Monday, January 14, 2013

காலத்தில் பின் நோக்கிப் போகலாமா?நியூஸி நாட்டின் வயசு  வெறும் 173 என்பதால்  இருபத்தியஞ்சு வருசத்துக்கு முன்னாலே நடந்ததெல்லாம்கூட சரித்திரம்தான். அதென்ன 25?  அப்பதானே நாங்க இங்கே வந்து குடியேறினோம்:-) இது எங்கள் வெள்ளிவிழா ஆண்டு, கேட்டோ!


தென்கோடி ஊரான  ப்ளஃபைப் பற்றிய சமீபத்திய  அறிக்கை சொல்லுது,  மொத்த சனமே 1938தானாம்.(இந்த எண் வருசத்தைக் குறிக்குதுன்னு தவறா நினைச்சுக்காதீங்க! மக்கள் தொகையே இம்புட்டுதான்)

 கடலின்  கரை ஓரமாகவே   மெரீன் பரேடு சாலை ஓட,  எதிர்ப்புறம்  இருக்கும் 871 அடி  உயரக் குன்று( ப்ளஃப் ஹில்ஸ்)   மேற்கு பார்த்த சரிவு முழுசும்  காட்டுப்பகுதி. கிழக்குப் பார்த்த சரிவிலே வீடுகள்.  எல்லாமே கடலைப் பார்த்தபடி.    பெரிய தெருக்களா ஒரு நாலைஞ்சு. அங்கிருந்து பிரியும் குறுக்குத் தெருக்களா ஒரு பத்திருவது.  முக்கிய கட்டிடங்கள் எல்லாம் இந்த மெரீன் பரேடில்தான். இன்னும் கொஞ்சம் நேரம் கிடைச்சால் வீடுகளை எண்ணிக்கூட பார்த்திருக்கலாம்.!  ஆயிரம் இருக்குமோ?  சிலர் கோடைகால விடுமுறைக்காக  கடல்பார்க்கும் வீடுகளை வாங்கிப்போட்டுருக்காங்க.


இங்கே இந்த துறைமுகம் இல்லைன்னா  இவ்வளவு சனம் கூட இருக்காது; இது நாட்டின் கடைசித் துறைமுகம்.  பக்கத்துலே டிவாய் ( Tiwai)என்னும்  இடம்  ஒன்னு இருக்கு. கரைப்பகுதி கொஞ்சம்  மூக்கு நீண்டுபோய்  கடலில் முடியும் இங்கே. Aluminium Smelter ஒன்னு இங்கே இயங்குது. உலகின் பெரிய 20 ஸ்மெல்ட்டர்களில் இதுவும்  ஒன்னு.  காற்று மாசு படவேணாமுன்னு ரொம்பத்தள்ளிக் கடலுக்குப்பக்கம் வச்சுருக்காங்க போல!   நாம் இங்கே கடற்கரைச் சாலையில் இருந்தே  தொலைவில் இருக்கும் அதைப்பார்க்கமுடிகிறது.  ஊர் மக்களில் பாதிப்பேருக்கு இங்கேதான்  வேலை.

நியூஸி சரித்திரத்திலே பதிவு செய்யப்பட்ட ஒரு சமாச்சரமுன்னா 1813வது ஆண்டு  வியாபாரம் செய்ய எதாவது ச்சான்ஸ் கிடைக்குமான்னு   வெள்ளையர்கள் இந்த ப்ளஃப்  பக்கம் வந்துருந்தாங்களாம். அந்தக் கப்பலின் பெயர்  Perseverance. கிபி 1770  ஆண்டு முதலே எங்கள் அண்டைநாடான  அஸ்ட்ராலியாவை  பிரிட்டிஷ் அரசு  அவர்களுடைய காலனி நாடுகளிலொன்றாக ஆக்கி வச்சுருந்தது.   அங்கே கால் குத்திய  பின்  அக்கம்பக்கம் வேற  புது இடங்களைத்தேடி வந்த கப்பல்தான் இது.


அந்தக்காலக்கட்டத்தில் திமிங்கிலவேட்டைக்கான முக்கிய இடமா இது ஆகிப்போனதால்  அது சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக சனம்  குடிவந்தபோது ஏற்பட்ட ஊர்தான் இது.  கடலில் இருக்கும் முக்காவாசித் திமிங்கலங்களைக் கொன்னு வாயிலே போட்டுருந்தாங்க.  திமிங்கில எண்ணெய் காய்ச்சி எடுத்த   கொப்பரைகள் எல்லாம் ம்யூஸியத்தில் வச்சுருக்காங்க.


