Sunday, August 20, 2006

எவ்ரிடே மனிதர்கள் -14 காமா

தட தட தட தட தட தட............. தடால்........

சத்தம்கேட்டு அடுக்களையிலே இருந்து ஓடிவந்து பார்த்தா, கிணத்து ராட்டினம் மட்டும் இன்னும் தடதடன்னு சுத்திக்கிட்டே இருக்கு.
கிணத்துக்குள்ளெ எட்டிப் பார்த்தால் கொப்புளம் கொப்புளமா நீர்க்குமிழி வந்துக்கிட்டு இருக்கு.


நடுக்கத்தோடு சுத்திமுத்திப் பார்க்கறாங்க காமாவும், பெரியக்காவும். எப்பவும் காலைச் சுத்திக்கிட்டே இருக்கும் குழந்தையைக் காணொம். அவ்வளோதான். ஐய்யோ குழந்தை கிணத்துலே விழுந்துருச்சு!


ராணி, ராணின்னு கத்திக்கிட்டே கிணத்தை இன்னும் உள்ளெ எட்டிப் பார்த்துக்கிட்டு ஒரே அழுகை."குழந்தைக்கு மூச்சுத் திணறுது உள்ளெ. கொப்புளம் கொப்புளமா வருது. ஐய்யோ நான் என்ன செய்வேன்....ராணீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஐய்யோ, பாவி நான் குழந்தை என்ன செய்யுதுன்னுகவனிக்காம இருந்துட்டேனே..................."


'அம்மா' ன்னு கூப்புட்டுக்கிட்டே உள்ளெ வந்த புது போஸ்ட்மேனைப் பார்த்ததும் காமாவோட முகத்துலே வெளிச்சம்.'மணி ஓடியாடா..... குழந்தை கிணத்துலே விழுந்துருச்சுடா........ சீக்கிரம் இறங்கிப் பாருடா..........'சீக்கிரம், சீக்கிரம் ......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்'


'அம்மா, எனக்கு நீச்சல் தெரியாதேம்மா....நானு....'


'அடப் பாவி. இறங்குடா முதல்லெ. குழந்தை மூச்சுத் திணறிக்கிட்டு இருக்கு. ஐய்யோ குமிழிகூட வரலையேடா,மூச்சு அடங்கிரப்போகுது. இறங்குடா...........'


பெரியக்கா அழுதுக்கிட்டே,'காமா நான் போய் இன்னொரு தாம்புக்கயிறு கொண்டுவரேன்'னு சொல்லிக்கிட்டே ஸ்டோர் ரூமுக்குள்ளே பாயறாங்க. ராணி.... ராணீ........ம்ம்ம்ம்ம் ராணி ஈஈஈஈஈஈஈ தேம்பித்தேம்பி அழுதுகிட்டேசுவத்துலெ பெரிய ஆணியிலே மாட்டி இருந்த தாம்புக்கயிறை தூக்கிக்கிட்டு திரும்புனப்ப...............


ஆஆஆஆஆஆஆ ராணீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ......................................கூச்சல்கேட்டு மிரண்டுபோய் கதவுக்கு உள்பக்கத்தில் சுவரோடு சுவரா ஒடுங்கி நிக்கற ராணியை ஓடிப்போய் கட்டிப் பிடிச்சுக்கறாங்க. ஒரே ஒரு நொடிதான். அப்புறம் தரதரன்னு ராணியை வெளியே இழுத்துக்கிட்டு வராங்க. அதுக்குள்ளெ காமாவும், போஸ்ட்மேனும் அங்கே வந்தாச்சு.


ராணிக்கு செம அடி கிடைக்குது, அக்கா கிட்டே இருந்து. ஓடிவந்து தடுத்த காமாவுக்கும் போஸ்ட்மேனுக்கும் கூடரெண்டு அடி விழுந்துச்சு.

' அடிப்பாவி. உள்ளேயே இருந்துக்கிட்டு என்ன அழுத்தம்? நாங்கெல்லாம் கத்திக் கதறுனமே அப்பவாவது குரல் கொடுத்திருக்கூடாதா? '


'மணிக்கு நீச்சலே தெரியாதாம். அவன் உள்ளெ இறங்கி, அவனுக்கு எதாவது ஆகியிருந்தா.......'


