எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்? ஆஸ்ட்ராலியப் பழங்குடிகளை வதைக்கமுடிஞ்ச அளவுக்கு வதைச்சுட்டு, இப்ப ஒரு நாப்பது வருசத்துக்கு முந்திதான்இவுங்களும் தங்களில் ஒருவர்னு ஏத்துக்கிட்டு இருக்கு அரசு. அதுக்காக வருஷக்கணக்காப் போராடுனவங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.இத்தனைக்கும் இவுங்க இங்கே வந்தே அறுபதாயிரம் வருஷங்கள்வரை ஆகி இருக்கலாமுன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. ஒவ்வொருகுழுவா வெவ்வேற இடங்களில் இருந்துருக்காங்க. அதுக்கேத்த மாதிரி தங்களை அடையாளப்படுத்திக்க ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பேர் இருந்துருக்கு. கூரி, முர்ரி, நூங்கர், யமட்ஜி, நுங்கா இப்படியெல்லாம் அவுங்க இருந்த இடத்தைக் குறிப்பிடும் பேர்கள் இருக்கு. அப்ப ஏறத்தாழ பத்து லட்சம் மக்கள் இருந்துருக்காங்களாம்.
1770லே காப்டன் குக் இங்கே வந்தது, அப்புறம் 1788லே இங்கிலாந்து இதையும் தன்னோட காலனிகளுக்குள் ஒண்ணாபிடிச்சுக்கிட்டது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். வெள்ளைக்காரங்களோடு கூடவே வந்தது நோய்களும்தான். பெரிய அம்மை,சின்னம்மை வகைகள்,இன்ஃப்ளூயன்ஸான்னு வந்து பரவுச்சு. பழங்குடிகளைத் துரத்திட்டு அவுங்க இருந்த இடத்தையெல்லாம் வெள்ளைக்காரங்க பிடிச்சுக்கிட்டாங்க. என்ன செய்ய, ஏது செய்யன்னு வகைதொகை தெரியாத இந்த ஜனங்க பிழைக்க வழியில்லாம, புது இடத்துக்குப் போன வாழ்க்கைப் போராட்டத்துலேயே கொஞ்சம்கொஞ்சமா பலமில்லாம,உடல்நிலை சரியில்லாமப்போய் நிறைய உயிர்கள் போயிருக்கு. போதாக்குறைக்கு, மிருகங்களை வேட்டையாடுறதுபோல இவுங்களைக் கூட்டங்கூட்டமாக் கொன்னு குவிச்சுருக்காங்க. நூத்தி முப்பது வருசம் விடாமத் துரத்திக்கொன்னா எந்த இனம்தான் தப்பி உயிரோடு இருக்க முடியும்?
இதுக்கிடையிலே இவுங்களுக்குப் புள்ளை வளக்கத் தெரியலைன்னு பழங்குடிகளின் பிள்ளைகளையெல்லாம் அப்பா,அம்மாகிட்டே இருந்து பிரிச்சுக் கூட்டிட்டுப்போயிட்டாங்க. புள்ளைங்களுக்குப் படிப்பு, நல்ல நாகரீகப் பழக்கவழக்கங்களைச் சொல்லிக்கொடுக்கறோமுன்னு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பிள்ளைகளை எடுத்துக்கிட்டுப்போய் கேம்ப், அனாதைகள் இல்லம்னு வச்சுப் பார்த்தாங்களாம். இதுலே சோகம் என்னன்னா......... அங்கே இருந்த பெண்குழந்தைகள் ரொம்ப மோசமா நடத்தப்பட்டது.17 சதமானம்பேர் abuseக்கு ஆளாக்கப்பட்டு.............. ச்சே என்ன கொடுமை . அங்கே இருந்து தப்பி ஓடியசிறுமிகளைப்பத்தி ஒரு சினிமாகூட 'Rabbit-Proof Fence'ன்னு வந்துச்சு. யாராவது பார்த்தீங்களா?
