Monday, August 29, 2011

1 2 3 4 வீ டோண்ட் வாண்ட் அ லிக்கர் ஸ்டோர்........

"ஹென்றிக்கு என்ன சொல்லணும்?"

"நோஓஓஓ "

"நிறைய இருப்பது என்ன?"

"குடி குடி குடி."

"1 2 3 4"

"வீ டோண்ட் வாண்ட் அ லிக்கர் ஸ்டோர்........"

இப்படி ஸ்லோகன்களை முழங்கிக்கிட்டு சாலையில் நடந்து போகும் கூட்டத்தில் ஒருத்தியாப் போய்க்கிட்டு இருக்கேன். நாலு பேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்ற எங்கூர் கணக்கில் இது பிரமாண்டமான கூட்டமா இருக்கு. ஏறக்கொறைய 200 பேர்! சரியா பகல் பனிரெண்டே முக்காலுக்கு ஊர்வலம் ஆரம்பிக்கும். கட்டாயம் வந்து இந்த இடத்துலே பகல் பன்னிரெண்டுலே இருந்து கூடலாம். உங்க எதிர்ப்பைக் காமிக்க உங்களுக்கு விருப்பமான ஸ்லோகன்களை அட்டையில் எழுதிக்கொண்டு வந்து கலந்துக்குங்கன்னு ஒரு வாரம் முன்பே நோட்டீஸ் நம்ம தபால்பொட்டிக்கு வந்துருச்சு. என்ன ஏதுன்னு நோட்டீஸைக் கவனிச்சால்....... இது நம்ம பேட்டை விவகாரம்!
நம்மூட்டாண்டை ஒரு பெட்ரோல் ஸ்டேஷன் இருந்துச்சு நான் ஊரைவிட்டுப் போகும்போது. அதுக்கு நேரெதிரே இருக்கும் தெருவுலேதான் திரும்புனா நம்ம வீடு . ஊர்திரும்பினதும் பார்த்தால்..... பங்க் மூடிக்கிடக்கு. யாவாரம் நொடிச்சுப்போச்சுன்னு நினைச்சேன். அந்த இடத்துலே வேற எதாவது நல்ல கடைகண்ணி வருமுன்னு பார்த்தால் ஹென்றி அவரோட யாவாரத்தை விரிவுபடுத்தி இங்கே 'குடி' கடை வைக்கப்போறாராம்.

இந்த ஹென்றி எப்படி இந்த குடி பிஸினெஸ்ஸுலே இறங்கினாராம்? அவரோட நாய்தான் இதுக்குக் காரணமாம். அதனால் அவருக்குக் கொடுக்கவேண்டிய தர்ம அடிகளை நாய்க்குக் கொடுக்கலாமுன்னு யாரும் நினைக்காதீங்கப்பா........ அதுவே பாவம் வாயில்லா ஜீவன். ஒரு நாள் அது ரொம்ப போரடிச்சுப்போய் ஹென்றியோட செருப்பைக் கடிச்சுக் கிழிச்சுச்சின்னச்சின்னத் துண்டுகளா ஆக்கிக்கிட்டு இருக்கும்போது ஹென்றி வேலையில் இருந்து வீடு திரும்பி இருக்கார். அடடா..... நாய் இப்படிக் கால் செருப்பைக் கடிச்சுக் கடாசி இருக்கேன்னு உக்காந்து யோசிச்சுக்கிட்டே தானே காய்ச்சிவடிச்சச் சொந்த சரக்கைக் குடிக்கும்போது ஐடியா க்ளிக் ஆச்சு.

பேசாம வேலைக்குப் போகும்போது நாயைக்கூடக் கூட்டிக்கிட்டுப் போகலாமே! ஆனால் எல்லா இடத்திலும் நாய்களுக்கு அனுமதி இல்லையே. சொந்தத் தொழிலா இருந்தாப் பிரச்சனை இல்லை பாருங்க. அதனால் இப்போ செய்யற வேலையை விட்டுட்டு இன்னும் கொஞ்சம் சரக்கைக் காய்ச்சி வடிச்சு விக்கலாமா..........கடையில்வாங்குறதை விட இது நல்லா 'ருசி' (?) யா இருக்கே. கடைக்காரன் கொள்ளை லாபத்துக்கு விக்கும்போது நாம் கொஞ்சம் சல்லீசா வித்தால் சரக்கு விலை போகாதா என்ன?

