Friday, February 08, 2013

டோண்டு



அமெரிக்கத்தோழி ஒருவர்  அனுப்பிய மடல் சோகச் செய்தியை சுமந்து வந்தது.  நெசமாவான்னு தமிழ்மணத்துக்குள் பாய்ஞ்சேன்.  என்றென்றும் அன்புடன் பாலாவின்  பதிவு.  மனம் அப்படியே  கலங்கிப்போச்சு.  ரெண்டு நாளா ஒரே குழப்பம்.  இப்படி ஆகிப்போச்சே.......  ராத்திரி தூக்கம்கூட வரலை. அவரிடன் இருந்த நட்புணர்வு, நேர்மை, தன் கொள்கையில் நம்பிக்கை என்ற எல்லாத்தையும் விட பெருமாள் மீதான பக்தி, எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

கோபால் சேதி கேட்டு கொஞ்சம் அதிர்ந்துதான் போயிட்டார். நம்ம கோபாலுக்கு என் நண்பர்கள் எல்லாம்  அவர் நண்பர்களே!  தனித்தனி பேதம் இல்லை.

ச்சும்மாக் குழப்பி எடுக்கும் மனசு கொசுவர்த்தியை  ஏத்தி பாடாய்படுத்திக்கிட்டு இருந்த  சமயம் பகல் சாப்பாட்டுக்கு வந்தவர், ஆமாம். உனக்கு டோண்டுவை எப்படிப் பழக்கம்?  உன் மரத்தடி மக்களில் ஒருவரா?ன்னார்.

ஊஹூம்......நான் ஒரு ஆறுமாசம் மரத்தடியில் குழும அரட்டையினூடே  கொஞ்சூண்டு எழுதிப்பார்த்துக்கிட்டு இருந்தேன்.  சும்மாக்கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தாங்க குழும மக்கள்.  எழுத வருதாம்!!  எழுது எழுதுன்னு என்னை எழுத்துக்காரியா  ஆக்குன பழிபாவத்தை அவுங்க சுமக்கும்படி ஆச்சு.

அப்பதான்  தமிழ்மணம் ஆரம்ப சமயம்.  திஸ்கியை கைவிட்டுட்டு இகலப்பையைக் கையிலே பிடிச்சேன். தமிழ்மணம் காசியின் உயிரை அப்பப்ப வாங்கினேன்னு தனியாச் சொல்லணுமா?

அப்ப தமிழ்மணத்தில்  பதிவு செஞ்சுருந்த பதிவர்கள்  ரொம்பக் குறைவே.  அதனால்  தினமும் தமிழ்மணத்துலேயே குடியிருக்க ஆரம்பிச்சேன்.  யார் புதுசா எழுத வந்தாலும் கண்ணில் படாமப்போக ச்சான்ஸே இல்லை!  உடனே.....வரவேற்பு பத்திரம் வாசிக்கலைன்னா எனக்கு  மூச்சு நின்னுரும்.

தனி வலைப்பதிவு தொடங்கி சரியா  ரெண்டு மாசம் கழிச்சு  டோண்டு எழுதவந்தார். நவம்பர் 8 2004.  பின்னூட்டம் போட்டு அவரை வலை உலகின் வழக்கப்படி வரவேற்றவர்களில் நானும் ஒருத்தி.

 ஒரு ஏழெட்டு மாசம் இப்படிப்போன நிலையில் சிங்கைக்கு ஒரு சின்னப்பயணமா நானும் மகளும் போனோம்.  மரத்தடி குழும மக்கள் பலர் அங்கே இருந்தாங்க. கூடவே தமிழ்மணம் மூலமும் முக்கியமாக எனக்கு வந்த பின்னூட்டங்களின் மூலமும் நட்பு வட்டத்தை  பெருக்கி வச்சுருந்தேன்.  ரம்யா நாகேஸ்வரன் ஏற்பாடு செய்திருந்த  பதிவர் மாநாடு( அப்படித்தான் சொல்லிக்கணும்!) நடந்தப்ப  வந்திருந்த இளைஞர்கள் பலரும் அக்கா அக்கான்னு அன்பைப் பொழிஞ்சாங்க.  அதில் கூடுதலா அன்பாகவும் உரிமையோடும் பேசின இளைஞர் மூர்த்தி.


கொஞ்ச நாளில்  நம்ம டோண்டுவுக்கு போலி டோண்டுவால் தொந்திரவு  ஆரம்பிச்சது.  கூடவே டோண்டுவுக்கு பின்னூட்டம் போடும் பதிவர்களுக்கும்.   டோண்டுவின் பதிவில் நாம் ஒரு பின்னூட்டம் போட்ட அஞ்சாவது நிமிசம் நமக்கு அர்ச்சனை ஆரம்பிச்சுரும். போலி ஒரு செந்தமிழ்ச் செல்வன். அவருடைய சொற்கள் வங்கியில்  இருப்பு ரொம்ப  கம்மி. அதனால்  அவருக்குப் பிரியமான அந்த சில சொற்களையே  அர்ச்சிக்கப் பயன்படுத்துவார்.  போலிக்கு ஆண் பெண் என்றெல்லாம் பேதமே இல்லை. சகலருக்கும் ஒரே அர்ச்சனைதான்.

அசுவாரசியமா நான் சொன்னதையெல்லாம் கேட்டுக்கிட்டிருந்த கோபால், சட்ன்னு நிமிர்ந்து  பார்த்து, இதெல்லாம்  எனக்கு சொல்லவே இல்லையேன்னார்! 

சொன்னால் அவ்ளோதான்.  ஆடிப்போயிருப்பீங்க! 

அதுவுஞ்சரிதான். அப்புறம்? 

இதுக்கிடையில் (2006)  நமக்கொரு சென்னைப் பயணம் வாய்ச்சது.  பதிவுலக நட்புகள் அடிக்கடி  மெரீனாவிலும்,  வுட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன்னிலும் சந்திக்கறாங்கன்னு அப்பப்ப பதிவுகளில்  பார்த்ததால் எனக்கும் நட்புகளை சந்திக்கணுமுன்னு  ஆவல். சந்திப்புக்கு ஏற்பாடு செய்யமுடியுமான்னு கேட்டு டோண்டுவுக்கு ஒரு மடல் அனுப்பினேன். போலியின் அட்டகாசத்தைச் சொல்லி அழ டோண்டுவோடு மின்னஞ்சல் தொடர்பில்  இருந்தேன்.


