Thursday, August 23, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 12

11/9
ரெண்டு மூணு நாளா ஓடு வேயற வேலைதான் நடந்துகிட்டு இருக்கு. 'ஸ்டீல்' ஓடுங்க, 7 சேர்ந்த மாதிரி நீளமா இருக்கு!அதை அப்படியே முன்னாலே போட்ட 'பில்டிங்' பேப்பரு' மேலே அடுக்கிக்கிட்டு இருக்காங்க! கலர் ஸ்டீல் ஓடுகள் 50 வருச உத்திரவாதத்தோடு வருது. என்ன, இங்கே நிதானமா யோசிக்க முடியாது. ஆரம்பத்துலேயே வீட்டோட கலரை முடிவு
செஞ்சுக்கிட்டுத்தான் வேலையைத் தொடங்கணும்.

கலருக்கு இவ்வளவு முக்கியமா? ஒருவிதத்துலே இதுவும் ஞாயம்தான். கலரில்லாத உலகைக் கற்பனைச் செஞ்சு பாருங்கோ......................



12/9
இன்னைக்குப் பாருங்க, கடைக்குப் போயிட்டு வரவழியிலெ எதேச்சையா(!) நம்ம புது வீட்டுப் பக்கம் போறோம், அங்கே ரெண்டு ஆளுங்க நின்னு வேடிக்கை பாத்துகிட்டு இருக்காங்க. நான் மெல்ல அவுங்க பக்கம்போய் நின்னு, 'வீடு நல்லா இருக்கா?' ன்னு கேட்டேன். அவுங்க 'ஆமா, ரொம்ப பெரிய வீடா இருக்கு. நல்லா இருக்கு'ன்னு சொல்லிட்டு. 'வீடு உங்களுதா'ன்னு கேட்டாங்க. ஆமான்னு சொன்னதும் அவுங்க, 'நாங்க பின்பக்கத்துத் தெருவுலே இருக்கோம். தினமும் இங்க வீட்டுவேலை நடக்கறதைப் பாத்துகிட்டு வர்றோம். ஆமா........ வீட்டுக்குள்ளே ஊஞ்சலு போடறீங்களாமே? என்ன மாதிரி? முன்னாலே அலங்காரத் தூண் வேற வருதாமே'ன்னு கேட்டாங்க!

'நம்ம வீட்டுலே நாம செய்யறது எல்லாமே இவுங்களுக்கு எப்படித் தெரிஞ்சது'ன்னு எங்களுக்கு ஒரே ஆச்சரியம். விசாரிச்சா விஷயம் வெளீயிலே வந்தது. நம்ம பில்டர் சொன்னாராம்!

அடுத்தவுங்க விஷயம் தெரிஞ்சு அதுலே மூக்கை நுழைக்கிற ஆளுங்க இங்கேயும் இருக்காங்கன்றது இப்ப வெட்ட வெளிச்சமா தெரிஞ்சுபோச்சு!இதெல்லாம் மனுஷ சுபாவம்தானே? மனுஷன் அடிப்படையிலே ஒரேமாதிரிதான்! தோலோட 'கலரு'தான் வித்தியாசம்!



அவுங்க போனபிறகு, நம்ம வண்டிக்கு முன்னாலே நிறுத்தி வச்சிருந்த காருலே இருந்து ஒரு வயசான ஜோடி இறங்குனாங்க. அவுங்க மெதுவா நம்ம வீட்டுவாசல்லே வந்து நின்னாங்க. அதுக்கு முன்னாலேயே கோபால் போய் நம்ம வண்டிலே உக்காந்து, அதை கிளப்பத் தயாரா இருந்தார். நான் வீட்டுகுள்ளெ இருந்து அப்பத்தான் வாசலுக்கு வர்றேன்.
நான் நம்ம பண்பாட்டை அனுசரிச்சு, வாசலிலே நிக்கறவங்களை என்ன, ஏதுன்னு விசாரிச்சேன். அவுங்க ரெண்டு தெரு தள்ளி இருக்கறவங்களாம். அவரும் ஒரு 'பில்டர்'ங்கறதால இந்த வீடு எப்படி கட்டி இருக்காங்கன்னு பார்க்க வந்தாங்களாம்!


நானும் 'உடனே' வந்து பாருங்க. நீங்க பில்டர்ங்கறதாலே ஒரு 'செகண்ட் ஒப்பீனியன்' கொடுங்க. வேலை தரமா இருக்கா? ஏதாவது விட்டுப் போயிருக்கான்னு பாருங்க'ன்னு சொன்னேன்.

அதுக்குள்ளெ கோபால் வண்டியிலேருந்து இறங்கி வந்து எங்களொட சேர்ந்துகிட்டார். சின்ன அறிமுகத்துக்குப் பிறகு, எல்லொருமா உள்ளெ போய் அறை அறையாச் சுத்திக் காட்டினோம்.






