Tuesday, August 21, 2007

பாருக்குள்ளே நல்ல நாடு

இந்திய சுதந்திரத்தின் அறுபதாண்டு நிறைவைக் கொண்டாட ஒரு ஒன்றுகூடல்நிகழ்ச்சியை ஏற்பாடு செஞ்சிருந்துச்சு எங்க இண்டியன் சோஸியல் & கல்ச்சுரல் க்ளப். எல்லாருக்கும் வசதியா இருக்கணுமுன்னு ஞாயித்துக்கிழமைக்கு வச்சிருந்தாங்க.சாப்பாடு 'Pot luck' வகை.
நான் என்னுடைய வழக்கமான ஐட்டம் 'எலுமிச்சை சாதம்' கொண்டு போகலை. அதுக்கு பதிலா இருக்கவே இருக்கு புளியோதரை:-))


சம்பிரதாயமான சடங்குகள் ஒண்ணுமில்லாமத்தான் இந்த விழா. இப்போதைய சங்கத் தலைவர் எல்லாரையும் வரவேற்று நாலு வார்த்தை சொன்னார். அப்புறம் வடக்கு, தெற்கு,கிழக்கு, மேற்குன்னு மக்களை குழுவா நிக்கச் சொன்னார். (நாங்க அவர் சொல்றதுக்கு முன்னாலேயே தெற்கெல்லாம் ஒரு இடத்துலே தானாவே குழுவா நின்னுத்தான் பேசிக்கிட்டு இருந்தோம். அது என்னவோ....... எங்கியாவதுநம்ம மொழி பேசறவங்களைப் பார்த்தாக் காலு தானாவே அங்கெ நகர்ந்து போயிருது.)

இன்னொரு தமிழ்க்குடும்பம், ஒரு கர்நாடகா, ஒரு பாலக்காடுன்னு நாங்க 8 பேர். ஒரு தெலுங்குக் குடும்பம் ரெண்டு பிள்ளைகளோடு வந்துருந்தாங்க.
அப்புறம் தலைவர் சொன்னதுபோல வட்டமா கைகோர்த்து நின்னு 'சாரே ஜஹாங் ஸே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா' பாடுனோம். அப்புறம் ஒவ்வொரு குழுவும் மற்ற குழுக்களோடு கை குலுக்கி, அவுங்களோட மொழியில் வணக்கம், கேம்ச்சோ, நமஸ்தே, எல்லாம் சொன்னோம்.

தெலுங்குப் பொண்ணு வயசு எட்டு இல்லை ஒம்போது இருக்கும் ஒரு தெலுங்கு பாட்டுப் பாடுச்சு. தெலுகு கொப்பதி, தெலுகு தீயதி, அம்மா நானான்னு இருக்கும்போது மம்மி டாடின்னு சொல்றது எதுக்குன்னு பொருள் வரும் பாட்டு. நானும் நினைச்சேன் 'தமிழுக்கு அமுதென்று பேர்' பாடலாமான்னு. கூடி இருக்கும்கொஞ்ச மக்களையும் விரட்டிவிட்டாப் பாவம் இல்லே?

பஞ்சாபி, பெங்காலின்னு சிலர் அவுங்க மொழியிலே கொஞ்சம் பேசுனாங்க. இப்பத் தமிழில் பேசணும். யாரு? எல்லாம் நாந்தேன். முன்னறிவிப்பு இல்லாததால் தயார் செஞ்சுகொண்டு போகலை. ஆனாலும் ஒரு ரெண்டு மூணு நிமிஷத்துப் பேச்சுதானேன்னு கவனமா, பேச்சு மொழியைத் தவிர்த்து மேடைப்பேச்சாவே சிலவிஷயங்களைச் சொன்னேன்.

"அனைவருக்கும் வணக்கம்.நான் தென் இந்தியர்கள் சார்பாக இங்கே பேச வந்திருக்கின்றேன்.ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா என்ற நான்கு மானிலங்களும் சேர்ந்ததுதான் தென் இந்தியா.

இந்தியாவின் சுதந்திர தினவிழாவைக் கொண்டாடி, சுதந்திரம் கிடைக்கப் பாடுபட்ட பெரியோர்களை இன்று நினைவு கூர்ந்தோம். இந்த சுதந்திரத்துக்கு வட இந்தியர்களைப் போலவே தென்னிந்தியர்களும் பாடுபட்டார்கள். அதை ஒரு போதும் மறக்கக்கூடாது. மகா கவி சுப்ரமணிய பாரதி, விடுதலைப் போராட்டத்தின் போது, பல தேச பக்திப் பாடல்களை இயற்றி மக்களுக்கு தேசிய உணர்வை உண்டாக்கி இருக்கிறார். 'பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு' என்ற பாடல் சற்றுமுன் நாம் பாடிய 'சாரே ஜஹாங் சே அச்சா' என்ற அதே பொருள் உள்ளது.

