Monday, July 09, 2007

எ.கி.எ.செ? பகுதி 8

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?
அருள்மிகு ஸ்ரீசெல்வ விநாயகரைத்தேடி அலைஞ்சுக்கிட்டு இருக்கோம். காலையில் 11 மணிக்குக் கோயிலை பூட்டிருவாங்களாம். மேப்பைப் பார்த்துக்கிட்டேதான் வந்தோம். ஹைவே(Mt Lindesay Highway) 13 இல் வந்துசவுத் மெக்ளீன் பகுதியில், மெக்ளீன் பார்க்குக்கு அடுத்ததுன்னு விலாவரியாப் போட்டுருக்கு. இதோ,மூணாவது முறையா இதே இடத்துக்கு வந்து , மொதல்லே முழிச்சுப் பார்த்தமாதிரி அதே முறைப்பில் இப்பவும் அந்தப் பார்க்கை முறைச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கேன். பார்க்குக்கு இடது பக்கம் 'ஹிண்டூ டெம்பிள்'னு மேப்லே போட்டுருக்கே! ஆனா............ பார்க் இதோ இருக்கு. அப்ப டெம்பிள் எங்கே? கவுண்டமணி செந்தில் கணக்காப் புலம்ப வச்சுட்டாரே இந்த பிள்ளையார்!


காலையில் கண்ணு முழிச்சதே சூர்யா நினைவாலே. நம்ம ஜே எஸ் சூர்யாங்க. அவர் படத்துலே வர்ற ஆ(ஹ்)ஆ(ஹ்) சவுண்டு கேட்டுத்தான். இது ப்ரிஸ்பேன் காக்கா. அச்சு அசலா அப்படியே கத்துது. மோட்டலில் இருக்கும் யூகலிப்டஸ் மரம். ஒரு பட்டைகூட இல்லாம மொழுமொழுன்னு அப்படியே உரிச்சு வச்சுருக்கு. அதோ உச்சியில் சூர்யா.ச்சேச்சே...........காக்கா.
நாப்பது நிமிஷ ட்ரைவ். இங்கே வந்து அரைமணி நேரமாச்சு. சுத்தி சுத்தி வந்துக்கிட்டு இருக்கோம். யாரையாவது கேட்டுப்பார்க்கலாமான்னா ஈ, காக்கையைக் காணொம். மடிக்கணினியை எடுத்துக் கோவிலோட வலைப்பக்கத்தைப் பார்த்தால் அதுலே ஒரு தொலைபேசி எண் இருக்கு. அதுக்கு அடிச்சுக் கேக்கலாமுன்னு கூப்புட்டா........ மணி அடிக்குதே தவிர,யாரும் எடுக்கலை. பூசை நேரம் 9 மணிக்காம். இப்பவே மணி ஒம்போதேகாலாயிருந்துச்சு. பத்தரை மணிக்கு ஒரு நண்பரை, வேற ஒரு இடத்தில் சந்திக்கறதா ஒரு முன்னேற்பாடு. 25 நிமிஷப் பயணம் போகணும்.

பார்க்குக்கு இந்தப்பக்கம் எதிரெதிரா ரெண்டு வீடுகள். ஒரு வீட்டுக் கதவைத் தட்டினோம். வீட்டம்மா நல்லவங்களா, இன்முகத்தோடு சொன்னாங்க. கோயில் அங்கேதான் இருக்காம்(!!!) அதுக்கு நுழைவாசல் இப்ப நாங்க நிக்கற தெருவுக்கு முன் தெருவாம். நாங்க முதல்லே வந்த ஹைவேயில் திரும்பிப்போனா முதல் இடது பக்கம் கோயில்.தொந்திரவு கொடுத்துட்டோம். மன்னிச்சுக்குங்கன்னதுக்கு, அட....... நீங்கவேற. நிறையப்பேர் இப்படி எங்களைத்தான்வந்து கேக்கறாங்க. பழகிப்போச்சு'ன்னு சொன்னாங்க.

