Thursday, August 25, 2011

இலவசக்கொத்தனார் இடம் கொடுத்தாராம்!!!!

சஞ்சய் கடைக்குப் பொரி வாங்கப் போனேன். அப்படியே நாம் மீண்டு(ம்) இங்கே வந்துட்ட விவரத்தையும் சொல்லணும். சஞ்சய்தான் ஸ்வாமி நாராயண் சத்சங்கத்துலே இருக்கும் முக்கிய 'புள்ளி'களில் ஒருவர்.

' அடடே! எப்போ வந்தீங்க? கோவில் வந்தாச்சு தெரியுமா?'ன்னார்! எங்கே எப்போன்னு விவரம் கேட்டுக்கிட்டு அன்றைக்கு அங்கே நடக்கப்போகும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி பூஜைக்குப் போனோம்.

பள்ளிக்கூட ஹால்களில் நடந்துக்கிட்டு இருந்த ஸ்வாமி நாராயண் சத்சங்கம், யுவக் சமாஜ், மஹிளா சமாஜ் எல்லாம் இனிமேப்பட்டுக் கோவிலில் நடக்குமாம். ரொம்ப நல்லதாப் போச்சு. அடுத்தவாரம் எங்கே நடக்கப்போகுது என்ற தடுமாற்றம் இல்லை பாருங்க.

இந்த BAPS ஸ்வாமிநாராயண் ஸன்ஸ்த்தா (சங்கம்)வின் 'தலை'புராணத்தைக் கேட்டுக்கிட்டே வாங்களேன் கோவில்போய்ச் சேரும்வரை!

1907 வது வருசம் மக்கள் சமுதாயத்துக்கு ஆன்மீக உணர்ச்சி, அனுபவங்கள், இறைநம்பிக்கைகள் கலைகலாச்சாரம், இளையதலைமுறைக்கு வழிகாட்டுதல் இப்படி நல்ல சமாச்சாரங்கள் பெருகவேணுமேன்னு உலகளாவிய இந்த அமைப்பு ஆரம்பிச்சாங்க.

பால் பாலிகா மண்டல் ( 5 முதல் 13 வயதுவரையான சிறுவர் சிறுமியருக்கு.

கிஷோர் கிஷோரி மண்டல் பதின்மவயதினருக்கு ( இதில் 14 முதல் 23 வயதினர்)

யுவக் யுவதி மண்டல் இளைஞர்களுக்கானது ( 24 முதல் 30 வரை வயது வரம்பு)

சத்சங் மண்டல் மற்ற அனைத்து வயதினருக்கும்.

இந்த முறையில்தான் இந்த கோவில்களும் இதைச்சார்ந்த சங்கங்களும் மக்களுடன் கலந்து இருக்கு.

இப்போது இதன் தலைவரா இருக்கும் ப்ரமுக் ஸ்வாமி மஹராஜ் இந்த அமைப்பின் அஞ்சாம் பீடமா இருக்கார். வயசு 90 ன்னு சொன்னா நம்பறது கஷ்டம்தான். நியமங்களை விடாமல் அனுசரிப்பதால் உண்டாகும் உடல்வலிமை, மனவலிமை ஒன்னு சேர்ந்து பார்த்தவுடன் நம்ம மனசுலே ஒரு மரியாதையும் அன்பு தோன்றும்வண்ணம் இருக்கார். எளிமையானவர். வீண் பந்தா கிடையாது. சுத்திவர ஆள் அம்பு படை ஒன்னும் இல்லாம இருக்கார். சிரிக்கும் கண்கள். தேஜஸ் தேஜஸ்ன்னு சொல்றாங்களே...அது இதுதான் போல!

