Thursday, January 12, 2012

துளசி விலாஸில் இன்று (ஈஸிபீஸி ) உசிலி

உசிலின்னு நீட்டி முழக்காமல் 'சுருக்கமா'ப் பருப்பு அரைத்த கறின்னு சொல்லும் வஸ்துவை இன்னிக்குத் துளசிவிலாஸில் நோகாமல் செய்யப்போறோம்.

பண்டொரு காலத்தில் கல்லுரலில் வடைக்கு அரைப்பதுபோல் அரைச்சு அதைக் கைவிடாமல் வாணலியில் கிளறோ கிளறுன்னு கிளறி நம்ம மனசும் வயிறும் நிறைய ஆக்கிப்போட்ட அம்மாக்களையும் அத்தைகளையும் பாட்டிகளையும் இப்ப நினைச்சாலும் 'ஐயோ'ன்னு இருக்கு. அடுப்பூதும் பெண்கள்ன்னு ஒரு டைட்டிலைக் கொடுத்துட்டதால், நாள் முச்சூடும் அடுப்படியே கதின்னு கிடந்துருந்தாங்க இல்லே!!!!

நாகரீக வாழ்க்கைக்கு இப்போ நாம் பழக்கப்பட்டுட்டாலும் நாக்கு என்னமோ பழைய ருசிக்கு அலையத்தான் அலையுது. பீட்ஸா, பர்கர், பாஸ்தா, அது இதுன்னு வெட்டி விழுங்கினாலும் மூணு நாளைக்கு மேலே தாக்குப்பிடிக்க முடியறதில்லைப்பா:(

சட்னு ஒரு ரசம், குழம்பு கூட்டு, கறின்னு எதாவது ஒன்னு இடைக்கிடைக்கு செஞ்சு தின்னால்தான் மனசும் கொஞ்சம் ஆறும். ஆனால்..... பழங்காலம் போல் உடல் வருத்தி உழைக்க முடியுதா?

அதான்....இன்னிக்கு இப்படி:-)

'அசல் வகை' தெரியாதவங்களுக்காக ஒரு சின்ன விளக்கம். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, கொஞ்சூண்டு அரிசி சேர்த்து ஊறவச்சு, கல்லுரலில் கரகரன்னு ஆட்டி எடுத்துக்கணும். அரைக்கும்போதே நாலு வரமிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்துக்கணும்.

'தோள்வலி; உள்ளவர்கள் ஒரு வாணலியில் எண்ணெய் ஊத்திக் கடுகு கருவேப்பிலை, தாளிச்சு அரைச்ச மொத்தையைப் போட்டுக் கைவிடாமக் கிளறணும், அது வெந்து தூள் தூளாப்பிரியும்வரை. அதுக்குப்பிறகு எந்தக் காயை உசிலியாப் பண்ணப்போறோமோ அதை சின்னத்துண்டுகளா நறுக்கி உப்புத்தண்ணீரில் வேகவச்சுட்டு காயை வடிகட்டி மேற்படி வாணலியில் பருப்புத் துகளோடு சேர்த்து நல்லா வதக்கி எடுக்கணும்.

தோள் 'வலி' உடையவர் இந்த அரைச்ச மொத்தையை ஒரு இட்டிலித்தட்டில் வச்சு அவிச்சு எடுத்து ஆறுனதும் கையால் உதிர்த்து எடுத்துக்கணும். காய்த்துண்டுகளை உப்பு சேர்த்து வேகவைச்சு எடுத்துக்கிட்டு, வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு வெடிக்கவச்சு கருவேப்பிலை போட்டு இந்தக் காயையும் உதிர்த்து வச்ச சமாச்சாரத்தையும் சேர்த்து அஞ்சு நிமிட் கிளறி இறக்குனால் ஆச்சு.

என்னால் முடியவே முடியாது. ஆனால் உசிலி வேணுமுன்னு என்னைப்போல அடம் பிடிச்சால்.....

