Wednesday, August 10, 2011

ஓல்ட் ஈஸ் கோல்ட் & Gold is Old........... (ராஜஸ்தான் பயணத்தொடர் 38)

பழைய கோட்டைன்னு பெயர்! கட்டும்போதே பழசாகிப் போச்சா என்ன? மார்வாரிலும் குஜராத்திலும் நடத்துன போர்களில் வாரிக்கிட்டு வந்த செல்வத்தைக் கொண்டு 'ராவ் பிகா' 1478 வது வருசம் கட்டுன கோட்டை இது. பாலைவனத்தின் ஆரம்பப் பகுதியான இந்த இடத்துக்கு அந்நாளில் ஜங்கல்தேஷ் ன்னு பெயர். இந்த ராவ் பிகா, நம்ம ஜோத்பூர் அரசர் ராவ் ஜோதாவின் அஞ்சாவது மகன். மகனுடைய அரசாளும் ஆர்வம் புரிஞ்சுக்கிட்ட ராஜா 500 காலாட்படை வீரர்களையும் 100 ஆயுதப்படை வீரர்களையும் கொடுத்துத் தனியாப்போய் ராஜ்ஜியம் அமைச்சுக்கச் சொல்லிட்டார்.(இங்கேயே இருந்து குடும்பத்தில் குழப்பம் விளைவிச்சா நல்லவா இருக்கும்?) இவரோட தாய்மாமன் Rawat Kandhal ரொம்ப சப்போர்ட்டா இருந்துருக்கார். சுமார் 160 மைல் தூரம் தள்ளிவந்துட்டாங்க. பச்சைகள் எல்லாம் போய் மணல்காடா இருக்கு இந்த இடம். இன்னும் போகப்போக மணலைத்தவிர வேறொன்னுமில்லாத பாலைவனம். 1472 வது வருசம் கிளம்பி வந்தவங்க, சுமார் ஆறு வருசம் திட்டம் போட்டுக் கோட்டையைக் கட்டுனாங்க. மலைப்பிரதேசமா இல்லாம சமதளத்தில் இருக்கு இந்தக் கோட்டை. ஒருவேளை எல்லாக் கோட்டைகளையும் போல இருக்கணுமுன்னு மலையைத் தேடி ஆறு வருசம் அலைஞ்சாங்களோ என்னவோ?

கோட்டையைக் கட்டிட்டு அதுக்குச் சிந்தாமணின்னு பெயர் வச்சாங்க. கோட்டையை சுத்தி ஊர் வளர ஆரம்பிச்சது. மஹாராஜா கங்கா சிங் அரசாட்சியில் 1902 வது ஆண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமா அஞ்சு மைல் தூரத்துலே இன்னொரு கோட்டை கட்டினார். ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட் போட்டு அது பத்து மடங்காகிப்போனது தனிக்கதை. ஆனை அசைஞ்சு தின்னும் (ராசா) வீடு அசையாமத் தின்னும் என்ற பழமொழி பொய்க்குமா என்ன? தன்னுடைய தந்தை மஹாராஜா லால் சிங் அவர்களின் நினைவுக்காக லால்கட் ( Lallgarh) என்ற பெயரை புது மாளிகைக்கு வச்சு அங்கே ராஜகுடும்பம் குடி பெயர்ந்ததும் சிந்தாமணிக்கு மவுஸ் குறைஞ்சு போய் பழையகோட்டை( ஜூனாகட் junagarh) ஆகிருச்சு. இந்தப் புது கோட்டையைக் கட்டும்வரை ராவ் பிகாவின் பரம்பரையில் வரிசையா இருவது மன்னர்கள் பழைய கோட்டையிலேயே இருந்து ஆட்சி செஞ்சுருக்காங்க. ஒவ்வொருத்தரும் அவுங்க வசதி, விருப்பத்தின்படிக் கொஞ்சம் கொஞ்சமா விரிவுபடுத்தி சிலபல மாளிகைகளைக் கட்டிக்கிட்டே போயிருக்காங்க. ( நமக்குக்கூட வீட்டுலே இன்னும் ஒரு அறையோ, இல்லை கூடமோ இருந்தால் நல்லா இருக்குமேன்னு அப்பப்பத் தோணுதில்லே?) இப்போ இந்த லால்கட்டை மூணாப் பிரிச்சு ஒரு பகுதியில் ம்யூஸியம் ஒன்னும் இன்னொரு பகுதியில் அரசகுடும்பத்தார் ஒண்டுக்குடித்தனம் நடத்திக்கிட்டு மூணாவது பகுதியை 56 அறைகள் உள்ள ஹொட்டேலா நடத்திக்கிட்டு இருக்காங்க. போற போக்கைப் பார்த்தா ராஜாவின் போர்ஷன் (Bed & Breakfast) பெட் அண்ட் ப்ரேக்ஃபாஸ்ட்டாக் கூட ஆகுமோ என்னவோ!

