70MM படம் பார்க்குறாப்போல இருக்கு, இந்தக் கோயில் கோபுரம். இந்த அகலத்துக்கு உயரம் இன்னும் மேலே போயிருக்கணுமே நம்ம மதுரை மீனாட்சி கோவில் போல......யாரு குறுக்கே வந்துருப்பாங்க இதைக் கட்டுனப்ப?
சோம்பேறிக்குத் தோல் உரிச்ச வாழைப்பழம் என்பது போலப் படுக்கையில் இருந்தே தலையை மட்டும் ஜன்னல்ப்பக்கம் திருப்பினால் கிழக்கே கடலும் விவேகானந்தர் நினவு மண்டபமும் தெரியுது. ஜன்னலுக்குப் பக்கத்தில் போய் நின்னால் அய்யனையும் தரிசிக்கலாம். நேத்துமாலை ஜன்னல் திரைகள் திறந்திருக்கும்போதுதான் இதைக் கண்டுபிடிச்சேன். ஆஹா..... இப்படி ஒரு வசதி இருக்கேன்னு இரவில் திரைகள் ஒன்னையும் மூடிவச்சுக்கலை. மூணாவது மாடியில் யார் வந்து எட்டிப் பார்க்கப்போறாங்கன்ற அசட்டைதான். சூரியன் உதயமாகுதான்னு காலையில் படுக்கையில் இருந்தபடியே கவனிச்சுக்கிட்டு இருந்தேன். இன்னைக்கும் புகை மூட்டத்தில் ரெண்டு முழம் உயரத்தில் வந்த பிறகுதான் எட்டிப் பார்த்தார்.எழுந்து சூரியனைப் படம் எடுத்துட்டு ( இங்கே வந்தநாள் முதல் சூரியன், வள்ளுவன் இப்படியாப்பட்டப் பெரிய சமாச்சாரங்களைப் பொழுது விடிஞ்சதும் படம் எடுப்பது தினசரிக் கடமைகளில் ஒன்னு) மற்றவைகளை முடிச்சுக்கிட்டு கட்டிட வாசலுக்கு வந்ததும் ரமேஷ் காரைக் கொண்டுவந்து நிறுத்துனார். நாகர்கோவில், மார்த்தாண்டம், பாறசாலா வழியா பாலராமபுரம் ரோடில் ( ஹைவே 47) திருவனந்தபுரம் நோக்கிப் பயணம். நகருக்குள்ளே சீக்கிரம் போயிட்டா 'ட்ராஃபிக் ஜாம்' அவதி இல்லாமத் தப்பிக்கலாமுன்னு நினைச்சாலும் முடியலை. இத்தனைக்கும் காரை விரட்டோ விரட்டுன்னு ஓட்டுனார் ரமேஷ். 'சட்'னு பார்க்கக் கொஞ்சம் முரட்டு ஆசாமி போல இருக்கும் இவர் ஒரு பலாப்பழமுன்னு கொஞ்சநேரத்துலே புரிஞ்சுபோச்சு:-)))))
சும்மாச் சொல்லக்கூடாது..... வரும் வழியில் அங்கங்கே பார்த்த சர்ச்சுகள் எல்லாம் ரொம்பவே அழகு. ஒவ்வொன்னும் ஒரு டிசைனில் அட்டகாசம். வேகமான ஓட்டத்தில் சரியா வரலைன்னாலும் க்ளிக்கி வச்சேன்.
நாராயணகுரு பிறந்த ஊரு இதுன்னு நினைப்புஊருக்குள்ளே நுழையும்போதே கோலோச்சும் கட்சியை நினைவூட்டும் செங்கொடிகள் சாலையின் ரெண்டு பக்கம், போற வர்ற சாலைகளை நடுவில் பிரிக்கும் மீடியன் மேடுன்னு ஒன்னையும் விட்டுவைக்கலை. ஒருவழியாக் கோவில் வாசலில் போய் இறங்கினோம். அந்த நேரத்திலும் நல்ல கூட்டம்தான். நமக்கு வலப்பக்கம் சுற்றுச்சுவர் வச்சுக் கட்டின பிரமாண்டமான குளம். 'பச்சை'த் தண்ணீர். இங்கே மன்னரே சிலசமயம் குளிப்பார் என்று கேள்வி. படு சுத்தமா இருந்துச்சு.