ஒரு போர்டாவது வச்சுருக்கலாம் கோவில் இந்தப் பக்கமுன்னு. புலம்பிக்கிட்டே அவுங்க சொன்ன முதல் இடது திரும்புனா இந்துக் கோயில்னு ஒரு போர்டு இருக்கு. எப்படி இதைத் தவறவிட்டோம்? ம்ம்ம்ம்........ புரிஞ்சுபோச்சு.மெயின் ரோடைப் பார்க்காம ஒரு ஆங்கிளில் இருக்கு (-: வண்டியை உள்ளெ கொண்டு நிறுத்திட்டு,கோயிலின் பக்கவாட்டுக் கதவுக்குள்ளெ ஓடி நுழையறப்ப பூஜைமணிச் சத்தம் கணகணன்னு ஒலிக்குது. பிள்ளையாருக்கு நைவேத்தியம் காமிச்சுக்கிட்டு இருக்கார் குருக்கள். இன்னொருத்தர் கையில் ஒரு பெரிய ஜால்ரா. ச்சின்ன டவரா போலஒரு கிண்ணம். உள்ளே ஒரு பிடி மஹா நைவேத்தியம்( வெறுஞ்சோறு) ஒரு பெரிய கட்டி கற்பூரத்தை ஏத்திஒரு சுத்துச் சுத்திட்டு அந்த தீச்சுவாலைமேலே உள்ளங்கையை வேகமா ஆட்டி 'கப்'னு கற்பூரத்தை அணைச்சார் குருக்கள்.

என்ன நடக்குது? ஆ........ன்னு பார்க்கறேன். அந்தக் கற்பூரத்தட்டு, நிவேதனம் இருக்கும் கிண்ணம் எல்லாம் எடுத்துக்கிட்டு,கருவறையின் வலது பக்கச்சுவரில் இருக்கும் இன்னொரு தெய்வ உருவத்துக்கு முன்னால் கற்பூரத்தை மறுபடி கொளுத்தி,கிண்ணத்தைத் திறந்து காட்டி கற்பூர ஆரத்தி ஒரு சுத்து, மறுபடி கையை விசிறுனதுலே கப்னு கற்பூரம் அணைஞ்சது. இப்ப அடுத்து இன்னொரு சந்நிதி. எல்லாம் முன்னே சொன்னபடி. எனக்குப் புரிஞ்சுபோச்சு, இங்கத்து சிஸ்டம். ஜால்ரா தட்டுறவர் கூடவே போறார். அவர் பின்னால் நாங்களும். வலம் வந்துகிட்டே இடது வலதுன்னு ரெண்டு பக்கமும் இருக்கும்குட்டிக்குட்டிச் சந்நிதிகளை தரிசிச்சுக்கிட்டே வர்றோம். எல்லாருக்கும் காமிச்சபிறகு அதே பக்கவாட்டுக் கதவு வழியா குருக்கள் போயிட்டார்.

நாங்க ரெண்டுபேர் மட்டும் கொஞ்சம் ஆறஅமர மறுபடி ஒவ்வொரு சந்நிதியாப் பார்த்துக்கிட்டே வந்தோம். பண்ணைகளில் இருக்கும் ஷெட் போல ஒரு இடம். இதையே கோவிலா மாத்தி இருக்காங்களோ?

கோவிலுக்குள்ளெ நுழைஞ்சது இடதுபக்கக் கதவு வழியா. இது அர்த்த/மகா மண்டபம். முன்வாசலைப் பார்த்த ஒரு சந்நிதி. ஸ்ரீ செல்வ விநாயகருக்கு. அழகான மண்டபம். கருவறையைச் சுத்தி வலம்வரலாம். வலம் வரும்போது பின்னால் திறந்தவெளியா இருக்கும் முற்றத்தில் நமக்கு இடது புறம் ஆஞ்சநேயர் அவருக்கு நேர் எதிரே ஸ்ரீதேவி, பூதேவி சகிதமுள்ள ஸ்ரீ நாராயணன். நமக்கு வலதுபக்கம் வள்ளி தேவானையுடன் ஸ்ரீ முருகன். கொஞ்சமா சந்தனம் பூசிச் சந்தனக்காப்பில் இருந்தார். அவருக்கு நேர் எதிரே சரஸ்வதி.

கருவறையின் வெளிப்பக்கச் சுவர்களில் தட்சிணாமூர்த்தி, (பிள்ளையாருக்கு நேரே பின்னால்) லிங்கோத்பவர்,பிரம்மா.இவர்களைக்கடந்து நாம் மறுபடியும் அர்த்தமண்டபத்தில் நுழையும்போது நமக்கு வலதுபுறம் துர்கா, இடதுபுறம்சிவன் அமிர்தகதேஸ்வரர்,சமயக்குரவர் நால்வர். இன்னொரு மாடம் போலுள்ள இடத்தில் உற்சவ மூர்த்திகள். தில்லை நடராஜர் சபை என்று எழுதிய இடத்தில் நடராஜனும் சிவகாமியும்.

