Monday, August 08, 2011

அடடா............ என்ன அழகு!!!!! ( Haunted House 3 ( நிறைவுப்பகுதி) )

நம்ம முண்டாசு மழைக்காலத்தைப் பத்திச் சொன்னது அப்படியே இந்த பனிக்காலத்துக்கும் பொருந்தும்! குளிரைத்தாங்கும் உடைகள் போட்டு உடம்பை அப்படியே கதகதப்பா கைவிரல் நுனிகூட வெளியே தெரியாதபடி 'பொத்தி'வச்சு கண்ணும் மூக்குநுனியும் மட்டும் வெளியே தெரியும்படி வச்சுக்கிட்டு....... வெள்ளைப்பனிமலையின் மீது உலாவிப் பாருங்க!
ஆக்லாந்து நகரைவிட்டு வெளிவந்த விமானம் இப்போ தெற்கே பயணப்படுது. வழியெங்கும் வெள்ளை நிலங்கள். அதோ அதுதான் மவுண்ட் ருஆபெஹு ( Ruapehu) என்றார் கோபால். நியூஸியில் சின்னதும் பெருசுமா பதினாலு நேஷனல் பார்க்குகள் இருக்கு. பரப்பளவில் சின்னது 225 சதுர கிலோமீட்டர்கள். பெருசு 12519 சதுர கிலோமீட்டர்கள். இந்த 14 பார்க்குகளில் ஒன்னு இந்த ருஆபெஹு இருக்கும் காடு. இது ஒரு எரிமலை. பக்கத்துலே பக்கத்துலே Ruapehu, Ngauruhoe and Tongariroன்னு மூணு எரிமலைகள் அமைஞ்சுருக்கு அதுகள் எல்லாம் இங்கே. இப்போ கொதிக்காமல் ஓய்வெடுத்துக்கிட்டு இருக்கு. இந்த ருஆபெஹு மட்டும் அப்பப்பக் கொதிச்சுக் கூத்தாடும்.
மூணு எரிமலைகளில் இது ஒன்னு
இந்த வருசம் ஏப்ரலில் கொதிச்சு வெளியே பாயப்போறேன்னு எல்லோருக்கும் எச்சரிக்கைக் கொடுத்துட்டு அடங்கி இருக்கு. நியூஸி நாட்டில் எதாவது கொதிக்க ஆரம்பிச்சவுடன் தொலைக்காட்சிக்காரர்களுக்கு அல்வா கிடைச்ச மாதிரி. அங்கேயே டேரா போட்டுருவாங்க .24 மணி நேரமும் ஒளிபரப்புதான். Ngauruhoe எரிமலை சினிமாவில் கூட நடிச்சுருக்கு. பீட்டர் ஜாக்ஸனின் 'லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்' பார்த்துருப்பீங்கதானே! இந்நாட்டின் பழங்குடிகளான மவோரிகளுக்கு இந்த மலைகள் எல்லாம் கடவுள்மாதிரி. அதுக்காக நம்மைப்போல அலகு குத்திக்கிட்டு ஏறிப்போக மாட்டாங்க. இவுங்க வழிபாடு வேற மாதிரி. லாவா பொங்கி வழிய ஒரே ஒரு வாய்ன்னு இல்லாம இந்த மூணாவது மலையில் 12 கூம்பும் அதுக்கேத்த வாய்களுமா இருக்கும். எரிமலைக்குழம்பு வழிஞ்சு வரும்போது உள்ளே இருக்கும் தாதுக்களையும் உருக்கி வெளியே கொண்டு வந்து கொட்டும். குளிர்ந்தபிறகு பார்த்தால் அந்தந்த நிலத்தில் அமைஞ்ச தாதுக்களால் பல நிறக் கற்கள் கிடைக்கும்.(என்னிடம் ஒரு பச்சைக் கல் இருக்கு)

நியூஸியில் மொத்தம் 77 எரிமலைகள் இருக்கு.

