அப்பா அம்மா கல்யாணத்துக்கு வந்திருந்த மகளை நேத்து இரவு சிங்கை வழியா நியூஸிக்கு விமானமேத்திட்டு அறைக்கு வந்து சின்ன ஸூட் கேஸ்களில் அஞ்சாறு நாளைக்குத் தேவையானவைகளைத் தனியா எடுத்து வச்சுக்கிட்டுப் பெரிய பொட்டிகளைக் கட்டி வச்சுட்டோம்.
காலை உணவையும் கெஸ்ட்ஹவுஸ் கணக்கையும் முடிச்சுக்கிட்டு, சீனிவாசன் உதவியோடு சாமான்களை வண்டியில் ஏத்திட்டுப் புறப்பட்டு, மைத்துனர் வீட்டுக்குப்போய் டாடா பைபை சொல்லிட்டு அப்படியே அண்ணன் வீட்டுக்குப்போய் பெரிய பெட்டிகளை வச்சுட்டுக் கிளம்பி தெற்கு நோக்கிய பயணம் ஆரம்பிச்சது. இதையெல்லாம் செஞ்சுட்டு நகர எல்லையை விடும்போதே மணி பதினொன்னே கால்.
வண்டலூர் உயிரியல் பூங்கா வாசலையே இப்போதான் முதல்முதலாப் பார்க்கிறேன். வெளிப்புற அமைப்பு நல்லாவே இருக்கு. ஒரு நாள் உள்ளேயும் போகணும். டோல் ரோடு. சாலை நல்லாவே இருக்கு. திண்டிவனம் வழியா பாண்டிச்சேரி போறோம் இப்போ. ஒழிந்தியாம்பட்டு சோதனைச்சாவடியில் வண்டியை நிறுத்திட்டு பாண்டியுள்ளே போக பணம் கட்டிட்டு வந்தார் சீனிவாசன். மணி ஒன்னேகால். பகல் சாப்பாடு ஹொட்டேல் ப்ரொம்னேட். கடற்கரை காந்தி சிலைக்கு எதிர்வரிசையில் இருக்கு இது. ஓய்வறை வசதிகள் நல்லா இருக்கு என்பதை போன பாண்டிச்சேரிப் பயணத்தில் பார்த்து வச்சுக்கிட்டதுதான்.
இன்னிக்கு வீக் எண்டா இருப்பதால் ரெஸ்ட்டாரண்டில் கூட்டம் நிறைய. குடும்பங்களா வந்து கூடி இருக்காங்க. பஃபே மெனுதான். வெஜிடேரியன் இருக்குன்னதும் போய்ப் பார்த்தேன் என்ன நமக்கு உண்டானதுன்னு. மண் சட்டியில் தயிர் சாதம் வாவான்னு கூப்பிட்டது. ஓக்கே! நோ ஒர்ரீஸ். ரெண்டு தனித்தனி வரிசைகளில் வெஜ், நான் வெஜ் அழகா வச்சுருந்தாங்க. விலை கொஞ்சம் கூடுதல் என்றாலும் ப்ரஸன்டேஷன் அருமை. சூப்பில் தொடங்கி டிஸ்ஸர்ட் வரை ஏகப்பட்ட வகைகள். கடலைப் பார்த்த இருக்கையில் நிதானமா ரசிச்சுச் சாப்பிட்டலாம். ஃப்ரெஞ்சு பீன்ஸ் பொரியல் சூப்பர்!
வெய்யில் அதிகமா இருக்கு, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டுக் கிளம்பலாமுன்னு கோபால் முடிவெடுத்தார். இன்னிக்கு நம்ம டெஸ்டினேஷன் சிதம்பரம். இங்கிருந்து ஒன்னரை மணி தூரம். நம்ம வீட்டு விசேஷத்துக்கு அபி அப்பாவுக்கு அழைப்பிதழ் அனுப்பினால் பதிலே இல்லை. விசேஷம் முடிஞ்ச மறுநாள் ' இப்பதான் மடல் பார்த்தேன்'னு பதில்போட்டார். அப்புறம் செல் நம்பர் வாங்கிப் பேசுனப்ப நம்ம சிதம்பரம் யாத்திரையைச் சொன்னதும் அங்கே நமக்கு தரிசன உதவிக்கு ஒருத்தரை ஏற்பாடுசெஞ்சுட்டார். அவரைத்தான் ஊருக்குள் நுழைஞ்சதும் கூப்பிட்டுப் பேசணும்.
எப்படியும் கோவில் திறக்க நாலு மணி ஆகாதான்னு நாங்கள் ரெண்டே முக்காலுக்குப் பயணத்தைத் தொடர்ந்தோம். பாண்டிச்சேரி (Basilica of Sacred Heart of Jesus)சர்ச்சை இந்தமுறையும் உள்ளே போய்ப் பார்க்கலை. வெளியே இருந்தே ஒரு க்ளிக். நம்ம மோகன் குமார் பதிவில்தான் உள் படங்களைப் பார்த்தேன். அடுத்தமுறை கண்டிப்பாகப்போகணும். மூளையில் முடிச்சுப்போட்டேன்.