பருப்புவகைகளை ஊறவச்சு மிளகாய் உப்பு பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைச்சு அதை சின்ன உருண்டைகளா உருட்டி ஒரு பீங்கான்/கண்ணாடித்தட்டில் வச்சு மூணு நிமிட் மைக்ரோவேவினால் பருப்பு பார்ட் ரெடி. காய்களை சின்னதா வெட்டுவது, உப்புப்போட்டு வேகவச்சு ஒட்ட வடிச்செடுப்பதையெல்லாம் சின்ன முணுமுணுப்போடு செஞ்சுக்கலாமுன்னு வையுங்க. (உருண்டைகளை உதிர்த்து எடுத்துக்கணுமுன்னு தனியாச் சொல்லணுமா?)

இப்படித்தான் வாழ்வில் மிக்ஸி காலம், மைக்ரோவேவ் வந்த காலங்களில் செஞ்சுக்கிட்டு இருந்தேன். அப்படியே எத்தனை வருசங்களாச் செய்வது? போரடிக்காதா? அதுவும் ஈஸிபீஸி இண்டியன் குக்கிங் புத்தகத்துக்காக(வும்) உக்கார்ந்து யோசனை செய்ய வேண்டி இருக்குல்லே?

பரிசோதனை 'எலி' இருக்கும்போது நமக்கென்ன கவலை?

புதுவிதம் இனி ரெடி. பீன்ஸ் பருப்பரைச்ச கறி.

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 2 குழிக்கரண்டி

அரிசிமாவு - 2 மேஜைக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - 2 (பொடியா நறுக்கியது)

பச்சை மிளகாய் - 4 (பொடியா நறுக்கியது)

இஞ்சி - 1 செமீ நீளத்துண்டு. (தோல்சீவித் துருவியது)

பெருங்காயத்தூள் - அரைத்தேக்கரண்டி

பீன்ஸ் - 250 கிராம் (நல்லாக் கழுவிட்டு, தலையும் வாலும் எடுத்துட்டு 0.3 செ.மீ அளவில்(ச்சும்மா ஒரு கெத்து) பொடியா நறுக்கி எடுத்துக்கணும்.

தாளிக்க - நாலு மேசைக்கரண்டி எண்ணெய்
கடுகு - முக்கால் தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு இணுக்கு.

செய்முறை பார்ப்போமா?

ஒரு பாத்திரத்தில் கடலைமாவு அரிசிமாவு, அரைத்தேக்கரண்டி உப்பு போட்டு வச்சுட்டு பொடியா நறுக்கின வெங்காயம் ப.மிளகாய், துருவின இஞ்சி, ஒரு தேக்கரண்டி எண்ணெய் கலந்து கொஞ்சமாத் தண்ணீர் தெளிச்சுப் பிசைஞ்சுக்கணும். சப்பாத்தி மாவைவிடக் கொஞ்சம் தளர இருக்கணும். இதை ஒம்போது உருண்டைகளா உருட்டி ஒரு பீங்கான்/கண்ணாடித்தட்டில் வச்சு 3 நிமிட் மைக்ரோவேவணும். தெறிக்காமல் இருக்க எதுக்கும் ஒரு மைக்ரோவேவ் சேஃப் மூடி போடுவது உத்தமம்.
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் கொதிக்கவிட்டு அதில் நறுக்கிய பீன்ஸை பாக்கி இருக்கும் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வேகவிட்டு தண்ணியை வடிச்சுக் காயை மட்டும் எடுத்து வச்சுக்கணும்.
இதுக்குள்ளே மைக்ரோவேவின வெந்த மாவு உருண்டைகள் ஆறி இருக்கும் அதை கத்தியால் சின்னத் துண்டங்களா நறுக்கிக்கலாம். உடைச்சு உதிர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுத்து சுத்தவிட்டாலும் ஆச்சு. (அப்புறம் ஜாரைக் கழுவணும். அது எதுக்கு கூடுதல் வேலைன்னு கத்தியைக் கையில் எடுத்தேன்)
ஒரு 'நான் ஸ்டிக்' வாணலியில் நாலு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை வெடிக்க விட்டு தூளாக்கிவச்ச பருப்பு சமாச்சாரத்தைப் போட்டுக் கிளறினால் நல்ல வடை வாசனை வரும்(!) இதன் கூடவே வேகவச்ச பீன்ஸையும் சேர்த்து ஒரு அஞ்சு நிமிட் அடிப்பிடிக்காமல் அடிக்கடி கிளறிவிட்டு எடுத்தால் ஆச்சு.
நான் இன்னிக்குக் கறிவேப்பிலை சேர்க்கலை. செடிக்கு 'மீல்பக் ஒழிப்பு' மருந்து அடிச்சுருக்கேன். ஒரு வாரம் போகட்டும்.
உசிலிக்கு ருசியில் ஒரு வேறுபாடும் தெரியலை.நல்லாவே இருக்கு.