அப்படி ஆரம்பிச்சதுதான் இன்னிக்கு ஏகப்பட்ட கிளைகளோடு ரம்ரம்முன்னு நடக்குது. ஆரம்பிச்சப்ப ஹென்றிக்கு வயசு இருபது சொச்சம்.! வியாபாரத்துக்குப்பெயர் வைக்கவும் ரொம்ப மெனெக்கெடலை .
Henry's Beer, Wine and Spirits தெற்குத்தீவில் மட்டும் 17 கடைகள். சும்மாக்கிடக்கும் இடத்துலே பதினெட்டாவதைத் தொடங்க லைசன்ஸ் கேட்டு நம்ம சிட்டிக் கவுன்ஸிலுக்கு விண்ணப்பிச்சதும் அவருக்கு அனுமதி கொடுத்துட்டாங்க. எல்லோரும் நகரில் நடந்த நிலநடுக்கத்தால் ஆடிப்போய் இருந்துருப்பாங்க போல!

ஹென்றி எத்தனை கடை வேணா திறந்துக்கட்டும் ஆனால் அது எங்க பேட்டைக்குள் இருக்கக்கூடாதுன்றதுதான் இப்போ பிரச்சனை. இங்கே நியூஸியில் குடிக்க அனுமதி கிடைக்கும் வயசு இருவதா இருந்தது ஒரு காலத்தில். அதை 1999 வது வருசம் பதினெட்டாக் குறைச்சாங்க ( என்ன கேடுகாலமோ!) அதைத் தொடர்ந்து குடியால் ஏற்படும் குறறங்கள் விபத்துக்கள் எல்லாம் கொஞ்சம்கொஞ்சமா வளர்ந்து இப்போ விஸ்வரூபம் எடுக்கும் நிலையில் இருக்கு. முந்திமாதிரியே இருவதாக்கணுமுன்னு ஒரு பிரிவு மக்கள் போராட்டம் ஆரம்பிச்சுருக்காங்க.

பதினெட்டுகள் என்ன சொல்றாங்கன்னா....... நியூஸி சட்டத்தின்படி 18 வயசாச்சுன்னா, அப்பா அம்மாகிட்டே கேக்காமலேயே கல்யாணம் செஞ்சுக்கலாம்., குழந்தை பெத்துக்கலாம், உலகம் சுத்தத் தனியாக் கிளம்பிப் போலாம், படிக்க, இல்லை தொழில் தொடங்கன்னு கடன் வாங்கலாம், பேங்க் லோன் எடுத்து வீடுகூட வாங்கிக்கலாம், ராணுவத்தில் போய் சேர்ந்துக்கலாம், வீடியோக் கடைகளில் போய் பலான டிவிடி கூட வாங்கிப் பார்க்கலாம், சூப்பர்மார்கெட்டுலே போய் ஒரு பாக்கெட் சிகெரெட் கூட வாங்கலாம். ஆனால் கல்யாணம் பண்ணிக்கிட்ட சந்தோஷத்தையோ இல்லை புதுசா வீடு வாங்கிக்கிட்ட சந்தோஷத்தையோ கொண்டாட ஒரு க்ளாஸ் பியரோ, ஷாம்பெய்னோகூட குடிக்க வயசு அனுமதிக்கலைன்னு சொல்றது எப்படி வெளிவேஷம் பாருங்க

தொலைங்கன்னு பதினெட்டு வயசுலே 'எல்லாம் ஓப்பன் ஸிஸமே' பண்ணிடுச்சு அரசு. இப்ப என்னன்னா..... நல்லா குடிச்சுட்டு அக்கம்பக்கம் குடியிருப்புகள் இருக்கும் பகுதியில் பூமாலையைப் பிச்சுப்போடும் குரங்குகளாட்டம் ஆடுதுங்க. குடிபோதையில் வண்டி ஓட்டிப்போய் அடுத்தவனுக்கு ஆபத்து உண்டாக்குதுங்கன்னு ஏகப்பட்ட புகார்கள். அதிலும் நம்ம பேட்டையில்தான் இங்கத்து பல்கலைக்கழகம் வேற இருக்கு. ஒவ்வொரு டெர்ம் கடைசி நாளாச்சுன்னா கழகக்கண்மணிகளால் கலகம் கூடிப்போகுது.