வழியெங்கும் நல்ல 'நீர் 'வளம்! ஒரு பத்துப்பதினைஞ்சு கிலோமீட்டர் போனதும், ஏதோ கோவில் என்ற நினைப்பில் ஓங்கி உயர்ந்த குத்துவிளக்குத் தூண்களைப் பார்த்தால் அது அறுபடை வீடு மருத்துவக்கல்லூரியின் முகப்பு! புதுவை ஊர் எல்லைக்கு மிகவும் அருகில் இருக்கு இது. விநாயகா மிஷன் யுனிவர்ஸிடின்னு போர்டு!
சிதம்பரத்துக்குள் நுழைஞ்சதும் நடராஜ தீக்ஷதருக்கு செல் பேசுனதில் அவர் சொன்ன இடத்தில் வண்டியைக்கொண்டு போய் நிறுத்தினார் சீனிவாசன். ரொம்பவே ஒல்லியா இருந்தவர், அறுபதாங் கல்யாண வாழ்த்துகள் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டார். அபி அப்பா சொன்னாராம், புதுமணத்தம்பதிகள் வர்றாங்கன்னு:-)))நாலரை ஆச்சேன்னு சந்நிதித் தெருவில் இருந்த ஒரு ஓட்டலில் காஃபி குடிச்சோம். அகலமாவும் உயரமாகவும் இருக்கும் ஏழு நிலை கோபுரத்தோடு இருந்தது கோவில். (கிழக்கு கோபுர வாசல்?)
பக்கத்துலே பூஜை சாமான்கள் விற்கும் கடையில் நம்ம காலணிகளை விடச்சொல்லிட்டு கோவிலுள்ளே கூட்டிக்கிட்டுப் போனார். மனுசர் ஒல்லியா இருப்பதால் விசுக் விசுக்குன்னு வேகமா நடக்கிறார். நான் மெது ஓட்டமா பின் தொடர வேண்டியதாப் போச்சு. கல்பாவிய தரையில் தீ மிதிச்சுக்கிட்டே ஓடினேன்னு(ம்) சொல்லிக்கலாம்.
பிரகாரத்தில் தூண்களோடு இருக்கும் மண்டபத்தில் மக்களும் ஒரு சில பைரவர்களுமா நல்ல உறக்கத்தில். கோவில் இன்னும் திறக்கலையாம். வலப்பக்கமா நம்மைக்கூட்டிப்போனபோது உயரமான ஒரு மண்டபத்தில் கம்பிகள் போட்ட ஜன்னலின் வழியா எட்டிப்பார்த்தால் சுதைச்சிற்பமா நந்தி. அதுக்கு நேரெதிரா இல்லாமல் கொஞ்சம் தள்ளி கோவில் மதிள் சுவரில் இருந்த வாசலை சிமெண்ட் வச்சு பூசி இருக்கும் அடையாளம். என்னன்னு கேட்டதுக்கு , ஒரு காண்ட்ரவர்ஸி காரணமுன்னு சொன்னார்! சற்றே விலகி இரும் பிள்ளாய்ன்னு நானும் ஒன்னும் அதிகமாக் கேட்டுக்கலை. இருந்தது.... அப்படியே இருக்கட்டும். நாம் என்ன நாட்டாமை?
கேமெராவுக்கு டிக்கெட் எங்கே வாங்கணுமுன்னு கேட்டப்ப அதெல்லாம் வேணாம். யாராவது கேட்டால் என் பெயரைச் சொல்லுங்கன்னார். இங்கே அப்படி கவுண்ட்டர் ஒன்னும் இல்லை போல!
வெளிப்பிரகாரத்தில் இருக்கும் புள்ளையார் கோவிலில் எங்களைக் கொஞ்ச நேரம் உக்காரச் சொல்லிட்டு சிவில் உடையில் இருந்து ஆன்மீக உடை மாற்றிக்கத் தெற்கு கோபுர வாசல் வழியாக வீட்டுக்குப் போனார். நாங்க புள்ளையாரை சேவிச்சுக்கிட்டு படிகளில் உக்கார்ந்துருந்தோம். இஸ்லாமிய சகோதரிகள் அவர்களுக்குரிய உடுப்போடு தெற்கு வாசலுக்கும் மேற்கு வாசலுக்கும் இடையில் போய் வந்துக்கிட்டு இருந்தாங்க.கோவிலைச் சுத்திக்கிட்டுப்போகாம காலணிகளைக் கையில் பிடிச்சுக்கிட்டு இப்படி கோபுர வாசல் வழியாக ஷார்ட்கட் போறது பல ஊர்களிலும் இருக்கும் வழக்கம்தான். நான் திருவையாறில் இருந்த காலங்களில் ஐயாறப்பர் கோவில் ஆட்கொண்டார் சந்நிதி வழியா மேற்கு வாசலுக்கு குறுக்கே போன நினைவு வந்துச்சு.
