Sunday, May 24, 2009

வட்டவட்டமா ஒரு கோட்டை .........(2009 பயணம் : பகுதி 28)

கண்ணைத்திறந்ததும் கெமெராவைக் கையில் எடுத்துக் கடமையைச் செய்தேன்:-) தினம் சூரியனுக்காகக் காத்திருக்கும் கூட்டம், அதேபோல கொஞ்சமும் சோம்பலில்லாமல் வந்து கடற்கரையில் நிக்குது. படகுத்துறைக் கட்டிடமும், மக்களுக்காகக் காத்திருக்கும் படகுகளும் இன்னும் தூக்கத்தில் இருந்து விடுபடலை. அதோ...... தங்க நிறத்தண்ணி. வந்துட்டான்ய்யா வந்துட்டான்....... கையில் பிடிச்சுப் பார்த்தேன்:-)
அய்யன் அமைதியில் உறைஞ்சுகிடக்கார்
காத்திருக்கும் சனம்


வர்றான்.....


வந்துட்டான்ய்யா ............வந்துட்டான்

எட்டுநாளாச்சு ரயில் டிக்கெட் புக் பண்ணி. இன்னும் அது கன்ஃபர்ம் ஆகலையேன்னு கோபாலுக்கு மனசுலே ஒரு கவலை. வலையிலே போய் அலசினாலும் விவரம் ஒன்னும் அகப்படலை. 'லாலுவுக்கு ஒரு ஈ மெயில் அனுப்பலாமா?' போறவழியில் ரயில்வே நிலையத்தில் போய் விசாரிச்சுக்கலாம். மனுசனுக்கு மன அமைதி முக்கியம்.

ரயில் நிலையக் கட்டிடமே அழகா அம்சமா இருக்கு. கோபால் மட்டும் விசாரிக்கப் போயிருந்தார். 'நீங்க என்ன வேலை செய்றீங்கம்மா?' கேட்டது ரமேஷ்தான். 'பதிவு' என்பதை மனசுலே மெள்ள முணுமுணுத்துக்கிட்டு வெளியில் 'எழுத்தாளர்'னு சொன்னேன்!!!
ரவிவர்மாவின் 'பெண்கள்' ஹொட்டேல் வரவேற்பில்

நேற்றைய மாலை அலங்காரம்(அதான் பூ மலர்ந்துபோச்சு)

ஆயிரம் வாட்ஸ் பல்ப் போட்டதுபோல ஆகிருச்சு அவர் முகம். (இன்னும் எழுத்தாளர்கள்ன்னா ஒரு மதிப்பு இருக்கு நம்ம பக்கங்களில், இல்லே? அதைக் காப்பாத்திக்கணும், நான் இப்போ)

எந்தப் பத்திரிக்கையில் எழுதறீங்க? அந்த ஊர்லேயான்னார். இண்டர் நெட்டுலே எழுதறேன்னு சொன்னதும்.....ஏதோ அதிசயமான விஷயமுன்னு நினைச்சுக்கிட்டார். படம் எடுக்கணுமுன்னா சொல்லுங்க. அங்கங்கே நின்னு எடுத்தறலாமுன்னார். சின்ன வயசுலே படிக்காமக் கோட்டை விட்டுட்டோமேன்னு சரியான கவலை நம்ம ரமேஷ் பாஸ்கர்(முழுப்பெயர்) மனசுலே. குறைஞ்சபட்சம் ஒரு ஈமெயில் வச்சுக்கணுமுன்னு பார்க்கறாராம். மனைவி படிச்சுருக்காங்க. மருந்தாளுனர். ஆனா இன்னும் வேலை கிடைக்கலையாம். அஞ்சு வயசுலே ஒரு பையன் இருக்கான். இப்ப ரெண்டாவது பொறக்கப்போகுது.

இதுக்குள்ளெ கோபால் வந்துட்டார். வெயிட்டிங் லிஸ்ட்டுலே நாம்தான் முதலா இருக்கோம் என்றதால் பிரச்சனை இல்லையாம். ஆனாலும் இன்னும் கன்ஃபர்ம் என்ற சேதி வரலையாம்.

