Friday, January 13, 2012

இன்று பஃப்பாமல் செய்த பஃப்.:-)

சமையல் வாரத்தில் துளஸிவிலாஸில் இன்னிக்கு ஒரு வெஜிடபிள் பஃப் செஞ்சு பார்க்கப்போறோம்.

'மண்ணுக்குக் கூட காசா'ன்னு மலைச்சு நிக்கவேண்டியதில்லை. ஒரு 20 சதம் விலை குறைச்சே போட்டு வச்சுருக்காங்க. புதுசா இன்னிக்குத் தோண்டி எடுத்த உருளைக்கிழங்காம். மண்ணோடு மங்கலாக் கிடக்கு. பக்கத்துலேயே நல்லாக் கழுவி வச்சதும் குமிஞ்சுருக்கு.இதுக்கு ரெண்டரை டாலர்ன்னா மண் உள்ளதுக்கு ரெண்டு. இதெல்லாம் கிலோக் கணக்கில் வாங்குபவர்களுக்கான தனிவிலை. பத்து கிலோ உள்ள மூட்டையை எடுத்தால் $8.95தான். பெரிய குடும்பத்துக்கு ஓக்கே. நமக்கு? வருசத்துக்கு 'வச்சு'த் தின்ன முடியாதே:(
நேத்து சூப்பர்மார்கெட் விஸிட்டுலே குளுகுளுப் பகுதிக்குப்போய் ஒரு நோட்டம் விட்டதில் ஒரு ரெடி ரோல்டு பேஸ்ட்ரி ஷீட் ஆப்ட்டது. பரத்தி வைக்காமல் கட்டியா உள்ளதும் வச்சுருக்கு. ரெண்டும் ஒரே விலைன்னாலும் பரத்துன சமாச்சாரத்துக்கு 50 கிராம் எடை கம்மி. போயிட்டுப்போகட்டும். இருக்குற 'தோள் வலி'யில் யாராலே ஒரே அளவுலே நீளமா பரத்த முடியுது?
அப்பவே முடிவு பண்ணிட்டேன் சமையல் வாரத்துக்கான மெனுவை:-)))) இன்னும் வேறென்ன வேணுமுன்னு பார்த்தால் பாக்கி அயிட்டங்கள் எல்லாம் ஏற்கெனவே நம்மூட்டு ஃப்ரீஸரில் இருந்தாகணும்.

சூப்பர்மார்கெட் ஃப்ரீஸர் செக்ஷனிலும் வகைவகையா பேஸ்ட்ரி ஷீட்ஸ் வெவ்வெற அளவில் வெட்டியதும், இனிப்பு செய்ய தனி வகை, காரத்துக்குத் தனி வகைன்னு இருக்கும். எல்லாம் பெரிய பொதிகள். நம்ம சின்னக் குடும்பத்துக்கு ஏன் இவ்ளோ? அப்புறம் அதை வாங்கினாலும் உறைஞ்சுருக்கும் அதை வெளியே வச்சு, அது இளகும் வரை காத்திருந்துன்னு நேரம் வீணாகுதில்லே? அதுக்குள்ளே நம்ப ப்ளான் மாறிப்போச்சுன்னா?

சரி. இப்ப வேலையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

ரெடி ரோல்டு பேஸ்ட்ரி ஷீட் ஒன்னு (350 கிராம்)

உருளைக்கிழங்கு - பெருசா 2 ( ஒரு 250 கிராம் வரும்)


மிக்ஸட் வெஜிடபிள் - 100 கிராம்

வெங்காயம் - 1 பெருசு ( சிகப்பு வெங்காயமுன்னா உத்தமம்)

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 2 பற்கள்

இஞ்சி - ஒரு ரெண்டங்குலத்துண்டு (தோல் சீவித் துருவிக்கணும்)

மஞ்சள் தூள் - அரைத்தேக்கரண்டி

கறிப்பவுடர் - ஒரு தேக்கரண்டி

(கறிப்பவுடர் இல்லைன்னா கவலைப்படேல்)

மிளகாய்த்தூள் அரைத்தேக்கரண்டி,

மல்லித்தூள் அரைத்தேக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - நாலு மேசைக்கரண்டி

சீரகம்- முக்கால் தேக்கரண்டி

பெருங்காயத்தூள் = ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - ஒரு இணுக்கு

கொத்தமல்லித்தழை- கொஞ்சம்

கரம் மசாலா (விருப்பமானால் மட்டும்)- அரைத்தேக்கரண்டி.


