கை ஒடிஞ்ச மாதிரின்னு சொல்வாங்களே, அதேதான்! நமக்கு ஒரு புது மைக்ரோவேவ் அடுப்பு வாங்கணும்!
ஏன் இத்தனை நாள் வச்சிருந்ததுக்கு என்ன கேடு? ஏன் புதுசா ஒண்ணு?
ஹி, ஹி.. அது ஒண்ணும் இல்லே! மகள் தனிக்குடித்தனம் போயிட்டா. அவளுக்கு ஒரு மைக்ரோவேவ்
வேணுமாம்.
ரெண்டு வாரமா இங்கெ இருக்கற சாமான்களை அவ எடுத்துகிட்டுப் போறதும், அதுக்குப் பதிலா நான்
புதுசு வாங்கறதுமா நடந்துகிட்டு இருக்கு! அந்தக் கணக்குலே இப்ப மைக்ரோவேவ்!
ஐய்ய, புதுசைப் புள்ளைக்குக் கொடுக்காம பழசையாக் கொடுக்கறது?
இப்ப என்ன, கலியாணம் முடிஞ்சாத் தனிக்குடித்தனம்? ச்சும்மா ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்துகிட்டு
ஃப்ளாட் எடுத்துத் தங்கறதுதானே? எல்லாம் இது போதும். ( ஆகி வந்த பொருளுங்க!)
என்ன? கல்யாணம் ஆகலையா? அப்ப ஏன் தனிக்குடித்தனம்?
'கிளிக்கு ரெக்கை முளைச்சிடுத்து!!!! ஆத்தைவிட்டுப் பறந்து போயிடுத்து!!!!!'
இங்கெல்லாம், 20 வயசு ஆயிருச்சுன்னா, அப்பா, அம்மாகூட இருக்கறது கேவலமாம்! ஹ்ங்ங்..
அதனாலே இந்தப் பசங்க ( பொட்டைப் புள்ளைங்களும் சரி, ஆம்புளைப்புள்ளைங்களும் சரி) வேற வீடு பார்த்துக்கிட்டுப்
போகுதுங்க! தனியாப் போனா வாடகை கட்டுப்படி ஆகாதுல்லே! அதனாலெ ஃப்ளாட்டிங்!
மூணு, நாலு பேராச் சேர்ந்துக்கிட்டு வசிக்கறது. ஆளுக்கு ஒரு நாள் சமையல், பாத்திரம் கழுவறதுன்னு! ஒரு விதத்திலே
நல்லதுதான்! நம்மகூட இருக்கறப்ப காஃபி குடிச்ச டம்ப்ளரைக் கூட எடுத்து 'ஸிங்'குலே போட முடியாது! அங்கே பறந்து
பறந்து வேலை செய்யுது! எல்லாம் நன்மைக்கே!
இதுலே பாருங்க, ஒரு 'இன்ட்ரஸ்ட்' ஆன விஷயம், ஆம்புளைப் பசங்க அவ்வளவா ஃப்ளாட்டிங் போறதில்லே. மகளிர்தான்
இந்த அட்டகாசம்! அட, வெளியூர்லே படிப்புன்னாக்கூட ப்ரவாயில்லே. அடுத்த தெருவிலே இருக்கு வீடு! கொஞ்சம் 'கத்திக்
கூப்பிட்டா' கேக்கற தூரம்தான்!
எல்லாப்பசங்களும், அவுங்க அவுங்க வீட்டுலே இருந்து சாமான் கொண்டாருதுங்க. நம்ம பொண்ணு மைக்ரோவேவ்!
இப்படித்தான் எல்லா அம்மாங்களும் வீட்டுச் சாமான்களை 'அப் க்ரேடு' செஞ்சுக்கறது!
நான் கடை கடையா விலை, மற்றும் விவரம் கேக்கறதுக்குப் போனேன். இப்ப 'கிறிஸ்மஸ் சேல்' வேற நடக்குதே!
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், உள்ளேயும், வெளியேயுமா ஒண்ணு இருக்கு. அளவும் நமக்குத் தகுந்த மாதிரிதான்! விலையும் ஓக்கே!
