Monday, July 22, 2013

யானை யானை அழகர் யானை (பாலி பயணத்தொடர் 16 )


ஒரு  சுத்து  சுத்தி வந்து தண்ணீரில் இறங்கி  ஓரமாவே வட்டம் போட்டுக் கரைக்கு ஏறி வந்து  ஆட்களை இறக்கி விட்டுக்கிட்டு பயங்கர பிஸியா இருக்குதுகள் நம்மாட்கள்.

நேரம் போவதே தெரியாமல் 'ஆ' ன்னு இருந்தேன்.  மைக்கில் நம்ம பெயரைக் கூப்பிட்டாங்க.  கொம்பனான்னு பார்த்தேன்...ஊஹும்.........   குழந்தை:(  அடப்பாவமே........

முதுகில் கால் வச்சு ஏறி இருக்கையில் உக்காரணும்.  கால் வைக்கும்போது , கணேசா மன்னிச்சுருன்னு மனசுக்குள் சொல்லி  உக்கார்ந்தேன். ஏற்கெனவே இருக்கை ஒரு பக்கமா சரிஞ்சு  இருக்கு.  இதுலே ..... கோபால்  பக்கத்துலே உக்கார்ந்ததும்  பேலன்ஸ் ஆகுமுன்னு பார்த்தால்....  ஊஹூம்........

அதெல்லாம் விழாது. நீங்க சேஃப்டி  பெல்டை போட்டுக்கோங்கன்னார்  மைக் பிடிச்ச மகராசர். இருக்கையின் ரெண்டு கைப்பிடிகளுக்கு நடுவில்  ஒரு பெல்ட்டு.  அதான் இன்ஸூரன்ஸ் இருக்கே!

மெள்ள அடி எடுத்து  வச்சாள் டெய்ஸி. வயசு வெறும் முப்பது. அம்பாரியும் அதுக்கேத்தமாதிரி ஆடுது. மரங்கள் அடர்ந்த தோட்டத்தின்  நடுவிலே யானைப்பாதை ஒன்னு போகுது.  நல்ல பசுமையான காடு.நம்ம டெய்ஸியின் பாகன் பெயர்  ரட்னா. ஹிந்துவாம்!  நாம் இந்தியர் என்பதால்  'யானைச் சவாரி  அங்கே  இதை விட நல்லா இருக்குமே' ன்னார்.  யாருக்குத் தெரியும்?  இதுதான் எங்க  வாழ்க்கையில் முதல் முறை யானை சவாரின்னதும் அவருக்கு வியப்பு!  ஏன் ஏன்னா.... எங்களுக்கு யானை,  சாமின்னு சொல்லி வச்சேன். பொதுவா கோவில்களில் யானை வச்சுருப்போம் என்றேன். பிச்சை எடுக்கப் பழக்கி வச்சுருப்பதைச் சொல்லலை! கப்சுப்.


டெய்ஸிக்கு  வாக்கிங் போரடிக்குது  போல. அங்கங்கே ஸ்டாப் போட்டுக்கிட்டு  கயிறு கட்டின வேலிப்பக்கம் சாய்ஞ்சு  கையில்கிடைக்கும் கிளையை உடைச்சு வாயில் போட்டுக்கறாள்.  பசியோ என்னமோன்னு கேட்டால்..... இவளுக்கு எப்பவும் பசிதான்னு சொல்லிச் சிரிக்கிறார்  ரட்னா.

அவரைக் கிளிக்கினதும் உடனே நம்ம கேமெராக்களை வாங்கி நம்மையும் க்ளிக்கி உதவினார்.


நமக்கு முன்னாலும் பின்னாலுமா  யானைகள் வந்துக்கிட்டே இருக்கு/!  பார்க்குக்கு நல்லவருமானம் என்றாலும்  இத்தனை உயிர்களுக்கு சாப்பாடு போட்டு பராமரிக்கும் செலவும் இருக்கே! மேலும் இங்கே பணி புரிபவர்கள் ஏராளமா இருக்காங்க.

