Tuesday, May 26, 2009

புருசனை அடையாளம் தெரியலையே(-: .........(2009 பயணம் : பகுதி 29)

அத்ரி முனிவரின் மனைவி அனுசூயா. பிரமாதமான அழகி. குணநலன்களைச் சொல்லி மாளாது. மூவுலகிலும் அனுசூயாவைப் பத்தின பேச்சுகள் (எல்லாம் நல்ல விஷயங்கள்) பரவிக்கிட்டே போகுது. சேதி கேட்ட மற்ற பொண்ணுங்க எல்லாம் ஆ....ஊ..... பெருமூச்சு விட்டுக்கிட்டு இருக்காங்க. இன்னொருத்தரை அழகின்னும், அதுவும் ரொம்பவே நல்லவள்ன்னும் கேட்டா எப்படி வயிறு எரியும்? இவதான் பெரிய ஆளா? நாம் மட்டும் என்ன மட்டமா? பெண்ணுங்க சும்மாவே இருக்கமாட்டாங்களாமே..... அது சாமிகளாவே இருந்தாலும் கூட.

ஒரு நாள் பகல் சாப்பாடெல்லாம் ஆனபிறகு பார்வதியும், லக்ஷ்மியும், சரஸ்வதியுமா வம்பளந்துக்கிட்டு இருக்காங்க. 'நாம் மூணுபேரும் எவ்வளோ அழகு, எவ்வளோ அறிவுன்னு இருக்கோம். சாமிகளின் மனைவிகள் என்ற பெத்த பேர் இருக்கு. ஆனாலும் ஒரு மானிடப் பொண்ணைப்படியெல்லாம் மூணு உலகிலும் புகழ்வதைக் கேட்டுக்கேட்டுக் காதெல்லாம் நொந்துபோச்சு. எப்படியாவது அனுசூயாவின் கவுரவத்துக்கு ஒரு இழுக்கு உண்டாக்கியே தீரணும். என்ன செய்யலாமுன்னு ஆளாளுக்கு ஒரு ஐடியாக் கொடுங்க. எது ஒர்க் அவுட் ஆகுமுன்னு யோசிச்சு முடிவு செய்யலாம்.'

மூளையைக் கசக்குனதில் ஐடியா கிடைச்சது. தேவலோகத்துலே அப்சரஸ்களின் நாட்டியம் பார்த்துக்கிட்டு வெட்டிப்பொழுது போக்கும் வூட்டுக்காரர்களுக்கு ஒரு வேலையும் கொடுத்தாப்லெ ஆச்சு.

அவுங்கவுங்க வூட்டாம்பளைக் கூப்ட்டாங்க. 'ஒரு வேலை ஆகணும் உங்களாலே. நீங்க மூணுபேரும் ஒன்னாப் போய் அனுசுயா வீட்டுலே விருந்து சாப்பிட்டுட்டு வரணும்'. ஆஹா.... கரும்பு தின்னக் கூலியா?
'விருந்து பரிமாறும்போது அந்த அனுசூயா, ஒரு பொட்டுத் துணி இல்லாம உங்களுக்கு சாப்பாடு போடணும். போடுவாங்க ......போட்டே ஆகணும். ஏன்னா நீங்க போடும் கண்டிஷன் அப்படித்தான். போயிட்டு வாங்க. (அடிப் பாவிகளா...அனுசூயா மேலே என்ன ஒரு அசூயை பாருங்க.....)

'ஜமாய் ராஜா..... இப்படி நமக்கு ஒரு அதிர்ஷ்டமா'ன்னு சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் குதியாட்டத்தோடு மாறுவேசங்கட்டிக்கிட்டு அத்ரி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தாங்க. முனிவர் வெளியில் எங்கியோ போயிருக்கார். அதிதிகள் வந்து சேர்ந்ததும் முப்பெரும் தெய்வங்கள் நம்ம வீட்டுக்குச் சாப்புட ஒன்னா வந்தாங்களேன்னு அனுசூயா ரொம்ப மகிழ்ச்சியா சமையல் செஞ்சு, இலை போட்டு மூவரையும் சாப்புடக் கூப்புட்டாங்க. (என்னதான் வேசங்கட்டுனாலும் அனுசூயா அம்மா கண்டுபிடிக்காம இருப்பாங்களா? கண்டுபுடிச்சுட்டாங்க. அவுங்க சக்தி அப்படி)

