Wednesday, December 08, 2004

கிறிஸ்மஸ் அன்றும் இன்றும்!!!

கிறிஸ்மஸ் அன்றும் இன்றும் ( தொடர்ச்சி)

"விளக்கு வைக்கிற நேரத்துலே சாமி முன்னாலெ உக்காந்து ரெண்டு பாட்டைப் பாடு"



கிறிஸ்மஸ் லீவு வருதேன்னு வீட்டுக்குப் போயிருப்பேன். 'ரேடியோ சிலோன்'லே தமிழ் சினிமாப்
பாட்டு கேட்டுகிட்டு மஜாவா உக்காந்திருக்கும் போது அம்மம்மா இப்படிச் சொல்வாங்க. சரின்னு, கையைக் காலை கழுவிட்டு
சாமி அறைக்கு வருவேன். உட்காந்தாச்சு. பாட்டு! பாட்டு...தான்! தெரிஞ்ச பாட்டு ஒண்ணுகூட ஞாபகத்துக்கு வராது!

ஞாபகம் இருக்கறதெல்லாம், 'கிறிஸ்மஸ் கேரல்ஸ்'தான்! அது இல்லையா...சினிமாப் பாட்டுங்க! கஷ்டப்பட்டு, முயற்சி செய்து
ஏதாவது பாட்டை ஆரம்பிப்பேன்.

"ஹைங், ஹொய்ங்'ன்னு பாடி இப்பத் தொண்டை எப்படி கெட்டுப் போயிருக்கு பார்! இந்த லீவுலே மரியாதையா உக்காந்து
மறந்த பாட்டுங்களையெல்லாம் ப்ராக்டீஸ் பண்ணு"

அம்மம்மா ( பாட்டிதாங்க) பாட்டு டீச்சர். அவுங்க சொன்னா வேற அப்பீலே கிடையாது! அரை வருஷப் பரீட்சை முடிஞ்சு வந்திருப்போம்லெ.
ஹோம்வொர்க் என்ற பேருலே அந்த கேள்விதாளுங்களூக்கெல்லாம் பதிலை எழுதிகிட்டுவேற போகணும். பரீட்சைதான் முடிஞ்சுடுச்சேன்னு
ஹாய்யா இருக்க முடியாது. இதுக்கு நடுவிலே இந்தப் பாட்டு கிளாஸ் வேற.

அப்புறம், விடுதிக்குத் திரும்பிப் போனோம்னா, அங்க இருந்தவங்கெல்லாம் 'ஜோரா லீவு நாளுங்களைக் கழிச்சோம்'ன்னு சொல்லி, எங்க
வயித்தெரிச்சலைக் கொட்டிக்குவாங்க!

கடு கடுன்னு இருக்கற வார்டன் கூட அங்கே இங்கேன்னு கூட்டிக்கிட்டுப் போனாங்களாம்!

ஒரு வருஷம் இதையும் பாத்துறலாம்ன்னு இருந்தேன். அடுத்த வருஷம் நான் ஸ்கூல் ஃபைனல். அதை விட்டா வேற ச்சான்ஸ் இல்லே!

அடுத்த வருஷம்! கிறிஸ்மஸ் வந்துகிட்டு இருக்கு! நான் வீட்டுலே சொல்லிட்டேன், 'எனக்கு நிறையப் படிக்கணும். அதனாலே இந்தப்
பத்து நாளும் படிப்பு, படிப்பு, படிப்புதான்'

லீவு தொடங்குச்சு! எல்லோரும் வீட்டுக்குக் கிளம்பறதும், அவுங்க வீட்டு ஆளுங்க வராங்களான்னு மாடியிலிருந்து எட்டி எட்டிப் பாக்கறதும்,
பையைத் தூக்கிக்கிட்டு ஓடறதுமா இருந்தாங்களா, மனசுக்குள்ளே கொஞ்சம் 'பேஜாரா'த்தான் இருந்துச்சு.

அன்னைக்கு விடுதியிலே மொத்தம் 22 பேருதான். அதனாலே டீச்சருங்க மெஸ் சாப்பாடுதான் எங்களுக்கும்! டீச்சருங்களும் நாலைஞ்சு
பேருதான்! மத்தவங்க லீவுலே போயிட்டாங்க.

அப்புறம்தான் தெரிஞ்சது, கொஞ்சப் பேரு மட்டும் இருக்கறதாலே எதுக்கு ரெண்டு கிச்சன்? சாப்பாடு அட்டகாசம்! இனிப்பெல்லாம் கூட
இருந்துச்சு! லீவு முடியற வரைக்கும் அமர்க்களமான சாப்பாடுதானாம்! ( இதையே எப்பவும் போடக் கூடாதா?)

மறுநாள், எங்களையெல்லாம் கூப்பிட்டு, என்னென்ன செய்யலாம்ன்னு கேட்டாங்க! இதுக்கெல்லாம் நான் புதுசா, ஆ ன்னு வாயைப்
பார்த்துகிட்டு இருக்கேன். பசங்கெல்லாம் ஷாப்பிங்,சினிமா, பீச் ன்னு லிஸ்ட் போட்டுகிட்டு இருக்காங்க. போற வழியிலே பூ கூட வாங்கிக்
கலாமாம்!