உங்கள் பயணத்திட்டத்தையும் என்றைக்கு  நீங்கள் தென்தமிழ்நாட்டுக்குப் போயிட்டு மீண்டும் திரும்பி சென்னைக்கு வர்றீங்கன்னு சரியாச் சொன்னால் ஏற்பாடு செஞ்சுடலாமுன்னு  சொன்னார்.  முதலில் ஒருசில நாட்கள் சென்னை. அப்புறம்  மாமியார் வீட்டுப் பயணம் மதுரை வழியாக.  அங்கிருந்து திரும்பியதும் சில நாட்கள் சென்னைன்னு  இருந்துச்சு நம்ம திட்டம்.

நங்கைநல்லூரில் இருக்கும் குடும்ப நண்பரைச் சந்திக்க  (இவர் மகன் நியூஸியில் நம்ம குடும்பநண்பர்) போனப்ப, என்னவோ மனசில் சட்ன்னு டோண்டுவும் இங்கேதானே இருக்கார் என்று தோணுச்சு. அவருக்கு செல்பேசினால்  விலாசம் சொல்லி வீட்டுலேதான் இருக்கேன் வாங்கன்னார்.  எப்படியும் ஆஞ்சநேயர் கோவில் திறக்க இன்னும் நேரம் இருக்கே.  இவரைப்பார்த்துட்டுக் கோவிலுக்கு போலாமேன்னு  டோண்டு வீட்டுக்குப்போய்ச் சேர்ந்தோம்.

நங்கைநல்லூரில் இருக்கும் குடும்ப நண்பரைப் பார்க்கப் போறவரை அன்னிக்கு ஒரு வலைப்பதிவர் சந்திப்பு நடக்கப்போகுதுன்னு மெய்யாலுமே தெரியாது.

நங்கைநல்லூர்ன்னதும் மூளையில் ஒரு மணி அடிச்சுது. பயணம் முழுசும் என்னைவிட்டகலாது இருந்த மூணுதாளைப்பார்த்ததும் புரிஞ்சுருச்சு. நம்மளைச் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்த வலைஞர்கள் விவரம் அடங்குனதுதான் இந்த மூணுதாள் மேட்டர்.அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா... எத்தனை பேர்ங்கறீங்க?

அவர் தந்த தகவலின்படியே போய் இதோ வீட்டுக் கூடத்துலே நுழைஞ்சாச்சு. ஹை... ஊஞ்சல்!!!!ஓடிப்போய் உக்காந்துக்கிட்டேன். அவரோட மகளையும் சந்திச்சோம். பேச்சு பலவிஷயங்களைத்தொட்டுப் போய்க்கிட்டு இருந்தது. எங்க இவர் எப்பவாவது சில பதிவுகளை, நகைச்சுவையா எழுதறவங்களோடது படிச்சிருக்காரே தவிர, தமிழ்மணத்துலே அன்னாட நிகழ்ச்சிகளா(!) நடக்கறதை எதுவுமே அறியாதவர். சில விஷயங்களைக் கேட்டுட்டு இப்படியெல்லாம் கூட நடக்குமான்னு அதிசயப்பட்டுட்டார். போட்டும்,அப்பாவி!!!! பேசிக் களைச்சுட்டோமோன்னுச் சுடச்சுட ஒரு காஃபியும் தன்கையாலேயே(!)போட்டுக் கொடுத்தார் நண்பர். வீட்டுக்காரம்மா கோயிலுக்குப் போயிருந்தாங்க.

அப்படியே 'ஆஞ்சநேயரையும்' பார்த்துட்டுக் குசலம் விசாரிச்சுட்டுப் போகலாமுன்னு நினைச்சுக்கிட்டே, வழியனுப்பிவைக்க கூடவே வந்த நண்பரிடம், உங்களைப் பார்த்ததுலே ரொம்ப சந்தோஷங்க. போயிட்டு வரோம் 'டோண்டு'ன்னுசொல்லி ஆட்டோவுலே ஏறி உக்கார்ந்தாச்சு.

7 ஆண்டுகளுக்கு முன் இந்த சந்திப்பு பற்றி எழுதியது  மேலே.

கொஞ்ச நேரத்தில் டோண்டுவின் மகள் வந்தாங்க. எல்லோருமா கொஞ்ச நேரம் பேசிட்டு  சில படங்களை க்ளிக்கிட்டு கிளம்பிக் கோவிலுக்குப் போனோம்.

இந்த சந்திப்புதான், நான் செஞ்ச  மெஹா தப்புன்னு போலிக்குப் பட்டுருச்சு:(  ஏற்கெனவே  அனுப்பி வச்ச படங்களை சேமிக்கமுடியாமல் போச்சு இன்னொரு முறை அனுப்புங்கள்ன்னு  மெயில் வந்ததும் நான்  ரிப்ளை பட்டனைத் தட்டி படங்களை அனுப்பிட்டேன்.  உண்மையில் டோண்டுவின்  மெயில் ஐடி போலவே  போலி தயாரிச்சது  இது. துளியும் சந்தேகம் வராதபடி அச்சு அசலா டோண்டுவின் நடையும் சொற்களும்.  சாம்பிளுக்கு ஒன்னு கீழே!

அன்புள்ள துளசி அவர்களே,
 நலமாக இருக்கிறீர்களா? நீங்கள் இட்ட பின்னூட்டம் என் மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. நாம் கேட்டுக்கொண்டா இந்த இந்த ஜாதியில் பிறக்கிறோம்? எல்லாம் அவன் செயல்.
 பைதிவே, நீங்கள் இங்கு வந்தபோது எடுத்த புகைப்படங்களை மறதியாக என்னுடைய கணினியில் இருந்து அழித்து விட்டேன். தயவு செய்து அந்த புகைப்படங்களை அனுப்பி வையுங்களேன்.
 அன்புடன்,
டோண்டு ராகவன்.


