Friday, July 15, 2011

தொலைநோக்குப் பார்வையில் வச்ச பெயரோ? ......... ((ராஜஸ்தான் பயணத்தொடர் 33)

உமெய்த் பவன் பேலஸ். இது என்னடா ஆர்யபவன், அஷோக் பவன், கிருஷ்ணா பவன்னு ஹொட்டேல் மாதிரிப் பெயர்? ஜோத்பூர் மஹாராஜா உமெய்த் சிங் Umaid Singh அவர்கள் கட்டுனது. கட்டி முடிக்க 15 வருசமாச்சாம். 26 ஏக்கர் தோட்டத்துக்கு நடுவில் கம்பீரமா நிக்குது 347 அறைகளோடு! ராஜாவோட வீடான இதில் ஒரு 64 அறைகளை எடுத்துக்கிட்டு தாஜ் ஹொட்டேல் பணம் பண்ணிக்கிட்டு இருக்கு இப்போ. எவ்வளவு தொலைநோக்குப் பார்வை பாருங்களேன் இந்த பெயர் வைக்கும் விஷயத்தில்!!!! (நம்ம ராஜ் பவன், கிஸான் பவன், விஞ்ஞான் பவன், ரயில் பவன் எல்லாம் இந்தக் கணக்கில் வராது, கேட்டோ!)
மீதி இருக்கும் அறைகளில் கொஞ்சம் ஒரு ம்யூஸியமா சுற்றுலா மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துது. இன்னும் பாக்கி இருக்கும் அறைகளில் அரசர் குடும்பங்கள் வசிக்கிறாங்க.
நுழைவுக் கட்டணம் ஒரு சின்னத் தொகைதான். பத்து ரூபாய் என்று நினைவு. ஆனால் கேமெராவுக்குக் கட்டணம் இல்லை! பெரிய கூடத்தில் நுழைஞ்சதும் வழக்கமான மன்னர்கள் தலைமுறை, அவர்கள் வேட்டையாடிய விலங்குகளுடன் எடுத்துக்கொண்ட படங்கள் இப்படி அவ்வளவா சுவாரசியமில்லாதவைகளைக் கடந்தால் இந்த மாளிகையின் மாடல் சட்ன்னு கண்ணைப்பிடிச்சு இழுத்துச்சு. ஹப்பா............. என்ன ஒரு பிரமாண்டம்!!! பாலில் கலந்த போர்ன்விடா நிறம் பார்க்கவே பரிசுத்தமா இருக்கு!
அடுத்த ஹாலில் மன்னரின் சொந்தக் கலெக்ஷனா இருக்கும் கண்ணாடிச் சாமான்கள்........ அழகோ அழகு. வெளிநாட்டில் பல ம்யூசியங்களில், Bபோன் ச்சைனாவில் செய்யப்பட்ட சிலைகளையும் பொம்மைகளையும் நிறையப் பார்த்த அனுபவத்தால் கடந்து போனப்ப.........குடம்! கண்ணாடிக் குடம். அதுவும் நம்மூர்லே தவலைன்னு சொல்வோம் பாருங்க அந்த வடிவத்தில்! ஹைய்யோ!!!!!!நான் இதுவரை பார்த்ததே இல்லை அதுலே அசல் தங்கத்துலே பூக்களும் சித்திரங்களும்.
ராஜா வீட்டு சிட்டிங் ரூம், டைனிங் ரூம் ட்ரெஸ்ஸிங் ரூம், ஆஃபீஸ் ரூம் உள்அலங்காரத்தையும் பார்க்கலாம். அடுத்த முற்றத்தினுள் புகுந்து புறப்பட்டால் இன்னுமொரு தனிச் சேகரிப்பு..... பித்தளை, செம்பு போன்ற உலோகத்தால் செய்யப்பட்ட கப்பல்கள், ரயில் இஞ்சின்கள், கார்கள், கால மானிகள், கடிகாரங்கள், குதிரைகள் பூட்டிய தேர்கள் இப்படி ஏகப்பட்டவை! ராஜா நல்ல ரசிகர்! ம்யூஸியம் பூட்டும் நேரமாகியதால் மனசில்லா மனசோடு கிளம்பினேன். ஒவ்வொரு முற்றமும் அதையொட்டின வெராந்தாக்களுமா பார்க்கவே அட்டகாசமா இருக்கு!
அறைக்குத் திரும்பும் வழியில் ஏகப்பட்ட ராணுவ அமைப்புகளையும் டாங்கிகளையும் பார்த்தோம். நட்பு இல்லாத அண்டைநாட்டின் காரணம் எப்பவும் ஒரு பதற்ற நிலையிலேயே இந்த ஊர் இருக்கு போல:(


