Friday, July 15, 2011

எலிக்கோவில் ......... (ராஜஸ்தான் பயணத்தொடர் 35)

கர்னி மாதா கோவிலுன்னு சொல்லாம, எலிக்கோவிலுன்னு சொன்னால் வெள்ளைக்காரப் பயணிகளுக்குச் சட்னு புரிஞ்சுருது. 'அது என்னடா அதிசயம்?'ன்னு இந்தப் பக்கம் வந்து எட்டிப் பார்த்துட்டுத்தான் போறாங்க.

புகழ் பரவப்பரவ, ஜோத்பூர் ராஜா, ராவ் ஜோதாகூட கர்னி மாதாவை ஜோத்பூருக்குக் கூட்டிப்போய் தான் புதுசா கட்ட இருக்கும் கோட்டைக்கான இடத்தை ஆசீர்வதிக்கச் சொல்றார். இந்த மாதாதான் அஸ்திவாரம் போட முதல் கல்லை எடுத்துக் கொடுத்தாங்களாம்.

1454 வது வருசம் கர்னி மாதாவின் கணவர் இறந்துட்டார். தங்கையின் நாலு பிள்ளைகளோடு இவுங்க இருந்தாலும் அடிக்கடி தவம் செய்ய ஒரு குகைக்குப் போயிருவாங்களாம். இப்படி இருக்க, 1463 வது வருசம் பக்கத்தூர் திருவிழாவுக்குப் போன தங்கையின் கடைசிப்பையன் லக்கன் அங்கே ஒரு குளத்தில் குளிக்கும்போது மூழ்கி இறந்துடறான். அவன் சவத்தைக் கொண்டுவந்து அக்கா கர்னிமாதாவின் முன்னால் போட்டுட்டு அவனை எப்படியாவது உயிர்ப்பிச்சுக் கொடுக்கணுமுன்னு தங்கை குலாபி வேண்டிக்கிட்டுக் கதறி அழறாங்க.

கர்னிமாதா யமனிடம் உயிரை மீண்டும் தரும்படிக் கேட்க, யமன் சொல்றான். ' ஐ ஆம் ஸாரி. அந்த உயிர் ஏற்கெனவே பூலோகத்தில் வேற இடத்துலே பிறந்துருச்சு. என்னாலே இனி ஒன்னும் செய்ய முடியாது'ன்னு:(

கர்னிமாதாவுக்கு கோபம் வந்துருச்சு. 'ஓக்கே..... இனி என் வம்சாவளியில் பிறந்த யார் உயிர் போனாலும் அவுங்களை வேறெங்கும் பிறக்க வைக்க உனக்கு ரைட்டு இல்லை. அந்த உயிர் எலிகளா மறுபிறவி எடுத்து இங்கே என்னுடன் கூடவே இருக்கட்டும்' ன்னு சொல்லிவச்சாங்க யமனிடம்.

இப்படிப் பிறந்த எலிகள்தான் இந்தக் கோவில் முழுசும் ஓடிப்பிடிச்சு விளையாடிக்கிட்டு இருக்குதுங்க. உலகத்துலேயே எலிக்கோவிலா இருப்பது இது மட்டுமே! ( மற்றபடி மதுரா வ்ருந்தாவன் கோவில்களில் கருவறையில் எட்டிப்பார்க்கும் எலிகள் கணக்குலே வராது, கேட்டோ!)

இருபதாயிரம் எலிகள் வரை இங்கே இருக்குன்னு ஒரு கணக்கு. அதுகள் ஓடி ஒளியத் தோதா அங்கங்கே சுவர்களில் கொஞ்சம் ஓட்டைகள் வச்சுருக்காங்க.
1538 வது வருசம் தன்னுடைய 151 வது வயசில் கருவறைக்குப் பக்கம் வந்து அப்படியே மறைஞ்சுட்டாங்களாம் மாதா. இறுதிச் சடங்குக்கு உடல் இல்லாமப் போயிருச்சுன்னு சொல்றாங்க.

கிராமங்களில் கதைகளுக்கா பஞ்சம்? அதுவும் இது ஐநூறு வருசப் பழசுன்றதால் ஒவ்வொருவர் வாயிலிருந்தும் புறப்படும்போது கண்ணு மூக்கு வச்சு, கொஞ்சம் மசாலா சேர்த்து........ இப்போ ஏகப்பட்ட வெர்ஷன்ஸ்!!!

