Wednesday, January 11, 2012

ட்ராஃபிக் லைட் பாஸ்தா!

இன்றும் வண்ண வண்ணச் சமையல்தான் நம்ம துளசி விலாஸில். குடமிளகாய்கள் பச்சை, மஞ்சள், சிகப்பு, ஆரஞ்சு, வெளிர் மஞ்சள், பர்ப்பிள்ன்னு ஏழெட்டு நிறங்களில் கிடைக்குது. இதுக்கு ஏழெட்டு வெவ்வேற பெயர்களும் இருக்கு. சில்லி பெப்பர், கேப்ஸிகம், பெல் பெப்பர், குடமிளகாய், சிம்லா மிர்ச்சி, ஸ்வீட் பெப்பர் இப்படி. மிளகாய் மிளகாய்ன்னு இருந்தாலும் மிளகாய்க்கான காரம் உறைப்பு இதுக்கு இல்லை.

பொதுவாப் பார்த்தால் பச்சை, சிகப்பு & மஞ்சள் பரவலா எப்பவுமே இங்கே சூப்பர்மார்கெட்டில் உக்கார்ந்துருக்கும். திடீர்ன்னு இதுக்கு ஒரு வாழ்வு வந்து உச்சாணிக்கொம்பில் ஏறி உக்காருவதும் உண்டு. 3$ eachன்னு போர்டு பார்த்தவுடன், 'நல்லா இரு'ன்னு சொல்லிட்டு நகர்ந்துருவேன்.
ஒரு நியாயம் வேணாம்?
பர்ப்பிள் காலி பார்த்த கடையில் முக்கலர் பொதி ஒன்னு, 2 $க்குக் கிடைச்சது. $1.99 ன்னு போட்டு வச்சுருப்பாங்க பாட்டா ஷூ கடை போல! (இப்ப எங்க நாட்டில் அஞ்சு செண்ட் காசைக்கூடக் கழிச்சுக்கட்டியாச்சு. பத்து சதம்தான் ஆரம்பம்.)


கொஞ்சம் லைட்டான லஞ்சா இருக்கட்டுமேன்னு இன்னிக்கு பாஸ்தா. இந்த பாஸ்தா கோதுமை மாவு சமாச்சாரம். பொதுவாப் பார்த்தால் இந்த பாஸ்தாவும் புள்ளையாரும் ஒன்னுதான். எத்தனையெத்தனை வகைகளில் புள்ளையார் பண்ணி விக்கிறாங்களோ அத்தனை வகை பாஸ்தாக்களும் இருக்கு:-) நீள நீளமா ஸ்பகாட்டி, நூடுல்லே ஆரம்பிச்சு சேமியான்னு பலதையும் கடந்து சின்ன வடிவங்களா Fusilli, Perciatelli, Sagnarelli, scilatielli, Penne, Spirali, Conchiglie, Gomito இப்படி வெவ்வேற ஷேப்புலே வெவ்வேற பெயரிலே கொட்டிக்கிடக்கு உலகம் எங்கிலும். லுங்கி (Fusilli lunghi)ன்னு கூட ஒன்னு இருக்குன்னா பாருங்க. இதுலேயும் காய்கறிச் சாறுகளைச் சேர்த்து பல நிறங்களிலும் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு. நடுவிலே துளை உள்ளதுகளை, (சின்னக்குழாய், முழங்கை மடிப்பு போன்ற வடிவங்கள்) உள்ளுர் பாலர்பள்ளிகளில் பசங்களுக்கு நகைநட்டு, செயின், நெக்லேஸ் எல்லாம் செய்யப் பயன்படுத்துவோம். நடுநடுவில் கொஞ்சம் கலரும் அடிச்சுக்கிட்டா சூப்பர் நகை! நூலை வச்சுச் சரசரன்னு சரம் கோர்த்துரும் நம்ம பசங்க!
பாஸ்தா வகைகளில் சில

சரி, இன்னிக்குச் சமையலைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: முக்கலர் குடமிளகாய்கள்.

