Thursday, May 21, 2009

கடலோரக் க(வி)தைகள்.........(2009 பயணம் : பகுதி 27)

படம் எடுக்கணுமுன்னா சொல்லுங்கம்மா. வண்டியை நிறுத்தறேன்னு சொல்லியிருக்கார். ஆனா.... கண் கவனிச்சு, வாய் நிறுத்துங்கன்னு சொல்றதுக்குள்ளே ஒரு நூறுமீட்டராவது போயிருப்போம் என்பதுதான் உண்மை. குறுகிய சின்ன ரோடு. ஆனாலும் அதிலும் வேகமாவே ஓட்டிக்கிட்டுப்போறார் ரமேஷ். 'சரேல்'ன்னு கார் ஒரு கோயிலைக் கடந்துபோச்சு. கொல்லங்கோடு பகவதியாம். ஆஹா....விடறதில்லை......நிறுத்தச் சொல்லி இறங்கினேன். மகாதேவர் க்ஷேத்ரம், பக்கத்துலே பகவதி. விழா நடக்கும்போது அடுத்துள்ள பரம்பு முழுசும் கூட்டம் நிறைஞ்சு வழியுமாம். பத்து லட்சம் மக்கள் கூடுனா பின்னே வேற எப்படி இருக்கும்?


கோயில் திறக்க இன்னும் ஒன்னரை மணி நேரம் ஆகுமாம். நமக்கேது நேரம்? வளாகத்தில் நின்னு நாலு படம் எடுத்துக்கிட்டேன். கோவிலின் முன்வாசக்கதவுகளில் ஒன்னு மட்டும் திறந்து இருந்துச்சு. அதனூடே ஒரு பார்வை. நந்தி உக்கார்ந்துருக்கார். அட்டெண்டன்ஸ் கொடுத்தாச்சு:-)))) வர்ட்டா மஹாதேவா.... வர்ட்டா பகவதி!

ரமேஷிடம் பேச்சோடு பேச்சா... சூரிய அஸ்தமனத்தை நேத்துப் பார்க்க முடியலை. போறவழியில் சான்ஸ் கிடைக்குமான்னு கேட்டதுதான் ......
அதைப்பத்துனக் கவலையை விடுங்க. போறவழியெல்லாம் கடற்கரைகள்தான் பாத்துறலாமுன்னு ஊக்கம் கொடுத்தார். கொளச்சல் பீச்சுக்குப் போனோம். கடலில் pier கட்டிவிட்டுருக்கு. அந்த முனையில் நின்னு கதையடிச்சுக்கிட்டுக் கிடந்தாங்க சில இளவட்டங்க. சின்னத் துறைமுகம். அதுக்கேத்தமாதிரிச் சின்னக் கப்பல்களா அங்கங்கே நின்னுருந்துச்சு.


கொளச்சல்
Pier....peer.....Beer

முன்சிறை ஊராட்சி 'எல்கை' ஆரம்பமுன்னு ஒரு போர்டு பார்த்தேன்.
தேங்காபட்டினம் வழியா வந்துக்கிட்டு இருக்கோம். கொளச்சல் கடந்தப்ப இந்தப் பெயரை எங்கோ கேட்ட நினைவு. அடுத்த நிமிஷம் பூச்சிக்காடு, வெள்ளியாவிளை தாண்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வந்துட்டோம். கோயில் என்னவோச் சின்னதுதான். ஆனால் கீர்த்தி ரொம்பப் பெருசுபோல! கொடிமரம் தாண்டுனதும் இருக்கும் ஹாலின் கடைசியில் கண்ணுருட்டிப் பார்க்கும் பகவதி. வாசல் கேட்டில் இருந்து பார்த்தாலும் சாமியைச் சேவிச்சுக்கலாம். பெரிய உருவம்தான். நம்ம பக்கங்களில் மாரியம்மன் கோவில் அநேகமா எல்லா ஊரிலும் இருப்பதுபோலத்தான் கேரளாப் பகுதிகளில் பகவதி கோயில்கள். எல்லாம் சக்தி வழிபாடுகள்தானே?