பொறுத்துப்பொறுத்துப் பார்த்த குடி இருப்புப்பகுதிகள் தங்களுக்குள் ஒரு அசோஸியேஷன் உருவாகிக்கிட்டு விடாமல் புகார் கொடுத்து காவல்துறையோடு மல்லுக் கட்டி சில பல இடங்களில் குடிக்கத் தடை வாங்கி இருக்காங்க. ஆனாலும் இந்தப்பகுதிகளில் எட்டு குடிக்கடைகள் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. இந்த அழகுலே புதுசா இன்னொண்ணு தொடங்கிக்க ஹென்றிக்கு அனுமதி கொடுத்ததை வாபஸ் வாங்கணுமுன்னு ஒரு போராட்டம்.
போன சனிக்கிழமை பேட்டைவாசிகளின் எதிர்ப்பைக் காமிக்க நாள் ஒதுக்கியாச்சு. இதுக்கு மக்கள் கூடும் இடம் நம்ம வீட்டுலே இருந்து ஒரு ரெண்டு கிலோமீட்டர் இருக்கும். நானும் பனிரெண்டரைக்குக் கிளம்பிப் பொடிநடையா அந்த இடத்துக்குப் போய்க்கிட்டே இருக்கேன். ஊர்வலம் எப்படியும் நம்ம தெருமுன்னால்தான் வரப்போகுது. அதனால் பாதியில் இணைஞ்சுக்க்லாமே! ஒன்னேகால் கிலோமீட்டரில் ஊர்வலத்தை எதிர்கொண்டேன். கூடச்சேர்ந்து சாலை ஓரமா நடைபாதையில் வந்து பெட்ரோல் பங்கு முன்னால் கூடி இன்னும் கொஞ்சம் கூவி விளிச்சுக் கோஷம் போட்டோம். பெரிய க்ரூப் ஃபோட்டோ வேற! டிவிக்காரங்க வேற படம் எடுத்துக்கிட்டே எங்ககூடவே வர்றாங்க.
இதான் அந்த பெட்ரோல் பங்க். இடதுபுறக் கட்டிடம் கிண்டர் கேர்


பெட்ரோல் பங்குக்கு எதிர்ப்பக்கம் கிண்டர் கேர் என்ற பெயரில் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்னு இருக்கு. தெற்குத்தீவின் மேற்குப்பகுதியில் இருந்து நகருக்கு வரும் முக்கிய சாலை இது. நூல்புடிச்சாப்புலே இதுலே போனால் நகரின் நடுசெண்டருக்குப் போயிருவோம். வலதுபக்கம் இருக்கும் தெருவில் நுழைஞ்சால் ஒரு 400 மீட்டரில் ஆரம்பப்பள்ளிக்கூடம். எந்த வகையில் பார்த்தாலும் குடிக்கடைக்கான சரியான இடமா இது இருக்க வாய்ப்பே இல்லை.