செய்முறை :


உருளைக்கிழங்கு ரெண்டு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு மண் போகக் கழுவிக்கணும். மண் தண்ணியை தயவு செய்து சிங்க்கில் ஊத்திடாதீங்க. அதுவேற அடைச்சுக்கப்போகுது. தோட்டத்தில் புல்லுக்கு ஊத்துனால் ஆச்சு.
புது உருளைக்கிழங்கா இருப்பதால் நகத்துலே சுரண்டினாலே தோல் வந்துரும். ஆனால் விஷப்பரிட்சை வேணாம். அதுவேற நகக்கண்ணுலே நுழைஞ்சுக்கிட்டால் வலி உயிர் போயிரும்:( ஒரு கத்தியாலே லேசாச் சுரண்டி தோலை நீக்கிக் கழுவிட்டுச் சின்னத்துண்டுகளா நறுக்கி ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு கால் கப் தண்ணீர் சேர்த்து அஞ்சு நிமிட் 100% பவரில் வேகவச்சுக்கணும். பூவா வெந்துரும். இப்போ கூடுதலா இருக்கும் தண்ணீரை வடிச்செடுத்துடலாம். கொஞ்சம் சூடா இருக்கும்போதே கரண்டியால் லேசா மசிச்சு விட்டுருங்க. நம்மூட்டு கேட்ஜெட் ட்ராவில் ஒரு பொட்டேடோ மாஷர் இருக்கு. அதுக்கும் ஒரு வேலை வேணுமுல்லே? :-)
அடுப்பில் வாணலியை ஏத்தி நாலு மேசைக்கரண்டி எண்ணெயை ஊத்திச் சூடாக்கணும். அதுலே சீரகத்தைப்போட்டு வெடிக்கவிடுங்க. (சண்டிகர் போனபிறகு நம்மூட்டுலே ஒரே பஞ்சாபி தடுக்கா தான் கேட்டோ:-) சீர் அகம் உடம்புக்கு நல்லது.

பொடியா நறுக்கி வச்ச வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாத்தையும் வாணலியில் சேர்த்து துருவின இஞ்சியையும் தூவி நல்லா வதக்குங்க. இஞ்சியையும் பொடியா நறுக்கிப்போடலாம். ஆனால் நறுக்குன்னு வாயிலே கடிபட்டால் பசங்க துப்பிருதுப்பா:( அதான் துருவிட்டால் கண்ணில் நாக்கில்,பல்லில் படாம ஒரேதா கலந்து போயிரும். பூண்டு வாசனை பிடிக்கலைன்னா போட்டுக்க வேணாம். எல்லாம் ஒரே வாயு சமாச்சாரமாச்சேன்னு.............

வெங்காயம் நிறம் மாறிப் பாதி வெந்து வாசனை வரும்போது பெருங்காயம், மஞ்சள் தூள், கறிப்பவுடர் இல்லை மிளகாய் தனியாத்தூள்களைச்சேர்த்து அரை நிமிட் வதக்கிட்டு மிக்ஸட் வெஜிடபிளை அப்படியே வாணலியில் சேர்த்துருங்க. தண்ணீர் சேர்க்க அவசியம் இருக்காது. இதுவே கொஞ்சம் தண்ணி விட்டுக்கும். உப்பைப்போட்டு, வேகவச்ச உருளைக்கிழங்கையும் சேர்த்து நல்லா வதக்கி எடுங்க. கரம் மசாலா வேணுமுன்னா இப்ப அதையும் தூவிக்கலாம். தண்ணீரின் சுவடே இல்லாமல் Dட்ரையா இருக்கா? பேஷ் பேஷ் சரியான பதம். அப்படித்தான் இருக்கணும். அதுலே கொஞ்சூண்டு கொத்தமல்லி இலைகளை அரிஞ்சு தூவிக் கலக்கி எடுத்துக் கொஞ்சம் ஆறவிடுங்க.
கப்போர்டைத் திறந்து பேஸ்ட்ரி மேக்கர் இருந்தால் எடுத்து வச்சுக்குங்க:-)
இதுலே பெருசும் சின்னதுமா நாலு சைஸ்களில் அச்சு இருக்கு. நாம் கொஞ்சம் மீடியமா எடுத்து வச்சுக்கலாம். பார்ட்டிக்குச் செய்வதா இருந்தால் குட்டியூண்டு அளவில் செஞ்சால் அப்படியே எடுத்து 'லபக்'க வசதியா இருக்கும். ஃபிங்கர் ஃபுட்:-)
இப்ப பேஸ்ட்ரி ஷீட்டின் ஒரு ஓரத்தைப் பிடிச்சு அச்சில் வச்சு ஒரு அமுக். வட்டமா கத்தரிச்சுக்கும். ஒரு பாதியில் உருளை காய்கறி கலவையைக் கொஞ்சம் வச்சுட்டு அச்சின் மறுபாதியை மடிச்சுக்கொண்டுவந்து இன்னொரு அமுக். திறந்து பாருங்க.
டடா..... ஓரங்கள் அலங்காரமா ஃப்ரில் வச்சு மடிச்சு, அழகான ஏழாம்நாள் நிலவின் வடிவில் உள்ளே உக்கார்ந்துருக்கும்! அதை அப்படியே நோகாமல் எடுத்து ஹாட் ஏர் அவனில் உள்ளே ஓரமா வையுங்க. இப்படியே இன்னும் ஒரு மூணு செஞ்சு நாலையும் அடுக்கி மூடியைப்போட்டு ஒரு 180 C டிகிரியில் 14 நிமிட் செட் செஞ்சுருங்க.

