Wednesday, August 08, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 5

ஜூன் 30. இன்னைக்கு வாடகைக்கு இருக்கறவங்க வீட்டைக் காலி செய்யறாங்க! கோபாலுக்கு ஏதோ அவசர மீட்டிங் இருக்கறதால என்னைப் போய்ப்பார்க்கச் சொன்னார். இங்கெல்லாம் வாடகைக்கு வீடு எடுத்தால், 'பாண்ட் ( Bond)' ஒண்ணு இருக்கும். அதாவது 2 வார வாடகை அட்வான்ஸ்.அது இங்கே வீட்டுவசதி வாரியம் போல இருக்கற ஒரு நிறுவனத்துக்குப் போயிரும். வீட்டைக் காலி பண்ணுறப்ப வீட்டுச் சொந்தக்காரர், காலிபண்ணவுங்க, சுத்தமா வச்சிட்டுப் போயிருக்காங்களா, ஏதும் உடையாமக் கொள்ளாம இருக்கான்னு பார்த்து,'செக்' செஞ்சு அதுக்குன்னு இருக்கற ஒரு அச்சடிச்ச பத்திரத்துலே நாம கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாத்தான், அவுங்களுக்கு அட்வான்ஸை அந்த நிறுவனம் கொடுக்கும்.இது வீட்டுக்காரருக்கும், குடித்தனக்காரருக்கும் பாதுகாப்பு. ஏதாவது உடைஞ்சுபோய், அதை நாம ரிப்பேர் பண்ணும்படியா இருந்தா, அதுக்குண்டான காசைப் பிடிச்சுகிட்டுதான் மீதி அவுங்களுக்குப் போகும்.


நான் போய்ப் பார்த்தபோது, ஒரு கண்ணாடிக் கதவுலே கண்ணாடி உடைஞ்சிருந்தது.அதுக்கு எவ்வளவு கொடுக்கணும்னு கேட்டாங்க. இடிக்கப்போற வீடுதானேன்னு நினைச்சுகிட்டு, ஒண்ணும் தரவேணாம்னு சொல்லிட்டேன். அதுக்குள்ளே கோபாலும் வந்துட்டார். அவுங்களுக்கு, கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டு, வீட்டைப் பூட்டிகிட்டு வந்துட்டோம்.

"நாளைக்கு '·ப்ரூஸ்(Frews) கம்பெனி'க்கு சொல்லிறலாம், சாவியை வந்து வாங்கிகிட்டுப் போகச்சொல்லி. ஏதாவது விக்க முடியற சாமான்களைக் கழட்டி எடுத்துகிட்டு, அப்புறம் வீட்டை இடிச்சுக்கட்டும்"

மறுநாள் காலையிலே வேலைக்குப் போனவரு, ·போன்லே கூப்பிட்டுச் சொல்றாரு," இன்னைக்கே வீடை இடிக்கறவங்க வராங்களாம். நீ போய்ப் பார்த்து, அங்கேயிருந்து ஏதாவது எடுக்கணும்னா எடு. அப்புறம், தோட்டத்துலே எதை எதை விட்டு வைக்கணும்னும் சொல்லிடு."

ரெண்டு ஆளுங்க வந்திருந்தாங்க. நாங்க, முன்னமே தீர்மானித்தபடி அங்கெயிருக்கற ' நைட் ஸ்டோரேஜ் ஹீட்டர், பேர்ட் பாத்( Bird Bath)' ரெண்டையும்இப்ப இருக்கற வீட்டுலே கொண்டுவந்து போடச் சொன்னேன். அங்கேயிருக்கற எலுமிச்சைச் செடி/மரம் எடுத்துக் காப்பாத்தி, வீடு முடிஞ்சபிறகு திருப்பி நடணும். செடியை ஒண்ணும் செஞ்சுறாதீங்கன்னு சொல்லிட்டு வந்தேன். அன்னைக்கு மத்தியானமே ஒரு 'மெஷினைக் கொண்டுவந்து இடிக்க ஆரம்பிச்சுருக்காங்க. கோபால், பகல் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரும்போது,அந்த வீட்டுவழியா வந்துருக்கார். வீடு பாதி இடிஞ்சு கிடக்காம்.சாயந்திரம் என்னதான் ஆச்சுன்னு போய்ப் பார்த்தா, அம்போன்னு சுவருங்க பாதியா நிக்குது.பாருங்க! 'ஆக்கறதுக்கு பலநாளு, அழிக்கறதுக்கு ஒரே நாளு' ன்னு சொல்றது சரிதான்!