அந்தந்த இடங்களுக்குன்னு ஒரு ட்ரெஸ் கோட் இருப்பதை நினைவில் வச்சுப் பயணத்துக்கு ஒரு புடவையை ஞாபகமாக் கொண்டுபோயிருந்தேன். கோபாலுக்கும் ஒரு வேஷ்டியும் துண்டும். கோயில் படி ஏறி முகப்புக்குப் போனதும் ஹேண்ட் பேக் கொண்டு போகலாம். ஆனால் கெமெரா கூடாதுன்னாங்க. பக்கத்துலே உடைகள் வைக்கும் அறையும், பொருட்களைப் பாதுகாக்கும் அறையும் இருக்குன்னதும் அங்கே போய் கோபாலின் ஷர்ட்டைக் கழட்டிக் கொடுத்தோம். நான் ரமேஷைத் தேடுனா ஆளைக் காணோம். அவரை செல்லில் கூப்பிட்டுக் கெமெராக்களைக் கொடுத்துட்டுக் கோவிலுக்குள்ளே போனோம்.
பத்தடி உயர வெங்கலக் குத்து விளக்குகளும் உருளிகள் தாம்பாளம் வகைகளும் முன்மண்டபத்துலேயே இருக்கு. உள்ளே கடந்து சுவாமி மண்டபத்துக்கு இடப்புறம் வரிசையில் நின்னோம். ஏதோ விசேஷ வழிபாடோ என்னமோ..... யாரையும் உள்ளே விடாமல் வரிசை அப்படியே தேங்கிக் கிடந்துச்சு. நான் இந்தக் கோயிலுக்குச் சரியா நாற்பது வருசத்துக்கு முந்தி ஒருமுறை வந்துருக்கேன். கொஞ்சமாக் கொசுவத்தி ஏத்திப் பார்த்தேன் மனசுக்குள்ளில்.
அப்போ இந்த வரிசையெல்லாம் இல்லை. பாரம்பரிய கசவு முண்டு செட் உடுத்திய பனிரெண்டு பெண்கள் கையில் தாலப்பொலியோடு முன்மண்டபத்தில் நின்னுருந்தாங்க. கோவிலின் கர்ப்பக்கிரகத்தின் வெளிப்புறங்களில் வரிசைகளாச் சட்டம்அடிச்சு வச்சுருந்த விளக்குகளில் எண்ணெய் ஊற்றிக்கிட்டே ஒருத்தர் போக இன்னொருத்தர் அவைகளைப் பத்தவச்சுக்கிட்டே வந்தார். கேரளக் கோயில்களில் இது ரொம்ப சகஜம். அரையடி இடைவெளிவிட்டுப் பித்தளைச் சட்டங்கள் அடிச்சு அதில் அகல்கள் பொருத்தியிருப்பாங்க. கோவில் சுவரின் உயரத்தைப் பொறுத்து ஏழெட்டு வரிசைகளா இருக்கும். (மலையாளத் திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்) விசேஷ நாட்களில் இப்படி எல்லாம் விளக்குகள் வச்சு அலங்கரிப்பது பார்க்க ரொம்ப அழகா இருக்கும். மன்னர் வரப்போறாறாம். அன்னிக்கு என்ன விசேஷமுன்னு விசாரிச்சப்ப விசாக நட்சத்திரமாம். அட! இது என்னோட ஜென்ம நக்ஷத்ரமாச்சேன்னு தரையில் கால் பாவாம மிதந்தேன்:-))))
மண்டபத்தில் ஏறி அகலமான மூன்று வாசல்வழியாக அனந்தன் மேல் ஒய்யாரமாப் படுத்திருக்கும் பத்மநாபனைக் கும்பிட்டதும், எங்க குழுவில் சிலர் கீழே விழுந்து கும்பிட யத்தனம் செஞ்சப்ப ' இவிடே பாடில்லா' கீழே இறங்கி முன்பக்கம் போய் விழுந்து கும்பிடலாமுன்னு சொல்லியனுப்பின ப் போத்தியை, நம்பூதிரின்னு நினைச்சுக்கிட்டதும், ஒருத்தர் மைய்யாக இருக்கும் ஈரச் சந்தனத்தைக் கிள்ளி நம் கையில் எறிஞ்சதும் அது 'சொத்'ன்னு கையில் வந்து ஒட்டியதும், வலக்கையில் ஒட்டுனதை இடக்கைக்கு மாத்திப் பின் வலக்கையில் தொட்டு நெற்றியில் வச்சதும் எல்லாம் மனத்திரையில் ஓடுச்சு.