மண்டைக்காடு கோவில்
இந்த பகவதிகளில் முக்கியமானவர்களா மட்டும் ஏழோ இல்லை ஒன்பது பேரோ இருக்காங்களாம். எல்லாம் பராசக்தியின் வெவ்வேறு அம்சங்கள். கொடுங்கல்லூர், கொல்லங்கோடு, மண்டைக்காடு, ஆற்றுக்கால், சோட்டானிக்கரை, செங்கண்ணூர் இப்படி. கிடைச்ச பகவதிகளை நாமும் விடக்கூடாதுல்லே? நாமும் சென்னையைச் சுத்தியே மாங்காடு, திருவேற்காடுன்னு வச்சுருக்கோமுல்லே. சக்திபீடங்கள்ன்னு ஒரு 51 இருக்கே!!
கோயில்திருவிழா வருதாம். அதுக்காகக் கோவிலைச் சுத்தி எக்கச்சக்கமான பொரிகடலை & தீனிக்கடைகள். இதெல்லாம் இருந்தாத்தானே திருவிழாக் களைகட்டும்!! கோவில் வளாகத்தில் முன்பகுதியைத் தவிர மற்ற மூணு பாகங்களில் செங்கல் வச்சு அடுப்பாக்கி, அதைப் பொங்கல் வைக்குமிடமா ஆக்கி வச்சுருக்காங்க. நூத்துக்கணக்கான அடுப்புகள். தினமும் மக்கள்ஸ் வந்துப் பொங்கிப் படைக்கிறாங்க போல. நாங்க போனப்பவும் நாலைஞ்சு அடுப்புகள் தீமூட்டிக் கிடந்துச்சு. பானைகளில் பொங்கல் கொதிச்சுக்கிட்டு இருந்துச்சு. கோயில் குழாயில் ஒரு சின்னப் பையன் அம்மாவுக்கு உதவியாப் பொங்கப்பானைக்குத் தண்ணீர் பிடிச்சுக் கொண்டுவந்து தந்தான். எல்லாம் சரி. ஆனால் சமையல் முடிச்சதும் இடத்தைச் சுத்தம் பண்ணக்கூடாதோ? பேப்பர்களும் குப்பையுமா நல்லாவே இல்லை(-:

கோயிலைச் சுத்திவந்தப்ப வெடிவழிபாடுன்னு போர்டு போட்டுக்கிட்டு ஒருத்தர் உக்காந்துருந்தார். விசாரிச்சப்ப.... பத்துரூபாய் கொடுத்தால் ஒரு வெடி வெடிப்பாங்களாம். ஆடு வெட்டறோம், பொங்கல் வைக்கிறோமுன்னு பிரார்த்தனை செஞ்சுக்கறதுபோல 'சாமி, உனக்கு வேட்டு வைக்கிறோமு'ன்னு நேர்ச்சை வைக்கிறதா? சிலர் ஆயிரம் ரெண்டாயிரமுன்னு பணம் கட்டி வெடி வழிபாடு செய்யவாங்களாம். பேசாம் ஒரு பத்து கொடுத்து நானும் வந்தேன்னு 'ஆஜர்' வெடி வெடிக்கலாமான்னு ஒரு எண்ணம் வந்ததென்னமோ உண்மை:-)
மரக் கை, கால், ஆள் ரூபம், மண்டைப்புற்று கிடைக்குமுன்னு ஒரு அறிவிப்புப் பலகை கண்ணுலே பட்டது. ஒவ்வொருத்தருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை, அதுக்கேற்றமாதிரி நேர்ச்சைகள் பலவிதம்.