ஹெரிட்டேஜ் ட்ரெயில் ப்ரோஷரில்  ஒன்று இரண்டு மூன்றுன்னு வரிசைப்படுத்தி அழகாப்போட்டு வச்சுருப்பதால் நமக்கு அதையெல்லாம் தரிசனம் செஞ்சுக்கிட்டே போவது எளிதுதான். ப்ளஃப்  கன்பிட் பாய்ண்ட் க்கு போனோம்.  நல்ல ஏற்றத்தில் போய் தெற்கு மூலைக்காத் திரும்பணும். இரண்டாம் உலகப்போர்  நடந்துக்கிட்டு இருந்த காலக்கட்டம்.  நாட்டுக்குப் பாதுகாப்பு வேணுமுன்னு  15,085 பிரிட்டிஷ் பவுண்ட்  செலவு செஞ்சு  கட்டுன அதிக உறுதியான காங்க்ரீட்  கட்டிடம்.  குண்டு போட்டால் கூட அழியாது. அப்படி ஒரு ஸ்ட்ராங்.  ஆமாம்..... நாங்க இங்கிருந்து குண்டு போட்டு  எதிரியைத் துரத்துவோமுன்னு பீரங்கி வைக்கும் மேடை அமைச்சு பீரங்கியை ஏத்தி வச்சுக் ஜப்பான்காரனுக்காகக் காத்துக்கிட்டு இருந்த இடம்.

படைவீரர்கள் தங்க, சகல வசதிகளோடு ஃபென்ஸ் கூடப்  போட்டுக் காபந்து  பண்ணி வச்சுருந்தாங்க. கட்டி முடிச்சுக் குடிவந்தது  11 டிசம்பர்  1942.  "வரட்டும்,  அவனை.........."   அவன் வருவான்னு  தேவுடு காத்து அவன்  இனி வரப்போறதில்லைன்னு  1944 ஆகஸ்டு மாசம் இழுத்து  மூடிட்டுப்போன இடம்.  மூடுபனித்திரை  இல்லாத சமயம்   ஸ்டீவர்ட் தீவு தெரிஞ்சாலும் தெரியுமாம். நானும்  பீரங்கி மேடையில் ஏறிப்பார்த்தேன்...ஊஹூம்.....:)
சரித்திரக்குறிப்புகள் எல்லாம் விளக்கித் தகவல்கள் வச்சுருக்காங்க.  படிச்சுப் பார்த்தோம்.


அடுத்த இடம்  வார் மெமோரியல். நாட்டுக்காக உயிரிழந்த  இந்த ஊர் மக்களின் பெயர்கள் பொறிச்ச நடுகல்.  கண்ணில் படாமல் தப்ப முடியாதபடி  கடற்கரைச் சாலையிலேயே இருக்கு.பே வியூ ஹொட்டேல். 1892 இல்  மாடி வச்சுகட்டினது. நாலு விருந்தினர்  அறைகள். (ஹாஹா..... நாலு பேர் இருந்தால் கூட்டம் என்று கொள்க!!!)  குதிரை லாயம், வொர்க்‌ஷாப். பெரிய புல்வெளி, காய்கறித்தோட்டம்  இப்படி சகல வசதிகளோடு 1908 வரை  நடத்துனவர்  Joseph Metzger.  விருந்தினர்களுக்கு ஹோம்ஸிக் வராமல் அவுங்களே லானைப் புல்வெட்டிப் பராமரிச்சு, (குதிரைகளை மேயவிட்டு?)  காய்கறித் தோட்டத்தில்  விளைச்சல் பார்த்து  ப்ரெஷ் காய்களை ஆக்கித் தின்னுக்கலாம். போல!!!