கடுகு பெறாத விஷயமுன்னு சொல்றாப்புலே இந்த மிளகு விஷயத்துக்காக காயங்குளம் ராஜாவுக்கும் திருவிதாங்கூர் ராஜாவுக்கும் மனக்கசப்பு தொடங்கி இருக்கு. நாம் போய் மிளகு அள்ளிக்கலாமுன்னு நினைச்சோ என்னவோ டச்சு நாட்டுக் கடற்படை அதிகாரி அட்மிரல் Eustachius De Lannoy என்றவர் கொளச்சல் துறைமுகத்துக்கு வர, அங்கே இருந்த திருவாங்கூர் ராஜாவின் படையுடன் மோதலாகிப் போச்சு. இது பத்தின கதைகூட ஒன்னு இருக்கு. டச்சுக்காரன் சண்டைக்கு வந்துட்டான். அவன்கிட்டேயோ பீரங்கி இருக்கு. ராஜாவோட ஆட்கள் பார்த்தாங்க என்ன செய்யலாமுன்னு. கடலோரம் இருந்த மீனவர்களை உதவிக்குக் கூப்புட்டுக்கிட்டு, நல்ல பனைமரங்களைப் பெரிய துண்டுகளா நீளமா வெட்டி எடுத்துக்கிட்டு மாட்டு வண்டிகளைக் கொண்டுபோய்க் கடலோரம் வரிசையாச் சாய்ச்சு நிறுத்தி ஒவ்வொன்னுலேயும் பனைமரத் துண்டங்களைச் சாய்ச்சு வச்சுருக்காங்க. தூரத்துலே இருந்து பார்க்கும்போது பீரங்கி வண்டிகள் வரிசையா எக்கச்சக்கமாக் கடலோரம் நிக்குது. 'ஆத்தாடி..... எதிரி இத்தனை பீரங்கி வச்சுருக்கானா? பெரிய ஆளா இருப்பாம்போலெ..தொலைஞ்சோம் நாம்'ன்னு பயம் வந்துருச்சு டச்சுக்காரர்களுக்கு. இது போதாதா? சண்டையில் இவுங்க தோத்து, டிலென்னாயைக் கைதியாப் பிடிபட்டாச்சு. கைது செஞ்சது ராஜா மார்த்தாண்ட வர்மாவின் தம்பி. சிறையிலும் போட்டாச்சு. அப்ப டிலென்னாயின் போர்த்திறமைகள், பீரங்கி இயக்கும் வல்லமை எல்லாம் பார்த்துட்டு மகாராஜா மார்த்தாண்டவர்மா, தன்னுடைய படையிலேயே அவரைத் தளபதியாச் சேர்த்துக்கிட்டார். அதுக்குப்பிறகு திருவிதாங்கூர் ராஜாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானதெல்லாம் தனிக்கதை. 'கொளச்சல் போர்' இப்படின்னு சரித்திரம் சொல்லிக்கிட்டுப் போகுது. இன்னும் ஆழமாப் படிக்கணுமுன்னா வலையில் கொட்டிக்கிடக்கு. எல்லாம் ஒரு முன்னூறு வருசச் சமாச்சாரம்தான்.சரியாச் சொன்னால் 1741 லே நடந்த சண்டை.
கோட்டை முகப்பு

ராஜாவின் தேசத்தைப் பலப்படுத்தன்னு ஏற்கெனவே பாண்டிய மன்னர்கள் காலத்துலே கடலோரம் கட்டி இருந்தக் கோட்டையைப் பலப்படுத்தி இருக்கார் இந்த டிலென்னாய். கருங்கல் கோட்டையின் உயரத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்தி இருக்கார் இவர். சிமெண்ட், காரை ன்னு பயன்படுத்தி இருக்காங்க. நாம் பார்க்கும்போது ரெண்டு வெவ்வேறு பொருட்களால் கோட்டைக் கட்டி இருப்பது தெரியுது. துப்பாக்கி வச்சுச் சுடத்தோதா கோட்டை மேல் சுவரில் மறைவிடங்களும், படைவீரர்கள் ஒளிஞ்சு நின்னு தாக்கும் விதமாவும் கட்டி வச்சுருக்கார். (அதுவும் சரி. பாண்டியர்கள் காலத்தில் துப்பாக்கி ஏது?) கடல் பக்கம் இருந்து எந்த எதிரிகளும் தாக்கமுடியாத அளவில் இது உருவாகி இருக்கு.
கோட்டை உள்