இன்னும் கூட்டம் வந்து சேர்ந்துக்கிட்டே இருக்கு எங்கள் பின்னால். ஒருவழியாக உள்ளே அனுப்புனாங்க. அப்பவும் கொஞ்சம் கொஞ்சமா அனுப்பாம எல்லோரையும் 'கேறிக்கோ, கேறித் தொழுதோ'ன்னு அனுப்பிக்கிட்டே இருக்காங்க. கால்வைக்க ஒரு துளி இடம்கூட இல்லை. மீன் டின்களில் இருக்கும் சார்டீன் மீன்கள் போல நெருக்கமா தள்ளும் முட்டும். ( ஐயோ...கோவில்லே போய் என்ன உதாரணம் சொல்றேன் பாருங்க(-: போகட்டும் மச்சாவதாரம் செஞ்ச சாமிதானே இவர். எங்களுக்கு முன்னும் பின்னும் அடர்த்தியா மனிதர்கள். மூச்சு முட்டும்விதமா இருக்கு. முன்னால் நிற்கும் சனம் நகரமாட்டேங்குது. 'ஜருகு ஜருகு சொல்லவோ, மதி..... போய்க்கோ' ன்னு விரட்டவோ யாருமில்லை. நாங்களே மில்லிமீட்டர் மில்லிமீட்டரா நகர்ந்துக் கூட்டத்துக்குள்ளில் இருந்து பிய்ச்சுக்கிட்டு வெளியில் வந்தோம்.
"என்னங்க, சாமி உங்க கண்ணுக்காவது தெரிஞ்சாரா?"
"கொஞ்சூண்டு தெரிஞ்சார். நீ பார்த்தியாம்மா?"
"ஓ பார்த்தேனே.... முன்னாலே இருந்த கூட்டத்தின் முதுகையெல்லாம்"
இந்தக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வரிசையில் விட்டுருந்தால் வரிசை நகர நகர ஒரு வினாடியாவது தரிசனம் கிடைச்சிருக்கும். மனசில் ஒரு புலம்பலோடு நடந்தேன். ஆமாம்.....முந்தியெல்லாம் பிரமாண்டமாத் தெரியும் மண்டபமும் வாசல்களும் இப்போ ஏன் குறுகிக்கிடக்கு? அதெல்லாம் அப்படியேதான் இருக்கு. இடிச்சுக் கட்டுனாங்களா ? என்ன ஒன்னு இத்தனை வருசத்தில் நம்ம பார்வைதான் ரொம்பவே விரிஞ்சுபோச்சு.பிரகாரத்தைச் சுற்றிவந்து, திண்ணைவச்ச நடை வழியா வெளிப்பிரகாரத்துக்கு வந்தோம். கருங்கல்லில் ஆன பெரிய தீபஸ்தம்பம் ரொம்ப மாடர்னா மின்சார விளக்குக்கு மாறியிருக்கு. அகலில், தடிச்ச திரிக்குப் பதிலா பல்ப். அடக் கடவுளே...... ஐஸ்வரியக்கேடல்லே இதொக்க........
வலப்பக்கம் ஒரு சின்ன மண்டபத்தில் இருந்து பாட்டுப் பாடும் ஒலி வருது. மண்டபத்தின் முன்னே ஒரு சின்ன வாசல். அங்கேயும் சின்னதாக் கூட்டம். எட்டிப் பார்த்தால் உள்ளே ஒரு இருபதடி தூரத்தில் சந்தனக்காப்பில் சாமி தெரியறார். அங்கே வெளியே இருந்த கூட்டத்தில் ஒரு அம்மா.... 'என்ன சாமின்னே தெரியலையே'ன்னு சொன்னதுக்கு நம்ம ஆளு பதில் சொல்றார் முருகன்னு. அந்தம்மா 'முருகா முருகா'ன்னு கன்னத்துலே போட்டுக்கறாங்க. பெருமாள் கோவிலில் முருகனான்னு நான் உத்துப் பார்த்தால் அது குழலூதும் கிருஷ்ணன். ஸ்ரீவேணுகோபாலன். தலையைக் கொஞ்சம் உசத்திப் பார்த்தால் ஸ்ரீக்ருஷ்ணன்னு மலையாளத்தில் எழுதி இருக்கு வாசப்படி மேலே. சின்னதாக் கோபாலை முறைச்சுப் பார்த்து, இதா முருகன்னா........ தப்பாச் சொல்லிட்டேங்கறார்!!!