வட இந்தியர், தென் இந்தியர் என்ற பாகுபாடின்றி நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் ஒற்றுமையாக வாழவேண்டும். ஜெய் ஹிந்த்"

(கொஞ்சம் சொதப்பிட்டேனோ? சட்னு ஒண்ணும் பேசத் தோணலைப்பா)

எப்படியோ, கொஞ்சம் தமிழோசையை அந்தக் கூட்டத்தில் பரவவிட்டேன்னு சொல்லிக்கலாம்.

தற்போதையத் தலைவர் குஜராத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் விடுமுறைக்கு இந்தியா போனப்ப எடுத்த சபர்மதி சத்தியாகிரக (காந்தி) ஆசிரம வீடியோக் காட்சியைக் காமிச்சார். அதுக்கப்புறம் பஞ்சாபி நண்பர்கள் கொஞ்சம் பாடுனாங்க. எல்லாருமாச் சேர்ந்து பாடியது,

'யே மேரி வதன் கி லோகோ,
ஜரா ஆங் மே பர்லோ பானி,
ஜோ ஷஹீத் ஹுயேன்ஹி உன்கி,
ஜரா யாத் கரோ குர்பானி.

இந்த சங்கம் ஆரம்பிச்சப்ப (1997லே) சுதந்திர தினப் பொன்விழாக் கொண்டாட்டத்தில் இந்தப்பாட்டை, இசைக்குழுவோடு அருமையாப் பாடின 'நீலு'வையும் நினைச்சுக்கிட்டேன். என் பக்கத்தில் நின்னுக்கிட்டு இருந்த சங்கத்தின் ஸ்தாபகர் பொருள் பதிந்த பார்வை ஒன்றை என் மேலே வீசினார். சங்கத்தின் பத்து வருச வளர்ச்சியைக் கண்ட பெருமிதம் அவர் முகத்தில். இருக்காதா பின்னே?:-)

'ஜன கண மன'ன்னு தேசிய கீதம் எல்லாரும் சேர்ந்து சத்தமாப் பாடுனோம். அப்புறம் சாப்பாடு. தற்போதையக் கலாச்சாரத்தின்படி 'அந்தாக்ஷரி' இருக்கு உணவுக்கு அப்புறம். அதுக்கெல்லாம் நிக்கப் பொறுமை இல்லாமல், கிளம்பினோம். எங்க கூடவே தென்னிந்தியா முழுசும் கிளம்பிருச்சு:-))))

இப்ப என்ன தோணல்ன்னா, கவிஞர் முகம்மது இக்பால் 'சாரே ஜஹாங் சே அச்சா' எழுதுனது 1904-இல். நம்ம பாரதியார் 'பாருக்குள்ளெ நல்ல நாடு' எழுதுனது எப்ப? எந்த வருஷம்? வஹாங் ஸே யஹா(ங்) வா இல்லை யஹா(ங்) ஸே வஹா(ங்)வா? இல்லே ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமில்லாமல் 'கிரேட் மென் திங் அலைக்'கா?

தெரிஞ்சவுங்க சொல்லுங்க.

இந்தப் பார் இப்போ Bar ஆக மாறி இருக்கறதுக்கு இன்னொரு புலம்பல், இன்னொரு நாளைக்கு வரப்போகுது.

32 comments:

said...

//எங்கியாவதுநம்ம மொழி பேசறவங்களைப் பார்த்தாக் காலு தானாவே அங்கெ நகர்ந்து போயிருது//

அக்கா !
அதுதானே நம்ம ஸ்பெசலிடி!

said...

டீச்சர், ஒரு ஸ்பெல்லிங் மிஷ்டேக் கண்டுபிடிச்சுட்டேன். நீங்களும் கண்டு பிடிச்சு சரி பண்ணுங்க பார்க்கலாம். :)))

said...

வாங்க யோகன்.

சரியாத்தான் சொன்னீங்க:-))))

said...

வாங்க கொத்ஸ்.

ஐய்யய்யோ.......... என்னா மிஷ்டேக் பண்ணிட்டேன்? பார் க்குப் போகாததால்
தப்பா எழுதிட்டேனா?