பாஸ்தா: 2 cup (எந்த ஷேப்பா இருந்தாலும் பரவாயில்லை)

வெங்காயம் : 1 (சிகப்பு வெங்காயமுன்னா உத்தமம்)

இஞ்சி : ஒரு செ,மீ நீளமுள்ள துண்டு ( தோல் சீவிக்கணும்)

பூண்டு : 3 பற்கள்:-)

பச்சை மிளகாய் : 2

தக்காளி : பெருசா ஒன்னு

உப்பு : 1 தேக்கரண்டி

வெண்ணெய் அல்லது மார்ஜெரீன்: 2 மேசைக்கரண்டி
என்னை மாதிரி உள்ள 'காம்சோர்'களுக்கு மேற்படி பொருட்களில் சின்ன மாற்றம். வெங்காயத்துக்குப் பதிலா ஒரு ஆனியன் ஸூப் பாக்கெட், இஞ்சிப்பூண்டு மிளகாய் சேர்த்து அரைச்ச விழுது ஃப்ரீஸரில் இருந்தால் அதுலே ஒரு டீஸ்பூன். ஆனியன் ஸூப் பாக்கெட்டில் வெஜிடபிள் ஃபேட் இருக்கான்னு மட்டும் பார்த்துக்குவேன்.

செய்முறை:
நம்ம வீட்டில் இன்னிக்கு Fusilli என்ற வடிவம் சமைக்கிறோம். ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்னரை லிட்டர் தண்ணீரைக் கொதிக்கவிடுங்க. அதுலே ரெண்டு கப் பாஸ்தாவைப்போட்டு அரை டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேகவிடுங்க.ஒன்னோடொன்னு ஒட்டாம இருக்க இந்த எண்ணெய் வைத்தியம். அரைவேக்காடானதும் அரைத் தேக்கரண்டி உப்பையும் போட்டுக்கலாம்.

பாஸ்தா வேகும்வரை சும்மா இருக்காம பச்சை, மஞ்சள் சிகப்பு நிறங்களில் உள்ள குடமிளகாய்களைக் கழுவி, முதலில் ரெண்டாக வெட்டி நடுவில் இருக்கும் விதைகளை எடுத்து அடுக்களைக் குப்பையில் போட்டுருங்க. இப்ப அரைக் குடமிளகாய்களை அடுக்கி வச்சு சின்னத்துண்டுகளாய் நறுக்கி வச்சுக்கணும். நாம் சமைக்கப்போற இந்த ரெண்டு கப் பாஸ்தாவுக்கு மூணு குடைமிளகாய் தேவையில்லை. ஒன்னரையே போதும். இப்ப இதுலே சரிபாதி எடுத்து ஒரு ஸிப்லாக் பையில் போட்டு ஃப்ரீஸரில் போட்டு வையுங்க. இன்னொரு நாள் வேற சமையலுக்கு ஆச்சு.
இஞ்சி பூண்டு மிளகாயை சின்னக் கை உரலில் நசுக்கியோ இல்லை மிக்ஸியில் சின்ன ஜார் வச்சு அரைச்சோ எடுத்துக்குங்க. இதுக்கு க்ரீன் மசாலான்னு பெயர் வச்சுருங்க.

வெங்காயத்தைப் பொடியா அரிஞ்சு வச்சுக்குங்க.

பாஸ்தா வெந்ததும், வடி தட்டு இருந்தால் அதுலே போட்டு நீரை வடிச்சு எடுத்துருங்க. சின்னத்துளை உள்ள வடிகட்டிப் பாத்திரமே இப்பெல்லாம் கிடைக்குதே!