ஜூனாகடின்(Junagarh) சுத்துச்சுவர் மட்டும் 986 மீட்டர் நீளம். அகழி எல்லாம் வெளியில் வச்சுக்கட்டி இருக்காங்க. கோட்டைக்குள் போக ரெண்டே வாசல். சூரியகுல மன்னர்கள் என்றபடியால் இவுங்க கோட்டைகள் எல்லாவற்றிலுமே சூரஜ் போல் என்ற பெயரில் ஒரு கோட்டை வாசல் இருக்கும். இங்கேயும் இருக்கு. இன்னொரு வாசலுக்குக் கரன்போல் என்று பெயர். இந்த கரன் என்ற பெயர் வடமேற்கு இந்தியாவில் நிறையவே இருக்கு. கர்ணன் என்று நாம் சொல்றோமே அதுதான் இந்தப் பக்கங்களில் கரன். (தில்லியில் இருந்து குருஷேத்திரா போகும் ராஜபாட்டையில் லேக் கரன் என்ற ஏரியும் அதுக்குச் சமீபமா கர்னால் என்ற ஊரும் இருக்கே அதுகூட கர்ணன் அரசாண்ட இடமா இருக்குமோ என்னவோ!)


சிந்தாமணியை நாலரை மணிக்கு மூடிருவாங்கன்றதால் அடிச்சுப்பிfடிச்சு ஓடியாந்து சூரிய வாசலில் நுழைஞ்சோம். மொத்தமும் பார்க்கப் போறீங்கதானேன்னு கேட்ட கவுண்ட்டரிடம் ஆமாம்ன்னு தலையை ஆட்டிவச்சோம். ஆளுக்கு அம்பதுன்னார். ஒரு கெமெராவுக்கு முப்பது. எங்கூர்காசுலே இது ஒரு டாலருக்கும் கம்மி என்றதால் ஆளுக்கு ஒன்னுன்னு வாங்கிக்கிட்டோம். சில இடங்களில் 200 ரூ என்றால் ஒரு கெமெராதான் பயன்படுத்துவோம். நாமும் சிக்கனமா இருக்கணுமுல்லெ?
நுழைஞ்சதுமே பளிங்குக்குளம் பளிச்ன்னு கண்ணில் படுது. ஹரிமந்திர் முதல்லே வா வாங்குது. கருப்புப்பளிங்கில் ஸ்ரீமஹாவிஷ்ணுவும் லக்ஷ்மியும் வித்தியாசமான ரூபத்தில். வில் இருப்பது அம்மிணி கையில். பெருமாளுக்குப் பக்கத்தில் நிற்கும் ஒரு சிறுவன், யாருன்னு தெரியலையே.......எதுக்கும் இருக்கட்டுமுன்னு ஒரு கும்பிடு போட்டுட்டு நகர்ந்தால் 'அனூப் மஹல்'. நம்ம கரன் மஹாராஜாவின் மகன் சூரத் சிங் ஜி காலத்தில் கட்டியது. பளிங்குக்கட்டிடம். அலங்கார விதானங்கள்., கண்ணாடிகள் பதிச்ச சுவர் அலங்காரங்கள், தரையில் பதிச்ச இத்தாலியன் டைல்ஸ், தங்கத்தால் வரைஞ்ச ஓவியங்கள்ன்னு தகதகன்னு கண்ணைப்பறிக்குது!

