Thursday, August 16, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 9

ஒரு வீடு கட்ட ரெண்டுநாள் லீவு போடக்கூடாதா? போட்டார். காலையிலே 'வழக்கம் போல' போய்ப் பார்த்தோம். முழுசும் கருப்பு பாலித்லீன் ஷீட்போட்டு, மேலே கம்பி வச்சிருந்தாங்க. அவுட்லைன்லே ஆணி அடிச்சுகிட்டு இருந்தாங்க. மத்தியானம் கவுன்சில் இன்ஸ்பெக்ஷன் இருக்காம்.நாங்க அப்படியே 'கார்ட்டர்ஸ்' கடைக்குப் போய், உள்ப்புறக் கதவுங்க டிஸைன்களைப் பார்த்து எல்லாக் கதவுங்களுக்கும் 'ஆர்டர்' கொடுத்தோம். மொத்தம் 20 கதவுங்க. சிலது கண்ணாடி இல்லாதது.பலது கண்ணாடி பொருத்தியது. சிலசமயம் கதவுக்கு அந்தப் பக்கம் ஆள் இருக்கறதுதெரியாம வேகமாத் திறந்துட்டு ச்சின்னச்சின்ன விபத்து நடந்துருக்கு. முக்கியமா காஃபி, டீ எல்லாம் கொட்டிரும். கொட்டுனதுகூடப் பரவாயில்லை, அதுக்கப்புறம் அந்த இடத்தை, கார்பெட்டைச் சுத்தம் செய்யறதுக்குள்ளே தாவு தீந்துரும். அதை மனசுலெ வச்சுத்தான் கண்ணாடிக் கதவு.




எனக்குப் புராதனசாமான்கள், கலைப்பொருட்கள்னு கொஞ்சம் பைத்தியம் இருக்கு. இதுமட்டுமா? இன்னும் நிறைய இருக்குதான். அதெல்லாம் அப்புறம் ஒருநாள் சாவகாசமாச் சொல்றென். யுனீக்கா இருக்கற பொருட்களைப் பார்த்தால் மனசு பரபரங்கும். இதுலே நம்ம வீட்டு முன்வாசக் கதவை இந்த ஊரில் இல்லாத ஒரு டிஸைன்லே செஞ்சுக்கலாம்னு எண்ணம். கதவுன்னா கதவு இல்லை. அதுலே பொருத்தும் கண்ணாடியில்தான். அப்படியே ' Lead light design' போய் , 'வாசக் கதவு'க்கு என்ன 'டிஸைன்' கண்ணாடியிலே செய்யலாம்னு பார்த்துட்டு வந்தோம். அந்தக் கடைப் பெண்மணி, எந்த டிஸைன் ஆனாலும் செஞ்சுறலாமுன்னார். என் கம்மல், புடவையிலே இருக்கற படம், வேறு ஏதாவது 'இந்திய டிஸைன்' எதுவானாலும் செய்து பார்க்கலாமாம். கேக்கவே நல்லா இருந்துச்சு!








மத்தியானமும் ஒரு முறை வீட்டைப் பார்க்கப் போனோம். அப்பத்தான் கவுன்சில் ஆளு வந்து எழுதிகிட்டு இருந்தாரு. பாலிஸ்டைரீன் வச்சு அதுக்கு மேலே கம்பிங்க வச்சு கம்பிங்களை சின்ன இரும்புக் கம்பிங்களாலே கட்டிகிட்டிருந்தாங்க! எல்லாம் சரியா இருக்குன்னு கவுன்சில் ஆளு சொன்னாரு. பாலீஸ்டைரீன் நல்லா திக்கா இருக்கு 4 செ,மீ உயரம் இருக்கு. அதுமேலே ஆளுங்க நடந்துகிட்டு இருந்தாங்க. ஒண்ணும் ஆகலே!




நான் 'ஜர்னலு'க்காக படம் எடுக்கணும்னு சாயந்திரம் போனா, நம்ம பில்டர் அவரு பேரு 'க்ரேக் ஸ்மித்', நான் பாட்டுக்கு 'பில்டர் பில்டர்'னு சொல்லிகிட்டு இருக்கேன். அவரும் , டீனும் வேலை செஞ்சுகிட்டு இருந்தாங்க, மணி அஞ்சரையாகுதேன்னோம். காலையிலே 7 மணிக்கு முன்னாலேயே 'காங்க்ரீட்' போட வந்துருவங்களாம். அதனாலே எல்லாத்தையும் முடிக்கறதுதான் நல்லதுன்னு வேலை செய்யறாங்களாம்.