நம்ம '·பேமிலி லிவிங்' இடத்தைப் பாத்துட்டு, இது 'பால் ரூம் டான்ஸ்'க்கான இடமா(!)ன்னு கேட்டாங்க. அப்புறம் யாரு இந்த வீட்டை 'டிஸைன்' செய்தது, கால அட்டவணைப்படி வேலை நடக்குதா, எந்த மாதிரி 'ஹீட்டிங்' போடறோம் அப்படி இப்படின்னு எல்லா விஷயத்திலும் 'மூக்கை நுழைச்சிட்டு' நம்ம 'கராஜ்' கதவுக்கு மேலே ஒரு 'ஸ்டீல் ·ப்ரேம்' வச்சா, கதவு திறக்க மூட நல்லதுன்னு சொன்னாங்க.நாம 'ஆட்டோமாடிக்' கதவுதான் போடறொம். ரிமோட் கண்ட்ரோல் வைக்கறோம்.


காரிடார் இல்லாமக் கட்டி இருக்கோம் என்றதே எல்லாருக்கும் ஆச்சரியம். இங்கத்து வீடுகளில் ஒரு மீட்டர் அகலத்துக்கு நடைபாதை வாலாட்டம் நீண்டு போய்க்கிட்டு இருக்கும். எனக்கு என்னமோ இது பிடிக்கலை. சுவத்துலே உடம்பை இடிச்சுக்கிட்டு நடக்கறமாதிரி தொந்திரவு.


அப்புறம் மூலைங்களிலே வர்ற ஜன்னலுங்களுக்கு இன்னும் கொஞ்சம் 'சப்போர்ட்' தரணும். அந்த மூலைகள் கனம் தாங்கணும்னு சொன்னாரு.கேட்டுகிட்டோம். அதையும் கொஞ்சம் சரிபாத்துரணும்! எதுக்கு வம்பு?




எல்லாரும் கேக்கற ஒரு கேள்வி, 'எப்ப குடிவருவீங்க? எப்ப கட்டிடம் ரெடியாகும்?' கிறிஸ்மஸ்க்கு வந்துருவீங்களா? அவங்களோட ஒரே பெரிய பண்டிகை கிறிஸ்மஸ். அதுக்கு புது வீடுங்கறது அவுங்களுக்குப் பெரிய விஷயமா இருக்கு. நமக்கு அப்ப மார்கழி மாசமாச்சே!


"யாருக்குத் தெரியும்? எல்லாம் வீட்டுக்குள்ளெ இருக்கற வேலைங்களெ முடிக்க ஆளுங்க கிடைக்கிறதைப் பொறுத்துதான்! எலக்ட்ரீசியன்,ப்ளம்பர், ஜிப் போடறவங்க, பெயிண்ட், கார்பெட், வைனல்ன்னு பலதும் இருக்குல்லே!
எப்படி இருந்தாலும், தை மாசம் முடிஞ்சிடும்னு ஒரு நம்பிக்கை இருக்கு!"


இன்னொண்ணும் சொல்லணும். இங்கெ வீட்டுவேலை நடக்கற இடத்துலே ஒளிவு மறைவுன்னு ஒண்ணுமே இல்லை. சுத்திவர வேலிகூட இல்லை. யாருவேணா உள்ளெ போயி பாக்கற மாதிரிதான் இருக்கு. வாசலில் 'டேஞ்சர்'னு போர்டு வச்சுருக்கறதை யாருமே சட்டை செய்யறதில்லை போல.


எனக்கொரு ·பீலிங், உள்ளெ வேற யாரோ வந்து போறாங்கன்னுதான்! எப்படின்னா,அங்கே ஒரு இடத்துலே நான் பாத்த ஃபேண்டா ஆரஞ்சு பாட்டில், மறுநாள் வேற இடத்துலே இருந்தது! அந்த வீக்கெண்ட் யாரும் வேலை செய்யலே. அதனாலே வேலையாட்கள் வரலேன்னு நமக்கு நல்லாத் தெரியும்! அப்புறம், விருந்தினருக்கான கழிப்பறையிலே ஒரு ஃப்ரேம், யாரோ அழுத்தி அடிச்ச மாதிரி, அதோட ஆணியிலேருந்து உடைஞ்சு கீழே நழுவி இருந்துச்சு.


கோபாலுக்கென்னன்னா வீடு கட்டற நாம், வெள்ளைக்காரனா இல்லாததால யாரோ விஷமிங்க அப்படி செய்யறாங்களோ ஒரு சந்தேகம். 'நாம அங்கெ அடிக்கடி போகக்கூடாதோ' ன்னு சொன்னாரு.