இன்னும் கொஞ்சதூரம் பறந்தபிறகு மவுண்ட் எக்மாண்ட் கண்ணுக்கு எதிரே! இதுவும் எரிமலைதான். மவுண்ட் டாரனாகின்னும்( Mount Taranaki, or Mount Egmont) இதுக்கு இன்னொரு பெயர் இருக்கு.


இந்த மலை முதலில் வடக்குத்தீவின் நடுவில் மற்ற மலைகளோடு கூட்டுக் குடும்பமாத்தான் இருந்துருக்கு. ஒரு சமயம் மலைகளுக்குக்கிடையில் யார் அழகானவன்னு போட்டி ஏற்பட்டுச் சண்டை வந்துருச்சு. அன்னிக்கு அந்தச் சண்டையில் நாம் மேலே பார்த்த டோங்காரிரோ காடுகளில் இருக்கும் ருஆபெஹு ஜெயிச்சதால்..... மனம் உடைஞ்சு போன எக்மாண்ட்( அப்போ அதுக்கு மவுண்ட் டாரனாகின்னு பெயர். 'எக்மாண்ட்' அப்புறம் வெள்ளைக்காரர் காலத்தில் ஏற்பட்ட பெயர்) ரொம்ப தூரம் விலகி வந்து இப்போ இருக்கும் இடத்தில் வந்து உக்காந்துருச்சுன்னு மவோரி பழங்கதை ஒன்னு சொல்லுது. அந்தக் காலத்தில் மலைகளுக்கு இறக்கை இருந்துச்சுன்னு ராமாயணத்தில் வர்றதை இங்கே நினைவு வச்சுக்கணும்.ஆமா!


இட்டிலிமாவை அப்படியே கொட்டி வச்சுட்டாங்கப்பா. அப்படியே வழிச்செடுத்து இட்லி ஊத்திக்கலாம் அவ்ளோ கெட்டி மாவு!
நோகாம எல்லாத்தையும் பார்த்துக்கிட்டே வடக்குத்தீவின் கரையை விட்டு தெற்குத்தீவுக்குள் நுழைஞ்சால் இங்கே கைக்கோரா ரேஞ்ச் என்ற மலைத்தொடர்கள் பகுடர் போட்டுக்கிட்டு வரிசை கட்டி நிக்குதுங்க. இந்த கைக்கோரா என்னும் இடம் கடல்சிங்கங்களுக்குப் பெயர் போனது. பெரிய காலனியே இருக்கு. குஞ்சும் குளுவானுமா ஆயிரக்கணக்கில் இருக்கும். Hump back whales வகைத் திமிங்கிலங்களையும் இந்த ஏரியாவில் பார்க்கலாம். இதுக்காகவே டூரிஸ்ட்டுகள் வந்து மொய்ப்பாங்க வெய்யில் காலத்தில்.
கைக்கோரா மலைத்தொடர்கள்

விமானம் 11,000 மீட்டர் உயரத்தில் பறந்தாலும் துளியும் மேகம் இல்லாத நீலவானமா இருப்பதால் எல்லாமே கண்ணுக்குப் பளிச்! ஜியாமெண்ட்ரி டிஸைன் போட்டதுபோல் சரியா கோணங்கள் வச்சு பனி படிஞ்சுருக்கு கீழே! சாமி இஸ் வெரி க்ளெவர்ப்பா!


ஊருக்குச் சமீபம் வந்தாச்சு .

