70MM படம் பார்க்குறாப்போல இருக்கு, இந்தக் கோயில் கோபுரம். இந்த அகலத்துக்கு உயரம் இன்னும் மேலே போயிருக்கணுமே நம்ம மதுரை மீனாட்சி கோவில் போல......யாரு குறுக்கே வந்துருப்பாங்க இதைக் கட்டுனப்ப?
சோம்பேறிக்குத் தோல் உரிச்ச வாழைப்பழம் என்பது போலப் படுக்கையில் இருந்தே தலையை மட்டும் ஜன்னல்ப்பக்கம் திருப்பினால் கிழக்கே கடலும் விவேகானந்தர் நினவு மண்டபமும் தெரியுது. ஜன்னலுக்குப் பக்கத்தில் போய் நின்னால் அய்யனையும் தரிசிக்கலாம். நேத்துமாலை ஜன்னல் திரைகள் திறந்திருக்கும்போதுதான் இதைக் கண்டுபிடிச்சேன். ஆஹா..... இப்படி ஒரு வசதி இருக்கேன்னு இரவில் திரைகள் ஒன்னையும் மூடிவச்சுக்கலை. மூணாவது மாடியில் யார் வந்து எட்டிப் பார்க்கப்போறாங்கன்ற அசட்டைதான். சூரியன் உதயமாகுதான்னு காலையில் படுக்கையில் இருந்தபடியே கவனிச்சுக்கிட்டு இருந்தேன். இன்னைக்கும் புகை மூட்டத்தில் ரெண்டு முழம் உயரத்தில் வந்த பிறகுதான் எட்டிப் பார்த்தார்.
எழுந்து சூரியனைப் படம் எடுத்துட்டு ( இங்கே வந்தநாள் முதல் சூரியன், வள்ளுவன் இப்படியாப்பட்டப் பெரிய சமாச்சாரங்களைப் பொழுது விடிஞ்சதும் படம் எடுப்பது தினசரிக் கடமைகளில் ஒன்னு) மற்றவைகளை முடிச்சுக்கிட்டு கட்டிட வாசலுக்கு வந்ததும் ரமேஷ் காரைக் கொண்டுவந்து நிறுத்துனார். நாகர்கோவில், மார்த்தாண்டம், பாறசாலா வழியா பாலராமபுரம் ரோடில் ( ஹைவே 47) திருவனந்தபுரம் நோக்கிப் பயணம். நகருக்குள்ளே சீக்கிரம் போயிட்டா 'ட்ராஃபிக் ஜாம்' அவதி இல்லாமத் தப்பிக்கலாமுன்னு நினைச்சாலும் முடியலை. இத்தனைக்கும் காரை விரட்டோ விரட்டுன்னு ஓட்டுனார் ரமேஷ். 'சட்'னு பார்க்கக் கொஞ்சம் முரட்டு ஆசாமி போல இருக்கும் இவர் ஒரு பலாப்பழமுன்னு கொஞ்சநேரத்துலே புரிஞ்சுபோச்சு:-)))))
சும்மாச் சொல்லக்கூடாது..... வரும் வழியில் அங்கங்கே பார்த்த சர்ச்சுகள் எல்லாம் ரொம்பவே அழகு. ஒவ்வொன்னும் ஒரு டிசைனில் அட்டகாசம். வேகமான ஓட்டத்தில் சரியா வரலைன்னாலும் க்ளிக்கி வச்சேன்.
நாராயணகுரு பிறந்த ஊரு இதுன்னு நினைப்பு
ஊருக்குள்ளே நுழையும்போதே கோலோச்சும் கட்சியை நினைவூட்டும் செங்கொடிகள் சாலையின் ரெண்டு பக்கம், போற வர்ற சாலைகளை நடுவில் பிரிக்கும் மீடியன் மேடுன்னு ஒன்னையும் விட்டுவைக்கலை. ஒருவழியாக் கோவில் வாசலில் போய் இறங்கினோம். அந்த நேரத்திலும் நல்ல கூட்டம்தான். நமக்கு வலப்பக்கம் சுற்றுச்சுவர் வச்சுக் கட்டின பிரமாண்டமான குளம். 'பச்சை'த் தண்ணீர். இங்கே மன்னரே சிலசமயம் குளிப்பார் என்று கேள்வி. படு சுத்தமா இருந்துச்சு.