முட்டம் பாறைகளில் அலைஅடுத்துப்போன இடத்தின் அழகை அப்படியே பாரதிராஜா கொண்டாந்து ஊருலகத்துக்குக் காட்டிட்டாரே! தெருவெல்லாம் கருவாட்டு மணம்வருதான்னு கவனிச்சேன். பதிவர் சிறில் அலெக்ஸ், அவர் பங்குக்குத் தன் புத்தகத்தில் சொல்லி வச்சதெல்லாம் நினைவுக்கு வருது. முட்டம் கடற்கரை. லேசான வெளிறிய சிகப்புக் கலந்த மணல். கடற்சிப்பிகள் (மஸ்ஸல்ஸ்) ஒட்டிப்பிடிச்சுக் கிடக்கும் பாறைகள். பெரிய பெரிய அலைகளா வந்து பாறையில் அடிச்சுத் திரும்பும் ஓயாத சப்தம். சின்னதா ஒரு கலங்கரை விளக்கம். பெரும்பாறைகளுக்கிடையில் கட்டப்பட்ட வீடுகள். இந்தப் பக்கம் பாறைகளுக்கிடையில் போய் பத்திரமா நின்னுக் கடலைப் பார்க்கும் வகையில் பாதுகாப்புக் கம்பிகள்ன்னு அம்சமாத்தான் இருக்கு. குளிக்கும் மக்களுக்காக உடைகள் மாற்றும் அறைகள்கூட கட்டிவச்சுருக்காங்க. புதுக்கருக்கழியாம நிக்குது. இன்னும் பயன்படுத்த ஆரம்பிக்கலை போல. எந்த மந்திரிக்காகக் காத்துக் கிடக்கோ? நம்மைப்போல நாலைஞ்சுபேர் வந்துருந்தாங்க. என்ன இருந்தாலும் சினிமாப்புகழ் பெற்ற இடம் இல்லையா? ஊருக்குள்ளே போகாமல் கிளம்பினோம். அழகான சர்ச் ஒன்னு கண்ணில் பட்டது. சூரியன் அஸ்தமிக்க இன்னும் நேரமாகும்போல இருக்குன்னு அடுத்த பீச்சுக்குப் போனோம். சூரியன் மேற்கேயும் நாங்கள் கிழக்கேயுமாப் பயணிச்சாலும் இன்னிக்கு அவனை விடுவதில்லைன்னு ஒரு துரத்தல்.

'மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நாந்தான் ஐயா.....' சத்தமாப் பாடலாமான்னு ஒரு வேகம் வந்துச்சு. அதான் பேண்டு வாத்தியத்தில் வாசிச்சுக்கிட்டு ஒரு கல்யாண ஊர்வலம் கண்முன்னே போகுதே. அட! இந்தப் பாட்டுதான் வாசிக்கிறாங்க.... உனக்கு எப்படித் தெரியுமுன்னு கோபாலுக்கு வியப்பு. ஆஹா..... இதுமட்டுமா.... 'எனக்கு என்னெல்லாம் தெரியுமுன்னு உங்களுக்குத் தெரியவே தெரியாது'ன்னு கொஞ்சம் அலட்டிக்கிட்டேன்.

கறுப்பு பேண்ட் ஷர்ட் போட்டுக்கிட்டு வெள்ளை மல்லிகை மாலையில் கம்பீரமா இருக்கார் மாப்பிள்ளை. கோலாகலமான ஊர்வலம். கடற்கரையில் இருக்கும் சிலுவைக் கம்பத்தைச் சுத்திக்கிட்டுப் போறாங்க. பெரிய டிஜிட்டல் பேனரில் மணமக்களுக்கு வாழ்த்துக்களை அறிவிக்கும் குடும்பம். கல்யாணம் இராஜாக்கமங்கலம்துறை, புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் நடந்ததாம். இந்த ஊருக்குப்பேர் பெரியகாடு. அழகான கடற்கரை. எதுத்தாப்புலே அந்தோனியார் தேவாலயம். அதுக்கு வலது பக்கம் கலையரங்கமுன்னு ஒரு மேடை. ஓப்பன் ஏர் தியேட்டர். மக்கள்ஸ் எல்லாரும் ஜாலியா கடற்கரை மணலில் சாய்ஞ்சு படுத்து நிகழ்ச்சிகளை அனுபவிக்கலாம். இடது பக்கம் சாவடி போல் இன்னொன்னு. சண்டே ஸ்கூல் நடத்துமிடமாவும் இருக்கலாம். இதோ உன் தாய் ன்னு எழுதிவச்சுருக்கு. தேவாலயத்தினுள்ளில் பார்வையை ஓடவிட்டேன். தூரத்தில் லேசான நீலவண்ணத்தில் குழந்தை ஏசுவைக் கையிலேந்தி நிற்கும் அந்தோனியார் உருவம். சென்னையில் இருந்த காலத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் பாரீஸ்கார்னர் அருகில் உள்ள அந்தோனியார் கோவிலுக்குப் போனது நினைவுக்கு வந்தது.