தன்னுடைய 19 ஆம் வயசுலே சந்நியாஸி ஆகி இருக்கார். கிராமம் கிராமமாப்போய் மக்களுக்கு நல்ல உதவிகள், உபதேசங்கள் எல்லாம் செஞ்சு ஆன்மீகத்தை வளர்த்துருக்கார். இதுவரை 15,500 இந்திய கிராமங்களுக்கும் அம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் எதாவதொரு வகையில் சேவை செஞ்சுருக்கார். தன் அம்பதாவது வயசுலே தலைமை பீடம் அஞ்சாவது குரு.
இப்ப உலகெங்கும் பலநாடுகளில் கட்டப்பட்டிருக்கும் ஸ்வாமிநாராயண் கோவிலுக்கு காரணகர்த்தா இவர்தான். இதுவரை 800 கோவில்கள் சின்னதும் பெருசும் பிரமாண்டமானதுமா கட்டிக்கிட்டே போறாங்க. ஸ்வாமிஜியும் இடைவிடாது பலபாகங்களுக்கும் பயணம் போய் ஊக்குவிச்சுக்கிட்டே இருக்கார், இவரைப் பின்பற்றி சந்நியாஸிகளா இருக்கறவங்க இன்றையக் கணக்குக்கு 800 பேர். இவுங்க எல்லோருடைய உழைப்பாலும்தான் புதுக் கோவில்கள் உருவாகிக்கிட்டே போகுது! நியூஸி ஆக்லாந்தில்கூட ஒரு பெரிய கோவிலும் கல்ச்சுரல் செண்டரும் கட்டி ஒரு ஏழெட்டு வருசமாகப்போகுது.

எங்கூருக்கு (கிறைஸ்ட்சர்ச்) சில சந்நியாசிகள் முதல்முதலா வந்தது 1994 இல். உள்ளூர்க்காரர் ஒருவர் வீட்டில் வந்து தங்கியதும் அவர்களைச் சந்திக்கவந்த சிலருடன் சேர்ந்து இந்த சத்சங்கம் ஆரம்பிச்சது. இந்த சங்கம் அப்படியே வளர்ந்து மக்களின் ஆன்மீகத்தேவைகளை நடத்தி வைக்கும் வகையில் வாரக்கூட்டங்கள் மாதக்கூட்டங்கள் , பண்டிகைகால சிறப்பு வழிபாடுகள் எல்லாம் நடத்திக்கிட்டே படிப்படியா உயர்ந்து இன்னிக்குக் கோவில் கட்டும்வரைக்கும் வந்து நிக்குது.

'
இவுங்க சொல்ற ஏரியாவில் எதாவது வீட்டை வாங்கிக் கோவிலா மாத்தி இருப்பாங்களோன்னு ஒரு சம்சயம். அங்கே விலாசம் தேடிப்பிடிச்சுப் போனால் ஒரு ஹால்!

பூர்வஜென்மப் பெயர் கான்கார்டு லாட்ஜ். இலவசக்கொத்தனார்கள் லட்ஜ்களைக் கட்டிப்போட்டுச் சந்திக்கும் இடம். மஸோனிக் லாட்ஜ்ன்னு இலவசக்கொத்தனார்கள் கூடிப்பேசும் இடங்கள் எங்கூரில் 15 இருக்கு. பரம ரகசியமா நடக்கும் இந்தக்கூட்டங்கள் என்று பதிவர் நானானி ஒரு சமயம் சொல்லி இருக்கார்:-) இந்தப் பதினைஞ்சில் ஒன்னு இப்போ கோவிலா மாறிப்போச்சு.
ஏற்கெனவே இருந்த ஹாலில் வெளிப்புறம் மாறுதல்கள் ஒன்னும் செய்யாம அப்படியே வச்சுருக்காங்க. குடியிருப்புப் பகுதியா இருப்பதால் சிட்டிக் கவுன்ஸில் தனிப்பட்டுத் தெரியாமல் இருக்க கோபுரத்துக்கோ இல்லை மற்ற அலங்காரத்துக்கு (இப்போதைக்கு ) அனுமதிக்கலை போல! இந்த ஹால் கல்யாணங்களுக்கும் மற்ற குடும்ப விழாக்களுக்கும் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு விடப்பட்ட காரணத்தால் இந்தியக்கோவில் வச்சுக்க அந்த ஏரியாவில் எதிர்ப்பு ஏதும் இல்லாமல் சுமுகமா முடிஞ்சுருக்கு டீல்:-) எந்த விழாவா இருந்தாலும் இரவு 9 இல்லை 9.30க்கு முடிச்சுக்கணும். பத்து மணிக்குப்பிறகு 'மூச்' விடக்கூடாதுன்றது இங்கத்து சட்டம்.