புள்ளையார் சந்நிதிக்கு முன்னால் நல்ல நீளமான படிகள். சிதறு தேங்காய் உடைப்பவர்கள் அப்படியே தரையில் அடிச்சு உடைப்பதும் அந்தச் சில்லெல்லாம் எல்லா பக்கங்களிலும் தெறிச்சு ஓடுவதுமா இருக்கு. அப்பப்ப தேங்காய்ச்சில்லுகளை சேகரிச்சுட்டு தேங்காய்த் தண்ணீரால் பிசுக்குப்பிடிச்சுப் போயிருக்கும் இடத்தை ஜஸ்ட் விளக்குமாத்தால் பெருக்கி விடறாங்க ஒரு அம்மா. கவனமாக் கால் வைக்கலைன்னா நம்ம தலை சிதறு தேங்காயாக ஆகும் அபாயம் இருக்கு. மேலும் வெகுதூரம் பறந்து போகும் சில்லுத் துணுக்குகள் காலில் குத்துவதும் நடக்குது. அதான் கோவில் பிரகாரமாச்சேன்னு செருப்பு இல்லாமல்தானே எல்லோரும் நடக்கறோம். புள்ளையாருக்கு முன்னால் ஒரு தொட்டி அமைப்பு கட்டி விட்டுருக்கலாம். கொஞ்சம் நீட்டாவும் இருக்கும். யார் பூனைக்கு மணி கட்டுவாங்க?
கோவில் திறந்ததும் போய் சாமியைக் கும்பிட்டுக்கணுமுன்னு வந்த பக்தர் ஒருவர் நம்மபக்கத்தில் உக்கார்ந்து பேச்சுக்கொடுத்தார். தினமும் மாலை கோவிலுக்கு வந்து மூன்று முறை கோவில் வளாகம் முழுசும் சுற்றுவாராம். பெயர் கலிய பெருமாள். வயசு 77ன்னு தானாய்ச் சொன்னதும் கோபாலுக்கு ஒரே வியப்பு. பார்த்தால் தெரியலையேன்னு அவரைப் பாராட்டிக்கிட்டே இருந்தார்.
நல்ல பெரிய வளாகம். நாற்பது ஏக்கராம். தினமும் மூணு சுத்துன்னா கணக்குப் பார்த்துக்குங்க., டாக்குட்டர்கள் சொல்லும் தூரத்துக்கு நடை அமைஞ்சுருது பாருங்க. ஆரோக்கியத்துக்குக் கேட்பானேன்! பழைய காலத்தில் கோவில் சுத்துவதும், மலையேறி சாமிதரிசனத்துக்குப் போவதும் இந்தக்கால உடற்பயிற்சியும் சரிக்குச் சரியாப்போச்சு:-) சும்மா மலையேறிப்போய் இயற்கை எழிலைப் பாருன்னா யாரு மெனெக்கெடுவாங்க? அதான் சாமி அங்கே போய் உக்காந்துக்கிட்டு வா வான்னு கூப்புடறார்.
அஃபீஸியல் உடுப்போடு நடராஜ தீக்ஷதர் திரும்பி வந்தார். நாங்களும் அவரைப்பின் தொடர்ந்தோம். வலம் வந்தவாறே சிவகாமசுந்தரி அம்மன் சந்நிதி, பாண்டியநாயகம் சந்நிதி, நவலிங்கம் சந்நிதின்னு ஒவ்வொரு சந்நிதியா தரிசனம் செஞ்சுக்கிட்டே போறோம். நான்கு திசைகளிலும் கோபுரங்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்த்தால் நான்கு கோபுரங்களையும் தரிசிக்கலாம். எந்த இடமுன்னு எழுதிப்போட்டுருக்காங்க. அஞ்சரை மணிதான் ஆயிருக்கு என்றாலும் மசமசன்னு இருட்டிக்கிட்டு வருது. நவலிங்கங்களுக்கு ஒரு சின்னக்கோவிலா தனிக்கட்டிடம். ஒரு சுவரில் வாசலும், மற்ற மூன்று சுவர்களிலும் 3 ,2, 3 என்ற கணக்கில் ஜன்னல்களுமா அமைஞ்சுருக்கு. அந்தந்த கிரகங்களுக்கான சிவலிங்கங்கள் ஜன்னல்வழியாப் பார்க்கலாம். ஜாதக ரீதியாக கிரகக்கோளாறு இருப்பவர்கள் வந்து பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.