வகுப்பு லீடரா இருந்துக்கிட்டு, உடனே தப்பைக் காமிச்சு(??) கொடுத்ததுக்கு நன்றி.
ஆமாம். அந்த மிஷ்டேக் என்னன்னு சொல்லுப்பா.
கண்டுபிடிக்க முடியலை? ஸ்பெல்லிங்..............???????

said...

சங்க ஸ்தாபகர் புகைப்படத்தை பார்த்து ஒரு நிமிடம் ஆடிவிட்டேன்...
1956 என்று உள்ளது,எடுத்த வருடமோ என்று நினைக்க வைத்தது.
யாருங்க அது தேசிய கலரில்?்
புகைப்படத்தில் பளிச்.

Anonymous said...

//நான் தென் இந்தியர்கள் சார்பாக இங்கே பேச வந்திருக்கின்றேன்.ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா என்ற நான்கு மானிலங்களும் சேர்ந்ததுதான் தென் இந்தியா.//
மாநிலங்கள்னு இருக்கணுமோ. கொத்தனார்தான் சொல்லணும்

Anonymous said...

உங்க புளியோதரை சூப்பர் போல இருக்கு. கோபால் சார் சாப்டுட்டு சும்மா சந்தோஷத்துல இருக்கார்.

said...

எங்க வீட்டு get-to-gether களில் ரொம்ப நெருக்கமாயிருப்பவர்கள் என்று அங்கங்கே கூடி பேசிக்கொண்டிருப்பார்கள். அது போல் இந்த national get-to-gether ரிலும் மொழிவாரியாகப் பிரிந்து நின்றுகொண்டார்கள் போலும். நாங்கள் இந்த மாதிரி கூடுவதற்கு
get-to-scatter என்று பெயர் வைத்துதிருக்கிறோம்.புளிசாதம் வாசம் இங்கேயே தூக்குது. ஆமா..கடசி படத்தில் வலது ஓரம் நிற்பது நீங்கள் இருவருமா?

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

நீங்கவேற.......... அதைச் சாப்புட்டாகணுமேன்னு உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கி இருக்கறதைக்
கவனிக்கலையா?

கொத்ஸ் சொன்ன பிழையைப் புடிக்க முடியலையேப்பா................

said...

வாங்க நானானி.

ஸ்தாபகர்தாங்க எங்க 'இவரு'. கடைசிப்படத்தில்
ப்ளூ/ஆரஞ்சு உடுப்பு நான். பக்கத்துலே கர்நாடகா நண்பர்.

இப்ப புளி சாதம் ரொம்பச் சுலபமாச் செஞ்சுடறேன். எம்டிஆர் வாழியவே:-)

said...

டீச்சர், உங்க ஊர்ல இத்தன இந்தியர்கள் இருக்காங்களா? :) ச்சும்மா, டமாசு.

கொத்ஸ் - நான் ரெண்டுக்கும் மேலே கண்டுபுடிச்சிட்டேனே....ஐ...ஜாலி!

அம்மினி - மானிலங்கள் அப்டினும் சொல்லலாம். மா+நிலம்=மானிலம்
(டீச்சர், சரிதானே??)

said...

நீங்க சட்டுனு பேசியதே நல்லா தெளிவாத்தான் பேசியிருக்கீங்க.
அநேகமா பாரதியார் பாடியது வஹாங் சே யஹாங்-வாகத்தான் இருக்கும்னு எனக்கு தோணுது.

said...

வாங்க தஞ்சாவூரான்.

அட தேவுடா............ இப்படியெல்லாம் கேட்டுட்டீங்களே(-:

இந்தியர்கள் கிட்டத்தட்ட 1500 பேர் இருக்காங்க. ஃபிஜி இந்தியர்கள், இன்னும் மலேசியன்,சிங்கப்பூர்
தென் ஆப்பிரிக்கா இந்தியர்கள் னு சேர்த்தா ஒரு மூணாயிரம் பேர் தேறுவாங்க.

தமிழ், தெலுங்கு, கேரளர், சீக்கியர்கள், ஃபிஜி இண்டியன்ஸ்ன்னு எக்கச்சக்கமான சங்கங்கள் இருக்கு இங்கே!

தமிழ்ச் சங்கத்தில் ஒரு முப்பது குடும்பம் இருக்காங்க. அதுலே ஒரு நாலு குடும்பம் தவிர பாக்கி நம் இலங்கைத்
தமிழர்கள். 12 வயசு நம்ம தமிழ்ச்சங்கத்துக்கு. இது எல்லாம் இந்த கிறைஸ்ட்சர்ச் நகரில் மட்டும்:-)

said...

வாங்க உமையணன்.

யாருமே நம்ம கேள்வியைக் கண்டுக்கலைன்னு கவலையாப் போச்சு.