நம்ம அறைக்கு முன் இருக்கும் புல்வெளி, இரவுக்கான கொண்டாட்டத்துக்குத் தயாராகிக்கிட்டு இருக்கு. முதலில் ஹொட்டேலையொட்டி இருக்கும் ஷாப்பிங் செண்டருக்குப் போய் ஒரு பார்வை பார்த்துக்கணும். காலையில் நாம் கிளம்பும் நேரத்துக்குக் கடைகள் திறக்க வாய்ப்பில்லை. அரைமணியில் சட்னு ஷவர் எடுத்துக்கிட்டுக் கடைக்குப் போனோம். கைவினைப்பொருட்கள் கொட்டிக்கிடக்கு. குவியல் குவியலா...... விலையும் அதிகம் இல்லை. நியாயமான விலையாகத்தான் எனக்குப் பட்டுச்சு. இந்த வருசக் கொலுவுக்கு ( இப்படி ஒரு சாக்கு!) சில பொம்மைகளை வாங்கிக்கிட்டேன். அங்கே இருந்த வளையல் கடைக்குள் நுழைஞ்சவ...... ஒரு நாலைஞ்சு செட் வளையல்கள் வாங்கும்படியாச்சு. எல்லாம் மகளுக்குத்தான். இவ்வளவு அருமையான வேலைப்பாடுள்ளவைகளை நான் இதுவரை வேறெங்கேயும் பார்த்ததா நினைவில்லை. பெண்கள் சமாச்சாரமே கடை முழுசும்:-) கூட்டம் நெரியுது.
நாங்க திரும்ப அறைக்கு வந்துட்டு சாப்பிடப் போனோம். மங்கிய ஒளி. புல்வெளியில் பாட்டுக்கச்சேரி நடக்குது. இந்தப் பக்கத்தின் பாரம்பரிய இசை. தலைப்பாகை கட்டிய கலைஞர்கள் வாசிச்சுக்கிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம் பொம்மலாட்டம். ஜோத்பூர் ஸ்பெஷலா அலங்காரக் காலணிகள், ஒட்டக பொம்மைகள் ன்னு புல்வெளியில் கடை பரப்பி வச்சுருக்காங்க. வெளிநாட்டுப் பயணிகள்தான் அவுங்க டார்கெட். நமக்குப் பிரச்சனை இல்லை. வேடிக்கை மட்டும் :-)