அரங்கத்தில் அஞ்சாறுபேர் அமர்ந்து அரட்டையடிச்சுக்கிட்டு இருந்தாங்க. எவ்வளவு அழகான இடத்தில் வசிக்கிறோம் என்ற ப்ரக்ஞை இருக்குமான்னு தெரியலை. எவ்வளவு அமைதியான இடம். இந்தப் பயணத்தில் இப்படிக் கடலையொட்டியக் கிராமங்களைப் பார்க்கும்தோறும், 'ரிட்டயர் ஆனதும் பேசாம இங்கே வந்து வீடு ஒன்னு கட்டிக்கிட்டு இருந்துறலாமா'ன்னு மனசு சொல்லும். இப்பவும் சொல்லுச்சு. நிறையவாட்டிச் சொல்லுச்சுன்னு வையுங்க:-)))))

கல்யாண சீதனமாக் கட்டில், மெத்தை, பீரோ இன்னபிற சாமான்கள் கொடுக்கும் வழக்கம் இன்னும் நீடிக்குது போல இருக்கு. ஒரு லாரியில் சாமான்கள் போய்க்கிட்டு இருக்கு. இங்கேயும் சூரியனைத் துரத்துவதுதான் இங்கேயும் நடந்துச்சு. நம்மைப் பார்த்து நடுங்கி மேகத்துக்குள் போய் ஒளிஞ்சுக்கிட்டான்...சரியான பயந்தாங்குளி. சலோ அடுத்த பீச்.


புத்தளம் பேரூராட்சி எங்களை அன்புடன் வரவேற்றது. கடலுக்கு முகப்பு வாசல் அலங்காரம். கடற்குதிரைகள், சங்கு, சிப்பி இப்படிக் கடல்வாழ் இனங்களா அலங்கரிச்ச தோரணவாயில். கடற்கரைக்கு இறங்க அகலமான படிக்கட்டுகள். ரெண்டு பக்கமும் சிங்கங்கள். இடதுபக்கம் சுழல்படிக்கட்டுகளுடன் ஒரு வியூ மாடி. அட்டகாசமா இருக்கு. ஆனால் சூரியன் வெளியே வரவே இல்லை. விளக்கும் வச்சாச்சு.

கன்யாகுமரி வந்தப்ப நல்ல இருட்டு. விவேகானந்தர் நினைவு மண்டபம் அழகான ஜொலிப்பில் மனசுக்கு ஆறுதல் சொன்னது. நாளைக் காலை எட்டுமணிக்கு ரமேஷுக்கு அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்தோம்.

வரவர ஆல்பங்களின் எண்ணிக்கைக் கூடிக்கிட்டே போகுது. நண்பர்களின் வசதிக்காகத் தனித்தனியாப் போட்டுருக்கேன். அந்தந்த ஊர்க்காரர்கள் அவுங்கவுங்க ஊரைப் பார்த்துக்கிடுங்க:-)))

கொல்லங்கோடு

கொளச்சல்

மண்டைக் காடு

முட்டம்

பெரியகாடு

புத்தளம்

தொடரும்.......:-)

24 comments:

said...

***அந்தந்த ஊர்க்காரர்கள் அவுங்கவுங்க ஊரைப் பார்த்துக்கிடுங்க:-)))***

எங்க ஊரெல்லாம் இல்லையே டீச்சர்! :)

எனக்கெல்லாம் ஊர் சுத்திப்பார்க்க, எனெர்ஜியும் கிடையாது, ஆர்வம்/ஆவல் கிடையாது.

உங்களை பார்த்தா அதிசயமா இருக்கு. வெளியே சாப்பிட்டால் உடம்புக்கும் பிரச்சினை வரும். அங்கே உள்ள பாக்டீரியாவுடன் எப்படி சண்டை போடுவதுனு என் உடம்பு மறந்து போயிட்டது :)

said...

அம்மே பகவதி!! கோவில் காட்சிகளுக்கு நன்றி துளசி. மண்டைக்காடு ரொம்ப விசேஷமாச்சே. நீங்க இத்தனையும் அலுக்காமப் படம் பிடிச்சதுதான் அருமை. உங்களோட வந்த திருப்தி.
முட்டத்துக் கடற்கரை அருமை.