யாரையும் விட்டுறக்கூடாதுன்ற எண்ணத்தில் எல்லாரும் நெருக்கியடிச்சு நிக்கிறாங்க. அதானே? பிரம்மா கூட இருக்காரே! மண்டபத்தில் ஒரு ராமகிருஷ்ணரின் மார்புவரை உள்ள சிலை. முன்வாசல் அருகே நவகிரகங்களுக்கு ஒரு சந்நிதி. கவனமா இருந்தால் பக்கச் சுவத்தில் இடிச்சுக்காம வலம் வரலாம். பிள்ளையாருக்கு எதிர்ப்புறம், நவகிரகத்தையொட்டி ஒரு பைரவர்.

முன்வாசலில் போய் நின்னு கோபுரத்தைப் பார்த்தோம்.சின்னதா குட்டியா அழகான கோபுரம்,வெளிர் நிறத்தில். அதிலே இருக்கும் தெய்வ உருவங்கள் எல்லாம் சாம்பல் நிறத்தில். அம்சமா இருக்கு. இதே நிறத்தில்தான் பின்னால் கருவறை மேலே உள்ள விமானமும், குட்டிச் சந்நிதிகளில் இருக்கும் விமானமும்.

வெளியே மரத்தடியில் குருக்கள் நின்னுக்கிட்டு இருந்தார். பக்கத்துலேயே ஒரு வீடு. அவருக்குக் கொடுத்துருக்காங்களாம்.அந்த ஒம்போது மணிப் பூஜைதான் இன்னிக்குக் கொஞ்சம் பிந்திருச்சாம். புள்ளையாருக்கு பயங்கர குறும்புப்பா........ ஒம்போதுக்கு நம்மை அங்கே அலைய விட்டுட்டு, இங்கே அடுப்புப் பத்தவைக்கிறதைத் தள்ளிப்போட்டுருக்காரு பாருங்க.

கொஞ்சநேரம் குருக்களிடம் பேசிக்கிட்டு இருந்தேன். இலங்கையிலிருந்து இங்கே வந்து ஏழெட்டு வருஷமாச்சாம்.மற்ற வெளிநாட்டுக்கோயில் குருக்களைப்போல் இல்லாம ரொம்பவே சிம்பிளா(??) இருந்தார். சாமியும்தான், பேரில் மட்டும்'செல்வ' வச்சுக்கிட்டு இருக்கோன்னு எனக்குத் தோணுச்சு. எனக்குப் பாருங்க, இந்த 'தோணல்கள்' பொழுதன்னிக்கும் தோணிரும்.திரும்பிப்போகும்போது மனசுலே என்னென்னவோ ***கள். கடவுளர்களுக்கு நைவேத்தியம் காமிக்கும்போது ஒவ்வொரு சந்நிதிக்கும் தனித்தனிக் கிண்ணத்துலே வச்சுக் காமிக்கக்கூடாதா? இல்லேன்னா கொஞ்சம் நிறையவாவது காமிக்கலாமே? பிள்ளையார்(யானை)பசிக்கு சோளப்பொறி போல ..............பாவம் சாமி. என்னமோ காக்காய்க்கு வைக்கறதைப்போல ஒரு பிடி. ஹங்.........ஒருவேளை அதை காக்காய்க்கே வச்சுடறாங்களொ என்னவோ? அங்கேதான் காக்காய்ங்க இருக்கே! என்ன அஞ்ஞானம் பாருங்க.

ஏன் கோயிலில் பக்தர்களே இல்லை? வேலை நாள் என்றதாலா? ஒருவேளை சாயங்காலமா வருவாங்களோ? இல்லெ வீக் எண்டுலேமட்டும் வருவாங்களா? சிட்டியைவிட்டு இவ்வளோ தூரத்துலே வனாந்தரத்துலே இருக்கே! மறுபடி ***கள்.

குறிப்பிட்ட நேரத்துலெ நண்பரைச் சந்திக்க முடிஞ்சது. அன்னிக்குப் பகல் சாப்பாடு 'ப்ரவுன்ஸ் ப்ளெயின்ஸ்' என்ற இடத்தில் இருக்கும் 'க்ராண்ட் ப்ளாஸா'வில். பெரிய ஷாப்பிங் மால். சில சினிமா அரங்குகள்கூட இருக்கு இதுலே.ஃபுட் கோர்ட்லே உச்சிவானம் தெரியும் அருமையான கண்ணாடிக்கூரை. இதுமாதிரிதான் நம்ம வீட்டுலே போடணுமுன்னுநான் யதார்த்தமாச் சொன்னதைக்கேட்டு அப்படியே நடுநடுங்கிட்டார் இவர். மனசுக்குள்ளேக் காசைக் கணக்குப் போட்டுப் பார்த்திருப்பார்போல!

