Sunday, August 13, 2006

எவ்ரிடே மனிதர்கள் -13 சிந்தியா

அந்த ஒரு வாரத்துலேயே அஞ்சு தடவை ஃபோன் வந்துருச்சு இந்தியாவுலே இருந்து. எல்லாம் ஒரே விதமான சம்பாஷணைதான். ' அங்கே ---- இந்தத் தேதிக்கு வர்றோம். ஊர் நல்ல ஊர்தானே?'ன்னு. கூட இருந்து அவுங்களைக் கூட்டிக்கிட்டு வரப்போறது அவுங்க புருஷந்தான். அவர் இங்கே வந்து 4 மாசம் இருந்துட்டு, இப்பப்போய்க் குடும்பத்தைக் கூட்டிக்கிட்டு வர்றார். அவர் சொல்லி இருக்கமாட்டாரா, ஊர் நிலவரத்தைப் பற்றி?


திருப்பித்திருப்பிக் கேட்டுக்கிட்டு இருந்த கேள்விகளிலே தடுமாறி, 'அதெல்லாம் கவலைபடாதீங்க. ஏர்ப்போர்ட்டுக்கு வாரேன்'ன்னு 'நாக்கு ஸ்லிப்'புலே சொல்லிட்டேன்.


அவுங்க வீட்டுக்காரர் டெர்ரி, இங்கே வர்றதுக்கு முன்னாலே இந்தோனேசியாவுலே வேலை பார்த்துக்கிட்டு இருந்தார்.எங்க வீட்டுலெ இவர், எதோ கம்பெனி விஷயமா அங்கெ போனப்ப இவரைச் சந்திச்சு இருக்கார். அவரோட வேலை செய்யும் வகை இவருக்குப் பிடிச்சுப்போச்சாம். இங்கே இவருக்கு உதவியா ஒருத்தரைத் தேடிக்கிட்டு இருந்த சமயம்.இன்னும் ரெண்டு மாசத்துலே இந்தோனேசியாவிலே ஒப்பந்தம் முடியுதுன்னு தெரிஞ்சதும், இங்கே வேலைக்குக் கூப்புட்டாராம். அவரும் சரின்னு சம்மதிச்சு, வொர்க் பர்மிட்லே இங்கே வந்து சேர்ந்துட்டார்.


ரொம்ப நல்ல சிநேகிதமான மனுஷர். ரெண்டு தலைமுறைக்கு முன்னாலே கம்போடியாவுலே இருந்து இந்தியாவுக்குப் போய்செட்டிலான குடும்பம். பிறந்தது கல்கத்தாப் பக்கமுன்னாலும், எஞ்சிநீயரிங் படிச்சது எல்லாம் பெங்களூர்தானாம்.மனைவி சிந்தியா கோவாக்காரங்க. ரெண்டு பசங்க இருக்காங்களாம். இப்ப மூணாவது குழந்தை வயத்துலே.


குறிப்பிட்ட நாள் வந்துச்சு. சொல்லிட்டோமேன்னு ஏர்போர்ட்டுக்குப் போனோம். இவருக்கு, எதோ மீட்டிங் இருந்ததாம்.என்னாலே அதைத் தள்ளி வச்சுட்டு வந்த கடுப்புலே இருந்தார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லேண்ட் ஆயிருச்சு. உள்ளெ இருந்து ஒவ்வொருத்தரா ஃபார்மாலிட்டி முடிஞ்சு வெளியே வர ஆரம்பிச்சாங்க. கவனமா அந்தக் கதவையே பார்த்துக்கிட்டு இருக்கேன். நேரம் போய்க்கிட்டு இருக்கு. இவுங்க ஆளையே காணொம். அப்புறம் அங்கே இருந்த அதிகாரி ஒருத்தரைக்கேட்டுகிட்டேன், உள்ளெ ஒரு இந்தியக் குடும்பம் நிக்குதான்னு பாருங்கன்னு. அவர் போய்ப் பார்த்துட்டு வந்து, எல்லாரும் போயாச்சு. அங்கெ யாருமெ இல்லைன்னுட்டார்.


இது என்னடா....? இந்த ஃப்ளைட்டுலேதானே வரேன்னு சொன்னாங்கன்னு யோசனையோட, இவரை ஆஃபீஸ்லே இறக்கிட்டு, வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். கொஞ்ச நேரத்துலெ இவர் ஃபோன் அடிச்சார். 'அவுங்க வந்துட்டாங்களாம். சிந்தியாவுக்கு முடியாம, வீல்ச்சேர்லே இருந்ததாலே ப்ளைட் லேண்ட் ஆனதும் மொதல்லே க்ளியரன்ஸ் கொடுத்து வேற வழியா வெளியே அனுப்பிட்டாங்களாம். இப்ப நம்ம வீட்டுக்கு வந்துக்கிட்டு இருக்காங்க பார்.'


பத்து நிமிஷம் ஆச்சு. வீல்ச்சேர்லே இருக்காங்களா....அடடா.... கவலைப்பட ஆரம்பிக்கறதுக்குள்ளே டெர்ரி , நம்ம வெளிகேட்டுலே நுழையறார். பின்னாலேயே ஒரு துள்ளலோடு சிந்தியா( அவுங்களாத்தான் இருக்கணும்!) நடந்து வர்றாங்க!