அந்தந்த இடங்களுக்குன்னு ஒரு ட்ரெஸ் கோட் இருப்பதை நினைவில் வச்சுப் பயணத்துக்கு ஒரு புடவையை ஞாபகமாக் கொண்டுபோயிருந்தேன். கோபாலுக்கும் ஒரு வேஷ்டியும் துண்டும். கோயில் படி ஏறி முகப்புக்குப் போனதும் ஹேண்ட் பேக் கொண்டு போகலாம். ஆனால் கெமெரா கூடாதுன்னாங்க. பக்கத்துலே உடைகள் வைக்கும் அறையும், பொருட்களைப் பாதுகாக்கும் அறையும் இருக்குன்னதும் அங்கே போய் கோபாலின் ஷர்ட்டைக் கழட்டிக் கொடுத்தோம். நான் ரமேஷைத் தேடுனா ஆளைக் காணோம். அவரை செல்லில் கூப்பிட்டுக் கெமெராக்களைக் கொடுத்துட்டுக் கோவிலுக்குள்ளே போனோம்.
பத்தடி உயர வெங்கலக் குத்து விளக்குகளும் உருளிகள் தாம்பாளம் வகைகளும் முன்மண்டபத்துலேயே இருக்கு. உள்ளே கடந்து சுவாமி மண்டபத்துக்கு இடப்புறம் வரிசையில் நின்னோம். ஏதோ விசேஷ வழிபாடோ என்னமோ..... யாரையும் உள்ளே விடாமல் வரிசை அப்படியே தேங்கிக் கிடந்துச்சு. நான் இந்தக் கோயிலுக்குச் சரியா நாற்பது வருசத்துக்கு முந்தி ஒருமுறை வந்துருக்கேன். கொஞ்சமாக் கொசுவத்தி ஏத்திப் பார்த்தேன் மனசுக்குள்ளில்.
அப்போ இந்த வரிசையெல்லாம் இல்லை. பாரம்பரிய கசவு முண்டு செட் உடுத்திய பனிரெண்டு பெண்கள் கையில் தாலப்பொலியோடு முன்மண்டபத்தில் நின்னுருந்தாங்க. கோவிலின் கர்ப்பக்கிரகத்தின் வெளிப்புறங்களில் வரிசைகளாச் சட்டம்அடிச்சு வச்சுருந்த விளக்குகளில் எண்ணெய் ஊற்றிக்கிட்டே ஒருத்தர் போக இன்னொருத்தர் அவைகளைப் பத்தவச்சுக்கிட்டே வந்தார். கேரளக் கோயில்களில் இது ரொம்ப சகஜம். அரையடி இடைவெளிவிட்டுப் பித்தளைச் சட்டங்கள் அடிச்சு அதில் அகல்கள் பொருத்தியிருப்பாங்க. கோவில் சுவரின் உயரத்தைப் பொறுத்து ஏழெட்டு வரிசைகளா இருக்கும். (மலையாளத் திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்) விசேஷ நாட்களில் இப்படி எல்லாம் விளக்குகள் வச்சு அலங்கரிப்பது பார்க்க ரொம்ப அழகா இருக்கும். மன்னர் வரப்போறாறாம். அன்னிக்கு என்ன விசேஷமுன்னு விசாரிச்சப்ப விசாக நட்சத்திரமாம். அட! இது என்னோட ஜென்ம நக்ஷத்ரமாச்சேன்னு தரையில் கால் பாவாம மிதந்தேன்:-))))
மண்டபத்தில் ஏறி அகலமான மூன்று வாசல்வழியாக அனந்தன் மேல் ஒய்யாரமாப் படுத்திருக்கும் பத்மநாபனைக் கும்பிட்டதும், எங்க குழுவில் சிலர் கீழே விழுந்து கும்பிட யத்தனம் செஞ்சப்ப ' இவிடே பாடில்லா' கீழே இறங்கி முன்பக்கம் போய் விழுந்து கும்பிடலாமுன்னு சொல்லியனுப்பின ப் போத்தியை, நம்பூதிரின்னு நினைச்சுக்கிட்டதும், ஒருத்தர் மைய்யாக இருக்கும் ஈரச் சந்தனத்தைக் கிள்ளி நம் கையில் எறிஞ்சதும் அது 'சொத்'ன்னு கையில் வந்து ஒட்டியதும், வலக்கையில் ஒட்டுனதை இடக்கைக்கு மாத்திப் பின் வலக்கையில் தொட்டு நெற்றியில் வச்சதும் எல்லாம் மனத்திரையில் ஓடுச்சு.