மறுநாள் அங்கே வேலை ஒண்ணும் நடக்கலே! அதுக்கு அடுத்தநாளும் இப்படியே ........ஆறு நாளாச்சு,எல்லாம் போட்டது போட்டபடிக்கு. ஃபோனடிச்சுக் கேட்டப்ப,இன்னொரு வேலைக்கு மெஷீன் போயிருக்காம். அதை முடிச்சுக்கிட்டு வருவாங்களாம். நிறைய இடத்துலே பார்த்தீங்கன்னா,ஓரே ஒரு மெஷினும் ஒரு ஆளுமா வந்து எல்லாத்தையும் முடிச்சுடறாங்க, வண்டியில் உக்காந்தபடியே!

நம்ம எலுமிச்சைச் செடியை வேறு இடத்தில் வைக்க ஆளு வேணுமே!முன்னே நம்ம வீட்டுலே மரம் செடி யெல்லாம் வெட்டின ஆள்கிட்டே கேட்டோம். அதுக்கு ஒரு 'கார்டன் ஸ்பெஷலிஸ்ட்' இருக்கார். அவரைக் கேளுங்கோன்னார். அந்த 'நிபுணர்' வந்து பார்த்துட்டு, "நான் ஏற்பாடு செய்யறேன். ஆனா செலவு 275$ ."அவ்வளவு பெரிய செடி வாங்கணும்னா 400க்கு மேலெ ஆகும். இதுலே அருமையான எலுமிச்சம் பழம் இருக்கு. நல்ல 'ஜாதி'ன்னார்.

அங்கே இன்னொரு மரம் இருந்தது. அதைப் பார்த்துட்டு, அது ரொம்ப நல்ல மரம். கிடைக்கறது அபூர்வம்.அதும் பேரு ' ஜாப்பனீஸ் அம்பர்லா நீடில் பைன்'.அதும் விலை 2000$ அப்டின்னார். அதை எடுத்துக் காப்பாத்த முடியுமான்னு கேட்டதுக்கு, "செஞ்சிறலாம்"னார்.ரெண்டு வேலைக்கும் எவ்வளவு செலவுன்னு கேட்டேன். 400$ ஆகும்னார். அங்கே நிலத்தை 'க்ளியர்' செய்யற ·ப்ரூஸ் கம்பெனிகாரோட·போன் நம்பரைக் கொடுத்து, எந்த நாள் வந்து இதை செய்யப் போறேங்கன்னு நீங்களெ பேசி முடிவு செஞ்சுடுங்கன்னு சொன்னோம்.நாங்க பாத்துக்கறோம்னு சொல்லிட்டாங்க.


ஆச்சு 9 நாள். இடிபாடு அப்படியே கிடக்கு.வேலை நடக்கற அடையாளமே இல்லை.திருப்பதி 'நாவிதன்' மாதிரி பாதி வேலையை விட்டுட்டு போயிட்டா(ன்)ர். இது என்னடா வம்பாப் போச்சு? இன்னும் ரெண்டு நாள் போனபிறகு திடீர்னு ஒருநாள் ·ப்ரூஸ் காரர் வந்து வேலை ஆரம்பிச்சு செஞ்சுகிட்டிருக்கார். எலுமிச்சையை நகர்த்த வந்த ஆளு, அதைத் தோண்டிப் பார்த்தப்ப, அங்க வேரு மேலாகப் பரவுன மாதிரி இருக்கு. ஒண்ணும் செய்ய முடியாது! எடுத்து நட்டாலும் பொழைக்காதுன்னுட்டார். ஜப்பான் மரத்தை மாத்திரம் இடம் பெயர்த்து வைக்கறோம்னு சொல்லி அப்படியெ செஞ்சாங்க. வடகிழக்கு மூலையிலே வேலிக்குப் பக்கத்துலே எடுத்து வச்சிட்டாங்க. பக்கத்து வீட்டுலெ இருந்து கொஞ்சம் தண்ணியும் வாங்கி ஊத்துனாங்களாம்!
நான் போய் இருந்த எலுமிச்சம் பழத்தையெல்லாம் பறிச்சுக்கிட்டு வந்தேன். எல்லாத்தையும் ஜூஸர்லே போட்டு சாறு எடுத்து ஃப்ரீஸர்லே வச்சேன். இனி ஒரு வருசத்துக்கு நம்ம வீட்டுலே எலுமிச்சம்பழம் சாதம்தான்! இந்த மரத்தைக் காப்பாத்த முடியலைன்றதுதான் மனசுக் கஷ்டமாப் போச்சு.