பார்க்க சூப்பரா இருக்குமே!!!!!!!!!!!1



நிற்க............

PIN குறிப்பு:

பேஸ்ட்ரி மேக்கர் இல்லை என்றால்....... நோ ஒர்ரீஸ். மாவு மேலே ஒரு கிண்ணத்தைக் கவுத்து வச்சு வட்டமா வெட்டி எடுத்து அதில் ஒரு பாதியில் கிழங்கு & காய் கலவையை வச்சு மடிச்சு அரைவட்டமா ஆக்கிருங்க. ஓரத்துலே மடிச்சு விடலாம். இல்லை சமோஸா கட்டரில் (இதுவும் இல்லையா போச்சுடா) ஒரு கத்தியால் வளைவுவளைவா வெட்டி விடலாம்.

ஓரம் கட் செஞ்பிறகு பாக்கி இருக்கும் மாவை என்ன செய்ய? அமுக்காமல் லேசா உருட்டி நாலைஞ்சு உருண்டைகளானதும் மைக்ரோ வேவில் 1 நிமிட் & 40 விநாடி வச்சு எடுங்க. மகாராஷ்ட்ரா பக்கங்களில் 'காரி பிஸ்கட்'ன்னு ஒன்னு கிடைக்கும். ஏறக்கொறைய அந்த சுவையில் நொறுக்ஸ் கிடைக்கும்.
'அவன்' இல்லைன்னா? ஐயோ.... எவன் இல்லைன்னா என்ன? பயந்துறலாமா? அடுப்புகூடவே அவன் இருக்குமேங்க. அதுலே வச்சுடலாமே. நாந்தான் நாலேநாலுக்கு எதுக்கு அம்மாம்பெரிய அவனுன்னு ஹாட் ஏர் அவனில் செஞ்சேன்.

மைக்ரோவில் கன்வென்ஷன் மாடல் இருந்தால் அதுலே செஞ்சுறலாம். நிஜமாவே ஒன்னுமே இல்லைன்னா..... யோசிக்கணும். பாட்டி காலத்தில் மணல் சூடாக்கி அதுலே தட்டு வச்சு அதுலே பிஸ்கெட் செய்வாங்களாம். இப்ப இதை நினைச்சாலே ஃபோர்மச்சா இருக்கு:(

சரி. இப்போ மீந்து போன காய் மசாலாவை என்ன செய்யலாம்?

அட! இது ஒரு பிரச்சனையா? இதுக்கு ஆயிரம் பயன்கள் உண்டு.

சிம்பிளா ஒன்னு செய்யலாம். அன்றைய சாப்பாட்டுக்கு இது ஒரு சைட் டிஷ். உருளைக்கிழங்கு மசாலாக்கறி.

சின்னச் சின்னதா உருட்டி எடுத்துக்கிட்டு பஜ்ஜி போண்டா மாவில் முக்கி மசாலா போண்டா செய்யலாம். பதிவர் சந்திப்புக்கு உகந்தது:-)

சப்பாத்தி , பூரிக்கு ஸைட் டிஷ். கொஞ்சம் தண்ணீர் தெளிச்சு அடுப்பில் வச்சுக் கலந்துக்குங்க. ட்ரையா இருந்தால் நல்லா இருக்காது.