கடவுள் என்பதே ஒரு நம்பிக்கைதானே? கர்ணி மாதாவும் நம்பியவர்களைக் கைவிடுவதில்லை என்பது வந்து போகும் பக்தர்களைப் பார்த்தாலே தெரியுது!
வெள்ளிக்கதவைக் கடந்து விசாலமான வெளி முற்றத்துலே நுழையறோம். கண்ணுக்கு எதிரா இன்னொரு உள் முற்றம் தெரியுது., அதுலே நடுவில் உயரம் குறைவா சின்னதா ஒரு சந்நிதி. இந்த சந்நிதிகூட கர்னிமாதா தானே தனக்குக் கட்டிக்கிட்டதுதானாம். சந்நிதிக்குப் பக்கத்தில் போகவிடாமல் கம்பித்தடுப்பு நீளமா இருக்கு.
நம்மிடம் இருந்த லட்டுகள் இருக்கும் காகிதக் கவரை தடுப்புக்குள் இருக்கும் கோவில் ஊழியர்கள் ( சின்னப்பூசாரிகள்?) கைநீட்டி வாங்கி அதுலே இருந்து சில லட்டுகளை தடுப்புக்குள் இருக்கும் அண்டாக்கள் ஒன்றில் போட்டுட்டு மீதி லட்டுகளை நம்ம கையில் கொடுத்துடறாங்க. தேங்காய் கொண்டு வரும் பக்தர்களிடமிருந்து வாங்கும் தேங்காயை உடைக்காம வாங்கி வச்சுடறாங்க. அது ஒரு குவியலாக் கிடக்கு ஒரு பக்கம். நாம் கருவறையை வலம் வர்றோம். அங்கே சுவரின் ஓரமாத் தரையெங்கும் லட்டுத்தூள் சிதறிக்கிடக்கு. அங்கங்கே எலிகள் சில கொறிச்சுக்கிட்டு இருக்குதுகள். நம் பங்குக்கு நாமும் ஒரு லட்டை உடைச்சு அங்கங்கே போடறோம். அசுவாரசியமா ஒன்னு வந்து வாய் வச்சது. என்னதான் லட்டுன்னாலும் பொழுதன்னிக்கும் இதையே தின்னா அதுகளுக்கும் போரடிக்காதா? பாவம்.........
தரையெல்லாம் கருப்பும் வெள்ளையுமா மார்பிள் டைல்ஸ் போட்டு வச்சுருக்காங்க. கருப்பு எலி இருப்பதே சிலசமயம் கண்ணுக்குத் தெரியலை. எங்கியாவது மிதிச்சுக்கிதிச்சு வச்சுடப்போறோமேன்னு கவனமா காலடி எடுத்து வச்சு நடந்தேன். இந்த எலிகள் நம்மீது பட்டால் நமக்கு அதிர்ஷ்டமாம். அதுக்காக மிதிச்சா வைக்கமுடியும்? ஒருவேளை அதே வந்து நம்மீது படட்டுமுன்னு கையை நீட்டி இருக்கலாமோ?

இந்த எலிகள் கொஞ்சம் நீளமான உடலோடு இருக்குதுகள். எல்லாம் கிட்டத்தட்ட ஒரே அளவு. 17 இல்லை 18 செ,மீ நீளம். கருவரையை வலம் வந்து கம்பித்தடுப்பில் சாய்ஞ்சு மூலவர் முன் நிக்கறோம். அங்கே பெரிய தட்டுகளில் லட்டூஸ் வச்சுருக்காங்க. ஒன்னுரெண்டு எலிகள் அதன்மேல் நடந்து போய்க்கிட்டு இருந்துச்சு. இருபதாயிரம் எலிகள் வரை இருந்ததாம். இப்போ எலிகள் எண்ணிக்கை குறைஞ்சு போயிருக்கு. சீக்கோ என்னவோ...... அப்படி ஆரோக்கியமா இருப்பதுபோல் தெரியலை

கர்ணி மாதா நிஜமாவே கருணை உள்ளவள்தான். அவளுடைய வம்சம் இப்படி எலியா இல்லாம பாம்பா இருந்துருந்தால்...... ஐயோ நினைச்சுப் பார்க்கவே முடியலை! .