அந்த ஜெட்டி ,அதாவது சரக்குகளைக் கப்பலில் ஏற்றும் இடம் எத்தனை படத்தில வந்திருக்கோ.
அந்தப் பசங்க நிக்கற காட்கியும் அழகும். எத்தனை எக்ஸ்ப்ரசிவா இருக்கு.!!

பொங்கல் வைப்பதோட அவங்க கடமை முடிஞ்சதும்மா. சுத்தமெல்லாம் நம்ம ஊர்ல எதிர்பார்க்க முடியாது.
அந்த ஊர் வண்டி ஓட்டறவங்க வேகமாத்தான் இருப்பாங்க. நான் ரெண்டு தடவைதான் கேரலப் பாக்காம் போயிடருக்கேன். தலதெறிக்கிற வேகத்தில சின்ன ரோடுகளில் அவங்க வண்டி ஓட்டறதைப் பார்த்தே ஒரு சுத்து வந்துடும் நம்ம தலை:)

said...

பாடக் காட்சிகளும் வர்ணனைகளும் அருமை

said...

எங்க கன்னியாகுமரி மாவட்டத்தோட அழகை ஒவ்வொரு விதமா கொண்டு வரீங்க. நன்றி. இயற்கை அன்னை முழு ஆட்சிபுரியும் இடம் அது. மலைகள், கடற்கரைகள், வயல் வெளிகள் என்று எல்லா விதமான வளங்களும் நிறைந்தது.முழு வாழ் நாளை அங்கே கழிக்கப்பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
வெடிவழிபாடும் பகவதி சேவையும், கேரளாவின் தொடர்ச்சியாக இங்கேயும் உண்டு. நீங்க வரும் வழியில் ஐயப்பன் கோயில்,குமாரகோயில் இங்கேயும் அதை பாத்திருக்கலாம். கல்யாண சீதனங்கள் வழக்கம் மட்டுமல்ல நாளுக்கு நாள் அதோட எண்ணிக்கையும் கூடுது. மண்டைக்காட்டம்மா ரொம்ப பெரியம்மாதான்.சுயம்பு.பொங்காலை பகவதி கோயில்கள்ள விஷேசம்.

said...

புத்தளமா....

இங்கே இலங்கையில் கூட புத்தளம் என்று ஒரு மாவட்டம் இருக்கிறது.

said...

யக்கா நீங்க வந்து என்னைய பார்க்காம போன கோவம் இன்னும் தீர மாட்டேங்குது :)

said...

டீச்சர் கூடவே வரேன்...யப்பா...எப்படி தான் இம்புட்டையும ஞாபகத்த்துல வச்சிக்கிட்டு !!!!

படங்கள் எல்லாம் அருமை...;))

said...

very good.
Whenever you find time, please have a look at my blog http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. Thanks

said...

வணக்கம் அக்கா! எல்லாமே ரெம்ப சூப்பர் போற இடத்துல எல்லாம் நோட்ஸ் எடுபீங்கள ௩ நாள் டூர் போனாலே எங்க போனோம்னு நியகம் வச்சுகிறது கஷ்டமா இருக்கு. நான் கண்யாகுமரி போனபோ முட்டம் கொளச்சல் போக முடியலை ரெம்ப லேட் ஆய்டுச்சு வெடிவழிபாடு ரெம்ப புதுசா இருக்கு

said...

சிங்கத்த பிடுசுக்கிட்டு பயமே இல்லமா நிக்கிறீங்க கடல்ல கால் நானசீங்களா

said...

வாங்க வருண்.

பயணத்துலே பலதையும் படிக்கலாம்னு புதுமொழி இருக்கு.

வெளியே சுத்தும்போது 'நா காக்க 'ன்னு இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை:-)))))

said...

வாங்க வல்லி.

கோவிலைச் சுத்தம் செய்யும் வழிபாடுன்னு ஒன்னு ஆரம்பிச்சுறலாம்.

ஒருமணி நேரம் துடைப்பம் தூக்கறேன் பகவதி!!!!

said...

வாங்க சுரேஷ்.

sure ஆ சொன்னதுக்கு நன்றி:-)))

said...

வாங்க ஐம்கூல்.