எந்தப் பிள்ளைங்க எந்தப் பெற்றோர்களுதுன்னு சரியான ஆவணங்கள் கூட எழுதி வைக்கலையாம். பிள்ளைங்க 18 வயசானதும் அவுங்களை வெளியே அனுப்புனப்ப, அதுங்க தங்களுடைய சொந்தக்காரங்க எங்கே இருக்காங்கன்னு தெரியாம ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்குங்க. தப்பித்தவறிப் பெத்தவங்ககிட்டே போய்ச்சேர்ந்தவங்களும் அவுங்க மொழி தெரியாம முழிச்சாங்களாம்.அரசாங்கம் செஞ்சது அநியாயமுன்னு பலரும் போராடி, மனித உரிமைக் கழகம்வரை செய்திகள் போயிருச்சு.
1967 வருஷம்தான் கருத்துக் கணிப்பு நடத்துனாங்க, பழங்குடிகளுக்கு ஓட்டுரிமை வழங்கலாமான்னு. 90% மக்கள்அவுங்களையும் மனுசங்களா மதிக்கணுமுன்னு ஒத்துக்கிட்டதாலே பழங்குடிகளுக்கு ஓட்டுரிமை வந்துச்சு.
1998லே 'நாங்க, பழங்குடிகளுக்குச் செஞ்ச அநியாயத்துக்கு வருந்தறோமு'ன்னு சொல்லி நாடே மன்னிப்புக் கேட்டுச்சு. ஒவ்வொருவருஷமும் மே மாசம் 26 அன்னிக்கு National Sorry Day ன்னு வருத்தம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க 2004 வரை. அதுக்கப்புறம்,மனப்புண்ணை ஆத்தும் நாள்ன்னு( National Day of Healing ) மாத்திக்கலாமுன்னு ஆரம்பிச்சு, மறுபடியும் பழைய பேருக்கே வந்துச்சு.
2000 வருஷம் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் பந்தய விழாவுலே அபாரிஜின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கேத்தி ஃப்ரீமேன் கையாலே, ஒலிம்பிக் ஜோதியை ஏத்தி வச்சாங்க. பழங்குடிகளுக்கும் மற்ற மக்களுக்கும் இருக்கும் நல்லுறவைப் பலப்படுத்தறோமுன்னு இப்ப ஒரு 11 வருஷமா மே மாசக்கடைசி வாரத்தை National Reconciliation Weekனு கொண்டாடிக்கிட்டு இருக்காங்க.
இதைப் பத்திச் சொல்லும்போது இங்கெ நியூஸியின் பழங்குடிமக்களை இவுங்களோடு ஒப்பிடாம இருக்க முடியலை. மவொரிகளுக்குத்தான் இங்கே பலவிதமான முன்னுரிமைகள் இருக்கு. அவுங்க நிலங்களை எடுத்துக்கிட்டோமேன்னு அரசாங்கம் கோடிக்கணக்கான டாலர்களை நஷ்ட ஈடா வழங்கிக்கிட்டு இருக்கு. ஆறுகளில் மீன் பிடிக்கும் உரிமைகள் மவொரிகளுக்கு மட்டும்தான். கலப்பின மவோரிகளா இருந்தாலும் அவுங்களை மவொரிகள் கணக்குலேதான் எடுத்துக்கும். அரசாங்க அறிவிப்புகள், அறிக்கைகள் எல்லாத்திலும் மவொரி மொழியிலும் அச்சிட்டு இருக்கும். கல்லூரிகளிலும், பள்ளிக்கூடங்களிலும் மவொரி மொழிக்குத் தனிப்பிரிவே இருக்கு. இன்னும் பலவிதமான சலுகைகள் இந்த இனத்துக்கு உண்டு. இதெல்லாம் கொஞ்சம் தெரிஞ்சிருந்த காரணத்தால் ஆஸ்ட்ராலிய அபாரிஜின்களைப்பத்தி நினைக்கும்போது மனசுலே துக்கம் வந்ததென்னமோ உண்மை.