' நான் ஊன்னுதான் சொன்னேன். நீங்கதான் அழுதுக்கிட்டே கத்துனீங்க'

இதைக் கேட்டதும் இன்னும் ரெண்டு மொத்து கிடைச்சது.


முழங்கைவரை ஊறுகாய் ஜாடியிலே கையைவிட்டு, மாங்காயை எடுத்துத் தின்ன ராணியின் சட்டையெல்லாம் மிளகாய், எண்ணெய் கலந்த ஊறுகாய் சாறு ஒழுகி ரத்தவிளாறாய் தெரியுது.


ஆமாம், இந்த போஸ்ட்மேன் எதுக்கு இங்கே சம்மணம் போட்டு உக்கார்ந்து கதை கேட்டுக்கிட்டு இருக்கார்?


நம்ம காமா இருக்காங்களே அவுங்க பேர் காந்திமதி. எல்லாரும் மரியாதையா காந்திமதியம்மான்னு கூப்புடும்போது,மூணரைவயசு ராணிதான் 'காமா'ன்னு ஆரம்பிச்சு வச்சது. நம்ம போஸ்ட்மேன் மணிக்கு இன்னிக்குத்தான் வேலையிலே சேர்ந்த மொதநாள். அம்மாகிட்டே சொல்லிட்டுப் போகலாமுன்னு வந்த இடத்துலேதான் இவ்வளவு களேபரம். காமாவோடஒரே பையந்தான் இந்த போஸ்ட்மேன் மணி.


மணியோட அப்பா காலமாயி ரொம்ப வருசமாச்சாம். காமாதான் வீட்டுவேலை செஞ்சு மகனை வளர்த்து ஆளாக்குனது.இந்த வீடு கவர்மெண்ட்டு வாடகைக்கு எடுத்த வீடு. மருத்துவர் குவாட்டர்ஸ். இங்கே வர்ற மருத்துவர் வீடுகளுக்கு வழக்கமா வீட்டுவேலை உதவி நம்ம காமாதானாம். அவுங்களும் பலபேரிடம் வேலை செஞ்சிருக்காங்களாம். பழகுன ஆள்ன்றதாலே எல்லாரும் காமாவையே உதவிக்கு வச்சுக்குவாங்களாம்.


ஆனா நம்ம வீட்டாளுங்களோட காமாவுக்கு ஒரு அதீத நட்பு ஏற்பட்டுப் போச்சாம். அம்மா, அக்காங்க,அண்ணன் எல்லோரும் காமாவை வீட்டு உதவியாளரா நினைக்கறதே இல்லை. நம்ம குடும்பத்துலே ஒருத்தரா ஆக்கிட்டாங்க.அதுலேயும் ராணிக்குட்டிக்கு எல்லாம் எப்பவும் காமாதான்.
கடைகண்ணிக்குப் போறதுலே இருந்து, சினிமா கோயில்ன்னு எங்கே போனாலும் ,'விசுக்'ன்னு ராணிக்குட்டியைத் தூக்கி இடுப்புலே வச்சுக்கிட்டு விறுவிறுன்னு நடக்கறது காமாவோட பழக்கம். அய்யே..... விடுங்க காமா. இறக்கிவிடுங்க, நானு நடந்து வரேன்னு கெஞ்சுனாலும் பேச்சைக் கேட்டாத்தானே?


வெள்ளைச்சீலையைப் பின்கொசுவம் வச்சுக் கட்டிக்கிட்டு இருப்பாங்க. ரவிக்கை போடறது இல்லை. பாதிக்கும் மேலெ நரைச்ச ச்சின்ன முடியை அள்ளி முடிஞ்சுக்கிட்டு இருப்பாங்க. வயசு என்ன, ஒரு நாப்பது நாப்பத்தஞ்சு இருக்குமோ என்னவோ.