அடுத்து வந்த தினங்களில் இடத்தை 'க்ளியர்' செஞ்சுக்கிட்டு இருக்காங்க. மத்த மரமெல்லாம் எடுத்தாச்சு. ஆப்பிள் மரங்கள் வகைக்கொண்ணா பழத்தோடு இருந்துச்சு. பாவம்,பறவைகள்தான் இனி ஏமாந்து போயிரும். மூலையிலே இருந்த 'க்ளாஸ் ஹவுஸ்' எல்லாம் எடுத்துட்டாங்க. அதுக்குப் பின்னாலே பாத்தா, அந்த மூலையிலே வேலியே இல்லை. பக்கத்து வீட்டுக்கு அப்படியே போயிறலாம். இதுக்குப் புதுசா வேலி அடிக்கணும். பொதுவாப் பார்த்தா, ரெண்டு வீட்டுக்காரங்களும் செலவைப் பகிர்ந்துதான் வேலி போடணும். ஆனா, இப்ப நம்ம வேலை நடந்துக்கிட்டு இருக்கறதாலே அவுங்களைக் கேக்கறது ஞாயம் இல்லைதானே?

தொடரும்.................

9 comments:

said...

கண்ணாடி உடைச்சா காசு வேண்டாம். வேலி போட காசு வேண்டாம்!!

உங்க பக்கத்து வீடு வாங்க வசதி இல்லைனாலும் உங்க வீட்டுக்கு வாடகைக்கு வந்திடலாம் போல இருக்கே!!!

said...

இடிக்கப்போற வீடுதானேன்னு நினைச்சுகிட்டு, ஒண்ணும் தரவேணாம்னு சொல்லிட்டேன்.
ரொம்ப நல்லவங்க! எவ்வளவு உடைத்தாலும் எதுவும் கேட்கமாட்டாங்க... என்று சொன்னார்களா இல்லையா?
இப்ப புரியுது,ஊஞ்சலுக்கு எதுக்கு தனி பீம் என்று.
உடைப்பது இப்போதெல்லாம் ஒரே நாள் வேலை.உடைந்த வீட்டை பார்க்கும் போது கஷ்டமாக இல்லை.எனக்கு ஒரு மாதிரி இருக்கும்,ஏனென்றால் கட்டினப்ப பட்ட கஷ்டம் கொஞ்சம் அதிகமாக உறைக்கும்.
கடைசியில் உள்ள படத்தில் உள்ள பழம் என்ன?

said...

வீட்டைக் கட்டிப் பார்!
வீட்டை இடிச்சுப் பார்!

said...

வாங்க கொத்ஸ்.

என்ன ஆணி நிறைய இருக்கா? ஆளையே காணொமே!

எப்ப வர்றீங்கன்னு சொல்லுங்க. Bond ரெடி பண்ணிடலாம்:-)

said...

வாங்க குமார்.

இடிக்கும்போது மனசுக் கஷ்டம்தான். ஆனா இது நாம் கட்டலையே.
மேலும், இங்கே புதுவீடு வரப்போகுதுன்ற சந்தோஷமும் இருக்கே.

இது பழம் இல்லைங்க. இந்த ஜாப்பனீஸ் நீடில் பைன் மரத்தோட கோன்.

Pine cone.

said...

வாங்க சிஜி.

பார்த்தீங்களா, உங்களுக்கெல்லாம் கட்டுன அனுபவம் மட்டும்தானே?
நமக்கு இடிச்சதும் சேர்ந்துக்கிச்சு:-)

said...

அதென்னவோ நிஜம் துளசி.
இடிக்கிறப்பொ ரொம்ப கஷ்டமா இருக்கும். இப்போ இருக்கிற வீட்டுப் பேரொட பழைய வீட்டை ஈடிக்க நம்ம ஊரில கிட்டத்தட்ட ஆறு மாசம் ஆச்சு.
அவ்வளவு கெட்டியான சுவர்கள். தூண்கள். இப்பவும் அந்த அஸ்தீவாரத்தில கொஞ்சம் இடத்தை விட்டு வச்சிருக்காங்க. பெயர்த்து எடுக்க முடியலையாம்.
எலுமிச்ச ஜூஸ் எவ்வளவு நாள் வந்தது?:))

said...

வாங்க வல்லி.

அந்தக் காலத்துலே நம்ம பக்கமெல்லாம் வீட்டுக்குக் கடக்கால் தோண்டுறதே ஒரு ஆறடிக்குக் கிட்டே
வரும். கருங்கல் எல்லாம் போட்டு அஸ்திவாரம் அமைப்பாங்க. இப்ப அப்படி யாரு செய்யறா?

எல்லாம் ஒரே மேம்போக்கால்ல போச்சு.


எலுமிச்சம் ஜூஸ் ஒரு வருசம் வந்துச்சு:-)))))

said...

ஆஹா.. இந்த பதிவுலே ஒரே எலுமிச்சை பழ வாடையா இருக்கே? :-)