பனிரெண்டு மணிக்கு ஊரை நெருங்கினோம். கேண்ட்டர்பரி ப்ளெயின்ஸ் முழுக்க 'பால்'. ரன்வே மட்டும் சுத்தமா இருக்கு. பாக்கி இடங்கள் எல்லாம் பனியோ பனி. இண்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்டுலே இறக்கி விட்டாங்க. எங்களுக்காக தனி வழி அமைச்சு இமிக்ரேஷன் கவுண்டர்களை மூடிவச்சு அட்டகாசமான வரவேற்பு. எல்லா ஃபார்மாலிட்டியும் நேத்தே ஆக்லாந்தில் முடிச்சுட்டதால் பெட்டிகளை சேகரிச்சுக்கிட்டு வெளியே பாய்ஞ்சோம். 'துளசியாண்ட்டீ..... சுகம்தன்னே?' விளி கேட்டு திரிச்சி நோக்கியால்..... நம்ம ஜோயி! மாமியார் வர்றாங்களாம். அடடா..... தெரியாமப் போச்சே:(
கடவுளுக்கும் 'கலர்' கன்ஃப்யூஷனோ? ரெட்கார்பெட் விரிக்கச் சொன்னால் இப்படியா ஒயிட் கார்பெட் விரிச்சு வைக்கிறது? விமானநிலையம் வர்றேன்னு சொன்ன மகளை, வேணாம். சாலை நிலை சரி இல்லை. பேசாம நம்ம வீட்டுக்கு வந்துரும்மான்னு சொல்லிட்டு டாக்ஸி பிடிச்சு வீட்டுக்குப் போனோம். வாசல் கதவுகள் எல்லாம் 'பா'ன்னு திறந்திருக்க..... பட்டப்பகல் பனிரெண்டரைக்கு எல்லா விளக்குகளும் போட்டு பளிச்சுன்னு ஜொலிக்க..... (!) பயங்கர ஓசையில் இசைமழை!
வாசல் முழுசும் கொட்டிக்கிடந்த பனியில் பெட்டிகளை இறக்கிவச்சுட்டு டாக்ஸி ஓட்டி போயிட்டார். முன்பக்கத்துக் காங்க்ரீட் மேல் கால் வச்சதும் 'சர்'ன்னு ஸ்கீயிங். பனி எல்லாம் உருக ஆரம்பிச்சு ஐஸா மாறிக்கிட்டு இருக்கு. உள்ளே இருந்த இளைஞர் ஒருவர் வந்து அனாயாசமா பொட்டிகளைத் தூக்கிக்கொண்டு போய் உள்ளே வச்சார். புண்ணியவான்.. நல்லா இருக்கணும். ( நியூஸி & ஆஸியில் எந்த உதவிக்கும் டிப்ஸ் கொடுக்கும் / வாங்கும் வழக்கம் இல்லை என்பது இங்கே கூடுதல் தகவல்)
வீட்டுக்குள்ளே பெயிண்டிங் வேலை நடந்துக்கிட்டு இருக்கு. போனவாரம் இந்தியாவில் இருந்து தொலைபேசுனப்ப சனிக்கிழமை முழு வேலையும் முடிஞ்சுருமுன்னு சொல்லி இருந்தாங்க. பனிப்புயல் எல்லாத்தையும் கெடுத்து வச்சுருக்கு.
புழக்கடைப் பக்கம் எட்டிப் பார்த்தேன். நம்ம கப்புவின் மரம் குளிரிலும் கம்பீரமா நிக்குது.

கிறைஸ்ட்சர்ச் மாநகரத்தில் அஞ்சு மாசத்துக்கு முன்னே நிலநடுக்கம் வந்து ஊரே பாதி அழிஞ்சு போச்சு. 178 பேர் மரணம் வேற! கிறைஸ்ட்சர்ச் லேண்ட் மார்க்காக இருக்கும் கிறைஸ்ட்டின் சர்ச்சும் இடிஞ்சு விழுந்துருச்சு. அஞ்சாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அடியோடு அழிவு. மற்ற வீடுகளுக்கு சின்னதும் பெருசுமா வெவ்வேறு அளவில் சேதம். அதையெல்லாம் ஒவ்வொன்னாப் பரிசோதிச்சு எர்த் க்வேக் கமிஷன் சேத அளவுகளையும் விவரங்களையும் சேகரிச்சு வச்சுட்டு, பத்தாயிரத்துக்கு மேல் பழுதுன்னா அவுங்களே ரிப்பேர் செஞ்சு கொடுப்பதாகவும் அதுக்கும் கீழேன்னா பணமாக் கொடுத்துடறோம். வீட்டு உடமையாளர்களே சரி செஞ்சுக்குங்கோன்னும் சொல்லி இருந்தாங்களாம்.
கூரைமேல் இருந்த பனி, வெய்யில் வந்தபடியால் உருகிக் கட்டி கட்டியா தொப் தொப்புன்னு விழ ஆரம்பிச்சது.