வாங்கிட்டு வந்தாச்சு! வர வழியிலேயே மகளுக்கு ஃபோன் போட்டு, விஷயத்தைச் சொன்னேன். நாங்க வீடு வந்து சேர்றதுக்குள்ளே
மகள் இங்கே 'ஆஜர்!'
உடனே எடுத்துகிட்டு இடத்தைக் காலி செஞ்சுட்டா! புதுசைத் திறந்து வெளியே எடுத்து அழகை ரசிச்சேன்! அட்டகாசமா இருக்கு!
எனக்கு 'எவர்சில்வர்' ரொம்பப் பிடிக்கும்! எது பிடிக்காதுன்னு கேட்டுறாதீங்க! எனக்கு எல்லாமே பிடிக்கும்! வேணுன்னா எது
ரொம்ப, எது கொஞ்சம்ன்னு கேக்கலாம்!
எவர்சில்வர்லே இன்னும் புடவை வரலேல்ல? இல்லெ, எனக்குத் தெரியாம வந்திருச்சா?
மின்சார இணப்புக் கொடுத்து சரியா வேலை செய்யுதான்னு பார்த்தேன். அப்பத்தான் தெரிஞ்சது, இதுலே நிறைய 'ஆட்டோமேட்டிக்
குக்கிங்' வசதி இருந்தாலும், மேனுவல் ஆபரேஷன்'லே ச்சும்மா ரெண்டு 'ஸ்டேஜ் குக்கிங்'தான் இருக்கு!
ஐய்யய்யோ, நமக்கு வேணுங்கறது 3 ஸ்டேஜ் குக்கிங் ஆச்சே!
ஆட்டோமாட்டிக்கா சமைக்குதுன்னாலும், அது பண்ணற லொள்ளு இருக்கே! கொஞ்ச நஞ்சமா? கொஞ்சநேரம் சமைக்கும். அப்புறம்
கூப்பிடும். எதுக்கு? 'செக்'செய்யணுமாம்! அப்புறம் ஸ்டார்ட் அமுக்கணும். இன்னொரு கூப்பாடு! மூடி போடணுமாம்!
இதுலேயேயே 'மோர் இல்லேன்னா தயிர்.ச்ச்சீச்சீ... மோர் இல்லாட்டா லெஸ் சோறு சரியா வேகலேன்னா இன்னும் கொஞ்சநேரம்
கூடுதலா வேகவச்சுக் கொடுக்குமாம்!
இந்த மாதிரி அடுப்புகிட்டே நின்னுகிட்டே அது சொல்றதுக்கெல்லாம் ஆட முடியாது! எனக்குத் தேவை 3 நிலை! அரிசியைக் கழுவி
அதுக்குன்னு இருக்கற மைக்ரோவேவ் ரைஸ் குக்கர்லே போட்டு, 5 நிமிஷம் ஃபுல் பவர், 5 நிமிஷம் மீடியம் ஹை, 10 நிமிஷம் மீடியம்.
ஆச்சு சோறு!
வெளியே ஓடுற அவசரத்துலே இதை மைக்ரோவேவ் அடுப்புலே கடாசி, மெமரிலே வச்சிருக்கற நம்பரை போட்டோமா, போனோமான்னு
இருக்கணும். திரும்பி வந்தா 'சோறு' ரெடி!
இது மட்டுமா! அஞ்சு நிமிசக் குக்கிங், ஊற வச்ச பருப்பைக் கிள்ளுப் பதமா வேகவைக்க ( பொரியலுக்குப் போட)அப்புறம் அப்பப்ப
காஃபி, டீன்னு இப்படி பலவிதம் இருக்கே!
இது சரிப்படாதுன்னு, மறுநாளே திருப்பிக் கொடுத்துட்டு, நமக்கு வேணுங்கற மூணு நிலை வாங்கலாம்ன்னு போனா, விற்பனைப் பிரிவு
பெண்மணி, 'எனக்கு இந்த மாதிரி 3 ஸ்டேஜ் இருக்குன்னு தெரியாது. எல்லா புஸ்தகமும் இருக்கு. நீங்களே பாருங்க'ன்னு சொல்லிட்டாங்க.