யானைச் சவாரின்னு சொன்னால்..... ஒரு அனுபவத்துக்கும் ஆசைக்கும் ஒருக்கா போகலாமே தவிர  அவ்வளவா  சௌகரியமில்லை. அந்தக் காலத்துலே இளவரசிகளும் அரசர்களும் அம்பாரிமேலே உக்கார்ந்து போனதை நினைச்சு  எவ்ளோ பொறாமைப்பட்டுருக்கேன்......   பாவம்.... அவுங்கெல்லாம்:(

சொல்ல மறந்துட்டேனே.... இவுங்களே  ஒரு  சஃபாரி லாட்ஜ் நடத்தறாங்க. இங்கேயே வந்து தங்கிக்கலாம். காலையில் கண் திறக்கும்போது  யானை தரிசனம் உறுதி!  எனக்கிது தெரியாமப் போச்சு:(  ஒரு நாள் இங்கே வந்துருக்கலாம்....  (மனப்புலம்பலுக்கு  சொல்லிவச்சேன்   நெவர்மைண்ட் நெக்ஸ்ட் டைம்)


பொதுவா அரை மணி நேரம் ஒரு சவாரி. நம்ம டெய்ஸி ஆற அமர நடந்து, இலை ஒடிச்சு,தின்னு இப்படி நிதானம் காட்டுனதில் . முக்காமணி ஆச்சு நமக்கு.   உள்ளே ஒரு  தடுப்புக்கம்பிக்குப் பின்னே தனித்தனியா ரெண்டு யானைகள் ! உடம்பு சரி இல்லையாம். மருந்து கொடுத்து தனியாக் கட்டி வச்சுருக்காங்களாம். ஐயோ பாவம்:(

ரட்னாவுக்கு என்ன தோணுச்சோ.... கோபாலிடம், 'யானை மேலே உக்கார விருப்பமா?'ன்னார். இவரும் ஆர்வத்தோடு  டக்ன்னு இறங்கி  ரத்னா சொன்னபடி ரெண்டு காலையும் கயித்துக்குள் நுழைச்சு  என்னமோ பொறந்தது முதல் யானை சவாரியில் பழக்கம் உள்ளவர்போல்  உக்கார்ந்துக்கிட்டார். (ஒருவேளை என் பக்கம்,  கனமா சரிஞ்சு சரிஞ்சுக்கிட்டு இருந்ததாலா?)
ஆஹா.... ரெண்டு பாப்பான்ஸ்:-) முழு சிம்மாசனமும் எனக்கே!!!

தோட்டப்பாதையில் ஒரு சுத்து  முடிச்சுத் தண்ணீர்க்குளத்தில் இறங்கினாள் டெய்ஸி.  ஓரமாகவே போகும்போது கரையில் நின்னுக்கிட்டு இருந்தவங்க எல்லோரும் கோபாலை ஆச்சரியமாப் பார்க்கறாங்க! யானை மேலே உக்கார்ந்தா எப்படி இருக்கு? அப்படி உக்காரப்பிடிக்குமா? ஆயிரம் கேள்விகள்:-)

டெய்ஸி கொஞ்சம் தண்ணீரை உறிஞ்சி பூமாரி பொழிந்தாள். ரெண்டு பேர் நல்ல கேமெரா வச்சுக்கிட்டு  நம்மை க்ளிக்குறாங்க.  மைக்காரர் என் கேமெராவை  வாங்கிக்கிட்டு க்ளிக்க ஆரம்பிச்சார்.  குளக்கரையில்  ஏகப்பட்ட கூட்டம்.

தலையைத் திருப்பினால்..... குழந்தையும் தாயும் தண்ணீருக்குள்ளே! ஆஹா..... அதானா:-) ஃபஜர்தான் அங்கே சூப்பர் ஸ்டார்! இந்தப் பதிவுவெளியிடும் இன்று குழந்தைக்கு வயசு நாலு மாசம்!

டெய்ஸி நம்மை இறக்கி விட்டதும் ரட்னாவுக்கு நன்றி  சொல்லி அன்பளிப்பு  கொஞ்சம்  கொடுத்தால் டெய்ஸிகிட்டே கொடுத்துருங்கன்னார்!!!!  (போச்சுடா..... இங்கேன்னா அன்பளிப்பு.  இந்தியான்னா பிச்சையா? நல்லா இருக்கே கதை!) அதுவும் சமத்தா வாங்கிக்கிச்சு:-)


நாம் இறங்குனதும் டெய்ஸிக்கு ஆஃப்  ட்யூட்டி:-) அதுக்குள்ளே மைக் காரர் வந்து நம்ம கேமெராவைத் திருப்பிக் கொடுத்துட்டு இன்னும் கொஞ்ச நேரத்துலே எலிஃபெண்ட் ஷோ இருக்கு. போயிறாதீங்கன்னார்.  அட! ஆமாம்லெ! விடமுடியுமா?