கூடுதல் குறிப்புகள் சில:

உதிர்த்த வெந்த மாவு உருண்டைகள் அளவு அதிகமா இருக்கு. 250 கிராம் பீன்ஸுக்கு இது ரொம்பவே அதிகம். அதனால் அதுலே ஒரு பாதி எடுத்து ஸிப்லாக் பையில் போட்டு ஃப்ரீஸருக்குள் தள்ளியாச்சு.

இது முன்னாலேயே தெரிஞ்சுருந்தால் ஒரு குழிக்கரண்டி மாவு மட்டும் பயன்படுத்தி இருக்கலாம். போகட்டும்.

தளரப்பிசைஞ்ச மாவில் பாதியை மைக்ரோவேவிட்டு, மீதிப்பாதியில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொஞ்சமா இளக்கிட்டு, சூடான எண்ணெயில் பஜ்ஜியாவாப் பொரிச்செடுத்து மோர்க்குழம்பில் போட்டால் தானுக்குத் 'தான்' ஆச்சு:-))))
இனி உங்க சமர்த்து. என்ன செய்யணுமோ எப்படிச் செய்யணுமோ அப்படிச் செஞ்சு பார்த்துட்டுச் சொல்லுங்க.

PIN குறிப்பு: சொல்ல மறந்துட்டேனே. சூடான பாத்திரத்தைப் பிடிக்க இனி கைப்பிடித் துணி/டவல் எதுவும் வேணாம். அது ஈரமாகி, பிசுக்குப்பிடிச்சு அதைவேற தினமும் தனியாத் துவைச்சுன்னு....... சல்லியம். இப்பெல்லாம் 'Pபாட் ஹோல்டர்'ன்னு சிலிகன்னில் கிடைக்குது. கைக்கொன்னுன்னு ரெண்டு நிறத்தில் வாங்கிவச்சேன். வாத்து மூக்கு போல.....க்வாக் க்வாக்:-)

33 comments:

said...

க்வாக் க்வாக் சூப்பர்:)! இங்கு கிடைக்கிறதா பார்க்கணும்.

மைக்ரோவேவில் உசிலி. சுலப முறைக்கு நன்றி.

said...

தங்க வளையோடு படம் போட்டதன் காரணம் என்ன ?

:)

said...

தோள் கண்டார் தோளே கண்டார்னு நான் //பருப்புவகைகளை ஊறவச்சு மிளகாய் உப்பு பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைச்சு..// இப்படித் தான் இன்னமும் செஞ்சுட்டு இருக்கேன். ஒரே ஒரு வித்தியாசம், மைக்ரோவேவாமல், சோறு வைக்கும் பொது குக்கரில் உருண்டைகளையும் வேக வைக்கிறேன். பருப்புருண்டை குழம்பு / பருப்புசிலி இதற்கெல்லாம் ஓரிரு வித்தியாசத்தோடு இப்படித் தான்! பீன்ஸ் / வாழைப்பூ / கொத்தவரை போன்றவற்றோடு உசிலி.

வெந்த பருப்புசிலி நீர்த்துப் போனால், திறந்த பாத்திரத்தில் பிரீசரில் வைத்து எடுக்கலாம், நேரம் / பிரீசரின் தூய்மையைப் பொறுத்து:-) நீர் வற்றும்.

கடலை மாவு/அரிசி மாவில் முயற்சி செய்து பார்க்கிறேன்.

said...

