Friday, December 24, 2004

லாஸ்ட் மினிட் ஷாப்பிங்?

நாளைக்குப் பொழுது விடிஞ்சாப் பண்டிகை! நாளைக்கு என்ன நாளைக்கு? இன்னும் ஒம்பதே முக்கால் மணி நேரம்தான்
இருக்கு,கிறிஸ்து பிறப்புக்கு!


நம்ம வீட்டுலே இருக்கற பூனைங்களுக்கு அவுங்களுக்குன்னு இருக்கற 'ஸ்பெஷல் சாப்பாடு' இன்னும் சில டின்
இருந்தாத் தேவலை. நாளைக்கு இங்கே எல்லாக் கடைகளும் மூடியிருக்கும். தெருமூலைகளிலே
இருக்கற 'கார்னர் டெய்ரி'ங்கதான் திறந்து இருக்கும். அங்கே இந்த 'பெட் ஃபுட்' சமாச்சாரமெல்லாம்
யானை விலை!

இன்னைக்கு 'கிறிஸ்மஸ் ஈவ்' என்றபடியாலே, நம்ம வீட்டுக்குப் பக்கத்திலே 'கல் எறியும் தூரத்துலே'
இருக்கற, 24 மணிநேரமும் திறந்திருக்கும் 'சூப்பர் மார்கெட்'கூட ராத்திரி 9 மணியோடக் கடையைக்
கட்டிருவாங்களாம். இப்பல்லாம் இங்கே 'கிறிஸ்மஸ் ஈவ்'அன்னைக்கு சாயந்திரம் கடை கண்ணிலே வேலை
செய்யற ஆட்களிடம் ராத்திரி 9 மணிக்குமேல வேலை வாங்கக் கூடாதுன்னு சட்டம் போட்டிருக்காங்க.

மத்த தொழிலாளிங்களுக்கெல்லாம் பண்டிகை விடுமுறை டிசம்பர் 24 க்குத் தொடங்கிடணுமாம். அவுங்களுக்கும்
பண்டிகை ஷாப்பிங் செய்ய டைம் கொடுக்கணுமாம். இப்படியெல்லாம் சட்டங்கள் வந்துகிட்டே இருக்கு.

போன ரெண்டு வாரமா கடைங்கெல்லாம் ராத்திரி 10, 11, 12 ன்னு திறந்திருக்குங்க. பிள்ளைங்களை
எல்லாம் தூங்க வச்சுட்டு, பரிசுப் பொருட்கள் வாங்கறதுக்குன்னு 'அந்தந்த வீட்டு சான்ட்டா க்ளாஸ்'ங்க கடைங்களுக்கு
வராங்களாம்.

நாளைக்குப் பாருங்க, சத்தமில்லாம, தெருவே ஓய்ஞ்சு போய் இருக்கும்! கார் நடமாட்டம் ரொம்பவும் கம்மியா இருக்கும்!

நானும் பல வருஷங்களாப் பாக்கறேன், இந்தப் பண்டிகை சமயத்துலே மட்டும் 'பெட் ஃபுட்' சேல் லே
வர்றதில்லே. ஏன்னு தெரியலை!

ஒருவேளை, குடும்பங்கள் எல்லாம் விடுமுறைக்குப் போறதாலே வளர்ப்பு மிருகங்களை 'கேட்டரி, கென்னல்
இங்கெல்லாம் விட்டுட்டுப் போறதாலேயா?

இல்லேன்னா, எப்படியும் இதுங்களுக்கு சாப்பாடு வாங்கித்தானே ஆகணும். முழு விலையும் கொடுத்தே
வாங்கட்டும் என்ற வியாபார மனப்பான்மையா?

மத்த சமயத்துலே 89 சதம், 99 சதம்ன்னு கூவிக் கூவி விக்கற 'பெட்ஃபுட்'ங்கெல்லாம் இப்ப $2.45க்கு!

எதுக்கும் இருக்கட்டும்ன்னு இன்னும் ரெண்டு டின் வாங்கி வச்சுக்கலாம்ன்னு நானும் சூப்பர் மார்கெட்ப்
பக்கம் போனேன். பார்க்கிங் இடம் இல்லாம காருங்க அப்படிஅப்படியே நட்ட நடுவிலே நிக்குதுங்க.
ஒரு வண்டியை யாராவது எடுத்தாப் போதும் அந்த இடத்தைப் பிடிக்க எல்லோரும் பாயறாங்க!
'பாலீஷ்டா' இருக்கற நாகரீகம் எல்லாம் வெளியேறப் போகுதுன்ற மாதிரி 'லுக்! நல்ல வேளை நான்
நடந்து போயிருந்தேன். இல்லேன்னா, வண்டி நிறுத்த இடம் தேடி 'ஸாட்டிலைட்'கணக்காச் சுத்தணும்.
ஏற்கெனவே அங்கே பல 'ஸாட்டிலைட்டுங்க' சுத்திக்கிட்டே இருக்குங்க!