ஹாலோடு இடம் வாங்கியதும் எப்படி அமைக்கபோறாங்கன்னு நம் மக்களுக்கு விளக்கி வரைபடம் எல்லாம் பக்காவாக் கொடுத்து அதுலே சதுர மீட்டருக்கு $ 1001 டொனேஷன் நிர்ணயம் செஞ்சு நம் மக்களிடம் வசூலிச்சாங்களாம். இதெல்லாம் கடந்த ஒன்னரை வருசமா நடந்த விஷயங்கள்.
முன்புற ஃபோயரில் ஒரு பக்கம் புக் ஸ்டால், இடது பக்கம் காலணிகள் வைக்க மர அடுக்குகள் வச்சுருக்காங்க. வலப்பக்கம் சின்ன காரிடோர் வச்சு அதைக் கடந்ததால் ஓய்வறைகள்.
வாசல்கதவுக்கு நேரா இருக்கும் கண்ணாடி வச்ச ரெட்டைக் கதவு திறந்து உள்ளெ போனால் பெரிய ஹால். வலப்புறத்தில் சுவத்துக்குப் பக்கமா ஒன்னரை மீட்டர் இடம் விட்டு ஒரு நீள மேடை. அதன்மேல் சின்னதா ஆறு அலங்காரத்தூண்கள். தூண்களுக்கிடையே உள்ள இடைவெளியில் அஞ்சு மாடங்கள். அங்கேதான் கடவுளர்களின் சிலைகள் வரப்போகுது. இன்னிக்குக் காலையில்தான் தூண்களுக்குத் தங்க வண்ணம் அடிச்சாங்க(ளாம்)
ராமர் சீதை, ஆஞ்சநேயர் ஒரு மாடம். ராதாகிருஷ்ணா இன்னொரு மாடம், சிவன் பார்வதி புள்ளையார் இன்னொன்னில், பகவான் ஸ்வாமிநாராயணனும் அக்ஷர்ப்ரம்மா என்ற குணாதிதானந்த் ஸ்வாமிகள் நடுமாடம், இன்னும் நாலு குருஜிக்களின் படங்கள் ஒரு மாடமுன்னு ஒரு கணக்கு.
பெரிய ஹாலின் குறுக்கே 'லக்ஷ்மண ரேகா' போல ஒரு சின்னக் கயிறு தடுப்பு. சாமி மேடைக்கு முன்பக்கம் ஆண்களுக்கும் அந்த கயிற்றுக்குப் பின்னால் பெண்களுக்கும் இடங்கள். இந்த ஸ்வாமிநாராயண் கோவில் நியமங்களில் எனக்குப் பிடிக்காத விஷயம் இது ஒன்னுதான். அதிலும் தகப்பன்கள் முன்புறம் உக்கார்ந்துருக்க, அதைப்பார்த்தச் சின்னப்பிஞ்சுப் பெண்குழந்தைகள் கயிற்றைத் தாண்டி அங்கே ஓடுவதும், என்னமோ உலகமே அழிஞ்சுரும் என்பது போல யாராவது மூத்த பெண்மணிகள் ஓடிப்போய் அதுகளைப் பத்திக் கொண்டு வருவதுமா இடைவிடாத ஒரு விளையாட்டு தனியா நடந்துக்கிட்டே இருக்கு. இதுலே அம்மாக்களோடு ஒட்டிப்பிடிச்சிருக்கும் ஆண்குழந்தைகளை யாரும் முன்பக்கம் துரத்துவதில்லை!

சந்நியாசிகள் இருக்குமிடம் பெண்வாடையே கூடாதுன்னு அந்தக் காலத்துலே இருந்துருக்கும். அதை இப்போதும் கண்டிப்பாக் கடைப்பிடிக்கணுமா? சரி. அவுங்க ரூல்ஸ் அப்படின்னாலும் ..... ஒரு ஏழெட்டு...வேணாம் அஞ்சு வயசுவரை குழந்தைகளுக்குள் பேதமில்லாம வச்சால் என்ன ஆகும்?
ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு ஒரு பக்கம் சின்னதா ஒரு தொட்டில் போட்டு அதில் கிருஷ்ணவிக்கிரகம் ஒன்னு. பொறந்த குழந்தையா இல்லாம நின்னுக்கிட்டு அருள் பாலித்தார்.