ஒரு பெரிய வாணலியை அடுப்பில் ஏத்தி, அதுலே ரெண்டு மேசைக்கரண்டி வெண்ணெய் அல்லது மார்ஜெரீன் சேர்த்துச் சூடாக்கவும். வெறும் எண்ணெய் சேர்த்தால் நல்லா இருக்காது. வீட்டில் ஆலிவ் ஆயில் இருந்தால் அதை சேர்த்துக்கலாம். அட்லீஸ்ட் அத்தெண்ட்டிக் சமையல்ன்னு சொல்லிக்கலாம்:-)
வாணலியில் உள்ள சமாச்சாரம் சூடானதும் அதுலே க்ரீன் மசாலாவைச் சேர்த்து வதக்கணும். வதங்கி வாசனை வந்தவுடன் நறுக்கி வச்ச குடமிளகாய்களைச் சேர்த்து அரை தேக்கரண்டி உப்பும் போட்டு வதக்குங்க.காயில் உப்பு பிடிக்கட்டும்.
முக்கால்வாசி வெந்ததும் ஆனியன் ஸூப் பொடியில் அரைக்கப் தண்ணீர் சேர்த்துக் கலக்கி அதையும் குடமிளகாயின் தலையில் போடுங்க. கரண்டியால் கிளறிவிடுங்க. ஒரு நிமிசம் ஆனதும் வெந்த பாஸ்தாவைப் போட்டு நல்லாக் கிளறிவிடுங்க. அடுப்பு சிறுதீயா இருக்கட்டும்.ரெண்டு மூணு நிமிசம் வேகட்டும். நான் ஸ்டிக் வாணலின்னா ஒட்டாம, அடிப்பிடிக்காம வந்துரும். அடுப்பை அணைச்சுட்டு கொஞ்சம் கொத்துமல்லித் தழையை வாணலியில் உள்ள பாஸ்தாவில் தூவி அலங்கரிச்சால் ஆச்சு. ஒரு ஹாட் கேஸில் எடுத்து வச்சேன்.
இப்ப ஒரு பாஸ்தாத்துண்டை எடுத்து ருசி பார்க்கவும். ஐயோ...... கொஞ்சம் உப்பு தூக்கலா இருக்குமே! யூ ஆர் ரைட். ஏற்கெனவே ஆனியன் ஸூப்பில் உப்பு சேர்த்திருப்பாங்களே. அதை எப்படி மறந்தோம்?

இங்கே நியூஸியில் எதுக்கெடுத்தாலும் சொல்வாங்க... 'திஸ் இஸ் நாட் எண்ட் ஆஃப் த வொர்ல்ட்'ன்னு . அதே அதே. உப்பு கூடிட்டா உலகமா முடிஞ்சுரும்? வாங்க ரிப்பேர் பண்ணிடலாம்.

பேண்ட்ரி திறந்து பார்த்தேன். கொஞ்சம் முந்திரி திராட்சை சேர்க்கலாமா...... ஆஹா....கண்ணில் பட்டது அக்ரூட். பயந்துட்டீங்களா? இது வேறொன்னுமில்லை நம்ம வால்நட்ஸ்தான். அதுலே ஒரு கைப்பிடி, அப்படியே அதுக்குப் பக்கத்துலே இருந்த பூசணி விதையில் அரைப்பிடி எடுத்து அரை டீஸ்பூன் நெய்யில் லேசா வறுத்து பாஸ்தாவின் மேல் தூவினேன். உப்பு சமன் பட்டிருக்குமோ?
இப்போ பார்வையில் விழுந்தது எடுத்து வச்சுருந்த தக்காளி. பாஸ்தா கலர்ஃபுல்லா இருக்காமல் சிகப்பாயிருமேன்னு தக்காளியை சமையலில் சேர்க்காமல் விட்டு வச்சுருந்தேன். நம்ம கேட்ஜட்ஸ் ட்ராவைத் திறந்தால் டொமாட்டோ ஸ்லைஸர் சிரிக்குது. அதை எடுத்து அந்தத் தக்காளியை அழகா ஒன்னுபோல அரிஞ்சு பாஸ்தாவின் மேல் அலங்கரிச்சு ஹாட் கேஸை மூடிவச்சேன்.
கோபால் லஞ்சுக்கு வந்தார், சமையல் வாரமான்னு கேட்டுக்கிட்டே.......