ராஜா நகர்வலம் போனால் அவருக்கு முன்னால் போகும் காலாட்படை வீரர்கள் கையில் கொடியும் கொம்புமாச் சுமந்து கொண்டுபோகும் அலங்காரங்களா ஒரு அனிவகுப்பு இருக்கும் பாருங்க. அந்த வரிசை ஒன்னு காட்சிக்கு வச்சுருக்காங்க.
ஈரான் பேரரசர் குஸ்ரூ பர்வேஸ் அவர்களின் பேரன் நவ்ஸ்ரியர் கான் தான் இந்த வழக்கத்தை ஆரம்பிச்சு வச்சாரம். அவர் பட்டத்துக்கு வந்த நாலில் சந்திரன் மீனராசியில் இருந்ததாம். (அட! இதெல்லாம்கூட இஸ்லாமியர்கள் பஞ்சாங்கத்தில் இருக்கா!!!!) அதனால் ரெண்டு நட்சத்திர வடிவம் செஞ்சு அதை கம்புகளில் பொருத்திட்டு நடுவில் இன்னொரு கம்பின் முனையில் மீன் உருவம் ஒன்று பொருத்தி பட்டமேற்கப்போகும் வேளையில் ஊர்வலத்தின் ராஜாவுக்குப் பின்னால் கொண்டுபோக ஏற்பாடு செஞ்சதுதான் இந்த அணிவகுப்புகளின் ஆரம்பம். இந்த வரிசைக்குப்பின் பிரதமமந்திரி நடந்து வரணுமாம். இந்த வழக்கம் அப்படியே ராத்தோடு வம்சத்திலும் ஒட்டிக்கிட்டு அந்தந்தக் காலக்கட்டங்களில் இருக்கும் மஹாராஜாக்களின் ராசிகளையொட்டி நடுவில் இருக்கும் கம்பில் மட்டும் 12 ராசி டிஸைன்களில் ஒன்னு இடம் பிடிக்குமாம்.
இந்த நடுக் கம்புகளின் அணிவகுப்புகளை இந்த ம்யூஸியத்தில் கண்ணாடிப்பொட்டிகளில் வச்சு விளக்கமும் எழுதி வச்சுருந்தாங்க. ஒரு கண்ணாடிப்பெட்டியில் பேரரசர் அக்பரின் வாள் இருக்கு. மஹாராஜா ராய் சிங் ஜியின் 'வாக்கிங் ஸ்டிக்' கூட ராயல் அந்தஸ்த்துடன் மியூஸியத்தில் இடம்பிடிச்சுருந்தது. வில்லுக்கான் அம்புகளின் வரிசை சூப்பர்!
ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் அருணன் தேரோட்டி ஆக இருக்க சூர்யபகவான் அமர்ந்திருக்கும் சிலையும், சுவரில் சஞ்சீவி மலையைக் கையில் ஏந்திய ஆஞ்சநேயரின் செதுக்குச்சிற்பமும் இந்த மன்னர்களால் தினமும் பூஜிக்கப்பட்டு வந்துருக்கு. பெரிய சைஸ் முறுக்கு மீசையுடன் ப்ரம்மா, விஷ்ணு, சிவன் அவருடைய இடது மடியில் பார்வதி, ஹனுமன், நந்தின்னு கடவுளர் உருவங்கள்.

என்ன சாமி?

உப்பரிகையில் இருந்து பார்த்தால் கோட்டையில் இருக்கும் மற்ற இடங்களும், அவ்வளவாத் தண்ணீர் காணாத தோட்டமும் கோட்டைக்கு வெளிப்புறம் இருக்கும் ஊரும் தெரியுது.


சந்திர மஹல், சுர் மந்திர், மலர் மஹல், கங்கா மஹல், பாதல் மஹல்ன்னு மாளிகைகள் ஏகப்பட்ட விதவிதமான உட்கூரை அலங்காரங்களுடன் அங்கங்கே இருக்கு. பளிங்குக் கற்களில் லேஸ் வேலை செஞ்ச மாதிரி சல்லடை சன்னல்கள்! ப்ரதாப் நிவாஸ், லக்ஷ்மி நிவாஸ், கோதி டுங்கர் நிவாஸ்ன்னு படுக்கை அறைகள். மஹாராஜாவின் கட்டில் ரொம்பவே சிம்பிள் டிஸைன். எல்லாத் தங்கத்தையும் சுவத்திலே வரைஞ்சதாலோ என்னவோ? ஆனால் நல்ல நீளமா இருக்கு. ராசா நல்ல உயரம் போல! இவருடைய படுக்கையறைச் சுவரை ஒட்டிக் கொஞ்சம் உயரமான பக்கத்து அறையில் மஹாராணியின் கட்டில்! இங்கிருந்து மன்னரைக் கீழ் நோக்கிப் பார்க்க மூணு வாசல்! நான் கற்பனை செஞ்சுவச்சுருந்த ராஜாராணியின் படுக்கை அறை டிஸைன்கள் எல்லாம் இந்த அறைகளைப் பார்த்ததும் 'டணால் '!