இந்தக் கணக்கில் நம்ம வீட்டுக்கு அவுங்களே பழுது பார்த்துக் கொடுக்கறாங்க. ஏஜெண்டுகிட்டே சாவி வாங்கிக்கச் சொல்லி இருந்தோம். எல்லாப் பழுதையும் சரி பார்த்துப் பூசிட்டுக் கடைசியில் பெயிண்ட் அடிக்கும் போதுதான் நாம் வந்து இறங்கியது. இன்னும் ரெண்டு நாள் வேலை இருக்குன்னு சொன்னாங்க. அதுவரை மகள் வீட்டில் போய் தங்கிக்கலாமுன்னு முடிவாச்சு.
நம்மகூடவே வந்த பெருமாளையும் தாயாரையும் எடுத்து அலமாரியில் வச்சுட்டு ஒரு கும்பிடு போட்டுட்டு எல்லாப் பொறுப்பையும் 'அவன்' கையில் ஒப்படைச்சேன்.

அப்பதான் வீட்டுக்கு வெளிப்புறம் பெயிண்ட் அடிக்கும் ஆட்கள் வந்து மொத்த வீட்டின் வெளிப்புறத்தையும் பெயிண்ட் செய்யப்போறோம். உங்களுக்கு விருப்பமுன்னா வேற கலர் கூட மாத்திக்கலாமுன்னதும் அடிச்சதுடா ப்ரைஸ்ன்னு கலர் சார்ட்டுப் பார்த்து அக்கரோவா என்னும் கலரை அடிக்கச் சொன்னேன். வீடு இப்போ புதுப்பொலிவுடன் புதுவீடாவே மாறிப்போச்சு.

வீடு நல்லா ஆயிருச்சு. ஆனால் நம்ம வீட்டில் இருந்த குடித்தனக்காரர்கள் கன்ஸர்வேட்டரியில் இருந்த செடிகளையெல்லாம் 'ஓசைப்படாமக் கொன்னு போட்டுருந்தாங்க':( நில நடுக்கத்தில், தோட்டத்தில் இருந்த செடிகள் ஸ்டேண்டு (கேபிள் ட்ரம்) உடைஞ்சு விழுந்து அப்படியே கிடப்பது பெரிய சோகம். இந்த மாச பிட்டுக்கு இந்த சோகத்தைப் பயன்படுத்தி இருக்கேன்.

பாத்ரூம் டாய்லெட் பைப்புகள் கழிவு நீர்க்குழாய்கள் எல்லாம் சரியா இருக்கான்னு ஒரு ப்ளம்பர் வந்து பரிசோதிச்சுட்டுப் போனார்.

எல்லா வேலைகளும் முடிஞ்சு நாங்கள் உள்ளூரில் இருந்தே, இன்னொருக்கா இங்கே இடம் பெயர்ந்ததும் ரெண்டு மூணு நாள் கழிச்சு ரிப்பேர் செஞ்ச கம்பெனி 'நம்ம வீட்டைப் பழுது பார்த்தது சரியா இருக்கான்னு செக் பண்ண இன்ஸ்பெக்ஷனுக்கு ரெண்டு பேரை அனுப்பறோம். உங்களுக்கு வேலை திருப்திகரமுன்னா பரிசோதனைக்குப்பிறகு கையெழுத்துப் போட்டு அனுப்புங்க'ன்னு சொன்னாங்க.