பக்கத்துத் தெருவுலெதான் இருக்கு காமாவோட வீடு. ராணிக்குட்டிக்கு அங்கே போற வழி நல்லாத் தெரியும். கொஞ்சநேரம் காமாவைப் பார்க்கலேன்னா ராணி அங்கே போயிரும். புதுச் சட்டை போட்டுக்கிட்டா, ஓடிப்போய் அங்கெ காமாகிட்டே காமிச்சுட்டு வந்தாத்தான் நிம்மதி. காமாவோட வீடு ச்சின்னதா அழகா இருக்குன்னு ராணிக்கு நினைப்பு. அதுவும் அங்கே காமாவீட்டு வெந்நீர்ப் பழையதுன்னா ராணிக்கு உசிரு. அழகான அரிசிப்பல்லாலே ச்சின்ன வெங்காயம் கடிச்சுக்கிட்டு சோத்துப் பருக்கையை வாரி எடுக்கத் தெரியாம ச்சின்னக்கை அளையும்போது, 'அயிரை புடிக்குது ராணி'ன்னு மணி அண்ணந்தான் கிண்டல் செய்யும்.


நம்ம அண்ணனுக்கும் மணி அண்ணன்னா ரொம்ப இஷ்டம்தான். அண்ணன் பள்ளிக்கூடம் விட்டு வந்துட்டா,அவுங்க ரெண்டுபேரும் தினம் சாயந்திரமா வெளியே போய் சுத்திட்டு வருவாங்க. மணி அண்ணன் பெரிசுன்றதாலே எல்லாப் பசங்களுக்கும் ஒரு பயம்தான். அண்ணனுக்கு நிமோனியா வந்து மதுரை பெரியாஸ்பத்திரியிலே இருந்தப்ப,நம்ம மணி அண்ணந்தான் ரெண்டு வாரம் கூடவே இருந்து பார்த்துக்கிச்சு. மொத்தத்துலே குடும்பத்துக்கே காவல் மணி அண்ணந்தான்.


ஒரு நாள் அம்மா மதுரைக்குப் போய்வந்தப்ப, ராணிக்கு 'தங்கச் செருப்பு' ஒரு ஜோடி வாங்கியாந்தாங்க. அப்படியே மின்னுது தகதகன்னு தங்கமாட்டம். அதைப் போட்டுக்கிட்டு உடனே காமா வீட்டுக்கு ஓடுச்சு ராணி. பெரிய மனுஷியாட்டம்வாசல்லே செருப்பை கழட்டிவிட்டுட்டு உள்ளெ போய் காமாவைத் தேடுச்சு. பெரிய பங்களாவா? காமாவைக் காணொம்.பக்கத்து வீட்டுக்குப் போயிருக்குமோன்னு அங்கே போய்ப் பார்த்தா, அந்த வீட்டு ஆச்சிக்கு மூச்சுப் பிடிப்புன்னு தைலம்போட்டு உருவிக்கிட்டு இருந்தாங்க காமா. 'காமா வந்து பாருங்க என் புதுச் செருப்பை. தங்கச் செருப்பு'ன்னு சொல்லிக் கையைப் புடிச்சு இழுத்தா....... 'இதோ... இப்ப வரேன்'னுட்டுப் பொழக்கடையிலெ போயிக் கையைக் கழுவிக்கிட்டு வந்தாங்க.காமா வீட்டுப் படியிலே பார்த்தா..... செருப்பைக் காணொம். யாரோ களவாணி, களவாண்டுக்கிட்டு போயிட்டான்.


வீட்டுக்குவரப் பயந்துக்கிட்டு அழுதுக்கிட்டே இருந்த ராணியைத் தூக்கிக்கிட்டு வந்து வீட்டுலே விட்டுட்டு, செருப்புக் களவாணியை நல்லா வஞ்சது நம்ம காமாதான். நல்லவேளை,அன்னிக்கு மொத்து விழாமக் காப்பாத்துனது காமாதான். களவாண்டவங்க செருப்பைப் போட்டுக்கிட்டுப் போகும்போது பார்த்துப் பிடிச்சுறலாமுன்னு காமா சொன்னதாலே தினமும் வாசப்படியிலே உக்காந்து போறவர்ற பசங்க காலைப் பார்த்துக்கிட்டு இருக்கறதே ராணிக்குச் சோலியாப் போச்சு.


