Saturday, May 02, 2009

காந்திமதி, நீ என் செல்லக்குட்டி.....(2009 பயணம் : பகுதி 19)

இந்த ரெண்டுநாளா திருநெல்வேலி டவுனைச் சுத்திச் சுத்தி வந்ததால் எல்லா இடமும் சட்னு பழக்கப்பட்டது போல ஆயிருச்சு. நெல்லையப்பர் கோவிலுக்கு முன்னாலே தெருவிலே அழகான அலங்கார நுழைவு வாயில். மற்ற போக்குவரத்துகளைக் கவனிக்காமல் சைக்கிளில் போகும் மக்கள். இதுவரை பார்த்த ஊர்களில் இங்கேதான் சைக்கிள்களின் புழக்கம் கூடுதலா இருக்கு. பெருசா ரெண்டுமூட்டைகளை ஏத்திக்கிட்டு போறார் ஒருத்தர். முன்னாலேயும் பின்னாலேயும் ஆள் வருதா இல்லையான்னு கவனிக்காம அசால்ட்டா, ஒரு நீளமான ஏணியைச் சைக்கிளில் கட்டி எடுத்துட்டுப்போறார் இன்னொருத்தர்.

கோவிலுக்குள் நுழைஞ்சோம். சாமி 'பவர்' இல்லாமல் உக்கார்ந்துருக்கார்.
கெமெராவுக்குச் 'சீட்டு' எடுக்கணுமுன்னு சொன்னதும் எனக்குச் சொல்லொண்ணா மகிழ்ச்சி. கோவில் கொடிமரம் தேய்ச்சு மினுக்கி இருக்கு. வெள்ளை நந்தி நாக்கைச் சுழட்டிக்கிட்டு ராஜபார்வை பார்க்குது. எல்லாம் இருக்கும் இடம்தான்,வேறென்ன? அட்டகாசமான அலங்காரங்கள் கழுத்தைச் சுற்றிலும்.

நந்தி
கொடிமரம்
பார்வையைக் கொஞ்சம் தரையில் திருப்பினால்...... நேற்றைய மகாசிவராத்திரி விழாவின் கோலாகலங்களும் கோலங்களும்.
சுவாமி மண்டபத்துக்கு நாலைஞ்சு படியேறிப்போகணும். மண்டபத்தில் ஒரு அம்மாவும் பிள்ளையும் செல்லம் போல இருந்தாங்க. கூடவே நம்மாளும். இவர் இல்லாத கோவில்களே கிடையாது:-) சுவாமிக்கானக் குட்டிப் பல்லக்கு அழகா ஒரு ஓரத்தில்.
இருட்டிலேயே தடவித்தடவி நடந்து நெல்லையப்பரை தரிசிச்சோம். வெளிப்புறப் பிரகாரங்களில் இயற்கையான வெளிச்சம் இருந்துச்சு. நாங்க போனதும் முற்பகல்தானே? பிரமாண்டமான பிரகாரங்களைச் சுற்றிப் பார்த்துக்கொண்டேஏஏஏஏஏ........... போகிறோம்.
சிற்பங்களைக் கல்லிலே இழைச்சு வச்சுருக்காங்க. நெசமாவே இதெல்லாம் கல்லுதானான்னுத் தொட்டுப் பார்த்தேன். என்னமோ களிமண்ணுலே இஷ்டத்துக்கு இழுத்துவளைச்சுச் செஞ்சதுபோல.....கல்லு எப்படித்தான் சிற்பிகளின் விருப்பத்துக்கும் எண்ணத்துக்கும் வளைஞ்சு கொடுத்துருக்குன்னு ஒரே வியப்பு. ஒவ்வொன்னும் நுட்பமான வேலைப்பாடு. ஒரு தூணைக்கூடச் சும்மா விட்டுவைக்கலை. யானைகளாத் தாங்கி நிக்குதே ஒவ்வொன்னையும். நிதானமாப் பார்க்கணுமுன்னா ஒரு நாலு நாள் வேணும்போல இருக்கே.
ராவணேஸ்வரனுக்கு ஒரு சிற்பம். வலைக்கம்பிக் கதவு போட்டுப் பூட்டி இருக்கு. இந்த ராவணன் சிலைக்குப் பின்னால் சுரங்கப்பாதை ஒன்னு இருப்பதாகவும் அது மதுரைவரை போகுதுன்னும், பாண்டிய மன்னர்கள் காலத்துச் சமாச்சாரமுன்னும் ஒரு 'கதை' இருக்கு. இதுக்குப் பக்கத்துலேயே ஒரு இடத்தில் தலையைக் கொஞ்சமா நீட்டி ஒரு ஆமை எட்டிப்பார்க்க அதன் முதுகின்மேல் ஒரு மலை. அச்சச்சோ...கோவிலுக்குள்ளே ஆமை பூந்துருச்சு..... அங்கிருந்து வலப்பக்கம் வந்தால் ரெண்டு பக்கமும் யானைச்சிற்பங்கள் உள்ள கற்றூண்கள் தாங்கி நிற்கும் அழகிய மண்டபத்துக்கு நேரா தாமிரசபை.
பெயருக்கேத்தாற்போல் தாமிர ஒடுகள் வேய்ஞ்ச மண்டபம். சுத்திவர மரவேலைப்பாடுகள் பிரமிக்கவைக்குது. (இதைப்போல ஒரு மரவேலைப்பாடு உள்ள நேபாளக்கோவில் மண்டபத்தை ஆஸ்தராலியாவில் ப்ரிஸ்பேன் நகரில் பார்ந்த நினைவு) மண்டபத்தை உள்ளே போய்ப் பார்க்கமுடியாதபடி பூட்டி வச்சுருந்தாங்க. சிவனைத்தவிர வேற யாரும் ஆடக்கூடாதுன்னோ என்னவோ......

