'Haunted House' இப்படி ஒரு விளையாட்டு ரொம்ப நாளைக்கு முன்னால் வந்துக்கிட்டு இருந்ததே நினைவிருக்கா? அதுலே படமாத்தொங்கும் ஒரு ராணுவ அதிகாரி..நாம் அந்த இடத்தைவிட்டுக் கடந்து போகும்போதெல்லாம் நமக்குக் கிடைச்ச அனுபவம் எதுவா இருந்தாலும் சரி, அதுபோல தனக்கும் டேஷ் டேஷ் டேஷ் வருசத்துலே நடந்ததாச் சொல்வார். கிட்டத்தட்ட அந்த நிலைக்குப் போய்க்கிட்டு இருக்கேன் இப்போ!
எந்த நேரத்துலே நம்ம கொத்ஸ், ஊர் போய்ச் சேர்ந்ததும் அதை தொடரா எழுதுங்கன்னு திருவாய் மலர்ந்தருளினாரோ................ ததாஸ்து.................
நம்ம முருகன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை பூஜைக்குப்போய் அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டு, நமக்குப் பிரிவுபசார ஸ்பெஷலாக் கோவிலில் ஏற்பாடு செஞ்சுருந்த 'தோசை' விருந்தைக் காத்திருந்து சாப்பிட நேரமில்லாமல், 'நம்ம பெயரைச் சொல்லி நீங்க எல்லாம் ரசித்துக்கொண்டாடுங்க'ன்னு பெரிய மனசோடு(?) சொல்லிட்டுக் கிளம்பி நாலுநாளாத் தங்கி இருக்கும் ஹொட்டேலுக்கு வந்து மீதி இருந்த பொட்டி கட்டும் வேலையை முடிச்சுட்டு மறுநாள் காலை வீட்டுக்குப்போய் அங்கே தயாரா இருந்த மற்ற பெட்டிகளை அள்ளிப்போட்டுக்கிட்டு வீட்டு ஓனர் அம்மாவிடம் சாவிகளைக் கொடுத்துட்டுப் போயிட்டு வாரோமுன்னு சொல்லிட்டு சண்டிகரில் இருந்து கிளம்பும்வரை எல்லாம் சரியாத்தான் இருந்துச்சு, ஓனரம்மா கண்கலங்கி சிந்திய கண்ணீரைத் தவிர!
துளசிதளத்தின் சண்டிகர் வாழ் வாசகர்கள்
போற வழியில் முருகனிடம் சொல்லிட்டே போகலாமுன்னு கோவிலுக்கு வண்டியை விட்டோம். அப்பதான் திருமஞ்சனம் முடிச்சு கடவுளர்கள் அனைவரும் உடை மாற்றிக்கிட்டு இருந்தாங்க. நம்ம நேயுடு மட்டும் சட்னு அலங்காரம் முடிச்சுக் கழுத்தில் துளசியோடு இருந்தார். 'போயிட்டு வரேன் போயிட்டு வரேன்'னு எல்லார்கிட்டேயும் உத்தரவு வாங்கிக்கிட்டு மூலவரிடம் போனோம். சண்டிகர் முருகனுக்கே அழுகை வந்துருச்சுன்னா பாருங்களேன். வானத்தையும் அழவச்சான்.
குருக்ஷேத்ரா வந்து சேரும்வரை மழை நிக்கலை. அப்பதான் பதிவுலக நண்பர் செல்லில் கூப்பிட்டார். கிளம்பியாச்சான்னார். குருக்ஷேத்ரா வாசலில் நிக்கிறேன்னேன். அதான் நம்ம 'பாரதம்' மீண்டும் எழுதப்படுகிறதே! தில்லியின் எல்லைக்கு வரும்வரை சீறிவந்த வண்டி எல்லை தொட்டதும் ஊர்ந்துவர ஆரம்பிச்சு ஹொட்டேல் போய்ச் சேரும்போது மணி அஞ்சு. ஆறுமணிக்குப் பதிவர் சந்திப்பு இருக்கு. ரெண்டு வாசகர்களும்(!!) அஞ்சு பதிவர்களுமா சந்திப்பு ஆரம்பிச்சது.