 Joseph Metzger காலத்துக்குப்பின் பல கைகள் மாறி 1938 வரை தாக்குப்பிடிச்சது  ஹொட்டேல்  பிஸினெஸ். அப்புறம் சரித்திரமா மாறி நிக்குது. இதுவும் இதே மெயின் சாலையில்தான். வண்டியை விட்டு இறங்காமல் பார்த்தோம், க்ளிக்கினோமுன்னு போகலாம்:-)


பட்டியலில் அடுத்த ஐட்டமும் ஒரு ஹொட்டேல்தான்.  க்ளப் ஹொட்டேல். அந்தக்கால ஸ்டைலில் கட்டியது. உள்ளே  ரொம்ப நல்லா இருக்கு(மாம்)  இருக்கட்டும்.  தொட்டடுத்து  பழைய தபால் நிலையக்கட்டிடம். . 1899 வது வருசத்தில் மட்டுமே 75 985 கடிதங்கள்  இந்த ஊரில் இருந்து  வெளியே போயிருக்காம். அரண்டு போயோ என்னவோ  புதுசா தபால் நிலையம் வேணுமுன்னு மறு வருசமே (  1900 )கட்டி இருக்காங்க. படத்தில் உள்ள  கட்டிடத்தைக் காணோமேன்னு தேடுனா...... இப்ப நிறத்தை மாற்றி அலங்காரம் செஞ்சு இது ப்ளஃப் லாட்ஜா  இயங்குது!

இருபதாயிரம்  சாக்குமூட்டை  கோதுமை தானியம் சேகரிச்சுவச்ச இடம், ஒரு லட்சம்  சாக்குமூட்டை ஆட்டு ரோமம், ஆட்டுத்தோல்கள் வச்ச குடோன் இப்படி 'சரித்திரம்'(!!!!) சொல்லும்  சில இடங்களையெல்லாம்  'இன்னொருக்கில் ஆகட்டே'ன்னு விட்டுட்டு எனக்கு  இண்ட்ரஸ்டிங்கா இருந்த  ஒரு இடத்துக்குப் போனோம்.


 உள்ளூர் சரித்திரத்தில் இடம்பெற்றவர்களைவிட  சரித்திரமாகவே ஆகிப்போனவர்கள்  உறங்கும் ப்ளஃப் கல்லறைத்தோட்டம்.  நல்ல சிறு குன்றின்மேல் இருக்கு.  அங்கிருந்து பார்த்தால்  வெட்டவெளியில் தெரியும் கடல்.  அருமையான கடல் காற்று. ஹாய்யா படுத்துருக்கலாம்.தோட்டத்தின் முகப்பில் வலது பக்கம்  கண்டெய்னர் போன்ற  ( ஐயோ.... எங்கூரில்  நிலநடுக்கம் வந்த பிறகு கண்டெய்னர்கள்தான் ஊர்பூராவும். கடைகள், மால்கள்,  இடிந்த கட்டிடங்கள்  மேலும் சரியாம முட்டுக் கொடுக்க , இன்னும்  சாலை ஓரங்களில்  மதில் சுவர்களாக்கூட  இருக்கு. பொழுதன்னிக்கும் பார்த்துப்பார்த்து,   மெட்டல் ஷெட்டுகள் கூட கண்டெயினராத் தோணுதே!) ஒரு  ஷெட்டில்  கல்லறையில் மீளாத்துயிலிலாழ்ந்திருப்பவர்களைப்பற்றிய விவரங்கள் வச்சுருக்காங்க.  உள்ளுர் நகரசபையில்   1917 வது ஆண்டு தீ விபத்து ஏற்பட்டு  இறப்பு ஆவணங்கள்  முக்கால்வாசி எரிஞ்சு போச்சாம்.  சம்பந்தப்பட்டக் குடும்பத்தினரிடமும்  கல்லறைகளில்  செதுக்கி வச்சுருக்கும்  தனிப்பட்ட விவரங்களையும்  சேகரிச்சு இப்ப இப்படி ஒரு ஏற்பாடு)


கல்லறைகளுக்கு எண்கள் கொடுத்து பக்காவா ஒரு வரைபடம்!  நமக்கு யாரையாவது  பார்க்கணுமுன்னா,  பேர் வரிசையில்  பார்த்து  வரைபடத்தின் உதவியால் டக்ன்னு அங்கே போய் நிக்கலாம்.

சில குடும்பக் கல்லறைகள் ஒரே இடத்தில்  ஏற்பாடு செஞ்சு அங்கே  ஹெட் ஸ்டோனில்  அங்கிருப்பவர்கள் விவரம் எல்லாமும் செதுக்கி வச்சுருக்கு.  அந்தந்தக் குடும்பத்தினரின் பணம் ,மனம் அனுசரிச்சு நடக்கும் சமாச்சாரங்கள் இவை.


இங்கே  முதல்முதலாக புதைக்கப்பட்டவர்  ஜான் ஃபாக்ஸ் ஓவரிங்ஹாம். 3 டிசம்பர் 1860.

