Monday, January 09, 2006

ஆண்டொன்று போனால் வயது....?

ஐய்ய..... அழகு அழகுன்னு சொல்றதெல்லாம் வெளித்தோலை வச்சுத்தான். தோலுக்குக் கீழே எல்லாம் ரத்தமும் சதையும்ஒண்ணுதான்... இப்படிப் பலர் சொல்லக்கேட்டு இருக்கேன். இப்ப ஒரு புது ஆராய்ச்சி செஞ்சுக் கண்டுபிடிச்சிருக்காங்க,'அழகுன்றது எலும்பு வரை'ன்னு!


சொன்னது பெரிய இடம். அமெரிக்காவுலே இருக்கற ப்ளாஸ்டிக் சர்ஜன் மாநாடு.
என்னதான் சொல்றாங்க, பாப்போமுன்னு கொஞ்சம் உள்ளார நுழைஞ்சு படிச்சால்.... அட!


நம்ம வலை டாக்டருங்கதான் இதெல்லாம் சரியான்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லணும்.


நம்ம ஊர்லே ரொம்பவே வயசான தாத்தா, பாட்டிங்க முகங்களை அப்படியே மனசுக்குள்ளே கொண்டுவாங்க.கன்னத்துலே குழி விழுந்து, தோலெல்லாம் சுருங்கி, புருவமுடியெல்லாம் நரைச்சு, சிலருக்கு அதெல்லாம் கொட்டி, முகம் கொஞ்சம் நீண்டு....... எப்படியெல்லாம் போயிருது (-:


இவ்வளோ என்னாத்துக்கு? நம்ம வீட்டுலே பழைய ஃபோட்டோங்க எதுனா இருந்தா எடுத்துப் பாருங்க. நாற்காலியிலே விறைப்பா உக்காந்துக்கிட்டு இருக்கற ஆம்பளைக்குப் பின்னாலே நாற்காலியைத்தொட்டுக்கிட்டு நிக்கற அம்மாவைப் பாருங்க. எவ்வளோ அழகு.கறுப்பு வெள்ளைப் படமானாக்கூட, திருத்தமாத் தெரியுற மூக்கும் கண்ணும் அடடடா.....


'இதான் உங்க/எங்க தாத்தா பாட்டி'ன்னு சொன்னதும், நம்பிக்கையில்லாம இன்னும் உத்துப் பார்ப்போம்.அடுத்தபார்வை, அங்கே கட்டில்லே உக்காந்து கண்ணைச் சுருக்கிக்கிட்டு டிவியோ, எதையோ பாக்குற பாட்டி/தாத்தா மேலேதாவும். ச்சின்ன வயசுலே எவ்வளோ அழகா இருந்திருக்காங்க. இப்ப எப்படிச் சிரிக்காம இருக்கும்போதே கன்னத்துலே இப்படிக் குழி விழுது! குழியா அது? 'டொக்கு' ஹ....ங்


வீட்டுலே தாத்தா பாட்டி படமில்லையா? டோண்ட் வொர்ரி. சினிமா எதுக்கு இருக்கு? பழைய படங்க எதுவாச்சும்கிடைக்காமப்போயிருமா என்ன? சிவாஜி, ஜெமினி, பானுமதி, பத்மினின்னு வர்றதை விட்டுராதீங்க. அன்றும் இன்றும்கவனிச்சிட்டு இப்பச் சொல்லுங்க.


மூஞ்சுலேயும், கன்னப் பகுதியிலேயும் சதை கொறைஞ்சு போச்சுன்னாலும், அங்கே இருக்கற கொழுப்பு(!) வடிஞ்சாலும் முகச் சுருக்கம் வந்துரும்.மேலும் புவி ஈர்ப்பும் காரணமுன்னு நம்பிக்கிட்டு இருந்தவங்கதான் பலரும். பெருமூச்சு விட்டுக்கிட்டே சொல்றது 'வயசாச்சுன்னா இப்படித்தான்'!ஆமாம், வயசாச்சுன்னா ஏன் இப்படி ஆகணும்? அதான் சொன்னேனே, கண்டுபிடிச்சுட்டாங்கன்னு, எலும்புதான்காரணமாம். அது பாருங்க, எலும்பு வயசாக ஆகக் கொஞ்சம் கொஞ்சமா(contourக்கு தமிழ்லே என்ன சொல்லணும்?) உருமாறுதாம்.


இயற்கையோட பாரபட்சத்தையும் பாருங்க. ஆம்பளைங்களைவிட பொம்பளைங்களுக்கு இது சீக்கிரமா ஏற்படுதாம்.பொம்பளைங்களுக்கு எப்பவும் அவசரம்தான். 'பொண்ணு வளர்த்தியோ, புடலங்கா வளர்த்தியோ'ன்னு திடுதிடுன்னுவளர்ந்துரணும், அவசரக் குடுக்கைங்க. இப்ப என்னன்னா உணவுப் பழக்கங்கள் மாறிடுச்சு, ஃபாஸ்ட் புட் கலாச்சாரமுன்னு சொல்லி ரொம்பச் சின்னவயசுலேயே பத்து, பதினொரு வயசுலேயே ஹார்மோன் மாற்றமெல்லாம் வேகவேகமா நடந்து 'பெரிய புள்ளை'யா வேற ஆயிருதுங்க.