பழங்குடி மக்கள் வரைஞ்சு வச்சிருக்கும் குகை ஓவியங்கள், அவுங்க வசித்துவந்த குகைகள் இப்படி பலதும் சுற்றுலாப் பயணிகள் போய்ப்பார்க்கும் முறையில் வசதிகள் இப்ப செய்யப்பட்டிருக்கு. இவுங்களோட கலாச்சாரநிகழ்ச்சிகள்ன்னு நகரங்களில் 'ஷோ' நடத்துறாங்க. இதெல்லாம் இவுங்களைப் பத்தி மத்த ஜனங்கள் ஓரளவு தெரிஞ்சுக்க உதவுது. அரசு நடத்தும் விழாக்களில் சிலசமயங்களில் பழங்குடிகளின் நடனம்(??) சேர்க்கப்படுது.நடனமுன்னு சொல்ல முடியாதுன்னாலும், விழா நல்லபடி நடக்க, ஆசி கூறும் சடங்குன்னும் வச்சுக்கலாம்.
ஒரு நாப்பது வருசத்துக்கு முந்திவரை அபாரிஜன்கள் எத்தனைபேர் இருக்காங்கன்ற கணக்கெடுப்புக்கூட நடத்தலைங்க. இப்பச் சொல்றாங்க ஏறக்குறைய அஞ்சு லட்சம் மக்கள் இருக்காங்கன்னு. இவுங்களோட மொத்த ஜனத்தொகையில் ( 21 மில்லியன்) 2.5% பழங்குடிகள். 1977க்குமுந்தி, யாராவது இந்தப் பழங்குடிகளோட கல்யாணம் செஞ்சுக்கிட்டா அது சட்டவிரோதமுன்னுகூட இருந்துச்சு.
இந்த மக்களுக்கு வேண்டிய சுகாதாரம், கல்வி இப்படி எதுவும் இல்லாம ஆதிகால மனுஷங்கமாதிரிதான் இன்னும் பலர் இருக்காங்க. நிறையப்பேருக்கு குடிப்பழக்கம் வேறயாம். விரல்விட்டு எண்ணும் அளவுக்குத்தான் கொஞ்சம் முன்னேறிய வாழ்க்கை வாழும் பழங்குடிகள்எண்ணிக்கை இருக்கு. ஒரு சிலர் அரசியல்வாதிகளாவும், பார்லிமெண்ட் அங்கத்தினராவும் ஆகியிருக்காங்க. விளையாட்டு உலகிலும்கொஞ்சம்பேர் முன்னேறி இருக்காங்க.Jason Gillespie என்ற க்ரிக்கெட் விளையாட்டுக்காரரை ஞாபகம் இருக்கா? ஃபுட் பால், ரக்பின்னுஒரு இருபதுபேருக்குக்கிட்ட புகழ் கிடைச்சிருக்கு. ஓவியரான ஒருவர் தங்களுக்காக ஒரு கொடியைக்கூட வரைஞ்சு இருக்கார்.Australian indigenous rights activistsன்னு பலர் இருக்காங்கன்னாலும் இன்னும் போதிய முன்னேற்றம் ஏற்படலைன்னுதான் சொல்லணும். ஏற்கெனவே நல்ல நிலைக்கு வந்தவங்க ஏன் மற்ற மக்களை மேலே கொண்டு வரலை? முயற்சி செஞ்சு தோல்வியா இல்லை, முயற்சியே செய்யலையா?