 நியூஸியின் பிரதமரா ரெண்டு முறை பதவியில் இருந்த  ஸர் ஜோஸஃப் ஜியார்ஜ் வார்ட்  (Sir Joseph George Ward) கூட இங்கேதான் இருக்கார் , தன் மனைவியுடன்.இந்தக் கல்லறைத் தோட்டம்  ஹெரிட்டேஜ் ஸைட்டாக  பதிவு செஞ்சுட்டதால் இப்ப புதுசா வர்றவங்களுக்கு  இங்கே இடம் இல்லை.  சமீபத்திய கல்லறைகள்  வேற எங்கோ இருக்கணும். கல்லறைக்கு தொட்டடுத்த தெருவில் வீடுகள் எல்லாம்  ஒன்னுபோல  இருக்கு.


கடல் நோக்கிக் கீழிறங்கும் தெருவின்  கோடியில் மெயின் ரோடு சேரும் இடத்தில் ஒரு ஓரமா  பார்க்க வேண்டிய  வரிசை எண் 4.  பழைய பிரதமர் ஜோஸஃப் வார்ட்  அவர்களின் உருவச்சிலை.  இருக்குமிடம் தெரியாமல்  நிக்கறார்.  நாம் ஊருக்குள் வந்ததும்  துறைமுகத்துக்குத் திரும்பின  அதே  இடம். தலையை வலப்பக்கம்திருப்பி இருந்தால்  கண்ணில் பட்டிருக்கலாம்.


அப்பா சரியான குடிகாரர்.    ஆயுசு வெறும் 31.  அப்ப ஜோஸஃப் வார்டுக்கு 4 வயசு. அம்மா ஹான்னா (Hannah)  கஷ்டப்பட்டு புள்ளையை வளர்க்கறாங்க. பிழைப்பு தேடி  மெல்பெர்ன்(அஸ்ட்ராலியா)  நகரில் இருந்து  7 வயசு ஜோஸஃபோடு   கேம்பெல்டௌன் என்ற  இடத்துக்கு  வந்து சேர்ந்தாங்க.  அப்ப ப்ளஃபுக்கு   இதுதான் பெயர்.


இந்த  ஊரைப்பற்றிய சுவாரசியமான  சேதி ஒன்னு.  1824 ஆம் ஆண்டு  ஜேம்ஸ் ஸ்பென்ஸர் என்பவர் இந்தப்பக்கம் வந்தவர்  திரும்பிப்போய்  இந்தமாதிரி ஒரு நிலப்பகுதியைக் கண்டேன். கடலும் மலையுமா இருக்குன்னார்.  கதை விடுகிறார் என்று நினைச்ச மக்கள்  ' ஓல்ட் மேன்'ஸ் ப்ளஃப்'  என்று சிரிக்க  அதுவே பெயரா நின்னு போச்சு 1856 வரை. அதுக்குப்பிறகு  கேம்பெல்டவுன் என்றாச்சு.   1917 மார்ச் ஒன்று முதல்  மீண்டும் பழைய பெயரின் பின்பாதியை அதிகாரபூர்வமா  மாற்றினாங்க . இன்றுவரை இது ப்ளஃப்.


 திமிங்கில வேட்டையால் ஊரே ஜே ஜேன்னு பிஸியா இருக்கு.  தொழிலுக்கு  வந்து போற மக்கள்  அதிகமா இருந்ததைக் கவனிச்சு, ஒரு ஹொட்டேல் தொடங்குனாங்க  இந்தம்மா.  கொஞ்ச முன்னால் க்ளப் ஹொட்டேல் பார்த்தோம் பாருங்க. அதுதான் இது. வியாபாரம் நல்லா நடந்தது.  ஜோஸஃப் வளர்ந்து வரும்போதே  வியாபார நுணுக்கங்களைத் தெரிஞ்சுக்கிட்டார்.  வயசு 13 ஆச்சு. ஹைஸ்கூல் போறதுக்குள்ளே பக்கத்து கட்டிடமான போஸ்ட் ஆபீஸில் வேலை கிடைச்சது.  வேலை , பிஸினெஸ் இப்படி வாழ்ந்து கடைசியில் அரசியலுக்கு வந்துட்டார். 21  வயசுலே கேம்பெல்டௌன்  கவுன்சிலர்.  அப்புறம் மூணே வருசத்தில்  மேயர்.   ஏழு வருசம் டவுன் தந்தை:-)   இதுக்கிடையில் ப்ளஃப் ஹார்பர் போர்ட் மெம்பரா  1917 வரை சேவை.  இன்னொருக்கா மேயர் ஆகும் சான்ஸ் கிடைச்சு அது ஒரு ரெண்டு வருசம்.  அடுத்ததா   இன்வெர்கார்கில் தொகுதிக்கு  பாராளுமன்ற  உறுப்பினர்.  மந்திரி சபையில் இடம் கிடைச்சது.  அதுக்குப்பிறகு  பிரதமராகவும் ரெண்டு முறை பதவியில் இருந்துட்டார்.  இரண்டாம் முறை பிரதமராக இருந்தப்ப  உடம்பு சரி இல்லாமப்போய், பதவி காலம் முடியுமுன்பே வேலையை ராஜினாமா செஞ்சார்.  நாற்காலியை தூக்கியெறிஞ்ச    ஒன்னரை மாசத்தில் தன்னுடைய 74 வயதில்  மேலுலகம் போயிட்டார்.