ஹாலைக் கடந்தால் இன்னொரு ஹால்/ இது டைனிங் ஏரியா. பக்கத்துலே அட்டகாசமான நவீன அடுக்களை! டைனிங் ஏரியாவிலும் முதுகோடு முதுகு வர்றதுபோல நாற்காலிகளைக் கொண்டு ஆணுக்கும் பொண்ணுக்குமா பாகம் பிரிச்சு வச்சுருக்காங்க. பிரசாத விநியோகம்கூட ஆண்கள் பகுதிக்கு ஆண்கள். பெண்கள் பகுதிக்குப் பெண்கள்!
பஜனைப்பாடல்கள், ஸ்ரீ ப்ரமுக் ஸ்வாமி மஹராஜ் அவர்களின் பிரசங்கம், குடி, சிகெரெட் பழக்கத்தை விட்டொழிக்கும் நீதிபோதனை நாடகம் (யுவக் சமாஜ் மாணவர்களின் நடிப்பில்) ஸ்வாமிநாராயண் கோவில்கள் ஒன்றில் நடக்கும் பூஜையும் மாணவர் விழாவும் காண்பிக்கும் ஒரு பத்து நிமிச வீடியோன்னு நிகழ்ச்சிகள். கோவில் நிதிக்காகவும், குழந்தைகளுக்கு குரு நீல்கண்ட் வாழ்க்கைச் சரிதம் கதையாக விளக்கிச் சொல்லவும் அனிமேஷன் வகையில் தயாரிச்சுக்கிட்டு இருக்கும் படத்துக்கான முதல் பகுதி இன்னிக்கு வெளியீடுன்னு சொல்லி அதுக்குண்டான ட்ரெய்லர் அஞ்சு நிமிசம் காமிச்சாங்க. பக்தர்களுக்கு பத்து டாலர் விலையில் முதல்பகுதி கிடைக்கும்படி ஏற்பாடு. ட்ரெய்லர் அட்டகாசமா இருந்துச்சு. கடைசியில் ஆரத்தி எடுத்து முடிச்சதும் பிரசாதம் !

கச்சிதமா எட்டுமணிக்கு எல்லாம் முடிஞ்சது. குழந்தைகளுக்கான ஆக்ட்டிவிட்டி ரூம், ம்யூஸிக் ரூம், லைப்ரரின்னு அருமையாத் திட்டம் போட்டுருக்காங்க. கோவில் என்று ஆனதும் நித்தியப்படி பூஜை செய்ய பூஜாரி வேணுமேன்னு பூஜாரிக்கு ஒரு குவாட்டர்ஸ் இணைப்பாக அமைச்சுருக்காங்க.

நம்ம வீடுகளில் விசேஷ பூஜை செய்யணுமுன்னா பண்டிட்டுக்கு அலைய வேணாம். கோவில் பண்டிட் அம்பத்தியொன்னு கட்டினால் வந்து நடத்திக் கொடுப்பாராம்., தினம் சாமிக்கு சாப்பாடு நைவேத்தியம் செய்யும்போது ஒரு நாள் நம்ம வகையில் இருக்கட்டுமேன்னால் பதினொரு டாலர் கட்டலாம். இப்படியெல்லாம் ஃபண்ட் ரெய்ஸிங் ப்ளான்ஸ். நல்லாவே ஒர்க்கவுட் ஆகுமுன்னு நினைக்கிறேன். செலவும் நிறைய இருக்கே.

சாமி சிலைகள் அநேகமா வரும் ஃபிப்ரவரி/மார்ச்சில் வந்து சேரலாம். இந்தியாவில் தயாரிப்பு வேலை நடக்குது இப்போ.

எப்படியோ ஊருக்கு ஒரு கோவில் வந்துருச்சு! கோவில் உள்ள ஊரில்தான் குடியிருக்கோமாக்கும் கேட்டோ! :))))24 comments:

said...

இருக்கட்டும் இருக்கட்டும்!!

நமக்கு இந்த விளம்பரமெல்லாம் பிடிக்காதுன்னு தெரியுமே!! அப்புறம் ஏனிப்படிப் போஸ்டர் எல்லாம்!!

கொஞ்சம் சைஸ் பெருசா இருந்திருக்கலாமோ? :)

said...

இலவசகொத்தானார்னு தலைப்பை பார்த்து ஓடி வந்தேன்.:))

அவருடையதே முதல் கமெண்டும். பதிவு, கமெண்ட் இரண்டையும் ரசித்தேன்

said...

//இப்போது இதன் தலைவரா இருக்கும் ப்ரமுக் ஸ்வாமி மஹராஜ் இந்த அமைப்பின் அஞ்சாம் பீடமா இருக்கார். வயசு 90 ன்னு சொன்னா நம்பறது கஷ்டம்தான். நியமங்களை விடாமல் அனுசரிப்பதால் உண்டாகும் உடல்வலிமை, மனவலிமை ஒன்னு சேர்ந்து பார்த்தவுடன் நம்ம மனசுலே ஒரு மரியாதையும் அன்பு தோன்றும்வண்ணம் இருக்கார். எளிமையானவர். வீண் பந்தா கிடையாது. சுத்திவர ஆள் அம்பு படை ஒன்னும் இல்லாம இருக்கார். சிரிக்கும் கண்கள். தேஜஸ் தேஜஸ்ன்னு சொல்றாங்களே...அது இதுதான் போல! //
இந்த மாதிரி மகான்கள் இப்பொழுது எங்காவது ஓரிரண்டு பேர்கள் இருந்தாலே அதிகம். எல்லாம் போலியாக போய்விட்டது.
நல்ல பகிர்வு துளசி மேடம் பகிர்வுக்கு நன்றி.

said...

