Wednesday, July 17, 2013

யானை வரும் 'பின்னே!' (பாலி பயணத்தொடர் 14 )


கண்ணைத் திறந்ததும்  கதவைத் திறந்தால்..... பச்சைப்பசேலுன்னு  நெல்வயல்!  களை பிடுங்கவோ நாத்து நடவோ செஞ்சால்கூடத் தேவலை!  கெமெராவில் அடக்கிட்டு கடமைகள்  முடிச்சு, யானைபூனை மோதிரங்களும் யானை பெண்டன்ட்டுமா சிம்பிளா அலங்காரம்(!!)   ஆனதும் ,ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போனோம்.  சன்ரைஸ் ரெஸ்ட்டாரண்ட். செண்டானாவைச் சேர்ந்ததுதான். அறை வாடகையில் காலை உணவு சேர்த்தி.



ரொம்பத் தெரியாத ஊரில் காலை உணவுடன் கூடிய அறைகள்  கிடைச்சால்  உத்தமம். அலையவேணாம் பாருங்க. ரெஸ்ட்டாரண்ட் நம்ம  அறைக்குப்பக்கமே இருந்துச்சு.  அழகான பூச்செடிகளும் மரங்களும், சிற்பங்களுமா  லொகேஷன் சூப்பர்.  புள்ளையார் எல்லா மூலைகளிலும் இருக்கார். ஒரு மூலையில் மட்டும் ஹனுமன்:-)





ரெஸ்ட்டாரண்டுக்கு  முன்னால் இன்னொரு நீச்சல் குளம். கண்ணுக்குக் குளுமையா இருக்கட்டுமுன்னு ......




காலைப் பூஜைக்குன்னே  ஆள் வச்சுருக்காங்க போல. ஒருபெண் தலையில் சுமந்த பெரிய தட்டில் இருந்து  பூஜைக்கான நைவேத்தியமா  குருத்தோலையில் பின்னிய தட்டு பிரசாதத்தை ஒவ்வொரு சாமிச்சிலைகள் முன்னும் வச்சுட்டு  ஊதுபத்தி கொளுத்தி, கீழே விழுந்து கும்பிட்டுக்கிட்டே போனாங்க.

இந்த தினப்படி  சாமி உபச்சாரத்துக்கு Canang sari ன்னு பெயர்.   இந்தப் பெயருக்கு 'அழகிய குறிக்கோளின் சாரம்'  என்று பொருள் வருது. பொதுவா இவுங்க  சாமியையும் சமயத்தையும் சாப்பாட்டையும் சேர்த்து குழப்பிக்கறதில்லை.  பூஜை சமாச்சாரத்துலே  கருவாடும் உண்டு. இந்தப் பூஜைத்தட்டுலே பூக்களை அடுக்குவதுகூட  இதுக்குன்னு உள்ள ஒரு முறைப்படிதான்.

பூக்கள்  எந்த சாமிக்கு என்ன நிறம், எந்த திசையைப் பார்த்து அடுக்கணும் என்றெல்லாம் முறைப்படுத்தி இருக்காங்க. மும்மூர்த்திகள் என்று பொதுவாச் சொன்னாலும் நாலு சாமிகள் இருக்கு.  ஈஸ்வரனுக்கு  வெள்ளைப்பூ கிழக்கு பார்த்து,  பிரம்மாவுக்கு சிகப்பு பூ தெற்கே பார்த்து, விஷ்ணுவுக்கு  பச்சை  இல்லேன்னா நீலப்பூ  வடக்கு பார்த்து, மஹாதேவனுக்கு  மஞ்சள் பூ  மேற்கு பார்த்துன்னு  வைக்கணுமாம்.


சிவனுக்கு எலுமிச்சை இலை, விஷ்ணுவுக்கு வெத்திலை பிரம்மனுக்கு புகையிலை ன்னும்  தட்டுலே வைப்பார்களாம்.  தினம் வீட்டு வாசலில் கட்டாயம்  வைக்கணுமுன்னு நியதி உண்டு. கடவுளுக்கு நன்றி சொல்லி  எல்லாம் சமாதானமா  இருக்கணும் என்று வேண்டுதல் செய்யறாங்க. வீட்டுலே துக்கம் சாவு நடந்துட்டா அன்னிக்கு  வாசலில்  கனாங்  சாரி  வைக்கமாட்டாங்க. (அப்ப இது நம்ம கோலம் மாதிரிதான்!)  நாம் விசேஷ நாளிலே பெருசாக் கோலம் போடுவது போல இவுங்க ஒரு நல்லநாள் கிழமைன்னால்  ரெண்டு மூணு தட்டு கூடுதலா வைப்பதுடன்  அதுலே காசும் வைப்பாங்களாம். இதுக்குன்னே  அச்சடிச்ச நோட்டுகளும் காசுகளும் கிடைக்குதாமே!