பாப்பாவை ரசிச்சுக்கிட்டே நின்னோம்.  அம்மாவை அப்படியே காப்பி அடிக்குது. அம்மாவுக்கு  சிறுதீனியா வாழைக்காய் துண்டுகளைப் பார்வையாளர்கள் கையால் ஊட்டிவிடச் சொல்றாங்க.அதுவும் 'ஆ'ன்னு வாய் திறந்து வாங்கிக்குது. (எனக்கு மும்பை எக்ஸ்ப்ரெஸில் தப்பி ஓடிவந்த பையன்  விவரம் சொல்லிக்கிட்டே 'ஆ'ன்னு வாய் காமிப்பது நினைவுக்கு வந்துச்சு.எனக்கு ரொம்பப்பிடிச்ச ஸீன்)

தவறிப்போய் கீழே விழுந்த காய்த் துண்டுகளை  தும்பிக்கையால் துழாவி எடுக்கும் அம்மாவைப் பார்த்து சின்னதும் தும்பிக்கையை குளக்கரையில் நீட்டி  வச்சது படா தமாஷ்!   'ஐயோடா என் செல்லமே'ன்னு வாரி அணைச்சுக்கத் தோணியது உண்மை.ஃபோட்டோ ஷாப்பை எட்டிப் பார்த்தோம்.  நாலு படம் எடுத்துருக்காங்க. எது வேணுமுன்னு சொன்னால் அதை  A4  அளவில் ப்ரிண்ட் செஞ்சு கொடுப்பாங்களாம்.  மானீட்டரில் காமிச்சதும் எதுன்னு முழிச்சதும்  நாலையும்  சேர்த்து வேணுமாலும்  அதே அளவில்  தரேன்னதும்  அப்படியே போடச்சொல்லி அங்கேயே நாலா கட் பண்ணிக் கொடுக்கச் சொன்னோம். வீட்டுலே ஸ்கேன் பண்ணிண்டால் ஆச்சு. லட்ச ரூபாய் ஆச்சு:-)இதுக்குள்ளே ஷோ டைம் ஆரம்பிக்கப் போகுதுன்ற அறிவிப்பு கேட்டு  இன்னொரு பாதையில் போனோம். சின்னதா ஒரு அரங்கம் மூன்று வீரர்கள் நுழைஞ்சாங்க.  சின்னப்பசங்கதான். ஆனாலும் மூணு வெவ்வேற வயசில்! தலைவர்  எல்லோருக்கும் (தும்பிக்) கை தூக்கி  ஹலோ சொல்லிக்கிட்டே வந்து  கொடிக்கம்பத்தின் கயிற்றை இழுத்துக் கொடி ஏத்துனார்!!
இத்தனாம் பெரிய உடம்போடு சின்ன மரத்தண்டில் உக்கார்ந்தது  பாவமா இருக்கே! அதுவும் பின்பக்கம் பார்த்தால் ........

எலிஃபெண்ட் வாக் ம்யூஸிக் போய்க்கிட்டே இருக்கு.  பெயிண்டிங் செய்வது, ஹூலா ஹூப் சுத்துவது,  பாகனைக் கையில் தூக்கிக்கிட்டு பீம் வாக்கிங், கால்பந்து கோல் போடுவது, பாஸ்கெட் பால்  கோல், 2 + 4 = 6 ன்னு கூட்டல் கணக்கு போடுவது இப்படி எல்லாம் ஆச்சு.படங்களின் தரக்குறைவுக்கு மாப்பு!இந்த பீம் வாக்கிங்தான் எனக்கு ரொம்பப் பயமாப் போச்சு! இதுக்கே சின்னக் குட்டியூண்டு கண்ணு. அதையும் மறைக்கிறது மாதிரி பாகன் சரியா மூக்குமேலே உக்கார்ந்துருக்கார்.  கீழே இருக்கும்  மரத்தண்டு படிகளை எப்படிச் சரியாப்  பார்த்துக் காலை வைக்கப்போகுதோன்னு கொஞ்சம் உதறல்தான் எனக்கு. கரணம் தப்பினால்......  நல்லவேளை! அப்படி ஒன்னும் இல்லாம புள்ளையார் காப்பாத்திக்கிட்டு இருக்கார்.


எல்லாம் ஒரு ஏழரை நிமிச வீடியோவில் இருக்கு பாருங்க.  ஆறையும் ஏழையும் கை மாத்தி மட்டும் வச்சுருந்தாருன்னா  கதை கந்தல்:-))))))))))    தண்ணீர்த் தொட்டி மூடியைத் திறந்து கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு  நம்ம மேலும் தெளிச்சார் ஒருத்தர்.  எல்லாம் ஒரு இருவது நிமிசம் இருக்கும்.


என்ன அறிவுடா செல்லங்களான்னு சொல்லிச் சொல்லி மாய்ஞ்சு போனேன்.  இங்கேயே லஞ்சு முடிச்சுக்கலாமுன்னு  கோபால்  சொல்லிட்டார்.  ரெஸ்ட்டாரண்ட் போனோம். நல்ல பெரிய ஹால்.