கொஞ்சம் பெரிய உருண்டைகளா எடுத்து வடை போல கையில் வச்சு அமுக்கி ப்ரெட் தூளில் ரெண்டு பக்கமும்புரட்டி எடுத்து சூடான தவ்வாவில் போட்டு லேசா எண்ணெய் மந்திரிச்சுக் கட்லெட் செய்யலாம்.

தோசை செஞ்சு உள்ளே நிரப்பி மிக்ஸ்வெஜி மசாலா தோசைன்னு பெயர் வைக்கலாம்.

கோதுமை & மைதா கலந்து கொஞ்சம் தாரளமா வெண்ணையோ நெய்யோ சேர்த்துச் சப்பாத்தி மாவு மாதிரி பிசைஞ்சு பெரிய சப்பாத்தி செஞ்சு ரெண்டா அரைவட்டம் வெட்டிக்குங்க. அதுலே காய்கலவையை வச்சு மடிச்சு சமோஸா கூட செஞ்சுக்கலாம்.

எல்லாம் உங்க சாமர்த்தியம். பெயர் மட்டும் புதுசு புதுசா வச்சுருங்க.

ஆமா.......... நீ என்ன செய்யப்போறேன்னு ....என்னைக் கேட்டால்..... கேட்டால்.....

இதெல்லாத்தையும்விட புதுமையா ஒன்னு செய்ய உக்காந்து யோசிக்கப் போறேன்:-)))))

25 comments:

said...

எங்கூரு கரஞ்சி கட்டர்தான் அங்கே பேஸ்ட்ரி கட்டரா அவதாரமெடுத்துருக்குதோ :-))

செஞ்ச போண்டாவை பாவ் இல்லைன்னா லேசா கீறிவிட்ட பர்கர் பன்க்கு நடுவுல வெச்சு வடாபாவ்ன்னும் திங்கலாம்.

'காரி பிஸ்கட்' இந்த ஊருல எனக்கு பிடிக்காத தீனி இதுதான். காலைல டீயில முக்கி அதை மக்கள் உள்ளே தள்ளுற அழகே அழகு :-)

அதோட டேஸ்ட்க்கு ஒன்னு விட்ட சகோதர முறையில் இருக்கறதால பஃபையும் தள்ளி வெச்சிட்டேன் :-) குறிப்பை மட்டும் எட்டி பார்த்துக்கிட்டேன்..

said...

Photoes are by Gopal sir??

Neengalae samaiyal + Photo rendum seyvathu kashtam aachae?

said...

என் பெண்களுக்கு பஃப்ஸ் ரொம்ப பிடிக்கும்.இது நாள் வரை வெளியே வாங்கிதான் சாப்பிடுவாங்க. உங்க பதிவால அது எப்படி செய்யரதுண்ணு தெரிஞ்சுக்கிட்டேன்.நன்றி மேடம்.

இங்க நம்ம ஊர்ல ரெடி ரோல்டு பேஸ்ட்ரி ஷீட் கிடைக்கிறதா தெரியவில்லையே? அதுக்கு என்ன செய்யறது??

said...

சமையல் புத்தகம் + குறிப்புகள் புத்தகம்!!அடேங்கப்பா.அப்படியே மணிகளாக் குறிப்பு கொடுக்கறீங்க.
கலர் கலராப் படங்கள்.ம்ம். அசத்துங்க. நான் அப்படியே எடுத்துச் சாப்பிட்டு விட்டேன்.:)

said...

வணக்கம் டீச்சர். நலம் நலமறிய ஆவல். :)

ஒங்க பதிவுக்கு வந்து ரொம்ப நாளாச்சு. ரீடர்ல போட்டு வெச்சிருக்கேன். நடுநடுல வேல வந்ததால ஒழுங்காப் பாக்கலை.

இன்னைக்கு வந்து பாத்தா கஜகஜன்னு (கஜம் ஒங்களுக்குப் பிடிச்சதுதானே) பதிவுகளா போட்டிருக்கீங்க. :)

பப்புன்னா எண்ணெய்ல பொரிக்க மாட்டாங்களா! அதுக்குள்ள அத்தன துணித்துணியா எப்படி பிரிஞ்சி வருது?

said...

ராம்வி, ஸ்பென்சர், நீல்கிரிஸ் போன்ற கடைகளில் கிடைக்கும்.

@துளசி,

என்ன ஒரே சமையல் மாசமா இருக்கே? :))))))

said...

@மோகன்குமார், சமைச்சுட்டே போட்டோ எடுக்கறது ஒண்ணும் கஷ்டம் இல்லை. அதெல்லாம் எடுப்போம் இல்ல! :)))

said...