சிவபெருமான் நடனமாடிய ஐந்து சபைகளில் இது ஒன்னு. சிதம்பரத்தில் கனக சபை, மதுரையில் ரஜத சபை, இங்கே தாமிரசபை, குற்றாலத்தில் சித்திர சபை திருவாலங்காடு ரத்தின சபை. ஆனந்தத் தாண்டவம், சந்தியா தாண்டவம், முனித் தாண்டவம், திரிபுரத்தாண்டவம், காளித் தாண்டவம் இப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு உணர்ச்சிகளில் தாண்டவமாடிட்டார்.

சபையைச் சுற்றி வந்தப்ப அடுத்தபக்கத்துப் படிகளில் ஒரு பெரியவர் இருந்தார். சாந்தமான முகம். வணக்கம் சொன்னேன்.
"ஒற்றைக்கொம்பன் விநாயகனைக் கைத்தொழ
எற்றைக்கின்பம் தானேவரும்" என்றார். இதுலே என்ன சந்தேகமுன்னு கொஞ்சம் பேச்சுக் கொடுத்தேன். தமிழறிஞர் நெல்லை கா.சு.மணி அவர்கள். கல்லத்தித் தெருவில் வசிக்கிறார்.(கார்டு வாங்கிக்கிட்டேன்)
ஐயா

விநாயகனின் மகிமை, விநாயகனின் மூலம் அறியக்காணும் தத்துவம், சைவ சித்தாந்தக் கோட்பாடுகள், அண்டமும் பிண்டமும், தேர்த்திருவிழாவின் தத்துவம், திருமந்திரம், அரசியல் இப்படித் தலைப்புகளில் எழுதி அச்சடிச்ச தாள்களின் கொத்து (16 பக்கம்), அவருடைய பையில் இருந்து எடுத்துக் கொடுத்தார். படிச்சுப் பார்த்துட்டு வலையில் போட்டுவைக்கிறேன்னு சொன்னேன்.

முரண்பாட்டில் ஒரு முழுமைன்னு விநாயகனை விவரித்துச் சொன்னார். நான் ஆவலாக் கேட்டுக்கிட்டு அப்பப்பப் பதில் சொல்லிக்கிட்டு இருந்தேன். இந்த சத்சங்கத்தால் கவரப்பட்ட ஒரு இளைஞர் கூட வந்து சேர்ந்துக்கிட்டார். அவர் பெயர் கருப்புசாமியாம். அவருடைய மனைவியும் கூட இருந்தாங்க. ரொம்பச் சின்னவயசா இருக்காரேன்னு பார்த்தால் மூணு பிள்ளைகளாம். நம்பவே முடியலை.. நேற்று அவுங்களும் திருச்செந்தூர் போயிட்டு வந்துருக்காங்க. அங்கே பஞ்சலிங்கம் பார்த்தீங்களான்னு அவுங்க கேட்டதும்..... அடடா...கோட்டைவிட்டுட்டோமேன்னு இருந்துச்சு. தமிழய்யாகூட எல்லாருமாக் கொஞ்சநேரம் கதைச்சோம். நம்ம கருப்புச்சாமி இருக்காரே, இவர் சிவகாசிக்காரர். அச்சகம் வச்சுருக்காராம். ஐயாவுக்கு விஸிட்டிங் கார்டு இலவசமா அச்சடிச்சுத் தரேன்னு சொன்னார். நல்ல மனிதர்கள் நிறையவே இருக்காங்கப்பா.
கருப்புச்சாமி