ஜோனத்தன் அண்ட் ஆலன் என்ற ரெண்டு பேர் 'சொன்ன நாளில் சொன்ன நேரத்துக்கு' வந்தாங்க. கையில் வச்சுருந்த ஃபோல்டரில் இருந்த ஒர்க் ஆர்டர், ஃபோட்டோஸ் எல்லாம் வச்சுச் சரி பார்த்தாங்க. சம்பவம் நடந்த சமயம் நாம் இந்தியாவில் இருந்தோமே. என்ன டேமேஜ் எங்கேன்னு கூட சரியா எனக்குத் தெரியாது. அந்த ஃபோட்டோக்களின் காப்பி அனுப்புங்கன்னு கேட்டதும் 'அடடா......விவரமே தெரியாதா? இந்தாங்க இதையெல்லாம் வச்சுக்குங்க. எங்களிடம் வேற காப்பி இருக்குன்னு கொடுத்துட்டுக் கையெழுத்து வாங்கிப்போனார் ஜோனத்தன். பெயிண்ட் அடிக்கும் போது போட்ட மாஸ்கிங் டேப்புகள் சில வெளிப்புறம் எடுக்காம விட்டுட்டுப் போயிருக்காங்கன்னு அவுங்க சொன்னதும்தான் கவனிச்சேன்.

கொத்ஸ் கவனிக்கவும்: சொன்னதுபோல் வீட்டுக்குள் வந்தாச்சு. அத்தோடு முடிச்சுக்கறேன்.

PIN குறிப்பு: செட்டிலிங், நகர்வலம், சோகக்கதை எல்லாம் அப்புறம் எப்பவாவது. ஆனால் ஒன்னே ஒன்னு மட்டும் கட்டாயம் குறிப்பிடவேண்டி இருக்கு. ஊரில் இருந்து வந்த அன்னிக்கு மாலை நம்ம இஸ்க்கான் கோவிலுக்குப்போய் சாமிக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு வரலாமுன்னு போனால்...... சாமி (மனசு) உடைஞ்சு போயிட்டாராம். நிலநடுக்கத்தில் கோவில் கூரை இடிஞ்சு சாமிகள் மேல் விழுந்து வச்சுருக்கு. ஸோ எங்க ஊரில் நோ கோவில். முதுமொழிகளைத் தள்ளிட்டுக் கோவிலில்லாத ஊரில் குடி இருக்கோம்:(31 comments:

said...

/கொத்ஸ் கவனிக்கவும்: சொன்னதுபோல் வீட்டுக்குள் வந்தாச்சு. அத்தோடு முடிச்சுக்கறேன். /

குட் ரீச்சர்! :)

கோவில் இல்லாத ஊரா? அதான் வீட்டுக்குள்ளயே பெருமாளைக் கொண்டு போய் வெச்சு வீட்டையே கோவிலாக்கியாச்சே! அப்புறம் என்ன கவலை!

எஞ்சாய் மாடி!! மாடி இல்லைன்னா கீழ, வேறெவர்! :)

said...

அழகு .. அருமையா இருக்கு போட்டோக்கள்..

அவங்க மலைச்சாமியைக் கும்பிடும் முறை எப்பவாச்சும் எழுதி இருக்கீங்களா.. என்ன? நான் விட்டிருந்தா படிக்கிறேன்.

said...

very nice, Madam!

said...

இட்லிமாவு புளிக்கவேயில்லை.. அவ்ளோ அருமை :-))

said...

//இட்டிலிமாவை அப்படியே கொட்டி//

இந்தப் பூனையும் பால் குடிக்குமான்ற மாதிரி, எரிமலை இப்ப பனிமலையா இருக்கு!! க்யூட்!!

said...

எப்படிக்கா இவ்வள்ளவு அழகா எழுதறீங்க,படிக்கவே சுவராஸ்யமா இருக்கு....

said...

போட்டோ மற்று அதைப் பற்றிய விபரங்கள் சுவையாக இருந்தது...வாழ்த்துக்கள்!

said...

