மியாவ் மியாவ் பூனை.... மீசை வச்ச பூனைன்னு பூனைச் சொக்கா போட்டுக்கும் என்னப் பார்த்து 'இது ஏது' என்றார் கோபால். இன்னிக்குப் போகும் இடத்துக்காகவே, மறக்காம எடுத்துக்கிட்டு வந்தேன்னேன். 'அடிப்பாவி..............இது ரொம்ப அநியாயம்! பாவமில்லையா?'ன்னார்:-)
காலையில் ஏழுமணிக்குப்போய் 'ராயல் ப்ரேக்ஃபாஸ்ட்' முடிச்சுக்கிட்டு சீக்கிரமாவே கிளம்பணும். அப்படியே இந்த இடத்தையும் கொஞ்சம் சுத்திப்பார்த்துக்கணும். நல்ல பெரிய நீச்சல் குளம், அங்கங்கே ஆசனங்கள். புல்வெளிகள் தோட்டங்கள் பூச்செடிகள் இப்படி நல்லாத்தான் இருக்கு. ஒரு மண்டபத்தில் கோவில்கூட ஒன்னு வச்சுருக்காங்க.
கைவினைப்பொருட்களை புல்தரையில் கடைவிரிச்சுக்கிட்டு இருந்தார் ஒருத்தர். எல்லோரும் அறையைவிட்டு ஊர்சுத்தக் கிளம்புமுன் வியாபாரம் ஆனால் உண்டு........:(
இந்த ஹைவே ( NH65) பரவாயில்லை. காலைப்பொழுது என்பதால் இன்னும் ட்ராஃபிக் ஆரம்பிக்கலை. சின்னச்சின்ன ஊர்களைக் கடந்து வேகமெடுத்துப் போகும்போது கவுந்தடிச்சுக் கிடக்கும் ட்ரக் ஒன்னும் கோதுமை மூட்டைகளுமா சாலையில் இறைஞ்சு கிடக்கு. விபத்துலே திறந்துக்கிட்ட மூட்டைகளில் இருந்து சாலையெல்லாம் கோதுமை மணிகள்:( ஸ்பீடு கில்ஸ், இல்லே?
எப்பவாவதுதான் எதிரில் எதாவது வண்டி. இப்படியே ரெண்டு மணி நேரம் ஆனபிறகு சாலை ஓரத்தில் பெரிய கொட்டகை. சாமிப் பாட்டு முழங்குது. நிறைய மாடுகள் நடமாட்டம். ஸ்ரீ கிருஷ்ண கோபால் கௌஷாலா. நாகோர் (Nagaur) என்ற ஊர். என்னன்னு பார்க்கலாமேன்னு இறங்கினோம். இந்தியாவில் முதல்முதலா ஆரம்பிக்கப்பட்டப் பசுப் பராமரிப்பு நிலையமாம்.
அனாதை(?) பசுக்கள், நோய்வாய்ப்பட்டவை, விபத்தில் சிக்கி உடலுறுப்புகளை இழந்தவை, பால்தரும் பசுக்கள் அவைகளின் கன்றுகள் இப்படி ரெண்டாயிரத்து ஐநூறுபேர் இருக்காங்க. ஒன்பது ஆம்புலன்ஸ் வண்டிகள். தினம் சிகிச்சைக்கு பசுக்களைத் தவிரப் பறவைகளும் மற்ற விலங்குகளும் வருதாம். முழுக்க முழுக்க மக்கள் தரும் நிதிகளைக்கொண்டுத் தன்னார்வத் தொண்டு புரியும் ஆர்வலர்களால் நடத்தப்படுது.
வடக்கே 'கோ மாதா'வுக்கு மதிப்பும் மரியாதையும் இன்னும் இருக்கு. கண்ணாடி அறைக்குள்ளே யாகம் செய்யும் குண்டமும் அதுலே தூங்காத்தீயுமா இருக்கு. நாம் பார்த்துக்கிட்டு இருக்கும்போதே குடும்பம் குடும்பமா வந்து யாகம் செஞ்சுட்டு பசுக்களுக்காக முடிந்ததை தானம் கொடுத்துட்டுப் போறாங்க. கோகுலத்தில் மாடு மேய்ச்சவனுடைய படங்களும் கொட்டகை முகப்பில் மாட்டிவச்சுருக்காங்க.