பொண்டாட்டிங்க சொன்னச் சொல்லைத் தட்டாம, நிபந்தனையை எடுத்துச் சொன்னாங்க மூவரும். ஐயோ..... இப்படி ஒன்னா? கவலையே படலை அனுசூயா. தன்னுடைய கற்பின் வலிமையால் மூணு சாமிகளையும் கைக்குழந்தையா ஆக்கிட்டாங்க. பொறந்த பிஞ்சுகளுக்கு நிர்வாணம் என்னன்னு தெரியுமா? அதுகளும் ஜாலியா வயிறு நிரம்பப் பாலைக் குடிச்சுட்டு விளையாடிக்கிட்டு இருக்குதுங்க.

போன புருசன்மாரைக் காணோமே...... எப்படியெல்லாம் அனுசூயாவுக்கு வெட்கக்கேடு ஆகி இருக்கும்! சீக்கிரமா வந்து விலாவரியாச் சொல்லக்கூடாதான்னு இங்கே முப்பெரும் தேவியர் வாசலுக்கும் உள்ளுக்கும் நடந்து புலம்பறாங்க. பொறுமை எல்லை மீறுது. போனேன் வந்தேன்னு வராம எம்மா........ நேரம்? சரி....வாங்க நாம் மூணு பேரும் போய் அங்கே என்ன ஆச்சுன்னு பார்க்கலாமுன்னு அத்ரி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தாங்க. அனுசூயா தாம் பாட்டுக்கு வீட்டு வேலைகளைச் செஞ்சுக்கிட்டு இருக்காங்க (துணிமணியோடதான்). வாசத்திண்ணையில் மூணு குழந்தைகளும் சிரிச்ச முகத்தோடு பாயில் படுத்து உருண்டு விளையாடுதுங்க. 'அட! அனுசூயாவுக்கு ட்ரிப்லெட்ஸ் பொறந்துருக்கா? தெரியாமப்போச்சே'ன்னு பேசிக்கிட்டே வீட்டுக்குள்ளே எட்டிப் பார்த்தாங்க.

வாங்கம்மா தேவிகளான்னு சிரிச்ச முகத்தோட உள்ளே கூப்புட்டாங்க அனுசூயா. எங்க வீட்டாம்பளைங்க இங்கே வந்தாங்களான்னு ஒன்னும் தெரியாதமாதிரி கேக்கவும், ஆமாம். வந்தாங்க. இதோ பாருங்க இவுங்கதான்னு அந்த மூணுக் குழந்தைகளையும் காமிச்சாங்க. அவுங்கவுங்க புருசனை அவுங்கவுங்கத் தூக்கிட்டுப் போங்கன்னாங்க. அடக் கடவுளே..... இதென்னடா அநியாயமா இருக்கு..... அச்சுலே வார்த்து எடுத்தாப்லெ மூணும் ஒரே மாதிரி.... யாரு யாருன்னு தெரியாம யாரைத் தூக்கிட்டுப் போறது? அப்புறம் இதுகளை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ளே நம்ம தாவு தீர்ந்துறாதா?

அவசியமுன்னு வந்தபின்னே.... கௌரவம் பார்த்துக்கிட்டு நின்னா முடியுமா? காரியம் பெருசா வீரியம் பெருசா?
மூணு தேவிகளுக்கும் சட்னு ஒரே யோசனை தோணுச்சு. வாயை மூடிக்கிட்டு அனுசூயாம்மாகிட்டே 'மன்னிப்பு'ன்னு சரண்டர் ஆனாங்க.