//அநேகமா பாரதியார் பாடியது வஹாங் சே யஹாங்-வாகத்தான் இருக்கும்னு
எனக்கு தோணுது.//

எனக்கும் அதேபோலத்தான் தோணுச்சு. ஏற்கெனவே இன்னும் சிலபாட்டை அவர் தமிழ்ப்படுத்தி
இருக்காரில்லே?

வருகைக்கும், 'கவனிப்பு'க்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி.

said...

//வருகைக்கும், 'கவனிப்பு'க்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி.//

எனது முதல் இடுகைக்குப் பின்னூட்டம் போட்டவர் நீங்கள். உங்க தளத்துக்கு நான் வருவது இது முதல் தடவை இல்லை. பின்னூட்டம் போடுவது இங்கே ரொம்ப சிக்கலாக இருக்கிறது. உங்கள் பதிவில் பின்னூட்டம் போடுவதற்கு ரொம்ப நாள் முயற்சித்தேன். இன்றைக்குத்தான் முடிந்தது.

said...

ஜனகன மன கத்திப் பாடனீங்களா?

நம்ம ஜன கன போட்டிக்கு இன்னும் 42 பேர் வேணுமேன்னு நான் கத்திக்கிட்டு இருக்கேனே, கேக்கலியா?

உடனே அனுப்புங்க.

:)

btw, surveysan2005 at yahoo.com எமது மடல். பப்ளிஷ் பண்ணலாம் தப்பில்ல.

Anonymous said...

ஆஹா நானும் MTR புளியோதரைக்காரிதான். ஆமாம் அது ஒண்ணுதான் கிடைக்குது

said...

//'பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு' என்ற பாடல் சற்றுமுன் நாம் பாடிய 'சாரே ஜஹாங் சே அச்சா' என்ற அதே பொருள் உள்ளது//

டீச்சர்...பின்னிட்டீங்க...முன்னறிவிப்பு இல்லாததால் தயார் செஞ்சுகொண்டு போகலைன்னு சொல்லிட்டு, இப்படி டாக்டர் பட்டம் வாங்கின ரேஞ்சுக்குப் பேசியிருக்கீங்க!

//சங்கத்தின் ஸ்தாபகர் பொருள் பதிந்த பார்வை ஒன்றை என் மேலே வீசினார்//

கரெக்டாத் தான் வீசி இருக்காரு! :-))

said...

பாரதியார் பொதுவா வேறு மொழிகளில் இருந்து கருத்தாக்கம் செய்யும் போது மூல நூலைக் குறிப்பிட்டுச் சொல்வது வழக்கம்.
பாட்டு மட்டும் அல்லாமல் மெட்டையும் குறிப்பிட்டுச் சொல்லுவார்!

எ.கா:
தாயின் மணிக்கொடி பாரீர்
(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்)
தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு

அதே போல் வந்தே மாதரம் பாட்டையும் நளிர்மணி நீரும் என்று தமிழாக்கம் செய்யும் போது, சட்டர்ஜி பெயரைக் குறிப்பிடுகிறார்!

ஆனால் அவர் அது போல் எதுவும் இந்தப் பாட்டுக்குக் குறிப்பிடவில்லை!
மேலும் அதே 1904இல் தான் சுதேசமித்திரன் உதவி ஆசிரியராகச் சேர்கிறார். பத்திரிகை தர்மத்தின் படி மூலப் பாடலைச் சொல்ல வேண்டும் என்று அவர் நிச்சயம் தெரிந்து வைத்து இருப்பார்.

மேலும் முதல் ரெண்டு வரிகள் தான் ஒரே பொருளில் வருகின்றன...
அப்பறம் ரெண்டுமே வேற வேற பாட்டு தான்!

ஹம் புல் புலேன் ஹைன் உஸ்கி!
வு குல்ஸிதான் ஹமாரா! என்று மாறிவிடுகிறது.
பாரதியோ ஞானத்திலே பர மோனத்திலே - உயர்
மானத்திலே என்று பாடி விடுகிறார்.

ஸோ, நீங்க சொன்னாப் போல great men think alike தான்! :-)
சரியா டீச்சர்? மார்க் உண்டா? இல்லை Stand up on the Bench-a?:-)

said...

வாங்க டெல்ஃபீன்.

// தனியா போய்விட்டீங்க போலிருக்கு.//

அவ்வளோ பாக்கியம் அவர் செய்யலை:-)

//ரொம்ப சந்தோஷமா இருக்கார்//

அதான் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டார்னு எழுதுனேனே:-)))))

கடைசிப் படத்துலே இருக்கேனே, கண்டுபிடிக்கலையா?
இளைச்சுட்டேனோ? :-))))))

said...