ஆண்குழந்தைகளை யாரும் கேக்கறதில்லை.. :)

said...

ஊஞ்சல் கிருஷ்ணர் அழகா ஜம்ன்னு இருக்கார்.

said...

குட்டியா கிருஷ்ணர் அழகாக இருக்கார்.
பதிவும் நல்லா இருக்குங்க.

said...

நல்ல பகிர்வு... உங்க ஊர்லயும் கோவில் வந்துடுச்சா... நல்லது...

சண்டிகர் மாதிரி இங்கேயும் உங்களுக்கு நல்ல விஷயம் கோவில் வருவது. இல்லையா? :)))

said...

மீண்டும் ஊருக்கு வந்ததும் மிக அருமையான பதிவு. பாராட்டுகள்.

said...

இலவச கொத்தனார்னு பேர் பார்த்து வந்தேன். எங்க வீட்டுக்குப் பக்கத்துல கூட நீங்க சொல்ற சுவாமி நாராயணன் கோயில் இருக்கு. இவங்க ஆண் பெண்ன்னு கயிறு கட்டி பிரிக்கிறது தான் கடுப்ப இருக்கும். எங்க ஊர் கோயில்ல அந்த காலத்து சினிமா கொட்டகை மாதிரி நடுவுல கயிறு கட்டி இருப்பாங்க. இந்த பக்கம் ஆண்கள், அந்த பக்கம் பெண்கள். ரெண்டு பெரும் சாமி பார்க்கலாம், கிட்டக்க போகலாம், தனி தனியா கும்பிடலாம், தனி தனியா பிரசாதம் சாப்புட்டுட்டு வரலாம்.. I generally dont go due to these restrictions..

said...

நாராயணன் கோயில் கொண்டுவிட்டார்.

said...

கொத்தனார் இலவசமாக் கொடுத்தாலும், பணம் சேர்ந்து
சிரத்தையா நடத்தறாங்களே துளசி. கோவில் பிரமாதமா வந்துடும் பாருங்க,.
உங்க ஊரில கோவில் வந்தா எங்களுக்கு நல்லது
இன்னும் விஷயங்கள் கிடைக்கும் பாருங்க:)

said...

எப்படியோ ஊருக்கு ஒரு கோவில் வந்துருச்சு! கோவில் உள்ள ஊரில்தான் குடியிருக்கோமாக்கும் கேட்டோ! //

நீங்கள் நினைத்தவுடன் கோவில் வந்துவிட்டதே .வாழ்த்துக்கள்.

said...

வாங்க கொத்ஸ்.

இடத்தின் 'சரித்திரம்' தெரிஞ்சதும் 'ஆ'ன்னு ஏற்பட்ட வியப்பில் விளம்பரம் செஞ்சுட்டேன்:-))))

சைஸ்.... கட்டிடத்தைத்தானே சொல்றீங்க:-)))))) உள்ளே பெருசாத்தான் இருக்கு. வெளியே ரொம்ப அடக்கி வாசித்தல்:-)

said...

வாங்க புதுகைத் தென்றல்.

க்ளாஸ் லீடர் பெயரை 'அறிவிச்சால்' எங்கிருந்தாலும் மேடைக்கு வந்துதானே ஆகணும்:-)))))

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க ராம்வி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

வாங்க கயலு.

இப்படி ஒரு ஆணாதிக்கம் கண் முன்னே நடக்குதேப்பா:(

said...

வாங்க அமைதிச்சாரல்.

கிருஷ்ணனுக்கு என்னப்பா..... ஜம்முன்னு இருப்பார்!

அவருக்கான கொண்டாட்டங்கள் ஃபிஜி இந்தியர்களின் சத்சங்கங்களில் ஆட்டம்பாட்டத்துடன் அமர்க்களமா நடக்கும். இந்த வருசம் எதுவுமே இல்லை:(

இப்ப இங்கே சத்சங்கங்கள் கூட சமூகக்கூடங்களோ, பள்ளிக்கூட ஹால்களோ கிடைக்கறதில்லை. நிலநடுக்கத்தால் வந்த வினைகளில் இதுவும் ஒன்னு.

said...