டோண்டுவிடம் இதைப்பற்றி மடல் அனுப்பி  படம்  அனுப்பிய விவரத்தையும் சொன்னதும்தான்  போலி மெயில் ஐடி விவரம் வெளிச்சமாச்சு.  அதுலே கடைசியில் t இருக்கான்னு பாருங்க. இருந்தால் நான், இல்லைன்னா போலின்னு பொறுமையா விளக்கினார்.

என் பெயரிலும், டோண்டுவின் மகள், மனைவிபெயரிலும் போலித்தளங்களைத் தொடங்கி ஆபாசமா எழுதித்தள்ள ஆரம்பிச்சுருந்தது போலி டோண்டு. இப்படி ஒன்னு நடக்குதுன்னே எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய நலம் விரும்பி  நண்பர்கள் சிலர் உங்க பேரில் இது வந்துருக்கு அது வந்துருக்குன்னு சுட்டிகளை அனுப்புவாங்க. சரியான மன உளைச்சல் காலம் அது:(

உண்மையில் இந்த  போலி யாருன்னே தெரியாத நிலையில் இருட்டுலே கத்தி வீசுவது போலத்தான்!

சாப்பிட்டு முடிச்ச கையைக்கூடக் கழுவாமல்  காஞ்சுபோயிருந்துச்சு கோபாலுக்கு. பயங்கர ஷாக்!  இதெல்லாம்  வேற யாருக்காவது தெரியுமா? சொல்லி இருக்கியா?

 டீடெயிலா  டோண்டுவைத் தவிர யாருக்கும் சொன்னதுல்லை.  பொதுவா மேலோட்டமா பிரச்சனைன்னு சிலரிடம்   சொன்னேன்.

மர்மக்கதையால்லெ  இருக்கு.  அப்ப எல்லாத்தையும் விளக்கமா எழுதி ஒரு பதிவு  போடு. நம்ம டோண்டுவுக்கு மரியாதை செஞ்சமாதிரியும் உங்க பதிவுலக டேஞ்சர்கள்  என்னை மாதிரி ஆட்களுக்குப் புரிஞ்ச மாதிரியும் இருக்குமுன்னுட்டு வேலைக்குக்  கிளம்பிப்போயிட்டார்.

நான் ஒரு 'க கை நா' ( கணினி கை நாட்டு) என்பதால்  என்ன செய்யணுமுன்னு புரியலை.  வலைஉலக நண்பர் ஒருவர் உதவிக்கு வந்தார். பேசாம  மெயிலில் ஃபில்டர் போட்டுருங்கன்னார்.  எனக்கு  ஃபில்டர்  காபிதான் போடத்தெரியும்.  பிறகு அவரே என் பாஸ்வேர்டை கேட்டு ஃபில்ட்டர் போட்டுத்தந்தார்.  போலியின்  vocabulary  ரொம்பவே  limited  என்பதால்  அவருக்கு எளிதாக இருந்துருக்கும்!

மன உளைச்சல் நீங்குனபாடில்லை. பேசாம  எழுதறதையே விட்டுறலாமான்னுகூடத் தோணுச்சு. சில நாட்கள்  டோண்டுவுக்கு  ஃபோன் பண்ணியும் பிரச்சனையைப்பற்றி பேசி இருக்கேன்.  இந்த  ஜாட்டானுக்குப் பயந்துக்கிட்டு  எழுதறதை விட்டுடாதீங்கன்னு  சொன்னார்.  இவ்வளவு ஆனபிறகும் துளசிதளத்தில் தொடர்ந்து எழுத, டோண்டு கொடுத்த தைரியமும் ஒரு காரணம்.

போலியுடன் டோண்டு நடத்திய  போர் விவரங்கள் எல்லாம்  அவர் பதிவுகளில்வரிசையா வரத்தொடங்குச்சு.  தவறாமல் தொடர்ந்து வாசிச்சு வந்தாலும் பின்னூட்ட  ஒரு பயமும் கூடவே  இருந்தது என்றது உண்மை.



அவருடைய  போலியுடன்  Jom Kippur - டோண்டு ராகவனுடையது என்ற  இடுகைக்கு முதல் பின்னூட்டம் போட்டது  நாந்தான்.  (அதுக்கும் கூட  என்னை பயங்கரமா ஏசி அவருக்கு  மடல் போட்டுருந்ததாம் போலி)  இதை அவர் தன்னுடைய அடுத்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

அந்தப்பதிவு இங்கே!  யோம் கிப்பூர் யுத்தம் டோண்டு ராகவனுடையது


இதுலே ரொம்ப வேடிக்கையானது  ஒரு 'நண்பரின்' பின்னூட்டம்தான். போலியிடம் நான் சமரசம் செஞ்சு கொண்டதையும் அதனால்  போலி என்னைப்பற்றி எழுதுவதை விட்டுவிட்டதையும்  கூடவே இருந்து பார்த்துட்டு எழுதி இருக்கார்:-)))))

அதுக்காகவே அவருக்கு அங்கே பதிலும் சொல்லவேண்டியதாப் போயிருச்சு எனக்கு!

நமக்கே  தெரியாத நம் நடவடிக்கை எப்படி இவுங்களுக்கெல்லாம் தெரிஞ்சதாம்?   ஆதாரம் இல்லாமல்  கிசுகிசுக்கள் இப்படித்தான்  எழுதப்படுகின்றன!

கடைசியில் இந்தப்போலி, நம் சிங்கை சந்திப்பில்  கலந்து கொண்டு அக்கா அக்கா என்று அன்பைப்பொழிந்த  அதே மூர்த்தியேதான் என்றதும்............ ' அடச் சீ' ன்னு வெறுப்பு..