ஊர்வலம் மறுபடி கிளம்பி அந்த ஆரம்பப்பள்ளி ஹாலுக்குள் நுழைஞ்சது. கட்சி வேறுபாடில்லாம முக்கிய கட்சிகளின் பாராளுமன்ற அங்கங்களும் வந்து காத்திருந்தாங்க. ஆதரவு கொடுக்கறாங்களாம் அரசியல் வியாதிகள். இன்னும் மூணு மாசத்துலே தேர்தல் வருதே! இவ்வளவு பெரிய கூட்டத்தை மிஸ் பண்ண தைரியம் வருமா? வரப்போகும் தேர்தலில் இந்தப்பேட்டைப் பகுதியில் போட்டி இடப்போகும் வேட்பாளர்களும் வந்துருந்தாங்க. மக்களைச் சந்திக்கும் அரிய வாய்ப்பு! நழுவவிடப் பைத்தியமாப் புடிச்சுருக்கு:-)
நேஷனல், லேபர், க்ரீன் கட்சி வேட்பாளர்கள் எல்லோருமே முதல்முறையா தேர்தலுக்கு நிற்கும் இளைய தலைமுறை. ஆர்வமும் ஆவலும் கொப்பளிககும் புதுமுகங்கள். எதோ பார்ட்டிக்கு வந்தாப்புலே எல்லோரும் எல்லோருடனும் கலந்து பேசிக்கிட்டே இருந்தாங்க. உன் கட்சி என் கட்சி என்ற விரோத மனப்பான்மை ஒன்னும் இல்லையாக்கும் கேட்டோ!
ரொம்பப்பழைய முகமா இப்பத்து பார்லிமெண்ட் அங்கம் ஜிம் ஆண்டெர்டன் வந்துருந்தார். ஸ்பீச் கொடுக்க ஆரம்பிச்சாங்க. புதுமுகங்கள் உட்பட எல்லோரும் ஒரு சில நிமிசங்கள் மட்டுமே எடுத்துக்கிட்டு போராட வந்திருக்கும் எங்கள் தைரியத்தையும் ஒற்றுமையையும் பாராட்டிக் கொஞ்சம் ஐஸ் வச்சாங்க. கடைசியா ஜிம் பேசுனார்.

நல்ல பழுத்த அரசியல்வியாதியின் பண்பட்ட பேச்சு. எல்லோரையும் அப்படியே கட்டிப்போடும்வகையில் நிதானமான அழுத்தமான, தேர்ந்தெடுத்த சொற்கள். நம்ம விஜயகாந்த் போல புள்ளி விவரங்களை அடுக்கடுக்கா எடுத்து வீசுனார். இவர் 27 ஆம் வயசுலே அரசியலுக்கு வந்தவர். 46 வருசம் வெவ்வேற பதவிகள் வெவ்வேற கட்சிகள் இப்படி இந்தக் குட்டையில் ஊறிக்கிடக்கார்.

குடிப்பது பிரச்சனை இல்லை. ஆனால் எப்படி எவ்ளோ குடிக்கிறாங்கன்றதுதான் பிரச்சனையாம். நாப்பது லட்சம் ஜனத்தொகை இருக்கும் நாட்டுலே மொடாக்குடியர்கள் 750,000 பேர்கள்ன்னு கணக்கெடுப்பு சொல்லுது.( வெளங்கிரும் போங்க!) குடிபோதையில் நடக்கும் குற்றங்கள் முக்கியமா குடும்பத்தினரையும் சமூகத்தையும் வதைக்கும் கொடுமைகள் உட்பட ஒரு நாளைக்கு 1350 புகார்கள் பதிவாகுது.

குடிக்கம்பெனிகள் லாபத்தை மட்டும் மனசுலே வச்சுக்கிட்டு ஏகப்பட்ட விளம்பரங்களுக்காகச் செலவிடும் தொகை ஒரு நாளைக்கு 300,000 டாலர்கள். சின்ன நாட்டுக்கு இதெல்லாம் கூடுதல் இல்லையோ? இளவயதுக்காரர்கள் அளவுக்கு மீறிக்குடிச்சுட்டுக் கொஞ்சம் கொஞ்சமா சமூகவிரோதிகள் ஆகிக்கிட்டு வருவதைத் தடுக்கணும். குடிக்கடைகள் வைக்க கண்டப்படி அனுமதி கொடுத்துறக்கூடாது. அரசு ஒரு பக்கம் கவனிச்சுக்கிட்டே இருந்தாலும் மக்கள் என்னமாவது நடக்கட்டுமுன்னு விட்டேத்தியா இல்லாம இப்படிப்போராடத் துணிஞ்சது மகிழ்ச்சியா இருக்குன்னார். 73 வயசுப் பழம்பெரும் அரசியல்வாதியின் பேச்சில் அரைமணி நேரம் போனதே தெரியலை!
அனைத்துக் கட்சிகளின் புது முகங்கள் எல்லோரையும் கவனிச்சுப் பார்த்து பொறுப்பானவர்களைத் தேர்தலில் தேர்ந்தெடுங்கன்னு எங்களுக்கு மெஸேஜ் கொடுத்துட்டு அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுக்கப் போவதாகச் சொன்னார். ஒன்பது வருசங்களுக்கு முன்னே இவர் ஆரம்பிச்ச ப்ராக்ரஸிவ் கட்சி(Progressive Party) ஒரே ஒரு இடம் கடந்துபோன தேர்தல்களில் ( ஒன்னே ஒன்னு கன்னே கன்னுன்னு கருவேப்பிலைக் கொத்து மாதிரி ) ஜெயிச்சுருக்கு இப்ப இவரும் 'ஓய்வெடுக்கப் போயிட்டால்' கட்சி என்ன ஆகுமோ தெரியலை!