என்ன ஜூஸ் வேணுமுன்னு கேட்டு  ஃப்ரெஷாப் பண்ணித் தர்றாங்க. மத்தபடி  பஃபே  வகை.  உள்ளுர் சமாச்சாரமா  பூரி போல ஒன்னு  கிடைச்சது.  அப்பம்! வெள்ளையர்களுக்கான  வகைகள் அதிகமா இருக்கு.  வெஜிடேரியன்  வகைகளை விசாரிச்சுக் கேட்டுக்கிட்டேன்.  காஃபி ரெண்டு பெரிய ஜக்கில் வந்துச்சு. ஆளுக்கு  ஒன்னாம்!!!! சூடான பால் வேணுமுன்னு  சொல்லி  வாங்கினேன்.


வண்டி வர்ற நேரமாச்சு. கிளம்பலாமுன்னா,  ஒன்பதுக்கு வரச் சொன்னாராம். ஹொட்டேலுக்கு  வெளியே போய்  கடைவீதியை நோட்டம் விட்டால்  அப்பதான் ஒன்னுரெண்டு கடைகளைத் திறந்துக்கிட்டு இருக்காங்க. நேரெதிரா ஒரு கலைப்பொருட்கள் கடை.  நேத்து பாரோங் டான்ஸ்லே பார்த்த, பாரோங்கின் முகமூடிகள்  வச்சுருக்காங்க.  மரம், உலோகம், துணிப்பொம்மைன்னு நிறைய இருக்கு. அதுலே ஒரு மும்முகம் உள்ள நான்முகன் கண்ணில் பட்டார்.  அவுங்க சொன்ன விலையை ரெண்டால் வகுத்தேன். கடை ஓனர் இன்னும் வரலை. கேட்டுட்டுச் சொல்ரேன்னு விற்பனையாளர் சொன்னதும் கேட்டு வையுங்க. சாயங்காலம் வர்றேன்னுட்டு  அங்கே இங்கேன்னு அஞ்சு நிமிசம் வேடிக்கை பார்த்துட்டு ஹொட்டேலுக்கு வந்தோம்.



நேரெதிரா கலைவாணி.  அந்தப்பக்கம் ஒரு  நீரூற்று.


வரவேற்பில் ஒரு புடைப்புச் சிற்பம்.  பஞ்சபாண்டவரும் கிருஷ்ணரும்  தேரோட்டி சஞ்சயனும் என்று  நினைச்சுக்கிட்டு அதையே கோபாலுக்கும் சொன்னேன்:-) வரவேற்பில்  காத்திருந்தப்ப ரெண்டு சின்னப்பெண்கள் உக்கார்ந்துருந்தாங்க.  பள்ளிக்கூடம் போறாங்க போலன்னு பேச்சுக் கொடுத்தேன்.  'ஒன்பது மணி' ன்னு  சொல்றாங்களே தவிர வேறொன்னும் சொல்லத் தெரியலை. மொழி தெரியலைன்னா முழி பிதுங்கிருது இல்லே?  பேர் கேட்டேன்.  காடெக், டேவிடா  (Kadek ,  Dewita)

பாலி மக்கள் மொழியில்  பிள்ளைகளுக்குப் பெயர் வைக்க ரொம்பக் கஷ்டப்படறதில்லை  போல.  காடெக் என்றால் ரெண்டாவது குழந்தை!  முதல் நாலு குழந்தைகளுக்கு சுருக்கமா பெயர் வரிசை இருக்கு.  முதல் குழந்தைன்னா  வயான் இல்லைன்னா புட்டு,  ரெண்டாவதுக்கு காடெக் இல்லைன்னா மேடி, மூணாவது ந்யோமேன் இல்லைன்னா  கொமங், நாலாவதுன்னா  கெடூட்.

அஞ்சு ஆறுன்னு பொறந்தா?  நோ ஒர்ரீஸ்!  அஞ்சுக்கு சின்ன வயான் . ஆறுக்கு  சின்ன  மேடி இப்படி 'சின்ன' வைச் சேர்த்துக்கிட்டால் ஆச்சு!  இதெல்லாம் இல்லாம நாலு வர்ணத்தாருக்குன்னு  தனித்தனிப் பெயர்களும் இருக்கு.