கடைங்களுக்குள்ளெ கால் வைக்க முடியாதபடி 'ஜனத்திரள்!'

ரெண்டு மாசமா வாங்கிக்கிட்டேதான் இருந்தாங்க. இன்னுமென்ன விட்டுப் போச்சுன்னு இவுங்கெல்லாம்
வந்திருக்காங்கன்னு தெரியலையே! ஒரு நாள் கடையில்லேன்னா என்ன ஆயிரும்? நாமெல்லாம் எத்தனை
'பந்த்'ங்களைப் பார்த்து அனுபவிச்சவுங்க!

இப்படித்தான், சில வருஷங்களுக்கு முந்தி ஏதோ புதுசாச் சட்டம் ஒண்ணு போட்டு, கடைங்கெல்லாம்
அதிகாரப் பூர்வமான அரசாங்க விடுமுறைக்குத் திறக்கக்கூடாதுன்னுட்டாங்க. இதப் பத்தியெல்லாம் தினசரி
களிலேயும், தொலைக்காட்சியிலெயும் ஓயாமச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நாங்களும் முன்னாலேயே
பால், பெட்ஃபுட்ன்னு தேவையானதையெல்லாம் வாங்கி சேமிச்சுக்கிட்டோம்.

விடுமுறையன்னைக்கு ச்சும்மா ஒரு 'ரைடு'போகலாம். ரோடெல்லாம் 'ஜிலோ'ன்னு இருக்கேன்னு
கிளம்பிப் போனோம். சுத்திட்டு வர்றப்போ, கார்லெ இருக்கற ரேடியோவிலெ 'லோகல் நியூஸ்' கேட்டுக்கிட்டே
வந்தோமா, அப்ப அதுலெ சொல்றாங்க, கொழும்புத் தெருவிலே இருக்கற 'கவுண்ட் டவுன்' சூப்பர் மார்கெட்
இன்னைக்குத் திறந்திருக்கு. இந்த ஊர்லேயே இந்த ஒரு இடத்திலேதான் இன்னைக்கு கடை!

ஹாங்... நமக்குத் தெரியாமப் போச்சே. ச்சும்மாப் போய் என்னன்னு பார்க்கலாம்ன்னு அங்கெ போனா,
ஆளுங்க சூப்பர் மார்கெட் ட்ராலி நிறைய சாமான்களை நிரப்பிக்கிட்டு வெளியே வந்துகிட்டு இருக்காங்க.
எங்க இவரும் ஏதாவது வேணுமான்னு என்னைக் கேட்டாரா, நான் ஜஸ்ட் ரெண்டு டின் 'கேட் ஃபுட்'
வாங்கிக்கலாம்ன்னு சொன்னேன். சரி. நீ போய் வாங்கிக்கிட்டு வந்துரு.பார்க்கிங் இடம் வேற கிடைக்காது
போலிருக்கு! நாங்க ( மகளும் இவரும்) வண்டியிலேயே இருக்கோம்ன்னு சொன்னாரு.

நான் கடை உள்ளெ போறேன். ஊரே அந்த ஒரு கூரைக்குக் கீழே! இந்த மாதிரிக் கூட்டத்தை நான் இங்கே
பாக்கறது இதுதான் மொதல்! ஹைய்யோடா...வெளியே போயிறலாம்ன்னு திரும்பினா, எனக்குப் பின்னாலே
இன்னும் ஜனம் வந்து சேர்ந்துச்சு! முன்னாலே போய், சுத்திக்கிட்டு 'எக்ஸிட்'லேதான் வெளியே போகணும்!

எனக்கு முன்னாலே இருக்கற கூட்டம் எல்லாம் சொல்லி வச்சாப்போல ஒரு பக்கமாச் சாஞ்சாங்க. அடுத்த நிமிஷம்
அவுங்க கையிலே இருக்கு ஃப்ரெஞ்ச் ப்ரெட்! நீஈஈஈஈஈஈஈளமா, ஒல்லியா இருக்குமே அது! இன்ஸ்டோர் பேக்கரி
ஆளுங்க சலிக்காம ட்ரே ட்ரேயா ப்ரெட்டுங்களைக் கொண்டுவந்து குவிக்கறாங்க. ஜனமும் பால்மாறாம எடுத்துக்கிட்டே
இருக்கு! மெதுமெதுவா 'க்யூ' முன்னேறுது!