தேங்காயெண்ணை ரெண்டு ஸ்பூன் கலந்து பொறிச்சா இன்னும் சூப்பரா இருக்குமே?

புத்தகம் வருதா? வெரி குட்.

said...

ஈஸிபீஸி உசிலி செஞ்ச கைக்கு அண்ணா போட்ட வளைகள்தானே அதெல்லாம் :-)))))))

நேத்து எங்கூட்லயும் பருப்புருண்டைக் குழம்புதான் ;-)

said...

இந்த உசிலி முறைதான் பொண்ணு வீட்ல. ஆனால் கடலை மாவு முறை செய்தது இல்லை. சமையல் புத்தகம் வருதா!!!!!! சொல்லவே இல்லையேப்பா.நீங்க என்ன புதுச வாங்கினாலும் (க்வாக்)உள்பட அப்படியே எனக்கும் .....;)

said...

பருப்புக்குப் பதிலா மாவுல உசிலியா? ஏயப்ப்பா... “ஈஸி சமையல்”ல நீங்க என்னையே மிஞ்சிடுவீங்க போலருக்கே!! ”டீச்சர்” பட்டம் பொருத்தம்தான்!! :-))))

said...

சேச்சி !! எங்காத்திலையும் இன்னிக்கு பீன்ஸ் பருப்பு உசிலி :-)

said...

பருப்பு உசிலி செம ஈஸி. நன்றி.

பருப்பு உசிலி செய்த கைக்கு தங்கவளை! அருமை.

said...

//நாகரீக வாழ்க்கைக்கு இப்போ நாம் பழக்கப்பட்டுட்டாலும் நாக்கு என்னமோ பழைய ருசிக்கு அலையத்தான் அலையுது.//

ரொம்ப சரியாக சொல்லியிருக்கீங்க..

வடை போட்ட மோர் குழம்பும்,பருப்புசுலிக்கறியும் அருமை.

said...

மோர்க்குழம்பும், பருப்பரைத்த கறியும் சூப்பர்!

க்வாக் க்வாக் அருமையா இருக்கே.....

said...

இங்கேயும் இந்த உசிலி கிடைக்கும்.  

subbu thatha
meenakshi paatti

said...

இம்புட்டு சிம்பிளா உசிலியா!!! செஞ்சு பாத்திடறேன்.

ரொம்ப தாங்க்ஸ்

said...

படிக்க படிக்க மிக ஆச்சர்யம்! எப்படியோ போட்டு குழப்பி பைனல் பராடக்ட் சூப்பர்!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

செஞ்சு பார்த்துட்டுச் சொல்லுங்களேன்.

க்வாக் க்வாக் இன்னுமா இந்தியாவில் கிடைக்கலை?

said...

வாங்க கோவியார்.

சமையல் நல்லா இருந்துருச்சுன்னா கோபாலுக்கு குஷி வந்துரும். செஞ்ச கைகளுக்கு உடனே வளை மாரி பொழிஞ்சுருவார்!

(ஹூம்...இப்படிச் சொல்லிக்க ஆசையாத்தான் இருக்கு. ஓடோடி வாங்க இங்கே ஒன்பதுதானே... கிடைக்கும்!)

said...

வாங்க கெக்கேபிக்குணி.

சோறோடு வச்சால் கூடுதலா வெந்துருமேப்பா:(

பருப்புருண்டைக் குழம்புக்குன்னா....ஓக்கேதான்!

said...

வாங்க அப்பாதுரை.

இங்கே வெறும் தே.எண்ணெய் கிடைப்பதில்லை. கூந்தல் தைலமாத்தான் கிடைக்குது. ஃபிஜியில் இருந்து வருவது என்னவோ காரல் வாசனையா இருக்கு. அதனால் அவியலுக்கும் தே. எண்ணெய் கிடையாது:(

புத்தகம் போடணுமுன்னு கோபால்தான் ஒத்தைக்காலில் நிக்கறார்:-)))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

உங்க அண்ணாவைப் பத்தி கரெக்ட்டா புரிஞ்சுவச்சுருக்கீங்க:-))))))

பருப்புருண்டைக்குழம்பு செஞ்சு ரொம்ப நாளாச்சு. ஒரு நாள் வச்சுக்கணும் கச்சேரி:-)))))

said...