வரவேற்று உக்காரவச்சுட்டு, உடம்பு எப்படி இருக்குன்னு கேட்டேன், பிள்ளைத்தாய்ச்சி ஆச்சே. அதெல்லாம் நல்லாத்தான் இருக்காங்களாம். அப்ப எதுக்கு வீல்சேர்? ஓஓஓஓ... அது ஒண்ணுமில்லை. கால்வலின்னு ஏர்ஹோஸ்டஸ் கிட்டே சொல்லி, ஏர்ப்போர்ட் வீல்ச்சேர்லே வந்தேன்!!!!!!!!!!!!!!!!



பாய்ஸ் இன்னும் ஊர்லேதான் இருக்காங்களாம். அவுங்களை இங்கே கொண்டு வரணுமுன்னா இன்னும் கொஞ்சம்சில நியமங்கள் இருக்காம். அதுக்கு எங்க இவர் உதவணுமுன்னு சொல்ல வந்தாங்களாம். கொஞ்ச நாளைக்கு கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்லே அவுங்களைத் தங்க வைக்க ஏற்பாடு ஆச்சு. அப்புறம் இவர் பெர்சனலா உதவிசெஞ்சு, பசங்களும் வந்து சேர்ந்தாங்க. பெரியவனுக்கு 16 வயசு. அடுத்தவனுக்கு 14.


நம்ம வீட்டு ஏரியாவுலேயே வீடு பார்த்துக் குடிவந்துட்டாங்க. பசங்களையும், எங்க இவரே கம்பெனிக்குப் பக்கத்துலே இருக்கற பள்ளிக்கூடத்துலெ சேர்த்துவிட்டார். சிந்தியாவும் அவுங்க போற சர்ச்சு மூலம் நண்பர்களைச் சேர்த்துக்கிட்டாங்க.குழந்தையும் பிறந்தது. பொண் குழந்தை. ஆஸ்பத்திரியிலே போய்ப் பார்த்துட்டு வந்தோம்.


ரெண்டு நாள் கழிச்சு, நம்ம வீட்டுலே சில நண்பர்கள் குடும்பங்களுக்கு ஒரு விருந்து நடந்துக்கிட்டு இருந்தப்ப, திடீர்ன்னு சிந்தியாக் குடும்பம் வந்துட்டாங்க. ஆஸ்பத்திரியிலே இருந்து மொதநாள் சாயங்காலம் வீட்டுக்கு வந்துட்டாங்களாம்.அவுங்களையும் சாப்பிடச் சொன்னோம். 'நீங்க வெஜிடேரியன் சாப்பாடாச்சே. சிந்தியா ஒரு வேளைகூட நான் வெஜ் இல்லாமல் சாப்பிடமாட்டாங்க'ன்னு சொல்லிட்டு டெர்ரியும், பிள்ளைகளும் சாப்பிட்டாங்க. சிந்தியா என்ன நினைச்சாங்களொ என்னவோ, தானும் சாப்பிடறதாச் சொல்லிச் சாப்பிட்டாங்க. அவுங்க முதல்முதல்லெ ரசிச்ச வெஜிட்டேரியன் சாப்பாடு நம்ம வீட்டுதுன்னும், 'அந்த சாம்பார்' ரொம்பப் பிடிச்சிருச்சுன்னும், இனிமே நான் சாம்பார் வைக்கும் போதெல்லாம் அவுங்களுக்கும் கட்டாயமா அனுப்பி(??????) வைக்கணுமுன்னும் சொன்னாங்க.



சிந்தியாவோட அப்பா,அம்மா இன்னும் மத்த சொந்தமெல்லாம் கோவாலே இருந்தாங்க. அப்பான்னு இவுங்களுக்கு ரொம்பப் பிரியமாம். நல்லதுதானே? அவருக்கு, இல்லாத வியாதிகளே கிடையாதாம். நிலமை ரொம்ப மோசமாம்.அடிக்கடி சொல்லி வருத்தப்படுவாங்க. நானும் ஆறுதலாச் சில வார்த்தைகள் சொல்வேன்.


அடுத்த சில மாதங்களிலே வேற வீடு மாறப்போறோமுன்னு சொல்லி, அந்த வீட்டை எங்களை வந்து பார்க்கச் சொன்னாங்க.பழைய வீடுதான். பரவாயில்லாமல் இருந்தது. வாடகை வீடுதானே. நல்லாதான் இருக்கு. சொந்த வீடா வாங்கறதா இருந்தாத்தான் ரொம்பக் கவனிக்கணுமுன்னு சொன்னோம். அப்பத்தான் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க. 'இந்தவீட்டை வாங்கறதாத்தான் இருக்கோம். வீட்டு ஓனர், இங்கே இமிக்ரேஷன்லெ வேலை செய்றாங்க. நாங்க இங்கே நிரந்தரக் குடியுரிமை வாங்கறதுக்கு உதவறேன்'னு சொல்லி இருக்காங்க.



'இங்கே இதுபோல ஒண்ணும் செய்ய முடியாது. எல்லாமே நேர்வழிதான். இது என்னடா இப்படிச் சொல்றாங்களெ'ன்னு நினைச்சேன். வாடகை என்னன்னு கேட்டாச் சொன்னது கொஞ்சம் அதிகமாவே இருந்துச்சு. 'நாங்க இந்த வாடகை மட்டும் கட்டிக்கிட்டு வருவோம். குடி உரிமை கிடைச்சு, வீட்டை வாங்கும்போது, இதுவரை கட்டுன வாடகையில் ஒரு பகுதியைத் திருப்பித் தரேன்னு சொல்லி இருக்காங்க'ளாம்.