இந்தப் பூ என்றதும் இன்னொரு விஷயமும் ஞாபகம் வருது. பொதுவா எங்க ஸ்கூலிலே தலையிலே பூ வச்சிக்கறதுக்கு அனுமதி இல்லெ!
ஆனா, யாருக்காவது பிறந்த நாள் வந்தா அன்னைக்கு மட்டும் பூ வச்சுக்கலாம். காலையிலெ படுக்கையைவிட்டு எழுந்திருக்கும் போது,
நம் தலயணைக்குப் பக்கத்திலே ஒரு நாலு இஞ்சு நீளப் பூஞ்சரம் இருந்துச்சுன்னா, அன்னைக்கு யாருக்கோ 'பர்த் டே!'

மொதநாளே, பிறந்தநாள் பொண்ணும், அவுங்களோட நெருங்கிய சிநேகிதிங்களும் ( அவுங்களுக்கு மட்டும் ஒரு முழ நீளப் பூஞ்சரம்!)
வார்டன் கூடப் போய் பூ வாங்கிகிட்டு வந்திருப்பாங்க. ஆனா எல்லாம் ரகசியமாக இருக்கும்!

பிறந்தநாள் யாருக்குன்னு காலையிலெ 'ப்ரேக் ஃபாஸ்ட்'க்கு, உணவுக் கூடத்துக்குப் போனவுடனே தெரிஞ்சிடும். சாப்பிடறதுக்கு முன்
ஒரு நாலுவரி ஜெபம் உண்டு. அதுலெ பிறந்த நாள் பொண்ணோட பேரு வந்திரும்! இப்படிக் கொஞ்சமே கொஞ்சம் பூ எப்பவாவதுதான்
கிடைக்கும். நானோ பூப் பிசாசு!

ஆனா, லீவுக்காக வீட்டுக்குப் போகாம இருக்கறவங்களுக்குத் தினம் தினம் பூ! எங்களுக்கு இஷ்டமானதை நாங்களே வாங்கிக்கலாம்!
இது மட்டுமா? ஹோட்டலிலே போய் சாப்பிடவும் கொண்டு போனாங்க! மசால் தோசையும், பாதாம் கீரும்! என்னா மாதிரி 'லக்ஸரி!'

இப்படியே கிறிஸ்மஸ் ஈவும் வந்தது! ராத்திரி சாப்பிட்டு முடிஞ்சவுடன், பத்துமணிக்கு எல்லோரும் கோயிலுக்குப் போறோமாம்! புது உடுப்புங்க,
தலை நிறையப் பூ, இன்னும் ஆபரணங்கள்( வார்டனோட கஸ்டடியிலே இது நாள்வரை விட்டு வச்சது! வழக்கமா நகையெல்லாம் போட்டுக்கக்
கூடாது. வீட்டுலெயே வச்சிடணும். தப்பித்தவறி போட்டுட்டே வந்துட்டா, அதைக் கழட்டி வார்டன்கிட்டே கொடுத்து வைக்கணும்)அலங்காரங்கள்
இப்படின்னு ஒரே ஆரவாரமா இருக்கு!

இப்படி ராத்திரியிலே சர்ச்சுக்குப் போறது எனக்குப் புதுமையா இருக்கு! அங்கே, கோயிலிலே ஒரே தீப அலங்காரம். ஜொலிக்குது!
மற்ற ஜனங்களும் குழந்தையும் குட்டிமா புது உடுப்புங்களோட வந்திருக்காங்க. ஜேஜே ன்னு இருக்கு!

ப்தினோரு மணிக்கு ஆரம்பிச்சது சர்வீஸ்! பாட்டும், பிரசங்கமுமா மாறி மாறி இருக்கு. சரியா 12 மணி அடிச்சவுடனே 'மெர்ரி கிறிஸ்மஸ்'
வாழ்த்துக்களும், சிறப்புப் பிரசங்கம், கிறிஸ்மஸ் பாட்டுக்கள் என்று கோலாகலமாக நடந்தது.

நாங்கல்லாம் விடுதிக்குத் திரும்பி வரவே ராத்திரி ஒரு மணிக்கு மேலே ஆனது. வந்தவுடனே, நல்ல நல்ல கேக்குகளும், பிஸ்கட்ஸ், சாக்லேட்ஸ்
என்று 'மிட்நைட் ஃபீஸ்ட்' வேற!

இப்படியே ஒரு வாரம் போனதே தெரியலை! மறுபடி டிசம்பர் 31க்கு 'நியூ இயர்ஸ் ஈவ்'. மறுபடி ராத்திரியிலெ சர்ச் விஸிட். 'ஹாப்பி நியூ இயர்'
கொண்டாட்டம்!

இது முடிஞ்ச இரண்டொரு நாளிலே லீவு முடிஞ்சிடுச்சு! லீவுக்கு வீட்டுக்குப் போயிருந்தாக்கூட, இவ்வளவு ஜாலியா இருந்திருக்க முடியாது!


இன்னும் கொஞ்சம்தான் இருக்கு.



2 comments:

said...

Dear Thulasi Akka,

This post is very interesting

said...

1982ல் பிஜிக்க்கு புனே வில் இருந்து சென்று தமிழில் அழகிய வலைப்பதிவை எழுதி வரும் தங்களுக்கு என் நன்றி. தற்சமயம் நியூஸிலாந்தில் இருப்பதாக கூறுகின்றீர்கள். மிக்க மகிழ்ச்சி. தங்களைப்பற்றி திரு வெங்கட் நாகராஜ் வலைப்பதிவின் மூலம் அறிந்தேன். தங்களின் பிஜி தீவு வலைப்பதிவுகள் மிக அருமை. தமிழை மறக்காமல் அழகா எழுதும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.