Wednesday, January 16, 2013

கப்பலோட்டிய...............

கடல்சார் அருங்காட்சியகம். வாசலில் மூணு கொப்பரை!  உள்ளே போய்ப் பார்க்க கட்டணம் உண்டு, ஐ மீன்  காட்சியகத்துக்குள்ளே  போக! மூணு டாலர்.  நோட்டீஸ் போர்டுலே கறாரா ஒரு  தகவல். இங்குள்ள  ஒன்னு,   ஒன்லி ஃபார் பேயிங்  கஸ்டமர்ஸ்.  அப்படி என்னதான்னு பார்த்தால்  பளிச்சுன்னு மின்னும் படு சுத்தமான கழிவறை!  அதுக்குள்ளே(யும்) ஒரு  நோட்டீஸ் இப்படி.  சுத்தம் சுத்தம். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.


காட்சியகம் ரொம்பப்பெருசொன்னும் இல்லை. இந்தச்  சக்கரம் சுத்தாதுன்ற சின்ன அறிவிப்போடு பெரிய ஸ்டீரிங் 'வீல் ' ஃபார் கப்பல் இருக்கு:-)  மனிதர்களின் சின்ன்ச்சின்ன ஆசைகள் இப்படி.... அதுக்காக சும்மா விடமுடியுமா? இது இல்லேன்னா வேற எதாவது கிடைக்காதா?

அந்தக் காலங்களில் கப்பல்களில் பயன்படுத்திய சாதனங்கள், ராட்சச சைஸ் தாம்புக்கயிறு  முதக்கொண்டு  காப்பர் லைட் வரை அங்கங்கே இருக்கு. சிம்னி விளக்கு, டைப்ரைட்டர்,  சில கப்பல்கள், படகுகளின் மாடல்கள். ஒரு நீராவிக்கப்பலின் முழு எஞ்சின் , நீர்மூழ்குபவர்களின்  உடைகள் , திமிங்கிலத்தின் எலும்புகள்,  அதன் வாய்க்குள் இருக்கும் வடிகட்டி  அமைப்பு (Baleen)முதுகுத்தண்டு வரிசை எலும்பில்   ஒன்னு (நல்ல பெரிய பாத்திரம் மாதிரி  இருக்கே!)
இந்தப் பகுதியில் காணப்படும் பெங்குவின் பறவை இனங்கள்(பாடம் பண்ணியது)


மாட்சிமைதாங்கிய மஹாராணி எலிஸபெத் வந்திருந்தபோது  அவுங்க போட்ட ஆட்டோகிராஃப்!'

கடந்து வந்த காலங்களில் துறைமுகம் எப்படியெல்லாம் இருந்து  இப்ப எப்படி மாறி இருக்குன்னு காமிக்கும் புகைப்படங்கள்,  கப்பல் அதிகாரிகளின் உடைகள்,  சர்வதேச  கோட் சார்ட், இப்படி ஏராளமா வச்சுருக்கங்க.


துறைமுகம் வியாபார மும்முரத்தில்  பயங்கர பிஸி.  ஏற்றுமதி அதிக அளவில் ஆனது ஆட்டிறைச்சிதான். 1984-1985 வருசத்தில் மட்டும் இங்கே ஆடு வெட்டும்  ஒரு கம்பெனியில்  2,464,880 ஆடுகளை வெட்டி அனுப்பியது ஒரு ரெக்கார்ட்.  அப்போ தொழிற்சாலையில் இருந்த  எல்லா ஆடுவெட்டிகளுக்கும்  ஒவ்வொரு கிறிஸ்டல் ஒயின் க்ளாஸ் கொடுத்து கௌரவிச்சாங்க(ளாம்) 48 மில்லியன் ஆடுகளில் கிட்டத்தட்ட ரெண்டரை மில்லியன்  போனாப்போகட்டுமுன்னு......  இங்கேயிருந்து போகும் ஆட்டிறைச்சிக்கு  இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் நல்ல மார்கெட் இருக்கு.  மாட்டிறைச்சிக்கும்தான்.   பைத்திய மாடு நோய்  (மேட் கௌ டிஸீஸ்)  இங்கே இல்லை பாருங்க.கட்டிடத்தின் பின்புறக்கதவை விட்டு வெளியே போனால் பக்கவாட்டில்மோனிகா இருக்கிறாள். 103 வயசு. ஆனாலும் இளமையோடு இருக்காள் என்பதே அழகு!