முருகனுக்குத் தனியா ஒரு சந்நிதி. தனிக்கோவில் போன்ற அமைப்புதான். விமானக்கூரை வடிவம் குடில் போல இருக்கு. கோவிலுள்ளே இருக்கும் இந்த பொன் அம்பலக்கூரையும் இப்படித்தான் இருக்கு. பொதுவா நாம் மற்ற கோவில்களில் பார்க்கும் கருவறை விமானங்கள் டிஸைனில் இருந்து மாறுபட்டவை இவை. முருகனைத் தரிசிச்சோம். மண்டபத்தில் கண்டாமுண்டா சாமான்கள். இன்னும் கொஞ்சம் நீட்டா வைக்கப்படதோ?
நம்ம நடராஜ தீக்ஷதர் அவர்பாட்டுக்கு கோபாலுக்கு கோவிலைப்பற்றிச் சொல்லிக்கிட்டே விடுவிடுன்னு போறார். அதென்னவோ நானும் பார்க்கிறேன் நம்மூரில் கைடு வச்சாலும் சரி, இந்த மாதிரி கோவில்குளங்களை விளக்கிச் சொல்லும் பண்டிட்கள் ஆனாலும் சரி... எல்லாத்தையும் ஆண்களுக்குத்தான் சொல்லணும் என்பதுபோல செயல்படுகிறார்கள். சரி அப்போ கோபால் கேட்டுட்டு நம்மிடம் அதைப்பற்றிச் சொல்வார் என்று இருந்தால் சுத்தம். அந்தக் காதில் கேட்டு 'அதே காதில்' விட்டுரும் டெக்னிக் கோபாலிடம் இருக்குன்னு அவுங்களுக்கு எப்படித் தெரியும்?
இந்த இடத்தைப்பற்றி என்ன சொன்னாருன்னு கேட்டால்..... சரியா நினைவில்லை என்னமோ சொன்னார் னு சொல்வார்:( போதுமடா சாமின்னு இருக்கும். கூடவே ஒட்டிக்கிட்டே போனால் எதோ கொஞ்சம் என் காதில் விழும். ஆனால் படம் எடுக்க அங்கங்கே கொஞ்சம் ஒரு சில நிமிடங்கள் நிற்கும்போது இவர்கள் எங்கியோ போயிருப்பார்கள். முன்பின் தெரியாத இடமென்றால் தேடி வேற அலையணும் எனக்கு!
கோவில் திருக்குளம் அழகா சுத்தமா இருந்தது. கோவிலுக்குள்ளேயே இருப்பதால் கவனிப்பு இருக்கு போல! நல்ல பிரமாண்டமான கோவில்தான். வயசு ரெண்டாயிர வருசம் என்கிறார்கள். வெளிப்பிரகாரத்தைச் சுற்றிவந்து கோவிலின் உள்பிரகாரத்திற்குள் நுழைந்தோம். நீங்கள் பூஜையைப் பாருங்கள். முடிந்ததும் நான் வரேன்னு சொல்லி எங்களை நடராஜர் சந்நிதியில் கொண்டு விட்டார் நடராஜ தீக்ஷதர்.
தொடரும்...............:-)
43 comments:
தில்லையம்பல நடராஜா
செழுமைநாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா!
இதுவரைக்கும் சிதம்பரத்துக்குப் போனதில்லை. இவ்வளவு படங்களை பாக்குறதும் இதுதான் முதன்முறை. சினிமாவில் ஒன்றிரண்டு காட்சிகளில் பாத்ததுதான். சிதம்பரம்னு ஒரு மலையாளப்படம் ஸ்மிதா பாட்டில் நடிச்சது உண்டு. அதைப் பாக்கனும்னு இப்பத் தோணுது.
ஓ! அந்த வழியை சிமிண்ட் வெச்சிப் பூசியிருக்காங்களா? நீங்க நாட்டாமை தாரளமா செய்யலாம். யார் யாரோ நாட்டாமை செய்றப்போ நீங்களும் நானும் தாராளமா நாட்டாமை செய்யலாம்.
கோயில் பாக்க ரொம்பப் பெருசா இருக்கு. திருவண்ணாமலையை விட இந்தக் கோயில் பெருசா?
தீட்சிதர்கள் கைலாசத்துல இருந்து சிவனார் கூடவே வந்தாங்கன்னு ஒரு கதை இருந்தாலும் இந்த தீட்சிதர்கள் கேரள நாட்டிலிருந்து வந்தவர்கள்னும் ஒரு கருத்து இருக்கு. இதுவும் ஒரு காண்ட்டிராவர்சிதான்.
எல்லாரும் எல்லாரையும் சமமா மதிச்சு நடந்தா போதும். ஒரு காண்டிராவர்சியும் இருக்காது. :)
அருமையான படங்கள்...
நடராஜர் கோவில் மடபள்ளியில் புளிச்சாதம் நன்றாக இருக்குமே(10 வருடங்களுக்கு முன்பு சாப்பிட்டது). சாப்பிட்டீர்களா?