அடிக்கடி எனக்குப் போன் பண்ணுவாங்க. எப்பக் கேட்டாலும் யாராவது ஒரு மகன் உடம்பு சரியில்லை,பள்ளிக்கூடம் போகலைன்னு சொல்வாங்க. அப்புறம் விசாரிச்சப்பத்தான் தெரிஞ்சது, சிந்தியாவுக்குத் தனியே வீட்டுலெ இருக்க பயமாம். அதனாலெ தினம் ஒரு பையன்னு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பள்ளிக்கூடத்துக்கு மட்டம். ஏற்கெனவே பசங்க, வயசுக்கேத்த வகுப்பில்ல்லாம ச்சின்ன வகுப்பிலே படிக்குதுங்க. இதுலே இப்படிச் செஞ்சா எப்படி? அதுதான் கைக்குழந்தை இருக்கே. அதைப் பார்த்துக்கிட்டு இருந்தாபொழுது போயிருமே. அப்புறம் பயப்பட எங்கெ நேரமுன்னு சொல்லிப் பார்த்தேன்.



திடீர்ன்னு பசங்களை வேற ஒரு ப்ரைவேட் பள்ளிக்கூடத்துலே சேர்த்துட்டோமுன்னு சொன்னாங்க. அங்கே பள்ளிக்கூடஃபீஸ் ரொம்ப ஜாஸ்த்தியாச்சேன்னு சொன்னதுக்கு, 'அது பரவாயில்லை. முந்தி இருந்த பள்ளிக்கூடத்துலே நல்லா சொல்லிக் கொடுக்கறதில்லை'.


அடிக்கடி மட்டம் போட்டதாலே, காரணம் கேட்டுப் பள்ளிக்கூடம் கடிதம் போட்டுருந்தது அப்புறம்தான் தெரியவந்துச்சு.எப்ப வீட்டுக்குப் போனாலும் பசங்க வீட்டுவேலை, சமையல், பாத்திரம் தேய்க்கறது, குழந்தையைப் பார்த்துக்கறதுன்னு பிஸியா இருப்பாங்க. அப்பப் படிப்பு.........? டெர்ரியும் சமையல் செய்யறதுலே மும்மரமா இருப்பார்.



என்கிட்டே ஒரு நாள் சிந்தியா , ஏன் அப்படிக் கேட்டாங்கன்னு புரியலை.

"இங்கே பேங்குலே கடன் வாங்கிட்டுக் கட்டலைன்னா என்ன ஆகும்?"

" எதுக்குக் கடன் வாங்கணும்?" ( இது நான்)

" இல்லே. ச்சும்மாதான். தருவாங்களா?"

" அது தெரியாது. ஆனா யாராவது பெர்ஸனல் ஷூரிட்டி தரணும். இல்லைன்னா வீடு வாங்கக் கடன் கிடைக்கும்."

" அந்தக் கடனைத் திருப்பிக் கட்டலைன்னா?"

" வீட்டோட பத்திரம் பேங்குகிட்டேதான் இருக்கும். பணம் கட்டலைன்னா, வீட்டை பேங்க் வித்துட்டு அவுங்களுக்குச் சேரவேண்டிய தொகையை எடுத்துக்குவாங்க"

" அப்ப பர்சனல் லோன், ஷூரிட்டி இல்லாமக் கிடைக்காதா?"

" ஆமாம். இப்ப எதுக்கு இதையெல்லாம் கேக்கறீங்க? கடன்னு வாங்குனாத் திருப்பிக் கட்டத்தானே வேணும்.அதெப்படிக் கட்டாம இருக்கலாம்?"

சிந்தியாவும், டெர்ரியும் முந்தி அமீரகத்துலே இருந்திருக்காங்க. அங்கே சிலர், இப்படி பேங்கிலே பெரிய தொகையைக் கடனா வாங்கிட்டு, ஊருக்குப் போயிட்டுத் திரும்ப வர்றதில்லையாம். (இது எவ்வளவு தூரம் உண்மைன்னு அங்கே இருக்கும் வலை நண்பர்கள்தான் சொல்லணும்) அப்ப அவுங்களுக்கு ஷூரிட்டி போட்டவங்களுக்கு எவ்வளோ கஷ்டம்? எனக்கென்னமோ இது கொஞ்சம் மன உறுத்தலாத்தான் இருந்துச்சு.


இங்கே குடியுரிமை கேட்டு விண்ணப்பம் போட்டாங்க. மருத்துவப் பரிசோதனையிலே டெர்ரி தேறலை. இதயத்துடிப்பு சரியில்லைன்னு அவருக்கு பேஸ் மேக்கர் வச்சிருக்காங்க. வச்சுப் பல வருசங்கள் ஆச்சாம். இந்தியாவுலே இருந்தப்ப இது நடந்ததாம். விண்ணப்பம் பூர்த்தி செய்யும் சமயத்திலும், அதில் கேட்டிருந்த மருத்துவ/உடல்நிலை பற்றிய கேள்விங்க இருக்கு பாருங்க அதுலெ இதைச் சொல்லாம விட்டிருந்தார். இந்த விவரங்கள் எல்லாம் கம்பெனிக்கும் இப்பத்தான் தெரியவந்துச்சு.