மூத்த பதிவர்கள் மூவரும் சுவாரஸியமாப் பேசிக்கிட்டே இருந்ததால் இளைய...... ரொம்பவே இளைய பதிவர்களுக்கு டேஷ் அடிச்சு நெளிஞ்சுக்கிட்டே இருந்தாங்க. காஃபி & ஐஸ்க்ரீமோடு இந்த இனிய சந்திப்பு ஏழே முக்காலுக்கு முடிஞ்சது.
பதிவர் 1
பதிவர் 2
பதிவர் 3
பதிவர் 4
இன்னும் அனுமதி வாங்காததால் இவர்களின் படங்களைப் போடலை. மன்னிக்கணும்.
நாங்களும் அறைக்குப்போய் மறுநாள் அதிகாலைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செஞ்சுட்டுச் சாப்பிட்டுத் தூங்கி அதிகாலை அஞ்சறைக்கு தில்லி விமானநிலையம் புது டெர்மினலுக்குப்போய் (பயந்துக்கிட்டே) செக் இன் செஞ்சு பயத்திலிருந்து தப்பிச்சோம். இட மாற்றம் என்பதால் நம்ம பெட்டிகளின் எண்ணிக்கை ஃபோர்மச்:(
சிங்கை போகும்வழியில்தான் கவனிச்சேன் என் ஒரு கால் குட்டையா இருக்குன்னு! சண்டிகர் வெய்யில் என் ஷூவோட ஹீலைப் பதம் பார்த்து வச்சுருக்கு. 26 மாசத்துக்குப் பிறகு அந்த ஷூவை இன்னிக்குக் காலையில்தான் முதல்முறையாப் போட்டுருந்தேன். இந்திய செருப்பு செக்கின் பேகில் போயிட்டதால் அதையும் எடுக்க வழி இல்லை:(
சிங்கையில் இறங்கினதும் மூணு மணிநேர ப்ரேக் இருக்கு நியூஸி விமானம் பிடிக்க.. சிட்டிக்குள்ளே போய் ஒரு ஜோடி வாங்கிக்கலாமான்னா.... என் பாஸ்போர்ட் காலாவதியாக ஒரு மாசமே இருப்பதால் வெளியே காலடி வைக்க அனுமதி இல்லை. அங்கே விமான நிலையத்துலேயே வாங்கிக்கவான்னால்...... எல்லாம் 'சீனத்து அளவில்' அழகழகா இருக்கு!
ஸ்வாரோஸ்க்கியில் கண்ணைப் பறிக்கும் யானைகள். வாங்கலையான்னு கேட்ட கோபாலிடம், ஊருக்குப்போய் வீட்டை வித்துட்டு வந்துதான் வாங்கணுமுன்னு சொன்னேன்.
ட்யூட்டிஃப்ரீயில் மகளுக்கு சில பொருட்களைப் பார்க்க இங்கேயும் அங்கேயுமா சுத்திக்கிட்டு இருந்தால், கோபால் கேக்கறார்...... 'இன்னொரு ஹீலைப் பிய்ச்சுப் போட்டுட்டியா?'ன்னு! எப்போ???? அது(வும்) தானாகவே எங்கியோ கழண்டு போயிருக்கு:-) தொலையட்டும் இப்போ ரெண்டு காலும் சமமா இருக்கேன்னாலும் சிரிப்பை அடக்க முடியலை:-))))
லவுஞ்சில் போய் கொஞ்சம் லைட்டா சாப்பிட்டோம். நான் கொஞ்சம் மெயில்பாக்ஸ் செக் பண்ணிட்டு சில மெயில்களை அனுப்பி வச்சுட்டு நியூஸி விமானத்துக்குள்ளே நேரா(!) நடந்து போனேன்.