பழைய காலத்தில் கோவில் சுத்துவதும், மலையேறி சாமிதரிசனத்துக்குப் போவதும் இந்தக்கால உடற்பயிற்சியும் சரிக்குச் சரியாப்போச்சு:-) சும்மா மலையேறிப்போய் இயற்கை எழிலைப் பாருன்னா யாரு மெனெக்கெடுவாங்க? அதான் சாமி அங்கே போய் உக்காந்துக்கிட்டு வா வான்னு கூப்புடறார்./
ஆன்மீகத்தேனில் கலந்து கொடுத்த ஆரோக்கிய பொக்கிஷம் .. நம்
ஆன்றோர்களின் தனிச்சிறப்பு
ஆகும் .....
சிதம்பரம் போற விஷயத்தை என் கிட்டேயும் சொல்லி இருக்கலாமே! :))))) அந்த வழி நந்தன் வந்த வழினு சொல்லி தீக்ஷிதர்கள் பூசிட்டதா ஒரு பிரச்னை. உண்மையில் கோவிந்தராஜப் பெருமாளுக்கு ராஜ கோபுரம் எடுக்கையில் சாமான்கள் உள்ளே வர வேண்டி அங்கே மதிலில் உடைத்து வழி செய்தார்கள். அது காலப்போக்கில் இப்படி ஒரு பேச்சு வந்து விட்டது. நடராஜ தீக்ஷிதர் (அபி அப்பாவின் நண்பர்) தெற்கு வீதியில் இருப்பதால் நீங்க போனது தெற்கு கோபுர வாசல்/அல்லதுமேற்கே இருந்து வந்திருப்பீங்களோ?
அதாவது தெற்கும், மேற்கும் சேரும் இடத்தில் உள்ளது அந்தப் பிள்ளையார் கோயில். நீங்க போனது தெற்கு வாசல் வழியாகத்தான். நம்ம ரங்க்ஸிடம் படங்களைக் காட்டி நிச்சயம் செய்து கொண்டு விட்டேன். மேலதிகத் தகவல்களுக்குப் படிக்கவும் சிதம்பர ரகசியம் சிதம்பர ரகசியம்
சிதம்பர ரகசியம்னு ஒரு படம் எஸ்.வி.சேகர் நடிச்சு வந்தது. செட்டிநாட்டு பாஷையில் கதை! மின்சாரம் போயிடுச்சு, அப்புறமா வரேன். :))))
புள்ளையாருக்கு முன்னால் ஒரு தொட்டி அமைப்பு கட்டி விட்டுருக்கலாம்//
நானும் ஒவ்வொரு முறை சிதம்பரம் போகும் போதும் என் கணவரிடம் இப்படித்தான் சொல்லி புலம்பி வருவேன்.
வாங்க ஜீரா.
சந்தர்ப்பம் கிடைச்சால் கட்டாயம் பார்க்க வேண்டிய கோவில் இது. சைவமும் வைணவமும் கலந்து இருக்கு பாருங்க. இது அந்தக் காலக்கட்டங்களில் அபூர்வம் இல்லையா?
திருவணாமலைக்கோவில் மட்டும் 24 ஏக்கர்கள். ஆனால் கிரிவலம் என்று மலையையும் கூடச்சேர்த்துக்கிட்டால் இதைவிடப்பெருசாத்தான் இருக்கும்.
இங்கே கோவில் 40 ஏக்கரும் அதைச்சுற்றியே ஊருமா இருக்கு.
இப்ப கோவில் தீக்ஷதர்கள் கைவசமிருந்து கொஞ்சம் மாறி இருக்கோ?
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ரசிப்புக்கு நன்றிகள்.
வாங்க சதுக்க பூதம்.
பயணங்களில் வாயைக் கட்டுவது என் வழக்கம். விடுமுறை வீணாயிடக்கூடாது பாருங்க:-)
அடுத்தமுறை போகும்போது நீங்க சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்க, அதே ருசிதான்னு!
வாங்க இராஜராஜேஸ்வரி.
காலம் மாற மாறவீட்டைவிட்டு வெளியில் போகாம எல்லோரும் ஏறக்கொறைய ஹௌஸ் அரெஸ்ட்டில் இருக்கோம் பாருங்க:(
லைப்ரரி போவதும்கூட குறைஞ்சுருக்கு. கூகுள் ஆண்டவரே துணை.
வாங்க கீதா.
சொன்னா நம்புங்க உங்களை நினைச்சுக்கிட்டேதான் பதிவு எழுதுனதும் பயணம் ஆரம்பிச்சதும்.
உங்களை சந்திக்க ஆவலா இருந்தோம். நீங்கதான் ஊரில் இல்லை:(
உங்க சிதம்பர ரகசியத்தின் சுட்டியை துளசிதளத்தில் பகிர்ந்து கொள்ள அனுமதி உண்டுதானே:-))))
கீதா,
கன்ஃப்யூஷன் க்ளியர்ட்:-)
நாங்கள் கோவிலுள் போனது கிழக்கு வாசலேதான். உள்ளே நுழைஞ்சு இடது கைப்பக்கம் திரும்பித்தான் வலமாகவே போனோம். தெற்கு வாசல் வந்ததும் புள்ளையார் மூலையைக் கைகாமிச்சு அங்கே கொஞ்ச நேரம் உக்காருங்க நான் வீட்டுக்குப் போயிட்டு வரேன்னு சொல்லி தெற்கு வாசலில் நடராஜ தீக்ஷதர் போனார்.