ஒரு வெஜிட்டேரியன் பீட்ஸாவும்  இன்னும் அவரவருக்கு வேண்டியதையும்  சொல்லிட்டு அங்கிருந்து குளத்தை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தோம்.  ஒரே விளையாட்டுதான் இதுகள்.  கடமையைச் செய்யும் கூட்டம் ஒன்னு  ! அநேகமா இனி பகல் நேர ஓய்வு  அதுகளுக்குக் கிடைக்கும். லஞ்ச் டைம் ஆகுதே!

சும்மாச் சொல்லக்கூடாது....  சோம்பேறியா இல்லாமல்  ஒவ்வொன்னும் உழைச்சு சாப்பிடுதுகள்.

ம்யூஸியத்துக்குள்ளே  போனோம்.  அழகழகான யானை பொம்மைகள்.  சூப்பரா ஒரு  சுவரில் மாட்டும் ஒரு  வால் பேனல் இருக்கு!  ஹைய்யோ..... எத்தனையெத்தனை!!!!


நீளத் தந்தத்தில் யானைக் கூட்டம் ஒன்னு பிரமாதம்.  சுமத்ராவின் மிகப்பெரிய யானையின் தந்தங்கள்ன்னு  வச்சுருக்காங்க.  பிரமாண்டமான யானை ஒன்னு (Mammoth)  எலும்புக்கூடா  நிக்குது! அது மட்டும் உசுரோட இருந்துருந்தால்..... எப்படி இருக்கும்!!!!


மனசில்லா மனசோடுதான்  கிளம்ப வேண்டியாச்சு.  ச்சும்மா ஒரு பக்கம் உக்காந்து  பசங்களைப் பார்த்துக்கிட்டு இருந்தாலே     போதும்!   யானையும் ரயிலும் கடலும்  அலுக்காத சமாச்சாரம் இல்லையோ?


 தொடரும்............:-)

PIN  குறிப்பு:   ஃபஜர் ஸ்பெஷல்ன்னு தனியா ஒரு படப்பதிவு போடலாமுன்னு  இருக்கேன் . ஓக்கேவா?
40 comments:

said...

அழகான படங்களோட அருமையா விளக்கியிருக்கீங்க.... சூப்பர்...

அது சரி, நாலு போட்டோக்கு லட்ச ரூபாயா?

said...

ஆ ! அத்தனையும் கொள்ளை அழகு. இந்தக் குட்டி யானை மீது இவ்ளோ பெரிய மனுசங்கள ஏத்திக்கிட்டு, ம்ம்ம், பாவம். படங்களும், பதிவும் அருமை..

said...

Mammoth உட்பட அருமையான படங்களுடன் யானைச் சவாரி சூப்பர்...!

said...

ச்சோ ஸ்வீட் ஃபஜர். துள்சிக்கா எங்களுக்கும் கரும்பு தின்னக் கசக்காது. ஃபஜரைக் கூட்டியாங்க :-))

பூமாரி பொழிஞ்சது ஜூப்பர்.

said...

யானை மேல் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் டீச்சர்!:)

அங்கு அவனோடு சென்று ஆங்கு "யானை மேல்"
மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்:)
---

பொன்னியின் செல்வனில் வானதி.. யானை மேல் வருவாள், பாகன் வேடத்தில் இருக்கும் இளவரசரோடு!

அது போல நீங்க ஒய்யாரமா வந்திருக்கீங்க, கோபால் சாரோடு:)

படக் கிடங்கும், உள்ளக் கிடங்கும் மிக்க அழகு!
பாக்கும் போதே, யானை மேல ஏறி உட்காரணும் போல ஆசையா இருக்கு!:)

one small info for gopal sir:
இளவரசர் அருண்மொழியோடு, வானதி மட்டுமல்ல... பூங்குழலியும் யானை மேல உட்கார்ந்துக்கிட்டு வருவா:)) Enjoy Sir:)

said...

அந்தக் காலத்துலே இளவரசிகளும் அரசர்களும் அம்பாரிமேலே உக்கார்ந்து போனதை நினைச்சு எவ்ளோ பொறாமைப்பட்டுருக்கேன்...... பாவம்.... அவுங்கெல்

அசௌகர்யமான திகில் அனுபவம் தான் ..!

said...

யானைச் சவாரி போலவே ஒட்டகச் சவாரி!

அம்மா-அப்பா, ஒரு முறை நியூயார்க் வந்த போது, வேறு சில வித்தியாசமான இடங்களுக்குக் கூட்டிச் சென்றேன்;

கிராமச் சூழலில், கறவை மாடு சூழ வயல்கள்!
துணைக்கு யாருமில்லாம, ஒத்தை ஆளா.. ஒரு இளம் விவசாயத் தம்பதிகள்...