பிரமாண்டமான வாணலிகள் ஒரு பக்கம். அன்னதானமும் நடக்குது போல. நாமும் பசுக்களுக்கு ஒரு தொகை கொடுத்துட்டுக் கிளம்பினோம். இங்கிருந்து கிளை பிரியும் ஹைவே 89க்குத் தடம் மாறி ஒன்னரை மணிப் பயணம். 83 கிமீ. தேஷ்னொக் (Deshnok) வழியில் பாத யாத்திரையா ஆண்களும் பெண்களும் சிறுவர்களுமா ஒரு பெரிய குழு, கொடி பிடிச்சுக்கிட்டு நடந்து போறாங்க. முன்னால் ரெண்டு மூணு ஆட்டோ ரிக்ஷாக்களில் கொடிகளும் அலங்காரமுமா சாமிப்படங்கள். நடைப்பயணிகளுக்குத் தேவையான தண்ணீர் மற்ற சாப்பாட்டுச் சமாச்சாரங்களுக்காக சின்னதா ஒரு வேன். நாம் போகும் அதே ஊருக்குத்தான் வந்துக்கிட்டு இருக்காங்க. ஸ்ரீ கர்ணிமாதா கோவில். இவுங்களைப் பார்த்ததும் நம்ம ஏ ஆர் ஆரின் திருப்பதி நடைப்பயணம் நினைவுக்கு வந்துச்சு.
ரயில்வே க்ராஸிங்லே காத்திருந்த சமயம் அங்கே நான் கண்ட அழகி. அஞ்சு வயசுக் குழந்தையின் அம்மா! பளிச்ன்னு இருக்காங்க.
இந்த சாலையின் இருபுறமும் பாலைவனம் சமீபிக்கும் அறிகுறிகளா மணல் காடுகள். உங்களுக்காகப் பாலைவனம் வந்துருச்சு பார்த்துக்குங்கன்னேன் கோபாலிடம்:-) ஊர் நெருங்க நெருங்க ஒட்டகவண்டிகளின் நடமாட்டம். இந்த அத்துவானக் காட்டில் திடீர்ன்னு முளைச்சதுபோல் அட்டகாசமான ஒரு பங்களா. அதுக்கு வெளிப்புறம் இருக்கும் காம்பவுண்ட் சுவரில்........... யானைகளோ யானைகள்! பிகானீர் அரச குடும்ப சொத்தாக இருக்கலாம்!
மணல் மேடுகள் அதுலே அங்கங்கே முளைச்சுருக்கும் ஒருமாதிரி முள் மரங்கள் வழி நெடுக........ வண்டியில் இருக்கும் பாரத்தைக்கூடப் பொருட்படுத்தாமல் கழுத்தை உசத்தி இலைக்கொத்துக்கு நாக்கை நீட்டும் ஒட்டகமும் இந்த மொட்டை வெயிலிலும் நிலா வெளிச்சத்தில் நடப்பதுபோல, ரொம்ப சந்தோஷமாப் பேசிக்கிட்டுப் போகும் பெண்கள் கூட்டத்தின் பளிச் உடைகளும் கண்ணை இழுக்கத்தான் செய்யுது!
கோவிலுக்கு ஒரு தெரு முன்பாவே வண்டிகளை நிறுத்திக்கனும். வாகனங்கள் போக முடியாமல் கம்புத் தடை! கண்ணில் முதலில் பட்டவை எல்லாம் மிட்டாய்க் கடைகளே! பூஜைசாமான்களுக்கு அவ்வளவா முக்கியத்துவமில்லை. லட்டுகள் தட்டுகளில் இடம் பிடிச்சுக் குமிஞ்சுருக்கு. விலையோ சல்லீசு. இருபதே ரூபாய்க்குக் கால்கிலோ!
ஒரு இருவது வருசங்களுக்கு முன்னே ஏதோ பிபிஸி எடுத்த டாக்குமெண்ட்ரியில் இந்தக் கோவிலைப் பார்த்துருக்கேன். அப்பவே மனசில் பதிஞ்சுபோய் இருந்துச்சு. ராஜஸ்தான் பயணம் போறோமுன்னு முடிவானதும் மனப்பெட்டியில் இருந்து வெளியில் எடுத்தவைகளில் இந்தக் கோவிலும் ஒன்னு.
ஓட்டமும் நடையுமா கடைகளைக் கடந்து போய் வலப்பக்கம் திரும்பினால் கர்னி மாதா கோவில் கம்பீரமா நிக்குது. கோவிலுக்கு எதிரில் காலணிகளை இலவசமாப் பாதுகாக்கும் இடம். கம்பித்தடுப்பில் நுழைஞ்சு கோவில் வெளிமுற்றத்தைக் கடந்து வாசலுக்குப் போறோம். பிரமாண்டமான வெள்ளிக் கதவுகள். அதுலே கடவுளர்களின் திருவுருவங்கள், சிங்கம் சப்தகன்னியர்(?) இப்படி.