தமிழ்ப்படங்களாக 'மைனா, விண்ணைத்தாண்டி வருவாயா, சிக்குபுக்கு' இது மூணும்தான். சிக்குபுக்கு மட்டும் பார்க்கலையேன்னு பார்த்து வச்சேன். பத்துமணி நேரத்தை ஓட்டணுமே! பொதுவா படங்களைவிட ப்ளைட் பாத் சுவாரசியம். படுக்க ஃப்ளாட் பெட்ன்னு பேர். ஆனா. முழங்கால் கீழே நழுவுது. அரைத்தூக்கமும் விழிப்புமா பொழுதுவிடியக் காத்திருந்து 'சதர்ன் ஆல்ப்ஸ் மலைத் தொடர்கள்' கண்ணுலே பட்டதும், இன்னும் கொஞ்சநேரத்துலே நம்மூர்லே தரை இறங்கப் போகுதுன்னு எதிர்பார்ப்புடன் இருந்த நிமிஷம் ஸ்க்ரீன்லே வட்டம் போடுது விமானம்.
'ரன்வேயில் முப்பது செ.மீ பனி விழுந்து மூடிக்கிடக்கு. ஏர்ப்போட்டையே பூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. உங்களை இங்கே இறக்க முடியாது. அதுக்குப் பதிலா ஆக்லாந்துக்குக் கொண்டு போறேன்'னு பைலட் சொல்றார்:(
ஒருமணி இருவது நிமிசம் இன்னும் பறக்கணும்.சிங்கப்பூர் தமிழ்ப்படமுன்னு ஒன்னு இருந்துச்சேன்னு.......மாயாஜால்/மேஜிக்மேன் என்ற தலைப்புன்னு நினைப்பு. மனைவியை இழந்த மிடாக்குடிகாரரும் அவர் மகனுமாக இருக்கும் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்கள். எப்படி அவர் குடியில் இருந்து மீண்டு வர்றார் என்ற கதை. நம்ம மணிரத்தினத்தையும் பிஸி ஸ்ரீராமையும் மிஞ்சிட்டாங்க,. எண்ணிப் பத்தே வரி வசனங்களும் இருட்டிருட்டான லொகேஷன்களும்!
ஆக்லாந்து வந்து சேர்ந்தோம். பயணிகள் எல்லோரையும் வகுப்பு அனுசரிச்சு வெவ்வேற லவுஞ்சுக்கு அனுப்பினாங்க,. நாங்க கோரு க்ளப் போய்ச்சேர்ந்து ஒரு காஃபி குடிச்சுட்டு மடிக்கணினியைத் திறந்து கிறைஸ்ட்சர்ச் நிலவரத்தை ஆராய்ஞ்சுக்கிட்டும் மகளுக்குத் தொலைபேசி உள்ளூர் பனிமழைச் சமாச்சாரத்தையும் தெரிஞ்சுக்கிட்டோம். ஏகத்துக்கும் பனி பெய்யுது. 19 வருசத்துக்கு முன்னாலே 1992 ஆண்டு இதே மாதிரி இருந்துச்சுன்ற புள்ளிவிவரம் கிடைச்சது. ஆஹா...... அப்போ நகரின் வடக்கு & கிழக்குப் பகுதி முழுசும் மின்சாரம் இல்லாமல் போனதும், மேற்கு & தெற்கில் இருந்தவர்களாகிய நாங்கள் எல்லோரும் ஓப்பன் ஹோம் என்று அறிந்த & அறியாதவர்களையெல்லாம் வீட்டில் வரவேற்று உணவு கொடுத்து உதவியதையும் மறந்துதான் போயிட்டோம். அட ராமா.....அப்படியா ஆகி இருக்கு இப்போ?
மகள் வீட்டைச் சுற்றிப் படங்கள் எடுத்து உடனே அனுப்பி வச்சாள். தாய் எட்டடின்னால் குட்டி பதினாறடி இல்லையோ! :-)))))
ஒரு மணிவரை லவுஞ்சில் இருந்து எலுமிச்சம்பழ சாதம் போல ஒரு ரைஸ் ஸாலட் சாப்பிட்ட பிறகு, எங்களுக்காக அஸைன் செஞ்சுருந்த பெண்மணி வந்து, இன்னும் அங்கே நிலமை சரியாகலை. இன்னிக்கு இந்த ஊரில் தங்கணும். உங்க பெட்டிகள் எல்லாம் வெளியே வருது. எடுத்துட்டுப்போய் இங்கேயே இமிக்ரேஷன் கஸ்டம்ஸ் எல்லாம் முடிச்சுருங்கன்னு சொன்னாங்க. 'எங்க கேபின் பேக் எல்லாம் ப்ளேன்லேயே இருக்கே'ன்னோம். அதையும் கொண்டு வர்றோமுன்னு சொல்லிப் போனாங்க.