அப்படியே இதுலெ சமையல் செஞ்சீங்களான்னு கேட்டாங்க. 'சமையல் செய்ய இது தோது இல்லேன்னுதானே திருப்பித்தரேன்'னு
சொன்னேன்.
அப்புறம் ஒரு அடுப்பு கிடைச்சது! புஸ்தகத்துலெதான்! இங்கே, எங்க 'வேர்ஹவுஸ்'லே அது இருக்கான்னு பார்த்துட்டு உங்களை ஃபோன்லே
கூப்பிடறேன்னு சொன்னாங்க.
"அப்படி இருந்தா நாளைக்கு வந்து எடுத்துக்கட்டுமா?"
" இருக்கான்னு தெரியாது. இல்லைன்னா வேற இடத்துலே இருந்து வரவழைக்கணும். அதுக்கு நாலைஞ்சு நாள் ஆகும்"
" ஐய்யோ! நான் எப்படி உயிர்வாழறது? தினமும் 'டேக் அவே'தானா?"
" வேற அடுப்பு இருக்குல்லே?"
" இல்லையே!" உண்மையைச் சொல்ற 'பாவனை'யைக் கஷ்டப்பட்டு முகத்துலே கொண்டுவர முயற்சிக்கிறேன்!
இப்போது அந்தப் பெண்ணின் முகத்திலும் ஒரு சிரிப்பு. " இங்கேயிருந்துதானே ஒரு கேஸ் அடுப்பு முந்தி வாங்கியிருக்கீங்க. கம்ப்யூட்டர்
சொல்லுதே!"
" மைக்ரோவேவ் இல்லைன்னா எனக்கு நிஜமாவே கஷ்டம்தான்!"
"அப்ப ஒண்ணு செய்யறேன். உங்ககிட்டே வேற அடுப்பே கிடையாது.உடனே கொண்டுவந்து தரணும்ன்னு ஒருவரி அந்த ஆர்டர்லே
எழுதறேன். உடனே கவனிப்பாங்க!"
"அதுசரி, அந்த திருப்பிக் கொடுத்த அடுப்பிலே ஒண்ணுமே சமைக்கலையா?"
"ஒண்ணும் சமைச்ச ஞாபகம் இல்லையே. ஏன் கேக்கறீங்க?"
"இப்ப அதை மறுபடி சரியா பேக் பண்ணின ஆளு, அதுலே 'ஸ்பைஸ்'வாசனை வருதுன்னு சொன்னாரு"
" அந்த வாசனை என் மேலே வருதோ என்னமோ? சரி. நாளைக்கு ஃபோனை எதிர்பார்ப்பேன்"
வீட்டுக்கு வந்தா, என்னமோ கை ஒடிஞ்சது போல வேலையே ஓடலை! காஃபிக்குப் பால் காய்ச்சி, அந்தப் பாத்திரத்தை வரட்டு, வரட்டுன்னு
தேய்க்கும்படி ஆச்சு!
இதுக்கு நடுவிலெ நேத்து என்னத்தைச் சமைச்சோம் ன்னு மண்டைக்குள்ளே ஒரே குடைச்சல்!
சரி, இன்னும் மத்த கடைகளிலே அந்தப் புஸ்தகத்துலே போட்டிருந்த மாடல் இருக்கான்னு பார்க்கலாம்ன்னு இன்னோரு ரவுண்ட் போனோம்.
ஆஹா! ஒரு கடையிலே ஆப்டுக்கிச்சு! அதைத் திறந்து பார்த்து, அதுக்குள்ளெ இருக்கற விவரங்கள் அடங்கின பேப்பருங்களையெல்லாம்
விலாவரியாப் படிச்சுட்டு அதுதான் தேவைன்னு முடிவாயிடுச்சு!ஆனா இந்த மாடல் விலை கூடுதல். ஏற்கெனவே கொடுத்திருந்த காசைவிட இன்னும்
கூடுதல் தரணும்.