1909 வது வருசம் இங்கெ எங்க ஊரில் (லிட்டில்டன்  கிறைஸ்ட்சர்ச்) கட்டுன படகு இந்த மோனிகா 2. ( அப்ப மோனிகா 1 யாராக இருக்கும்? ச்சீ ....மனசே அடங்கு!   ஐய்ய.....மோனிகான்னதும்  ...... பெரிய இடத்து விவகாரம் உனக்கு எதுக்கு? ) பத்து வருசம் பேங்க் பெனின்சுலாவில் சுத்தி உழைச்சதுக்குப்பிறகு கை மாறுச்சு. கல் குவாரி வேலை . ரெண்டே வருசம். பாவம் தாக்குப்பிடிக்க முடியலை போல. மீண்டும் கை மாறி   மீன்பிடிப் படகா ஒரு ஏழு வருசம்.  1937 இல் ஸ்டீவர்ட் தீவுக்குப் பக்கம்  சிப்பிப்பண்ணை (Oyster farm) வேலை.  பத்து வருசம் கழிச்சு  1947 இல் நீராவி எஞ்சினை டீஸல் எஞ்சினா மாத்துனதும்  ப்ளஃப் பகுதியில் ஓடும் படகுகளில்  இவள்தான் அதிவேக ராணின்னு பெயர் எடுத்தாள்.
ஆச்சு 100  வயசு. ஓய்வெடுக்கட்டுமுன்னு ப்ளஃப் அருங்காட்சியகத்துக்கு  1999 மே மாசம்  9 ஆம் தேதி , தானம் செஞ்சுட்டாங்க  ஓனர்ஸ்.  அப்ப இருந்து  இது  நம் பார்வைக்கு .  சாலையில் வரும்போதே கண்ணில் பார்க்கிற மாதிரிதான்  இருக்குன்னாலும் உள்ளே போய் பார்க்கணுமுன்னா  ம்யூஸியம்  டிக்கெட் வாங்கித்தான் போகணும்.


நான்  கப்பல் ஓட்ட....  இவர் ' அதோ அந்தப்பறவை போல வாழ வேண்டும்' பாடிக்கிட்டே ஆடினார்:-)))பட்டியல்படி எனக்கு பார்க்க ஆசையா இருந்தது இன்னொரு சமாதி. இது கப்பல்களுக்கானது.  கடற்கரைச் சாலையில் இருந்து கொஞ்சம்  உள்ளே போகணும். துறைமுகத்தின் இன்னொரு கோடி.   Tide டைட் இல்லேன்னாதான் கண்ணுக்குப் புலப்படுமாம்.  நம்ம அதிர்ஷ்டம்   தண்ணி நிறைய இருக்கு.  நோ சான்ஸ்ன்னு  ப்ளஃபைவிட்டுப் புறப்பட்டோம்.   ஊர் எல்லையைத் தாண்டுமுன்  ஒரு வீட்டு முன்புறப் புல் வெளியில் ரெண்டு பெரிய சிங்கங்கள் ஒய்யாரமா  ஓய்வெடுத்துக்கிட்டு இருந்தன. நல்ல ரசனை  உள்ளவர்கள் வசிக்கிறாங்க போல. கூடவே ஒரு போலார் கரடியும் தவளையும்.