விமானத்தில் விதைப்பு, களையெடுப்பு, Tractor Harvestor அறுவடை -ன்னு பாத்து அம்மா-அப்பா ஆச்சரியப்பட்டாங்க!

இப்பல்லாம் வெள்ளாமை-க்கு ஆளு கிடைக்குறதில்லை -ன்னு சாக்கு சொல்லாம, தமிழ்நாட்டில் இப்படி Machine வச்சியாச்சும், விவசாயத்தை விட்டுறாம பாக்கணும் -ன்னு அப்பா சொல்லிக்கிட்டு இருந்தாரு..

அப்போ, பண்ணையில் அவர்களின் ஒட்டகத்தையும் அறிமுகப் படுத்தினாங்க!
அட, அமெரிக்காவில் ஒட்டகமா? -ன்னு வியந்த போது, வெள்ளாமைக்கு ஒட்டகமும் ரொம்ப உதவியா இருக்கு-ன்னு சொல்ல..
அந்த California University பசங்க மேல ஒரே வியப்பு!

அப்போ அவன், அம்மாவையும்-அப்பாவையும் ஒட்டகச் சவாரி-க்கு வரச் சொன்னான்;

மெள்ள, ஒவ்வொரு இடமாக் கூட்டிச் சென்ற ஒட்டகம்..
திடீர்-ன்னு நீர்நிலை (pond) கண்டதும் ஓட.. அம்மாவைப் பாக்கணுமே:)

பயத்துல கண்ணுல தண்ணியே வந்துருச்சி!
அப்பாவும், அவனும் எவ்ளோ சொல்லியும் கேட்காம இறங்கிட்டாங்க:)

ஒங்க யானை ஒய்யாரத்தைப் பாத்த போது...
அம்மாவின் ஒட்டக ஒய்யாரமும் ஒடனே ஞாபகம் வந்துருச்சி:))

said...

யானை நடந்தா கம்பீர அழகு!
ஓடினா?:)
பலருக்கும் பயம் தான்!

அப்படி ஓடுற யானையிலிருந்து விழுந்துடாம இருக்க, தாங்கு வளை ஒன்னு தொங்கும்! அதுல காலை வச்சிக்கணும்;

ரெண்டு பக்கமும் மணி தொங்குறாப் போலத் தான் நமக்குத் தெரியும்! ஆனா பழக்கப்பட்டவங்களுக்குத் தாங்குவளை தெரியும்! கோபால் சாருக்குத் தெரிஞ்சிருக்கு பாருங்க:)
---

//மும்பை எக்ஸ்ப்ரெஸில் தப்பி ஓடிவந்த பையன் விவரம் சொல்லிக்கிட்டே 'ஆ'ன்னு வாய் காமிப்பது//

சூப்பர் சீன்!:)

said...

//பெயிண்டிங் செய்வது, ஹூலா ஹூப் சுத்துவது, பாகனைக் கையில் தூக்கிக்கிட்டு பீம் வாக்கிங், கால்பந்து கோல் போடுவது, பாஸ்கெட் பால் கோல், 2 + 4 = 6//

அட, ஆபீஸ்லயே நாமெல்லாம் இத்தினி உழைக்கிறோமா என்ன?:)
Great Elephants! அறிவுக் கொழுந்து தான்!

அதிலும் நீரில் விளையாடும் யானைகள், அழகோ அழகு!

வீட்டு விலங்கு அல்லாது, காட்டு விலங்கில் மனிதனுக்கு நெருக்கம் = யானை தான்!
யானை பற்றிச் சங்கத் தமிழ், ஓகோ-ன்னு கொண்டாடும்!

யானை, அதன் உடல் பாகங்களுக்கு -ன்னு தனித்தனிப் பெயர்கள்!

ஆண் = களிறு
பெண் = பிடி
யானைக் குழந்தை = கன்று (குட்டி)

யானை நெற்றி = மத்தகம்
நெற்றியின் புடைப்பு = கும்பம்
யானை முதுகு = மஞ்சு

"ஆது" = யானையைத் தட்டிக் குடுக்கும் சொல்
உவன் = யானைக்குக் குடுக்கப்படும் உணவு உருண்டை

அல்லியன் = காட்டில், தன் குழுவைப் பிரிந்த யானை
குமுதம் = தெற்கு வாசலில் நிறுத்தப்படும் யானை
குமுகி = மற்ற யானைகளை ஆற்றுப்படுத்தும் யானை

இப்பிடி, சங்கத் தமிழில் ஒரே யானை மயம்! :)
--------

அப்பர் பெருமான், இறைவி-இறைவனையே, தம்பதி யானைகளாத் தான் பாடுவாரு!
= காதல் மடப் பிடியோடு களிறு வருவன கண்டேன்! கண்டேன் அவர் திருப் பாதம்!