இந்தக் காரணங்களாலே இங்கே மெடிகல் இன்சூரன்ஸும் கொடுக்க மறுத்துட்டாங்க. இதுக்கிடையில் டெர்ரிக்குக் கொஞ்சம் சுகமில்லாமப்போய் ஹாஸ்பிட்டலிலே அட்மிட் ஆகும்படி ஆச்சு. வீட்டுலே பசங்க இருந்து, குழந்தையைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நாங்க இவரைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு, அங்கிருந்து வீடுவந்து, பிள்ளைகளுக்குச் சாப்பாடு வாங்கிக் கொண்டு போனோம்.


குழந்தை அழுக்காக, அழுதுகிட்டே இருந்துச்சு. எனக்குப் பார்த்தவுடனெ மனசுக்கு ரொம்ப வருத்தமாப் போச்சு.கண்ணுலே தண்ணியே வந்துருச்சு. தூக்குனவுடனே தாவிக்கிட்டு வருது. பசங்களும் மாறிமாறித் தூக்கி வச்சுக்கிட்டு இருந்துட்டு,ரொம்பக் களைப்பாவும் பசியாவும் இருந்தாங்க.


மறுநாள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துட்டாங்க. இங்கே குடியுரிமை கிடைக்காதுன்னு தெரிஞ்சதும், என்ன செய்யலாமுன்னு யோசனை. ஒண்ணும் செய்ய முடியாதுன்னாலும், இப்ப இருக்கற வொர்க் பர்மிட் முடியும்வரை வேலை செய்யலாம். அது முடிஞ்சதும் இந்தியாவுக்குத் திரும்பப் போகணும்.
இங்கே கல்வியாண்டுன்றது ஜனவரிதான் ஆரம்பம். அதனாலே ஏப்ரலில் முதல் டெர்ம் வரை பிள்ளைங்க படிக்கட்டும்.ஊருக்குப் போயிட்டா, அங்கே ஜூனில் தானே பள்ளிக்கூடம். அங்கே தொடர்ந்து படிக்கலாமேன்னு சொன்னேன்.இங்கே தனியார் பள்ளிக்கூடத்துலே இருந்து முதல் டெர்ம்க்கு உள்ள காசை அடைக்கணுமுன்னு கடிதம் வந்ததும்,பசங்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாம நிறுத்திட்டாங்க அவுங்க அம்மா.



வீட்டு வாடகையிலே அதிகப்படிக் கொடுத்த காசு திரும்பிக் கிடைக்காது. அதுதான், வீட்டை வாங்கினா தரேன்னு சொல்லி இருந்தாங்களே. சீக்கிரமா ஊருக்குக் கிளம்பிப் போகப் போறோமுன்னு சொன்னாங்க. இன்னும் ரெண்டு மாசம்வரை இருக்கலாமேன்னு சொன்னதுக்கு, அப்பாவின் நிலை கவலைக்கிடமா இருக்குன்னும் சொன்னாங்க.


வீட்டைக் காலி செய்யப் போறொம். அப்ப ரெண்டு மாசத்துக்கு எங்களுக்குக் கம்பெனி கெஸ்ட் ஹவுஸைக் கொடுக்கணுமுன்னு எங்க இவர்கிட்டே கேட்டாங்க. இங்கே கம்பெனி பாலிஸி வேற மாதிரி இருந்தது. அது என்னன்னா, இங்கே வேலைக்கு வர்றாங்க பாருங்க, அவுங்க வீடு பார்த்து செட்டில் ஆகும்வரை கூடி வந்தா ஒரு மாசம் தங்கிக்கலாம். விட்டுப் போறவங்களுக்கு தங்கிக்க முடியாது.


எங்க இவர் எவ்வளவோ விளக்கிச் சொல்லியும், டெர்ரி விளக்கியும் அதை ஏத்துக்க சிந்தியாவாலே முடியலை.இங்கே எல்லாருக்கும் ஒரே விதி தான். நாளைக்கு நாங்களே கேட்டாலும் கிடைக்காது. இத்தனைக்கும் மேலிடத்திலும் பரிந்துரை செஞ்சு பார்த்தார் எங்க இவர். ஒண்ணும் நடக்கலை.


இந்த நாடே ரொம்ப மோசம். இங்கே வெளியிலும் சரி, கம்பெனியிலும் சரி 'எவ்ரி ஒன் ஈஸ் ஈக்வலி பேட்'ன்றது சிந்தியாவின் கருத்தா இருந்துச்சு. அவுங்களுக்கு எங்க எல்லார் மேலேயும் ஒரே கோவம்.


அப்படி இப்படின்னு அடுத்தவாரம் கிளம்பறோமுன்னு சொன்னாங்க. வீட்டைக் காலி செஞ்சாச்சு. அதுவரை எங்கே தங்கி இருக்கப் போறாங்கன்னு கேட்டேன். ஆஸ்பத்திரியிலே இருந்தப்ப, ஒரு டாக்டர் நட்பானார். அவர் வீட்டுலே தங்கறோமுன்னு சொன்னாங்க. டெர்ரி இருக்கும் நிலைமையிலே டாக்டர் வீடுன்னா நல்லதுதான். எதாவதுன்னா உடனடி உதவி
கிடைக்குமில்லையா?


அவுங்களுக்கு ஒரு நாள் பிரிவு உபசாரமா ஒரு பார்ட்டிக்குக் கம்பெனி ஏற்பாடு செஞ்சது. அதுக்கு அவுங்க போகவே இல்லையாம். கோபத்தைக் காமிக்கறது இப்படியாம். இவுங்க விண்ணப்பத்துலே செஞ்ச குழறுபடிதான் எல்லாத்துக்கும் காரணம் என்கிறதை ஒப்புக்கவே மாட்டேன்னு இருந்தா எப்படி?