இன்னும் கூட்டம் வந்து சேர்ந்துக்கிட்டே இருக்கு எங்கள் பின்னால். ஒருவழியாக உள்ளே அனுப்புனாங்க. அப்பவும் கொஞ்சம் கொஞ்சமா அனுப்பாம எல்லோரையும் 'கேறிக்கோ, கேறித் தொழுதோ'ன்னு அனுப்பிக்கிட்டே இருக்காங்க. கால்வைக்க ஒரு துளி இடம்கூட இல்லை. மீன் டின்களில் இருக்கும் சார்டீன் மீன்கள் போல நெருக்கமா தள்ளும் முட்டும். ( ஐயோ...கோவில்லே போய் என்ன உதாரணம் சொல்றேன் பாருங்க(-: போகட்டும் மச்சாவதாரம் செஞ்ச சாமிதானே இவர். எங்களுக்கு முன்னும் பின்னும் அடர்த்தியா மனிதர்கள். மூச்சு முட்டும்விதமா இருக்கு. முன்னால் நிற்கும் சனம் நகரமாட்டேங்குது. 'ஜருகு ஜருகு சொல்லவோ, மதி..... போய்க்கோ' ன்னு விரட்டவோ யாருமில்லை. நாங்களே மில்லிமீட்டர் மில்லிமீட்டரா நகர்ந்துக் கூட்டத்துக்குள்ளில் இருந்து பிய்ச்சுக்கிட்டு வெளியில் வந்தோம்.
"என்னங்க, சாமி உங்க கண்ணுக்காவது தெரிஞ்சாரா?"
"கொஞ்சூண்டு தெரிஞ்சார். நீ பார்த்தியாம்மா?"
"ஓ பார்த்தேனே.... முன்னாலே இருந்த கூட்டத்தின் முதுகையெல்லாம்"
இந்தக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வரிசையில் விட்டுருந்தால் வரிசை நகர நகர ஒரு வினாடியாவது தரிசனம் கிடைச்சிருக்கும். மனசில் ஒரு புலம்பலோடு நடந்தேன். ஆமாம்.....முந்தியெல்லாம் பிரமாண்டமாத் தெரியும் மண்டபமும் வாசல்களும் இப்போ ஏன் குறுகிக்கிடக்கு? அதெல்லாம் அப்படியேதான் இருக்கு. இடிச்சுக் கட்டுனாங்களா ? என்ன ஒன்னு இத்தனை வருசத்தில் நம்ம பார்வைதான் ரொம்பவே விரிஞ்சுபோச்சு.
பிரகாரத்தைச் சுற்றிவந்து, திண்ணைவச்ச நடை வழியா வெளிப்பிரகாரத்துக்கு வந்தோம். கருங்கல்லில் ஆன பெரிய தீபஸ்தம்பம் ரொம்ப மாடர்னா மின்சார விளக்குக்கு மாறியிருக்கு. அகலில், தடிச்ச திரிக்குப் பதிலா பல்ப். அடக் கடவுளே...... ஐஸ்வரியக்கேடல்லே இதொக்க........
வலப்பக்கம் ஒரு சின்ன மண்டபத்தில் இருந்து பாட்டுப் பாடும் ஒலி வருது. மண்டபத்தின் முன்னே ஒரு சின்ன வாசல். அங்கேயும் சின்னதாக் கூட்டம். எட்டிப் பார்த்தால் உள்ளே ஒரு இருபதடி தூரத்தில் சந்தனக்காப்பில் சாமி தெரியறார். அங்கே வெளியே இருந்த கூட்டத்தில் ஒரு அம்மா.... 'என்ன சாமின்னே தெரியலையே'ன்னு சொன்னதுக்கு நம்ம ஆளு பதில் சொல்றார் முருகன்னு. அந்தம்மா 'முருகா முருகா'ன்னு கன்னத்துலே போட்டுக்கறாங்க. பெருமாள் கோவிலில் முருகனான்னு நான் உத்துப் பார்த்தால் அது குழலூதும் கிருஷ்ணன். ஸ்ரீவேணுகோபாலன். தலையைக் கொஞ்சம் உசத்திப் பார்த்தால் ஸ்ரீக்ருஷ்ணன்னு மலையாளத்தில் எழுதி இருக்கு வாசப்படி மேலே. சின்னதாக் கோபாலை முறைச்சுப் பார்த்து, இதா முருகன்னா........ தப்பாச் சொல்லிட்டேங்கறார்!!!
மண்டபத்தில் மிருதங்கம், வயலின், ரெண்டு பாடகர்கள் இருக்கும் குழுவில் சங்கீதம் இழைஞ்சு வருது. தெரிஞ்ச பாட்டா இருக்கேன்னு ஒரு கணம் முழிச்சேன். புரிஞ்சு போச்சு. 'துளஸிதளமுலசே' பாடறாங்க. தியாகராஜர் கீர்த்தனை. மாயா மாளவ கௌள ராகம். (உடல்பொருள் ஆனந்தி நினைவில் வருதே) துளசிதளமுலசே...சந்தோஷமுகா பூஜிஞ்சு....துளசி.....