இதுக்குள்ளே நமக்கான வண்டி வந்துருச்சு. புத்ரா  என்பவர் வந்துருந்தார்.  I Gusti Putra. இந்த குஸ்டி என்பது க்ஷத்ரியர்களுக்கான பெயராம். நாப்பத்தி முணு நிமிசம் 28 கிலோ மீட்டர் தூரம். வழியெல்லாம் சின்னச் சின்ன கிராமங்கள் நெல் வயல்கள்,  அரிசி, நெல் மூட்டை வியாபாரம், சிறு கடைகள், வீடுகள், வாழை, தெங்கு இப்படி  எல்லாமே  அந்தக் காலக் கேரள கிராமங்களை ஞாபகப்படுத்தியது.  டாரோ  (Taro) என்ற கிராமத்திற்குள் புகுந்ததும் ஒரு கிலோமீட்டரில்    பயணம் முடிஞ்சு  எலிஃபெண்ட் சஃபாரி வாசலில் வந்து இறங்கினோம்.  புள்ளையார்  இருக்கார்.


அஸ்ட்ராலியாக்காரர் ஒருவரால் 1997 இல் ஆரம்பிக்கப்பட்டது.   அஞ்சு  ஏக்கர்  காட்டு நிலம் வாங்கி அதுலே ஆரம்பிச்சார். கைவசம் ஒரே ஒரு ஒற்றை யானை. அதுவும் அனாதை!  சுமித்ரா காடுகளின் ஒரு பகுதி அழிக்கப்பட்டபோது  தன்னந்தனியா   போக்கிடம் இல்லாமல் மாட்டிக்கிட்ட  யானை.  கப்பலில் கொண்டு வந்து இறக்கி இருப்பார் இல்லே?

இவருக்கு நல்ல காலமுன்னே சொல்லலாம்.  மூணு வருசத்தில்  இன்னும் சில யானைகள்.  அவைகளுக்கான  ஏற்பாடுகள் எல்லாம் அட்டகாசமாக இருப்பதைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள்  வர ஆரம்பிச்சாங்க.  2000 வருசம் டிசம்பர் மாசம் இந்தோனேசியா சுற்றுலாத்துறை  அமைச்சர் வந்து திறந்து வச்சுருக்கார்.    இப்போ முப்பத்தியொன்னு  யானைகள்.  அநேகமா எல்லாமே அனாதைகள்தானாம்.  முப்பதா இருந்த எண்ணிக்கை   இந்த மார்ச் 22, 2013   விடியலில்  முப்பத்தியொன்னாச்சு.  பெண் குழந்தை. பெயர் ஃபஜர்.  FAJAR  இந்தோனேசிய மொழியில் விடியற்காலை என்று பொருளாம்.  அட! நம்ம உஷா!!!!



பார்வையாளர்களுக்குப் பலதரத்தில் நுழைவுச்சீட்டு கிடைக்குது.  சும்மா யானைகளைப் பார்த்துட்டு வரணுமுன்னா  ஒரு லட்சத்து தொன்னூறாயிரம். யானைச் சவாரி செய்யணுமுன்னா   அஞ்சு லட்சத்து எம்பத்தியஞ்சாயிரம். பகல் சாப்பாடும் சேர்த்து வேணுமுன்னா  இன்னொரு ரெண்டு லட்சம் கூட.  இதுலே இன்ஸூரன்ஸ் தொகையும் அடக்கம்.  எதாவது  விபத்து ஏற்பட்டால்  .......    ஆஸ்பத்திரி செலவுக்குக் கஷ்டப்பட வேணாம் பாருங்க!

மேற்படி தொகை எல்லாம்  ஒரு ஆளுக்கு.  என்னடா .... லட்சக்கணக்குலே சொல்லிக்கிட்டே இருக்காளேன்னு பயந்துறாதீங்க.  உங்களுக்கு பத்தாயிரம் வாய்ப்பாடு  தெரியுமா?  தெரியலைன்னாலும் பாதகமில்லை. எல்லா லட்சங்களையும்  பத்தாயிரத்தால்  வகுக்கத் தெரிஞ்சால் போதும்:-)


பகல் சாப்பாடு  வேணாமுன்னு முடிவு  செஞ்சு, சீட்டு வாங்கிக்கிட்டு உள்ளே நுழைஞ்சோம்!

தொடரும்.......:-)






18 comments:

said...

அழகிய பூக்களின் படங்கள் உட்பட தகவல்கள், அனைத்து படங்களும் அருமை... இந்த வாய்ப்பாடு தான் மறந்து போச்சி... ஹிஹி... வாழ்த்துக்கள்...

said...