அருங்குணங்கள் நிறைந்த அனுசூயா, 'என்னமா ஒரு விபரீத விளையாட்டு விளையாடிட்டீங்க....போனாப்போகட்டும்'னு பெரியமனசு பண்ணி மன்னிச்சு மூணு குழந்தைகளையும் பழைய உருவத்துக்கு மாத்துனாங்க.
தாணு(அரன்), (திரு)மால், அயன் மூணுபேரும் ஒன்னா வந்ததைக் காமிக்க இந்த சுசீந்திரம் கோயிலில் ஒரே சிவலிங்கத்தில் இந்த மூணு தெய்வங்களும் இருக்காங்க. தாணுமாலயன் கோவில். இந்திரன் பெண்ணாசை பிடிச்சுச் செய்யக்கூடாத அக்கிரமங்களையெல்லாம் செஞ்சுட்டு இங்கே வந்து தாணுமாலயனை வணங்கி மீண்டும் சுத்தமாயிட்டானாம். அதான் இந்திரன் சுசி அடைந்த இடமுன்னு இந்த ஊருக்கு சுசி இந்திரன் னு பேர் வந்து சுசி இந்திரமுன்னு ஆகி இப்போ சுசீந்திரம்.
அட்டகாசமான அழகான வெள்ளைக்கோபுரத்தோட கம்பீரமா நிக்குது கோயில். கோயிலுக்குள்ளே கெமெரா அனுமதி இல்லை. மூணு ரூபாய் வாங்கிக்கிட்டு அவுங்களே பாதுகாப்பா வச்சிருந்துத் திருப்பிக்கொடுத்தாங்க.
முதலில் ஸ்ரீதாணுமால்யனைத் தரிசிச்சோம். வலதுபக்கச் சுவரில் அனுசூயா கதையைச் சுருக்கமா(?) எழுதிப் படமாவும் வரைஞ்சு வச்சுருக்காங்க. இப்பவும் இரவு நடுநிசியில் தேவர்கள், தேவர்கோன் எல்லாம் வந்து இவரைப் பூஜிச்சுட்டுப் போறாங்களாம்.( அப்ப ...இந்திரனின் அக்கிரமங்கள் இன்னும் ஓயலை போல!!!) தினமும் இரவு அவுங்க பூஜிக்கத் தேவையான பூஜைப்பொருட்களை கர்ப்பக்கிரகத்தில் வச்சுட்டுக் கோவிலைச் சாத்துவாங்களாம். காலையில் பார்த்தால் இரவு பூசிச்ச அடையாளம் இருக்குமாம். இதுலே என்னன்னா...... ராத்திரி பூஜைப்பொருட்கள் வச்சுட்டுப்போற நம்பூதிரிகள்/ போத்திகள் காலையில் கோவில் திறக்க வருவதில்லையாம். ஷிஃப்ட் போட்டுக்கிட்டு வேற ஒருத்தர் வந்து பூஜை சாமான்களை அகற்றுவாங்களாம். வச்சவரே வந்தால் பூஜை நடந்துச்சா இல்லையா என்ற விவரம் வெளி வந்துருமுல்லே?

மக்கள் மனசுலே உண்டாக்குன நம்பிக்கையை நீட்டிவைக்க இப்படியும் ஒரு வழி கண்டுபிடிச்சவங்களைச் சொல்லணும்:-)))) போகட்டும்...நம்புனாத்தானே சாமியே. இல்லையா? ஆனா ஒன்னு இந்திரனையே மன்னிச்சுச் சுத்தம் பண்ணவர் 'நம்மையும் மன்னிச்சு விட்டுருவார்' ன்னு மக்கள் நினைச்சுக்கப்பிடாது, ஆமாம்.