சொன்னதை மெய்ப்பிக்கும் முகமா ஜிம்மின் தொகுதியில் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் அரசியலில் இருந்து விலகும் சேதியைச் சொல்லி இதுவரை ஆதரவு அளித்ததுக்கு மனமார்ந்த நன்றியையும் சொல்லி வீட்டு விலாசத்துக்குத் தனிப்பட்ட மடல்கள் அனுப்பி இருக்கார். நமக்கும் ரெண்டு கடிதங்கள் வந்து சேர்ந்தன.

டியர் துள்சி, (கணினி யுகத்துலே இதெல்லாம் எவ்ளோ சுலபமா ஆகி இருக்கு பாருங்க.) 27 வருசமா உங்க பேட்டைக்கான பார்லிமெண்ட் அங்கமா என்னை சேவை செய்ய அனுமதிச்சதுக்கு நன்றி. வரப்போற தேர்தலில் நான் நிக்கப்போறதில்லை. எனக்குப் போடப் போகும் வாக்கை லேபர் கட்சி வேட்பாளருக்குப் போட்டுருங்க. ரொம்ப திறமைசாலியான வேட்பாளர் மீகன் வுட்ஸ் உங்களுக்குக் கிடைச்சுருக்காங்க!

டிஸ்கி: இந்த கடிதம் அனுப்பு ஆன மொத்த செலவும் எங்க கட்சி நிதியின் பொறுப்பு. அரசாங்கக் காசை இதுக்காக செலவு செய்யவில்லை.

வெற்றி ஹென்றிக்கா இல்லை எங்களுக்கான்னு முடிவு வந்ததும் சொல்றேன். எழுத்தாளருக்குச் சமூகப்பொறுப்பு இல்லைன்னு யாரும் இனி சொல்லப்பிடாது, ஆமாம்!18 comments:

said...

நல்ல ஊரு ...

said...

\\எழுத்தாளருக்குச் சமூகப்பொறுப்பு இல்லைன்னு யாரும் இனி சொல்லப்பிடாது, ஆமாம்!\\

அது ;-)

said...

சமூக பொறுப்பு - மற்றும் அக்கறையுடன் சொல்லி இருக்கீங்க. எங்க ஊரிலேயும் , எந்த கடையிலும் மதுபானங்கள் விற்க கூடாது என்ற பொது விதி உள்ளது. It is illegal to sell alcohol in any shop. Only restaurants with PERMITS can sell "drinks" for dine-in customers only.

said...

நிஜமாகவே சமூகப் பொறுப்புள்ள பதிவர் தான் நீங்க.... :))

அங்க பரவாயில்லையே. வேண்டாம்னு சொல்ல தைரியமா கொஞ்சம் பேர் வராங்களே.... இங்க வேணும்னு தான் கொடி பிடிப்பாங்க.....

said...

அங்கேயும் அரசியலா?

said...

வெற்றி ஹென்றிக்கா இல்லை எங்களுக்கான்னு முடிவு வந்ததும் சொல்றேன். எழுத்தாளருக்குச் சமூகப்பொறுப்பு இல்லைன்னு யாரும் இனி சொல்லப்பிடாது, ஆமாம்! ///

சமூகப் பொறுப்பு இருப்பதால்தானே பதிவுலகத்திற்கே வந்திருக்கிறோம். பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

said...