ஒரு இருவது நிமிசமாச்சு நம்ம பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் செஞ்சு எண்ட்ர்ரி போட்டு வாங்கி, பெட்டிகளையெல்லாம் எடுத்து சிகப்பு விளக்கு கேட்டில், ஏற்கெனவே டிக்ளேர் செஞ்ச சாமான்களையெல்லாம், இது ஏலக்காய், இது குங்குமப்பூ, இது கறிப்பவுடர், இது இண்டியன் ஸ்வீட்ஸ்ன்னு எடுத்துக் காமிச்சாலும் அன்றைக்கு இருந்த குழறுபடியில் ஒன்னையுமே சரியாச் செக் பண்ணாமல் சரி சரி போங்கன்னுட்டாங்க. பெட்டிகளை இறக்கும்போதே, நாட்டுக்குள் வரவேகூடாத சாமான்களை நாய் பிடிச்சுருக்கும் போல! அடடா.... இப்படி ஆகுமுன்னு தெரிஞ்சுருந்தால் இன்னும் கொஞ்சம் கொண்டு வந்துருக்கலாமே! ருத்திராட்சம் தப்பிச்சது வரை பாக்கியம்:-)))))
உங்களுக்கு லீங்கம் ஹொட்டேல் ஒதுக்கி இருக்குன்னு டாக்ஸி சிட் கொடுத்தாங்க. ஆஹா.... ருத்திராட்சமுன்னு சொன்னதும் அந்த லிங்கேஸ்வரனே நமக்கான இடத்தை ஏற்பாடு பண்ணிட்டாரு போல! யார் அந்த மஹாலிங்கம்? நல்லா இருக்கட்டுமுன்னு சாமான்களை அடைச்ச வண்டியில் ஏறிப்போனோம்..............
தொடரும்........................:-)
PIN குறிப்பு: பதிவின் நீளம் கருதி, பாக்கி அப்புறம்!
Sunday, July 31, 2011
Haunted House 1
Posted by துளசி கோபால் at 7/31/2011 10:21:00 PM
Labels: அனுபவம் Christchurch NZ
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ரீச்சர்,
நீங்க தொடர் எழுதறதுக்கு நான் நாயுடு, ச்சே, நேயுடுவா? இருக்கட்டும்! :)
சீன அளவிலா..சரியாப்போச்சு..
நல்ல வேளை இன்னோரு ஹீல் உடைஞ்சு உங்களை நல்ல படி நடக்கவச்சுதே..
பனிவிழுந்த படங்கள் அழகா எடுத்து அனுப்பிய பொண்ணுக்கு பாராட்டுக்கள் சொல்லுங்க..
நியூஸியின் ஆனந்தக்கண்ணீர் அப்படி கூலாக பனிமழையா வந்திருக்கு போல.. :))
பனிபொழிவு போட்டோ சுப்பர்
செடிகளின் மேலே க்ரீம் டாப்பிங் செஞ்சுருக்கு பனி மழை :-))
haunted house-ஆ, பேச்சுத்துணைக்காகுமே. அப்படியே தகவல்கள் சேகரிச்சா இடுகைக்கு எக்கச்சக்க மேட்டர் தேத்திடலாமே :-)))))
இறங்கியாச்சா...சூப்பரு ;-)
பனிமலைப் பயணத்தில் லிங்கம்,உருத்திராட்சம்,துளசி கோபால் என்ன ஒரு ஒற்றுமை. தொடரட்டும் இனிய பயணம்...
அட, பதிவின் நடுவிலே நம்ம பதிவர் சந்திப்பிற்கும் இடம் இருக்கா.... நல்லது. சந்திப்பு பற்றி நானும் எழுதலாம்னு நினைச்சேன்... நீங்க விரிவாக எழுதுவீங்கன்னு தான் விட்டேன். :)
உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...
Post a Comment