16 வயசுப் பொண்ணுக்கு இருக்கற மெச்சூரிட்டி( உடம்புலேயும் சரி, மனசுலேயும் சரி) 16 வயசுப் பையனுக்குஇருக்கறதில்லை. பையனுங்க நின்னு நிதானமாத்தான் வளர்றாங்க. இது சரியான்னு மகனரணி சொல்லட்டும்,கேட்டுக்கறேன்.


அம்பது வயசு ஆம்பளை முகத்துலே அவ்வளவா மாற்றம் தெரியறது இல்லை, ஆனா அதே அம்பது வயசு பொம்பளை....?'அங்கிள் அப்படியே இருக்கார், நீங்கதான் ஆண்ட்டி ரொம்ப மாறிட்டீங்க. நம்பவே முடியலை இது நீங்கன்னு'சொல்ற வயசுப் பசங்ககிட்டே,அப்படியான்னு மனசுலே கறுவிக்கிட்டே, 'இது நான் இல்லை. அங்கிளோட முதல்மனைவி'ன்னு சொல்ற நிலையும் வந்ததே(-:


கரைஞ்சு போய்க்கிட்டு இருக்கற எலும்புமேலெ பழியைப் போட்டுட்டு, 'கெட்டிங் ஓல்டு க்ரேஸ்ஃபுல்லி'ன்னு ஜபிச்சுக்கிட்டேசூப்பர்மார்க்கெட்டுக்குப் போனா அங்கே 'வயசைக் குறைச்சுக் காட்டுமுன்னு ஏஜ் டிஃபையிங் க்ரீம்' வித்துக்கிட்டுஇருக்காங்க. 'அம்பதை இருவத்தஞ்சாக் காட்டுமோ'ன்னு நினைச்சுக்கிட்டு அதோட விலையைப் பாத்தா, முப்பது
டாலராம், வெறும் அம்பதே அம்பது மில்லிக்கு!


வாழ்க்கையிலே ஒருதடவை வாங்குனாப் போதுமா? வாழ்நாள் முழுசும் வாங்கிக்கிட்டே இருக்கணுமாமே.


போச்சுரா, இதுக்குச் செலவு பண்ணறதைக் கணக்குப் பார்த்தா அதிர்ச்சியிலேயே அம்பது, நூறாப் போயிராதா?அட... வயசைச் சொல்றேங்க.


பேசாம ஆப்பிரிக்க நாட்டு சொலவடை ஒண்ணு இருக்காமே 'போலீ போலீ'(polee polee)ன்னு. அதைச் சொல்லிக்கிட்டேவந்தேன்.


ஊர்வசி ஊர்வசி 'போலீ போலீ' ஊர்வசி. அதான், அதுவேதான் அர்த்தம்:-)

18 comments:

said...

எங்கள் சேச்சிக்கு இன்று பிறந்த நாளோ???

said...

//'வயசைக் குறைச்சுக் காட்டுமுன்னு ஏஜ் டிஃபையிங் க்ரீம்' வித்துக்கிட்டு இருக்காங்க.//

அப்பிடியே இளநரைக்கும் ஏதாச்சும் "நரை டிஃபையிங் க்ரீம்/மூஸ்" விக்கிறாங்களான்னு பாக்கணும்!! ;O)

said...

டி ராஜ்,

நாமதான் தினம் பிறக்குறோமே! :-)

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

வாழ்த்துச் சொல்ல நினைச்சீங்கன்னா, அப்படியே எடுத்து வையுங்க. அடுத்த மாசத்துக்காச்சு.

said...

இள நரையா?

முது நரைக்கே இப்ப இளநரைன்னு பேர் மாத்திட்டாங்களாமே:-)

said...

இருக்கும் இருக்கும்.. young at heartங்கறதை symbolicஆ சொல்றாங்களாருக்கும்!!!

மு.பி.கு: ஸ்மைலி போடல்ல!!

said...

ஆகா! எனக்குத் தேவையில்லாம பிசிராந்தையார் நினைவுக்கு வர்ராரு டீச்சர்.

போலீ போலீ போலீ தான் பெஸ்ட் பாலிசி.

said...

+ :cool:

said...

'அம்பதை இருவத்தஞ்சாக் காட்டுமோ'ன்னு நினைச்சுக்கிட்டு அதோட விலையைப் பாத்தா, முப்பது
டாலராம், வெறும் அம்பதே அம்பது மில்லிக்கு!//

அடேங்கப்பா 50% வயசு குறைச்சிக் காமிக்குதுன்னா விலையை எல்லாம் பாக்கக்கூடாதுங்க துளசி. வாங்கி பூசிக்க வேண்டியதுதான்.