நல்ல ஊருன்னால் அது உங்க ஊர்யதான். அந்தக் கடை அங்கே வராமல் இருக்கட்டும்.

said...

வாங்க தருமி.

ஆமாம். உண்மைதான்:-)))))

said...

வாங்க கோபி.

இல்லையா பின்னே?:-)))))

நன்றீஸ்

said...

வாங்க சித்ரா.

உண்மைதாங்க நீங்க சொல்லி இருப்பது. 'குடி'மக்களுக்கும் நியாயமுன்னு ஒன்னு இருக்குல்லே!

விதின்னதும் விதியேன்னாவது கடைப்பிடிச்சாகணும் இல்லையா?

முந்தி இங்கே குடிக்கடைகள் தனி. சிலவருசங்களுக்கு முன்னே 'ஆபத்து இல்லாத பானங்கள்'( ??!!) வகையில் ஒயின் விக்க சூப்பர்மார்கெட்டுகளுக்கு அனுமதி கொடுத்தாங்க. கூடவே பியரும் கை கோர்த்துக்கிச்சு. சாப்பாட்டு சாமான்கள் லிஸ்டில் இதையும் வாங்கிக்கிட்டாத் தின்னும்போது தாகசாந்திக்குத் தனியா அலைய வேணாமேன்னு:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கேக்கறாங்களோ இல்லையோ நம்ம எதிர்ப்பைக் காமிச்சு அதைப் 'பதிவு'ம் செய்யணும் என்பதுதான் கொளுகை.

உள்ளூர் தொலைக்காட்சி ஓடி ஓடிப் பதிவு செஞ்சது. எப்படியும் ஒரு முப்பது விநாடி உள்ளூர் நியூஸ்லே காமிச்சுருவாங்க:-))))

உள்ளூர் பத்திரிகைகளும் சேதி போட்டுச்சு. ரேடியோவிலும் 'பேரணி'பற்றிச் சொன்னாங்களாம்.

said...

வாங்க இளா.

அதென்ன 'யும்'? அரசியல் இல்லாத இடம் எது?

ஒரு இடத்தை நம்ம சுஜாதா சொல்லி இருக்கார். யாருக்காவது நினைவிருக்கா?

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

அப்படிப்போடுங்க அருவாளை:-))))))

said...

வாங்க வல்லி.

அந்த இடத்துலே ஒரு சூப்பர் மார்கெட் வந்தால்..... நாலே எட்டில் பால் வாங்க நமக்கு ரொம்ப வசதி:-))))

said...

அட, ஆண்களும் போராட்டத்துல கலந்துகிட்டாங்களா? நம்மூர்களில் அப்பப்போ பெண்கள்தான் இப்படி எதிர்ப்பைத் தெரிவிப்பாங்க.

எந்த நாடானாலும், இளைய தலைமுறைதான் குடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மிகவும் வருத்தமானது.

//சந்தோஷத்தையோ கொண்டாட ஒரு க்ளாஸ் பியரோ, ஷாம்பெய்னோகூட குடிக்க வயசு அனுமதிக்கலைன்னு சொல்றது//
அதுக்கெல்லாம் அனுமதி கொடுத்தவங்க, இதுக்குக் ஏன் கொடுக்கலைன்னா, அதோட ’விளைவுகள்’ அப்படிங்கிறதனாலன்னு யோசிக்காதது ஏனோ? ;-))))

said...

நல்ல வேலை செய்தீங்க.

said...

வாங்க ஹுஸைனம்மா.

//விளைவுகள்// ஆஹா..... சரியாப் பாயிண்டைப் புடிச்சீங்க.

ஆனால்.....'வயசு' அதையெல்லாம் நினைச்சுப் பார்க்குமா?

said...

வாங்க மாதேவி.

நம்மாலான எதிர்ப்பைக் காமிச்சாச்சு. இனி 'அவன்'விட்ட வழி?

அந்த 'அவன்' யாருன்றதுதான் இப்போ பிரச்சனை:-)))))