30 கிலோமீட்டர். கூட்டமில்லாத சாலை 20 நிமிசம். பகல் ஒரு மணிக்கெல்லாம் அறைக்கு வந்துட்டோம். பகல் சாப்பாட்டுக்கு  எதிர் சாரியில் இருக்கும்  கடைகளை நோட்டம் விட்டால் ஒரு டர்க்கிஷ் கடை கண்ணில் பட்டது.  இன்னிக்கு வருசக்கடைசி நாள். நாளையும் மறுநாளும் அரசு விடுமுறை என்பதால்  இன்வெர்கார்கில் சமாச்சாரங்களை முடிஞ்ச அளவு இன்னிக்கே முடிச்சுக்கிட்டால் தேவலை. இங்கேயும் ஒரு ஹெர்ரிடேஜ் ட்ரெய்ல்  இருக்கே!ப்ரோஷரைப்பார்த்தால் 18 இடம்.  ப்ளஃபைவிட ஒன்னு கூடுதல். இருக்காதா பின்னே இது உண்மையிலேயே அதைவிடப்பெரிய ஊர் இல்லையோ!  மக்கள் தொகை  அரை லட்சத்துக்கு மேலே!  ( சமீபத்திய  சென்சஸ் சொல்லுது  50,328 )பதினெட்டில் ரெண்டு மூணுதான் உள்ளே போய் பார்க்கத் தோதாக இருக்கு.  மற்றவை எல்லாம் போறபோக்கில்தான்.  உள்ளூர் அருங்காட்சியகத்துலே  'டுவடாரா 'இருக்குன்னு கேள்வி. அதுவும் உசுரோட! அதை மட்டும் இன்றைக்கே முடிக்கணும்.  நல்லகாலமா மழை கொஞ்சம் நின்னுருக்கு. டான் தெருவுக்குள் நுழைஞ்சோம்.  அழகான பெரிய குடை.   சௌத்லேண்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி  வச்சுருக்காங்க.    மழைக்கு ஒதுங்கிக்கலாமான்னால்  குடைக்குள் மழை:-)இந்த  Southland Institute of Technology  தான் உள்ளூர்  Polytech.  ஆர்க்கிடெக்சர், ஃபேஷன், ப்ளம்பிங் தொடங்கி நர்ஸிங் , வெட்நரி நர்ஸிங் உள்பட 34 பகுதிகளில்  படிக்கும் ஏற்பாடு. அட்ராக்‌ஷன் என்னன்னா....இங்கே படிக்க  ட்யூஷன்  ஃபீஸ் இல்லை.  முற்றிலும் இலவசம். ஒரே  ஒரு கண்டிஷன் நியூஸி குடியுரிமை இருக்கணும்.  ஆஸி குடியுரிமை இருந்தாலும் ஓக்கேதான். (ரெண்டு நாட்டுக்கும் இடையில்  ஒப்பந்தம் இருக்கு.  பயணம் செய்யக்கூட  ரெண்டு நாட்டுக்கும்  விஸா வாங்க வேண்டியதில்லை)எப்படி இப்படி ஸீரோ  ஃபீஸ் வந்துச்சு? கட்டுப்படி ஆகுமா?


1990களின் இறுதிகளில்  இன்வெர்கார்கிலின்  பணநடமாட்டம் குறைய ஆரம்பிச்சது. உலகின் மற்றபகுதிகளைப்போலவே டிப்ரெஷன்.  மக்கள் தொகை  கீழே போய்க்கிட்டே இருக்கு. வேலை தேடி மற்ற ஊர்களுக்கு சனம் போக ஆரம்பிச்சுருந்தது. வீடுகளின் மதிப்பெல்லாமும் அதலபாதாளத்தில் இறங்குது. உள்ளூர் இளைஞர்கள் எல்லாம் எதிர்காலம் என்னவாகுமோன்னு  செய்வதறியாது 'ஙே'ன்னு முழிக்கிறாங்க.


அந்த சமயம் பாலிடெக்கில் புது இன்சார்ஜா வந்த சீஃப் ஆஃபீஸர்  மிஸ் பென்னி சைமண்ட்ஸுக்கு (Southern Institute of Technology chief executive Penny Simmonds) புதுசா ஒரு ஐடியா உதிச்சது. இங்கே வந்து படிச்சால் கல்விக் கட்டணம்  இல்லை. இலவசமுன்னு சொன்னாங்க. ஆனால் இலவசமா கல்வி நிறுவனத்தை நடத்தமுடியுமா என்ன?  நாலுபேர் உதவி செஞ்சாத்தானே ?  அப்படியே ஆச்சு.   கம்யூனிட்டி ட்ரஸ்ட், சிட்டிக்கவுன்ஸில். சௌத்லேண்ட்  மாவட்ட கவுன்ஸில்,  இன்வர்கார்கில்   லைசன்ஸிங் ட்ரஸ்ட் ன்னு நாலுபேர் சேர்ந்து   ஏழேகால் மில்லியன் நிதி(3 வருசங்களில்)  அள்ளிவிட்டாங்க.