பொதுவா சிவன் கோவில்களில் நவகிரக சந்நிதிகள் இருக்கும் பாருங்க. இங்கே நவகிரக மண்டபம் இருக்கு. மண்டபத்தின் உட்புறமா இருக்கும் மேற்கூரையில் ஒன்பது கட்டங்களில் நவகிரக நாயகர்களைச் செதுக்கி வச்சுருக்காங்க. அண்ணாந்து பார்த்துக் கும்பிட்டுக்கணும். மண்டபத்தைச் சுத்திவந்துட்டு மேடையில் விளக்குகளை ஏற்றிவச்சு வழிபடும் வழக்கம். மேடை பூராவும் கார்த்திகை தீப விளக்குகள் போல ஜொலிப்பான ஜொலிப்பு. கூடவே எண்ணெய் சிந்திக் கருப்பாவும் இருக்கு(-: சின்னத் தட்டுகளில், சின்னதா ஒன்பது அகல்களை வச்சுத் திரிபோட்டு விக்கறாங்க. வாங்கிக் கொளுத்துது சனம்.

அநேகமா இப்பெல்லாக் கோவில்களிலும் எண்ணெய்/நெய் விளக்குகள் விக்கறாங்க. அப்படியே வாங்கிக் கொளுத்திட்டு வந்துடலாம். முந்தி ஒரு காலத்துலே கோவிலுக்குப் போகும்போது ஒரு சின்னக் கிண்ணத்துலே எண்ணெய் எடுத்துக்கிட்டுப் போவோம் அது நினைவுக்கு வந்துச்சு. இப்ப இதெல்லாம் ஒன்னும் மெனெக்கெட வேணாம். காசை மட்டும் கொண்டுபோனால் எல்லாம் கிடைச்சுருது. காலம் மாறித்தான் போச்சு.

மூலவர் இங்கே சிவன்தான். லிங்க ரூபத்தில் இருக்கார். அந்த லிங்கத்துலேயே பிரம்மா, விஷ்ணு செத்துக்கி இருக்கு. இந்தத் தாணுமால்ய சுவாமியைக் கலியாணம் செஞ்சுக்கத்தான் பகவதி காத்துருந்தாங்க.(மூணு பேரையும் இல்லை. சிவனை மட்டும்) அந்தக் கல்யாணம் நடக்காமப்போனதால்தான் இன்னும் பகவதி, கன்னியாகவேக் குமரி முனையில் காத்து நிற்கிறாங்கன்னும் ஒரு கதை இருக்கு. கன்யாகுமரி பெயர் வந்த காரணம் இதுதான். (குறுக்கே புகுந்து கல்யாணத்தை நடக்கவிடாமச் செஞ்சப் 'புண்ணியம்' கட்டிக்கிட்டவர் நாரதர். நடக்கபோகும் நல்ல காரியத்தைக் கெடுக்கும் மனுசங்க இவர்கிட்டேதான் ட்யூஷன் படிக்கறாங்க போல)
புள்ளையாருக்குப் பொண் வேஷம் போட்டு விக்னேஸ்வரின்னு சொல்றாங்க. இருக்கட்டும், கடவுள்கள் ஆணாவும் பெண்ணாவும் எல்லாமாவுமா இருக்கணும்தானே? கோயில் பரவாயில்லாமல் சுத்தமாவே இருக்கு. சிற்பங்கள் அற்புதம்தான். இங்கே இருக்கும் ஹனுமான் ரொம்ப விசேஷம். பதினெட்டு அடி உயரத்தில் லேசா வளைஞ்ச முதுகோடு நிக்கிறார். கோயில்வேலைகளுக்காக நிலத்தைத் தோண்டும்போது கிடைச்ச சிலையாம். கொஞ்சம் முறைச்சுப் பார்த்துப் பல்லை எல்லாம் காமிக்கிறார்.
(எதிரில் கண்முன்னால் நடப்பதைப் பார்த்து வந்த எரிச்சலோ என்னவோ)
சுட்டபடம்:-)