சொந்த ஊரைப் பத்திப் படிக்கும்போது தனி மகிழ்ச்சி கிடைக்குதுல்லே? அதுவும் வேற ஆட்கள் வாயால் நல்லது கேக்கும்போது...... மனசு நிறைஞ்சுதான் போயிரும்!!!

said...

வாங்க S.J.வீரன்.

முதல்முறையா வந்துருக்கீங்க போல?
நலமா?

இலங்கையில் திருமலைன்னு கூட ஒரு இடம் இருக்குன்னு கேள்விப்பட்டுருக்கேன்.

said...

வாங்க எம்.எம்.அப்துல்லா.

கோவத்தை மாத்தணுமுன்னே இன்னொருக்கா வரப்போறேன்.

அப்பக் கட்டாயம் சந்திக்கலாம்.

ஆமாம்...அக்காவுக்கு என்ன ஸ்பெஷல் ஆக்கிப் போடப்போறிங்க?

said...

வாங்க கோபி.

டீச்சர் வேலை கஷ்டமுன்னு இப்பப் புரியுதா? :-))))

said...

வாங்க நாகேந்திர பாரதி.

முதல் வருகைதானே?

நலமா இருக்கீங்களா?

உங்க வீட்டுக்கு வந்துட்டுப்போனேன்.

said...

வாங்க அருண்மொழி.

சிங்கத்துக்குப் பயந்தா அசிங்கமாப் போயிருக்கும்:-))))

கடலில் கால் நனைக்கிறதெல்லாம் எனக்கு அவ்வளவா விருப்பம் இல்லாமப் போயிருச்சு நியூஸி வந்த பின்.

அதுக்கெல்லாம்தான் 'கோபால்' இருக்காரே:-)

said...

அருமை டீச்சர்...

said...

வாங்க தீப்பெட்டி.

தொடர்ந்து வர்றதுக்கு நன்றி.

said...

//புத்தளம் பேரூராட்சி எங்களை அன்புடன் வரவேற்றது.//
துளசியக்கா ! எங்க வீடு இங்கே தான் இருக்கு ..பெரியகாட்டிலிருந்து இந்த புத்தளம் (சொத்தவிளை) வரும் வழியில் 'பள்ளம்' என்ற மீனவ கிராமம் வழியே வந்திருப்பீர்கள் .அது தான் எங்கள் ஊர்...ஹூம் ..நீங்க வரும் போது நான் ஊரில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

// இந்த ஊருக்குப்பேர் பெரியகாடு. அழகான கடற்கரை. எதுத்தாப்புலே அந்தோனியார் தேவாலயம்.//
இது மிகவும் பிரபலமான கோவில் ..நான் சிறுவயதாக இருக்கும் போது பெரிய காடு அந்தோனியார் திருவிழாவுக்கு கடற்கரை வழியே நடந்தே சென்ற நினைவு வருகிறது.

said...

வாங்க ஜோ.

ரொம்பவே அழகான பகுதி. கொடுத்துவச்சவர் நீங்க.

ஒவ்வொரு கிராமத்தையும் கடக்கும்போது, 'பேசாம அங்கே போய் இருந்துறலாமா'ன்னு நினைச்சதென்னவோ நிஜம்.

அந்தோணியார் கோவிலையொட்டிய அரங்கில் கலைநிகழ்ச்சிகளைப் பார்த்த அனுபவம் உண்டா?

பீச்சுலே உக்கார்ந்து பார்ப்பது ஒரு புது அனுபவமா இருந்துருக்குமில்லே?

said...

//அந்தோணியார் கோவிலையொட்டிய அரங்கில் கலைநிகழ்ச்சிகளைப் பார்த்த அனுபவம் உண்டா?

பீச்சுலே உக்கார்ந்து பார்ப்பது ஒரு புது அனுபவமா இருந்துருக்குமில்லே?//

நிறையவே உண்டு அக்கா.

கலைநிகழ்ச்சி மட்டுமல்ல ..திருவிழா நேரங்களில் ,வழிபாடும் இங்கே வைத்தே நடக்கும் ..மக்கள் கூட்டம் அனைத்தும் கோவிலுக்குள் அடக்க முடியாது என்பதால் ,மக்கள் கடற்கரை மணலில் உDகார கலையரங்கில் குருக்கள் நின்று வழிபாடு நடத்துவார்கள்.