காங்க்ரீட் போட்ட உடனே அதை நிரவிவிட ஒரு 'ஸ்பெஷலிஸ்ட்' வருவாராம் . அவருக்கு ஒரு ச.மீக்கு 4.10 டாலர் தரணுமாம். கையோடு காசுகொடுக்கறதா இருந்தா 3.10 டாலருக்கு செஞ்சு தாரேன்னார். சரின்னோம்.
நாளைக்கு மழை இல்லாமல் இருந்தா நல்லதுன்னு சாமியை வேண்டிகிட்டு இருக்கோம்.



காலையிலே ஏழரைக்குப் போறோம், அதுக்குள்ளெ காங்க்ரீட் போட்டுட்டாங்க. அதை சரி செய்து, லெவல் செய்து, பாலீஷ் போடறதுக்குப் பிரத்யேகமா இருக்கற ரெண்டுபேரு அங்கே இருந்தாங்க. வேலை நடந்துகிட்டு இருந்தது. $780 கொடுத்தோம். சரின்னுட்டாங்க!




அப்ப 'ரமண் பையா( ஹிந்தியில் அண்ணன்னு பொருள்)' அந்தப் பக்கம் வந்தாரு.அவர் பக்கத்துத் தெருவில்தான் இருக்கார். ரியல் எஸ்டேட் ஏஜெண்ட். நம்ம பழைய வீட்டுக்கு இவர்தான் நமக்கு ஏஜெண்ட். பிளான்படி எல்லாம் நடக்குதான்னு கேட்டுட்டுப் போனார். நாங்களும் 'காஸ் கனெக்ஷன்' கொடுக்கற ஒரு கம்பெனிக்குப் போய் , அதற்கான செலவு விவரம் அனுப்பறதுக்குச் சொன்னோம். குளிர் ஊரா இருக்கறதாலே சுடுதண்ணிதான் எல்லாத்துக்கும் ரொம்ப பயன்படுத்தணும். இங்கே மின்சார பில் வரும்போது பார்த்தா ஜன்னி வந்துரும். சுடுதண்ணி டேங்க் எப்பவும் ஆன்லேயே இருக்கணும். அப்படி இருந்தும் முதல்லே குளிக்கப் போனவுங்க ஜலக்ரீடை செஞ்சா, அடுத்து குளிக்கப் போறவங்களுக்கு தண்ணீர் வெதுவெதுன்னு வரும். மூணாவது ஆளுக்கு.........சுத்தம். சுடுதண்ணீ வெளியேற வெளியேற அந்த இடத்துக்குப் பச்சைத்தண்ணீர் வந்து டேங்குலே ரொம்பிருதுல்லையா?இந்த வம்பு இல்லாம இருக்கலாமுன்னு இந்த வீட்டுக்கு சுடுதண்ணீர் மின்சாரத்துலே இல்லாம, கேஸ் மூலம் சூடுஆகறமாதிரி செஞ்சுக்கலாமுன்னு ஏற்பாடு. நமக்கு வேணுங்கற சூட்டுக்கு சுடுதண்ணீர் வரும். யார் எவ்வளோ நேரம் வேணுமுன்னாலும் குளிச்சுக்கட்டுமுன்னு இருக்கலாம். இதுதான் உண்மைக்குமே செலவு கம்மியா இருக்கு. வேணுங்கறப்பதானே கேஸ் செலவு ஆகும். மின்சார டேங்க்ன்னா அது பாட்டுக்கு 24 மணி நேரமும் ஆன்லேதானே இருக்கு.




அப்புறம் மகளோடு போய் சாப்பிட்டு விட்டு, 'ப்ளேஸ் மேக்கர்' என்னும் கடையிலெ போய் அடுக்களை ஸிங்க், குழாய் ரெண்டுக்கும் ஆர்டர் கொடுத்துட்டு மறுபடி அந்த வீட்டு வேலை என்னாச்சுன்னு பாக்கப் போனோம். பாலீஷ் செஞ்சுகிட்டு இருந்தாங்க. எல்லாம் சரியா வரதாச் சொன்னாங்க. நல்லகாலம், இதுவரை மழை இல்லே.





இந்த 'ஜர்னல்' எழுதறது ஒரு ஏறக்குறைய ஒரு 'டைரி' யாக மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. ஆனா தினமும் என்ன நடந்ததுன்னு எழுதலைன்னு வையுங்க எல்லாம் மறந்திரும் இல்லையா? அப்புறமா எல்லாத்தையும் சுருக்கி எழுதணும்னு இருக்கேன். என்னத்தை, எப்படிச் சுருக்கணுமுன்னு யோசிக்கணும்.