என்னிக்குக் கிளம்புறாங்கன்னு கேட்டதுக்கு தேதி சரியாக நினைவில்லை. இன்னும் ஒரு வாரம் இருக்குன்னு சிந்தியா சொன்னாங்க. அநேகமா திங்கள் இல்லைன்னா புதன். கன்ஃபர்ம் இன்னுமாகலையாம்.


நம்ம வீட்டுலே ஒரு நாள் சாப்பிடக் கூப்பிடலாமுன்னு இருந்தோம். வெளியே எங்கியாவது கொண்டு போகலாமுன்னு நினைச்சேன். அவுங்ககிட்டே கேட்டு, அவுங்க இஷ்டப்பட்ட இந்திய உணவகத்துலேயே குறிப்பிட்ட நாளில் இரவு டின்னருக்கு ஏற்பாடு செஞ்சோம்.


மாலை 7 மணிக்கு ரெஸ்டாரண்டுலே சந்திக்கலாமுன்னு ஏற்பாடு. நாங்க, அவுங்களுக்காக 7 முதல் அங்கே கார்த்துக்கிட்டு இருக்கோம். என் மகளுக்கோ பொறுமை போய்க்கிட்டு இருக்கு. இவுங்க ஆளையே காணோம். ஆர்டர் எடுக்கறவர் பத்துதடவை வந்து கேட்டுட்டார். ஊஹூம்...... இன்னும் பத்து நிமிஷம் பார்த்துட்டு நாம் சாப்பிடலாமுன்னு இருந்தோம்.மணி ஏறக்குறைய 8 ஆகப்போகுது. நம்ம கைத்தொலைப் பேசியில் கூப்பிடலாமுன்னா, அவுங்க கிட்டே செல் கிடையாது.அந்த டாக்டர் வீட்டு போன் நம்பரும் நமக்குத் தெரியாது. எனக்குக் கொஞ்சம் பேஜாரா இருந்துச்சு. அப்பதான் எங்கஇவர் சொல்றார், கம்பெனி கொடுத்த பார்ட்டிக்கு இவுங்க வரவே இல்லைன்னு(-:



எட்டுமணி போல வந்து சேர்ந்தாங்க. கொஞ்சம் நிம்மதி ஆச்சு. அப்பாவுக்கு நிலமை மோசமாயிருச்சு. அதனால் ஊருக்குப் போன் செஞ்சு பேசுனதுலே நேரமாயிருச்சுன்னும் சொன்னாங்க. மறுநாள் வெள்ளிக்கிழமை. திங்கள் கிளம்பறாங்க. ரெண்டு நாளில் ஒண்ணும் ஆகாதுன்னு ஆறுதல் சொல்றதைத் தவிர வேற என்ன செய்ய முடியும், சொல்லுங்க.


இங்கெல்லாம் ரெஸ்டாரண்ட் புக்கிங் ரெண்டு மணி நேரத்துக்குதான். இவுங்க வந்ததே லேட்டுன்றதாலே அதுக்கப்புறம் ஆர்டர் செஞ்சு, தயாரிச்சு வந்து சாப்பிட நேரம் பத்து மணி ஆயிருச்சு. ஓனர் நமக்குத் தெரிஞ்சவர்ன்றதாலே கொஞ்சம் கேட்டுக்கிட்டோம். மறுநாள்தான் கம்பெனியில் டெர்ரிக்குக் கடைசி நாள். வேலையில் சந்திக்கலாமுன்னு எங்க இவர் சொன்னார்.


மறுநாள் அதிகாலையில் சிந்தியா கிட்டே இருந்து ஃபோன். 'ரொம்ப கெட்ட நியூஸ்'ன்னு சொன்னாங்க. அவுங்க அப்பாவுக்குத்தான் எதோ ஆயிருச்சுன்னு நான் புரிஞ்சுக்கிட்டு, மேற்கொண்டு ஒண்ணும் கேக்காம, இப்பவே கிளம்பி உங்களைப் பார்க்க வர்றோம். அந்த டாக்டர் வீட்டு விலாசம் சொல்லுங்கன்னு கேட்டேன்.


'பரவாயில்லை,வரவேணாம். உடனே கிளம்ப எதாவது ஏற்பாடு செய்யணும். நான் ஏர்லைன்ஸ் கிட்டே கேட்டுருக்கேன். அநேகமா இன்னிக்குப் பகல் ப்ளைட்டுலெ இடம் கிடைச்சா நல்லது. எதுக்கும் மேற்கொண்டு தகவல் கிடைச்சா உடனே சொல்றேன்'னு சொன்னாங்க.


எங்க இவரும், டெர்ரி கிட்டே, 'கடைசி நாள் வேலைக்கு வரலைன்னாலும் பரவாயில்லை. நான் சொல்லிக்கறேன். நீங்க டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்யுங்க'ன்னார். அதே போல இவர் கம்பெனியில் போய், இந்த மாதிரி டெர்ரியின் மாமனார் இறந்து போனதாலே குழப்பமா இருக்கார். இன்னிக்கு வேலைக்கு வரலைன்னா பரவாயில்லைன்னு அறிவிச்சுட்டார். அவர் பார்ட்டிக்குப் போகாததாலே அவருக்குக் கொடுக்க வாங்கி வச்சிருந்த அன்பளிப்பை அன்னிக்குக் கொடுக்கலாமுன்னு ஒரு ஏற்பாடு இருந்துச்சாம்.