எலிஃபெண்ட் சஃபாரி தகவல்கள் அருமை ..பாராட்டுக்கள்..!

said...

நெல்வயல், பிரசாததட்டு, இடங்கள் என அழகாக இருக்கின்றன.

said...

//யானைபூனை மோதிரங்களும் யானை பெண்டன்ட்டுமா சிம்பிளா அலங்காரம்(!!) // :)) (ஒரு closeup போட்டோ ப்ளீஸ் )
வயல் போட்டோ அருமை உங்கள் கண்களின் வழியே நானும் சந்தோஷித்தேன் ! எல்லா போட்டோக்களும் அழகு.
குருத்தோலை தட்டு , உங்கள் கணவரின் ஜன்னல்போட்டோ ப்ரேம் போட்டோ ,ஒற்றை தென்னை கொண்ட வயல் ,
பாசிபடர்ந்தபிள்ளையாருடன் துளசி எல்லாம் அருமை .

said...

என்னங்க ப்ளாட்பாரத்துலயே மூட்டைங்கள அடுக்கி வச்சிருக்காங்க? நம்ம த.நா கல்ச்சர் அங்கயும் பரவிருச்சி போல? இங்கதான் கடைய ஸ்டோர் ரூம் ஆக்கிட்டு ப்ளாட்பாரத்துல ஜாமான்கள வச்சி வியாபாரம் பண்ணுவாங்கன்னு நினைச்சேன்... ஹூம்... ஒருவேளை கடைகாரர் இங்க வந்து பார்த்துருப்பாரோ என்னமோ?

said...

சுவத்தில் மாட்டி வெச்சுருக்கும் முகமூடிகள் அசத்தல்.நம்மூர் திருஷ்டிப்பொம்மைகள் மாதிரியே இருக்கு.

said...

சட்டம் ஒரு இருட்டறை கேள்விபட்டுருக்கேன். இப்பத்தான் சட்டத்திற்குள் கோபால் அவர்களை பார்க்கின்றேன்.

said...

யானைகள் என்றாலே ஒரு வித அழகு தான்.... அதுவும் இங்கே கூட்டமாக [30+1] இருப்பதால் நன்றாகவே இருக்கும்!

படங்கள் வழக்கம் போல அருமை!

said...

பூக்களின் படங்கள் அருமை,

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

இப்படி வாய்ப்பாட்டை மறந்துட்டீங்களே:-)))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

யானை பெருசுன்னு அதுக்கு மூணு இடுகைகள் ஒதுக்கியாச்சு. அதையும் ஒரு கண் பாருங்க:-)

said...

வாங்க மாதேவி.

நெல்வயல் பார்த்தே கனகாலமாச்சுப்பா.

இங்கே கிடைச்சது!!

said...

வாங்க சசி கலா.

நம்ம முத்திரை மோதிரம்தாங்க அது! முந்தி ஒரு இடுகை போட்ட நினைவு.

சுட்டி கிடைச்சால் அனுப்பறேன்.

யானைப் பெண்டன்ட் பார்க்க இங்கே போகணும் நீங்க
http://thulasidhalam.blogspot.co.nz/2012/06/3.html

படங்களை எல்லாம் ரசிச்சதுக்கு நன்றிகள்.

said...

வாங்க டி பி ஆர் ஜோ!

அதான் கேரள பாணி வீடுகள்னு சொல்லிட்டேனே. எனெக்கென்னமோ அவுங்கதான் ராமாயணக்காலம் முடிஞ்சு இங்கே வந்துட்டாங்களோன்னு ஒரு சம்சயம்.

வரும்போது எல்லா ஸ்டைலையும் தானே கொண்டு வந்துருப்பாங்க.

என்ன ஒன்னு.... டீக்கடைகள் ஏதும் கண்ணில்படலை:(

said...

வாங்க அமைதிச்சாரல்.

அந்த முகமூடிகளில் வாயை அசைக்கலாம்!!!!

மரத்தில் செஞ்சது. வாயை அசைச்சு டக் டக் சப்தம்கூட எழுப்பலாம்.

said...

வாங்க ஜோதிஜி.

கோபாலை சட்டம் போட்டு அடக்கிட்டேன்:-))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்

யானை அழகுக்குச் சொல்லவா வேணும்.

அவுங்களுக்கேன்னு மூணு பதிவுகள் ஒதுக்கியாச்சு:-)

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ரசித்தமைக்கு நன்றீஸ்.