முதலில் வீட்டுக்குக் கூப்பிட்டார்தான். நாந்தான் இல்லே நீங்க போயிட்டு வாங்க புள்ளையார் பக்கத்தில் இருக்கேன்னு சொன்னேன்.
அப்புறம் அவர் திரும்பி வந்ததும் வலமாகவே போய் கடைசியில் மூடி இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தை வெளியே இருந்து க்ளிக்கிட்டு , திரும்பி நேரா நடந்து பிரசாத ஸ்டால் இருக்கு பாருங்க அதைக்கடந்து கிழக்கு கோபுரத்தை இடப்பக்கம் பார்த்துக்கிட்டே வந்தேன்.
ஒரே ஒரு கோபுரவாசல் வழியா உள்ளெ போய் அதே கோபுரவாசலில்தான் வெளியே வந்தோம்.
மற்ற கோபுரங்களை வெளிப்ரகாரத்தில் இருந்து பார்த்ததோடு சரி.
வாங்க கோமதி அரசு.
புள்ளையார்ப்பட்டி கோவிலில் நான் பார்த்து ரசித்த இடம் இந்த தேங்காய் உடைக்கும் தொட்டி.
நட்டுக்கோட்டையார்கள் கட்டுவித்த வெளிநாட்டுக்கோவில்களில் எல்லாம் இப்படித்தான் அருமையா இருக்கு. நம்ம சண்டிகர் முருகன் கோவிலிலும் புள்ளையாருக்கு முன்பு ஒரு தொட்டி கோவிலுக்குள்ளேயே வச்சுருக்காங்க.கட்டிட டிஸைன் காரைக்குடிக்காரர்தான்:-)
சென்னையிலும் அடையார் அனந்தபதுமன் கோவிலில் லேட்டஸ்ட் அடிஷன் தேங்காய்த் தொட்டி.
நல்ல ப்ராக்ட்டிக்கலான சொல்யூஷன். பாராட்டத்தான் வேணும்.
வருகைக்கு நன்றி.
பொன்னம்பலம் நல்லாருக்காரா?.
கோயிலும் படங்களும் அருமை.
வாங்க அமைதிச்சாரல்.
இப்பெல்லாம் பொன்னம்பலம் நடிக்கறதில்லை போல! பார்த்தே கனகாலமாச்சு.
பொன்னம்பலத்தாடுவானைப்பற்றிக் கேக்கறீங்கன்னா.... அவனுக்கென்னப்பா ராஜா!!!! அடுத்த இடுகையில் இன்னும் கொஞ்சம் பேசலாம் அவனைப்பற்றி.
எல்லாம் சின்னக்கெமெராவில் எடுத்தவையே.
ஹி..ஹி.. நான் ரெண்டு பேரையுமே கேக்கலை துள்சிக்கா. பொன் வேய்ந்த அம்பலத்தோட அழகைப்பத்திக் கேட்டேன் :-)))
//கீதா,
கன்ஃப்யூஷன் க்ளியர்ட்:-)
நாங்கள் கோவிலுள் போனது கிழக்கு வாசலேதான். //
ஹிஹி, எனக்கும் குழப்பம். கோபுரம் என்னமோ கிழக்கு. ஆனால் உள்ளே பிள்ளையாரைக் காட்டிய இடம் தெற்கு! அப்புறமா ரங்க்ஸைக் கூப்பிட்டுக் காட்டினேன். எனக்கும் கொஞ்சம் குழப்பம் தீர்ந்தது. :)))) கீழ வீதியில் கிருஷ்ண விலாஸில் காபி, டிபன் எல்லாமே நன்றாக இருக்கும். அதுக்கு எதிரே தான் எங்க கட்டளை தீக்ஷிதர் இருக்கிற வீடு. :))))
அது சரி, கேட்க நினைச்சு மறந்துட்டே போகுது. சக்தி விகடனில் லதானந்தின் கட்டுரையில் (மதுரா விஜயம்) படங்கள் நீங்க எடுத்தது தானே? உங்க பெயரைத் தான் போட்டிருக்கு.
நான் கல்லூரியில் படிக்கும் போது அப்பா ஒருமுறை சிதம்பரத்துக்கு அழைத்துக் கொண்டு சென்றார். சாயரட்சை நன்றாக இருக்கும் என்று சொன்னார். ஆனால் எங்களால் அன்று பார்க்க முடியவில்லை.