"நல்லா இருக்கே நியாயம்! நாம கட்டற வீடு. நாம போகாம ஊருலே இருக்கற மத்தவனுங்கெல்லாம் போகணுமா? அப்ப நாம வீடுகட்டி முடிச்சுட்டாலும் அங்கெ குடிபோகவே முடியாதா?"


"அது வேற. அப்ப ஆளுங்க வீட்டுலே வசிப்போம்லெ."

"வேணும்னு செய்யறவன் அப்ப வரமாட்டானா? இப்ப அது காலி வீடு. நாம போயிட்டா எல்லா சாமானும் ரொம்பிடும் இல்லெ. அப்ப ஏதாவது விஷமி, எதுன்னாச்சும் செஞ்சா, நஷ்டம் இன்னும் கூடுதல்லாச்சே!"


13/9 இன்னும் கூரைவேலைதான் நடந்துகிட்டு இருக்கு. கூரை வேயற ஆளு கொஞ்சம் 'சுள்'னு இருக்கறதா நம்ம பில்டர் சொன்னாரு! அதனாலே நாங்க அவ்வளவா பேச்சு வச்சுக்கலெ. ஆனா இன்னைக்கு போனப்ப, இந்த ஓடுங்க எப்படி வேயறாங்கன்னு எங்களுக்கு இருந்த சந்தேகத்தைக் கேட்டோம். அந்த ஆளு நல்லா, விளக்கமா சொன்னாரு. அவருக்கு நாங்க வச்சிருந்த 'சுள்ளான்'ங்கற பேரை மாத்திரலாமான்னு யோசிக்கணும்!



இன்னொண்ணும் கவனிச்சேன், அவரு கீழே இருந்த எல்லா ஓடுங்களையும் எடுத்து, ஒரு இடத்திலே அழகா அடுக்கி வச்சிட்டுப் போனாரு!






வீட்டைச் சுத்தி 'கி·ப்ட் பார்ஸல்' பொட்டலம் மாதிரி ·ப்ரேம்கார்டு பேப்பர்' சுத்த ஆரம்பிச்சிருந்தாங்க! 'சப்போர்ட்'க்குக் கொடுத்திருந்த சட்டங்களையெல்லாம் எடுத்திருந்தாங்க! 'மாஸ்டர் பெட்ரூம்'பக்கம் ஓடு முழுசாப் போட்டாச்சு. இன்னும் 'பேரல் ட்ரிம்' கொஞ்சம் பாக்கி.

14/9
நுழைவாசல்லெ ஓடு போடறதுக்கு சரியான ஃப்ரேம் இல்லைன்றமாதிரி இருந்துச்சுன்னு நம்ம 'போய்ட்'க்குத் தகவல் சொல்லி அவரு காலையிலே வந்து பாத்து என்னவோ விளக்கம் சொன்னாராம். இப்ப அதை சரிபண்ணிகிட்டு இருக்காங்க.





எலக்ட்ரீசியன் வறேன்னு சொன்னதால மத்தியானம் 2 மணிக்குப் போனேன். கோபாலும் வேலையிலிருந்து அங்கெ வந்துட்டார். வீடு முழுசும் ஃப்ரேம்கார்டு பேப்பர் போட்டாச்சு!



வீட்டுகுள்ளெ வெயில் ரொம்ப கொஞ்சமாத்தான் வருது. அங்கே இருந்த சமயம் ரொம்பவெ குளிராவும் இருந்துச்சு. நம்ம எலக்ட்ரீசியன் பேரை நான் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க! 'துடைப்பம்'. ஐய்யய்யோ திட்டலைங்க. இதுதான் பேரே Broom!

தொடரும்...............

18 comments:

said...

நம்ம ஊரு வீடு கட்டுறத எல்லாம் பார்த்துட்டு ,எனக்கு இந்த வீடு கட்டுறத பார்த்தா சினிமாவுக்கு செட் போடுறாப்போலவே இருக்கு! நீங்க தான் ஆர்ட் டைரக்டர் :-))

நம்ம ஊரு வீடு ...வீடூதான் என்னமா செங்கல், மணல் , ஜல்லி , கான்கிரிட், கம்பி னு போட்டு கட்டுறாங்க :-))

said...

சூப்பர். ஊஞ்சல் எனக்கும் பிடிக்கும். ஆனா மரத்தாலான வீட்டில் தாங்குமா?

சீக்கிரம் செங்கல் இல்லாம, மரத்தால வீடு கட்டிற வேண்டியது தான். அட.... அட்லீஸ்ட் நாய் வீடாது கட்டுவோமில்ல...;-)

Anonymous said...