ஒருநாளு இப்படித்தான் வாசப்படிக்கட்டுலெ உக்காந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்துச்சு ராணி. காலை நேரம்.பக்கத்துப் பள்ளிக்கூடத்துக்கு பசங்க போய்க்கிட்டு இருக்காங்க. காலையே உத்துப் பார்த்துக்கிட்டு இருக்கும்போது,ராணிக்குட்டி எப்படி இருக்கேன்னு கேட்டுக்கிட்டே வந்து பக்கத்துலெ உக்காந்தது நம்ம காமா வீட்டுக்குப் பக்கத்து வீட்டு மல்லிகா அக்கா. செருப்புக் களவாணியைப் பிடிக்கறதுக்கு உக்காந்துருக்கென்னு சொன்ன ராணி,மல்லிகாவோட பேசிக்கிட்டே பள்ளிக்கூடத்துக்குப் போயிருச்சு. அங்கெ டீச்சர் பார்த்துட்டு, ஒண்ணாப்புலெ கொண்டுபோய் உக்கார வச்சுட்டாங்க.


இங்கே வீட்டுலெ ஒரே அமளிதுமளி, புள்ளையைக் காணொமுன்னு. தேடித்தேடிப் பார்த்துட்டு யாரோ புள்ளைபுடிக்கிறவன் கொண்டு போயிட்டானோன்னு பயந்து நடுங்கி காமா ஒடிப்போய் தலையாரிகிட்டே சொல்லியிருக்காங்க.தண்டோராப் போடறவர், இந்த மாதிரி நாலு வயசு ராணியைக் காணொம். பார்த்தவங்க உடனெ வந்து விவரம்
சொல்லணுமுன்னு 'டமு டமு டமு டமு'ன்னு தமுக்கு அடிச்சுக்கிட்டே தெருத்தெருவாப் போய்க்கிட்டு இருக்கார்.


அப்ப யாரோ, 'மல்லிகா கையைப் புடிச்சுக்கிட்டுப் போனதைப் பார்த்தேன்'னு காமாகிட்டே சொன்னதும், பள்ளிக்கூடத்துக்கு ஒரே பாய்ச்சல். மல்லிகாகிட்டே கேக்கலாமுன்னு அங்கேபோனா, ஒண்ணாப்புலே ராணிக்குட்டி இருக்குன்னு தெரிஞ்சுச்சாம்.சரின்னு அங்கே போய்ப் பார்த்தா.......... முத்தாட்டம் உக்காந்துக்கிட்டு டீச்சர் சொல்றதையெல்லாம் அழகாத் திருப்பிச் சொல்லிப் பாடம் படிக்குதாம் ராணிக்குட்டி.


காமாவைப் பார்த்த டீச்சர்,' ராணிக்குட்டி ரொம்ப புத்திசாலி. பள்ளிக்கூடத்துலே இப்பவே சேர்த்துறலாமு'ன்னு சொன்னாங்களாம்.அம்மாவைக் கேக்கணும். புள்ளைக்கு நாலு வயசுதான் ஆச்சுன்னு காமா சொல்லியும்கூட, பிடிவாதமா,ரெண்டுவயசைக் கூட்டி அன்னிக்கே புள்ளையை வகுப்புலே சேர்த்துட்டாங்களாம், டீச்சர். காமா வீட்டுக்கு ஓடிப்போய் அம்மாகிட்டே விஷயத்தைச் சொன்னாங்களாம். இப்படி ராணிக்குட்டியோட பள்ளிக்கூடப் பிரவேசம் ஆச்சு....