இப்பதிவினை படித்ததும் அப்பாவும் அவர் காட்டிய அந்த கோயிலும் கண்ணுக்குள்...அப்பா பணிக்கு சேர்ந்த ஆரம்ப காலங்களில் சிதம்பரத்தில் தான் இருந்திருக்கிறார்.
நடராஜனின் தரிசனம் எங்களுக்கும் கிடைக்கும் வரை காத்திருக்கிறோம். விரைவில் கிடைக்கட்டும்.
பள்ளி/கல்லூரி நாட்களில் சென்றது. அதன் பிறகு செல்லவில்லை. அம்மணியும் போகணும்னு சொல்லிட்டாங்க! போயிட வேண்டியது தான்.... :)
சிறப்பான படங்கள்.
பவர்புல் இடம்.....
/ நல்ல பிரமாண்டமான கோவில்தான். /
கோவிலின் பிரமாண்டத்தையும், அழகையும் அருமையாகப் படங்களில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
கோபுர வாசல் காற்றை ரசித்தீர்களா!! எனக்குச் சிதம்பரத்தில் மிகவும் பிடித்தது அதுதான்.
பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்இய கோவிலும் பிரகாரங்களும்.
அழகான நந்தி,பொன்னம்பல நடராஜன்,
பஞ்சகச்சம் கட்டிக் குறுக்கும் நெடுக்குமாக நடந்த குட்டிதீக்சிதர்கள்ளும் அவர்களைத் திருமணம் செய்த சிறு வயது ஒன்பது
கஜ மாமிகளும். நல்ல படங்கள் துளசி. கோபால் குறிப்பெடுப்பார்னு நினைச்சேன்:(
ஓ அவரா ?
அவருக்கென்ன குறைச்சல் அமைதிச்சாரல்? கேட்பானேன்....தங்கமா ஜொலிக்கிறார்.
கீதா,
சக்தி விகடன் தொடரா?
ஆமாம். அதுக்கு படங்களும், சிலபல தகவல்களும் நம்ம சப்ளைதான்.
நம்ம லதானந்த அவருடைய நடையில் எழுதறார்.
வாங்க ரோஷ்ணியம்மா.
சாயரட்சைதான் இங்கே விசேஷமாம். அபி அப்பாவும் சொன்னார்.
நடராஜன் தரிசனம் நல்லாவே கிடைச்சதுப்பா.
வாங்க வெங்கட் நாகராஜ்.
தங்க்ஸ் ரெடியாகிட்டாங்க. போய்வந்ததும் உங்க இருவரின் பார்வையில் வரப்போகும் ரெண்டு பதிவுகளுக்கு வெயிட்டிங்:-)
வாங்க நான்.
//பவர்புல் இடம்//
உண்மைதான். ஒத்தைக்கு ரெட்டை! கேட்பானேன்!!!
வாங்க ராமலக்ஷ்மி.
லைட்டிங் அவ்வளவா இல்லைன்னு குமுறிக்கிட்டு இருந்தேன்.
இன்னும் தெளிவாகவும் நிதானமாவும் எடுக்கலாம்தான். காலில் வெந்நீர்:(
வாங்க வல்லி.
கோபுரவாசல் காற்றை ரசிக்க ஒரு விநாடியாவது நிற்கவேணாமா?
ஒரே ஓட்டம்துள்ளல்தான்:(
குட்டி தீக்ஷதர்களையும் மாமிகளையும் பார்க்கலையேப்பா:(
கோபால் மனசுலே குறிப்பெடுப்பாரோ? அப்படி எதாவது சொல்லணுமுன்னால் நிதானமாத்தான் சொல்வார்.
2009 சென்னையில் அவருக்கு ஸ்கேன் எடுத்தப்ப என்னமாதிரி அங்கத்து நர்ஸ்கள் (எல்லாம் சரியா இருக்கேன்னு) கவலைப்பட்டாங்கன்னு இன்னிக்கு( 2013 ) காலையில் சொன்னார். நிதானம் ப்ரதானம்!!!!
சிதம்பரம் கோவில் படங்கள் மிக அழகு.தகவல்களும் சிறப்பாக இருக்கு.தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்.
தென் இந்திய தலயாத்திரைகளில் தவற விட்ட இடம். தர்சிக்கக் கிடைத்ததில் மகிழ்கின்றேன்.
அம்பலத்தானை தர்சிக்காதுவிட்டால் மீண்டும் இந்தியாவரும் பாக்கியம் கிடைக்கும் என்றார்கள்.:)
நான்கு தடவைகள் இந்தியா வந்தபோதும் கிட்டவில்லை.
இப்பொழுது பலவருடங்கள் ஆகிவிட்டது. கிடைக்க வைப்பது ஆட்டுவிப்போன் கைகளில்.
கோவை ஈச்சானாரி கோவிலில் வாசலில் பெரிய தொட்டி இருக்கும் போகும் கார், லாரி, வண்டிகள் எல்லாம் நின்று வணங்கி தேங்காய் விடலை போட்டு செல்வார்கள்.