ஆனா இன்னிக்கி, கோயில்களில், யானையைத் தன்னந் தனியா நிறுத்தி வைக்குறானுங்க!:(
டேய்... அது காதல் மடப் பிடியோடு களிறு! தேவாரப் பதிகம் டா!:(
-----

கடைசியா ஒன்னு...
முருகனுக்கு மயில் மட்டுமே ஊர்தி அல்ல!
மலை ஆடும் ஓர் ஊர்தி! அதை விட, யானை!

யானை வாகன முருகப் பெருமானை = சுவாமி மலையில் காணலாம்!
சன்னிதியில் மயில் சிலை இருக்காது! Only Elephant The Great!:)

said...

சங்கத் தமிழ் யானை பற்றிய சிற்சில குறிப்புகள்
= http://dosa365.wordpress.com/tag/யானை

யானை கிட்டக்கவே இருந்தா ஒரு "மணம்" வரும்:)
(கொட்டிலில் வைக்கோல் புழுத்தது போலொரு நாற்றம்)

அதைப் பத்தி ஒங்க பாகன் ஏதாச்சும் சொன்னாரா?:)
ரத்னா = பார்க்க, Stylish பையன் மாதிரி தான் தெரியறாரு! அவரைத் துதிக்கையில் தூக்கும் போதும்:)

வீடியோவில், ஒங்க குரலும் ஒலிக்குது டீச்சர்! கரிசனம் = "பாத்து இறங்குடா ராஜா":))

இப்பல்லாம், துன்பத்தில் மனச் சாந்திக்கு, துளசி தளம் நெறைய படிக்குறேன் - பழைய பதிவெல்லாம்:)

said...

உசுரோட யானைகள பார்த்துட்டு அந்த எலும்பு கூட பாத்ததும் என்னமோ போல இருந்தது.

ஆனா படங்கள் அனைத்தும் சூப்பர்!

said...

ஆஹா அருமை மேடம், கோபால் சார் யானை ஓட்டுவதும், நீங்கள் ராணி போல உட்கார்ந்து இருப்பதும் சூப்பர் ! அடுத்த வருடம் பாலி செல்கிறேன், இந்த இடத்திற்கு கண்டிப்பாக செல்வேன் ! நன்றி !

said...

I've invited you for a thodar pathivu. Ennulagam vanga:-)


said...

// ச்சும்மா ஒரு பக்கம் உக்காந்து பசங்களைப் பார்த்துக்கிட்டு இருந்தாலே போதும்! யானையும் ரயிலும் கடலும் அலுக்காத சமாச்சாரம் இல்லையோ?//

உண்மை.... எத்தனை நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம்! ஆனால் இருக்கத்தான் முடியவில்லை!

said...

யானை ஷோ உங்கள் வீடியோவில் பார்த்து மகிழ்ந்தேன். அப்படியே உங்கள் குரலையும் கேட்டு மகிழ்ந்தேன்.

யானை சவாரியும் அருமை! நிஜமாகவே கோபால் ஸார் யானை சவாரி செய்யத் தெரிந்தவர் போலத்தான் உட்கார்ந்திருக்கார்.எங்கள் பாராட்டுக்களை அவரிடம் சொல்லுங்கள்.

உங்கள் பதிவுகளைப் படிப்பதுடன், திரு கண்ணபிரான் ரவிசங்கரின் பின்னூட்டம் படிப்பது எங்களுக்கு போனஸ்!

said...

fazar குட்டி பாக்க பாக்க அலுக்கவே மாட்டேங்குது !!! எவ்ளோ அழகு செல்ல குட்டி !!!
தண்ணீரில் யானை சவாரி நம்ம ஊரில் இல்லன்னு தோணுது . முதுமலைல கூட காட்டில் தான் சவாரி . நீரில் போறப்ப எப்டி இருந்தது ? பூமாரி அழகு !! வீடியோ நல்லா இருந்துது அவை pressure இல்லாம திறமைகளை காட்டினாலும் பாவம்னு மனசு கொஞ்சம் கஷ்ட்டப்பட்டது நிஜம் .
fazar exclusive ஆஹா !! waiting ஆவலோடு .

said...