"டேய் க்ருஷ்ணா.... அங்கே தரிசனம் சரியாக் கிடைக்கலைன்னு நொந்த மனசுக்கு ஆறுதலா இங்கே இப்படி பாடி நான் உன்னைக் கண்டுக்கிட்டேன்னு சொல்றயா?"
கொஞ்ச நேரம் இருந்து பாட்டைக் கேட்டுக்கிட்டு இருந்தேன். ரசிகர்கள்தானே பாடகர்களுக்கு விருந்து. ஒரு சின்னப் புன்முறுவலோடு நம்மைக் கவனிச்ச பாடகர் ஒருவர் இன்னும் விஸ்தரிச்சுப் பாடினார். மற்றவரும் கூடச் சேர்ந்துக்கிட்டார். ஒரு பத்து நிமிஷம்போல நேரம் போனதே தெரியலை. தேன் குடிச்ச நரியை கோபால் பார்த்ததில்லை என்ற குறை தீர்ந்திருக்கும். தனி ஆவர்த்தனம் ஆரம்பிச்சது. வயலினும் மிருதங்கமும் போட்டிப்போட்டு ஜமாய்க்கிறாங்க. போலாம் போலாமுன்னு இவர் ஜாடை காமிச்சுக்கிட்டே இருக்கார். கண்டுக்காதமாதிரி இருந்து பார்த்தேன். சமாளிக்க முடியலை. நல்ல 'சங்கதிகள்' வரும்போது இவர் புரிஞ்சு ரசிக்கிறாரான்னு 'செக்' பண்ணும் பழக்கம் எப்படிச் 'சட்'னு போகும்?
மனசில்லா மனசோடு கிளம்பி வெளியில் வந்தேன். வெளிப்புற வாசல் பக்கத்தில் படங்கள், சின்ன விக்கிரகங்கள் எல்லாம் வச்சு விக்கும் கோவில்கடை இருந்துச்சு. சின்னதா உள்ளங்கையில் அடங்கும் சைஸில் அனந்தன் மேல் கிடக்கும் பத்பநாபனை வாங்கினேன். இது கோவிலே நடத்தும் கடையாம். வெளியில் இது இன்னும் மலிவாக் கிடைக்கும். போயிட்டுப்போறது போ.
திவ்யதேசங்கள் நூற்று எட்டில் இந்தக் கோவிலும் ஒன்னு.
தொடரும்....:-)
Thursday, May 14, 2009
நான் பார்க்கலை....'அவர்' பார்த்துருப்பார்..........(2009 பயணம் : பகுதி 24)
Posted by துளசி கோபால் at 5/14/2009 06:18:00 PM
Labels: அனுபவம், திரு அனந்தபுரம் பத்மநாபன்
Subscribe to:
Post Comments (Atom)
40 comments:
எல்லா படங்களிலும் எனக்கு பிடித்தது உங்கள் மறுபாதியின் “பாபா” ஸ்டைலில் சட்டையின் ஒரு முனையை வேஷ்டி உள்ளே சொருக்கி இருப்பது தான். :-))))
இப்படி இருக்கனும் ஏதாவது வேண்டுதலா?
கச்சேரிகளில் தனி வாசிக்க ஆரம்பித்ததும், சீரியல் பார்க்கணுமே, பஸ் பிடிக்கணுமே, என்று அவரவர் அவசரத்தில் கிளம்பிவிடுவார்கள். எனக்கு ரொம்ப சங்கடமாக இருக்கும். நான் தனி முடிந்ததும்தான் எழுவேன்.
சகாதேவன்
நான் என்னவோ பிரம்மாண்டமான கோவில்னு நினைச்சேன்பா.
துளசிதளம் ரொம்பப் பிரபலாமாயிடுச்சு. அதான் பாடி இருக்காங்க்க:)
விசாகக் காரங்க நிறையப் பேரைத் தெரியும்பா:).
சுறுசுறு ஆளுங்க!!
யானை ஒண்ணும் இல்லையா.:( இங்கேயும் கூட்டமா!! சரியாப் போச்சு!!
"டேய் க்ருஷ்ணா.... அங்கே தரிசனம் சரியாக் கிடைக்கலைன்னு நொந்த மனசுக்கு ஆறுதலா இங்கே இப்படி பாடி நான் உன்னைக் கண்டுக்கிட்டேன்னு சொல்றயா?"
////ஆமாங்க!!
கோயில் குள்ளமா இருக்கே!!
\\வல்லிசிம்ஹன் said...