போலி யாருன்ற கண்டுபிடிப்பில்  மூர்த்திதான் என்று டோண்டு அடிச்சுச் சொன்னாலும் மனதின் ஒருமூலையில்  அது வேறொரு மூர்த்தியா  இருக்கலாம்.  இந்த மூர்த்தியா இருக்கமாட்டார்ன்னு  எனக்கு லேசா ஒரு எண்ணம்.   அந்த எண்ணம் பொய்யாப்போச்சு. யாரைத்தான் நம்புவது இந்தக் காலத்தில்:(


 தமிழ் வலை உலகில் முதல்முதலாக ஸைபர் க்ரைமில் புகார் கொடுத்து,  கடைசியில் போலியைப் பிடிப்பதில்  எங்கள் அனைவரின் சார்பாக விடா முயற்சி செஞ்சு வெற்றி கண்டவர் நம்ம டோண்டு!  இதில் அவர்கூடவே உறுதுணையா இருந்தவர்  நம்ம உண்மைத்தமிழன். (இன்னும்கூட பலர் இருக்கலாம். ஆனால் எனக்கு விவரம் கிடைக்கலை) இதை என் வாழ்நாள் உள்ள அளவும்  மறக்க  முடியாது! வலை உலகம் உள்ள அளவும் இந்த வெற்றி நிலைச்சு நிற்கும்.


கோபாலின் வேலை காரணம் இந்தியாவில்  கொஞ்சநாள்  வசிக்க வேண்டிய நிலை. அப்பவும் நம்ம டோண்டுவிடம்தான் சில ஆலோசனைகள் கேட்டுக்கிட்டேன். நல்ல குடும்ப நண்பராகவும்  ஆகி இருந்தார்.

சென்னையில்  நம்ம உண்மைத்தமிழன் , பதிவர் சங்கம் ஒன்னு நிறுவவேண்டிய அவசியம் பற்றிக் கூட்டிய  மீட்டிங்கில்  டோண்டுவும் கலந்து கொண்டார்.  ரொம்ப நாட்களுக்குப் பின் பார்த்த மகிழ்ச்சி .

அதுக்குப்பிறகு  2010 இல் அக்கரை/அக்கறை  சந்திப்பில்  அவரைப்பார்த்தேன். நம்ம பாக்கியம் ராமசாமி அவர்களின் மாதமொருமுறை  சந்திப்பு இது.

அவருக்கு உடல்நிலை சரி இல்லைன்னதும்  முதலில் கொஞ்சம் பதறித்தான் போனேன். சிகிச்சைக்குப்பிறகு நலம் என்று  அவருடைய பதிவில் பார்த்ததும் நிம்மதியாச்சு.

போன வருசம் நடந்த கோபாலின் மணி விழாவில் கலந்துக்கணுமுன்னு  டோண்டுவுக்கு  ஃபோன்  செஞ்சேன்.  மற்ற பதிவுலக  நண்பர்களுக்கு  மின்னஞ்சலில் அழைப்பு அனுப்பும்போது  இவருக்கும் அனுப்பி இருந்தேன்.  மின்மடல் வரலைன்னார்.  'மெயில் ஐடியிலே t இருக்கா  பாருங்க'ன்னார்!   அப்பதான் மறந்துருந்த  கசப்பு நினைவுக்கு வந்துச்சு.  போலீஸ் விசாரணைக்குத் தேவைப்படலாம் என்பதால் அந்த ஐடியை அழிக்காமல்  காண்டாக்ட் லிஸ்ட்டில்  வச்சுருந்தேன்.  இதுகூட டோண்டுவின் ஐடியாதான். போர்கால நடவடிக்கையில் ஒன்னு!

மறுபடி சரியான ஐடிக்கு அழைப்பு அனுப்பிட்டு  செல்லிலும் சொன்னேன்:-)  அவ்வளவா  வெளியில் போறதில்லைன்னும்  தங்க்ஸ் அனுமதிச்சால் பார்க்கலாமுன்னும் சொன்னார்.

குடும்ப நிகழ்ச்சியின்  மாலை விருந்தில்   ஒரு பெரியவர் மெள்ள நடந்து  வந்தார்.  எங்கியோ பார்த்த மாதிரியும் இருக்கு. ஆனால் யாருன்னு தெரியலை.  இதைப்பற்றி அப்ப எழுதின இடுகையில் ஒரு பகுதி இது.

ஹாலுக்குள் நுழைஞ்சப்ப அங்கங்கே சிலர்! நம்ம விருந்தினர்கள் வரத்தொடங்கி இருந்தாங்க. நான்தான் ஸோ அண்ட் ஸோன்னு தன் பேரைச் சொல்லி (சரியா என் காதில் விழலை) அறிமுகப்படுத்திக்கிட்டவரை எங்கியோ பார்த்த நினைவு. அவருடைய இருக்கைக்குப் பின் இருக்கையில் நம்ம நுனிப்புல் உஷா, அப்துல் ஜப்பார் ஐயாவிடம் பேசிக்கிட்டு இருந்தவங்க, முன் இருக்கைக்குக் கீழே கையைக் காமிச்சாங்க. ஒரு மோதிரம்! யானைவால் முடிவச்ச தங்க மோதிரம்.

 யானைக்காரிக்குப் பரிசா யாராவது கொண்டு வந்துருக்கலாம் என்ற சம்ஸயத்துடன் அதை எடுத்து, யாரோடதுன்னு ஏலம் போட்டேன். லதானந்த் கூடப்பேசிக்கிட்டு இருந்த தெரிந்த முகத்துக்காரர் தன்னோடதுன்னு வாங்கிக்கிட்டார். விரலில் இருந்து நழுவி இருக்கு:( அப்பவும் அவரை சட்ன்னு நினைவுக்கு வரலை.

 சபையில் நண்பர்கள் கூடி கலகலப்பான சமயம், என் அருகில் இருந்த நம்ம காவேரி கணேஷிடம், அவரைக் காமிச்சு யாருன்னு தெரியுதான்னா... அவருக்கும் யாருன்னு புரிபடலை. நான் விசாரிச்சுச்சொல்றேன்னவர் வந்து சொன்ன பெயரைக்கேட்டு அப்படியே ஆடிப்போயிட்டேன்:(   நம்ம டோண்டு!!!!!

டோண்டு, நீங்கள் உடல்நலக்குறைவில் இருந்து மீண்டுவர எம்பெருமாளை மனதார வேண்டுகின்றோம்.

