இந்திய சுதந்திரத்தின் அறுபதாண்டு நிறைவைக் கொண்டாட ஒரு ஒன்றுகூடல்நிகழ்ச்சியை ஏற்பாடு செஞ்சிருந்துச்சு எங்க இண்டியன் சோஸியல் & கல்ச்சுரல் க்ளப். எல்லாருக்கும் வசதியா இருக்கணுமுன்னு ஞாயித்துக்கிழமைக்கு வச்சிருந்தாங்க.சாப்பாடு 'Pot luck' வகை.
நான் என்னுடைய வழக்கமான ஐட்டம் 'எலுமிச்சை சாதம்' கொண்டு போகலை. அதுக்கு பதிலா இருக்கவே இருக்கு புளியோதரை:-))
சம்பிரதாயமான சடங்குகள் ஒண்ணுமில்லாமத்தான் இந்த விழா. இப்போதைய சங்கத் தலைவர் எல்லாரையும் வரவேற்று நாலு வார்த்தை சொன்னார். அப்புறம் வடக்கு, தெற்கு,கிழக்கு, மேற்குன்னு மக்களை குழுவா நிக்கச் சொன்னார். (நாங்க அவர் சொல்றதுக்கு முன்னாலேயே தெற்கெல்லாம் ஒரு இடத்துலே தானாவே குழுவா நின்னுத்தான் பேசிக்கிட்டு இருந்தோம். அது என்னவோ....... எங்கியாவதுநம்ம மொழி பேசறவங்களைப் பார்த்தாக் காலு தானாவே அங்கெ நகர்ந்து போயிருது.)
இன்னொரு தமிழ்க்குடும்பம், ஒரு கர்நாடகா, ஒரு பாலக்காடுன்னு நாங்க 8 பேர். ஒரு தெலுங்குக் குடும்பம் ரெண்டு பிள்ளைகளோடு வந்துருந்தாங்க.
அப்புறம் தலைவர் சொன்னதுபோல வட்டமா கைகோர்த்து நின்னு 'சாரே ஜஹாங் ஸே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா' பாடுனோம். அப்புறம் ஒவ்வொரு குழுவும் மற்ற குழுக்களோடு கை குலுக்கி, அவுங்களோட மொழியில் வணக்கம், கேம்ச்சோ, நமஸ்தே, எல்லாம் சொன்னோம்.
தெலுங்குப் பொண்ணு வயசு எட்டு இல்லை ஒம்போது இருக்கும் ஒரு தெலுங்கு பாட்டுப் பாடுச்சு. தெலுகு கொப்பதி, தெலுகு தீயதி, அம்மா நானான்னு இருக்கும்போது மம்மி டாடின்னு சொல்றது எதுக்குன்னு பொருள் வரும் பாட்டு. நானும் நினைச்சேன் 'தமிழுக்கு அமுதென்று பேர்' பாடலாமான்னு. கூடி இருக்கும்கொஞ்ச மக்களையும் விரட்டிவிட்டாப் பாவம் இல்லே?
பஞ்சாபி, பெங்காலின்னு சிலர் அவுங்க மொழியிலே கொஞ்சம் பேசுனாங்க. இப்பத் தமிழில் பேசணும். யாரு? எல்லாம் நாந்தேன். முன்னறிவிப்பு இல்லாததால் தயார் செஞ்சுகொண்டு போகலை. ஆனாலும் ஒரு ரெண்டு மூணு நிமிஷத்துப் பேச்சுதானேன்னு கவனமா, பேச்சு மொழியைத் தவிர்த்து மேடைப்பேச்சாவே சிலவிஷயங்களைச் சொன்னேன்.
"அனைவருக்கும் வணக்கம்.நான் தென் இந்தியர்கள் சார்பாக இங்கே பேச வந்திருக்கின்றேன்.ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா என்ற நான்கு மானிலங்களும் சேர்ந்ததுதான் தென் இந்தியா.