//நம்ம '·பேமிலி லிவிங்' இடத்தைப் பாத்துட்டு, இது 'பால் ரூம் டான்ஸ்'க்கான இடமா(!)ன்னு கேட்டாங்க. அப்புறம் யாரு இந்த வீட்டை 'டிஸைன்' செய்தது, கால அட்டவணைப்படி வேலை நடக்குதா, எந்த மாதிரி 'ஹீட்டிங்' போடறோம் அப்படி இப்படின்னு எல்லா விஷயத்திலும் 'மூக்கை நுழைச்சிட்டு' நம்ம 'கராஜ்' கதவுக்கு மேலே ஒரு 'ஸ்டீல் ·ப்ரேம்' //

டீச்சர், ஆனாலும் இது அநியாயம். செகண்ட் ஒபீனியன் சொல்லுங்கன்னு சொல்லிட்டு மூக்கை நுழைக்கறாங்கன்னும் சொன்னா எப்படி

said...

வாங்க வவ்வால்.

//..... ஆர்ட் டைரக்டர்....//

அப்டீங்கறிங்க? அப்ப சாபு சிறிலைக் காலி பண்ணிட்டு,
தோட்டா தரணிக்கு வேட்டு வச்சுறலாமா ? :-))))

said...

வாங்க காட்டாறு.

நாய்வீடா? சரியாச் சொன்னீங்க. நாய் படாத
பாடு படவேண்டியதாப் போச்சு நம்ம கதி.
அதனாலே 'நாய்வீடாவே' கட்டியாச்சு:-)))))

நாங்க எந்த' ப்ரீட்'ன்னுதான் தெரியலை:-)))))

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

அடடா......... நானே வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேனா?

வகுப்புலே கவனமா இருக்கணும்போல:-)

said...

செல்லமா ப்ரூமை மிஸ்டர் க்ளீன் அப்படின்னு கூப்பிட்டீங்களா?

said...

'பாண்டா' பாட்டில் இடம்மாறி இருந்தது......

அட! ஷெர்லக் ஹோம்ஸ் வர்ராங்கப்போய்.....

said...

present teacher

said...

படிச்சிட்டேன்...அப்புறம் வருகிறேன். சைட்க்கு போக வேண்டியிருக்கு.

said...

வாங்க கொத்ஸ்.

அப்படியெல்லாம் சர் நேமை மாத்த முடியாது.
குடும்பமே தொடைப்பம்தான்:-))))

said...

வாங்க சிஜி.

கண்குத்திப் பாம்பா இருக்கேனா?
கவனமா இருந்துக்குங்க. சொல்லிட்டேன்:-)))

said...

வாங்க பெருசு.

(நில) நடுக்கம் ஓய்ஞ்சதா?

எதுக்கு நிக்கறீங்க? உக்காருங்க.
ப்ரெஸெண்ட் போட்டாச்சு:-))))

said...

வாங்க குமார்.
டேக் யுவர் ஓன் டைம்.

said...

எனக்கு ஒரு விஷயம் உடனே தெரிஞ்சாகனும், 11/9, 12/9, 13/9, 14/9 இதெல்லாம் என்ன? தேதி மாதிரி தெரியல, ஏன்னா நடக்குறது எட்டு ஆனா இங்க 9....

said...

ப்ரேம்கார்டு பேப்பர
இது எதுக்குங்க?

said...

வாங்க சுரேஷு.

// 11/9, 12/9, 13/9, 14/9 இதெல்லாம் என்ன? தேதி மாதிரி
தெரியல, ஏன்னா நடக்குறது எட்டு ஆனா இங்க 9.... //

தேதியேதான். வீடு கட்டுன வருசத்துத் தேதிகள். ஜர்னல் எழுதிக்கிட்டு இருந்தேன் இல்லையா?

அதையே தான் கொஞ்சம் நடையை மட்டும் மாத்தி இங்கே பதிவுகளாப் போட்டுகிட்டு இருக்கேன்.
பப்ளிஷ் செய்யுமுன்னால் தேதியை 'டிலீட்' செய்யும் வழக்கம் இன்னிக்கு தப்பிருச்சு:-))))

said...

குமார்,

பில்டிங் பேப்பர் போடுவதால் காத்தடிக்கும்போது கேவிட்டீஸ் உள்ளெ போகாமல் தடுக்குமாம்.
இது ஒருவகையான இன்சுலேஷன் கூட. வீட்டுக்குள்ளெ இருக்கும் உஷ்ணநிலையை தக்க வைக்கும்.
முக்கியமா, absorb temporary condensation on the cold side of framing cavities.
இந்தத் தண்ணி வெளியேற சுவரின் அடிப்பக்கம் கத்தியில் கீறினமாதிரி ஸ்லிட் வைக்கறாங்க.

இதைப் பத்தி பின்னாலே வருது.