காலையிலே போனோம். எங்கே? எங்கே போவோம்? எல்லாம் அந்த வீடு கட்டற இடத்துக்குத்தான்! இனிமே போனோம்னு சொன்னா, எங்கே ஏன் அப்படின்னு கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது. புரிஞ்சுக்கணும் நீங்க, இது புது வீடு 'மேட்டர்'னு. சரியா ?




காங்க்ரீட், சிமெண்ட் காஞ்சிருந்தது. வேலியிலே ஒரு பலகை உடைஞ்சிருந்ததாலே, பக்கத்து வீட்டு நாய் வெளியே ஓடிருச்சுன்னு பக்கத்து வீட்டு ஆளுங்க சொன்னதுனாலே இடைவேளி இருந்த இடத்துலே பலகையை ( ரெண்டு இடத்துலே) வச்சு அடிச்சாரு கோபால்.நாமோ அங்கே அவுங்களுக்குப் பக்கத்து வீட்டு ஆளுங்களா ஆகப்போறோம். பின்னால எதுக்கு மனக்கசப்பு? நல்ல விதமா நடந்துக்கறதுதானே நல்லது!
மகளோட 21 வது பிறந்தநாள் வருது. அதுக்கு 'கேக்' ஏற்பாடு செஞ்சுட்டு, அப்படியே 'கிச்சன் திங்க்ஸ்' போய் என்ன 'பெஞ்ச் டாப் கலர்' ன்னு முடிவு செய்யறதுக்கு 'ஸாம்பிள்' எடுத்துட்டு வந்தோம்.




ராத்திரி, இவரு நிறையப் படங்களை 'நெட்' லே இருந்து எடுத்துக் கொடுத்தார். வீட்டு முன் கதவுலே போடற படம் என்னன்னு முடிவு செஞ்சுக்கணும். குழப்பமா இருக்கு!



தொடரும்.......................
குமார் கேட்டுக்கிட்டே இருந்த அஸ்திவாரம் ஒருவேளை இதுதானோ?

17 comments:

Anonymous said...

1. உங்க பொண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நண்பர்களோட பெரிய பார்ட்டியா. 21 வயசுங்கறது பெரிய விஷயமில்லயா இங்க.

2. கேஸ்ல தண்ணி சூடு பண்ணறதுதான் சிக்கனம். நல்ல ஐடியா. பில்லும் கம்மியா வரும். சுடுதண்னிக்கு சிலிண்டர் வைக்கற இடம் மிச்சம். 60டிகிரில வைக்க சொல்வாங்க. ஆனா 40 டிகிரில வச்சாலே போதும். நல்லா சூடா தண்ணி வரும்

said...

இங்க இருக்கும் வீடும் சரி, சென்னையிலும் சரி இவ்வளவு கஸ்டம் கிடையாது. அண்ணன் தான் பில்டர் ஒன்னும் தெரியாது.. பால் மட்டும் காச்ச போயாச்சு.. இங்க கட்டின வீடா வாங்கியாச்சு.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

தண்ணி சிலிண்டருக்குப் பதிலா, கேஸ் சிலிண்டர் வைக்க வெளியில் ஒரு இடம் விடணுமே:-)
அதுவும் ஆளுயரமா ரெண்டு வைக்கணும். அப்பத்தான் பாதி குளியலில் ஒரு சிலிண்டரில் கேஸ் தீர்ந்துபோச்சுன்னா,
தானாவே அடுத்த சிலிண்டருக்கு மாத்திக்கும்.

நாங்க 42 டிகிரி செட் செஞ்சுருக்கோம்.

said...

வாங்க அரவிந்தன்.

முதல் முதலா வந்துருக்கீங்க!

நலமா?

'லிஃப்ட்'லே போயிட்டு அப்புறம் இறங்கவே இல்லையா? ஒரு வருசமா அப்படியே
கிடக்கு உங்க பதிவு! :-))))

//இங்க இருக்கும் வீடும் சரி//

இங்கே எங்கே இருக்கீங்க?

said...

அஸ்திவாரமே போடமா வீடுகட்டியாச்சா அப்போ? நல்லா சொல்றிங்க வீடுகட்டுவதில் உள்ள நடைமுறைகளை .. பாலுமகேந்திர எடுத்த வீடு படம் போல :-))

Anonymous said...