அழகான காட்சிகளை ஐறைவாகக் கொடுத்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

said...

இடமெல்லாம் பார்த்தா அடுத்த ட்ரிப் நியூசீலண்ட்தான் வரலாம்னு ப்ளான் போட்டாச்சு!!!

said...

புகைப்படங்கள் அழகோ அழகு....

இட்லி மாவு இப்படி அநியாயமாய்க் கொட்டிக் கிடக்கே.... சீக்கிரமா எடுத்து வைச்சுடுங்க... புளிச்சிடப் போகுது... :))

said...

படங்கள் அனைத்தும் அழகு ;-)

பெருமாளுக்கும் அன்னைக்கும் ஒரு வணக்கம் ;-)

said...

பறந்தபடி பிடித்த படங்கள் யாவுமே கொள்ளை அழகு. குறிப்பா ”கைக்கோரா மலைத்தொடர்கள்”.

// பெருமாளையும் தாயாரையும் //

இனி எல்லாம் அவங்க பொறுப்பே:)! அழகாய் இருக்கிறார்கள். இந்தத் தாயாருக்குத் தைத்த “உடை”களைத்தானே பிட் போட்டிக்குக் கொடுத்திருந்தீர்கள்?

said...

seattle and christchurch are sister cities enbadhil enaku always super duper sandhosham!

said...

துளசி மாமி
நியூசிலாந்து திரும்பி போய் விட்டீர்களா?
உங்களது பதிவு நான்கு ஆண்டுகள் முந்தைய எனது நியூசிலாந்து பயணத்தை நினைவு படுத்தியது. போகும் போது ஆக்லாந்து முதல் queenstown , Te Anui , Christchurch என பஸ் பயணம். நடுவில் Cross Island Ferry - வெல்லிங்டன் - நெல்சன் இடையே. அங்கங்கே ஊர் சுற்றுவது. திரும்பும் போது Christchurch - ஆக்லாந்து Qantas விமானம். இதே காட்சிகள். அப்பொழுதே படித்திருந்தால் மலைகளை அடையாளம் கண்டு கொண்டிருக்கலாம். :)
சிட்னி வரை பெட்டியை செக்கின் செய்யாததால் ஆக்லாந்தில் டொமெஸ்டிக் - இன்டர்நேஷனல் விமானம் நிலையம் இடையே நடந்து சென்றது நினைவு வருகிறது.
Christchurch cathedral புனர் நிர்மாணம் ஆகி விட்டதா? உங்கள் ஊரின் அருகே ஒரு மலை மேலே செல்ல winch உண்டே. அங்கு கூட ஒரு நகரின் சிறந்தவர்கள் என்று Sir ரிச்சர்ட் ஹட்லி யின் புகைப்படம் இருக்கும்.

said...

வாங்க கொத்ஸ்.

உங்க 'கூற்றின் படி' வீட்டுக் கோவிலையே சுமாரா அலங்கரிச்சு வச்சாச்சு.

கவலை போச்:-)))))

said...

வாங்க கயலு.

மவோரிகளின் நம்பிக்கைப்படி அவுங்க மூதாதையர்கள் தான் மலையா நிக்கிறாங்க. அதனால் கால்வச்சு ஏறிப்போவது கண்டனத்துக்குரியது.

வெள்ளைக்காரர்கள் இதைக் கவனிக்காம நல்ல பனிஷூ போட்டுக்கிட்டு மேலே எல்லாம் ஏறிப்போய் ஸ்கீயிங் எல்லாம் செஞ்சுக்கிட்டு மவோரி பெயர்களை அம்போன்னு விட்டுட்டு யார் முதலில் அந்தந்த மலை ஏறிப்போனாங்களோ அவுங்க பெயரையே வச்சுட்டதால்..... கொஞ்சம் மனஸ்தாபம் உண்டாகி சண்டையெல்லாம் போட்டு இப்போ மலைகளுக்கு மவோரி பெயர் திரும்ப வந்துக்கிட்டு இருக்கு.