ஒம்பது மணி போல மறுபடி சிந்தியாவிடமிருந்து போன் வந்தது, 'பகல் ஒரு மணி ஃப்ளைட்டில் இடம் கிடைச்சிருச்சு'ன்னு. எத்தனை மணிக்கு அவுங்க ஏர்ப்போர்ட் போறாங்கன்னு கேட்டதும், 11 மணிக்கு அங்கே இருப்போம்'ன்னு சொன்னாங்க.நாங்க அந்த சமயத்துக்கு அங்கே வர்ரோமுன்னு சொல்லிட்டு நானும், எங்க இவரைப் போனில் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னேன். குழந்தைக்கும் ஒரு பரிசுப்பொருள் வாங்கி வச்சிருந்தேன்.


பதினோரு மணிக்கு ஏர்ப்போர்ட் போய்ச் சேர்ந்தோம். செக்கின் கவுண்ட்டர் கூடத் திறக்கலை. இவுங்களைக் காணோம். குடும்பத்துலே யாராவது கண்ணுலே படமாட்டாங்களா? அவ்வளோ கூட்டமா இங்கே இருக்கு? ப்ளைட் ஒரு மணிக்குக் கிளம்பிப் போயாச்சு. கடைசி வரை இவங்களைக் காணோம்.


வீட்டுக்குத் திரும்பி வந்து,சாப்பிட்டு விட்டு இவர் வேலைக்குப் போய்விட்டார். மூணு மணியானப்ப, ஒரு தோழி வந்தாங்க.அவுங்களுக்கும் சிந்தியாவைத் தெரியும் என்றதாலே, விவரத்தைச் சொன்னேன். அவுங்களுக்கு ஒரே ஆச்சரியம்.


எதனாலே?


காலையில் ஒம்போதரைக்குத் தோழி ஏர்ப்போர்ட் போயிருக்காங்க, சிந்தியா குடும்பத்தை வழி அனுப்ப.


"அந்த நேரத்துலெ ஏது ஃப்ளைட்?"


"இங்கிருந்து ஆக்லாந்து நகருக்குப்போய், அங்கே இருந்து இந்தியா போறாங்க."


" எமர்ஜென்ஸி கோட்டாவுலே பகல் ஃப்ளைட்டுலே இடம் கிடைச்சதுன்னு சொன்னாங்களே!"

" என்ன எமர்ஜென்ஸி? "

" அவுங்க அப்பா இறந்துட்டாருன்னு....."

" இல்லையே. யார் சொன்னா? நேத்து சாயங்காலம் நம்ம வீட்டுலே இருந்துதானே ஃபோன்லே அப்பாகிட்டே பேசுனாங்க. அதுக்கப்புறம் டிவியெல்லாம் பார்த்துட்டு எட்டுமணி போலத்தான் கிளம்பிப் போனாங்க."


" இன்னிக்குக் காலையிலெ 6 மணிக்கு 'கெட்ட செய்தி'ன்னு போனில் சொன்னாங்களே"


" ஏர்ப்போர்ட்டுலே பார்த்தப்ப ஒண்ணும் சொல்லலையே. சந்தோஷமாத்தானே இருந்தாங்க எல்லாரும்"



"திங்கள் கிழமை போக வேண்டியது, இப்படி ஆனதுனாலே ஏர்லைன்ஸ்லே கேக்கப் போறேன்னுசொன்னாங்களே. 5 டிக்கெட் கடைசி நேரத்துலே கன்ஃபர்ம் ஆகறது கஷ்டம்தானே?"


" திங்கக்கிழமையா? எப்படி? இன்னிக்குத்தானே அவுங்க போறதாப் ப்ளான். எல்லா டிக்கெட்டும் கன்ஃபர்ம்டு ஆயிருச்சே போனவாரமே "


தோழி போனவுடன், இவருக்குத் தகவலைச் சொன்னேன். இவரும் எனக்கு ஒரு புது செய்தி சொன்னார்.


டெர்ரி, தன்னுடைய கைக்கடிகாரத்தை பாத்ரூமில் மறந்து வச்சுட்டுப் போயிட்டதாகச் சொல்லி, கொண்டு வந்து கொடுத்தாராம், கம்பெனியில் வேலை செய்யும் ஒரு தொழிலாளி. அவரோட வீட்டில்தான் ஒரு வாரம் தங்கி இருந்தாங்களாம்.


அப்ப டாக்டர்.....? எந்த டாக்டர்? ஏது டாக்டர்? அப்படி யாரும் இல்லையே!!!!!!!!!!


ஏன் சிந்தியா ஏன்? எதுக்காக இத்தனை பொய்?


பின் குறிப்பு: இந்தியா போன ரெண்டு மாசத்தில் டெர்ரி இறந்துட்டார். பிள்ளைகள் பள்ளிக்கூடம்போகலை. எதோ தொழில் பட்டரையில் வேலை செய்கிறார்களாம். சிந்தியாவுக்கு மறுபடி இங்கே வரணுமாம். இங்கே யாராவது வெள்ளைக்காரரை மணமுடித்து அவர் மூலம் வர முயற்சி செய்கிறார்களாம். எல்லாம் தோழி சொன்னதுதான்.



இப்போது கானடா நாட்டுலே குடி உரிமை வாங்கிய கோவாக்காரர் ஒருத்தரைக் கல்யாணம் முடிச்சு,அங்கே போய் இருக்க ஏற்பாடு நடக்குதாம். இங்கே போலீஸ் க்ளியரன்ஸ் கிடைக்க நாங்க உதவி செய்யணுமுன்னு போனமாசம் சிந்தியா ஃபோனில் கூப்புட்டுச் சொன்னாங்க. இங்கே எல்லாமே நேர்வழிதான். நாங்க என்ன செய்ய முடியும்?