மாதா ரெண்டரை அடி உயரச் சிலை. தலையில் சின்னதா ஒரு க்ரீடமும் கையில் திரிசூலமும் ஏந்தி நிக்குது.. இந்த எலிக்கூட்டத்தில் வெள்ளை எலி உங்க கண்ணில் பட்டால் விசேஷமாம். நம்ம கண்ணில் அப்படி ஒன்னும் படலை. அதுக்காக விட்டுற முடியுதா? வெளியே கடையில் ஒரு ஒரிஜினல் மூலவர் படம் வாங்கிவந்தேன். அதுதான் கீழே இருக்கு. தட்டில் ஒரு வெள்ளெலி தெரியுதா? உங்களுக்கு(ம்) குட் லக்.
மூலவர்

பிகானீர் மஹாராஜா கங்காசிங் இந்தக் கோவிலைக் கட்டிக் கொடுத்துருக்கார். முழுக்க பளிங்கு! பதினாறாம் நூற்றாண்டில் மாதா மறைஞ்சதும் கட்டியது இது. கோவில் விதானத்தில் நவகிரகங்களுக்கான அதிபதிகளை அவரவர் வாகனங்களோடு வரைஞ்சு வச்சுருக்காங்க. சனி எருமை வாகனம் வச்சுருக்கார்!
நவகிரக விதானம்

பலவருசங்கள் கழிச்சு இன்னொரு மஹாராஜா கஜ் சிங் கோவிலுக்கான வெள்ளிக் கதவுகளை செஞ்சு கொடுத்தார். ரொம்ப அழகான பெரிய கதவுகள். அதில் உள்ள மாதா உருவங்களோடு மாதாவின் அம்சமான மற்ற தேவிகளும் இருக்காங்க. வீணையுடன் சரஸ்வதி உண்டு. எலிகளும் பார்டர் போட்டுருக்கு.


அங்கங்கே எலிகளுக்குப் பெரிய தாம்பாளத்தட்டுலே பால் தானியங்கள்ன்னு வச்சுருக்காங்க. போற போக்குலே கொஞ்சம் குடிச்சுட்டு, கொறிச்சுட்டுப் போகுதுங்க. வெளி முற்றத்தில் பெரிய வாணலியில் கோவிலுக்கான பிரசாதம் தயாரிக்கிறாங்க. ரவை போட்டு (கேஸரி) அல்வா மாதிரி ஒன்னு. எரியும் அடுப்பைப் பொருட்படுத்தாமல் எல்லா இடங்களிலும் எலிகள் நடமாடுது. இதே பிரசாதம் கோவிலுக்கு வெளியில் பக்தர்களுக்காக விநியோகிக்கறாங்க.
பிசாதம் செஞ்சு தட்டுலே வச்சுருக்காங்க

பிரசாத விநியோகம்

கோவிலுக்குள்ளே இருக்கும் இன்னும் சில சந்நிதிகளுக்கான கட்டிடங்களின் வெராந்தாவில் கலர்ஃபுல்லான உடைகளில் மக்கள் கூட்டம். சுத்துப்பக்கம் அம்பது அறுவது கிலோமீட்டர் தூரம் நடந்துவந்த பக்தர்களா இருக்கணும்.
நாம் உள்ளே நுழையும்போதே கெமெராவுக்கான கட்டணம் கட்டும் விவரம் கேட்டதுக்கு உள்ளே ஆள் இருக்குன்னாங்க. யாரையும் காணலை. வெளிவரும் சமயம் ரசீது புத்தகத்தோடு ஒருத்தர் பறந்து வந்தார். இருபது ரூ.தான்.

புனித எலிகளின் சரித்திரம் தெரியாமல் பருந்து வந்து கொத்திக்கிட்டுப் போயிட்டால்............. கோவில் முழுக்க மேலே வலை போட்டு மூடி இருக்காங்க. நமக்கும் வெய்யிலின் கடுமையில் இருந்து கொஞ்சம் தப்பிக்க முடியுது.

'இந்தக் கோவில் பார்க்கத்தானே இந்த டூரே வந்தே?'ன்னார் கோபால். ஆமாம்ன்னு தலை ஆட்டினேன். நம்ம கோகியும் கப்புவும் இப்போ இருந்தால் இந்த எலிகளைப் பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டு(??!!)ருப்பாங்க. அதான் அவுங்க சார்பில் இந்த பூனைச்சட்டை:-)))))

தொடரும்............:-)


27 comments:

said...

டிவி யில் இரண்டுதடவை பார்த்திருக்கிறேன். நேரில் பார்த்தால் எப்படி இருக்கும் என நினைத்ததுண்டு.

உங்கள் பயணத்தில் இன்று பார்த்தாகிவிட்டது.குட்லக் தர்சனமும் கிடைத்தது :) நன்றி.

said...