நான் என்னவோ பிரம்மாண்டமான கோவில்னு நினைச்சேன்பா.
துளசிதளம் ரொம்பப் பிரபலாமாயிடுச்சு. அதான் பாடி இருக்காங்க்க:)
விசாகக் காரங்க நிறையப் பேரைத் தெரியும்பா:).
சுறுசுறு ஆளுங்க!!\\
ஆமா விசாக நட்சத்திரகாரங்க ரொம்ப சுறுசுறுப்பு தான்!
வயசெல்லாம் பார்க்காம குதிரை ஏற்றம், மலைஏற்றம், பங்கி ஜம்ப் எல்லாம் பண்ணும்.
அதுபோல கேமிரா எடுத்துகிட்டு எல்லாரையும் நைசா கிண்டல் அடிச்சு ஊரல்லாம் சுத்து காண்பிப்பாங்க!
ஆமா வல்லிம்மாவுக்கு ஏன் விசாகத்தின் மேல அத்தனை ஒரு கரிசனமோ????????????????????
தவிர மிஸஸ் தேவ் அவங்க லீவ் லெட்டரை என் கிட்ட கொடுத்துகிட்டு போயிருக்காங்க. 1 மாசம் லீவ்! கண்டிப்பா இது கோடை விடுமுறையாம். ஆப்செண்ட் போட கூடாதாம்!
அது போல கச்சேரிகளில் தனி ஆவர்த்தனம் கேட்கும் பழக்கம் இன்னும் எனக்கு ரொம்ப ஆர்வம். அங்க தான் அழகான தாள கணக்கு வழக்குகள் மனசுக்குள்ளே அற்புதமா ஓடும்.
என் கல்யாண ரிசப்ஷனில் கத்ரிகோபால்நாத் கச்சேரி. பக்கவாத்தியம் தவில் ஏ.கே பழனிவேல், கரம் டி.ஹெச். வினாயக்ராம், மிருதங்கத்துக்கு சொன்ன பெரிய ஆள் வரலை ஆனா வாசிச்சவரும் நல்ல வித்வான் தான், வயலின் கேட்கவா வேண்டும் கன்யாகுமரி, மோர்சிங் பெங்களூர் ராஜசேகர், கஞ்சிரா தட்சிணாமூர்த்திபிள்ளை.
எல்லாம் நடந்துகிட்டு இருக்கும் போது அடை அவியல் சாப்பிட கீழே டைனிங் கொண்டு போயிட்டாங்க என்னையும் அபிஅம்மாவையும். நீ ஊட்டு நீ ஊட்டுன்னு ஒரே ரகளை அத்தை எல்லாம். போங்கடீன்னு ஓடி வந்தேன் மாடிக்கு கச்சேரி கேட்க ஏன்னா தனி ஆரம்பிச்சாச்சு. பின்னாடியே அபிஅம்மாவும் வந்தாச்சு.
அது ஒரு 38 நிமிஷ மழை, புயல் வாவ்! அரங்கம்மே எழுந்து நின்னுகை தட்டுச்சு! அத ரசிக்க ஒரு யானை வேண்டும்...சே ஞானம் வேண்டும் ரீச்சர்!
திருவனந்தபுரம் வரைக்கும் வந்த டீச்சர்...நாலு மணிநேர பயணத்திலே தா இருக்கு போட்ஹவுஸ் இருக்கற ஊரு..வந்திருக்கலாம்.
ஏதாவது வேண்டுதலா டீச்சர்..ஒரே கோவில் விசிட்டா இருக்கு!!!!
ஆஹா கோபால் சார் வேஷ்டி கட்டிகிட்டு இருப்பதை பார்த்தா நான் குசும்பன் கல்யாணத்திலே 4 இண்ச் அகல மயில்கண் கட்டிகிட்டு இழுத்து இழுத்து நடந்தது தான் நியாபகம் வருது!
சாரி ரீச்சர்! நான் என்ன பண்ணட்டும். வேற ஒரு பதிவும் மாட்டலை. எனக்கு மட்டும் தான் இப்படி நடக்குதா? இன்னிக்கு லீவ்! 10 மணி வரை தூங்கலாம். ஆனா காலை 5க்கு முழிப்பு வருது. ஆனா பாருங்க மத்த நாள்ல 5க்குவராம அவசர அவசரமா எழுந்து ஓடி அவ்வ்வ்வ்வ்வ்.... முழிப்பு வந்தா உங்க பதிவு அதான் கொட்டி தீர்த்துட்டேன். ஏன்னா நான் நாளை நிறைய எழுதனுமே ரிசல்ட் ஆச்சே. ஏற்கனவே ஆபீஸ்ல சொல்லியாச்சு . அதனால இப்ப ஜூட்!