எ.கா: மவுண்ட் குக் = ஆவ்ரோகி

said...

வாங்க சித்ரா.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க அமைதிச்சாரல்.

தெரிஞ்ச உதாரணம்தான் பெட்டர். இல்லை:-))))))

said...

வாங்க ஹுஸைனம்மா.

அதே அதே. இப்பப் பாருங்க சாது வேஷம் போட்டு உக்கார்ந்துருக்கு:-)

said...

வாங்க மேனகாம்

உங்க ரசிப்புக்கு என் நன்றி.

எல்லாம் நீங்கள் எல்லாம் இருக்கும் தைரியம்தான்....நம்மை எழுதவைக்குது:-)

said...

வாங்க கிளியனூர் இஸ்மத்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

said...

வாங்க அருணா.

டிசம்பர் ஜனவரி ஃபிப்ரவரி மாதங்கள் சூப்பரா இருக்கும். எங்கள் கோடை. பயந்துறாதீங்க. இது உங்க குளிர்காலம் போல!

வருகையை 'அன்புடன்' எதிர்நோக்குகின்றேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பிரச்சனையே இந்த மாவு புளித்தல்தான். தில்லிக்காரர் உங்களுக்குத் தெரியாததா?

என்ன ஒன்னு இங்கே வருசம் முழுவதும் இந்தப் பிரச்சனைதான்:(

அவன் அவன்னு அலையணும்:-)

said...

வாங்க கோபி.

ஆசிகள்!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பிட் டீச்சரே சொன்னது மகிழ்ச்சி!

நம்ம தாயார் ஜரிகையில் மார்க்கச்சை கட்டிண்டு இருப்பாள்:-))))

ரொம்ப மாடர்ன் கேட்டோ!

said...

வாங்க பொற்கொடி.

நாம் மொத்தம் ஏழு அக்காதங்கச்சிங்க:-))))

said...

வாங்க ஸ்ரீநிவாஸ் கோபாலன்.

நாலு வருசம் முன்பா? நான் இங்கேதானே இருந்தேன். கண்டுக்காமப் போயிட்டீங்களே:(

போர்ட் ஹில்ஸ் மலைக்குத்தான் கோண்டோலாவில் போகலாம். அங்கே இருந்து பார்த்தால் அட்டகாசமான வ்யூ!

கதீட்ரல் முழுசுமா இடிஞ்சு போச்சு. எப்படியும் பத்து வருசமாகுமாம் ஊரைச் சரியாக்க.

இடிபாடுகளை எடுத்துக்கிட்டு இருக்காங்க. அந்தப் பக்கம் போகும் வழிகள் எல்லாம் ஃபென்ஸ் தடுப்புப் போட்டுருக்காங்க.

அழகான ஊரை இந்நிலையில் பார்த்தப்ப அழுகையே வந்துருச்சு:(

said...

படிக்கும்/படம் பார்க்கும் போதே குளிருது.
ஹூம்! அரசாங்கமே வந்து ரிப்பேர் வேலையெல்லாம் செய்து கொடுக்குதா? நிறைய பணம் இருந்தாலும் குடிமக்களுக்கு செய்துகொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வருதே!

said...

வாங்க குமார்.

அரசாங்கமுன்னு வச்சால்..... அரசாங்கத்தின் சொற்படி 'எர்த் க்வேக் கமிஷன்' என்றொரு நிறுவனம் ஊரில் உள்ள அத்தனை வீடுகளையும் பரிசோதிச்சு காண்ட்ராக்டர்களை வச்சு ரிப்பேர் பண்ணிக் கொடுத்துக்கிட்டு இருக்கு.

ஓனர்கள் ஊரில் இல்லாமப் பூட்டி இருந்த வீடுகளுக்கு முன்னுரிமை கொடுத்தாங்க:-)

said...

வீடே கோயிலாகி...வீற்றிருக்கும் பெருமாள் + லஷ்மி.