எஸ். ஜானகி, அதாங்க பின்னணிப்பாடகி ஜானகி தாங்க, அவுங்க எப்பவுமே ஒரேமாதிரி ப்ளவுஸ்தான் போடுறாங்க. அந்த 'நெக்' பேரு ஸ்வெட்டர் நெக்காம்.'ஹை நெக்'ன்னுகூடச் சொல்றாங்க. பேசாம 'ஜானகி நெக்'ன்னு பேரு வச்சிரலாம்.
வெள்ளைக் கலர்(?)லே டூ பை டூ ( இதுலே கூடப்பாருங்க 2 x 2 ன்னு எழுதறதாம், சொல்றப்ப டூ பை டூ வாம்)லே துணி எடுத்து வச்சுக்கிட்டேன். வீட்டுலேதான் ஏற்கெனவே வாங்குன வெள்ளை நூல்கண்டு இருக்கே.முன் ஜாக்கிரதை முத்தண்ணி. கறுப்பு,வெள்ளைன்னா எதுக்கு வேணாலும் போட்டுக்கலாமாம். அப்படி ஒரு மடத்தனமான ஐடியா!
பழைய ப்ளவுஸ் ஒண்ணைப் பிரிச்சு மேய்ஞ்சேன். சுமாராப் பிடிபட்டது. அதுலே கழுத்துதான் வேற. எனக்கு இப்ப வேண்டியது 'ஹை நெக்'. மிஸ்கிட்டே முதல் பாடம். அவுங்களே வெட்டியும் தந்தாங்க. ரொம்பக் கவனம் எடுத்துத் தைச்சேன். யார் செஞ்ச புண்ணியமோ? கரெக்ட்டா அமைஞ்சு போச்சு. அதுமட்டும் சரியா வராம இருந்திருந்தா?என்னுடைய திறமை(?)யிலே நம்பிக்கையே போயிருக்கும், எங்க இவருக்கு. அதுக்காக நான் தைய்யலையே விட்டிருப்பேனா? ஊஹூம்.... இன்னும் பத்துத் துணிகளைக் கவனமாக் கெடுத்திருப்பேன்.
இதுக்கிடையிலே, நம்ம 'காட் ப்ரதர்ஸ்' ஸா மாறிட்ட நண்பரின்( ஆமாம், 'காட் பேரண்ட்ஸ்'ன்னு இருக்கறப்ப காட்சிஸ்டர்ஸ், ப்ரதர்ஸ்ன்னும் இருக்கக்கூடாதா என்ன?) மனைவி ( காட் சிஸ்டர் இன் லா?) அருமையாத் தைக்கிற விவரமும் தெரிஞ்சது. அவுங்களுக்கு ரெண்டு பெண் குழந்தைங்க,எட்டு வயசும், அஞ்சு வயசுமா. கல்வின்னு வந்தபிறகு விட முடியுமா? அப்பப்ப அங்கேயும் படை எடுக்கறதுதான். 'ட்ரிக் ஆஃப் த ட்ரேட்' எல்லாம் அவுங்க சொல்லிக் கொடுத்ததுதான்.
அங்கே போய் வெட்டிக்கிட்டு வந்து நான் தைச்சுருவேன். மிஸ்ஸும் அப்பப்ப கைடன்ஸ்க்கு இருக்காங்களே. நம்ம மிஸ் இருக்காங்க பாருங்க, அவுங்களுக்கு ஒரு பார்ஸிக் குடும்பம் நண்பர்களாம்.அவுங்க ரொம்ப செல்வந்தர்களாம்.அடிக்கடி வீட்டுக்கு ஃபர்னிஷிங் மாத்திக்கிட்டே இருப்பாங்களாம். அவுங்க வீட்டுக் கர்ட்டன்ஸ், ட்ரேப்ஸ் எல்லாம் தைக்கறது நம்ம மிஸ்தானாம். இந்த வேலை வந்துருச்சுன்னா பத்துப் பதினைஞ்சுநாள் தினமும் காலேல 10 மணிக்குப் போயிட்டுச் சாயங்காலம் 6 மணிக்கு வந்துருவாங்களாம். சாப்பாடு, நாஷ்தா, சாய் எல்லாம் அங்கேயே தானாம். நல்ல மெஷீன் வச்சுருக்காங்களாம். இதெல்லாம் போக நாளுக்கு இவ்வளோன்னு வருமானமும் உண்டாம். எல்லாம் மேல்வரும்படி வரட்டுமுன்னு போய்வர்றதுதானாம்.