மண்டபத்தில் மிருதங்கம், வயலின், ரெண்டு பாடகர்கள் இருக்கும் குழுவில் சங்கீதம் இழைஞ்சு வருது. தெரிஞ்ச பாட்டா இருக்கேன்னு ஒரு கணம் முழிச்சேன். புரிஞ்சு போச்சு. 'துளஸிதளமுலசே' பாடறாங்க. தியாகராஜர் கீர்த்தனை. மாயா மாளவ கௌள ராகம். (உடல்பொருள் ஆனந்தி நினைவில் வருதே) துளசிதளமுலசே...சந்தோஷமுகா பூஜிஞ்சு....துளசி.....
"டேய் க்ருஷ்ணா.... அங்கே தரிசனம் சரியாக் கிடைக்கலைன்னு நொந்த மனசுக்கு ஆறுதலா இங்கே இப்படி பாடி நான் உன்னைக் கண்டுக்கிட்டேன்னு சொல்றயா?"
கொஞ்ச நேரம் இருந்து பாட்டைக் கேட்டுக்கிட்டு இருந்தேன். ரசிகர்கள்தானே பாடகர்களுக்கு விருந்து. ஒரு சின்னப் புன்முறுவலோடு நம்மைக் கவனிச்ச பாடகர் ஒருவர் இன்னும் விஸ்தரிச்சுப் பாடினார். மற்றவரும் கூடச் சேர்ந்துக்கிட்டார். ஒரு பத்து நிமிஷம்போல நேரம் போனதே தெரியலை. தேன் குடிச்ச நரியை கோபால் பார்த்ததில்லை என்ற குறை தீர்ந்திருக்கும். தனி ஆவர்த்தனம் ஆரம்பிச்சது. வயலினும் மிருதங்கமும் போட்டிப்போட்டு ஜமாய்க்கிறாங்க. போலாம் போலாமுன்னு இவர் ஜாடை காமிச்சுக்கிட்டே இருக்கார். கண்டுக்காதமாதிரி இருந்து பார்த்தேன். சமாளிக்க முடியலை. நல்ல 'சங்கதிகள்' வரும்போது இவர் புரிஞ்சு ரசிக்கிறாரான்னு 'செக்' பண்ணும் பழக்கம் எப்படிச் 'சட்'னு போகும்?
மனசில்லா மனசோடு கிளம்பி வெளியில் வந்தேன். வெளிப்புற வாசல் பக்கத்தில் படங்கள், சின்ன விக்கிரகங்கள் எல்லாம் வச்சு விக்கும் கோவில்கடை இருந்துச்சு. சின்னதா உள்ளங்கையில் அடங்கும் சைஸில் அனந்தன் மேல் கிடக்கும் பத்பநாபனை வாங்கினேன். இது கோவிலே நடத்தும் கடையாம். வெளியில் இது இன்னும் மலிவாக் கிடைக்கும். போயிட்டுப்போறது போ.திவ்யதேசங்கள் நூற்று எட்டில் இந்தக் கோவிலும் ஒன்னு.
தொடரும்....:-)
Showing posts with label திரு அனந்தபுரம் பத்மநாபன். Show all posts
Showing posts with label திரு அனந்தபுரம் பத்மநாபன். Show all posts
Thursday, May 14, 2009
நான் பார்க்கலை....'அவர்' பார்த்துருப்பார்..........(2009 பயணம் : பகுதி 24)
Posted by
துளசி கோபால்
at
5/14/2009 06:18:00 PM
40
comments
Labels: அனுபவம், திரு அனந்தபுரம் பத்மநாபன்
Subscribe to:
Posts (Atom)