 ஊருக்குள்ளே எங்கெ போனாலும் எதாவது ஒரு சம்பந்தம்  இவுங்க குடும்பத்தோடு இருக்கு.

ரொம்ப நல்ல மனிதரா இருந்தாருன்னு கேள்வி.தொடரும்............:-)


  பதிவுலக நண்பர்களுக்கும், துளசிதளம் வாசகப் பெருமக்களுக்கும் பொங்கல் திருநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.


27 comments:

said...விரிவான கட்டுரை! தெடரத் தெடர்வேன்! இனிய புத்தாண்டு பொங்ல் வாழ்த்துக்கள்!

said...

அழகான படங்களும் அருமையான விரிவான
விளக்கங்களும் நேரடியாகப் பார்ப்பதை போன்ற
உணர்வினை ஏற்படுத்திப் போனது
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

said...

//ரொம்ப நல்ல மனிதரா இருந்தாருன்னு கேள்வி.//
எப்படி, நம்ம வடிவேலு மாதிரியா?

said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

said...

நல்லமாதிரி மனிதர்தான்.ப்ளஃப் கதை சுவாரஸ்யம்.கடலோர வீடுகள் நல்லா இருக்கிறது.
கல்லறைத் தோட்டமும் தான்.ரொம்ப அமைதியா இருக்கு.மொத்தத்தில் சரித்திரத்தில் பின்னோக்கிப் போன உணர்வு வருது.
இது போல நம்ம ஊரிலும் கிராமங்களும் இருக்கு. என்னால்தான் இருக்க முடியுமான்னு தெரியவில்லை:(

said...

வெள்ளி விழா ஆண்டிற்கு வாழ்த்துக்கள்.
ஊர் பார்க்க எத்தனை அழகா இருக்கு!

வார் மெமோரியல், பே வியூ ஹோட்டேல், சிமெட்ரி, பழைய போஸ்ட் ஆபீஸ் - எல்லாமே அழகோ அழகு!

உங்களுடன் பயணம் செய்வதில் ஒரு ஆனந்தம்.

அடுத்த பகுதிக்காக ஆவலுடன் வெய்டிங்!

said...

விரிவான விளக்கங்கள், சிறப்பான படங்கள், ஆங்காங்கே துளசி டீச்சரின் டச்... என சிறப்பான பகிர்வு.

தொடரட்டும் பகிர்வுகள்....

உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

said...

விளக்கமான பகிர்வுக்கு மிக்க நன்றி. புகைப்படங்கள் அருமை.

(நீங்க ரொம்ப இளைச்சிட்டீங்க போல இருக்கே!! நான் உங்களை ஹைதையில் பாத்ததற்கு அப்புறம் இந்த போட்டோ பாக்கும் போது அப்படி இருக்கு)

said...

தேவியர்களுக்கு நாடுகளைப் பற்றி அதன் பெருமைகளைப்பற்றி சமயம் கிடைக்கும் போது சொல்லி வைப்பேன்.இப்போதும் அவர்கள் மனதில் இருப்பது நார்வே. சமீப காலமாக நியூசிலாந்து பற்றி சொல்லிக் கொண்டுருக்கேன். இந்த நாட்டை பார்க்க வாய்ப்பு கிடைக்குமா? என்று தெரியல.

said...

ஒரு ஊரைப் பற்றி விரிவா விளக்கமா தெரிஞ்சுகிட்டோம்.அழகான ஊர்.அழகான படங்கள்.அறிய தகவல்கள்

said...