சிந்தியாவை நினைச்சால் மனசுலே எனக்கு ஆயாசமாக இருக்கும். எதுக்காக இத்தனை பொய் சிந்தியா?
----------------

அடுத்தவாரம்: காமா


நன்றி: தமிழோவியம்

20 comments:

said...

//ஏன் சிந்தியா ஏன்? எதுக்காக இத்தனை பொய்?

தனக்குத் தானே கோட்டைகள் கட்டிக் கொண்டு விதிகள் வகுத்துக் கொண்டு உலகைப் பழித்துக் கொண்டிருக்கும் சிந்தியாவுக்கு அனுதாபங்கள். நாம் என்னவென்றால் ஒருவர் ஒன்றைச் சொன்னால் அப்படியே நம்பி விடுவதையே வழக்கமாக வைத்திருக்கிறோம். இப்படித் திடீரென்று ஒரு பாத்திரம் தலை காட்டும் போது எல்லா அனுமானங்களும் நொறுங்கிப் போய் குழப்பமாகி விடுகிறது.

வளர்ந்த சூழ்நிலைகளும், கலாச்சாரமும் எதை ஏற்றுக் கொள்கின்றன என்பதில் இருக்கும் வேறுபாடுகளால் இது மாதிரி நடந்து விடுகிறது போலிருக்கிறது. அவங்க மனதில் இது எல்லாத்துக்கும் ஒரு சமாதானம் வைத்திருக்கத்தானே செய்வாங்க!

சிக்கலான உலகம் :-(

அன்புடன்,

மா சிவகுமார்

said...

வாங்க சிவகுமார்.

இது தமிழோவியத்துலே வந்தப்ப அங்கே நம்ம தேன் துளி பத்மா
சொன்னதை இங்கே கொடுத்திருக்கேன் பாருங்க.

//துளசி
சிந்தியா வெளியில் சொல்ல முடியாத ஒரு துன்பத்தில் இருக்கிறார்.
அப்படி இருப்பவர்கள் இப்படித்தான் ஏதேனும் பொய்க்காரணங்கள்
சொல்லி கொண்டே இருப்பார்கள். நமக்கே நம்பிக்கை போய்விடும்.
இதுவும் விக்டிம் நிலையில் ஒரு ஸ்டேஜ்//

எல்லாம் மனம் சார்ந்த பிரச்சனைகள்தான் போல. அவுங்க பிரச்சனையாலே ஏற்படும்
தீமை நமக்கு வந்துருதே. அவநம்பிக்கையாவே நாம் வாழ்முடியுமா?

நீங்க சொல்றதென்னவோ உண்மைதான். நாம்தான் ஒருத்தர் சொன்னா அப்படியே நம்பிடறோம்.
ரேவதியும் இதைத்தான் சொல்றாங்க.//கேட்டு எமாறுகிறோமே நம்மை சொல்லணும்//

சக மனுஷர் சொல்றதையெல்லாம் இது பொய்யா, இல்லே மெய்யான்னு ஆராய்ஞ்சு பாத்துக்கிட்டே
இருக்க முடியுதா? மொதலாவது அவுங்க பொய் சொல்வாங்கன்னு நாம நினைப்போமா? இல்லே
அப்படி பொய் சொல்ல எதாவது காரணம் இருக்கா?
பொய்யா மெய்யான்னு ஆராய்ஞ்சால்,மனுஷர் மேலே இருக்கற நம்பிக்கை போயிறாதா?

வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கிறதும் நல்லதில்லைதான். என்ன சொல்றது போங்க.
குழப்பம்தான் மிஞ்சுது.

said...

துளசி அம்மா,சிந்தியாவால் நீங்கள் பட்டபாடு புரிகிறது.உதவி செய்யப்போய் உபத்திரவம் ஆகிவிட்டது.இதுபோன்ற அனுபவங்களால்தான் புதியவர்களோடு
நட்பு கொள்ளவே பயமாய் இருக்கிறது.

அனுபவங்கள் தொடரட்டும்.நன்றி.

said...

சக மனிதர்களை நாம் சந்தேகப் படுவதே இல்லை. இது போன்ற விதிவிலக்குகள் நமது நல்ல மனத்தையே மாற்றிவிடும்..
***********************************
"குலதெய்வம்"படத்தில் எஸ்.எஸ்.ஆர் பாடுவதாக ஒரு பாட்டு
.....வேணாம் வுடுங்க
***********************************

said...

உதவி செய்வோர்க்கு உபத்திரவங்கள் ஏற்படுவதுதான் இக்கால நியதி.

said...

அடேங்கப்பா.....ஒரு பொய் ஒம்பதாயிரம் பொய்யாக் குட்டி போட்டிருக்கே! சிந்தியா நல்வழியில் சிந்தியாததால் இந்த நிலை.

said...

வாங்க துபாய் ராஜா.
நட்புன்றதும், நண்பர்கள்ன்றதும் எவ்வளவு மனோகரமான விஷயம். இப்படி ஒரு சிலருக்காகப்
பயந்து நல்ல அனுபவங்களை விடமுடியுமா? இப்படியும் சிலர்ன்னு நினைச்சுக்கிட்டு
போகவேண்டியதுதான்.

said...