எந்தப் பக்கம் இருந்து படம் பிடித்தால் தாமிரசபை முழுசும் அடங்குமுன்னு ஐயா, கோபாலுக்குச் சொல்லிவச்சார்:-) நாங்க அங்கிருந்து கிளம்பி வலம்வந்து குபேரலிங்கத்தைத் தரிசிச்சுக்கிட்டோம். இவருடைய துவாரபாலகர்கள், தண்டீஸ்வரரும் முண்டீஸ்வரரும். நூற்றுக்கால் மண்டபம் அருமை.

நீரழிமண்டபதோடு கோவில் தெப்பக்குளம் விஸ்தாரமா பரந்து விரிஞ்சிருக்கு. மொத்தக் கோயிலும் 14 ஏக்கராமே. கோயிலைச் சுத்திதான் ஊரே வளர்ந்துருக்கு நம்ம மதுரையைப்போல. குளத்தில் ஏராளமான மீன்கள்.
புலியைப்பார்த்துப் பூனை சூடு போட்டுக்கிட்டது. நம்ம இளவஞ்சியைக் காப்பியடிச்சு நானும் ஒன்னும் எடுத்தேன்:-))))

அப்படியே நம்ம காந்திமதியம்மனையும் போய்ச் சேவிச்சுட்டு வந்தோம். ரெண்டுமே தனித்தனிக் கோவிலாத்தான் இருந்துச்சாம். இதை இணைச்சு மண்டபம் ஒன்னு கட்டுனது சில நூற்றாண்டுகளுக்கு முன்புதானாம்(1647 கி.பி). இந்த மண்டபத்தை அம்மா மண்டபமுன்னு சொல்றாங்க. அன்னிக்கு எதோ கூட்டம் நடக்குறாப்போல நிறைய வெள்ளைவேட்டி ஆண்கள் ரெண்டுபக்கமும் வரிசையாத் தோளில் துண்டோடு உக்கார்ந்துருந்தாங்க. ஒரு பக்கம் மூட்டைகளா அடுக்கி வச்சுருக்கு. நெல்வேலி நெல் மூட்டைகள்? ஒருவேளை கோயில் நிலத்துக்கானக் குத்தகைக்காரர்களா இருக்கலாமோன்னு நினைச்சேன். தொந்திரவா இருக்கவேணாமுன்னு 'சட்'னு அந்த இடத்தை கடந்து போனேன் அம்மனை நோக்கி. அலங்கார பூஷிதை, அப்படியே அண்ணன் மாதிரியே:-) (பாவம். புருஷந்தான் பேயாட்டம் ஆடறார்)

தலவிருட்சமா மூங்கில் புதர் ஒன்னு இருக்கு. கோயில் முழுசும் சிற்பங்கள் அப்படியே மனசை வாரிக்கிட்டுப்போகுது. ஒன்னு விடாமச் சுத்திப்பார்க்கணுமுன்னு மனசு நினைச்சாலும்....... இந்த பிரமாண்டத்துக்கே ஒரு வாரம் வேண்டி இருக்கும்போல. இவ்வளோ நல்லா இருக்குமுன்னு தெரிஞ்சிருந்தா இன்னும் ரெண்டு நாள் கூடச்சேர்த்திருக்கலாம்.