பதினாலாம் நூற்றாண்டில் (1387) கர்னி பாய்ன்னு ஒரு சின்னப் பெண். தெய்வீக சக்தி படைச்சவள். துர்கையின் அவதாரமுன்னே மக்கள் நம்பும்விதமா அற்புதங்கள் நடத்தறாள். ஆறு வயசா இருக்கும்போது பாம்புக் கடிபட்ட தன் அப்பாவைக் காப்பாத்தினாள். பதினாலு வயசுலே இவளுக்குக் கல்யாணம் முடிக்க மாப்பிள்ளை தேடித்தேடி களைச்சுப்போன அப்பாவுக்கு, இந்த இடத்துலே இன்னார் பிள்ளையைக் கேளுங்கோன்னு இவளே சொன்னதும் அதே போல் கல்யாணம் நடந்து முடிஞ்சது.
பொண்ணை டோலியில் வச்சுத் தூக்கிக்கிட்டு மாமியார் வீட்டுக்கும் போய்க்கிட்டு இருக்காங்க. மாப்பிள்ளை குதிரையில் போறார். வழியில் எல்லோருக்கும் தாங்க முடியாத தாகம். தண்ணீரைத் தேடறாங்க. பாலைவனத்துக்குப் பக்கத்துலே தண்ணிக்கு என்ன செய்யறதுன்னு தவிச்சப்ப, கல்யாணப்பொண்ணு ஒரு குறிப்பிட்ட இடத்துலே பார்க்கச் சொல்றாள். அங்கே போய்ப் பார்த்தால் சின்னதா ஒரு குளம். பளிங்குபோல் தண்ணீர். எல்லோரும் குடிச்சுத் தாகம் தீர்த்துக்கறாங்க. மாப்பிள்ளை, அந்த மணப்பெண்ணின் பல்லக்கு(டோலி) அருகில் போய் ரொம்ப நன்றின்னு சொல்லிக்கிட்டே திரையைத் தூக்கிப் பார்த்தால் பெரிய சிங்கத்தின் மேல் சாய்ஞ்சு உக்கார்ந்திருக்கும் துர்கை! பயந்துபோய் கண்ணைக் கசக்கிக்கிட்டுத் திரும்பப் பார்த்தால் கல்யாணப்பெண் பாவம்போல உக்கார்ந்துருக்கு. இதுக்குப்பிறகு அந்த மாப்பிள்ளை என்ன நினைச்சுருப்பார்? பெண்டாட்டியைத் தொட தைரியம் வருமா? இதெல்லாம் நடந்தது 1401 வது வருசம்.
கர்னி பாய், நிலையைப் புரிஞ்சுக்கிட்டு தன்னுடைய சகோதரி குலாபியைக் கல்யாணம் பண்ணிவச்சாங்க தன் கணவனுக்கு. நாலு பிள்ளைகள் அவுங்களுக்குப் பிறந்தாங்க. நாகா, பூனா, ஷீதா, லக்கன் என்று பிள்ளைகளுக்குப் பெயர். கர்னி என்ற பெயருக்கேத்த மாதிரியே ஊர்மக்கள் எல்லோருக்கும் கருணையோடு தேவையான உதவிகள் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. பாம்பு கடிச்சவர்களைக் காப்பாத்துவது, கண் தெரியாமப் போனவங்களுக்குப் பார்வை கொடுப்பதுன்னு அதிசயங்கள். கர்னி பாய் இப்போ கர்னி மாதா. சமாச்சாரம் கேள்விப்பட்ட பிகானீர் மகாராஜா ராவ் பிகா (இந்த நகரின் ஸ்தாபகர்) இவுங்களோட பக்தரா ஆகிறார். இந்த ஊர் தேஷ்நோக் என்பது தஸ் நூக் (ஹிந்தி) என்று அக்கம்பக்கத்துப் பத்துப்பட்டிகளின் மூலைகளில் இருக்கும் நிலங்களால் உருவானதாம். பேச்சுவாக்கில் மருவி இப்போ தேஷ்னோக் ஆகிருச்சு.
தொடரும்.......:-)
Friday, July 15, 2011
கோ மாதாவும் கர்னி மாதாவும்......... (ராஜஸ்தான் பயணத்தொடர் 34)
Posted by துளசி கோபால் at 7/15/2011 03:38:00 PM
Labels: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
எல்லாம் கரெக்டா காமிச்ச அந்தம்மா கணவரையும் கரெக்டா பயந்தாங்கொள்ளியா தேர்ந்தெடுத்திருப்பாங்களோ..:)
பூனைச்சொக்காயை பார்த்து கர்னி மாத்தா கோயில்ல யாரும் பயப்படமாட்டாங்க.. அங்க உள்ளவங்களைப்பார்த்து சொக்காய்ல இருக்கற பூனைங்க பயப்படாம இருந்தா சரி.. ஏன்னா, கோயில்ல 'அவங்க' மெஜாரிட்டியாச்சே :-)))))))
கர்னி மாதா.... ம்ம்ம்.... அன்னிக்கு பயந்து போன ஆசாமி தான் பாவம்... இன்னி வரைக்கும் பயம்தான் அவருக்கு.