அன்னிலே இருந்து காமாவுக்குப் புது வேலை ஒண்ணும் சேர்ந்துக்கிச்சு. மத்தியானம் சாப்பாட்டுக்குப் பள்ளிக்கூடம் விடுவாங்கல்லெ, அப்ப அங்கே போய் ராணிக்குட்டியைத் தூக்கிக்கிட்டு வீட்டுக்கு வந்து சோறு ஊட்டிட்டு, பிறகு அதெ மாதிரி இடுப்புலே தூக்கி வச்சுக்கிட்டுப் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு விடும். 'எருமைமாடு' மாதிரி இருந்துக்கிட்டு இடுப்புலே உக்காந்து வர்றதுக்கு ராணிக்குட்டிக்கு வெக்கமா இருக்கும். அதுவும், கூடப்படிக்கிற பசங்க எல்லாரும் பாக்கறாங்களே அது வேற. காமா அதெல்லாம் கேக்காது, புள்ளைக்குச் சூட்டுலே காலு பத்திக்குமாம்.


ராணிக்குட்டி படிப்புலே ரொம்பச் சூட்டிகை. எண்ணி ஆறே மாசத்துலே அதைத் தூக்கி ரெண்டாப்புலே போட்டுட்டாங்க.பள்ளிக்கூடத்துலே சேர்ந்த மொத வருசமே டபுள் புரமோஷன் வாங்கிருச்சு. காமாவுக்கு தலைகொள்ளாத பெருமை.


காமாதான் தினமும் சோறு ஊட்டணும், குளிப்பாட்டணும், இன்னும் வெளியே போனாக் களுவி விடணும்னு எல்லாத்துக்கும் காமா காமான்னு இருந்தப்ப அம்மாவுக்கு வேற ஊருக்கு மாத்தல் வந்துருச்சு. சேதி கேட்டதும் ராணிக்குட்டியைக் கட்டிப் புடிச்சுக்கிட்டு காமா அழுத அழுகை.............. ....


இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு, கிளம்பரதுக்கு. தினமும் விதவிதமாப் பலகாரம் பண்ணிக்கிட்டு வந்து ராணிக்குட்டிக்கு ஊட்டிக்கிட்டும், தினமும் சாயங்காலம் கோயிலுக்குக் கொண்டு போறதுமா இருந்தாங்க காமா. மணி அண்ணன் வேறதினமும் முட்டாயெல்லாம் வாங்கிவந்து கொடுக்கும். கிளம்பறதுக்கு மொதநாளு, கோவில்லே மாவிளக்குப் போட்டாங்க. ராணிக்குட்டிக்குப் புதுச் சட்டை எடுத்துக் கொடுத்தாங்க.
அதைப் போட்டுக்கிட்டு, பஸ்ஸுலே ஏறி ஜன்னல்பக்கம் உக்கார்ந்துக்கிட்டு காமாவுக்கு கை ஆட்டுனா ராணிக்குட்டி.காமாவுக்கு அழுது அழுது கண்ணும் செவந்து போச்சு, தொண்டையும் கட்டிக்கிச்சு. அக்காங்க கிட்டேயும், அம்மா, அண்ணன் கிட்டேயும் என்னமோ சொல்லிக்கிட்டே, முந்தானையிலே மூக்கைத் துடைச்சுக்கிட்டே இருந்த காமாவைப் பார்த்த ராணிக்குட்டிக்கும் அழுகையா வந்துச்சு. மணி அண்ணன் பஸ்ஸுக்குள்ளே ஏறி, சாமான்களையெல்லாம் அடுக்கி வச்சுட்டு, அண்ணன் கையைப் புடிச்சுக்கிட்டே என்னமோ பேசிக்கிட்டு இருந்தார். அவர் கண்ணுலேயும் கரகரன்னு தண்ணி வந்துக்கிட்டு இருக்கு. இதுவரைக்கும் ஒண்ணும் நடக்காதமாதிரி இருந்த அக்காங்களும் அம்மாவும் ஏன் அண்ணனும்கூட பஸ் நகர ஆரம்பிச்சதும் ஒரு கதறுகதறுனாங்க பாருங்க....................................


அடுத்தவாரம்: சாவித்திரி


நன்றி: தமிழோவியம்
-------------

22 comments:

said...