வாங்க ரமா ரவி.
//தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்.//
ஆஹா ஆஹா......
அடுத்த பதிவை இன்னிக்கு போட்டாச்சு. ஆனால்...எப்படி இருக்குன்னு நீங்கதான் அங்கே சொல்லணும்.
வாங்க மாதேவி.
அடடா..... கூப்பிட்டால்தான் நமக்கு தரிசனம் கிடைக்கும். சீக்கிரம் சிதம்பரப்பயணம் கிடைக்க வேண்டுகின்றேன்.
இங்குள்ள இலங்கை நண்பர்கள் சிலர் சிதம்பரம் சென்று வந்ததையும் அங்கே சிலகாலம் தங்கி வழிபட்டதையும் கேட்கும்போது சைவம் உங்களூரில் அதிகம் தழைத்திருக்குன்னு நினைப்பேன்.
அரியும் சிவனும் ஒன்னுன்னு சொல்லி வச்சுருக்காங்க பெரியவங்க!
வாங்க கோமதி அரசு.
எல்லா கோவில்களிலேயும் தேங்காய்க்குத் தொட்டி அமைப்பு கட்டாயம் வேணும்.
முதல்முறை நான் கோவைக்கு வந்தே 35 வருசங்களாச்சு. அப்போ கடைவீதியில் இருக்கும் சௌடாம்பிகை கோவிலையும் மருதமலை முருகனையும் தான் தரிசிக்க முடிஞ்சது.
ரெண்டாம் முறை கோவையில் ஒரு நாள்தங்கி மறுநாள் குருவாயூர் போய் மகளுக்குத் துலாபாரம் கொடுத்துட்டு உடனே சென்னைக்கு வந்துட்டோம்.
அது ஆச்சு 23 வருசம்.
அடுத்தமுறை வரும்போதுதான் வெள்ளியங்கிரி, ஈச்சனாரின்னு எல்லா இடங்களையும் தரிசனம் செஞ்சுக்கிட்டு அப்படியே பதிவர் சந்திப்பு ஒன்னும் நடத்திட்டு வரணும்.
எத்தனை பெரிய கோவில்! பிராகாரங்களின் புகைப்படங்கள் மிக அழகு.
மறுபடி போக ஆசை வந்தாச்சு!
வாங்க ரஞ்ஜனி.
பேசாம பதிவர் மாநாடு ஒன்னு அங்கே நடத்தலாம்.இடப்பிரச்சனையே இல்லை:-)
சிதம்பரம் நடராஜர் தெற்கு நோக்கிய சன்னதி சன்னதிக்கு நேரே பெரிய நந்தி (சுதையில்) பாதுகாப்பு காரணங்களுக்காக அடைக்கப்பட்டது என்று ஒரு சிலர் கூறுகிறார்கள் . சரியான காரணம் யாருக்கும் தெரியாது
//சிதம்பரம் நடராஜர் தெற்கு நோக்கிய சன்னதி சன்னதிக்கு நேரே பெரிய நந்தி (சுதையில்) பாதுகாப்பு காரணங்களுக்காக அடைக்கப்பட்டது என்று ஒரு சிலர் கூறுகிறார்கள் . சரியான காரணம் யாருக்கும் தெரியாது.//
ஒரு காரணமும் இல்லை. அங்கிருந்து நேரே கோவிந்தராஜரின் ராஜகோபுரத்துக்கு வரலாம். முதலில் அங்கே ராஜகோபுரம் கிடையாது. நன்கு கவனித்துப் பார்த்தீர்களானால் நடராஜரைச் சுற்றியுள்ள பிரகார மதில் சுவரை உடைத்து கோவிந்த ராஜருக்கு ராஜகோபுரம் எழுப்பப் பட்டிருப்பதைக் காணலாம். ராஜகோபுரத்தின் இருபுறமும் காணப்படும் மதிலின் பழமையையும் அதிலே காணப்படும் ரிஷபங்களையும் பார்த்தாலே உண்மை புலப்படும்.
ராஜகோபுரம் எழுப்பப் படுகையில் கட்டுமானப் பொருட்களை விரைவில் கொண்டு வந்து சேர்க்கவேண்டித் திறந்த இடம் கட்டுவேலைகள் முடிந்ததும் அடைக்கப் பட்டது. தெற்கு வாயிலில் அடைக்கப்பட்ட இடத்தின் அருகேயே நடராஜருக்கு என்றே உள்ள கணங்களை வாயில் காப்போனாக இருபக்கமும் காணலாம். ஸ்ரீரங்கத்தைப் போல் சிதம்பரத்திலும் தெற்கைப் பார்த்துக் கொண்டே நடராஜர் ஆடிக் கொண்டிருக்கிறார்.
வாங்க samisam.
முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்களுக்கு பதில் அளித்த கீதாவுக்கும் நன்றிகள்.
Post a Comment