சபரியின் முதல் ஆங்கிலப்பிறந்தநாளுக்குப்போனோம்.. அப்ப அங்கயே அந்த சந்தனக்கலர் ஜிப்பாவ்ம் அவங்கக்க்காவுக்கு சந்தனக்கலர் பாவாடை சட்டையும் வாங்கி.. அவங்களை மலையாளத்துக்காரங்களாக்கிக் கூட்டிட்டுபோனோம்.. கூட்டமுன்னா கூட்டம் நானும் எதோ பாத்தேன்னு தான் பாத்துட்டு வந்தேன்.. சன்னதி வாசல்படியில் எங்க அத்தை கழுத்துக்கு நேரா ஒரு அம்மா கையை குறுக்கக்குடுத்து தள்ளூமுள்ளுல ஒரே கலவரமாப் போச்சு... ஹ்ம்.. திருப்பதியே தேவலாம்ன்னு ஆகிப்போச்சு..
உள்ளேன் டீச்சர் !
பல நாட்களுக்கு பிறகு பின்னூட்டம் எழுதியிருக்கேன்... :(
அனந்தனின் அடியும் முடியும் காண முடியவில்லையா ? வளரும் சுற்றுலா பயணிகளின் உபய :( சன்னிதியும் இருட்டாக இருக்கும். விடிகாலையில் (4 மணி) இவ்வளவு தள்ளுமுட்டு இருக்காது.குழலூதும் கண்ணன் அருமையான இசை விருந்தைப் படைத்து மாப்பு கேட்டானா ?
வெளிப்பிரகாரத்தில் மடப்பள்ளியில் பிள்ளையார் இருப்பாரே ..பார்த்தீர்களா ?
ஆட்டுக்கால் பகவதி கோவில் செல்ல நேரம் கிடைத்ததா ?
உங்களுடன் தென்தமிழ்நாட்டு பயணம் இனிமையாக இருக்கிறது.
திரு அனந்தபுரம் புகை படங்கள் கட்டுரை அருமை.
எங்கே நானில நந்கையர்கள் அழகை எல்லாம் விட சிறந்த நாஞ்சில் நாட்டின் தலைநகராம் நாகர்கோவிலின் புகைப்படங்கள், கட்டுரைகள்.
குப்பன்_யாஹூ
கேரள கோயில்கள்ள நுழையும்போது பிரம்மாண்டத்தை விட பயபக்திதான் மனதில் நிற்கும். உண்மையிலேயே பிரம்மாண்டமான திருமேனி அவர். கோயில் முன்னாடி ஒரு கடிகாரம் இருக்கு. மணி அடிக்கும் போதெல்லாம் அந்த முகம் வாய திறந்து சிரிக்கும்.அதே சமயம் அது முன்னாடி இருக்கும் இரண்டு ஆடுகளின் பொம்மை ஒன்றோடொன்று தலையை முட்டும்.அதுக்கு (வைக்கப்பட்ட) பேர் வாய் பிளந்தான் மணி. இந்தப்பயணம் நீங்க கைய பிடிச்சு கூட்டி போன மாதிரி இருக்கு.டாங்கிஸு.
பதிவுகள் எல்லாம் விடாம படிச்சுக்கிட்டிருக்கேன். அவ்வப்போது குறிப்பு எடுத்து வச்சுக்குவீங்களா டீச்சர்?.
படங்கள் அருமை.
\\புரிஞ்சு போச்சு. 'துளஸிதளமுலசே' பாடறாங்க. தியாகராஜர் கீர்த்தனை. மாயா மாளவ கௌள ராகம். (உடல்பொருள் ஆனந்தி நினைவில் வருதே) துளசிதளமுலசே...சந்தோஷமுகா பூஜிஞ்சு....துளசி.....
\\
ஒ..
அடுத்த தடவை பத்மாநாபாச்வாமி கோவில் போனா, ... சுற்றி வரும் பொழுது, பின் பக்கம் சுவாமியின் படம் ஓன்று, பெரிதாக வறைந்துஇருப்பார்கள் , அதை பார்த்து , மனதில் வாங்கிக்கொண்டு , பின் ஒரு முறை தரிசனத்திற்கு போனால், அந்த குறைந்த வெளிச்சத்திலும் , சுவாமியின் முகம், உடம்பு, கால் எல்லா விவரமும் அந்த மூன்று வாசல்களின் வழியாக மனதில் நன்றாக பதியும்....ஒரு நான்கு ரூபாய்க்கு டிக்கெட் வாங்கினால், அனுமார் சிலைக்கு அருகில், ஒரு கல் மண்டமம் இருக்கு, பார்க்க வேண்டிய இடம். ..போன வாரம் அங்கு தான் இருந்தேன் , மிஸ் பண்ணிட்டோனோ என்னோவோ
//நான் இந்தக் கோயிலுக்குச் சரியா நாற்பது வருசத்துக்கு முந்தி ஒருமுறை வந்துருக்கேன். கொஞ்சமாக் கொசுவத்தி ஏத்திப் பார்த்தேன் மனசுக்குள்ளில்//
ஞாபகசக்திக்கு எதும் ஸ்பெசலா சாப்புடுறீங்களா இல்ல பயிற்சி எதாவது இருக்கா டீச்சர்...