இப்ப அரசாங்கம் சொல்லுது, இவுங்களுக்கு ஆங்கிலம் சொல்லித்தரணுமுன்னு. 200 வருஷத்துக்கு மேலே இன்னும் சரியாச்சொன்னா 219 வருஷமா அங்கே இருக்கும் அரசு, இன்னும் இவுங்களை முன்னேற்றாம இருக்கறது அநியாயமா என் மனசுக்குப் படுது. இப்பக் கொஞ்ச காலமா, இவுங்க இருக்கும் குடியிருப்புகளில் பிள்ளைகளுக்கு நல்ல சத்துணவு, கல்வின்னு ஆரம்பிச்சு இருக்காங்களாம். அரசு சம்பந்தமான விழாக்களில் இந்த மக்களின் நடனம் இப்பெல்லாம் கல்ச்சுரல் வகையில் நடக்குது. உண்மையான பரிவோட இதெல்லாம் நடக்கலையோன்னு என் உள்மனசுசொல்லுது. என்னுடைய தோணல்களுக்கு முடிவே இருக்காது போல(-: ஒருவேளை தூரத்துலே இருந்து பார்க்கறது வேற, அவுங்களோடபழகி அவுங்களைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டு அவுங்க தேவைகளைக் கவனிக்கறது வேற இல்லீங்களா? அரசு தரப்புலே மன்னிப்புன்னு சொல்லிட்டுச் சும்மா இல்லாம இன்னும் பலவிதத் திட்டங்களைக் கொண்டுவந்து இவுங்களை உண்மைக்குமே முன்னேத்தணும் என்றது என் கோரிக்கை & விருப்பம்.
தொலைக்காட்சியில் பழங்குடி இனத்தைப் பத்தி நிறைய விவரணைப் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு இந்த ரெண்டுமூணு நாளில் கிடைச்சது. திட்டங்கள் போடப்பட்டாலும் எவ்வளவுதூரம் நடைமுறையில் வெற்றியடையுமுன்னு தெரியலை. முக்கியமா அவுங்க மொழியையும்
கொஞ்சம் காப்பாத்துனாதான் அவுங்க கலாச்சாரம் அழியாமக் காப்பாத்தப்படும், இல்லையா?
தொடரும்...............
Monday, July 16, 2007
எ.கி.எ.செ? பகுதி 10
Posted by துளசி கோபால் at 7/16/2007 09:34:00 AM
Labels: அபாரிஜின்கள், ஆஸ்ட்ராலியா
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
Me the First
ஆஸ்திரேலியப்பழங்குடியினரை ஒப்பிடும்போது மவுரிகள் நல்ல நிலையிலேயேதான் இருக்காங்க. வெள்ளையர்கள் மவுரிகளோட கலந்த மாதிரி அங்கே அபாரிஜின்களோட சமுதாயத்தில கலக்கவேயில்ல. இங்கே கிடைக்கிற டோல் நல்லா உபயோகிச்சுக்கறது மத்த சமூகத்தினரை விட மவுரிகள்தான் அதிகமோன்னு தோணுது.
அது சரி. மவுரிகள் கொடிலயும் கருப்பு, சிகப்பு உண்டு.
ஆஸ்திரேலியப்பழங்குடியினரின் கொடியிலயும் கருப்பு, சிகப்பு உண்டு.
நம்ம ஊர்ல பல கட்சிக்கொடியிலயும் கருப்பு, சிகப்பு உண்டு. நமக்கும் இவங்க எல்லார்த்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கு
219 வருஷமா அங்கே இருக்கும் அரசு, இன்னும் இவுங்களை முன்னேற்றாம இருக்கறது அநியாயமா
நல்ல வேளை! குறையை அரசாங்கம் உணர்ந்து சில நடவடிக்கைகளை எடுத்திருப்பது சந்தோஷமாக இருக்கு.
குற்றம் நடந்துடிச்சு என்ற உடனே "மன்னிப்பு" கேட்பது எவ்வளவு உயர்ந்த குணம்,பாராட்ட வேண்டும்.
என்னங்க அந்த கொடி அப்படிப்பட்ட கலரில்,ஆளை அப்படியே அசரடிக்குது.