நியூஸியில் மாணவர்களுக்குக் கல்விக்கடன் அரசாங்கமே கொடுக்குது. படிச்சு முடிச்சு வேலை செய்ய ஆரம்பிச்சதும் கடன் கட்டத் தொடங்கணும்.  இப்ப கல்விக்கடனுக்கு வட்டி ஏதும் இல்லை. ஆனா  அந்தக்காலக்கட்டத்தில்  வட்டி வேற இருந்ததால் அது பாட்டுக்கு  அசலோடு சேர்ந்து குட்டிப்போட்டுக்கிட்டேப் போகும். வட்டிவிகிதம் ரொம்பக் கொஞ்சமே என்றாலும் கூட:( இதனால்  வேலை செய்ய ஆரம்பிச்சு சுமார் 15இல்லை 20 வருசம் கடனாளியாகவே இருப்பாங்க மாணவர்கள்.


வாழ்க்கையில் செட்டில் ஆகலாமுன்னா,  கல்விக்கடன் இருந்தால் வங்கிகள் வீட்டுக்கடன் கூட  கொடுக்காது. நம்மூர் வழக்கம்போல புள்ளைகளை கடனை உடனை வாங்கிப் படிப்பிக்க வேண்டிய  பொறுப்பு பெற்றோர்களுக்கில்லை. மற்ற செலவுகளுக்கு வாரம் 20 மணி நேரம் பகுதி நேர வேலை பார்த்துக்கிட்டே பசங்க படிச்சு முடிச்சுரும்.இதையெல்லாம்  மனசுலே வச்சுக்கிட்டு  கல்விக்கடன் வாங்கவே வேணாமுன்னா இதைப்போல ஒரு பாக்கியம் வேறுண்டோன்னு   பாலிடெக்கில் படிக்க மாணவர்கள்  நாடு முழுவதிலும் இருந்து  வந்தாங்க.  ஆரம்பமே 1781 மாணவர்கள்.  அவுங்க மட்டுமா  இடம்பெயர்ந்தாங்க? கூடவே  அவர்கள் குடும்பமும்.  ஊர்  மக்கள் தொகை கூடக்கூட  அவர்கள் தேவைகளுக்கான வியாபாரம் பெருகுச்சு. வியாபாரம் பெருசானதும் வேலை வாய்ப்புகள்  கூடுச்சு. புள்ளைங்க ( மாணவர்களின்  குழந்தைகள்)  பள்ளிக்கூடம் போகணும் என்பதால் பள்ளிகளில் எண்ணிக்கை கூடி புது டீச்சர்களுக்கு வேலை கிடைச்சது. (வரப்புயர! மாதிரின்னு வச்சுக்குங்க)


மாணவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தே கல்வி நிறுவனங்களுக்கு  அரசு நிதி உதவி  கிடைக்கும்  என்பதால்   அவைகளுக்கும் வருமானம் பெருகத் தொடங்கியது.  சுபம் சுபம். என்றானது.  வருசாவருசம் பாலிடெக்  மாணவர்கள் எண்ணிக்கை கூடிக்கிட்டே போய் இப்ப உச்சத்தில் இருக்கு.  12,000 பேர்.  அதுவும் இங்கே எங்கூர் (கிறைஸ்ட்சர்ச்) பாலிடெக்   நிலநடுக்கத்தில் அகப்பட்டு  பலவீனப்பட்டுப்போனதால்  படிக்கும் மக்களில் முக்காவாசிப்பேர்  சௌத்லேண்ட் போயிட்டாங்க.


பாலிடெக் நல்ல வளமையா நடப்பதால் சர்வதேச மாணாக்கர்களுக்கு  கட்டணம்  நியூஸியின் மற்ற தொகுதிகளைவிடக் குறைவு .  இதன் காரணமாகவும் எண்ணிக்கை கூடி இருக்கு.


என்னமா ஐடியா பண்ணிட்டேம்மான்னு  பென்னியின் புகழும் உச்சத்தில்.இந்த  டொன் தெருவே கலை அழகோடு மின்னுது. மொத்ததில் இது பழைய ஊர் என்பதால் அந்தக்காலத்து கட்டிடக்கலையும் அம்சங்களும் நிறைந்தவைகள்  இன்னும் அப்படியே பராமரிக்கப்பட்டு பார்க்கவே ஒரு அழகா ஜொலிக்குது. பழைய கட்டிடங்களைப் பழுது பார்க்கணும் என்றாலும் ஒரிஜனல்  அழகு கெடாமல்தான் புதுப்பிக்கறாங்க. இவை விக்டோரியன்  அண்ட் எட்வேர்டியன் கட்டிடக்கலைகளாம்.