இந்தியாவின் சுதந்திர தினவிழாவைக் கொண்டாடி, சுதந்திரம் கிடைக்கப் பாடுபட்ட பெரியோர்களை இன்று நினைவு கூர்ந்தோம். இந்த சுதந்திரத்துக்கு வட இந்தியர்களைப் போலவே தென்னிந்தியர்களும் பாடுபட்டார்கள். அதை ஒரு போதும் மறக்கக்கூடாது. மகா கவி சுப்ரமணிய பாரதி, விடுதலைப் போராட்டத்தின் போது, பல தேச பக்திப் பாடல்களை இயற்றி மக்களுக்கு தேசிய உணர்வை உண்டாக்கி இருக்கிறார். 'பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு' என்ற பாடல் சற்றுமுன் நாம் பாடிய 'சாரே ஜஹாங் சே அச்சா' என்ற அதே பொருள் உள்ளது.
வட இந்தியர், தென் இந்தியர் என்ற பாகுபாடின்றி நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் ஒற்றுமையாக வாழவேண்டும். ஜெய் ஹிந்த்"
(கொஞ்சம் சொதப்பிட்டேனோ? சட்னு ஒண்ணும் பேசத் தோணலைப்பா)
எப்படியோ, கொஞ்சம் தமிழோசையை அந்தக் கூட்டத்தில் பரவவிட்டேன்னு சொல்லிக்கலாம்.
தற்போதையத் தலைவர் குஜராத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் விடுமுறைக்கு இந்தியா போனப்ப எடுத்த சபர்மதி சத்தியாகிரக (காந்தி) ஆசிரம வீடியோக் காட்சியைக் காமிச்சார். அதுக்கப்புறம் பஞ்சாபி நண்பர்கள் கொஞ்சம் பாடுனாங்க. எல்லாருமாச் சேர்ந்து பாடியது,
'யே மேரி வதன் கி லோகோ,
இந்த சங்கம் ஆரம்பிச்சப்ப (1997லே) சுதந்திர தினப் பொன்விழாக் கொண்டாட்டத்தில் இந்தப்பாட்டை, இசைக்குழுவோடு அருமையாப் பாடின 'நீலு'வையும் நினைச்சுக்கிட்டேன். என் பக்கத்தில் நின்னுக்கிட்டு இருந்த சங்கத்தின் ஸ்தாபகர் பொருள் பதிந்த பார்வை ஒன்றை என் மேலே வீசினார். சங்கத்தின் பத்து வருச வளர்ச்சியைக் கண்ட பெருமிதம் அவர் முகத்தில். இருக்காதா பின்னே?:-)
'ஜன கண மன'ன்னு தேசிய கீதம் எல்லாரும் சேர்ந்து சத்தமாப் பாடுனோம். அப்புறம் சாப்பாடு. தற்போதையக் கலாச்சாரத்தின்படி 'அந்தாக்ஷரி' இருக்கு உணவுக்கு அப்புறம். அதுக்கெல்லாம் நிக்கப் பொறுமை இல்லாமல், கிளம்பினோம். எங்க கூடவே தென்னிந்தியா முழுசும் கிளம்பிருச்சு:-))))
இப்ப என்ன தோணல்ன்னா, கவிஞர் முகம்மது இக்பால் 'சாரே ஜஹாங் சே அச்சா' எழுதுனது 1904-இல். நம்ம பாரதியார் 'பாருக்குள்ளெ நல்ல நாடு' எழுதுனது எப்ப? எந்த வருஷம்? வஹாங் ஸே யஹா(ங்) வா இல்லை யஹா(ங்) ஸே வஹா(ங்)வா? இல்லே ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமில்லாமல் 'கிரேட் மென் திங் அலைக்'கா?
தெரிஞ்சவுங்க சொல்லுங்க.
இந்தப் பார் இப்போ Bar ஆக மாறி இருக்கறதுக்கு இன்னொரு புலம்பல், இன்னொரு நாளைக்கு வரப்போகுது.