பஃப் எனக்கு பிடித்த ஐட்டம். எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுகிட்டேன். படங்களுடன், குறிப்பு பிரமாதம்..

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

said...

வணக்கம் அம்மா,
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

said...

பொங்கல் தின வாழ்த்துகள். கொண்டாடியாச்சா?

said...

Please பார்சல் - 2. :-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

கரஞ்சி என்ற 'பெயர்' மட்டும் சீனர்களுக்குத் தெரியாதேப்பா:(

ஆனால் கொழுக்கட்டை செஞ்சுடுவாங்க:-)))))

காரியைப்போய் டீயிலே முக்கினா தொய்ஞ்சு போயிடாது:( ஐய்ய.....

said...

வாங்க மோகன் குமார்.

நல்ல ஃபோட்டோவா இருந்தால் அது நான். அவுட் ஆஃப் ஃபோகஸ் என்றால் கோபால் என்று பேசித் தீத்துக்கலாமா?

கஷ்டமுன்னு வச்சால் கஷ்டம்தான். பதிவுக்காக எல்லாக் கஷ்டத்தையும் 'இன்முகத்தோடு' பொறுத்துக்கறேன்னு சொல்லி வைக்கிறேன்:-)

said...

வாங்க ராம்வி.

நீல்க்ரீஸ்லே ஒருவேளை கிடைக்குமோ என்னவோ?

said...

வாங்க வல்லி.

ஜஸ்ட் இளஞ்சூடா இருக்கும்போதுதானே அப்படியே சாப்பிட்டீங்க?

டாங்கீஸ்ப்பா.

said...

வாங்க ஜீரா.

பார்த்து கனகாலம் ஆச்சே!!!!
கஜம் பிடிக்காமல் இருக்குமா? ரெண்டுமே பிடிக்கும்:-)

சமோஸாதான் பொரிச்சு எடுக்கணும். இப்ப கொலஸ்ட்ராலுக்குப் பயந்து அதையும் அவனில் வச்சு பேக் செஞ்சுடறாங்க.

அடுக்கடுக்கா வர்றதுக்கு காரணம் இது மனிதக் கைகள் உண்டாக்குனது இல்லை என்பதே!!!! எல்லாம் மெஷீனுதான்.

said...

வாங்க கீதா.

ஜஸ்ட் சமையல் வாரம். மாசமெல்லாம் தாங்காது கேட்டோ:-))))

மோகன் குமாருக்கு பதில் கொடுத்ததுக்கு டாங்கீஸ்ப்பா!!!

said...

வாங்க கோவை2தில்லி.

வாழ்க்கைக் கல்வியாக்கும்:-))))

உங்கள் அனைவருக்கும் இனிய திருநாள் வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க கருணாகரசு.

வணக்கம்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ஜோதிஜி.

உங்களுக்கும் குடும்பத்தின் தேவியருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

'டபுள் ட்ராஜெடி'ன்றதால் இந்த வருசம் நமக்குப் பண்டிகைகள் இல்லை:(

said...

வாங்க குமார்.

பார்ஸல் அனுப்பிட்டேன்:-)

said...

//காரியைப்போய் டீயிலே முக்கினா தொய்ஞ்சு போயிடாது:( ஐய்ய.....//

எடுத்தது கண்டார்.. தின்றதும் கண்டார். டீயில் முக்கியதைக் காணார்... அவ்ளோ ஸ்பீடு.

நொறுங்கிய துகள்கள் குழம்பியிருக்கும் டீயை சிங்கில் ஊத்தவா வேணாமான்னு குழம்பாமல் ஒரே கல்ப்பில் அடிக்கும் ரசனையும் காணீர் இங்கே :-))))))

said...

சுவைத்தேன். அருமை.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஏற்கெனவே பாலு, தண்ணீர், சாயாப்பொடி எல்லாம் சேர்த்து அதுபாட்டுக்குத் தளதளன்னு கொதிச்சுக் குழம்பாகிட்டு இருக்கும் டீதான் இந்த மஹாராஷ்ட்ரா, நார்த் இண்டியா பக்கங்களில். இதுலே காரி முக்கி இன்னும் குழப்புனா?????????

மக்கள்ஸ்க்கு வெவ்வேறு ரசனை & வெவ்வேறு ருசி. என்னத்தைச் சொல்றது போங்க!

said...

வாங்க மாதேவி.

நன்றியோ நன்றி:-))))