டடா....... மேலே வச்ச தக்காளித்துண்டுகள் பாஸ்தா சூட்டில் அரை வேக்காடா வெந்து அட்டகாசமா இருக்கு! சத்துகள் நிறைஞ்ச 'ரிச்' பாஸ்தா!

செஞ்சுதான் பாருங்களேன்!


28 comments:

said...

ஆஷிஷ் ,அம்ருதாவுக்கு ரொம்ப இஷ்டமானது பாஸ்தா. ரெசிப்புக்கு தேங்க்ஸ். செஞ்சு பாத்திடறேன்.

said...

படிக்கும் போது உங்கள் குரலும் சேர்ந்து கேட்குது.
:)

சிங்கப்பூரில் மூன்று நிற மிளகாயும் கிடைக்குது ஆனா ஒண்ணு ஒண்ணுக்கும் விலை வேறுபாடு 10 காசு அளவில் இருக்கு.

*****

புள்ளையார் பிடிக்க குரங்கு ஆனதாக உப்பு கூடப் போக, "ட்ராஃபிக் லைட் பாஸ்தா"வில் பனி விழுந்து மங்கலாகிவிட்டிருக்கு போல
"_

said...

நல்ல ரெசிபி.செய்முறை விளக்கம் அருமை.பாஸ்தா தயாரிக்க தெரிந்து கொண்டேன் மேடம். படங்கள் மிக அழகு

said...

இந்த பாஸ்தா சமாசாரத்தை இவ்வளவு டீடேய்லாக , கவர்ச்சியாக, தெளிவாக, சொன்னதற்கு , என் வாழ்த்துக்கள்.
டிராபிக் லைட் கலர்கள் அருமை. அந்த வதக்கிய கடாயை பார்த்தால் , பாஸ்தா
சேர்க்காமயே சாப்பிடலாம் போல , தூண்டுது.

said...

உரையாடுவது போலவே இருக்கு. ரசித்து எழுதுவதைப் போல ரசனையுடன் செய்த விசயங்களை மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு எழுதுவதும் ஒரு கலை தான்.

said...

இந்த சூப் பாக்கெட்டுகள் வந்தாலும் வந்துச்சு.. அட்டகாசம் தாங்கலை :-)

உங்க ஈஸிப்பீஸி முறைதான் என் பொண்ணும் கடைப்பிடிப்பா. ஒரு நாள் மஞ்சூரியன், ஒரு நாள் ஸ்வீட் கார்ன்னு முறுக்குக்கு பதிலா முழங்கையை அள்ளிப் போட்டு,வித விதமான பாஸ்தாக்கள் செய்யறதுண்டு :-)

said...

வாங்க புதுகைத் தென்றல்.

இதை ஆஷிஷ், அம்ருதா ரெண்டு பேருமே செஞ்சுருவாங்க! உங்களுக்கு இன்னிக்கு ரெஸ்ட்:-)

said...

வாங்க கோவியாரே.

பத்து காசு வேறுபாடுன்னா கவலையே இல்லை! இங்கே நம்மூரில் இப்பெல்லாம் எதெடுத்தாலும் 'கொள்ளை' :(

சுடச்சுட ஆவி பறக்கும்போது கேமெராவைக் கிட்டக்கக் கொண்டுபோயிட்டேன். ஆவி 'அடிச்சுருச்சு':-)

said...

வாங்க ராம்வி.

ஒரு நாள் செஞ்சு பாருங்க. உங்கூர்லே இது விலை மலிவாக் கிடைக்குமே சீஸனில்!

said...

வாங்க வெற்றிமகள்.

ட்ராஃபிக் லைட்ஸை ரொம்ப மெலிஸா ஸ்லைஸ் செஞ்சு கொஞ்சம் சீஸ் வச்சு சாண்ட்விச் பண்ணி ஒரு நாள் சாப்பிட்டுப்பாருங்க.. அட்டகாசமா இருக்கும்!

said...

வாங்க ஜோதிஜி.