இருபது ரூபாய்க்கு அஞ்சு பாட்டில் பன்னீரும், வாழை இலையில் கட்டுன வெண்ணையுமா ஒரு செட் அங்கே அவர் முன்னாலேயே கனஜோரா விறபனை ஆகுது. நாமும் ஒரு செட் வாங்கினோம். அனுமார் சிலையில் முகம் எல்லாம் வெண்ணையா ஈஷி வச்சுருக்கு. வெண்ணெய் சாத்தறாங்களாம். அவருக்கு முன்னால் வலது பக்கம் ஸ்டேண்டு போல அடிச்சுருக்கும் பலகையில் நாம் வாங்குனதை வச்சுடணும். தடுப்புக்கு அந்தப் பக்கம் இருந்து ஒருத்தர் பாட்டில்களைத் திறந்து பரபரன்னு 'பன்னீரை' ஒரு பாத்திரத்தில் ஊத்தறார். பாத்திரம் நிறைய நிறைய, அது மறுபக்கத்துக்கு போகுது. சில சமயம் திறக்காத பாட்டில்களுமே அந்தப் பக்கம் போயிருது. அதேபோல வெண்ணை வாழை இலைப்பொதியும் திறக்காமலேயே போய்க்கிட்டு இருக்கு.
ரீசைக்கிளிங் முறை ரொம்பவே விறுவிறுப்பா, ஒரு சுறுசுறுப்போட நடக்குறதைப் பார்த்துக் கொஞ்சம் ஆச்சரியம் அடைஞ்சதென்னவோ உண்மை. இல்லேன்னா விலைவாசி இருக்கும் நிலையில் அஞ்சு பாட்டில் பன்னீர் பத்து ரூபாய்க்கு........????? ஒருவேளை அது FUN நீராவும் இருக்கலாம்:-)
நல்ல கூட்டம். கோவிலைச் சுத்திட்டு வெளியே வந்தோம். கோவில் குளம் அழகான நீராழி மண்டபத்தோடு படு சுத்தமா இருக்கு. பார்க்கவே ரொம்ப அழகு.

தொடரும்......:-)

14 comments:

said...

அனுசூயாவைப் பத்தின பேச்சுகள் (எல்லாம் நல்ல விஷயங்கள்)அவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கா!! :-)

said...

நல்ல விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சுகிட்டோம். தாணுமால்யன் பேருக்கு இவ்வளவு அர்த்தமா.
நான் அது இன்னோரு சிவன் கோவில்னு நினைச்சுட்டு இருந்தேன்.

பாவம் குமரியம்மா.
கால்கடுக்க நின்னுக் கிட்டு இருக்காங்களா:(

எதுக்கு நாரதர் குறுக்கே வந்தாராம். அதுக்கும் ஏதாவது கதை சொல்லுவாங்க.

நான் பார்த்த அனுமார் நல்ல கன்னங்கறேல்னு இருந்தாரே.

said...

//மண்டபத்தின் உட்புறமா இருக்கும் மேற்கூரையில் ஒன்பது கட்டங்களில் நவகிரக நாயகர்களைச் செதுக்கி வச்சுருக்காங்க///


முதல் முறை சுசீந்திரம் சென்றபோது மிகவும் கவர்ந்த அதிகம் நேரம் செலவிடவைத்த இடங்களில் இந்த கூரை மீது செதுக்கப்பட்டிருக்கும் நவக்கிரக சிற்பங்கள் இருக்கும் இடமும் குளமும் !

எத்தனை அழகு :)

விளக்குகளின் ஜொலிப்பில் இன்னும் மிக அழகு!

said...

சுசீந்திரம் கோயிலப்பத்தி எழுதி இப்ப நீங்க புண்ணியம் கட்டிக்கிட்டீங்க. நாஞ்சில் நாட்டில் கல்யாணமான புது ஜோடிகள் முதலில் இங்கேதான் வருவாங்க. சிற்பங்கள் மலிந்து கிடக்கும் கோயில் இது. ஒண்ணைப்போல இன்னொன்னு இருக்காது.
ஆஞ்சனேயர் பாவம். எப்புடி வாயத்திறப்பார். அதான் வெண்ணைய வச்சு அடச்சிடறாங்களே:-)))).
அவர் ஒசரத்துக்கு வடை மாலை, பத்தாததுக்கு துளசி மாலை வேற!!. சாத்துபடி நல்லாவே நடக்கும் அங்கே.
அந்தக்குளம் எப்பவுமே சுத்தமா அழகாதான் இருக்கும். உங்க பார்வையில் இன்னும் அழகா இருக்கு.

said...