பிள்ளையாரைப் பார்த்துட்டுப் பிரகாரத்தில் திரும்புனதும் அதோ.... நம்மாளு 'ஆடி அசைஞ்சு' நின்னுக்கிட்டு இருக்கார். செல்லம்போல அந்தச் சின்னக்கண்ணாலே கொஞ்சல் பார்வை. பெயர் என்னவா இருக்கும்? வேறென்ன நம்ம 'காந்திமதி'தான்.
'சட்'னு (தும்பிக்)கையை நீட்டிக் காசு வாங்குனவுடன் வாயெல்லாம் சிரிப்பு(எனக்குத் தோணுச்சு) கோபால் கெமெராவை எடுத்து ஃபோகஸ் செய்யும்போது நம்ம பாகர் தேர்ந்த இயக்குனரா டைரக்ஷன் மூடுக்கு வந்துட்டார். 'இங்கே இன்னும் கொஞ்சம் கிட்டே இந்தப் பக்கம் வாங்கம்மா. நீங்க கேமெராவைப் பாருங்கம்மா. இன்னும் ஒரு அடி பின்னாலே போங்க சார். இப்ப எடுங்க சார்' இப்படி. தும்பிக்கையால் என் தலையை வருடிக்கிட்டுக் காந்திமதி சிரிக்கிறாள். ரெண்டு மூணு க்ளிக்குக்குப் பிறகு காந்திமதிகிட்டேச் சொல்லிட்டுக் கிளம்பினோம். கோபால் படமெடுக்க நின்ன இடத்திலிருந்து அப்படியே எதிர்ப்பக்கம் நடக்கும்போது இவள் என்ன பண்ணாத் தெரியுமா? ஆச்சரியமான ஆச்சரியம் எனக்கு. சின்னத் தலை ஆட்டலுடன் கையைத் தூக்கி 'வா வா'ன்னு கோபாலை இந்தக் பக்கம் கூப்புட்டாள். 'கூப்புடறா, இந்தப் பக்கம் வாங்க'ன்னதும் இவர் வந்தாரா..... ஆசையோடு கையைத்தூக்கி அவர் தலையில் வச்சு ஒரு ஆசீர்வாதம் பண்ண அழகு இருக்கே....அப்பப்பா.... சொல்லி மாளாது. என்ன ஒரு அறிவு பாருங்களேன். அன்னிக்கு முழுக்க இதைச் சொல்லிச் சொல்லியே மாய்ஞ்சுபோயிட்டேன். செல்லம்.... என்னா அறிவுப்பா....

அதே பிரகாரத்தில் 'காந்திமதி' ன்ற பெயர்ப்பலகையோடு இவளுக்கான அறை படுசுத்தமா, விஸ்தாரமா இருக்கு. கோவிலில் குடி இருப்பு!

கொஞ்சம் பெரிய சைஸுலே இருந்த நவகிரகங்களைச் சுத்திட்டு, பக்கத்துலே இருந்த நந்திக்கு 'டாடா' சொல்லிட்டுக் கோவிலை விட்டு வெளியே வந்தோம். பளிச் என்ற பகல் வெளிச்சத்தில் இருட்டுக்கடை (பார்க்கவே பழைய கடையா) மூடிக்கிடக்கு.
பட்டப் பகலில் இருட்டுக்கடை


நம்ம தி.நகர் ரத்னா ஸ்டோரை நினைவூட்டும் வகையில் ஆண்டிநாடார் பாத்திரக்கடை. ஜானகிராமுக்குப்போனோம். எனக்கே எனக்காக அவுங்க ஒரு ஸ்பெஷல் பண்ணிவச்சுருக்காங்கன்றது சவுத் இண்டியன் சாப்பாட்டுத் தட்டு வந்தப்பத் தெரிஞ்சது:-)))))

எத்தனைன்னு பதிவுலே போட? இன்னும் கொஞ்சம்(?) படங்கள் இந்த ஆல்பத்துலே இருக்கு. பாருங்க.

30 comments:

said...

mcoolbhashu நெல்லையப்பர் கோயில்ல உள்ள சிற்பங்கள் எவ்வளவு நாள் சுத்திபார்த்தாலும் தீராது.துளசிக்கு யானை ஸ்பெஷல்.யானைக்கு துளசி ஸ்பெஷல். ஆசிர்வாதம் ஆண்டவனே குடுத்த மாதிரி.சீதைய கடத்துனதுக்கு ராவணன ஜெயில்ல போட்டுட்டாங்க நெல்லை மக்கள்.உங்களுக்கான ஜானகிராமன் ஸ்பெஷல் மசால்வடைதானே.

said...

எங்கள் ஊரையும் கோவிலையும் வியந்து பாராட்டும் வரிகளை வாசிக்கையிலும், உங்கள் [கேமிரா] பார்வையில் பார்க்கையிலும் மகிழ்ச்சியாக மட்டுமின்றி மிகவும் பெரும்ம்ம்ம்ம்மையாகவும் இருக்கிறது.
நன்றி மேடம்!

said...