 ஆமாம்.... குடைக்கும் பாலிடெக்னிக் கல்விக்கும் என்ன சம்பந்தம்?  கல்விக் கொடை என்பதை கல்விக் குடை ன்னு  யாராவது  'முழி' பெயர்த்திருப்பாங்களோ?


தொடரும்.........:-)16 comments:

said...

/கல்விக் கொடை என்பதை கல்விக் குடை ன்னு யாராவது 'முழி' பெயர்த்திருப்பாங்களோ?/

நல்ல வேளை புள்ளி வெச்சீங்களே!!

said...

//கல்விக் கொடை என்பதை கல்விக் குடை ன்னு யாராவது 'முழி' பெயர்த்திருப்பாங்களோ?//

அப்படித்தான் இருக்கோணும்!

said...

வாங்க கொத்ஸ்.

இலக்கண பு(லி)ள்ளி கவனம் பிடிச்சுருக்கு:-)))

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.


ஹாஹா Our people, Time and Place என்று geographical location of Invercargill சொல்லுதாம் அது!!!

said...

உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://blogintamil.blogspot.com/

அன்புடன்
மனோ சாமிநாதன்

said...

ரொம்பவும் அசத்தியது டாய்லெட் வாசலில் இருந்த போர்ட்!

முதலில் பைக், இப்போ கப்பலா? ஜமாய்ங்க!

உங்கள் பதிவுகளைப் படிச்சா உலகத்தை சுத்தி வந்துட்டதா மாதிரி ஒரு நினைப்பு வருகிறது.said...

பாலிடெக் ஏற்பாடு நல்லாத்தான் இருக்கு. கல்விதான் வாழ்க்கையில் நிரந்தர்மா இருக்கப்போகும் சொத்துங்கறதை நல்லாவே புரிஞ்சு வெச்சிருக்காங்க. அப்படியே ஊரையும் முன்னேத்தும் ஐடியாவும் இணைஞ்சா ஒரே கல்லுல ரெண்டு மாங்கா விழாதோ!! குடைக்குள் மழையும் ஜூப்பர்.

தரையிலேயே செம ஸ்பீடா ஓடுதே உங்க கப்பல் :-))))))))

said...

படங்கள் நல்லாயிருக்கு.

said...

கப்பல் ஓட்டுவதும்
சிச்சுவேஷன் சாங்கும் சூப்பர் ..

said...

படங்கள் அருமை. தகவல்கள் அனைத்தும் சுவாரசியம். நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.நன்றி பகிர்வுக்கு.

said...

அந்த ஊர் கப்பலை ஓட்டிய ஒரே தமிழர் நீங்களாகதான் இருக்கணும்:)! தகவல்களும் படங்களும் சுவாரஸ்யம்.

said...

நான் கப்பல் ஓட்ட.... இவர் ' அதோ அந்தப்பறவை போல வாழ வேண்டும்' பாடிக்கிட்டே ஆடினார்:-)))//

அருமையான காட்சி.

said...

நிறைந்த தகவல்களுடன் கப்பல் ஓடி ஊரை சுற்றிப் பார்த்து வந்தோம்.

பாலிடெக் கல்விமுறை நல்ல ஏற்பாடு.

said...

இலவசக் கல்வி.... நல்ல ஏற்பாடு. இங்கேயும் இப்போது கல்விக் கடன் கொடுக்க ஆரம்பித்து மாணவர் பருவத்திலேயே அவர்களை கடனாளியாக்கும் திட்டம் வந்து விட்டது....

பயணங்கள் தொடரட்டும்....

said...

எல்லாப் படங்களும் பார்த்தேன். எல்லா இடத்திலும் குப்பைகளே ஒன்று கூட இல்லாமல், மிகச் சுத்தமாக, அசிங்கமாக இருக்கிறது. இதுவே நம் ஊராய் இருந்தால் எல்லா இடத்திலும் அழகாய்க் குப்பைகள் இருக்கும். :))

said...

இந்த மாதிரி , நியூஸி பற்றி எல்லா விவரங்களையும் எழுதி , எங்களை எல்லாம், ஒரு விசிட் அடிக்கும்படி , ஆசை காட்டுவது....மிக நன்றாக இருக்கிறது.

உங்கள் குறும்பு பதிவுகளை, நடுவில் சில நாட்கள், படிக்காமல் இருந்தால், ஏதோ குறையாக இருந்தது!

நன்றிங்க!