மேடையில் கொஞ்சம் பிஸியா இருந்துட்டதால் தனித்தனியா ஒவ்வொருவரோடும் பேசவும் சந்தர்ப்பம் கிடைக்கலை:(  இந்த அழகில்  கோபால்வேற டோண்டுவிடமே  உங்களை எங்கியோ பார்த்தா மாதிரி இருக்கு. நீங்க யாருன்னு கேட்டுருக்கார்!  கடைசியில்  கோபாலிடம் சொல்லிட்டு அவர் சீக்கிரமாக் கிளம்பிட்டாராம். சாப்பிட்டாரான்னு  தெரியலை:(  வெறும் தயிர்சாதம் மட்டும் சாப்பிட்டதாக  உண்மைத்தமிழன் பதிவில்தான் பார்த்தேன்.

பரிசுப்பொருட்களைத் தவிர்க்க  வேணும் என்ற வேண்டுகோளை சில நட்புகள் பொருட்படுத்தவே இல்லை. கல்பட்டு ஐயா  தம்பதிகள் கோவில் ப்ரசாதங்கள் ரவிக்கைத்துணி மஞ்சள் குங்குமம் என்று  ஆசி வழங்கினர். நம்ம எஸ் கே. நடராஜன் அவர்கள் என்னைக் குடும்பத்தில் ஒருவராக்கி  புடவை ரவிக்கை வேஷ்டி  அங்கவஸ்திரம் என்று சம்பிரதாயமாக அமர்க்களப்படுத்தி விட்டார்.  நம்ம மரபூராரும், லதானந்தும்  புத்தகங்களைக் கொடுத்தார்கள்.(இதைமட்டும் வேணாமுன்னே சொல்லமாட்டேன்!!)

அப்புறமும்  யார் கொடுத்தார்கள் என்று தெரியாமலேயே  சின்னச்சின்னதா சில பரிசுப்பொருட்கள் ஒரு மேஜையில் சேர்ந்துபோச்சு. நியூஸி வந்தபிறகுதான்   பெட்டியில்   போட்டு வச்சுருந்த குட்டிக்குட்டியா இருந்த யானைகளை எடுத்து  ஷோகேஸில் வச்சேன்.

ஆமாம்.... இதையெல்லாம் இந்தப்பதிவில் ஏன் சொல்றேன்?  காரணம் இருக்கு.

அப்படியும்  ஒரு சின்ன வெள்ளிநிற அட்டைப்பெட்டி ஒன்னு பிரிக்கப்படாமல் அப்படியே சாமி அறை ஷோ கேஸின் மேல் உக்கார்ந்துருந்துச்சு.  அது கண்ணில் படும்போதெல்லாம் உள்ளே என்ன இருக்குன்னு பார்க்கணும் என்று நினைச்சுக்கிட்டே இருந்தும்  மறந்து போயிரும்.

போன மாசம் ஒருநாள் பிரிச்சுப் பார்த்தேன்.  சின்னதா அழகான வெள்ளி ஊதுவத்தி ஸ்டேண்ட். யாரா இருக்குமுனு  தெரியலை. பார்த்துட்டு அப்படியே உள்ளெ வச்சுட்டேன்.  மூணு வாரத்துக்கு முன்னால்  என்னவோ தோணிப்போய்  மறுபடி அந்த அட்டை டப்பாவைத் திறந்து பார்த்தால்..... ஓரத்தில் ஒரு அட்டை.  நம்ம டோண்டுவின் கார்ட்! அட!

நாலு மாசம் கழிச்சு,  பரிசைக்  கொடுத்தவரைக்  கண்டுபிடிச்சுட்டேன். நன்றி சொல்லி ஒரு மடல் அனுப்பணும். இதுவும் நாளை நாளைன்னு  நாட்கள் கடந்து போயே போச்சு. இப்ப  டூ லேட்:(

கண்முன்னே இருக்கும்  பரிசைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு குற்ற உணர்ச்சி:(

அந்த நேர்மை, வெளிப்படையான பேச்சு,  எத்தனை முறை கேட்டாலும் அலுக்காமல் சலிக்காமல் வலை உலகின் ஆபத்தில் இருந்து  எப்படி நம்மைக் காத்துக்கணும் என்று சொல்லிக்கொடுத்த பொறுமை (எலிக்குட்டி சோதனை செஞ்சுக்கணும்) தன்னுடைய  கொள்கையில் தடுமாறாமல் நின்ன  மனத்திண்மை இதெல்லாம்  நினைக்கும்போது........


பதிவுலகம் முழுதுமே  இவர் மறைவு கண்டு கலங்கி நிற்பதில் என்ன வியப்பு?

 டோண்டு,  என்னவொரு மனிதர் ஐயா நீர் !!!!!





34 comments:

said...

உருக்கமா இருக்கு. இந்த இரு நாட்களும் அவர் நினைவே!!

said...

சபையில் நண்பர்கள் கூடி கலகலப்பான சமயம், என் அருகில் இருந்த நம்ம காவேரி கணேஷிடம், அவரைக் காமிச்சு யாருன்னு தெரியுதான்னா... அவருக்கும் யாருன்னு புரிபடலை. நான் விசாரிச்சுச்சொல்றேன்னவர் வந்து சொன்ன பெயரைக்கேட்டு அப்படியே ஆடிப்போயிட்டேன்:( நம்ம டோண்டு!!!!!//

துளசி, உங்கள் பதிவில் படித்த இந்த வரிகளைதான் கயல்விழியிடம் சொல்லி அவர் இறந்து போய் விட்டார் என்று போட்டு இருக்கே என்று கேட்டேன்.

அவளும் ஆமாம் அவர்தான் என்று உறுதிப்படுத்தினாள்.
டோண்டு இராகவன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி, அவர்கள் குடும்பத்தினர்களுக்கு இறைவன் மன ஆறுதலை வழங்க வேண்டும்.

said...