ஒரே ஒருத்தர் உக்கார வசதியா யானைகள் தாங்கி நிற்கும் ஒரு பொன்னூஞ்சல் கூட வச்சுருக்காங்க.
ஆணிகள் வச்சுப் பிடிப்பிச்ச ரெண்டு மூணு மரப்பலகைகள் பெரிய அளவில் இருக்கு. பக்கத்துலேயே அதில் ஏறி நிற்கும் இளவரசரின் படம். யோகா செய்யறார் போல. ஒருவேளை எதாவது தண்டனையோ? இந்த ஆணிப்படுக்கைகள் மேல் நின்னா கால் வலிக்காதுன்னு எங்கியோ வாசிச்ச நினைவு. உண்மையான்னு தெரிஞ்சுக்கலாமேன்னு கோபாலைத் தேடினா ஆள் 'எஸ்' ஆகி இருந்தார்!
மஹாராஜா கங்கா சிங் ஜிக்கு முதல் உலகப்போரின் நினைவுப்பரிசா பிரிட்டிஷ் அரசு கொடுத்த விமானம் DH-9 DE Haviland Plane ஒன்னு சரி செஞ்சு காட்சிக்கு வச்சுருக்காங்க.
பெரிய அளவில் உள்ள கோட்டை மாளிகையின் வெளிப்புற முற்றத்தில் பீரங்கி வண்டிகள் அனக்கமில்லாம நிக்குதுகள்.

இன்னொரு பகுதிக்கும் சேர்த்துக் கட்டணம் செலுத்தி இருந்ததால்...அவசர அவசரமா அங்கே ஓடினோம்:-)

தொடரும்.............:-)


16 comments:

said...

Beautiful!

said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள் அம்மா.

said...

புதிய தகவல்கள்....

ஆணிப்பலகையில் நின்னா கால்வலி போகுமா.... புதிய தகவலா இருக்கு... ஆனா டெஸ்ட் பண்ணி சொல்லலையே.... அது சரி ஆளா கிடைக்கல உங்களுக்கு... பாவம் கோபால் சார்...

நம்ம பக்கத்திலேயும் இன்னிக்கு ஒரு பயணத்தொடர் ஆரம்பிச்சு இருக்கு.... முடியும்போது பாருங்க....

said...

நாய் வாகனமென்றால் பைரவர் இல்லையா?

said...

படங்களும் வர்ணனையும் செம அழகு.

ஆணிப்படுக்கை.. :-)))

said...

வாங்க சித்ரா.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

said...

வாங்க ரத்னவேல்.

நன்றி. நன்றி

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வலி போகுமான்னு தெரியலை. ஆனால் வலிக்காதுன்னு சொல்றாங்க. உடம்பு வெயிட் சமமா பரவுமாமே! எனக்கு ஒரு சந்தேகம்......புரண்டு படுத்தால் என்ன ஆகும்!!!!!! ஐயோ:(

said...

வாங்க கயலு.

நாயே பைரவர்தானேப்பா? அதிலும் இந்த்ச் சாமி தலையைக் கொய்து வச்சுருக்கு? ஒருவேளை அது அந்த நாய்க்கு சாப்பாடோ? மோந்துவேற பார்க்குதே......

said...

வாங்க அமைதிச்சாரல்.

அது 'டபுள் பெட்' :-))))))))))))))

said...

நாய் தான் பைரவர் என்று பலரும் தவறாகத்தான் நினைக்கிறார்கள்.
நாய் பைரவரின் வாகனம் தானே தவிர நாயே பைரவர் அல்ல..

said...

சிவன் பைரவராக அவதரம் எடுத்து அசுரனின் தலையை வெட்டி எடுத்த கோலம்.

பைரவரின் வாகனம் நாய்.

அருமையான படங்களுக்கும்,பகிர்வுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்,

said...

அட ராமா......


தகவலுக்கு நன்றி கயலு. இப்படி ஒன்னு இருப்பதே எனக்கும் தெரியாதுப்பா:(

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

தகவல் பிழைக்கு வருந்துகிறேன். விளக்கத்துக்கு நன்றி.

கயல்விழி முத்துலட்சுமியும் இதையேதான் சொல்லி இருக்காங்க.

said...

கோல்ட்... அருமை.

said...

வாங்க மாதேவி.

கோல்ட் உண்மையாவே அருமைதான் போல! விலை எப்படி ரெக்கை இல்லாம பறக்குது பார்த்தீங்களா!!!!