Tuesday, December 28, 2004

'கடல் பொங்கியது!'

'கடல் பொங்கிப் பண்டக சாலைகளும், சுங்கச் சாவடிகளும் இருந்த இடத்தையெல்லாம் தாண்டிக்
கொண்டு வந்து பட்டினத்தின் தெருக்களிலும் புகுவதற்கு அச்சமயம் ஆரம்பித்திருந்தது.
கடலில் இருந்த படகுகளும், நாவாய்களும் எங்கேயோ ஆகாசத்தில் அந்தரமாகத் தொங்குவதுபோல்
தண்ணீர் மலைகளின் உச்சியில் காட்சி அளித்து, இப்படியும் அப்படியும் ஆடிக் கொண்டிருந்தன.
படகுகளின் பாய் மரங்கள் பேயாட்டம் ஆடிச் சுக்கு நூறாகப் போய்க் கொண்டிருந்தன.'


எத்தனையோ நூற்றாண்டுகளுக்குமுன்பு நிகழ்ந்ததாய் 'அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனில்'
மேற்கண்ட நிகழ்வைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்போது கொஞ்ச நாட்களாக இணையத்தில் 'பொன்னியின் செல்வன்' படித்துவருகிறேன். இதுவரை
நான்கு பகுதிகள் முடித்துவிட்டேன். ஐந்தாவது பகுதி ஆரம்பத்திலேயே நாகையில் ஏற்பட்ட நிகழ்வுகளாக
எழுதியவைகள் எல்லாம் இந்த ஞாயிறன்று மீண்டும் சம்பவித்தது! என்ன விபரீத ஒற்றுமை!

இதோ கல்கியின் எழுத்தில்.........

'அன்றிரவு முழுவதும் நாகைப்பட்டினமும், அதன் சுற்றுப்புறங்களும் ஒரே அல்லோலகல்லோலமாக
இருந்தன. அவரவர்களும் உயிர் பிழைத்திருந்தால் போதும் என்ற நிலைமையில் ஒருவருக்கொருவர்
உதவி செய்து கொள்வதும் இயலாத காரியமாயிருந்தது. ஆயினும் புத்த பிக்ஷுக்கள் நாகைப்பட்டினத்தின்
வீதிகளில் அலைந்து ஜனங்களுக்கு இயன்றவரை உதவி புரிந்து வந்தார்கள். அதே இரவில் ஆச்சாரிய
பிக்ஷுவும் பொன்னியின் செல்வரும் ஆனைமங்கலம் சோழ மாளிகைக்குள் வெகுநேரம் கண் விழித்திருந்து
பேசிக் கொண்டிருந்தார்கள்.இந்தக் கடும் புயலினால் கடல் பொங்கியதால் கடற்கரையோரத்து மக்கள்
எவளவு கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளாவார்கள் என்பதைப் பற்றிப் பேசிப் பேசிக் கவலைப்பட்டார்கள்.

அரண்மனை மணியக்காரனை இளவரசர் அழைத்து அரண்மனைக் களஞ்சியங்களில் தானியம் எவ்வளவு
இருக்கிறது என்றும், பொக்கிஷத்தில் பணம் எவ்வளவு இருக்கிறது என்றும் விசாரித்தார். களஞ்சியங்கள்
நிறையத் தானியம் இருந்ததென்று தெரிந்தது. திருநாகைக் காரோணத்தில், நீலாயதாட்சி அம்மனின்
ஆலயத்தைப் புதுப்பித்துக் கருங்கல் திருப்பணி செய்வதற்காகச் செம்பியன் மாதேவி அனுப்பி வைத்த
பொற்காசுகள் பன்னிரெண்டு செப்புக் குடங்கள் நிறைய இருப்பதாகவும் தெரிந்தது.

"குருதேவரே! புத்த பகவானுடைய சித்தத்துக்கு உகந்த கைங்கரியத்தைத் தாங்கள் செய்வதற்கு வேண்டிய
வசதிகள் இருக்கின்றன. அரண்மனைக் களஞ்சியங்களில் உள்ள தானியம் முழுவதையும் ஏழைகளுக்கு,
உணவளிப்பதில் செலவிடுங்கள். செப்புக்குடங்களிலுள்ள பொற்காசுகள் அவ்வளவையும் வீடு
இழந்தவர்களுக்கு விநியோகம் செய்யுங்கள்!" என்றார் இளவரசர் பொன்னியின் செல்வர்.

"அது எப்படி நியாயமாகும்? தானியத்தையாவது உபயோகிக்கலாம். தங்கள் பெரிய பாட்டியார்,
செம்பியன் மாதேவியார், ஆலயத் திருப்பணிக்காக அனுப்பியுள்ள பணத்தை வேறு காரியத்துக்காக
செலவு செய்யலாமா? அந்த மூதாட்டி வருத்தப்பட மாட்டாரா?" என்றார் ஆச்சாரிய பிக்ஷு.

"ஆச்சாரியரே! என் பெரிய பாட்டியாருக்கு நான் சமாதானம் சொல்லிக்கொள்வேன். இப்பொழுது
இந்தப் பணத்தை ஏழை எளியவர்களின் துயரத்தைத் துடைப்பதற்காகச் செலவு செய்வேன்.
வருங்காலத்தில் என் பாட்டியாரின் உள்ளம் மகிழ்ந்து பூரிக்கும்படி இந்தச் சோழ நாடெங்கும்....... '


மேலும் படிக்கப் படிக்க, எல்லாமெ தற்போதைய நிகழ்வுகளை அப்படியே கொண்டிருக்கிறது! ஆனால்
அப்போது மன்னராட்சி. இப்போது...மக்களாட்சி.

உயிர்களையும், உடமைகளையும் இழந்து நிற்பவர்களுக்காக மனமுருக பிரார்த்திபோம்!முடிந்தவரை உதவிகளையும் செய்வோம்.