உதய்பூரில் இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சிகளுக்குன்னே தனியா ஒரு தியேட்டர்வச்சு கலைநிகழ்ச்சி நடத்தறாங்க. அங்கே போகணுமுன்னு முடிவு செஞ்சுருந்ததை காங்கோர் திருவிழா காரணம் மாத்தவேண்டியதாப் போச்சு. எனக்கு இந்த பொம்மலாட்டம் மேலே ஒரு மோகம் இருக்கு. நாங்க பூனாவில் இருந்தப்ப, அந்தப் பக்கங்களில் பத்துநாளாக் கொண்டாடும் கண்பதி விழாவில் அங்கங்கே பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். அப்போதையக் காலக்கட்டங்களில் பிரபலமா இருக்கும் ஹிந்திப் பாட்டுக்கு ஒவ்வொன்னும் குலுக்கி, நடந்து, சுற்றின்னு ஆடும் பாருங்க.......சூப்பர்தான்.
என்ன ஒரு அழகான கலைன்னு நினைச்சு வியப்பு. குஜராத் பயணத்தில் ஆமடாவாடில் ஒரு ரெஸ்ட்டாரண்டில் பொம்மலாட்டம் பரவாயில்லாம நல்லாவே இருந்துச்சு. ஆனால்.....இங்கே ரொம்ப சுமார். பாட்டு, கொட்டு, பீப்பீன்னு ஒன்னும் இல்லாம ஒரு முதியவர் மஞ்சத் தலைப்பாகையுடன் விஸில் ஒன்னு வச்சுக்கிட்டு ஊதி ஊதி பொம்மைகளை ஆட்டுவிச்சார். அதான் சொன்னேனே...... வெள்ளைக்காரர்கள்தான் டார்கெட் என்பதால் ஹொட்டேல் நிர்வாகம் அவ்வளவா பொருட்படுத்தலை போல. ஒருவேளை இவர் ரொம்ப 'நலிவுற்ற கலைஞரோ' என்னவோ?

டின்னருக்கு நல்ல கூட்டம்தான். நாங்களும் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு அறைக்குப் போனோம். நம்ம திட்டத்தின் படி ஜெய்ஸல்மீர் அடுத்த ஸ்டாப். ஜோத்பூரில் இருந்து வடமேற்கா 267 கிமீ பயணம். பாலைவன ஏரியா. சூடு இன்னும் அதிகம். எனக்கும் உடம்பு அவ்வளவா சரி இல்லை. இதெல்லாம் காரணமா வச்சு, ஏற்கெனவே அங்கே பதிவு செஞ்சுருந்த ஹொட்டேல் புக்கிங்கை கேன்ஸல் செஞ்சோம். இங்கிருந்து நேரா பிகானீர் வழியா ஒரு நாள் முன்னதாவே சண்டிகர் திரும்பப் போறோம்.

பிகானீருக்கும் 250 கிமீ பயணம் இருக்கு. கோபாலுக்குத்தான் பாலைவனம் பார்க்க முடியலையேன்னு ரொம்ப மனக்குறை. அதான் துபாய், ஓமான் போனப்பப் பார்த்தீங்களே, அப்படித்தான் மணலா இருக்குமுன்னு அடிச்சுவிட்டேன்:-)

தொடரும்..........................:-)

21 comments:

said...

பொம்மலாட்டம் புடிக்குமா உங்களுக்கும்.... ஜெய்ப்பூர்-ல எடுத்த பொம்மலாட்ட வீடியோ உங்களுக்கு மெயில்ல அனுப்பறேன்...

said...

அருமையான பதிவு.

said...

கண்ணாடிக் குடம் தங்கத்திலே சித்திரங்கள் வியக்கத்தான் வைக்குது.

உலோகக் கப்பல்,கடிகாரங்கள் என அனைத்தும் அசத்தலான பொருட்களாகவே இருக்கிறது.

said...

மிகவும் அருமையான பதிவு.படங்கள் மிக அழகு அதுவும் அந்த கண்ணடி குடம் சூப்பர்,துளசி மேடம்..

said...

சார். உங்களை போல பயண தொடர் எழுதும் நண்பர்களின் பிளாக் முகவரி இருந்தால் கொடுங்களேன்,
அருமையாக உள்ளது உங்கள் படைப்பு

said...

thulasikka,
valaiyal padam podalaiyae? ennaku antha vaelaipadulla valaiyal paakkanum pola irukku.

said...

கண்ணிலே கலை வண்ணம் கண்டேன்..

அருமை.. அருமை...

said...

கண்ணாடிக்குடம் கண்ணைப்பறிக்குது!!..