யம்மா துளசிம்மா நீங்க பாட்டுக்கு எவ்ரிடே மனிதர்கள்னு எழுதி தள்ளிப்போட்டு போயிடறிங்க இங்க இதப் படிச்சா நம்ம வாழ்க்கைலயும் இந்த மாதிரி இருந்த மனிதர்கள் வந்து நம்ம மனச பிழியறாங்க உங்க இந்த எதார்த்த நடைக்காகவே தினைக்கும் படிக்கறேன்

said...

வாங்க மகேந்திரன்.

மனுசங்க எல்லார் வாழ்க்கையிலும்தான் வந்துபோய்க்கிட்டு இருக்காங்க. அதுலே எத்தனைபேர் மனசுலே ஒரு இடம் புடிச்சுக்குறாங்கன்னு பார்த்தா......

இம்புட்டுச் சனமான்னு இருக்கு!!!!

//......தினைக்கும் படிக்கறேன் //

அப்படியா? சந்தோசம். நல்லா இருங்கப்பு.

said...

துளசி அம்மா,சம்பவங்களை கண்முன் கொண்டுவந்து காட்டுகின்ற தங்களது எழுத்துநடை அருமை.வாழ்த்துக்கள்.

said...

அந்த ராணிக்குட்டி நீங்கதானே?
" ஊறுகாய் ஜாடியிலே முழங்கை வரை..."-ஆமா அது நீங்கதான்.
அந்த ஊர் மேலூர்....சரிதானா?
காமா நல்ல கேரக்டர்...இப்படி மற்க்கக் கூடாதவர்கள் சிலர் உண்டு

said...

வாங்க துபாய்(க்கே)ராஜா.

அப்ப நடையை மாத்த
வேண்டியதில்லைன்னு சொல்றீங்கதானே? :-))))

நன்றி.

said...

சிஜி,

பேராசிரியருக்கு நான் போட்ட மார்க் 50%தான் :-)))))

said...

எந்த விடை தவறு?

said...

சிஜி,ஊர்:-))))

said...

ஆமா! மேலூரில்தான் கேணியே கிடையாதே! கால்நடை மருத்துவ மனைக்குப் பின்புறம் ஒரு நல்ல தண்ணி கேணி உண்டு;குளிக்க ஒரு வாளி தண்ணிக்கு 50 காசு கேட்பாங்க
பரவால்லே;உங்களுக்குதான்
"யாதும் ஊரே" ஆச்சே!

said...

நடை ரொம்ப நல்லா இருக்கு....ஆனா தொடர்ந்து படிக்க முடியலை...டைம் கிடைக்க மாட்டேங்குது :(

வாழ்த்துக்கள் துளசியக்கா

said...

வாங்க சங்கர்.
இப்பவாவது கொஞ்சம் நேரம் கிடைச்சதேன்னு
நான் சந்தோஷப்பட்டுக்கறேன்.

said...

சிஜி,

'சொந்த ஊர்' கன்ஃப்யூஷன் இருக்குல்லே,அதான் 'யாதும் ஊரே'ன்னு ஒரு 'உதார்'விட்டுக்கறது:-))))

said...

நீளமான முன்னுரையும், சற்றே அதிகமன விவரனையும், வார்த்தையாடல்களின் மேல் செலுத்திய கவனமும், காமவின் மேல் செலுத்தப்படாமல் மனதில் பதியாமல் போயிற்று.

நல்லவராகத்தான் இருந்திருக்க வேண்டும் இந்தக் 'காமா'!

said...

வாங்க SK.

காமாவும் எத்தனையோ வீட்டுலே வேலை செஞ்சிருப்பாங்க. நமக்கும் நிறையப்பேர்
ஒவ்வொரு ஊரிலும் ஒருத்தர் வீட்டுவேலைகளில் உதவிக்கு இருந்திருப்பாங்க. ஆனா
காமாவைக் குடும்பத்தில் ஒருத்தராப் பார்த்தமாதிரி மத்தவங்களை என்னாலே நினைக்க
முடியலை. ஒருவேளை அப்ப இருந்த வயசும் காரணமா இருந்திருக்கலாம். பள்ளிக்கூடம்
போக ஆரம்பிக்கும்வரை, பிள்ளைகளுக்கு வீடும், வீட்டில் உள்ளவர்களும்தான் உலகமா இருக்கு.