அப்புறம் ஒரு சுவாரசியமான விஷயமும் அவுங்ககிட்டே இருந்து தெரிஞ்சுகிட்டேன். அதுதான் இந்த பார்ஸிகாரர்களொட 'டவர் ஆஃப் சைலன்ஸ். எனக்கு எப்பவுமே இந்த சாவு ரொம்ப வசீகரமா இருந்துருக்கு. ச்சின்னப் பிள்ளையா இருந்த காலத்துலேயும் செத்தவங்களைப் பாக்கறதுலே பயம் இல்லை. எல்லா சாவு வீட்டுலேயும் புகுந்து புறப்பட்டு வந்து,நம்ம வீட்டு ஆளுங்களுக்குக் கதை சொல்வேன். ஒருநாள், 'தைக்கப்போறேன், உங்க வீட்டுக்கு வரமுடியாது'ன்னு சொல்லிப்போன மிஸ், திடீர்ன்னு வந்துட்டாங்க. என்னன்னு கேட்டப்ப, வேற ஒரு பார்ஸி நண்பர் குடும்பத்துலே ஒருத்தர் இறந்துட்டார். அங்கே அவுங்க( தைக்கக் கூப்புட்டு இருந்தவங்க) போறதாலே இவுங்களுக்கு ஒரு வாரத்துக்கு வேலைக்குப்போக வேணாமாம். அப்பதான் இந்த ஜனங்கள் இறந்துபோனவங்களை என்ன செய்யறாங்கன்னு சொன்னாங்க.
எல்லாரும் வெள்ளை உடுப்புதான் போட்டுக்கணுமாம். நிறைய சடங்கு, ப்ரேயர் எல்லாம் இருக்காம். வீட்டுலேயே மதகுருமாதிரி ரெண்டுபேர் வந்து எல்லாம் செய்வாங்களாம். பிணத்தைக் கட்டிப் பிடிச்சு அழுவறது கூடாதாம்.தூரமா நின்னுதான் பார்க்கணுமாம். முகத்தைத் தவிர உடம்பு முழுக்க வெள்ளைத்துணியிலே சுத்தி வச்சுருவாங்களாம்.
அப்புறம் அதுக்குன்னு உண்டான இடத்துலே கொண்டு போய் அங்கேயும் சாஸ்த்திர சம்பிரதாயங்களைச் செஞ்சுட்டு,உயரமாக் கட்டி வச்சுருக்கற மேடையிலே வைப்பாங்களாம். இது பாக்கறதுக்குக் கிணறு போல இருக்குமாம். கம்பிகம்பியா போட்டுருப்பாங்களாம். அந்தக் கம்பி மேலே பிணத்தை வச்சுட்டு வந்துருவாங்களாம். ப்ளவுஸ்க்கு ஹெம்மிங் செஞ்சுக்கிட்டே இந்தக் கதையெல்லாம் கேக்கறதுதான். மாசம் ரெண்டு தைச்சுக்கிட்டாவே ஜாஸ்திதான். ( இங்கே வந்தபிறகு ஒரு புத்தகம் க்ளைவ் ஜேம்ஸ் எழுதுன 'த சில்வர் காஸல்' படிச்சப்ப மிஸ் சொன்னதெல்லாம் ஒருதடவை மனசுக்குள்ளே வந்து போச்சு)
நமக்கு ஃபாரீன் யோகம் வந்துருச்சு. போற இடத்தைப் பத்தின அறிவு ஒண்ணும் இல்லை. யார்கிட்டேயாவது கேக்கலாமுன்னாலும் இது ரொம்பக் கேள்விப்படாத இடமா இருக்கு. ஒரே ஒருத்தர்தான் இதைப் பத்திப் பாடியிருக்கார். அவர்கிட்டேயும் மேல்விவரம் கேக்க முடியாது. அவர் 'மேலே போய்' வருஷம் நிறைய ஆயிருச்சு. 'கரும்புத் தோட்டத்திலே'ன்னு அவர் எழுதிவச்ச கவிதையை மட்டும் படிச்சுட்டு, மனுஷனுக்குத் தைரியமே பெரிய துணை'ன்னு கிளம்பி வந்துட்டோம்.