மூணரை ஏக்கர் பரப்பு இருக்கு இந்த கோட்டைக்கு. உள்ளே மூணு பக்கங்களிலும் போர்வீரர்கள் தங்க மண்டபம் . நட்ட நடுவில் ஒரு குளமும், எண்கோணக் கைப்பிடிச்சுவர் வச்சக் கிணறுமா வெட்டி வச்சுருக்கு. மண்டபத்தின் உள்ளே மேற்கூரையில் பாண்டியர்களின் இலச்சினையான மீன் சின்னம் செதுக்கி வச்சுருக்காங்க. கோட்டை மதில் சுவர்கள் அஞ்சடி அகலம் வரும்போல. ரெண்டு ஆள் படுக்கலாம். புல்வெளிகள் பச்சைப்பசேலுன்னு கண்ணுக்குக் குளிர்மை. நல்ல விஸ்தீரணம்.

பாண்டியரின் மீன்

கோட்டையில் இருந்து ராஜாவின் அரண்மனைக்குப் போக நாலடி அகலச் சுரங்கமும் ஒன்னு இருக்கு. நாப்பது கிலோ மீட்டர் நீளமாம். நம்ம மக்கள் அதுக்குள்ளே போய்க் 'கடலை' போட ஆரம்பிச்சதையொட்டி, இப்பச் சுரங்கப் பாதையை மூடி வச்சுட்டாங்க. படைவீரர் தங்கும் மண்டபம்

டிலென்னாயின் காலத்தில் பீரங்கி வண்டிகளை உருட்டி மேலே மதில் சுவத்துக்கருகில் கொண்டு போகன்னு ஒரு ஏற்றப்பாதையைச் சரிவாக் கட்டிவச்சுருக்காங்க. கோட்டையில் மதில் சுவருக்குப் போக இடதுபக்கம் கருங்கல் படிகள் வசதியும் இருக்கு. மேலே ஏறிப்பார்த்தோம். ஹோன்னு கடல் ஆர்ப்பரிக்குது. கடற்கரை மணலில் கருப்பாப் படிஞ்சிருக்கு. தோரியம், யுரேனியம் இப்படித் தாதுக்கள் நிறையப் படிஞ்சுருக்கும் மண்ணாம். சாதாரண மணலை விட அங்கத்து மண் அஞ்சு மடங்கு எடை கூடுதலா இருக்குதாம்.
கருப்பு மண் கடற்கரை

எழுத்தாளருக்கான விவரங்களை அள்ளி அள்ளிக் கொடுத்துக்கிட்டு இருக்கார் ரமேஷ்:-)))
ரமேஷ் & கோபால்

கோட்டை இப்போது அரசுவின் தொல்பொருள் இலாக்காவின் கையில். நல்லாப் பாதுகாத்துச் சுத்தமா வச்சுருக்காங்க. அதுக்கே ஒரு பாராட்டு தந்தாகணும். ஆனா உள்ளே இருக்கும் சுத்தத்தைப் பழிவாங்கும் ஆவேசம் நம்ம மக்களுக்கு இருக்கே(-: வேலியா போட்டு வைக்கிறே..... இப்பப் பார் , வேலியை ஒட்டி நான் குப்பையைப் போடாட்டா.... என் பெயர் பொது சனமில்லை! எல்லா அழுக்கும் வேலிக்கே(-:

கோட்டைக்கு வெளியே குடிதண்ணீர் ஏற்பாடு காங்ரீட் குடத்தில் இருக்கு. பிடிச்சிருக்கு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

வட்டக் கோட்டையை, மலையாளக்கரை மொழியில் 'வட்டு'க் கோட்டை ஆக்காமல் விட்டதுக்கே ஒரு நன்றி சொல்லிக்கணும்:-)

அடுத்த ஸ்டாப்பா எங்கே போறோம்? சொல்லப்போறக் கதையைக் கேட்டுக்கிட்டே கூட வாங்களேன்.

டிவி சீரியல்கள் எல்லாத்துக்கும் முன்னோடி. குடும்பக் கதை. அதிலும் மாமியாரும் மருமகளும் அண்ணியும் அத்தையுமா சும்மாக் கலந்துகட்டி நடிச்சது. 'அப்பாவியான ஆம்பிளைகளும்' அவுங்க பாகத்தை நல்லாச் செஞ்சுருக்காங்க.
வட்டக்கோட்டை ஆல்பம்

தொடரும்..................:-)))))

14 comments:

said...