தங்கள் வெள்ளிவிழா ஆண்டு வாழ்த்துகள்..

இனிய பொங்கல் வாழ்த்துகள்..

said...

கடல் காத்தை அனுபவிச்சுட்டே சுகமாத்தூங்கறாங்க.

கடலை நோக்கிய வீடுகளும் நல்லாத்தான் இருக்கு. உப்புக்காத்துல பாழாகிடாம வீடுகளில் இருக்கும் சாமாஞ்செட்டுகளை துடைச்சுப் பராமரிக்க ரொம்பவே மெனக்கெடணும் போலிருககெ.

said...

படங்கள் எல்லாம் மிக அழகு. தகவல்கள் எல்லாம் விரிவாக அருமையாக இருக்கு. நன்றி.

said...

வாங்க புலவர் ஐயா.

வணக்கம். நீங்கள் தொடர்வது எனக்குப் பெருமை.

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் காணும் பொங்கலுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ரமணி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றியும் மகிழ்ச்சியும்.

காணும் பொங்கலுக்கு உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ஆஹா.... அப்டீங்கறீங்க?????

ஆனால் இந்தப்பயணத்தில் ஒரு இடத்தில் வடிவேலுவை நினைத்ததென்னமோ உண்மை!!!!

உங்க வலைப்பக்கத்தில் பின்னூட்டம் இடமுடியலையே...என்ன குழப்பம்?

said...

வாங்க முகவை மைந்தன்.

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் காணும் பொங்கலுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.


முகவை என்றால் எந்த ஊர்?

said...

வாங்க வல்லி.

//இது போல நம்ம ஊரிலும் கிராமங்களும் இருக்கு. என்னால்தான் இருக்க முடியுமான்னு தெரியவில்லை:(//

அட! இருக்கா? எந்தப்பக்கம் என்னென்ன ஊர்ன்னு சொல்லுங்க. இருக்கமுடியாட்டாலும் போய்ப் பார்த்துவிட்டு வரலாமே!

said...

வாங்க ரஞ்ஜனி.

அழகை ரசித்தமைக்கு நன்றி. நீங்கள் கூடவே வருவது எனக்கும் ஆனந்தமே!
பேச்சுத்துணை!

இன்னும் கொஞ்ச நேரத்தில் அடுத்த பகுதி வரும்:-)))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசிப்புக்கு நன்றிகள்.

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் காணும் பொங்கலுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

இளைச்சுட்டேனா? இருக்குமோ என்னவோ.... 'உடைகளும்' இப்போ கொஞ்சம் லூஸாத்தான் இருக்கு:-)))))

வயசாகுதுல்லே...இளைப்பு நல்லதுதானே!

பதிவை ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க ஜோதிஜி.

நார்வேயும் கிட்டத்தட்ட நியூஸி போலவேதான். மக்கள் கூட்டம் கொன் ஜ்சம் நியூஸியைவிட அதிகம்.

மற்றபடி ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் நியூஸி முதல் இடத்திலும் நார்வே 9 வது இடத்திலும் இருக்கு.

இறையருள் இருந்தால் நமக்குக் கிடைக்கணும் என்பது கண்டிப்பாகக்கிடைக்கும். தேவியர்களுக்கு நிறைய வாழ்நாட்கள் கொட்டிக்கிடக்கு.

said...

வாங்க முரளிதரன்.

வருகைக்கும் கருத்துக்கும் ரசனைக்கும் நன்றிகள்.

said...

வாங்க, இராஜராஜேஸ்வரி.

அடுத்தமாசம் வெள்ளிவிழா ஆண்டு முடிஞ்சுரும்:-)வாழ்த்துகளுக்கு நன்றி.

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் காணும் பொங்கலுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

பித்தளை அலங்காரப்பொருட்கள் இருக்காது என்பதால் தப்பிச்சாங்க:-)

பெஸண்ட் நகரில் இருந்த சமயம் நம்ம சாமியே கருத்துப் போயிட்டார்ப்பா!!!!

சன்டிகரில் தேய்ச்சு மினுக்கியும் ஒரு மாற்று குறைவுதான் இப்பவும்:(

said...

வாங்க ரமா ரவி.

ரசனைக்கு நன்றிகள்.

said...

விரிவான பகிர்வு படங்களுடன் கண்டுகொண்டோம்.

இனிய தைத்திருநாள், காணும் பொங்கல் வாழ்த்துகள்.