//மனசில்லா மனசோடுதான் கிளம்ப வேண்டியாச்சு. ச்சும்மா ஒரு பக்கம் உக்காந்து பசங்களைப் பார்த்துக்கிட்டு இருந்தாலே போதும்! யானையும் ரயிலும் கடலும் அலுக்காத சமாச்சாரம் இல்லையோ?//

நம்மாளுங்க வந்ததும் கரெக்டா வந்துட்டேன் கமென்ட. :))) ஏற்கெனவே நீங்க அனுப்பின வீடியோவிலே பார்த்து ரசிச்சதோடு இங்கேயும் பார்த்தாச்சு. சசிகலா சொன்னாப்போல முதுமலைக்காட்டில் யானைச் சவாரி உண்டுன்னாலும் தண்ணியிலே கிடையாது தான்.

அந்தச் செல்லக்குட்டியோட தும்பிக்கை எத்தனை சின்னதா அழகா இருக்கு. அதை நீட்டி வாழைக்காயை எடுக்குதாமா? பாவம், அம்மாக்காரி ஊட்டி விடக் கூடாதோ குழந்தைக்கு! சமர்த்தா அழாமல் குளிச்சிருக்கு போல!

எல்லாம் நல்லா இருக்கு. இதை எல்லாம் பார்க்க ஒண்ணு வாங்கி வளக்கலாமோனு கூடத் தோணுது!:))))

லாட்டரியிலே ஒரு பில்லியன் டாலர் விழட்டும் வாங்கிடுவோம்!:)))))))

said...

பதிவு பெரிசா ,கண்ணபிரான் ரவி பின்னூட்டம் பெரிசான்னு பார்க்கப் போகிறேன்.
சூப்பர் சவாரி துளசி. அதுவும் உங்கள் யனை மோகத்துக்கும் இத்தனை யானைகளோட சுத்தினதுக்கும் பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு.

said...

thanks thulasi
it is because of you, KRS gave such an informative comment

said...

வாங்க ஸ்கூல் பையன்.

ரசிப்புக்கு நன்றி.

ஆமாம் ஸ்கூல்(போகும்) பையனா இருந்துக்கிட்டு ஹோம் ஒர்க் ஒன்னும் செய்யலை போல!!!!

இதற்கு முந்திய பதிவுகளைப் பார்த்திருந்தால்.... லட்சத்தின் லக்ஷணம் தெரிஞ்சுருக்குமே:-))))

அது பத்து அமெரிக்கன் டாலர்ஸ்.

said...

வாங்க நிரஞ்சன் தம்பி.

ரசித்தமைக்கு நன்றி.

நீங்கள் படத்தில் பார்த்த குட்டியானைக்கு வயசே அப்போ ரெண்டரை மாசம் தான்.

மனுசர்களை ஏத்திக்கிட்டு நடக்க மினிமம் வயசு 25 ஆகணும்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஓக்கே.... ஃபஜர் டே அறிவிப்பை விரைவில் வெளியிடலாம்:-))))

said...

வாங்க கே ஆர் எஸ்.

வானதி என்ன இருந்தாலும் கொடும்பாளூர் இளவரசி.

பூங்குழலி அப்படியா? நம்ம கேஸ். அப்படியும் அவளுக்கு(ம்) யானை சவாரி கிடைச்சது பாருங்க:-))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ஆமாங்க.ரொம்ப திகில்தான். அதுவும் பயத்தை வெளியே காட்டாமல் முகத்தை வச்சுக்கணும். அரச குடும்பம் இல்லையோ!!!

said...

வாங்க கே ஆர் எஸ்.

அம்மாவின் ஒட்டக ஓட்டம் த்ரில்லாத்தான் இருந்துருக்கு. பாவம்! நாமும் ஒட்டகத்தை விட்டு வைக்கலை. கோபாலை ஏத்தி விட்டாச்சு. இங்கே பாருங்க:-)
http://thulasidhalam.blogspot.co.nz/2011/07/37.html

said...

கே ஆர் எஸ்.

'ஆ' உங்களுக்கும் பிடிச்சிருந்ததா:-)))))

சுவாமி மலையில் பார்த்த நினைவில்லையே.....

திருத்தணியில் யானை அதுவும் முருகனுக்குப் புறம் காட்டி இந்திரலோகத்தைப் பார்த்து நிற்கும் யானைன்னு 'கதை' கேட்டேன், சென்னை அறுபடை வீட்டில்.

said...

கே ஆர் எஸ்.

சங்கத்தமிழ் சுட்டிக்கு நன்றி.

இங்கே பாருங்க உங்க பின்னூட்டத்துக்குன்னே ஒரு ரசிகர் பட்டாளம் காத்திருக்கோம்!


//இப்பல்லாம், துன்பத்தில் மனச் சாந்திக்கு, துளசி தளம் நெறைய படிக்குறேன் - பழைய பதிவெல்லாம்:)//

ஆஹா..... தன்யளானேன்.