வாங்க கோவை2தில்லி.

நம்ம வண்டி நிக்காமல் ஓட உங்கள் வரவும் நீங்கள் தரும் ஊக்கமும்தான் ஒரு காரணம்,ஆமா!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இங்கே வந்த புதுசில் கோவில் ஒன்னுமே இல்லாததால் சர்ச்சுக்குப்போய் மனசில் இருக்கும் சாமியைக் கும்பிடும் வழக்கம் வந்துச்சு. அது இப்பவும் உலகில் எங்கிருந்தாலும் தொடருது. இறைவன் எந்தப் பேரில் இருந்தால் என்னன்ற பக்குவம் அப்படித்தான் வந்துருக்குமுன்னு நினைக்கிறேன்.

ஒரு கோவில் போனால் இன்னொரு கோவில் முளைச்சுருச்சுன்றதே ஒரு மகிழ்ச்சிதான்.

சண்டிகர் கோவிலுடன் ஒரு நெருக்கம் ஏற்பட்டுப் போச்சுங்க. அது நம்ம சொந்தக் கோவில் மாதிரி!!! இப்பவும் நான் ரொம்ப மிஸ் பண்ணும் விஷயம் இது.

said...

வாங்க மலைக்கோட்டை மன்னன்.

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.

said...

வாங்க பொன்ஸ்.

நலமா? ரொம்ப வருசங்களுக்குப் பிறகு வந்துருக்கீங்க!!!! கொத்தனார் கூட்டி வந்துட்டாரா? நல்ல லீடர்தான்:-))))

சண்டிகர் ஹரே க்ருஷ்ணாவில் கூட கயிறு கட்டாமல் நடுவில் நடக்க இடம்விட்டு ஆண் பெண் என்று இடப்புறம் வலப்புறம் பிரிச்சு உக்காருவாங்க. அதுவும் இது ஆரத்தி சமயத்தில் மட்டுமே. அதிலிருந்து ஆரத்திக்கு அங்கே போறதை விட்டுட்டேன். நம்மூரில் ஏகப்பட்ய்ட வேற கோவில்கள் இருக்கு நமக்குச் சாய்ஸும் இருக்கு.

ஆனால் கிறைஸ்ட்சர்ச்சில் ஆகக்கூடி இருப்பது இப்போதைக்கு இது ஒன்னுதான். மனுசனின் விதிகளுக்குப் பயந்து வீம்பு பிடிச்சுப்போகாமல் இருக்க மனம் ஒப்பலை. க்ருஷ்ணன் வருந்துவானே!!!!!

said...

வாங்க மாதேவி.

அவருக்கென்னங்க..... கொடுத்து வச்சவர்:-)))))

சிலைகள் வரட்டும். விதவிதமா ஜிலுஜிலுன்னு சம்கி வச்ச உடைகள் போட்டுக்குவார் பாருங்க!!!!

said...

வாங்க வல்லி.

என்னது......இலவசமா இடம் கொடுத்தாரா? சரியாப்போச்சு. இலவசத்துக்குச் சொந்தமான இடத்தை காசு வாங்கிக்கிட்டுக் கொடுத்தாருப்பா!!!!!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

அவ்ளவு பாக்கியம் நான் செய்யலைங்க. நானும் கோபாலும் இந்த ஊரில் பொதுவான கோவில் ஒன்னு கட்டணுமுன்னு பதினோரு வருசத்துக்கு முன்னே நம்ம இந்தியன் கம்யூனிட்டி, இலங்கைத்தமிழர்கள் எல்லோரையும் கூப்பிட்டு ஒரு மீட்டிங் வச்சு என்ன செய்யலாம் எப்படிச் செய்யலாமுன்னு விவாதிச்சோம்.

அன்னிக்கே தகராறு முற்றி யோசனையைக் கிடப்பில் போடவேண்டியதாப் போச்சு. எல்லாம் பூஜை எந்த மொழியில் இருக்கும் என்ற தகராறுதான் ஆரம்பம்.

வேளை வரலைன்னு இருக்கோம்.

இந்தப் பிரச்சனை ஒன்னும் இல்லாம குஜராத்திகள் கோவில் கட்டிட்டாங்க பாருங்க!!!!