வாங்க குமார்.
அட! இது 'பாபா' ஸ்டைலா? ஆஹா....
குறைஞ்சபட்சம் தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகளுக்குப் புதிய 'நக்ஷத்ரம்' கிடைச்சாச்சு:-))))
வாங்க சகாதேவன்.
'தனி' வாசிப்புதாங்க தூள் கிளப்பும். அசராம ஒருத்தரையொருத்தர் விஞ்சும் இடங்கள்..... அனுபவிக்க மக்களுக்குப் பொறுமை இல்லை(-:
வாங்க வல்லி.
இந்தியாவில் எங்கே போனாலும் கூட்டமே கூட்டம்தான்.
வரிசையில் விட்டுருந்தாப் புலம்பச் சான்ஸ் இருந்துருக்காது.
ரொம்பப் பெரிய கோவில் இல்லைப்பா.
இன்னொருக்கா இன்னொரு பயணத்துலே போனால் ஆச்சு.
'அவனே கூப்பிடட்டும்'
வாங்க தேவன்மயம்.
அகலத்துக்கு ஏத்த உயரமில்லை பாருங்க, அதான் குள்ளமாக் கிடக்கு.
வாங்க அபி அப்பா.
அப்ப இந்த 'வெள்ளி' நல்லாத்தான் விடிஞ்சுருக்கு உங்களுக்கு:-))))
கல்யாண ரிசெப்ஷனுக்கு எல்லாம் பெரிய செட்டா?
ஆஹா...... கொடுத்துவச்சவர் நீங்க.
நானும் ஒரு ரெண்டுவருசம் முன்னே கத்ரி கச்சேரிக்குப் போகும் வாய்ப்பு கிடைச்சது. அதுக்கே ஒரேதா மகிழ்ந்து போயிட்டேன்.
சுட்டியைப் பாருங்க.
http://thulasidhalam.blogspot.com/2007/02/2.html
வாங்க கயலு.
அண்ணத்தையை 'ஜிப்பா'வோட உள்ளே விட்டாங்களா?அட!!
ஒழுங்குமுறை இல்லாமக் கூட்டமா விடறது ரொம்பவே பேஜாரா இருக்குல்லே?
வாங்க சிந்து.
ஆமாம்ப்பா. வேண்டுதல்தான். தமிழ் இன்னும் நல்லா எழுதவரணுமுன்னு நேர்ச்சை வச்சுருந்தேன்!!!
வாசகர்வட்டம் பெருகணுமுன்னு 'பப்பநாபனைப் பார்க்கப்போனேன்'னு சொன்னா நம்புங்க ப்ளீஸ்:-))))
போட் ஹவுஸ், மிஸ் ஆகிப்போயிக்கிட்டே இருக்கு. வரும்போது வரட்டும். அதுக்கும் ஒரு நேர்ச்சை வச்சுறலாமா?
வாங்க தமிழன் -கறுப்பி.
எங்கே ஆளையே காணோம்?
வழக்கத்துமாறா அதென்ன ஒரே ஒரு பின்னூட்டம்?
உடம்பு சரியில்லையா என்ன? :-)
வாங்க மணியன்.
அதிகாலை நாலுமணிக்கு?
கனவுலேதான் கடவுளைக் காணும் நேரம்!
அன்றைய மாலைவரை சுத்தலோ சுத்தல் தான். கூடவே வர்றதுக்கு நன்றி.
வாங்க குப்பன் யாஹூ.
நீங்க நாகர்கோவில்காரர்தானே?
அத்தனை தூரம் போயிட்டு, அரவக்கோனைக் காணாமல் இருந்திருப்பேனா?
பதிவுகள் வந்துக்கிட்டே இருக்கு:-)
வாங்க ஐம்கூல்.
ஆட்டுக்கடியாரம் போனமுறை பார்த்தேன். இந்தப் பயணத்தில் அது பற்றிய நினைவே இல்லை......