அன்பு துளசி ,இப்படி ஒரு மனுஷன் இருந்தார்ங்கறதே நமக்கு ஒரு பெருமை. ஒரேசோகமாப் போச்சு.
எவ்வளவு நடந்திருக்குப் பதிவுலகத்தில. உண்மைத்தமிழனும் அருமையாப் பதிவிட்டிருந்தார்.
அவருடைய பதிவுகளுக்குப் பின்னூட்டமிடப் போய்
சாக்கடை மொழியில் எனக்கு ஒரு பின்னூட்டம் வந்தது. அதிலிருந்து
பின்னூட்டம் இடுவதை நிறுத்திவிட்டேன். அந்தக் காலங்களை நினைத்தால் இன்னும் கஷ்டமாக
இருக்கிறது. பாவம் எவ்வளவு மன உளைச்சல் பட்டாரோ.

உங்களூக்கும் என்ன ஆறுதல் சொல்வதுன்னு புரியவில்லை
நல்லதொரு வீரனை பதிவுலகம் இழந்துவிட்டது.

said...

மனம் கனக்கிறது.....என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்தியா வரும் போது பார்க்க நினைத்த மனிதர்களில் ஒருவர்

said...

மிகவும் உருக்கமான பதிவு மேடம்.எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

said...

இருமுறைகள் என்னைப் பதிவர் சந்திப்புக்கு அழைத்திருந்தார். என்னால் தான் கலந்து கொள்ள முடியவில்லை. அப்போதெல்லாம் உடல்நலக்குறைவு அதிகமாக இருந்த காலகட்டம். அதோடு சந்திப்புகள் நடந்த இடங்களும் நாங்கள் இருந்த அம்பத்தூரில் இருந்து சென்றுவர வசதியாகவும் இல்லை. தவறவிட்டேன். அப்புறமாக அவருடைய தொடர்பே இல்லாமலும் போய்விட்டது. மகரநெடுங்குழைக்காதரைப் பார்த்ததும் டோன்டு நினைவு வந்ததாக எழுதி இருந்ததை வந்து படித்துவிட்டுப் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்திருந்தார். அவர் உடல்நலம் இவ்வளவு மோசமாக ஆனது குறித்துத் தெரிந்து கொள்ளாமல் போனேன். ஒரு தரமாவது பார்த்துவிட்டு வந்திருக்கலாம். இனி பார்க்கவே முடியாது. எங்கோ இருந்தாலும் அவர் இருக்கிறார், எழுதுகிறார் என்ற எண்ணமே ஒரு தைரியத்தைக் கொடுத்து வந்தது என்பது பொய்யல்ல. மாமனிதருக்கு அஞ்சலிகள்!

said...

பதிவைப்படிக்கையில் மனம் கனத்துப்போகின்றது.அவரது குடும்பத்தினருக்கு இறைவன் பொறுமையை கொடுக்கட்டுமாக!

said...

டோன்டு அவர்களுடன் ஒரு ஏழு எட்டு மாத காலம் முன்பு ஃபோனில் பேசினேன். நான் சுப்பு ரத்தினம் என்று சொன்னேன். நீங்கள் தான்
சுப்பு தாத்தா வா ? என்றார். ஆமாம். என்றேன். பிறகு ஒரு 30 நிமிடத்திற்கு மேல் மிகவும் கனிவாக பேசினார். பழைய காலத்தையெல்லாம்
நினைவு கூர்ந்தார்.

அவரது அபார துணிச்சல் என்னை அதிசயிக்க வைக்கிறது. துஷ்டாளைக் கண்டால் தூர விலகு என்று என் அம்மா சொல்லியபடி,
ஒருவரது பேச்சு, நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை என்றால் விலகிப்போயிடுவோம், நம்மில் பலர். ஆனால், டோன்டுவோ
ஒரு வித்தியாசமான நபர். தனக்கு சரி என்று பட்டதை கடைசி வரை பேச்சுக்கு பேச்சு, ஏச்சுக்கு ஏச்சு என்று இருப்பவர். இதெல்லாம்
எதற்கு , பகவான் பாத்துப்பார் என்று கூட சொல்லிப்பார்த்தேன். அப்படி விட்டு விட கூடாது, நம்ம தான் சரி பண்ணணும் என்றார்.

நான் நேற்று ஒரு பதிவிலே படித்தது போல, அவர் டோன்டு தன்னை யாருக்கும் கீழ் என்று நினைத்ததில்லை. எவரையுமே தனக்குக்க்கீழ்
என்றும் நினைத்ததில்லை. சமூகத்தில் உள்ள சில சிந்தனை ஓட்டங்கள் மாறு பட வேண்டும் என நினைத்தார். அதற்காக தன் நேரம், சில நேரங்களில் தன் மன அமைதி கூட இழந்தார் என்றே தோன்றுகிறது.

கருத்துக்கள் மாறுபட்டாலும், மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற வசனம் போல், அவரை இந்த நேரத்தில்
பாராட்டுபவர் உள்ளங்கள் இன்று விம்முகின்றன. கண்டு பெருமிதம் ஆக இருக்கிறது.

இந்த தமிழ் பதிவுலகம் என்றென்றும் வாழ்ந்து இருக்கும் டோன்டு அவர்கள் ஒரு மைல் கல். தமிழ் வலைப்பதிவுஉலகில் ஒரு சரித்திரம்.

சுப்பு தாத்தா.

said...

அருமையான நினைவுப் பதிவு.

ம் பழசையெல்லாம் நினைக்கூடாதுன்னு தான் நான் போலி விவகாரம் எதுவும் எழுதவில்லை, இவர்களின் (ஆபாசக்) கூத்தில் பாதிக்கப்பட்டவர் ஒரு தங்கமான இளம் பெண் பதிவர், சல்மா ஐயூப் என்ங்கிறப் பெயரில் இவரோட நண்பர் அந்தப் பெண்பதிவரைப் பற்றி ஆபாசமாக கேவலமாக எழுத, பின்னர் மன்னிப்புக் கடிதமெல்லாம் எழுதிக் கொடுத்த அந்த பதிவரர் நண்பருக்கு இவரும் வக்காலத்து வாங்கினார், அந்த பெண் பதிவரும் இவரை மன்னிjavascript:void(0)ப்பாங்கன்னு நினைக்கிறேன்.

said...