மறுபடி, வாங்கின கடைக்கே வந்து அந்த ஆர்டரை ரீ கன்ஃபர்ம் செஞ்சுட்டு வந்தோம். கொஞ்சம் பேரமும் பண்ணினேன். அதுக்கு பலனும்
கிடைச்சது. ஒரு 20 டாலர் கம்மி பண்ணாங்க!
வீட்டுக்கு வரும்போது, நினைச்சுகிட்டே வரேன். 'இந்த நவீன சாதனங்கள் இல்லாம இருக்கவே முடியலையே. ஒரு காலத்துலே இதெல்லாம்
இல்லாமதானே இருந்தோம். விஞ்ஞானம் வளர வளர மனுஷன் அதுக்கு அடிமையா ஆயிட்டானே! இது ரொம்ப மோசம்!'
இதுலே 'நம்ம ஆச்சிமகன்' வேற நுண்ணலை அடுப்புங்களோட ஆபத்தைப் பத்தி ரெண்டு மூணு பதிவு போட்டிருந்தார். அதையெல்லாம்
படிச்சும்,'திருந்தாத ஜன்மம்' யாரு? எல்லாம் நாந்தான்! வேற யாரு?
இன்னைக்கு ஏதாவது சுலபமா சமைக்கணுமே! என்ன காய் இருக்குன்னு ஃப்ரிஜ்ஜைத் திறந்து பாக்கறேன். மேல்தட்டுலே ஒரு பாத்திரத்துலே
என்னமோ மூடி வச்சிருக்கு. அப்பத்தான் ஞாபகம் வருது எப்படி 'ஸ்பைஸ்' வாசனை மைக்ரோவேவ் அடுப்புலே வந்திருக்கும்ன்னு.
நேத்து ராத்திரி, புளியோதரையை 30 விநாடி சூடு செஞ்சு சாப்பிட்டேனே!
மறுநாள் அடுப்பு வந்திருச்சான்னு கேட்டு, வந்துருச்சுன்னதும் உடனே பாய்ஞ்சு போயிக் கொண்டுவந்துட்டேன்!
( சின்னக் குரலிலெ விற்பனைப் பிரிவு பெண்கிட்டே சொன்னேன், புளி சாதம் சுடவச்சதை! அது ஜஸ்ட் ரீ ஹீட்டுதான்! சமையல் இல்லேன்னு!)
*****************************************************************************
Friday, December 17, 2004
அலை அலை நுண்ணலை!!!!!
Posted by துளசி கோபால் at 12/17/2004 09:25:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//நம்மகூட இருக்கறப்ப காஃபி குடிச்ச டம்ப்ளரைக் கூட எடுத்து 'ஸிங்'குலே போட முடியாது! அங்கே பறந்து
பறந்து வேலை செய்யுது! //
:D
ஆம்மாம் ! புளியோதரயை வெளியே எடுத்தீர்களா துளசி ?
//எவர்சில்வர்லே இன்னும் புடவை வரலேல்ல? இல்லெ, எனக்குத் தெரியாம வந்திருச்சா?//
அய்யோ கொல்றீங்க:-)
ரைஸ் குக்கர் ரொம்ப விலையும் கம்மி வசதியும் ஆச்சே, ஏன் சோறெல்லாம் நுண்ணலையில் இத்தனை ப்ரோகிராம் பண்ணி செய்யணுமா?
அன்புள்ள பாவலர்,
உங்கள் அக்கறைக்கு நன்றி. ஆனால் இந்த அவசர உலகத்தில் சிலது தவிர்க்கமுடியாமல் போய்விடுகிறதே!
நானும் 17 வருடங்களாக இதைப் பயன்படுத்தி வருகின்றேன். ஆபத்தா/ஆபத்தில்லையா என்று இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லையே!
என்றும் அன்புடன்,
துளசி.
ரைஸ் குக்கர் பயன்படுத்துறதில்லியா துளசி?
எவர்சில்வர் புடவை கமெண்ட் - :P :))))
Post a Comment