புலம்பல் கூடிப்போனதால் மற்றவைகளை மறந்துருந்தேன்(-:
சிட்னி நகரில் ஒரு தலை வெட்டும் கடிகாரம் இருக்கு!!!!
வாங்க மதுரையம்பதி.
கூடவே வர்றதுக்கு நன்றி.
குறிப்பெல்லாம் இதுவரை எடுத்துக்கலை. மனசில் பதிச்சு வைக்கிறதுதான்.
ஆனால்..... இனிமேல் போகும் பயணங்களில் குறிப்பு எழுதத்தான் வேணும்போல. ஞாபகமறதி வர ஆரம்பிச்சுருக்கு.
இதுதான் யானைக்கும் அடி சறுக்கும்!!!!
வாங்க கோபி.
//ஓ...//
எது? 49 ஓ வா?
வாங்க அது ஒரு கனாக் காலம்.
மனசுலே இவர் இருக்கார்தான். இப்போத்தானே நவதிருப்பதிகள் முடிச்ச கையோடு அங்கே போனோம்.
சாமியை ஒரு வினாடி பார்க்கக்கூட முடியாமக் கூட்டம் அடைஞ்சு போச்சுங்க. அதான் மனக்குறை.
அந்த நாலுரூபா டிக்கெட்டைப் பார்க்கலையே......
வாங்க தீப்பெட்டி.
எல்லாம் இதுவரை மனக்குறிப்புதான்.
சாப்பாடு கூடுதல் ஸ்பெஷல் . வெறும் சோறு:-))))
டச் விட்டுபோச்சு நான் வந்து ஒரு மாசம் அக போகுதுன்னு நினைக்கிறன் எப்படி இருகீங்க பத்மநாபனைக் மார்ச் ல தான் போய் பக்க முடுஞ்சுது நீங்க சொன்ன மாரிதான் பயங்கரமனா கூட்டம். திருவடி பக்கம் ஒரு பட்டர் நால்ல மறசுடார். முன்னெலாம் மேலேயே போய் பக்கமா பாக்கலாமா எனக்கு அந்த குடுபனை கிடைகளை. திருக்கரம் மட்டும் நல்ல பாத்தேன்
வாங்க அருண்மொழி.
நான் கரமும் பார்க்கலை(-:
ஆனா அதுக்கு ஒரு காம்பன்சேஷன் கிடைச்சது மறுநாள்:-)
நன்றி துளசி கோபால்.
கர்நாடக சங்கீதம் பெரிசா ஒன்னும் தெரியாது. பாடற விதம் மனசுக்குப் புடிச்சா கேட்பேன். ஒரு பைத்தியக்காரத்தனம் பண்ணுவேன். ஒரு பாட்டு புடிச்சிருந்தா அந்தப் பாட்டு உள்ள எல்லா சிடியும் வாங்கிடுவேன். உதாரணம் பஞ்ச ரத்ன கீர்த்தனை. ஏழு சிடி வெச்சிருக்கேன்.
அப்புறம் 2007 இல் திருவனந்தபுரம் போயிருந்தேன். திவ்யதேசம் பற்றி எழுதும்போது அதை எழுதுகிறேன்.
உங்க பயணக் கட்டுரை நல்லா இருக்கு. போட்டோ, அங்கே நடந்த சுவாரஸ்யமான தகவல்களுடன். நானும் முயற்சி செய்கிறேன். ஆனால் போட்டோ பெரிதாக எடுத்து வைத்துக் கொள்ளவில்லை.
வாங்க கோபி ராமமூர்த்தி.
உங்க திவ்ய தேசம் பதிவுகள் அருமையாகவே இருக்கு. இத்தனை கோவில்களுக்கு நான் போனதில்லை.
அந்த 107 யும் பார்க்கக்கிடைக்குமான்னு தெரியலை. 108 மட்டும் கன்ஃபர்ம் ஆகிருச்சுன்னு பெருமாள் சொல்லிட்டார்.
இப்பதான் டிஜிட்டல் கேமெரா வந்து படம் எடுப்பதை அவ்வளவாகச் செலவில்லாத சமாச்சாரமா ஆக்கிருச்சே:-)
திவ்யதேசம் பற்றிய என் பதிவில் தங்கள் இடுகையைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
நான் முன்பே அனுமதி கேட்டிருக்க வேண்டும். தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி
http://ramamoorthygopi.blogspot.com/2010/11/6.html
வாங்க கோபி ராமமூர்த்தி.
நோ ஒர்ரீஸ்.
நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்ப்பில்லை:-)
அருமையான பதிவு.
வணக்கம் அம்மா.
Post a Comment