It is sad to note that you have devoted a major part of your post to the mishap occurred in the internet life of late Dondu Ragavan. The other blogger U.Tamilan, too. Perhaps this is due to you and UT being the witnesses to the prosecution.

But the general point is that we remember Dondu Ragavan and it is unfortunate the remembrance corrals his ‘internet enemy’. In my obit too, (it appears in anbudan bala’s blog), I have referred to the incident, but I consistently maintained with DR that he should forgive the internet enemy because life is short and one ought to die only after reconciling all his old accounts in which forgiveness is an important account. I remember to have written many times in his blog, i.e. whenever he recalled the incident, reminding him that, now that the culprit was brought to book and paid his deserts, the ball was in his court and he should forgive. He allowed my comments but never responded positively. In my obit, I have mentioned this unfulfilled obligation by him. He is gone and there is no use as dead men tell no tales.

But you continue Mrs Tulsi Gopal and you are telling ‘tales’, i.e. you are active. It is not too late for you to forgive your enemies. He called you akka; 99% it may be a false address; but 1% is under benefit of doubt. He is an inveterate Brahmin hater; but, strange to say, at least a small portion of the onus of proving that the hatred is misplaced is upon the persons hated also. Hatred is the child of prejudice. If you remove the prejudice, you remove the hatred. Our enemy is always wrong but he is not incorrigible. As Acquinas said, evil is a defect of goodness only. He meant it is removable. A slight effort on our part will do for most cases.

If you get an occasion to do that, don’t miss it.

Let us not carry our grudges to our graves or crematoria.

- Kulasekaran

said...

அவரது இடுகைகளுக்குப் பின்னூட்டியதில்லையே தவிர வாசித்ததுண்டு. மனதால் என்றும் இளைஞராகவே தன்னை உணர்ந்த அவரது தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்தது. தமிழ்மணத்தின் வரலாறு எழுதப்படும்போது அவரைப்பற்றிய பக்கங்கள் இல்லாமல் முழுமை பெறாது.

said...

இவ்வளவு நடந்திருக்கான்னு இருக்கு....:(

அந்த மாமனிதரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

said...

டீச்சர்!உங்கள் பதிவின் மூலம் வருத்தம் தெரிவிப்பது டோண்டு ராகவனின் இழப்புக்கு இரங்கல் மரியாதை செய்வதாக இருக்கும்.

said...

நெகிழ்வாகவும் உருக்கமாகவும் இருக்கு டீச்சர். அவரோடு அதிகம் பழகியதில்லை; அவரது குடும்பத்துக்கு மன தைரியத்தை இறைவன் வழங்கட்டும்

said...

மிகவும் உருக்கமான பதிவு. மிகச் சிறந்த நண்பர்களாகப் பல ஆண்டுகள் பழகியிருக்கிறீர்கள். 2010ல் அவர் பதிவுகளைப் படிக்கத் துவங்கி யோசித்து யோசித்து 2011ல் ஒரு நாள் அவருடன் பேசி அதன் பிறகு அவ்வப்போது ‘டச்’சில் இருந்த எனக்கே 6/2/2013 அன்று அலுவலக விட்டத்தை வெறித்தபடி விழித்து 6 ப்ளாக் காபி குடித்து நாளை ஓட்டி முடிக்க வேண்டிய நிலை. நெருங்கிய குடும்ப நண்பர்கள் என்றால் இழப்பின் வலி அதிகம் என்பது புரிகிறது. But this too will pass and we have to move on. டோண்டு அவர்கள் மகர நெடுங்குழைகாதனின் மலரடிகளில் ஓய்வெடுக்கலாம்.

said...

பதிவுலகம் முழுதுமே இவர் மறைவு கண்டு கலங்கி நிற்பதில் என்ன வியப்பு?

said...

அதிகம் அறியாத ஒருவர் என்றாலுமே, பதிவுலகில் இருப்பதாலேயே நம் இழப்பாகவும் கருதுகிறோம். நட்பை இழந்த உங்களுக்கு அதிக மனவருத்தம் இருக்கும். என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

போலி டோண்டு விவகாரத்தில் நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கீங்கன்னு இப்பத்தான் தெரியும்.

said...

அக்கா,

நல்லதோர் அஞ்சலி. டோண்டு சார் ரொம்ப உடம்பு முடியாதிருந்த போதும், என் தாயாரைப் பார்க்க வந்த அவரது அருமையான குணத்தையும், என் மீது அவர் வைத்திருந்த அன்பையும் எண்ணும்போது மனது கனக்கிறது. தமிழ் வலையுலகில் போலித்தனம் சிறிதும் இல்லாத, யாரிடமும் வன்மம் பார்க்காத அறிவாற்றல் மிக்க ஒரு ஜாம்பவனாக உலவினார்! இதை மிக உறுதியாகக் கூற, ஒரு 8 ஆண்டுகள் அவரும் நெருங்கிப் பழகியவன் என்ற தகுதி இருக்கிறது!

என் எழுத்தை வாசித்து, அவர் எழுத வந்தது எனக்குப் பெருமை. அவர் நட்பு கிட்டியது அதனினும் பெரும்பேறு. தனிப்பட்ட அளவில் அவர் மறைவு எனக்கு பேரிழப்பு. இனி அவரிடமிருந்து எனக்கு ஃபோன் கால் வரப்போவதில்லை, அந்த மாமனிதன் என் வீட்டுக்கும் இனி வரப்போவதில்லை :-(

said...

***டோண்டுவிடம் இதைப்பற்றி மடல் அனுப்பி படம் அனுப்பிய விவரத்தையும் சொன்னதும்தான் போலி மெயில் ஐடி விவரம் வெளிச்சமாச்சு. ***

நானும் கவனக்குறைவா இருக்கலாம்தான்.. ஆனால், உங்க இ-மெயில் ஐ டி எப்படி இதுபோல் ஆட்களுக்கு தெரிகிறது?