மலையாள கதைகள் நல்லா தான் இருக்கு..! ;)

ரமேஷ் ஒரு அப்பாவி போல!!

நான் தான் பஸ்டா?!! ;))

வல்லிம்மா பார்த்த அடப்பாவி நீ தூங்கவே மாட்டியான்னு கேட்பாங்க..(நைட் டூட்டியில எப்படி தூங்குறது)


அப்புறம் கடைசியில ஒரே பில்டப்பு!! எனக்கு புரியல டீச்சர் ;)

said...

கடலிருந்து “கடலை” வரைக்கும் படம் போட்டு அசத்திருக்கீங்க.

said...

வட்டக்கோட்டை வர்ணனை அருமை.கடல் காத்து அடிக்கிறமாதிரி இருக்கு.அந்த சுரங்கம் பப்ப நாபுரம் வரை போகும் என்று கேள்வி. 'வட்டு'..... அய்யே ஒரு நாளும் இல்லை:-)))).உங்களை பாத்தா யானை கோட்டை சுவரில் கூட வந்து குதிக்கும் போலிருக்கு.

said...

துளசி, சூரிய தரிசனத்துக்கு நன்னிம்மா.
கோட்டை வாசல் யானைகள் அற்புதம். இன்னிக்கு தான் நினைச்சுண்டேன், துளசி மாதிரி யாரு இவ்வளவு பொறுமையா எழுதுவார்கள் என்று.

வீட்டு விருந்தாளி நாளைக்குக் கிளம்பினதும் எல்லாப் படங்களையும் பார்க்கிறேன்.

@ கோபி, ராத்திரி டியுட்டி பார்க்க வேண்டியதுதான். அதுக்காக பதிவு வேற படிக்கச் சொன்னாங்களா:) தூங்க மாட்டாங்களா!!!!கேரளா அழகுதான். பார்த்த வரை பிரமாதம்.

said...

உங்க பயணக் கட்டுரைகளை (பதிவுகளை) ஒரு புத்தகமாக போடலாம். அந்த அளவு சுவாரஸ்யமான விவரணை.

இந்த முறை முடிந்தால் அல்லது அடுத்த முறையாவது, எட்டயபுரம் போய் வாருங்கள், பாரதி உலவிய ஊரின் அழகே தனி.

குப்பன்_யாஹூ

said...

கன்யாகுமரில சூரியோதயமும் அஸ்தமனமும் ரொம்ப அழகு.

said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

said...

வாங்க கோபி.

தூக்கக் கலக்கமா? ஒரு வரிக்குமேலே எழுதிட்டீங்க:-))))

பில்டப்பா?

நாளை மீண்டும் வருக.

said...

வாங்க குமார்.

கடலை நம்மூர்லே அதிகம் வறுபடுது:-)

said...

வாங்க ஐம்கூல்.

பப்பநாபபுரம்வரை போகுதுன்னு ரமேஷும் சொன்னார்.

யானை அதுவாத்தான் வந்துக்கிட்டு இருக்கு:-)

said...

வாங்க வல்லி.

கேரளா அழகே அந்தப் பசுமைதானேப்பா.

நாம்தான் காய்ஞ்சுகிடக்கோம், மரத்தையெல்லாம் வெட்டிப்புட்டு(-:

said...

வாங்க குப்பன் யாஹூ.

இன்னும் 998 பேர் கிடைக்கட்டும், புத்தகம் போட்டுறலாம்!

தமிழ்நாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாப் பார்க்கத்தான் வேணும். கங்கைகொண்ட சோழபுரம்கூட வெயிட்டிங் லிஸ்ட்டுலே இருக்கு.

said...

வாங்க சின்ன அம்மிணி.

அழகுதான். ஆனாத் தண்ணிக்குள்ளே இருந்து வர்றதும் தண்ணிக்குள்ளே போகறதும் கடைசிவரை பார்க்க முடியலையே(-:

said...

வாங்க தமிழர்ஸ்.

எந்தப் பட்டையும் போட்டுக்க முடியாத நிலமை(-:

ஆனாலும் நீங்க வந்துபோனது மகிழ்ச்சியாவே இருக்கு.