துளசி,
'Rabbit-Proof Fence' பார்த்திருக்கிறேன்... கண்ணீர் வரவழைக்கும் படம். ஆனா படம் மற்ற பல டாக்குமெண்ட்ரி படங்களைப் போல ஒரு சாராரின் பார்வையை பிரதிபலிப்பதகாவே இருந்தது. அப்போரிஜினல்ஸை அமெரிக்க செவ்விந்தியர்களைப் போல எண்ணியிருந்தது தவறு என்று உணர்த்தியது அந்த படம்தான்.
>>>>இப்ப அரசாங்கம் சொல்லுது, இவுங்களுக்கு ஆங்கிலம் சொல்லித்தரணுமுன்னு
ஒரு விலங்கின் குணாதிசியங்களைப் படிப்பதற்குக்கூட, அதனுடன் வாழ்ந்து அதன் மொழிகளை அறிந்து டாக்டரேட் வாங்குகிறார்கள், ஒரு மனித இனத்தின் வரலாற்றை அறிய அதில் ஒரு சதவித முயற்சியும் இருப்பதாகப்படவில்லை. அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தந்து 'தங்களுள் ஒருவராக' ஆக்கிக்கொள்ளும் உத்தியாகத்தான் இது படுகிறதே ஒழிய, அவர்கள் மேல் உள்ள அக்கறையாக தெரியவில்லை. இதுக்கும் புள்ள குட்டிகள பிரிச்சி கூட்டிகிட்டு போனதிற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. நல்ல கட்டுரை... இவங்க தற்போதிய வாழ்க்கைமுறைகள் பற்றி தனி கட்டுரையையே எழுதி வெகுசனப் பத்திரிக்கையில வெளியிடலாமே.
-யு.எஸ்,தமிழன்
வாங்க சின்ன அம்மிணி.
மவொரிகளிலும் வெள்ளையர்களை மணந்த ஆண்களின் விகிதம்தான் கூடுதல். மவோரிப்
பெண்களைக் கட்டுன வெள்ளைக்காரர்கள் விகிதம் ரொம்பவே குறைவுதானே?
பழங்குடிகளோ நாமோ எல்லாரும் அடிப்படையிலே மனித இனம்தானுங்களே.
இன்னும் கொஞ்சம் ஆழமா இவுங்களைப் பத்தி ஆராயலாமான்னு ஒரு
எண்ணம் இருக்குங்க.
வாங்க குமார்.
மன்னிப்புன்னு கேட்டுட்டு அப்படியே கொண்டாடிக்கிட்டு மட்டும் இருக்காம இன்னும்
நிறையச் செய்யணும் அரசுன்றதுதான் என் விருப்பமும்.
நம்மூர் விஜயகாந்த் கட்சியின் கொடிகூட இதே மாதிரி இருக்குன்னு ஒரு நினைவு.
நடுவிலே மஞ்சள் வட்டத்தில் ஒரு ஜோதியும் இருக்கோ?
வாங்க யு.எஸ். தமிழன்.
முதல்முறையா உங்களை இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி. நல்லா இருக்கீங்களா?
இவுங்களை முன்னேற்றணுமுன்னா இவுங்க மொழியையும் வளர்க்கணுமுன்னு
கட்டுரையின் கடைசிப்பகுதியில் குறிப்பிட்டிருக்கேனே, அதைச் செய்ய அரசு
முன்வரணுங்க. கம்யூனிகேஷன் ரொம்ப முக்கியம் இல்லீங்களா? அபாரிஜின்
மொழிக்கு எழுத்துருவம் கிடையாதுங்க. வெறும் பேச்சு (ஒலி )வடிவம்தான்.
இங்கே மவொரி மொழிக்கு லிபியா ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தறமாதிரி,
அபாரிஜின் மொழிக்கும் ஆங்கில எழுத்து வச்சு உருக் கொடுக்கலாம். இளைய சமூகம்
ஆங்கிலம் கத்துக்கிட்டா இதுக்கு வசதிதானே?
பழங்குடியினரில் வயதில் மூத்தவர்களிடம் நல்லாப் பழகுனா இது சாத்தியம்தான்.