இப்போ நம்ம இ-மெயில் ஐ டி யே தெரியல்வில்லைனா (உங்க செல் நம்பர் எல்லாருக்கும் கொடுப்பதில்லை இல்லையா? அதே போல்தானே இ-மெயில் ஐ டி யும்? நம்பிக்கையானவர்களுக்கு மட்டும்தானே நம்ம ஐ டி தெரியணும்?) இதுபோல் ஒரு மென்மடல் உங்களுக்கு அனுப்பி இருக்க முடியாது தானே?

நான் தமிழ் வலைதளம் பக்கம் வந்தது 2008க்கு அப்புறம்தான். போலி டோண்டு பற்றி பின்னால்தான் தெரிந்துகொண்டேன்.

மனிதர்களுக்கு, அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி இப்படியெல்லாம் ஒரு சந்தோஷம்??? என்னவோ போங்க!

------------

***நாலு மாசம் கழிச்சு, பரிசைக் கொடுத்தவரைக் கண்டுபிடிச்சுட்டேன். நன்றி சொல்லி ஒரு மடல் அனுப்பணும். இதுவும் நாளை நாளைன்னு நாட்கள் கடந்து போயே போச்சு. இப்ப டூ லேட்:(***

I am sure he himself had so many "unfinished jobs" as he the event happened "untimely" manner! :(

We can not see when it happens to us (when we are leaving for good). We can only learn such from others' departure!

said...

நான் அவரைச் சந்தித்ததில்லை. அவர் எழுத்துகளை வாசித்துள்ளேன். மிக மிக வருந்த வைத்த மறைவு. உங்கள் பதிவில் டோண்டு என்று பார்த்து புகைப்படத்தில் எது டோண்டு என்று உங்களைக் கேட்டிருந்ததற்குக் கூட அவரேயும் பதில் சொல்லியிருந்தார். அவர் என்னிட பேசியிருக்கிற மகிழ்ச்சி + நெகிழ்ச்சி.

said...

மனம் வேதனை யாகிவிட்டது.
அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

said...

உங்கள் பதிவைப் படித்தவுடன் மனம் நெகிழ்ந்து போனேன்.

டோண்டு இராகவனின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். அவரது இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் அவரது குடும்பத்தினருக்குக் கொடுக்கட்டும்.

ஒரு நல்ல மனிதருக்கு மிகச் சிறப்பாக அஞ்சலி செலுத்தி இருக்கிறீர்கள் துளசி!

said...

டோண்டுவுக்கு இந்த கட்டுரை நல்ல அஞ்சலி..

நல்ல மனிதர்...

அவரது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிராத்திக்கிறேன்..

said...

RIP Mr Ragavan.

said...

அவருடைய ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்....

said...

போலி மின்னஞ்சலை உடனே நாம் கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம் தான். நமக்கு வந்த மின்னஞ்சலில் அப்படியே ரிப்ளை செய்யத் தான் நினைப்போம் அதனால் நாம் அதை சரியாக கவனித்து ரிப்ளை பண்ணுவது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான்.

நீங்கள் ஏமாந்ததில் பெரிய ஆச்சர்யம் இல்லை..யாராக இருந்தாலும் ஏமாற வாய்ப்புண்டு. உங்கள் அனுபவம் எனக்கும் ஒரு எச்சரிக்கை கொடுக்கிறது. இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது

டோண்டு சார் உங்களுக்கு இது போன்ற விசயங்களில் உதவி இருக்கிறார் என்பதும் உங்கள் குடும்ப நண்பராக இருந்ததற்கும் நீங்கள் செய்து இருக்கும் இந்த அஞ்சலி மனதை தொட்டது.

டோண்டு சார் மீது வேறுபட்ட கருத்துக்கள் பலருக்கு இருக்கலாம் ஆனால், அவை எல்லாம் அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகளே! நீங்கள் அவரிடமும் அவர் உங்களிடமும் எப்படி நட்பு பாராட்டுகிறீர்கள் என்பதை வைத்து தான் இந்த அஞ்சலியை நினைக்க முடியும். அந்த வைகையில் இது சிறப்பான அஞ்சலி.

டோண்டு சார் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்.

said...

துயரில் பகிர்ந்து கொண்ட அன்புள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

இதுவும் கடந்து போகும். போகணும்.

மீண்டும் நன்றிகள்.

said...

நெகிழ்வான அஞ்சலி. சிந்தித்து நல்ல பரிசைத் தேர்வு செய்திருந்திருக்கிறார். உண்மைதான். நன்றி சொல்லத் தாமதமாகி விட்ட குறை மனதில் இருக்கவே செய்யும். நண்பர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இறைவன் ஆறுதலை வழங்கட்டும்.

said...

:( கண்ணீர் அஞ்சலி. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரின் குடும்பத்தினருக்கு காலம் ஆறுதல் அளிக்கட்டும்.

ஒரு காலத்தில் என் பதிவுகளில் நீங்கள் முதலில் கமெண்ட் இடுவது போல் டோண்டுவும் தன் எண்களுடன் கமெண்ட் இடுவார்.

துள்சி நீங்கள் டோண்டு குறித்து நேரில் பேசியதும் நினைவுக்கு வருகிறது :(

said...

இந்தப் பதிவை என்னுடைய வலைப்பதிவிலும் கொடுக்கிறேன் துள்சிம்மா

said...

அவரது ஆன்ம சாந்திக்கு நாம் பிரார்த்திப்போம்.

said...

நன்றிகள் டீச்சர்..!

இப்போது தினம், தினம் அவருடைய இழப்பை நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.. ஒரு தரப்பு வாதங்கள் முற்றிலுமாக அழிந்துபோய்விட்டது. நமக்குத் தெரியாமலேயே போகவும் செய்கிறது.. இனி யார் எழுதுவார்..?

சில இடங்களில் கண்ணீர் பொங்கிவிட்டது..! அவருடைய இழப்பு நம்மைப் போன்ற அன்பர்களுக்கு பெரும் இழப்பு..!

said...

வாங்க ராமலக்ஷ்மி, மதுமிதா, நிலா மகள், உண்மைத்தமிழன்.

துயரில் பங்கு பெற்றமைக்கு நன்றிகள்.

said...

now only i came to know the sad demise of that great warrior
i was away from chennai from 13 th january to 13 th february
MAY HIS SOUL REST IN PEACE.