மனசு, உடம்பு, ஆன்மா மூணுக்கும் நான் உத்திரவாதமுன்னு சொல்ற கடை. அமித்திஸ்ட் கலர்லே அழகழகாப் பொருட்கள்.என்னோட கலராச்சேன்னு உள்ளெ போய்ப் பார்த்தேன். பிள்ளையார் ஒருத்தர் அகப்பட்டார். 'கணேஷாவைத் தேர்ந்தெடுத்ததுக்கு வாழ்த்து(க்)கள். குறைவில்லாத செல்வம், தடைகளை நீக்குதல், வாழ்வில் நீங்காத வளம், எடுத்த காரியத்தில் வெற்றி.இன்னும் சொல்றேன் கேட்டுக்கோ அவரோட கல்யாண குணங்களைன்னு ஒரு பக்கம் வர்ற அளவுக்கு விவரிச்சு வச்சுருக்கும்ஒரு நோட்டீஸை, ஒரு சந்தனமரப் பெட்டியில் இருந்து எடுத்து நம்ம அமித்திஸ்ட் பிள்ளையாருடன் சேர்த்து அழகா பொதிஞ்சு கொடுத்தாங்க கடைக்காரம்மா. பத்திரமாக் கொண்டுவந்து அறையிலே வச்சுப் பிரிச்சுப் பார்த்தேன். ச்சும்மா சொல்லக்கூடாது.......அருமையாச் செஞ்சுருக்காங்கச் சீனாவுலே! He is the patron saint of students who pray to him to pass their exams!! இன்னிக்குப் பிள்ளையார் கோவிலுக்குப் போய்வந்த நினைவுக்காச்சு.

இங்கே இன்னொரு கடையிலே நுழைஞ்சு மைக்ரோவேவ் பாத்திரம் ஒண்ணு வாங்கிக்கிட்டோம். இன்னிக்காவது நல்ல காஃபியாப்போட்டுக் குடிக்கணும். அங்கே விதவிதமா கைக்கடிகாரம் இருந்துச்சு. மகளுக்கு ஒண்ணு வாங்கிக்கலாமுன்னு சிலதைத் தேர்ந்தெடுத்து,கைத்தொலைபேசியில் படம் புடிச்சு அவளுக்கு அனுப்பி, அவள் தேர்ந்தெடுத்ததை வாங்கின்னு கொஞ்ச நேரம் ஆச்சு.முந்தியெல்லாம் நூத்தம்பது, இருநூறுன்னு செலவு செஞ்சு வாஙகுனதைவிட, இப்ப வேணுங்கறதை பேஷன் மட்டும் பார்த்து,இருவது, முப்பதுக்கு வாங்குறது நல்லாதான் இருக்கு. எப்படியும் ஒரு வருசத்துக்கு பேட்டரி வந்துருது. திரும்பி இங்கே பேட்டரிமாத்துறதுக்குத்தான் பதினைஞ்சு டாலர் ஆகிருது(-: இளவயசுக்காரங்களுக்கு, வாட்ச் இப்ப பேஷன் அக்ஸெஸரீஸ்னு ஆகிப்போச்சு.

மாலையில் மறுபடியும் ஆத்தங்கரை விஸிட். அக்ஸ்மாத்தா எட்டிப்பார்த்தப்ப, ராக் கிளெய்ம்பிங்குக்கு, குனிஞ்சுக் கயிறு கட்டிட்டு நிமிர்ந்த ஒருத்தர் எப்படியோ தடுமாறி விழப் பார்த்தார். நல்லவேளை...........என் தொண்டையில் இருந்து சத்தம்எழும்புறதுக்குள்ளே சமாளிச்சுட்டார். ( கத்தி இருந்தேன்னா அதைக் கேட்டே அதல பாதாளத்துலே போயிருப்பார்) எனக்குத்தான்உயிரே போறமாதிரி நெஞ்சு அடைச்சிருச்சு. 'விழுந்துருந்தா என்ன கதி?'ன்னு சொன்னதுக்கு, 'செத்துப்போயிருப்பேன்' னுகூலா சொல்றாருப்பா. கரணம் தப்புனா மரணம் (-: அந்த அரை இருட்டிலும் கருமமே கண்ணாயினார் போல மக்கள்ஸ் ஓடறதும், உடற்பயிற்சி செய்யறதுமா இருக்காங்க.