//கர்ணி மாதா நிஜமாவே கருணை உள்ளவள்தான். அவளுடைய வம்சம் இப்படி எலியா இல்லாம பாம்பா இருந்துருந்தால்//

அக்கா... ஏன் இப்படி?.. நல்லாத்தானே போயிட்டிருந்தது :-))

//என்னதான் லட்டுன்னாலும் பொழுதன்னிக்கும் இதையே தின்னா அதுகளுக்கும் போரடிக்காதா?//

என்ன இருந்தாலும் நம்மூர் கோயில்கள் மாதிரி வெண்பொங்கல், சர்க்கரைப்பொங்கல்,வடை(மசால் வடையை ஞாபகப்படுத்தலை :-))புளியோதரைன்னு வெரைட்டி காமிக்க முடியுமா. இந்த விஷயத்துல நம்மூர் கோயில்களை அடிச்சுக்க ஆளே கிடையாது :-))))

said...

உங்க புண்ணியத்தால் நாங்களும் வெள்ளை எலியை பார்த்துவிட்டோம் துளசி மேடம்(படத்துலதான்).
அழகான படங்களுடன் அருமையான பதிவு..

said...

குட் லக் க்கு நன்றி..
:) 20,000 எலில ஒன்னைக்கூட மிதிக்காம நடந்து வந்தீங்களா பரவாயில்லையே.. பிரசாதங்களை எப்படி எலிகிட்ட இருந்து காப்பாத்தறாங்க..எதொ மனசுக்கு அது தான் கொஞ்சம் யோசனையா இருந்தது.

said...

padangal arumai

said...

கமலின் விக்ரம் படத்தில் இந்த கோவிலைப் பார்த்ததாக ஞாபகம்.
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

said...

படங்களும் தகவல்களும் அருமை. இராஜேஸ்வரி சொன்னதும் லேசாக பார்த்த நினைவு வருகிறது விக்ரம் படத்தில்.

ஒரு எலியைப் பார்த்தாலே நடுக்கம். இத்தனை எலிகள் மொத்தமாய்..:)!

said...

வாங்க மாதேவி.

இந்தக் கோவிலில்தான் எல்லா நாட்டினரையும் உள்ளே விடுறாங்க.

நம்மூர்லே இருக்கு பாருங்க 'இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே வரக்கூடாது'
அதெல்லாம் இல்லை!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

அடடா.... உங்களுக்கு அத்திம்பேர் விஷயம் தெரியாதா??????/

பா** என்றாலே அலறுவார்:-)))))

பிரசாதம்..... அதென்னவோ உண்மைதான். வடக்கே சக்கரை மிட்டாய் ஒன்னு தர்றாங்களே..... ஐயோன்னு இருக்கும்:(

said...

வாங்க ராம்வி.

அது நம்மேலே விழுந்தால் இன்னும் 'விசேஷம்' கேட்டோ!!!!

said...

வாங்க கயலு.

அந்த இருபதாயிரமும் ஒன்னா வர்றதில்லை. ஷிஃப்ட் டூட்டியோ என்னவோ!

பிரசாதம் எல்லாம் எலி தின்ன மிச்சம்தான் மக்களுக்கு:(

said...

வாங்க சமுத்ரா.

நன்றி.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

விக்ரம் படம் நான் இன்னும் பார்க்கலை.

பார்க்கலாம், சிடி கிடைக்குதான்னு.....

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அதெல்லாம் ஷிஃப்ட் ட்யூட்டிப்பா. ஒன்லி ஒரு 200 அட் அ டைம்:-))))

said...

//அடடா.... உங்களுக்கு அத்திம்பேர் விஷயம் தெரியாதா??????//

தெரிஞ்சதாலதானே அந்தக்கூப்பாடே போட்டேன்.. இப்படி அவரை பயமுறுத்திப்பார்க்க ஆசைப்படலாமா :-))))))))))

பூனாவுல நீங்க கொன்ன பாம்புக்காக எங்க நாகராஜர்கிட்ட பிராயச்சித்தம் செய்யவந்ததும் எனக்கு தெரியுமே
:-)))))

said...

ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை போல் வெள்ளை எலி பார்க்க முடிய வில்லையென்று படத்திலாவது பார்க்கலாம் என்று வாங்கி வந்து விட்டீர்களா .

படங்கள் ஒவ்வொன்றும் நேரில் பார்த்தது போல் உள்ளது ,நன்றி சகோ ..

said...