துளசிதளமுமதே.... சந்தோஷமுகா வாசிஞ்சு..... துளசி.....

மாயா மாளவ கௌள ராகம்:-)))

said...

வாங்க டி பி ஆர் ஜோ.

எலும்புக்கூடு உள்ளே நுழையும்போதே இருக்கு. அதைப் பார்த்த கண்கள்தான் உயிருளளதை உள்ளே பார்க்கும் என்பதும் ஒரு ஆறுதல்தான்.

பிறப்புன்னதும் இறப்பும் கூடவே இருக்கே!

said...

வாங்க சுரேஷ் குமார்.

உண்மையில் உலகம் சுற்றும் வாலிபர் நீங்கதான்!

நாம் கொஞ்சம் டைம் வேஸ்ட் பண்ணிட்டோம். ட்ராவல் ப்ளான் சரி இல்லை.

சின்னத் தீவுதான்.நீங்க நாலு நாளில் முழுசா எல்லாமே பார்த்துறலாம். யானையை மட்டும் விட்டுடாதீங்க.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அவசர யுகத்தில் எதுக்குதான் நேரமிருக்கு?

ஓட்டம் ஓட்டமே:(

said...

வாங்க ரஞ்ஜனி.

கே ஆர் எஸ்ஸின் பின்னூட்டங்கள் பதிவை எங்கியோ உசரக்கக் கொண்டு போய் விடும்.


சட்னு ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியவிட்டாப்போலே:-)))

ஏகப்பட்ட ரசிகர்கள் இவருக்கு உண்டு கேட்டோ!!!!

said...

வாங்க சசி கலா.

தண்ணீரில் நடக்கும்போது குஷி மூடில் இருக்கும் யானைகள் சட் னு உக்கார்ந்தால் நம்ம கதை கந்தல்:-))))

நல்லவேளை. நல்லா பயிற்சி கொடுத்துருக்காங்க.

எனக்கு யானை மரத்தண்டில் உக்கார்ந்தபோதுதான் ரொம்பப் பாவமா இருந்துச்சு.

விரைவில் எதிர் பாருங்கள் ஃபஜர் டே!

said...

வாங்க கீதா.

அங்கேயே உங்களை நினைச்சுக்கிட்டேன்.


குழந்தை கொள்ளை அழகு.ஒன்னு வளர்த்தியால் கொள்ளாம்:-)

பாப்பாவுக்கு முதல் மூணு மாசம் வெறும் தாய்ப்பால்தான். அப்புறம் கூட மெல்லிய இலை தழை,பழங்கள் இவை மட்டுமே! ஒன்பது மாசம் ஆனால்தான் கைக்கும் வாய்க்கும் கோ ஆர்டிநேஷன் வருமாம்.

ஆனால் வாழ்க்கைக் கல்வி தாயிடம் இருந்தே ஆரம்பிக்குது!!!!

said...

வாங்க வல்லி.

அடுத்தமுறை போனால்(?!) முழுசா ஒரு நாள் இங்கேன்னு முடிவு பண்ணியாச்சுப்பா.

ரவியின் பின்னூட்ஸ் எல்லாம் பதிவுக்கு அணிகலன்களே!

said...

வாங்க சிஜி.

மகுடம் கூட்டி மகிழ்கிறார் கே ஆர் எஸ்.

அப்படியே உங்களை இங்கே இழுத்து வந்ததுக்கும் அவருக்குத்தான் நன்றி சொல்லணும்:-)

said...

தவறிப்போய் கீழே விழுந்த காய்த் துண்டுகளை தும்பிக்கையால் துழாவி எடுக்கும் அம்மாவைப் பார்த்து சின்னதும் தும்பிக்கையை குளக்கரையில் நீட்டி வச்சது படா தமாஷ்! 'ஐயோடா என் செல்லமே'ன்னு வாரி அணைச்சுக்கத் தோணியது உண்மை.//

ஆஹா! உண்மை.
படங்கள் ,காணொளி எல்லாம் அழகு.
நீங்கள் இருவரும் செய்யும் யானை சவாரி மிக அழகு காட்சி.

said...

அம்மாவுடன் குளிக்கும் சின்னவன் சூப்பர்.

யானை சவாரியில் அரசி கம்பீரமாக வீற்றிருக்கின்றார். :))

said...

வாங்க கோமதி அரசு.

அனைத்தையும் ரசித்தமைக்கு நன்றீஸ்.

said...

வாங்க மாதேவி.

பட்டம் சூட்டிக்கலாமுன்னா கிரீடத்தைக் காணோம்!

ரசனைக்கு நன்றிப்பா.