அன்பு துளசி, இத்தனை படங்களையும் பார்த்துட்டு வருவதற்கு முன்னால பின்னூட்டமும் வந்துட்டது.
இந்தப் பதிவின் அருமையை என்னன்னு சொல்றது. அந்த தமிழைய்யா தான் எத்தனை பவ்யமா இருக்கார். அந்தக் கருப்பச்சாமிக்குத்தான் எத்தனை உதவுற மனப்பான்மை.

சிற்பங்களைச் சொல்றதா,யானையை சாரி காந்திமதியைச் சொல்றதா. அது கோபாலைக் கூப்பிட்ட அழகைச் சொல்கிறதா.

உங்க பொறுமையைச் சொல்றதா.

ம்ஹூம். முடியாது.
நல்லா இருங்கப்பா. நேரயே போய்ப் பார்த்த பூரண திருப்தி.
அந்தக் கோலம்தான் என்ன நேர்த்தி.சூப்பர்மா.

said...

அடடா..!

நெல்லையிலேயே ரெண்டு நாள் தங்கியிருந்தீங்களா..?

அன்னிக்கு ஊர்ல ஒரு கொலையும் நடந்திருக்காதே..!

said...

ஒன்னு விடாமச் சுத்திப்பார்க்கணுமுன்னு மனசு நினைச்சாலும்....... இந்த பிரமாண்டத்துக்கே ஒரு வாரம் வேண்டி இருக்கும்போல. ஆகா! ஆ

தாமிரசபையும் பெரியவரின் பின்னால் மரவேலைப்பாடும் ரொம்ப அழகு.

said...

வாங்க ஐம்கூல்

எல்லாம் ரொம்பச் சரி. போறபோக்கிலே எல்லாம் கூலாச் சொல்லிட்டிட்டீங்க:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பதிவர்களில் நிறையவே நெல்லைக்காரர்கள் இருக்கீங்க போல!

முதல் பயணத்துலேயே பிடிச்சுப்போச்சுப்பா உங்க ஊர்.

said...

வாங்க வல்லி.

மகாசிவராத்திரி ஸ்பெஷல்ஸ் எல்லாம். முதல் நாளு போயிருந்தோமுன்னா கூட்டத்துலே மாட்டிக்கிட்டு ஒன்னும் சரியாப் பார்த்திருக்க முடியாது.

எல்லாம் அவன் செயல்!

said...

வாங்க உண்மைத் தமிழன்.

சினிமாக்காரர்கள் புண்ணியம்தான் இப்படியெல்லாம் நினைக்க வைக்குதோ???

said...

வாங்க மாதேவி.

ஆல்பத்துலே தாமிரசபை படங்கள் இன்னும் இருக்கு, பாருங்க. என்ன நுணுக்கமான வேலைப்பாடு!!!!

said...

பூனை சூடு பாத்து ஒரே சிரிப்பு எனக்கு..
சுடிதார் போட்டுக்கிட்டு தலையில் பூ வச்சிருந்தா மட்டும் போதாது துளசி.. கொஞ்சம் சின்னப்புள்ளைங்களாவும் இருக்கனும்..அப்பத்தான் அழகு.. இளவஞ்சி போஸ்ட்ல பாத்தீங்களா.. அந்த வயசுப்பிள்ளைங்க எப்படி இருந்தாலும் அழகுதான்.. :))

said...

படங்களுடனான திலி பதிவு மிகவும் அருமை.

கோபால் சார் எடுத்த காந்திமதி படம் ரொம்ப நல்லாருந்தது.

Anonymous said...

//பூனை சூடு பாத்து ஒரே சிரிப்பு எனக்கு..
சுடிதார் போட்டுக்கிட்டு தலையில் பூ வச்சிருந்தா மட்டும் போதாது துளசி.. கொஞ்சம் சின்னப்புள்ளைங்களாவும் இருக்கனும்..அப்பத்தான் அழகு.. இளவஞ்சி போஸ்ட்ல பாத்தீங்களா.. அந்த வயசுப்பிள்ளைங்க எப்படி இருந்தாலும் அழகுதான்.. :))//

Repeatee

said...

படங்கள் எல்லாம் அருமை டீச்சர்.

சீக்கிரமே நெல்லையப்பரைப் போய் பாத்துட்டு வரணும்..

said...

வாங்க கயலு.

இளவஞ்சிக்குக் கிடைச்ச அதிர்ஷ்டம் நமக்கு இல்லையேப்பா(-:

அவர் புலி......

நானு? மியாவ்:-))))

said...