குழலூதும் 'கண்ணன்' சிலை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிச்சாச்சு. The church of Jesus Christ of the latter-day saintsBrisbane Australia Temple. பளிங்கு, டைல்ஸ், மொஸைக்குன்னு இழைச்சு இழைச்சுக் கட்டி இருக்கும் விஸ்தாரமான கோயில்.சுத்திவர பாதிரிப்பூ(Plumeria, Frangipani ) மரங்களும், பர்ட் ஆஃப் பாரடைஸ் பூச்செடிகளும். நாளைக்கு காலையில் வாக்கிங் போகும்போதுன்னு மறக்காமக் காமெராவைக் கொண்டுவரணும்.

அன்னிக்கு ராத்திரி அகஸ்மாத்தா டிவியைப் பார்த்துட்டு மனசெல்லாம் ஒரு வலி. அடப்பாவிகளா.............. ஒரு இனத்தையே எப்படி அழியற நிலமைக்குக் கொண்டுவந்துட்டீங்கன்னு வேதனனையாப் போயிருச்சு.

தொடரும்...........

8 comments:

said...

//அருமையாச் செஞ்சுருக்காங்கச் சீனாவுலே! He is the patron saint of students who pray to him to pass their exams!! இன்னிக்குப் பிள்ளையார் கோவிலுக்குப் போய்வந்த நினைவுக்காச்சு//

ஆமாம்! காலேஜிலயும் ஒரு பிள்ளையார் கோயில் இருந்துச்சு. படிக்கிறோமோ இல்லையோ. பிள்ளையாரே பாஸ் பண்ணிவிட்டுருன்னு கும்புட்டுக்கறதுதான். பிள்ளையாரும் கைவிட்டதில்ல என்னை

said...

இன்னைக்கு என்ன பிள்ளையார் ஸ்பெஷலாப் போச்சு. எதாவது விசேஷ நாளா? எந்த இனத்தை அழிக்கறாங்க? அதுதானே நாளையப் பதிவு?

said...

குனிஞ்சுக் கயிறு கட்டிட்டு நிமிர்ந்த ஒருத்தர் எப்படியோ தடுமாறி விழப் பார்த்தார். நல்லவேளை...........என் தொண்டையில் இருந்து சத்தம்எழும்புறதுக்குள்ளே சமாளிச்சுட்டார். ( கத்தி இருந்தேன்னா அதைக் கேட்டே அதல பாதாளத்துலே போயிருப்பார்) எனக்குத்தான்உயிரே போறமாதிரி நெஞ்சு அடைச்சிருச்சு. 'விழுந்துருந்தா என்ன கதி?'ன்னு சொன்னதுக்கு, 'செத்துப்போயிருப்பேன்' னுகூலா சொல்றாருப்பா. கரணம் தப்புனா மரணம் ////

உங்க வாழ்க்கையிலே வீல்னு கத்த ஒரு சந்தர்ப்பத்தை இழந்துட்டீங்களே:))

அமிதிஸ்ட் ரொம்பப் பிடிக்கும்பா. அதுவும் இந்தா ஆக்வாமரினும் கண்ணைக்கட்டிடும் எனக்கு. அலுக்காத நிறங்கள்.
செல்வமுள்ளவர்கள் கவனிக்கணுமோ இந்தக் கணபதியை.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

புள்ளையாருக்கு 108 தேங்காய் ஒடைச்சீங்களா இல்லையா?
பாஸ் பண்ணி விட்டதுக்கு:-))))

said...

வாங்க கொத்ஸ்.

இன்னிக்கு நாள் நல்லா இருக்கு. அதான் புள்ளையார் ஸ்பெஷல்:-))))

said...

வாங்க வல்லி.

அது ஏன் 'வீல்'னு கத்தணும்? Wheel க்குப் பதிலா
ப்ரேக், டயர்னு கத்தக்கூடாதான்னு மகள் சொல்றாப்பா:-)

நான் வீல்னு கத்தப்போக அவருக்கு சங்கு ஊதியிருப்பாங்களேப்பா(-:

அமித்திஸ்ட் கலர்லே அக்வாமரீன் பார்டர் அமர்க்களமா இருக்குமா இல்லையா? :-))))

said...

கொஞ்சநேரம் குருக்களிடம் பேசிக்கிட்டு இருந்தேன். இலங்கையிலிருந்து இங்கே வந்து ஏழெட்டு வருஷமாச்சாம்.மற்ற வெளிநாட்டுக்கோயில் குருக்களைப்போல் இல்லாம ரொம்பவே சிம்பிளா(??) இருந்தார்.
------------------------
குருக்கள் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருக்கும் கீரிமலை நகுலேஸ்வரக்கோயிலைச் சேர்ந்தவர்.

said...

தகவலுக்கு நன்றி அரவிந்தன்.

ப்ரிஸ்பேன்லேயா இருக்கீங்க?