முதல் பகுதி தாணுமாலய சுவாமி சரிதம்...லோக்கல் பாஷையில்...செம காமெடியா...ஒருக்கணம் பந்தல் துளசி தளத்துக்கு ஷிஃப்ட்டு ஆயிருச்சோ-ன்னு நினைச்சேன் டீச்சர்! :)))

said...

//ஷிஃப்ட் போட்டுக்கிட்டு வேற ஒருத்தர் வந்து பூஜை சாமான்களை அகற்றுவாங்களாம். வச்சவரே வந்தால் பூஜை நடந்துச்சா இல்லையா என்ற விவரம் வெளி வந்துருமுல்லே//

விடாது கருப்புன்னு ஒரு டீவி சீரியல் வந்துச்சு. அதுல இந்த மாதிரிக்கூட வரும்.

said...

அனுசூயா கதை சூப்பராக சொல்லியிருக்கிங்க டீச்சர் ;)

\\சில சமயம் திறக்காத பாட்டில்களுமே அந்தப் பக்கம் போயிருது. அதேபோல வெண்ணை வாழை இலைப்பொதியும் திறக்காமலேயே போய்க்கிட்டு இருக்கு.
\\

டீச்சர்க்கிட்ட இருந்து எதுவம் தப்பவே முடியாது ;)))

said...

வாங்க குமார்.

ஆமாங்க. அந்தம்மா நல்லவர் வல்லவர் அடக்கமானவர், அன்பானவர் இப்படி எக்கச் சக்கமா இருக்கப்போய்த்தானே மூவுலகும் புகழ்ந்துச்சு:-))))

said...

வாங்க வல்லி.

குமரியம்மன் அவதாரமே பாணாசூரனை வதம் செய்வது. அவனோ கன்னிப்பெண்ணின் கையால் சாவுன்ற வரம் வாங்கி இருக்கான். கலியானம் முடிஞ்சா பின்னே ஒன்னும் சரிப்படாதே.....
அதான் பொழுது விடியுமுன் இருக்கும் முகூர்த்தத்தைக் கெடுக்க நாரதர் அர்த்த ராத்திரியில் சேவல் 'வேஷம்' போட்டுக் கூவுனாராம்.

சிவனும் கோழிச் சத்தம் கேட்டு பொழுதே விடிஞ்சுபோச்சே முகூர்த்தம் தவறிப்போச்சுன்னு இருந்துட்டாராம்.

ஏன்? வேற ஒரு முகூர்த்தம் கிடைக்காமாலா போயிரும்?

எல்லாம் கதை கதை கதை:-)))))))

said...

வாங்க ஆயில்யன்.

அழகு மட்டுமா? ஒரே ஆயிலாவும் இருந்துச்சு:-)))))

said...

வாங்க ஐம்கூல்.

புதுக் கல்யாண ஜோடிகள் இப்ப இயற்கை அழகு கொஞ்சும் இடத்துக்கு வீடியோ ஷூட்டிங் வர்றாங்க. வரும் பதிவுகளில் வரும்:-)))))

said...

வாங்க கே ஆர் எஸ்.

என்ன இது, ஆன்மீகப்பதிவர்கள் எல்லாம் வந்துருக்கீங்க!!!!!
கையும் ஓடலை காலும் ஓடலை.
அப்புறம் (வாய்ப்) பந்தல் எங்கே போடறதாம்:-)))

said...

வாங்க சின்ன அம்மிணி.

வி.க.வுக்கு இங்கே இருந்துதான் இன்ஸ்பிரேஷன் கிடைச்சதா?

இருக்கும் இருக்கும். என்ன தான் இருந்தாலும் அத்ரி முனிவர் காலத்துலே தொலைக்காட்சி சீரியல் இருந்துருக்கச் சான்ஸே இல்லையே:-)))))

said...

வாங்க கோபி.

கண்ணுமுன்னாலே நடக்கறதை எப்படிப்பாத் தப்ப விடமுடியும்? :-))))