கோ சம்ரஷனத்திற்காக இங்கே இருக்கும் அளவிற்கு நிறுவனங்கள் தெற்கே இல்லை என நினைக்கிறேன்.
பூனைச் சொக்காய்... :)
கௌஷாலா இங்கே கோவையிலும் ஒன்று சிறப்பாக இயங்கிவருகிறது. வட இந்தியர்கள் பிறந்தநாள் போன்ற தினங்களில் காணிக்கை அளிக்கிறார்கள்.
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
வாங்க கயலு.
இல்லியா பின்னே!!!! மா(த்)தாவா கொக்கா:-)))))))
வாங்க அமைதிச்சாரல்.
ஆமாம்ப்பா...இருவதாயிரம் கணக்குச் சொல்றாங்களே!
எனக்கு இன்னொரு வியப்பு என்னன்னா..... சின்னப் பசங்க யாருமே கண்ணுலே படலை! எல்லாம் க்ரோனப்.:-))))
ஒருவேளை அடல்ட்டான பிறகுதான் கோவிலில் அட்மிஷனோ!!!!!
வாங்க வெங்கட் நாகராஜ்.
எல்லா ஆண் இனத்துக்கும் சார்பா அன்னிக்கு அவர் பயந்துருக்கார். அன்று முதல்தான் தங்க்ஸைக் கண்டதும் ரங்குஸுகளுக்கு ஒரு மரியாதை (பயம்)ஏற்பட்டிருக்குமோ:-))))))
தெற்கேதான் வயசானா கேரளாவுக்கு எக்ஸ்போர்ட் ஆகிருதே:(
வாங்க இராஜராஜேஸ்வரி.
கோவையில் இருக்கா!!!!! நல்ல சேதிக்கு நன்றி. இன்னும் நிறைய இடங்களில் இப்படி ஏற்படுத்தினால் நல்லது.
கறவை முடிஞ்சதும் கதற வைப்பது நல்லாவா இருக்கு?
பூனை சாம்ராஜ்ஜியம் இருக்கும்னு நினைச்சு பதிவைப் படிச்சேனே:(
படங்கள் எல்லாம் கலர்புல் பா.
பசுக்களைக் காப்பாத்தற புண்ணியம்
அவர்களுக்குக் கிடைத்திருக்கிறதே.
"கோ" பாராமரிப்பு மிக நல்லசெய்தி மகிழ்ச்சியாக இருக்கிறது.
வாங்க வல்லி.
ஆமாம்ப்பா. நல்ல புண்ணியாத்மாக்கள்!
வாங்க மாதேவி,
நன்றிக்கடன் தீர்க்கத்தானே வேணும்.
கோசாலை யில் அந்த கிருஷ்ணர் கண் கன்று அழகு அழகு கொள்ளை அழகு
இந்த ஜீவராசிங்க அனாதைங்க இல்லக்கா சிலரால் அனாதையாக்கப்பட்ட குழந்தைங்க ..கோசாலை நடத்தறவங்களும் நல்லா இருக்கணும் .
5 வயசுக்குழந்தையின் அம்மா நேச்சுரல் பியூட்டி !
ஸ்பீட் கில்ஸ் :( பலரின் வயிற்றுப்பசி தீர்க்கும் உணவையே கொன்னுடுச்சி பாருங்க :(
கர்னி பாய் பற்றி விரிவான தகவல்களுக்கு நன்றிக்கா ..
ஆனாலும் திரைசீலையை தூக்கிப்பார்த்து அந்த மாப்பிள்ளை நிலை பாவம் பயந்துபோயிருப்பாரில்லை :)
நீங்க பதிவிடும் ஒவ்வொரு விஷயமும் அருமை ..நானும் கணவரும் ஒவ்வொருமுறையும் நினைப்போம் நம் நாட்டிலே எவ்ளோ இடங்கள் பார்த்து ரசிக்க இருக்கு .பொண்ணு யூனிவெர்சிட்டி போனதும் விடுமுறையில் இந்தியப்பயணம் போகணும் .
இரண்டு பகுதியையும் வாசிச்சேன் அக்கா ..மிக்க நன்றி
Post a Comment