அடுத்தவீட்டுப் பிள்ளையைத் தன்பிள்ளைபோல நேசித்த காமா நிச்சயம் ரொம்ப நல்லவங்களாத்தானே
இருந்திருக்கணும்? நல்லவங்கதான்.

said...

துளசி ராணி நீங்க சரி.
காமா அம்மா மாதிரி இப்ப யாரையாவது பார்க்க முடியுமோ என்னமோ.
திருமங்கலத்திலே நானும் நாகம்மானு எங்க வீட்டிலே உதவிக்கு இருந்தவங்க வீட்டுக்குப் போயிடுவேன்.
ஏதோ ஒரு பாசம் அவங்க மேல.
ரொம்ப நல்லா இருந்தது நீங்க சொல்ற விதம். எப்படித்தான் இப்படி ஞாபகமா எழுதறீங்களோ.

said...

சரி டீச்சர்...இதுல நீங்க எங்க வாரீங்க....நீங்கதான் ராணியோ! தகதகதக தங்க வேட்டை அப்பவே நடந்திருக்கு.

என்னையும் ராணி மாதிரி சின்னப்புள்ளைல வயசு கூடப் போட்டு பள்ளூடத்துல போட்டுட்டாங்க. ஆனா நான் நல்ல புள்ளையா டவுள் ப்ரமோஷன் எல்லாம் வாங்கல.

said...

ஆமாம் வல்லி.
சில பேருமேலே மட்டும் என்னமோ சொல்லத்தெரியாத அன்பு வந்துருது. ஒருவேளை இதுதான்
போன ஜென்ம பந்தமோ?

சம்பவம் அதே திருமங்கலம்தான்:-)))))

said...

ராகவன்,

டபுள் புரமோஷனுக்காக பெருமையடிச்சுக்க முடியாதபடி,
அம்மா மறைவு சமயம் என்னை இங்கேயும் அங்கேயுமா
தூக்கி விசிறிப் பந்தாடுனதுலே ஒரு வருஷம் பள்ளிக்கூடம்
இல்லாம 'பந்தா' இருந்து அது காம்பன்ஸேட் ஆயிருச்சு(-:

said...

துளசி,
அம்மா மறைந்த சமயம்.
விவரிக்க முடியாத துன்பமாச்சே.

கடந்து வந்து இருக்கிறீர்கள்.

வருத்தமாக இருக்குப்பா.

இனிமே எல்லாமே நல்லதாகத் தான் நடக்கும்.

said...

புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி வல்லி.
ஆனா அப்ப வெறும் பதினொரு வயசுதான். இழப்புன்றது புரிஞ்ச அளவுக்கு அதோட ஆழம் புரியலை.
இப்பக்கூட நான் போதுமான அளவு அந்தத் துக்கத்தை அனுஷ்டிச்சேனான்னு தெரியலை.
உண்மையைச் சொன்னா இப்பத்தான் அப்பப்ப அம்மா நினைவு வந்து அழுகை வந்துருது.

said...

அடடா.. சூப்பர் கேரக்டருங்க..

அவங்களோட குணாதிசயங்கள நீங்க வர்ணிச்ச விதம் அத விட சூப்பர்.

படிக்க படிக்க அப்படியே கண் முன்னால முழுசா வந்து நிறைஞ்சி போயிட்டாங்க..


அடுத்தது சாவித்திரியா? ஊம்.. ஜமாய்ங்க:)))

said...

வாங்க டிபிஆர்ஜோ.

மனசுக்குள்ளெபோய் உக்கார்ந்துக்கிட்டவங்க எத்தனைபேருன்னு பார்த்தா எண்ணஎண்ண வந்துக்கிட்டே
இருக்காங்க. எப்படியோ இந்த தொடரின் தயவுலே எல்லாரையும் கொஞ்சம் வெளியே
கொண்டுவரும் முயற்சிதான் இது:-)