உமையணன்,

பின்னூட்ட நாயகிக்கு வந்த கதிகேடைப் பார்த்தீங்களா?
பின்னூட்டப்பெட்டியே திறக்க மாட்டேங்குது(-:

எதிரி நாட்டு மன்னன் செய்த சதிவேலையோ? :-)))))

பி.கு: பி.நா. பட்டம் வலைமக்களின் அன்பளிப்பு:-)))))

said...

வாங்க சர்வேசன்.

கத்திப் பாடுனது கூட்டத்தில் கோவிந்தா:-)))))

தனியா பாடலாமுன்னா பக்கவாத்தியம் இல்லையே:-))))

said...

ச்சின்ன அம்மிணி,

'ப்ரியா' புளியோதரை பேஸ்ட் கிடைக்குது. எனக்கென்னவோ அது
ரொம்ப சுமாராத்தான் இருக்கு.

said...

வாங்க KRS.

நானும் பாரதியார் புத்தகத்தைப் பார்த்தேன். அதுலேயும் ஒண்ணும் போடலை.
ராகம் மட்டும் 'இந்துஸ்தானி தோடி'ன்னு போட்டுருந்தது.

//ஆனால் அவர் அது போல் எதுவும் இந்தப் பாட்டுக்குக் குறிப்பிடவில்லை!
மேலும் அதே 1904இல் தான் சுதேசமித்திரன் உதவி ஆசிரியராகச் சேர்கிறார்.
பத்திரிகை தர்மத்தின் படி மூலப் பாடலைச் சொல்ல வேண்டும் என்று
அவர் நிச்சயம் தெரிந்து வைத்து இருப்பார். //

100% சரி.

மார்க்கும் உங்களுக்கு நூத்துக்கு நூறு போட்டுட்டேன்.

said...

அந்த சூழ்நிலையில்,"
"சிந்துநதியின் மிசை நிலவினிலே...."
பாடி மொழிபெயர்த்தும் சொல்லியிருந்தால் பொருத்தமா
இருந்திருக்கும்லே?
ஸாரி ட்டீச்சர்! குருவுக்கு மிஞ்சின சிஷ்யனா னு மிரட்டாதீங்க....

said...

இந்த கேஆரெஸை எனக்கு சுத்தமா பிடிக்கிறதில்லை துளசிக்கா. நான் வந்து சொல்றதுக்குள்ள முந்திரிக்கொட்டையாட்டம் வந்து பதிலைச் சொல்லி 100/100 வாங்கிட்டுப் போயிட்டாரே! ஹும்ம்ம் ஹும்ம்ம்.

said...

வாங்க சிஜி.

இப்ப சொல்லுங்க.

அப்ப 'சிந்துநதியின் மிசை'யெல்லாம் 'சட்'னு நினைவுக்கே வரலை(-:
70 வருஷ விழாவுலே பாடட்டா?

said...

வாங்க அதியமான்.

முதல் முறையா இங்கே வந்துருக்கீங்க போல?
வணக்கம். நல்லா இருக்கீங்களா?

நாட்டைப் பற்றிய உங்க ஆதங்கம் புரியுதுங்க. இலவசத்துக்கு ஆலாப் பறக்கும் விதம்
மக்களை வச்சுருக்கற நிலை எப்ப மாறுமோ?

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

வாங்க குமரன்.

KRS எப்படி விழிப்பா இருக்கார் பார்த்தீங்கதானே?

"விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்"

said...

நன்றி அம்மணி,

மீண்டும் சந்திக்கலாம்

said...

யக்கா அதை ஆடியோ பதிவா போடுங்களேன்.. நாங்கல்லாம் விசிலடிப்போமில்ல..;-))

said...

இந்தப்பாட்டை, இசைக்குழுவோடு அருமையாப் பாடின 'நீலு'வையும் நினைச்சுக்கிட்டேன். என் பக்கத்தில் நின்னுக்கிட்டு இருந்த சங்கத்தின் ஸ்தாபகர் பொருள் பதிந்த பார்வை ஒன்றை என் மேலே வீசினார். சங்கத்தின் பத்து வருச வளர்ச்சியைக் கண்ட பெருமிதம் அவர் முகத்தில். இருக்காதா பின்னே?:-)
அதான் சிரிச்சுகிட்டுப் போஸ் க்கொட்ட்க்க்குறாரா.
புளியோதரை உடன்னெ சாப்பிடணம் போலலைருக்கு.