது ஒன்னு ஆறுதல் தான்

said...

வெள்ளிக்கிழமை இன்று வெற்றித் திருநாளா :)

///யானை வச்சுக்கலாமுன்னு கூட யோசனை சொல்லி இருக்கு ஒரு பிஞ்சு:-) //// ஹி ஹி ஹி நம்ம கேஸு :)

///கனத்த மனசோடுதான் திரும்பினேன். வெறும் நாற்பதே விநாடிகளில் ஊரே அழிஞ்சு போச்சே!!! /// :((((

said...

அற்புதமான திட்டங்கள்.மீண்டு வருவது சுலபமில்லை துளசி.
நுணுக்கமாகத் திட்டமிட்டு படிப்படியாக முன்னேற்றம் அடையட்டும். இயற்கையைச் சொல்லியோ நொந்தோ என்ன நடக்கப் போகீறது.


குழந்தைகளைக் கேட்டிருப்பதுதான் அழகு. அவர்கள்தானே எதிர்காலம். அற்புதமான படங்கள். உங்கள் அழகான ஊரைப் பார்த்ததில் மிக மகிழ்ச்சி.
மௌனமாக நிற்கும் விக்டோரியா மஹாராணியையும் கேப் டன் குக்'ஐயும் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

said...

பழைய இடங்களும் பழைய நினைவுகளும் எப்படி மறக்க முடியும்?
உங்கள் வருத்தம் புரிகிறது.
ஒவ்வொரு உணர்வும் மனதை தொடுகிறது.

said...

தொங்கும் தோட்டம் நல்லாருக்கு.

புதுசு வந்தாலும் அந்த இடத்தில் ஏற்கனவே இருந்த பழசை நினைச்சுப் பார்க்காம இருக்க முடியுமா..

said...

அனைத்துபடங்களும் பகிர்வும் அருமை

said...

நெகிழ வைத்த நினைவலைகள். படங்கள் எல்லாமே அருமை. விரைவில் மீண்டு மலர்ந்து வரட்டும்.

said...

பார்க்கும்போது மனதுக்கு உறுத்தலாகத்தான் இருக்கின்றது.

தொங்கும் தோட்டம் நன்றாக இருக்கின்றது. இதே ஆரேஞ் பூ எங்கள் வீட்டிலும் மலர்ந்திருக்கின்றது செயற்கை.:))

said...

வாங்க கீதமஞ்சரி.

நினைவுகளில்தான் வாழ்க்கை என்பது நிரூபணமாகிருச்சு பாருங்க:(

வருகைக்கு நன்றி.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அதுலே இருந்து நாம் எதாவது தெரிஞ்சு பயன் அடைஞ்சோமா என்பதுதான் முக்கியம் இல்லீங்களா?

said...

வாங்க ஜோதிஜி.

எதிர்காலம் எப்போதும் குழந்தைகளுக்கானது இல்லையோ? அதான் எல்லாவற்றிலும் முன்னுரிமை அவர்களுக்கே!

வரும் சந்ததிகளுக்கு, நாம் நாட்டைப் பாழாக்காமல் விட்டு வைக்கணும் இல்லையா?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அந்த ஊர் அலங்காரம் புடவை சுத்துன மரமாக்கும்!!!

ஒன்பது கஜம் எல்லாம் இங்கே ஜூஜுபி.அதெல்லாம் கட்டிவுட்டுருவோமுல்லெ!!!

நல்ல கற்பனை. நானும் வெகுவாக ரசித்தேன்.

said...

வாங்க நாஞ்சில் மனோ.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க சரவணன்.

இந்த வகை இயந்திரங்கள் கட்டுமானம், சுரங்க வேலைகள் எல்லாவற்றுக்கும் அதிகமாகப்பயன்படுதே! சின்ன இடம் என்றாலும் சிரமமில்லாமல் இதை வச்சு வேலை செஞ்சுக்கலாம்.

உங்களுக்காக ஒரு படம் கூடுதலாக பதிவில் இப்போ சேர்த்துருக்கேன்.

அந்த ப்ளாஸ்டிக் சமாச்சாரம் ஃபென்ஸ் தடுப்பில் இருக்கும் சதுரக்கட்டத்துக்கு ஏதுவான அளவில் தனியா செய்யறாங்க. சரியாக் க்ளிக்காகி அசையாமல் உக்கார்ந்துக்குது.

பல நிறங்களில் செஞ்சு அவைகளை அடுக்கி டிஸைன் செய்வது இப்போ ஃபென்ஸ் ஆர்ட் வகையில் வருது. நியூஸி ஆர்ட்டிஸ்டுகளின் கண்டுபிடிப்பு!

said...

வாங்க சசிகலா.

அழிவு கூட ஒரு ஆச்சரியம்தான்.

நாங்க இத்தாலி போனப்ப பொம்பேய் என்ற ஊர் (எரிமலை பொங்கி அழிஞ்சு போன இடம்) போய்ப் பார்த்தோம்.

பெரிய டூரிஸ்ட் அட்ராக்‌ஷன் அது.

மனிதர்கள், விலங்குகள் எல்லாம் எரிமலைக் குழம்பு மூடி கற்சிலையாகக் கிடக்குறாங்க. அதில் ஒரு கர்ப்பிணிப் பெண் கூட:(

said...

வாங்க கவிதாயினி.

இந்தக்காலத்து மக்களுக்கு, 'அந்தக் காலத்துலே'ன்னு இப்போதையப் பிஞ்சுகளுக்குச் சொல்லுபடி எல்லாம் நடந்து போச்சுப்பா:(

நேத்து இருந்துச்சு இன்னைக்கு இல்லே!!!!

said...

வாங்க வல்லி.

நியூஸியில் பிரிட்டிஷ் மக்கள் கால் வச்சு இடம் பிடிச்சது விக்டோரியா மஹாராணியின் ஆட்சி காலம் என்பதால் அவுங்களுக்கு இங்கே விசேஷ மவுஸ்!!!

மனசை தேத்திக்கிட்டு 'நடப்பவைகளை இனி நல்லதாக இருக்கணும்' என்ற நினைப்புடன்தான் எங்கள் வாழ்க்கை.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க ரஞ்ஜனி.

புரிதலுக்கு நன்றிகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

அதே அதே...நினைப்புதான் பிழைப்பே!!!

said...

வாங்க ஜலீலா.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

நம்பிக்கையோடுதான் இருக்கோம். அதுதானே வாழ்க்கை!

நன்றிப்பா.

said...

வாங்க மாதேவி.

இயற்கையோ செயற்கையோ...பூக்களே ஒரு அழகுதானே!!!

வருகைக்கும் புரிதலுக்கும் நன்றிகள்.