நாட்டுக்குப் பேர் ஃபிஜித் தீவுகள். நம்ம எம்ப்ளாயரே துணிகள் வியாபாரமும் செஞ்சுக்கிட்டு இருந்ததாலே நிறையப் புடவைகள் பரிசாக் கிடைச்சது. இப்ப அதுக்கெல்லாம் மேட்சிங் ப்ளவுஸ் வேணுமே! ஜப்பானிலிருந்து வர்ற 'ரூபி க்வீன்' புடவைகளுக்கு வெறும் வெள்ளையும் கறுப்பும் போட்டுச் சமாளிக்க முடியாது. ரொம்ப மெலீசான துணிகளாச்சே.
கடைகளைச் சுத்திப் பார்த்தப்ப, இங்கே பாலியஸ்ட்டர் துணிகளைத்தான் எல்லாரும் ப்ளவுஸுக்கு வாங்கறாங்களாம்.இங்கே இருக்கற சூட்டுக்கு எப்படித்தான் இதைப் போட்டுக்கறாங்களோ? அப்பப்பா.......
இன்னும் கொஞ்சம் சுத்துனதும் ஒரு கடையில் நம்ம ரெண்டுங்கீழ் ரெண்டு இருந்தது. விலையும் மலிவுதான். மீட்டர்1 டாலர். பாலியஸ்ட்டரும் இதே விலைதான். நமக்கு( அப்ப) 65 செ.மீ போதும். அதனாலே ஒரு சிக்ஸ்ட்டிஃபைவ் வாங்கிக்கலாமுன்னா, அங்கே இப்படி 65, 75ன்னு கொடுக்கற வழக்கம் இல்லையாம். அரைமீட்டர், ஒரு மீட்டர்னுதான்வாங்கிக்கணுமாம். சரி 1 மீட்டர். தாராஆஆஆஆஆஆளமாத் தச்சுக்கலாம். வாங்கியாச்சு. இனி டெய்லரைப் பிடிக்கணும்.
மயக்கமே வந்துருச்சு, தைய்யக் கூலியைக் கேட்டதும். ப்ளவுஸுக்கு 10 டாலர். ஹம்மா..... இதெல்லாம் நாம் வந்து இறங்குன ரெண்டு வாரத்துக்குள்ளேயே. இந்தியக் கணக்குலே பெருக்கல் எல்லாம் போட்டுப் பார்த்து மனசொடிஞ்சு போச்சு.
பேசாம நாமே தச்சுக்க வேண்டியதுதான். ஆனா வெட்டித்தரவேண்டிய காட் ஸிஸ் இன் லா இந்தியாவுலேல்லெ இருக்காங்க. 'இந்தக் கடிதத்தைத் தந்தியாகப் பாவித்து, என்னுடைய அளவுக்கான பேப்பர் கட்டிங் ஒன்றை உடனே அனுப்பி வைக்கவும்'ன்னு லெட்டர் அனுப்புனேன்.