டீச்சர், Rinnai - Infinity
இன்ஸ்டன்டா தண்ணி சூடாகி எல்லா பைப்லயும் வரும். சிலிண்டர் தேவையேயில்ல. வீட்ல அதுதான் இருக்கு. எலிமெண்ட் இருக்கு. எல்லாமே சிலிண்டர் இல்லாமத்தான். விசாரிச்சு பாருங்களென்

said...

வாங்க வவ்வால்.

வீடு புடிச்சிருந்தா மேற்கூரை போட்டதும் இரு இடம் புடிச்சுக்குங்க:-))))

//பாலுமகேந்திர எடுத்த வீடு படம் போல :-)) //

இதைப் பார்க்க ச்சான்ஸ் கிடைக்கலையே (-:
சினிமாவா இல்லே தொலைக்காட்சிக்கு எடுத்ததா?

said...

ச்சின்ன அம்மிணி,

இன்னும் எங்கூருக்கு 'கேஸ்'க்கு பைப் லைன் கனெக்ஷன் வரலைப்பா(-:
வெலிங்கடனில் அக்கா வீட்டுலேயும் இப்படி கேஸ் மீட்டர்
இருந்ததைப் பார்த்துருக்கேன்.

said...

அவுங்கங்க சந்தேகம் அவர்களுக்கு, எனக்கு?
எதுக்கு அந்த பாலிஸ்டிரீன்? அதற்கு கீழ் உள்ள கருப்பு நெகிழி?
இப்படி இருக்குமா?
சில இடங்களில் தண்ணீர் ஈரம் காய்ச்சும் ஆதாவது தரையில் தண்ணீர் திட்டு திட்டாக கீழிருந்து மேலே வரும் அதை தடுக்க அந்த நெகிழி.
அதுவும் உங்கள் ஊர் குளிர்காலத்தில் வீட்டில் உள்ள உஷ்ணம் அப்படியே இருக்க அந்த தெர்மோகோல் (நம்மூர் மொழி) உதவும்்.
இந்த தெர்மோகோல் மேல் கான்கிரீட் போடும் போது இன்னொரு வசதியும் இருக்கு.ஆதாவது உடைக்கனுமா என்றால் சும்மா அப்பளம் மாதிரி தூக்கி போட்டுவிடுவார்கள்.எதெனுடன் பிடிப்பு கிடையாது.
சில இடங்களில் பார்த்துள்ளேன்,இந்த தளம் போடுவதற்கு முன்பு soil treatment என்று சொல்லி கரையான் நீக்கி கரைசலை தெளிப்பார்கள் - 50 வருடத்துக்கு தாக்குப்பிடிக்கும்.சிங்கையில் உண்டு.
உங்கள் ஊரில் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

என்ன "வீடு" பார்க்கவில்லையா?நாம் படும் கஷ்டத்தில்் ஒன்றாவது அதில் இருக்கும்,அதுவும் நடுத்தர குடும்பம் ஒரு வீடு கட்ட படும் கஷ்டங்களை அப்பட்டமாக சொல்லியிருக்கும்.

said...

இங்க தில்லியில் சமையல் காஸுக்கு பைப்லைன் வந்துடுச்சு. நான் இந்த விண்டருக்கு பாத்திரம் கழுவ ஒரு ஹீட்டர் சின்னதா காஸ் காரங்ககிட்டயே கனெக்ஷன் எடுக்கலாமன்ன்னு இருக்கேன்...

said...

"வீடு" நல்லத்திரைப்படம் , அர்ச்சனாவிற்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது அதில்!வீடு கட்டும் கனவை சொல்லும் படம்!

உங்கள் முந்தைய பதிவையும் படித்தேன் படங்களில் இருந்து அஸ்திவாரம் போட்டாற்போலவே தெரியவில்லை, இது மரவீடா?

கூறையில் தொங்க இடம் கொடுத்த கூறை வள்ளல் ஆகிடிங்க!

வவ்வால் கொசுக்களை கட்டுப்படுத்துமாம், அயல்நாடுகளில் இதற்காக வவ்வால் வளர்ப்பு சிலர் செய்கிறார்கள் , விலைக்கு வவ்வால் அதற்கான கூண்டு எல்லாம் கிடைக்கிறதாம்!

said...

வாங்க குமார்.

தெரிஞ்சவரைக்கும் சொல்லவா?

கூழாங்கல் போட்டு அப்புறம் ஷிங்லில்ஸ் போட்டு காம்பாக்ட் செஞ்சு அப்புறம்
கருப்பு ப்ளாஸ்டிக்,கம்பி, பாலிஸ்டைரீன் இதெல்லாம் ஈரப்பதம் வீட்டுக்குள்ளெ
அண்டாம இருக்கவும், கீழே இருந்து செடிகள் முளைச்சு வரமா இருக்கவும்தானாம்.