அந்தக்கால மகாராணிகளுக்குள்ளும் மாமியார் மருமகள் பிரச்சினை இருந்திருந்தா... மாமியார் உடைச்சா கண்ணாடிக்குடம், மருமக உடைச்சா தங்கக்குடம்ன்னு ஒரு பழமொழியை உருவாக்கியிருப்பாங்களோ :-)))))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரொம்பவே பிடிக்குங்க. அனுப்புங்க காத்திருக்கேன். நன்றி.

said...

வாங்க ரத்னவேல்.

நன்றி.

said...

வாங்க மாதேவி.

'ராசா'வோட 'கலெக்ஷன்' பின்னே கேக்கணுமா!!!!!

said...

வாங்க ராம்வி ( சரியா?)

எனக்கும் ஒன்னு எடுத்து இடுப்பிலே 'சக்' ன்னு தூக்கி வச்சு நடக்கலாமான்னு இருந்துச்சு. ஆனால்.... தடுக்கி விழாம நடக்கணுமே:-)))))

said...

வாங்க கார்த்தி-ஸ்பார்க்.

முதல்முறை நம்ம வுஈட்டுக்கு வந்துருக்கீங்க போல!!! நலமா?

'சார்' இப்படி பதிவு எழுதுனா எனக்கென்ன குறை:-)))))

வலை உலகில் பயணம் ஏராளம். கொஞ்சம் கூகுளிச்சுப் பாருங்க. அப்படியே வந்து கொட்டும். உங்களுக்கு நேரம்தான் இருக்கணும் எல்லாத்தையும் வாசிக்க!!!!

said...

வாங்க தேனிக்காரி.

போன பதிவு சமாச்சாரத்துக்கு இந்தப் பதிவில் பின்னூட்டமா!!!!!

அதுலே வளையலைச் சேர்த்துவிட்டுருக்கேன் உங்களுக்காக. நடுவில் இருக்கும் சிகப்பு & பச்சை.

said...

வாங்க மாய உலகம்.

புது வரவுக்கு நல்வரவு.

நன்றிகள். மீண்டும் வருக!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

புது மொழி ப்ரமாதம்! அப்பவும் மாமியார்தான் ரொம்ப காஸ்ட்லி, இல்லை:-))))

said...

kannadi kudamkaga log in panni indha comment teacher.. (amama naan innum poramai theeyila thaan vendhukitu irukken, innum ethana maasathukku ipdi?! NZ pavam illaiya? :P)

bhavan nu peru vachudhukku yen ungluku ithanai aacharyam nu mattum thaan enakku vilangalai.. :-|

said...

வாங்க பொற்கொடி.

ஆஹா...... கண்ணாடிக்குடம் உங்களை இங்கே இழுத்துவந்துச்சா? பார்த்தும்மா.... கால் தடுக்கிடப் போகுது:-))))))

அங்கே எங்கூர்லே நிலநடுக்கம் வந்து இன்னும் அடங்கலை. இதுவரை எட்டாயிரம் ஆஃப்டர்ஷாக்ஸ்.

இந்த அழகுலே நான் போனா பூமி நடுக்கிடாதா???????

said...

:( pl check email teacher..

said...

எலிக்கோவிலுன்னு சொன்னால் வெள்ளைக்காரப் பயணிகளுக்குச் சட்னு புரிஞ்சுருது. 'அது என்னடா அதிசயம்?'ன்னு இந்தப் பக்கம் வந்து எட்டிப் பார்த்துட்டுத்தான் போறாங்க.
இந்தியாவே அதிசயத்தின் குவியல்தானே

said...

வாங்க அய்யம்மாள்.

புதுவரவா? வணக்கம் நலமா?

நீங்க சொன்னது உண்மைதான். அதிசயங்களைப் பூராவும் பார்த்து முடிக்க நம் வாழ்நாள் போதாது!!!!