வாங்க வல்லி.

முந்தாநாள் பார்த்தா இந்த க்வாக் க்வாக் வேற டிஸைனில் வந்துருக்கு.

உங்க ஆர்டரைக் கவனத்தில் வச்சுக்கறேன்:-)

புத்தகம் போடலாமுன்னுதான்.......

ஆசை இருக்கு தாசில் பண்ண....அதிர்ஷ்டம் இருக்கு......

said...

வாங்க ஹுஸைனம்மா.

சோம்பேறியா இருக்கணுமுன்னா.... இப்படிக் கண்டுபிடிப்புகள் செஞ்சாத்தான் கட்டுப்படி ஆகும்:-)))))

அதுவும் உலகின் ஒரு கோடியில் உக்கார்ந்துக்கிட்டு வக்கணையாச் சமைக்கணுமுன்னா....!!!!1

said...

வாங்க டாடிஅப்பா.

ஆஹா..... எஞ்சாய் எஞ்சாய்!!!

said...

வாங்க கோமதி அரசு.

ஆஹா.... நன்றி நன்றி.

இது குழிப்பணியாரத்துக்குச் செஞ்சு போட்டது:-))))))))))))

said...

வாங்க ராம்வி.

உண்மையைச் சொல்லிட்டேனே!!!!!!

நன்றி.

said...

வாங்க கோவை2தில்லி.

எல்லோரும் பாராட்டுவதைப் பார்த்தால்..... இந்த வருச கொலுவுக்கு வச்சுக்கொடுக்க க்வாக் க்வாக்தான்:-))))

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா & மீனாட்சி அக்கா. தம்பதி சமேதரா வந்து உசிலி புகழ் பாடிட்டீங்க. நம்ம உசிலிக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பாருங்களேன்!!!!!

இப்படி சேர்ந்து நில்லுங்க.ஸேவிச்சுக்கறேன்.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும். என்னவோ ஒழியலை:(

said...

வாங்க புதுகைத்தென்றல்.

செஞ்சுட்டு ஒரு குரல் விடுங்க::-))))

said...

வாங்க வெற்றிமகள்.

அட! ஆமாம்...ரிஸல்ட்டுதான் முக்கியம், இல்லே:-))))

said...

இந்த குவாக் குவாக் ரொம்ப நல்லா இருக்கிறதே. உசிலியை மறக்க வைக்குதே :))

said...

வாங்க மாதேவி.

இன்னிக்கு இந்த க்வாக் க்வாக் இருக்கே அதுக்குத் தங்கச்சியா இன்னொன்னு கிடைச்சது. சிலிகனில் செஞ்ச ஒரு ட்யூப் போல இருக்கு. சாஸ்பேன், தோசைக்கல் இதுக்கெல்லாம் நீளக்கைப்பிடி இருக்குல்லே அதுலே உலோகக் கைப்பிடி இருந்தால் அதுலே அப்படியே செருகிட்டுப் பாத்திரத்தை எடுக்கலாம். இடுக்கி வேண்டியதில்லை. இன்னும் என்ன வருதுன்னு 'நின்னு' பார்க்கணும்:-))))

said...

உசிலி அடிக்க்டி செய்வது தான்.நீங்க செய்து இருப்பது அவ்வளவும் எனக்கே பத்தாது போல இருக்கே
ஆனால் டிப்ஸ் அருமை.

said...

வாங்க ஜலீலா.

ஆஹா..... வராதவுங்க வந்துருக்கீங்க!!!!

நலமா?

நம்மூட்டுலே ரெண்டேபேர். இதுவே ரெண்டு நாளைக்கு இருந்து லோல்படுது.

வயசுவேற கூடிப்போச்சா...இப்போ சாப்பிடும் அளவு கூடக் குறைஞ்சு போச்சு.

ஆக்குனமா...தின்னு தீர்த்தோமா என்ற கதையே இல்லீங்க:(

said...

நன்று