கோவில் சொல்லும் ஸ்தல புராணம் உண்மைன்னு நம்பி சாமி கும்பிடுறதுல ஒரு தனி சுகம் உண்டு. நம்ம அறிவை உறைகல்லா வைக்காம முழுசாக இறைவனை சரணாகதி செய்வது தானே பக்தி.

said...

ஆஹா..... நினைவு இருக்கா அமைதிச்சாரல், அந்த சரித்திர நிகழ்வு:-))))

said...

வாங்க எம்.ஆர்.

அதிர்ஷ்டம் அப்படியாவது வரட்டுமேன்னுதான்:-))))

said...

வாங்க fieryblaster.

புதுசா இருக்கீங்களே. முதல் வரவுக்கு நன்றி.

உண்மைதான். சரணாகதிதான் நல்லது. ஆனால் இந்த மனக்குரங்கு இப்படி ஆட்டி வைக்குதே!!!!

said...

எலிக் கோவில்.... முன்பே இந்த கோவில் பற்றி படித்திருக்கிறேன்...

இருந்தாலும் உங்கள் வார்த்தைகளில் படிக்கும் போது அப்படி ஒரு சுவாரசியம்... நாலு எலிகளோடு விளையாடியது போல :))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நாலுதானா? ரொம்பக் குறைவாச்சே!

ஒரு நானூறுன்னா தேவலையா:-))))

said...

//துளசி கோபால் said...
வாங்க மாதேவி.

இந்தக் கோவிலில்தான் எல்லா நாட்டினரையும் உள்ளே விடுறாங்க.

நம்மூர்லே இருக்கு பாருங்க 'இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே வரக்கூடாது'//



அப்படின்னு போட்டு இருக்காங்க.. ஆனா யாரும் பின்பற்றுவதைபோல தெரியவில்லை. எடுத்துக்காட்டு சென்னை மயிலை கபாலீஸ்வரர்



வெளிநாட்டு காரங்களுக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். ஆமா! ப்ளேக் நோய் வந்த போது என்ன ஆச்சு?

said...

விக்ரம் படத்துல வர்றது இது தானோ... எலி தட்டு சுற்றி சாப்பிடும் படம் அருமை

said...

வாங்க கிரி.

மயிலை கபாலியில் வெளிநாட்டு அன்பர்கள் வெளிப்பிரகாரம் வரை வரலாம். சாமி தரிசனம் அவுங்ஜளுக்கு இல்லை. வெளியே சுத்திப் பார்த்து படம் எடுத்துக்க ஒரு கட்டணம் வசூலிக்கிறாங்க கோயிலில்.

said...

வாங்க மாய உலகம்.

விக்ரம் படம் நான் பார்க்கலையே:( இந்தியாவிட்டுப் போனதால் மிஸ் ஆன படங்களில் இதுவும் ஒன்னு.

அந்த எலிப்படம் ......... நல்லா இருக்குல்லே!!!! சுட்டபடம் சூப்பரா இருக்கு:-)

said...

//என்னதான் லட்டுன்னாலும் பொழுதன்னிக்கும் இதையே தின்னா அதுகளுக்கும் போரடிக்காதா? பாவம்.........//

ஆமான்கா பாவம் அதுங்களுக்கு டயபடீஸை குடுக்கிறாங்களோ :(
லட்டுக்கு பதில் கொறிக்கின்ற நட்ஸ் பழங்கள் வடை தரலாமே .

//அவளுடைய வம்சம் இப்படி எலியா இல்லாம பாம்பா இருந்துருந்தால்...... ஐயோ நினைச்சுப் பார்க்கவே முடியலை!//

ஹாஆஹா :) நல்லவேளை கரணி மாதா அப்படி எதுவும் வேண்டிக்கொள்ளலை :)

எனக்கு எலிகளை ரொம்ப பிடிக்கும் ..கோகி கப்பு மாதிரிதான் எங்க ஜெஸியும் மல்ட்டியும் :)
வீட்டுக்கு பின்பக்கம் கார் சீட் செய்றா பாக்டரி இதுங்க அடிக்கடி அங்கே விசிட் விட்டு அரைகுறை உயிரோட தூக்கிட்டு வருவாங்க எலிகளை .நானா அதுங்களுக்கு ஆன்டிசெப்டிக் போட்டு பத்திரமா புதர்ல விட்ருவேன் ..

இந்த கோயில் பத்தி 2003 ல ஜெர்மனில பார்த்தேன் ..வெள்ளைக்காரங்களுக்கு ஆச்சர்யம் தடவிட்டெல்லாம் போனாங்க :)