ஆனா பொறுமை ரொம்ப வேணும். அரசாங்கம்தரும் உதவிப் பணத்தால் நிறையப்பேர்
மதுப் பழக்கத்திற்கு ஆளாகிட்டாங்கன்னு இருப்பது ரொம்பவும் மனவருத்தம் தரும் செய்தி.
ஒரு கைக்குழந்தையைப் போலத்தான் எதுவுமே கையாகாமல் எதிர்ப்புக் காட்டணுமுன்னேகூடத்
தெரியாமல் இருக்கற மக்களை என்ன செய்யறது? இதைப் பத்தி எங்க ஊர் மவொரி பார்லிமெண்ட்
அங்கத்தினர் சொன்னதுதான் ஒரு சர்ச்சையாகிக் கிடக்கு.
அந்த விவரங்கள் இங்கே இருக்கு பாருங்க
சுட்டி வேலை செய்யலைன்னா இங்கே
http://www.scoop.co.nz/stories/WO0707/S00181.htm
// முக்கியமா அவுங்க மொழியையும்
....அவுங்க கலாச்சாரம் பாதுகாக்கப்படும் இல்லையா?//
"சொல்லுங்க சொல்லுங்க அழுத்திச்
சொல்லுங்க!"
துளசி, அபாரிஜின்ஸ் பத்திப் படிக்கப் படிக்க மனசு ரொம்பக் கொதிப்பாக இருக்கு. அவங்க ஊருக்குப் போயி அவங்களையே துரத்தி அடித்து, நல்லதெல்லாம் எடுத்துகிட்டு இப்பத்தான் மன்னிப்பே கேக்கறாங்களா.
கொடுமைதான்.
நீங்க இதப் பற்றி இவ்வளவு விவரம் எளிமையாக் கொடுத்ததாலத் தான் தெரியும்.
நம்ம ஊரு மலைவாழ் மக்களுக்கும் ,ஆதிவாசிகளுக்கும் கூட நல்லது நடக்கணும்னு நம்புகிறேன்.
இதே கதைதான் அமெரிக்காவிலும், இல்லையா? ஆஸ்திரேலியாவை விட மிக மிக அதிகமான செவ்விந்தியர்களை (உண்மையான அமெரிக்க மக்களை) சுட்டுத்தள்ளினார்கள் அல்லவா? இப்போது அவர்களது உரிமைகள் எந்த அளவில் பாதுகாக்கப்படுகின்றன?
வைசா
சின்ன அம்மிணி சொல்லற மாதிரி இந்த கருப்பு சிவப்பு மேட்டரை கொஞ்சம் ஆராய்ந்து பாருங்க டீச்சர்.
வாங்க சிஜி.
மொழி இல்லைன்னா அவுங்க என்ன சொல்றாங்க, அவுங்க கருத்து என்னன்னு
எப்படிங்க புரிஞ்சுக்கறது? மொழி முக்கியமுன்னு எத்தனை கோடி முறைவேணா
சொல்லலாம்.
வாங்க வல்லி.
தலையிலே குட்டிட்டுக் கையிலே கொடுத்தா வாங்கிக்கிற மக்கள்ப்பா. திருப்பி
அடிக்கலாமேன்னு கூடத் தோணாத மக்கள். அவுங்களாலே அதிகார வர்க்கத்தை
என்ன செய்ய முடியும்?
வலியவனுக்கு முன்னாலே இயலாதவன். இதேதான் நம்ம மலைவாழ் மக்களும்.
அவுங்களுக்குச் சான்றிதழ் கொடுக்கவும் லஞ்சம் கேக்குறாங்களாமே. என்ன அநியாயம்?
வாங்க வைசா.
எல்லாம் ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுன கதைதான்.