அப்புறம் ஒன்னு ஆண்களுக்கு முடி விழுந்து சொட்டையாயிருதே அது பெண்களுக்கு வந்தா.. கற்பனை பண்ணி பாக்கவே முடியல இல்ல? பெண்களுக்கிருக்கா மாதிரி சவுரி முடி வசதி ஆண்களுக்கில்லையே..

அதுக்கு ஏதாச்சும் க்ரீம் இருக்கா டைய தவிர..

என்னமோ போங்க.. மூஞ்சில சுருக்கம், தலையில முடி.. ரொம்ப முக்கியமான கவலை..

said...

ராகவன், சிங்.செயகுமார்

நன்றி.

டிபிஆர்.ஜோ,

ஏன் பெண்களுக்கும் சொட்டை விழுமே! ஒண்ணு கோபமா வீசி எறியுற பாத்திர பண்டங்களிலே,
இன்னொண்ணு நிஜமாவே தலையிலே. நம்புங்க. அதான் அலொப்பீஸியான்னு சொல்றாங்களே.
சரிதானே டாக்ட்டர்ஸ்?

அது போட்டும். சவுரி இல்லாட்டா என்ன , அதான் 'விக்' இருக்கே! அது போதாதா?

நம்ம நடிகர்களையெல்லாம் 'விக்' இல்லாமக் கற்பனை செஞ்சு பாருங்க:-)

நேரில் பார்த்தால் அடையாளம் தெரியுங்கறீங்க?

சரி, நியூஸியிலே இருந்து உங்களுக்கும் 'விக்' வாங்கிறலாமா? :-)))))

said...

I have featured you in Desipundit

said...

அடேங்கப்பா....டீச்சர் பண்டிட்டாயிட்டாங்க போல. பாராட்டுகள் டீச்சர்.

said...

Hi Ragavan,

yours looks nice too. I should keep you in the list, expect yours very soon (in a good way).

this is to the readers (forgive me for using your site, thulasi-akka,)
I have not read many good tamil blogs. I would really be grateful if you could send me your url to premalatha_balan [@]yahoo [.] co [.] uk, if you would like to be featured. Also, please use the hat-tip option in Desipundit if you like a particular post and would like to see it featured in DP.

Thanks.
Premalatha

(again, please forgive me for using your site for this.).

said...

பல் கொட்டுவதுதானே., முகம் 'டொக்' விழுவதற்கு காரணம்?

said...

ஆசை கவலை யில்லாமல் இருந்தால் என்றும் இளமைதான்

said...

polee..polee..ஹீ..ஹீ..

said...

ராகவன்,

டீச்சர் கூடவே நீங்களும் அசிஸ்டண்ட் பண்டிட் ஆகறீங்க, சரியா? உண்மையைச் சொன்னா
உங்க ஆன்மீகப் பதிவுகளை அவுங்க முதல்லே படிச்சிருக்கணும். நான் உங்க ட்ரைய்னீ பண்டிட்டா
ஆகியிருக்கணும். ஹூம்.... எல்லாம் காலம். அதுசரி, இதென்ன தேசிபண்டிட்?

said...

ப்ரேமலதா,

நன்றிங்க.

ஏங்க, நீங்க இங்கிலாந்திலே இருக்கீங்களா? அப்படியே பொடிநடையா டவர் ப்ரிட்ஜ் வரை போனீங்கன்னா,
அங்கே ஏகப்பட்ட 'முடிகள்' அதாங்க கிரீடங்கள் பார்வைக்கு வச்சிருக்காங்களே. அங்கே இருந்து ' நல்லதா'
ஒண்ணை எடுத்துவந்து சூட்டியிருக்கலாமுல்லே? இப்படி 'முடிசூடா அக்கா'ன்னுட்டீங்களே:-))))))
( போச்சு, க்ரீடம் கிடைச்சிருக்க வேண்டிய ச்சான்ஸ் ஜஸ்ட் மிஸ்டு)

//(again, please forgive me for using your site for this.).//

ஆமாம், எதுக்கு இப்படி? நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எதுவுமே தப்பில்லே.

said...

மரம்,

அதுவும் ஒரு காரணம்தான். ஆனா பொய்ப்பல் செட் கட்டிக்கலாம். பொய் எலும்பு வச்சுக்க முடியுமோ?
இப்ப ப்ளாஸ்டிக் சர்ஜன்கள் எல்லாம் சேர்ந்து ஆராய்ஞ்சு, அதையும் செய்ய ஆரம்பிச்சிருக்காங்களாமே!

என்னார்,

நீங்க சொன்னது ரொம்பச் சரி. என்றும் இளமை மனசுக்குத்தான்.ஆனா இந்த உடம்பு சொன்ன பேச்சு கேக்காது.

தருமி,

polee..polee குரூப்புலே சேர்ந்துட்டீங்கல்லே, இனி 'ஹக்கூன்னா மட்டாட்டா' தான்:-)