வாங்க வெயிலான்.

நல்லகாலமுன்னு சொல்லுங்க கை நடுக்கமில்லாம படங்கள் வந்தது:-)

டைரக்டர், பாகராச்சே!!!

said...

வாங்க சின்ன அம்மிணி.

கிடைச்சவரை பாக்கியமுன்னு சொல்லப்பிடாதா? :-)))

said...

வாங்க தீப்பெட்டி.

அப்படியே, நானும் அடுத்தவருசம் வரேன்னு சொல்லி வையுங்க அவர்கிட்டே!!!

said...

உள்ளேன் டீச்சர் ;)

said...

படமும் பதிவும் அருமை....
அன்புடன் அருணா

said...

புகைப்படங்கள் அருமை....
இந்த தொடரை முதலிலிருந்தே படிக்கவேண்டும் என நினைக்கிறேன்.

அப்புறம்,
நம்ம இருட்டுக்கடையை பார்த்தீங்களா?

said...

கருப்பு சாமியை காலாய்ததற்கு ஆண்கள் சார்ப்பில் கண்டனம் தெரிவிக்கிறேன். :-))
அதென்ன 7046....ஏதோ மூனு நம்பர் கொடுத்திருக்கீங்க?

said...

வாங்க கோபி.

என்ன லேட்? வல்லியம்மா தேடப்போறாங்க:-)

said...

வாங்க அன்புடன் அருணா.

தொடர்ந்து வருவது மகிழ்ச்சியா இருக்கு. நன்றி.

said...

வாங்க ஊர் சுற்றி.
இல்லையா பின்னே?

வெளிச்சத்திலும் இருட்டிலும்கூடப் பார்த்துட்டோம்:-)

said...

வாங்க குமார்.

ஆஹா....அந்த எண்களா?

பதிவில் போட எந்தப் படங்கள் சரியா இருக்குமுன்னு தேடி வச்ச படங்களின் எண்கள் அவை.

பப்ளிஷ் செய்யுமுன் நீக்க விட்டுப்போச்சு!

said...

have u seen Nellaippar koil, in front of sivan sannadhi, saptha swara pillars.

said...

வாங்க குப்பன் யாஹூ.

நாங்க போன நேரம் சந்நிதியே இருட்டில் கிடந்துச்சு. பவர் இல்லையாம். அதுவுமில்லாமல் விளக்கம் சொல்ல அங்கே யாரும் இல்லை.

மண்டபத்தின் ரெண்டு பக்கங்களிலும் இருந்த தூண் கூட்டங்களைத்தானே சொல்றீங்க?

மற்ற நாடுகளில் செய்வது போல, குறைஞ்சபட்சம் விளக்கம் சொல்லும் குறிப்புப் புத்தகம் போட்டு விற்பனைக்கு வைக்கலாம். புது ஆட்களுக்கும் பயணிகளுக்கும் பயனா இருக்கும்.

said...

அன்பின் துளசி

காமெராவும் துளசியும் கூடப் பிறந்தவர்களா - இணை பிரியா இரட்டையர்களா - இல்லை கோபாலின் கை வண்ணமா

அருமௌ அருமை

நம்மாளப் பத்தி ஒரு பத்தி - அமர்க்களம் போங்க

//அலங்கார பூஷிதை, அப்படியே அண்ணன் மாதிரியே:-) (பாவம். புருஷந்தான் பேயாட்டம் ஆடறார்)//

பொண்ணுகளுக்கு எப்பவுமே பொறந்த வுட்டுதான் பெர்சு - புகுந்த வூட்டக் கொற சொல்லாத பொண்ணே கிடையதா ( துளசி உட்பட) -

எத்தனை தடவை படிச்சாலும் புதுசா இருக்கே - எப்படி இபடி எல்லாம் எழுதறீங்க - நினைவாற்றல - கோபாலின் கைங்கர்யமா - குறிப்பேடுகளா - ம்ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் துளசி

said...

அன்பின் துளசி மேடம்,

அற்புதமான பதிவு. உங்கள் எழுத்தில் அப்படியே எங்களுடன் பேசிக்கொண்டே சுற்றிக் காட்டுவது போல அசத்தி விட்டீர்களே! மனிதாபிமானத்துடன் எத்துனை விசயங்களை கண்டு களித்ததோடு அதை சொன்ன விதமும் இனிமையோ இனிமைங்க... வாழ்க, வாழ்க!

அன்புடன்
பவளா