சிஜி,

எங்கிருந்துதான் இப்படிப் பொருத்தமான பாட்டுங்களைப் பிடிக்கிறீங்களோ?
நல்ல ஞாபக சக்தி இருக்கு உங்களுக்கு.

said...

நவீனபாரதி வாங்க. புதுசுங்களா? எப்படி இருக்கீங்க?

ஒரு காலத்துலே நமக்கு எத்தனைபேர் உதவி செஞ்சாங்க. இப்ப இன்னும் சிலருக்கு நாம் நம்மாலான
உதவியைச் செய்யணும். அதுதானே வாழ்க்கை? இல்லையா?

said...

ராகவன்,

பொய் சொல்லறதும் ஒரு தனிக்கலை. அடுத்தவன் நம்பறமாதிரி சொல்லத் தெரியணுமே.
பத்மா சொல்றது போல அவுங்களுக்கு மனசுலெ என்ன கஷ்டமோ? யாரு கண்டா?

said...

உவ்வேக், எப்படித்தான் அவங்களுக்கு மீண்டும் மீண்டும் போயி உதவி பண்ணுனீங்களோ.

said...

கொத்ஸ்,

நாம ஒருநாளும் நன்றி மறக்கக்கூடாது இல்லையா? அதுதான். நாங்க வொர்ல்ட் ட்ரிப் போயிருந்தப்ப ( 6 வாரம்)
நம்ம வீட்டை டெர்ரிக்கு விட்டுட்டுப்போனோம். அப்ப அவர் இங்கே தனியாத்தான் இருந்தார். எதுக்கு வீட்டைப் பூட்டிட்டுப்
போகாம டெர்ரிக்குக் கொடுத்தோம்? நம்ம பூனையைப் பார்த்துக்கறதுக்காக. எங்க பூனைக்குக் கேட்டரின்னா பயம்.
அங்கே இருந்தா சரியாச் சாப்பிடாது. வீட்டுலே ஆளு இருந்தா வேளாவேளைக்கு அதுக்குச் சாப்பாடு போடுவார்.
அதுக்கும் பழகுன இடம் என்றதாலே நிம்மதியா இருக்கும்.

இப்பத்தெரியுதா? எல்லாம் ஒரு நன்றிக் கடன் தான்.

said...

என்னங்க துளசி இது,

உங்க தில்லுமுல்லு எங்க தில்லுமுல்லுன்னு இல்லாம என்ன கேரக்டர் இந்த சிந்தியா?

இந்த கேரக்டர வச்சி சினிமா எடுத்தாக்கூட யாரும் நம்பமாட்டாங்க போலருக்கு.

said...

வாங்க டிபிஆர்ஜோ.

சிந்தியா இன்னும் புரியாத புதிர்தான். நான் இந்தப் பதிவைப் போட்டுட்டு தற்செயலா
பதிவோட எண்ணிக்கையைப் பார்க்கறேன், அது 420 ன்னு சொல்லுது.

said...

//பொய்யா மெய்யான்னு ஆராய்ஞ்சால்,மனுஷர் மேலே இருக்கற நம்பிக்கை போயிறாதா?

சிந்தியாக்கள் இருப்பதால், நாம் ஒவ்வொருவரையும் சந்தேகக் கண் கொண்டே பார்க்க ஆரம்பித்து விடுவது கண்டிப்பாக எதிர்மறையில்தான் கொண்டு விடும். ஒரு தீவிரவாதி குண்டு வைத்து விட்டதால் முழு உலகமும் கட்டுப்பாடுகளுக்கு ஆளாக வேண்டியிருப்பது போல, ஒருவரின் மோசமான நடத்தை எல்லோரையும் துன்பத்தில் ஆழ்த்தி விடுகிறது.

அதற்காக நாம் மாறாமல் இருந்து விடுவதுதான் நமக்குப் பெருமை.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

வாங்க சிவகுமார்.

எனக்கும் அதுதான் மனக்குறையாக இருக்கு.

எந்தவித முன்முடிவுகளும் இல்லாமத்தான் ஒருத்தரைச் சந்திக்கிறோம்.

அதுவும் இந்தியாவை விட்டு இத்தனை தூரம் இருக்கும்போது, சகமனிதர் ஒரு இந்தியர்னு ஆனால் அதுலே வர்ற மகிழ்ச்சியின் அளவு எவ்வளவு கூடுதல்?

said...

//இந்தப் பதிவைப் போட்டுட்டு தற்செயலா
பதிவோட எண்ணிக்கையைப் பார்க்கறேன், அது 420 ன்னு சொல்லுது.//

:-(

சிந்திக்க / வியக்க வைக்கும் மக்கள்!!!!

said...

நன்மனம்,

?????????????

said...

அவசரத்துல சொல்ல வந்தத முழுசா சொல்லாம போய்ட்டேன்.

வருத்தம் - உங்க வாயால 420 னு சொல்ல வெச்சிட்டாங்களேனு

இப்படி கூட இருப்பாங்களானு //சிந்திக்க / வியக்க வைக்கும் மக்கள்!!!!//

said...

நன்மனம்,

ஐய்யய்யோ நான் அவுங்களை அப்படிச் சொல்லலை. பதிவு எண்ணிக்கை வந்ததைக்
குறிப்பிட்டேன் அவ்ளொதான்.

பத்மா சொல்றமாதிரி அவுங்களுக்கு என்ன பிரச்சனையோ தெரியலை. இதுலே நம்ம
மனசு வேற கெடுது பார்த்தீங்களா?