செவ்விந்தியர்களுக்கு இப்ப ட்ரீட்டி எல்லாம் இருக்குல்லையா? நஷ்ட ஈடும்
கொடுத்தாங்கபோல இருக்கே. ஆனா இந்தப் பாவங்களுக்கு இதெல்லாம்
ஒண்ணும் இல்லை. அதான் விசனம்(-:
வாங்க கொத்ஸ்.
கறுப்பும் சிகப்பும், மஞ்சளும் பார்த்தவுடனே கண்ணை அப்படியே கட்டிரும்.
ஒருவேளை அதான் காரணமான்னு தெரியலை. கொஞ்சம் ஆராயலாம் நம்ம வகுப்புலே.
அருமையான பதிவுக்கு மிக்க நன்றி துளசி கோபால் ஐயா.
வாங்க மாசிலா.
//அருமையான பதிவுக்கு மிக்க நன்றி துளசி கோபால் ஐயா//
& இல்லை அம்மாவோ போட விட்டுப்போச்சோ?
அதாங்க துளசி ( அம்மா) & கோபால் ஐயா :-)))))))
வருகைக்கு நன்றி.
யாரு எப்ப வந்திருக்கேன் பாருங்க!! :O)
நல்லாவே எழுதியிருக்கீங்க. கொடிக்குப் பொருள்: சிவப்பு நிலம், அது மேல கறுப்பு மனிதர்கள், மஞ்சளா சூரியன்.
பழங்குடியினரைப் பற்றி எழுதினது இங்கேயும் இருக்கு
வாங்க ஷ்ரேயா!
என்னடா இங்கேன்னு பார்த்தா ஒரே 'மழை'
உங்க பிரதமர் கதறி அழுதார்ன்னு தினமலர்லே வந்துருக்கு:-))))
கொடி விளக்கத்துக்கு நன்றிப்பா.
நேத்து தான் இந்த படம் பார்த்தேன்.. அது பத்தி தேடிட்டிருக்கும்போது உங்களுதும்.. பைத்தியக்காரன் பதிவும் கிடைச்சது.. தமிழில்.
கதையின் பின்புலத்தை நல்லா விவரமா புரிஞ்சுக்கமுடிந்தது ..துளசி
முன்னாடியே படிச்சிருப்பேன் வரலாறுன்னதும் ஓடியிருப்பேனோ என்னவொ.. பின்னூட்டம் போடாம..படத்தின் தாக்கத்தால் இப்ப இது நல்லா புரியுது.
ஆஹா..... பயனுள்ள பதிவா இருந்துருக்குன்னு சொல்லுங்க:-))))
தொடர்ந்து எழுத ஏதோவொன்றை படிக்க வேண்டியதாக உள்ளது. சமீப காலமாக ஜெயமோகன் வலைதளத்தை மிகுந்த ஆர்வத்துடன் படித்துக் கொண்டு வரும்போது இன்று உங்கள் கடிதமும் இதில் உள்ள இணைப்பும் என் கண்ணில் பட்டது.
ஒரு விலங்கின் குணாதிசியங்களைப் படிப்பதற்குக்கூட, அதனுடன் வாழ்ந்து அதன் மொழிகளை அறிந்து டாக்டரேட் வாங்குகிறார்கள், ஒரு மனித இனத்தின் வரலாற்றை அறிய அதில் ஒரு சதவித முயற்சியும் இருப்பதாகப்படவில்லை. அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தந்து 'தங்களுள் ஒருவராக' ஆக்கிக்கொள்ளும் உத்தியாகத்தான் இது படுகிறதே ஒழிய, அவர்கள் மேல் உள்ள அக்கறையாக தெரியவில்லை. இதுக்கும் புள்ள குட்டிகள பிரிச்சி கூட்டிகிட்டு போனதிற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. நல்ல கட்டுரை... இவங்க தற்போதிய வாழ்க்கைமுறைகள் பற்றி தனி கட்டுரையையே எழுதி வெகுசனப் பத்திரிக்கையில வெளியிடலாமே.
இவர் சொல்லியது தான் என் மனதிலும் தோன்றிது.
Post a Comment