டெர்மைட் மருந்து இப்பவும் ஆஸியில் போடறாங்க. குறிப்பாக வட ஆஸியில் ப்ரிஸ்பேன் இங்கெல்லாம்
கரையான் அப்படியே வீடு மொத்தமும் தின்னுருதாம்.

//வீட்டில் உள்ள உஷ்ணம் அப்படியே இருக்க அந்த தெர்மோகோல் (நம்மூர் மொழி) உதவும்்.//

இதுக்குத் தனியா வேற வைத்தியம் செய்யறாங்க.

'வீடு' பார்க்கக் கிடைக்கலை(-:

ஆமாம். இதுதானா நீங்க தேடிய அஸ்திவாரம்?:-)

said...

வாங்க முத்துலெட்சுமி.


பாத்திரம் கழுவன்னு இல்லாம குளியலறை & சிங் எல்லாம் சேர்த்தே போட்டுருங்க. ஒரே
வேலையா போகும். ரொம்ப வசதியா இருக்கு.

said...

வவ்வால்,

இது மரவீடா இல்லையான்னு தெரியலை. செங்கல் சிமெண்டு எல்லாமே வருது அப்புறம்.

இங்கே நியூஸியில் வவ்வால் இல்லை. நீங்க வந்தாத்தான் உண்டு:-)

கொசுவும் இல்லை:-)

வீடு கிடைக்குதான்னு தேடணும். பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டுருக்கு பின்னூட்டங்கள்.

said...

ஆமாம். இதுதானா நீங்க தேடிய அஸ்திவாரம்?:-)
இது அஸ்திவாரம் என்று சொல்லமுடியாது.
உங்க வீட்டுக்கு,சுற்றுச்சுவர் வரும் இடத்தில் மட்டும் தான் அஸ்திவாரம் அதுவும் 45 CM உயரம் தான்.இநத ஊரை ஒப்பிட்டு பார்க்கும் போது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.
அஸ்திவாரம் வெறும் வீட்டின் எடையை கீழே இறக்குவதற்கு மட்டும் அல்லாமல் சூறாவளி/வெள்ளம் போன்றவற்றை தாங்கவும் ஓரளவு அனுசரனையாக இருக்கும்/இருக்கவேண்டும்.அந்த கவலையெல்லாம் அங்கு தேவையில்லை போலும்.
மேலோட்டமாக கருத்து சொல்ல விரும்பவில்லை.அங்கு பணிபுரிபவர்கள் அனுமதிக்கிறார்கள் என்றால் ஏதோ காரணத்துடன் தான் இருக்கும்.
எங்காவது நெட்டில் துழாவினால் கிடைக்காமலா போகும்?
அப்போது விளக்குகிறேன்.
அந்த ரமண் பையாவிடம் கேட்டால் கூட ஏதாவது விளக்கம் கொடுப்பார்.
கான்கிரீட் போட ஒரு விலை,நிரவ ஒரு விலை...
பகல் கொள்ளை.

said...

நான் சாக்ரமந்தோ USA,la (இங்க்-USA). இப்பதான் முத்லி comment எழுதினேன். ஆனால் உங்கள் எல்லா பக்கங்களையும் படித்துவிடுவேன்.

said...

வவ்வால் ,கொசு இல்லாத ஊர் ஒரு ஊரா? :-))
----------------
குமார்,
மண்ணில் ஈரக்கசிவு ஏற்படும் போது அது விரிவடையும் களிமண் அதிகம் உள்ள இடத்தில் இது சகஜம், அதனால் அஸ்திவாரம் இல்லாமல் கட்டினால் விரிசல் ஏற்படும் , நிலைப்பு தண்மைக்கும் அஸ்திவாரம் தேவை.
ஒரு வேளை அங்குள்ள மண் கெட்டியான ஈரம் இழுக்காத வகை மண்ணாக இருக்க கூடும்.

ஒருவேளை அங்கே எல்லாம் செங்கல், வைத்து சுவர்கள் கட்டாமல், ஃபெர்ரோ சிமென்ட் என்ற வகை கான்கிரீட்டில் சுவர்கள் அமைப்பார்களோ, அது எடை குறைவானது , ரொம்ப எல்லாம் ஆழமா அஸ்திவாரம் வேணாம் அதுக்கு. கூறை எடை தாங்க பில்லர்கள் வைத்துவிடுவார்கள் என நினைக்கிறேன்.