தேவியர்களுக்கு இந்தமாதிரி கலர்கலரா செஞ்சு கொடுங்க. காய்கறி பிடிக்காத குழந்தைகளும் ஓசைப்படாம சாப்பிட்டுருவாங்க!

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆஹா..... வீட்டுலேயே ஒரு Chef இருக்காங்களா!!!!!!!

முழங்கை நான் அதிகம் வாங்குவதில்லை. சோழிகள் பிடிக்கும்!

said...

கலர் ஃபுல் பாஸ்தா.... பார்க்கும்போதே நல்லா இருக்கு...

:)))

said...

நல்ல பதிவு.
நன்றி அம்மா.

said...

பாஸ்தாவும் புள்ளையாரும் ஒன்னு..
அங்கியே நின்னுட்டிருக்கேன்.

said...

என்னது டிராபிக் லைட் ஃபாஸ்டா எரியுதா? அதுக்குல்லாம் பதிவா? டிராபிக் போலிஸ் கிட்டே இல்லைனா எங்க ஊரு டிராபிக் ராமசாமிக்கிட்டே சொன்னாலே போதுமே ;-))

said...

படிக்கும் போது உங்கள் குரலும் சேர்ந்து கேட்குது.

Repeat....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கண்ணுக்கு மட்டுமா..... வயித்துக்கும் நல்லதே!

கொஞ்சம் கலர் ஃபுல்லா இருந்தாப் பசங்க முரண்டு பிடிக்காம காய்களைச் சாப்பிட்டுவாங்கதானே:-))))

said...

வாங்க ரத்னவேல்.

நன்றி நன்றி.

said...

வாங்க அப்பாதுரை!

//அங்கியே நின்னுட்டிருக்கேன்.//

ஞானம் பிறந்துருக்குமே:-))))))

said...

வாங்க வவ்வால்.

அந்தரத்தில் தொங்கும்போது ட்ராஃபிக் லைட் தலைகீழாத் தெரியுதா:-)))))

இங்கே ட்ராஃபிக் லைட் குச்சி ஐஸ் கிடைக்குது. ரெஸ்ட்டாரண்டுலே குட்டீஸ்களுக்கு இப்படி ஜூஸ் கூட பண்ணித் தர்றாங்க.

சின்ன வயசுலே இருந்தே சாலை விதிகளைச் சொல்லிக் கொடுக்க இதுவும் ஒரு ஐடியாதான்!

said...

வாங்க நவீனம் கோவிந்தராஜன்.

முதல் வருகையா??????

நல்லா இருக்கீங்களா?

வருகைக்கும் ரிபீட்டின்னதுக்கும் நன்றிங்க.

அடிக்கடி வந்து போகணும்.

said...

sure sure. kandippa varuven akka. I am doing fine. Hope you folks are doing good.

Happy pongal wishes to you and Mr. Gopal sir.

said...

உப்புத் தூக்கலானா சமன்படுத்த நல்ல ஐடியா :)) நாங்களும் கற்றுக்கொள்கின்றோம்.

சமையல் என்றால் எல்லாம் தெரிந்திருக்கவேண்டும் அல்லவா ஜமாச்சிடுங்க.

said...

வாங்க மாதேவி.

சமையல் செய்யும்போது 'ரிப்பேர்' வேலைகள் கட்டாயம் இருக்கும். அப்பப்ப அதைச் சரி செஞ்சுட்டு அதையே புது ரெஸிபி ஆக்கிடலாம்:-))))

said...

இந்தப் பாஸ்தா எல்லாம் நான் சாப்பிட்டதே இல்லீங்க!
வண்ணமயமா இருக்கு!

said...

வாங்க சென்னை பித்தன்.

எல்லாம் கோதுமை சமாச்சாரம்தான். இன்னுமா சாப்பிட்டுப் பார்க்கலை?

சென்னையில் சூப்பர் மார்கெட்டுகளில் தாராளமாக் கிடைக்குதே!!!

said...

Super ma