இது போன சுருக்குலே நம்முடைய நிலையைச் சரியாப் புரிஞ்சுக்கிட்ட காட் ஸிஸ் இன் லா பேப்பர் கட்டிங்கை அனுப்பிட்டாங்க. இதுக்கிடையிலே மெஷீன் ஒன்னு வேணுமேன்னு தேடுனதுலே நம்ம அதிர்ஷ்டம் நல்லாவே வேலை செஞ்சது. நம்ம கம்பெனி( எங்க இவர் வேலை செய்யற கம்பெனி நம்மதுதானேங்க?) பாகஸ்த்தர் கடையிலே தைய்யல் மெஷீன் விக்கறாங்களாம். அதனாலே அடக்க விலையிலேயே நமக்கு ஒண்ணு கிடைச்சிருச்சு.
அப்புறம் என்ன? தையலோ தைய்யல்தான்.
Thursday, August 24, 2006
ரெடிமேட் பகுதி 12
Posted by துளசி கோபால் at 8/24/2006 09:26:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
துளசி, படிக்கப் படிக்க பிரமிப்பா இருக்கு,.
பயணீர்னு (பயணங்கள் செய்வதால்) உங்களுக்கு ஒரு பட்டம் கொடுக்கிறேன்.
பயனீர்னும் வைச்சுக்கலாம்.
பார்சீஸ் கிட்டத்தட்ட நேட்டிவ் அமெரிகன்ஸ் போலனு யாரொ சொன்னாங்க.
அப்புறம் என்ன ஆச்சு?:-0)))
வல்லி,
பட்டத்துக்கு நன்றி.
சூடிக்கொண்டேன்:-))))
தேவைதான் புத்தாக்கங்களின் தாய்
necessity is the mother of inventions -சரிதானா?
தவிர்க்க முடியா அவசியம் ஏற்பட்டா ஒரு வழியக் கண்டுபிடிச்ச்சிடுவோம்
சிஜி,
அதே அதே சபாபதே :-))))
//பார்ஸிகாரர்களொட 'டவர் ஆஃப் சைலன்ஸ்//
நினைச்சுப்பார்த்தா பிரமிப்பான விசயம்.
கண்தானம் பண்ணுவதற்கே நாம தயங்குகின்றோம். ஆனா இந்த பார்ஸிகாரர்கள் முழு உடலையே கழுகுக்கு இறையாக்குவது பிரமிப்பான விசயம் அல்லவா?
வாங்க கலை அரசன்.
இப்ப சமீபகாலமா கழுகுகளோட எண்ணிக்கை வெகுவாக் குறைஞ்சு போச்சாம். சுற்றுப்புறச்சூழல்
காரணமுன்னு சொல்றாங்க.
பார்ஸிகளுக்கு நெருப்பு தெய்வமுன்னு சொன்னாலும் தீயில் இறந்தவர்களை எரிக்கறது வழக்கம் இல்லை.
ஆனால், இந்த 'டவர்'களில் ஸோலார் பேனல்ஸ் வச்சு எரியூட்டற மாதிரி மாற்றி இருக்காங்களாம்.
கழுகும் வராமப்போனா, சவம் அங்கேயே கிடக்கும்தானே?(-:
அக்கம்பக்கம் வசிப்பவர்களுக்கும் சங்கடம் வருதில்லையா?
டவர் ஆப் சைலன்ஸ் மும்பைல இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன், தென்னிந்தியாலயும் இருக்கா இல்லை நீங்க மும்பைல இருக்கும் போது நடந்த நிகழ்ச்சியா?
வாங்க WA.
தென்னிந்தியாவுலே இது கிடையாது. மொத்தமே 4 தான் இருக்கு இந்தியாவுலே.
நான் பூனாவுலே இருந்தபோது தெரிஞ்சுக்கிட்டது இந்த விஷயம் எல்லாம்.
அங்கேயும் ஒண்ணு இருக்கு.
Post a Comment