அடுத்த சில நிமிஷத்துலே என் கையிலேயும் ஒரு ப்ரெட். இந்த வகை ப்ரெட்டை நாம் எப்பவுமே வாங்கறது இல்லே.
இது இங்கே லஞ்சு, டின்னருக்குண்டானது! நமக்குத்தான் 'மெயின்' சோறும், சப்பாத்தியுமாச்சே! நாம வழக்கமா
வாங்கறது ப்ரேக் ஃபாஸ்ட்க்கான டோஸ்ட் ஸ்லைஸ்டு ப்ரெட்.

வளைஞ்சு வளைஞ்சு வரிசை நகர்ந்துகிட்டே இருக்கு. கடைன்றது வாழ்நாளிலேயே இன்னைக்குத்தான் கடைசின்னு
ஜனங்க நினைச்சுட்டாங்க போல! ரெண்டு பக்கம் 'ஐலில்' கையிலே கிடைக்கறதையெல்லாம் இந்தக் கையிலேயும்
அந்தக் கையிலேயுமா எடுத்து எடுத்து ட்ராலிங்களை நிரப்பிக்கிட்டே போறாங்க.

இதுக்கு நடுவிலே நானும் ட்ராலியை மெதுவாத் தள்ளிக்கிட்டே ஊர்ந்து போறேன். இந்த ட்ராலி எப்படி என் கையிலே
வந்துச்சுன்னே தெரியலை! ட்ராலி மெதுவா நிரம்பிக்கிட்டு இருக்கு. நான் போய் ரொம்ப நேரமாச்சே,இன்னும் ஆளைக்
காணோமேன்னுட்டு, இவுங்க பார்க்கிங் கிடைச்சவுடனே வண்டியை நிறுத்திட்டு, என்னைத் தேடிக்கிட்டு கடை உள்ளே
வந்தாங்க. அவ்வளோதான்! கூட்டத்துலே இவுங்களும் மாட்டிக்கிட்டாங்க. ஒருவழியா அதுலே நீச்சலடிச்சு என்னைக் கண்டு
பிடிச்சிட்டாங்க. மகள்தான் ச்சின்னப் புள்ளையாச்சே. அவதான், கூட்டத்துக்குள்ளே,ச்சின்னச் சின்ன இடைவெளிலே
மெதுவா நுழைஞ்சு,அப்படி இப்படின்னு என்னைக் கண்டு பிடிச்சுட்டா! 'செக் அவுட்' கிட்டே கொஞ்சம் மூச்சுவிடவும்
தாராளமா நகரவும் இடம் இருந்தது!

என்ன, 'கேட் ஃபுட்' வாங்க வந்துட்டு, இவ்வளோ சாமான் ட்ராலிலேன்னு இவர் கேக்கறார். அப்பத்தான் 'கேட்ஃபுட்' எடுக்க
மறந்தது நினைவுக்கு வருது. இப்ப இந்த வரிசையை விட்டுட்டா, மறுபடி வரிசையோட 'வாலை'ப் பிடிக்கணுமேன்னு இருந்தது.
இப்ப வீட்டுலே இருக்கறது ஒரு நாலைஞ்சு நாளைக்கு வரும். அப்புறம் நம்ம வீட்டுக்கிட்டே வாங்கிக்கலாம்ன்னு சொல்றேன்.
அதுக்குள்ளே மக சொல்றா, அவ போய் எடுத்துக்கிட்டு வராளாம்! நம்ம பூனைங்க சாப்பிடுற வகை என்னன்னு அவளுக்கும்
தெரியுமே! அதே மாதிரி, கூட்டத்துலே சந்துலே புகுந்து போய் ரெண்டு டின்னைக் கொண்டும் வந்துட்டா!

ஏதோ மூளைச் சலவைன்னு சொல்றாங்களெ, அதை எனக்குப் பண்ணிட்டாங்களொ இல்லே மூளையவே கழட்டிட்டுப்
போயிட்டாங்களொன்னு தெரியலை அன்னைக்கு!

அப்புறம் என்ன, நாங்க ட்ராலி நிறைய சாமான்களை வச்சுத் தள்ளிக்கிட்டு வெளியே வர்றப்ப, கடை 'என்ட்ரீ'லே
இன்னோரு கூட்டம் திமுதிமுன்னு நுழையுது!

இதோ கடையுள்ளே நுழைஞ்சுட்டேன். வீட்டுக்கு எப்பத் திரும்புவேன்னு தெரிலை! எதுக்கும் இப்பவே சொல்லிடறேன்.
அனைவருக்கும் அன்பான கிறிஸ்மஸ் ஈவ் வாழ்த்துக்கள்!!!

*************************************************************************************



3 comments:

said...

உங்களுக்கும் எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

said...

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அக்கா.

said...

அன்பு துளசி.. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்